Srirangapankajam

November 29, 2008

PESUM ARANGAN-156

Filed under: PESUM ARANGAN — Tags: , — srirangapankajam @ 11:59 am
Chapter-156
 27.11.2008
 
மாசில்லாத மணவாள மாமுனிகள் மாசி கிருஷ்ணபக்ஷம் துவாதசியன்று திருநாட்டுக்கு எழுந்தருளினார். 

அவர் வசித்துவந்த திருமலையாழ்வார் கூடம் நிரம்பி வழிந்தது.  உத்திர வீதிகளெங்கும் நெற்றியில் பளீரென திருமண், திருச்சூர்ணம் துலங்க ஸ்ரீவைஷ்ணவர்கள் அலைப் பொங்கியது.
 

ஜீயர் நாயனார் மன்னுலகு சிறக்க வந்த மாமுனிகளின் சரம கைங்கர்யத்திற்கு பொறுப்பேற்கின்றார். 
 
சீடர்கள் குழாமுடன் திருக்காவேரி எழுந்தருளி நீராடி பெரிய திருமஞ்சனக் குடத்தில் கங்கையிற் புனிதமான காவிரியின் நன்னீர் சேந்தி சகலவிதமான மங்கள வாத்யங்கள் முழங்க, அலங்காரமாக திருமஞ்சன குடத்தினைக் கொண்டு வருகின்றனர்.
 
ஜீயரின் விமல சரம திருமேனியினை திருமஞ்சன வேதிகையில் எழுந்தருளப்பண்ணுகின்றனர். 

நான்கு உத்திரவீதிகளிலும் அலைப்போன்று ஆர்ப்பரித்து நின்ற ஸ்ரீவைணவர்கள் புருஷசூக்தத்தினை
தழுதழுத்தக் குரலுடன் பாராயணம்
செய்கின்றனர். 
 
அந்த சந்தர்ப்பத்திற்கேற்ப வானம் மூட்டமிட்டு கதிரவன் சற்றே மறைந்து மெல்லிதாக பூமாரி பொழிகின்றது. 
 
திருமஞ்சனம் முடிந்து திருவொற்றுவாடையினால் திருமேனியை ஒரு குழந்தை குளித்து முடித்தபின்பு துவட்டுவது போன்று கவனமாக ஒத்தி ஒத்தி துவட்டுகின்றனர். 
 
திருப்பரிவட்டம் சாற்றுகின்றனர். 
 
த்வாதசோர்த்வ புண்டரங்களை திருமேனியில் சாற்றுகின்றனர்.  காந்தி வீசும் விசாலமான நெற்றியில் விசாலமான அத்திருமண்காப்பும். ஸ்ரீசூர்ணமும் தேஜஸ்ஸோடு விளங்கியது. 
 
ஜீயரை திவ்ய சிம்ஹாசனத்திலே எழுந்தருளப் பண்ணுகின்றனர்.        அனைத்து ஸ்ரீவைணவர்களும்
‘எம்பெருமானாரை சேவியாத குறையெல்லாம் இவரையடைந்து தீர்ந்தோம் நாம்!  இப்போது இவ்வவதாரமும் தீர்த்தம் பிரஸாதித்துப் போவதே!”

என்று மிகவும் துக்கித்து கண்ணீர் மல்க கதறுகின்றனர்.
 
ஒவ்வொருவராக அவர்தம் திருவடியினை தம் தம் சிரஸ்ஸிலும் நெஞ்சிலும் ஒற்றிக் கொள்கின்றனர். 
 
 ‘அத்தன் மணவாள யோகி அடியிணையைச் சித்தப் பெருங்கோயில் கொண்டருளி” என்றபடி அவரது திவ்யமங்கள சொரூபத்தினை தம் தம் திருவுள்ளங்களில் கடைசிமுறையாக தேக்கிக் கொண்டு வைத்தக் கண் வாங்கதே விமல சரம விக்ரஹ அனுபவத்திலே விக்கித்தவாறு இருக்கின்றனர்.
 
உத்தமநம்பி மூலமாக அரங்கன், ‘தாம் அரைச்சிவக்கச் சாற்றிக் கழித்த  பீதகவாடையான சிகப்புப் பட்டினையும், அவன் திருமார்பணிந்த வனமாலையையும்’ ஒரு பொற் தட்டிலே வைத்து கோயில் மரியாதையுடனே,  சகல வாத்ய கோஷங்களுடனே, சகல பரிகரர்களையும் உடன் அனுப்பி,  மடத்து வாசலுக்கு அனுப்பி, கோயிலின் மூலஸ்தானத்தில் தான் மட்டும் தனித்திருந்து துக்கித்து அதனால் அவனது திருமேனி கறுத்து வாடியபடியிருக்கின்றான்.
 
மாமுனிகளின் மடத்து வாசலில் ஜீயர் நாயனார் உட்பட அனைத்து முதலிகளும் அரங்கனிடமிருந்து வந்த கோயில் மரியாதையினை எதிர்கொண்டு, சாஷ்டாங்கமாக வீழ்ந்துசேவித்து அங்கீகரித்து ‘உடுத்து களைந்த பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு தொடுத்துழாய் மலர் சூடிக்களைந்தன சூடுமித்தொண்டரான ஜீயருக்கு அவற்றைச் சூட்டி அலங்கரிக்கின்றனர். 
 
கோயிலார்கள் அனைவருமே சோகார்த்தராய் ஜீயரை சேவிக்கின்றனர்.
 
திருச்சூர்ண பரிபாலனம் நடக்கின்றது. 
 
பின்பு எண்ணெய் சுண்ணங்கொண்டாடுகின்றனர். (சிறிது எண்ணெய் அவரது சிரஸ்ஸில் தேய்த்து, தேய்த்த கையிலுள்ள மீதமுள்ள நல்லெண்ணையை கொப்பரையிலுள்ள எண்ணெயோடு கலந்து அனைவருக்கும் பிரஸாதிப்பது)

நறுமணம் வீசும் அனைத்து ஜாதி புஷ்பங்களினாலும் பல்லக்கை அலங்கரித்து அதனில் அவரது திருமேனி ஏறியருளப் பண்ணுகின்றனர்.
அரங்கனது ஸ்ரீமாந்தாங்குவோர் அனைவரும் காவிவண்ண ப்ரபன்னபாகையுடன் கவனமுடன் பல்லக்கினை எழுந்தருளப் பண்ணுகின்றனர். 
 
சத்ர, சாமர, தாள வ்ருந்தாதிகள் பணிமாற,  மத்தளங்கள், சங்க,  காஹள பேரிகள் தொடக்கமான ஸகல வாத்யங்களும் ஒரு சேர முழங்க, 
 
பொய்யில்லாத பெரிய ஜீயர் – கர்வம் அறியாத கர்மவீரன் – சாத்வீகமே உருவெடுத்த சத்தியன் – அரங்கனே அடியவனாய் வந்தும் அகங்காரம் சற்றும் கொள்ளாத அழகிய மணவாளன் –  கைங்கர்யத்திற்காகவென்ற சம்ஸாரம் துறந்து சந்நியாசம் மேற்கொண்ட ஸௌம்ய ஜாமாத்ரு முனி, பூவுலகு நீங்கி புறப்படுகின்றார்.
அவரது விமல சரம திருமேனி வருகையையொட்டி உத்திர வீதி, சித்திரை வீதியெங்கும் கொடிகள் அழகாக ஒரு சீரான க்ரமத்தில் நாட்டப்பட்டு நடுநடுவே மகரதோரணம் போன்று தோரணங்கள் கட்டப்பட்டு, வீதியெங்கும் நீர் தெளித்து, சுத்தமாக மொழுகி, கோலமிடப்பட்டு, நடுநடுவே புஷ்பங்களை சொரிந்து, அங்காங்கு கமுகு, குலையுடன் கூடிய வாழைமரங்கள் நட்டு, மஹாஞானியின் கடைசி வருகைக்காகக் காத்திருந்தது. 
 
அடியார்கள் சூழ அரங்கநகரே பிரிவாற்றமையினால் அழுதது.  மாமுனிகளின் புஷ்பகவிமானம் ஊர்ந்தது. 
 
பின்னால் ஸ்ரீவைணவர்கள் அனைவரும் கையில் கரும்புடன் இராமானுஜ நூற்றந்தாதி முதலாக அனுசந்திக்கின்றனர். ஜீயரின் திருமேனி முன் பொரியும் புஷ்பமும் சிதறுகின்றது.  ‘தர்ஸநத்திலே மணவாளமாமுனிகள் திருநாட்டுக்கு எழுந்தருளினார்;” என்று ஒற்றை திருச்சின்னம் பணிமாற,  ஸூமங்கலிகள் அனைவரும் கையில் மங்கள தீபமேந்தி நிற்க, எட்டு திருவீதிகளிலும் மாமுனிகள் கடைசியாக அனைவருக்கும் ஸேவை தந்து வலம் வருகின்றார்.
 

வடக்கு வாசல் வழியே தவராசன் படுகையிலே ‘மகிழாதிகேசவன் தன்னடிக் கீழாக” என்கிறபடியே அங்குள்ள ஆதிகேசவ பெருமாளின் திருவடிக் கீழாக தென்பாலில்,  ஆளவந்தார், இராமானுஜர் ஆகியோருக்கு செய்த கிரமம் போன்று யதிஸம்ஸ்காரவிதியடங்க திருப்பள்ளிப்படுத்துகின்றனர்.
 
பூமிதேவியானவள் ஜனகனின் திருமகளான சீதையை தம் மடியிலே வைத்து அணைத்துக் கொண்டு ஆதரித்தாற்போன்று,  மாமுனிகளான இவரையும் தம் மண்ணால் மூடி தம் மடி மீது கிடத்தி அணைக்கின்றாள்.
 
சீயரெழுந்தருளி விட்டார் செகமுழுதும்
போயிருள் மீளப் புகுந்ததே தீய
வினைநைய வெம்புலனா வீடழிந்து மாய்வோ
ரனைவார்க்குமேதோ வரண்?
 
என்று சிஷ்யர்கள் அனைவரும் மிகவும் துக்கித்து, தங்களுடைய திருமுடியினை விளக்குவித்துக் (தலைச்சவரம்) கொண்டு, வடதிருக்காவிரியில் நீராடி மீண்டும் மடத்துக்கு எழுந்தருளுகின்றனர்.

நம்மாழ்வார் மோட்சம் முடிந்து நம்பெருமாள் ஆஸ்தானம் அடைந்த பின்  வெறிச்சோடும் திருமாமணி மண்டபம் போன்று,  ஜீயரின்றி வெறித்துப் போய் கிடந்த திருமலையாழ்வார் கூடம் கண்டு மீண்டும் அழுகின்றனர்.
 

நானெதென்னும் நரகத்திடையழுந்திப்
போனவிந்த காலமெல்லாம் போதாதோ? – கானமலர்
மாலையணிதிண்டோன் மணவாள மாமுனியே
சால நைந்தேன் உன் பாதம் தா!
 
என்றும்
 
புண்ணாராக்கை தன்னுள் புக்குழலும் தீவினையேன்
தண்ணாருமென் கமலத்தாளணைவதென்று கொலோ
பண்ணரு நால்வேதம் பயின்றுய்யும் பண்டிதனே
மண்ணாள வந்த மணவாள மாமுனியே
 
என்று மண்ணுலகம் சிறக்க வந்த மாமுனிகளை நினைத்து நினைத்து திருமிடறு தழுதழுப்ப விண்ணப்பஞ்செய்து,  தமக்குத் தானே ஒருவாறு தேறி ஜீயரின் திருவத்யனன கைங்கர்யத்தினைப் பெருக்கச் செய்கின்றனர். தீர்த்த பிரஸாதங்களை ஸ்வீகரித்து ஜீயர் அவரவர்க்கிட்ட பணி செய்ய திரும்புகின்றனர் அனைவரும்.
 
பெரியபெருமாள்,  ஜீயர் நாயனாருக்கு தீர்த்தம் பிரஸாதம் திருப்பரிவட்டம் ஸ்ரீசடகோபம் எல்லாம் சாதித்து, ஜீயர் நாயனாரை ”ஸ்ரீரங்கராஜரையும் மடத்தையும் நோக்கிக்கொண்டு போரும்” என்று நியமிக்கின்றார்.

இத்தைக் கண்டு ஜீயருடைய அபிமாந அந்தர்பூதரெல்லோரும் சற்றே ஆறுதலடைந்தவர்களாய், ஜீயர் நாயனாரை பெரிய ஜீயரைக் கண்டாற் போல கண்டு அநுவர்த்தித்து, ஆஸ்ரயித்து ஸேவித்துக் கொண்டிருந்தார்கள்.
 

வரவரமுநி: பதிர்மே தத்பதயுகமேவ சரணமநுரூபம்
தஸ்யைவ சரணயுகளே பரிசரணம் ப்ராப்யமிதி நநுப்பராப்தம்
 
மணவாளமாமுனிகளே அடியேனுக்கு ஸ்வாமி.
அவருடைய திருவடித் தாமரைகளே பேற்றுக்கநுருபமான உபாயம்.
அவருடைய திருவடித் தாமரைகளில் கைங்கர்யமே மேலான உபேயம்.
                                                     -எறும்பியப்பா.
 
அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ
சடகோபன் தண்டமிழ் நூல் வாழ – கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ மணவாள மாமுனியே!
இன்னுமொரு நூற்றாண்டிரும்!.
 
ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே
ஸ்ரீரங்க வாஸிநே பூயாத் நித்யஸ்ரீர் நித்ய மங்களம்
.
 
 
மணவாள மாமுனிகள் திருவடிகளே சரணம்.
 

இத்தொடர் ஆரம்பிக்கும் போது  அரங்கனிடத்து புறப்பாட்டின் போது மணவாளமாமுனிகள் சம்பந்தமாக கூறும் கட்டியம் திடீரென சிந்தையில் அவன் தோற்றுவிக்க மாமுனிகளை முன்வைத்து அவனருளால் தொடங்கினேன். 
 
ஆரம்பித்தாயிற்று…..! 
 
எதனைக் குறித்து முதலில் ஆரம்பிப்போம் என்று குழப்பமுடன் இருந்தபோது என் ஆத்ம பந்து, ஆன்மீக சிந்தை செறிந்து விளங்கும் அஹோபிலதாஸன் க.ஸ்ரீதரன் அவர்கள் ‘மத்ஸ்யம் தொடங்கி எழுதும்” என்று நியமித்தார்.
ஏதோ ஒரு பத்து அல்லது பதினைந்து தொடர்தான் எழுதுவோம் என்று நினைத்து எழுதிய அடியேனே,   ஆச்சர்யப்படும் வகையில் 156 தொடர்களை எழுதி திரும்பி பார்க்கும் போது,  அதிர்ந்து நின்றேன்.
‘ஸ்வாமி! என்னமோ நீர்தான் எழுதியதாக நினைத்துக் கர்வ படாதிரும்!
இவையனைத்தும் நம்பெருமாள் உம்மை பயன்படுத்தி எழுதிக்கொண்டது.
இதில் நீர் கர்வபட்டால் அதைவிட அபத்தம் ஒன்றுமில்லை”
என்று என் தோழன் மதுஇராமானுஜன் சொன்னபோது,   இதுவும் என் தோழன் சொன்ன வார்த்தையாக நான் நினைக்கவில்லை.  அன்று அரங்கனே அவன் மூலம் என்னிடம் பேசியதாகத்தான் நினைத்தேன்;. அன்றிரவு ஏதோ ஒரு புரியாத ஆனந்தம் அடைந்து அழுதேன் நான்.
 
 
எனது நான் என மமதையுற்று அலைந்த என்னை
இனியனாக்கி இணைய வைத்த இன்ப தெய்வமே
எனதுளத்தில் உனது நாமம் எழுதி வைத்து நடனமாட
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ
 
என்று அரற்றியவாறே உறங்கிப் போனேன். 
 
உண்மைதான்…!. 
 
ஒன்றுக்கும் உபயோகப்படாத குப்பை நான்!. 
காலக்ஷேபம் கேட்டவனில்லை!
திருவாய்மொழி அறிந்தவனில்லை!
திவ்யசரிதங்கள் பல படித்தவனுமில்லை!
ஆழ்வார் ஆச்சார்யர்கள் பற்றி அதிகம் அறிந்தவனுமில்லை! 
அறிந்தது ஏதோ அரைகுறை ஆகமம்தான்!
அந்தரங்கத்தில் அவனிருந்து எழுதாவிடின் இவ்வளவு நாட்கள் வருமோ இது!. 
 
அவ்வப்போது என் போற்றுதலுக்குhpய நண்பர்கள் குழாம் என்னை ஊக்கப்படுத்தும் போதெல்லாம் அரங்கனுக்கு நன்றி கூறுவேன் நான்.
அறிமுகமேயில்லாத பலர்,   இந்த வலைத்தளத்தின் மூலமாய், அவன் இயக்கிய இத்தொடர் மூலமாய் என் ஆத்ம நண்பராயினர்.
பேசும் அரங்கன் மூலம் என் குடும்பம் பெரிதானது. 
 
சரி! எழுதிக் கொண்டே போகின்றோமே… மன்னிக்கவும்.. எழுதிக்கொண்டே போகின்றானே எங்கு முடிப்பான்? என்ற சிந்தனையிலிருந்த போது திரு.சுருதபிரகாசிகபட்டரிடமிருந்து ஒரு மெயில் மணவாளமாமுனிகளைக் குறித்து வந்தது.   அதில்
 
……ooranvazhi finished in this stage.
Lakshmi Nadhan [Periyaperumal] started as 1st acharya pursha and he him finished the same paramparai.
always a thing must end in a same place where it started then only its a perfect circle…..’

என்று குறிப்பிட்டிருந்தது.  ஆஹா!  எப்படியெல்லாம் அவன் பேசுகின்றான் என்று அதிசயித்துப் போனேன்.  பேசும் அரங்கனும் ஒரு perfect circle – மணவாள மாமுனிகளில் ஆரம்பித்து மணவாள மாமுனியில் முடிகின்றதே!…

 
அவனது திருவுள்ளப்படியே மணவாள மாமுனிகளின் திருவடிகளைப் போற்றிப் பணிந்து முடித்துக்கொள்கின்றேன் இத்தொடரை!.
 
இத்தொடர் மூலமாக யார் மனதாவது புண்பட்டிருந்தால் அவர்களது திருவடித்தாமரைகளில் அத்தவற்றிக்கு அடியேனை பொறுத்தருளி மன்னிக்க வேண்டுகின்றேன்.
 
இத்தொடர் முடித்த போது சில பிரார்த்தனைகள் அடியேனது மனதில் எழுந்தது.  பிடித்திருந்தால் தாங்களனைவரும் பிரார்த்திக்க வேண்டுகின்றேன்!
 
1) பெரிய பெருமாளின் கைங்கர்யங்கள் அனைத்தும் குறைவற நடக்க வேண்டும்.
 
2) கலை பேதமற்று வைணவ சமுதாயம் ஒன்று பட வேண்டும்.  வைணவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.  வைணவ ஒற்றுமை ஓங்க வேண்டும்.
 
3) திவ்யதேசங்களனைத்தும், அதனதன் கைங்கர்யரர்கள் உட்பட பொலிவுற விளங்க வேண்டும்.
 
4) ஆழ்வார் ஆச்சார்யர்களின் பிறந்தவிடம், திருவரசு இரண்டும் பேணிக் காக்கப்பட வேண்டும்.  அதனை அனைவரும் அறியும் வண்ணம் வெளியிட வேண்டும்.  சென்றடைய எளிதாக பாதை அமைக்கப்பட வேண்டும்.
 
5) கடைசியாக, மணவாள மாமுனிகளின் திருவரசு உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும்.  அங்குள்ள ஆதிகேசவப் பெருமாளுக்கு மீண்டும் கோயிலமைக்கப்பட வேண்டும்.
 
உன்னிகிருஷ்ணன் பணிக்கர் பிரஸன்னம் சொல்லும் போது, ”இந்த கோவிலிலும் நவக்கிரஹங்கள் இரண்டு இடத்தில் உள்ளன” என்றார்.

எங்களுக்குப் புரியவில்லை. 

 
ஆர்யபடாள் வாசலில் நிலைப்படிக்குக் கீழேயும்,   நாழிகேட்டான் வாசல் நிலைப்படிக்குக் கீழேயும் 12 இராசிகள் பொறிக்கப்பட்டிருந்தன.  ”இதைத்தான் அந்தந்த இராசிக்கு சொந்தமான கிரஹங்கள் சூக்குமாக இந்த சின்னங்கள் மூலமாய் குடி கொண்டுள்ளன” என்றார். 
 
எதற்காக…..? என்று வினவியபோது
 
அவைகள் அனைத்தும் தம் பாவங்களைத் தொலைத்துக்கொள்ள பரம ஸ்ரீவைணவர்களின் ஸ்ரீபாததுளிகள் தம் தலை மேல் விழுவதற்காக வணங்கி காத்திருக்கின்றன’ என்றார்.
 

உண்மைதான்.  ஸ்ரீவைணவரின் பாதத்துளி எல்லாவற்றையும் ஸ்ரேஷ்டமானதுதான்!. 
 
ஸ்ரீவைணவர்களாகிய தாங்களின் பொற்பாதங்களில், மானசீகமாக, அடியேனது தலை வைத்து வணங்கி விடைபெறுகின்றேன்.
 
 
அடியேன் இராமானுஜ தாஸன்,
முரளீ பட்டர்-
இத்தொடர் குறித்த தாங்களின் அபிப்பராயங்களை எழுதுங்கள். 
 
Advertisements

November 27, 2008

PESUM ARANGAN-155

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 11:43 pm
 
Chapter-155
 24.11.2008
 
அரங்கனை மனத்தினுள் சிறைவைத்து ஆராதித்த மாமுனிகளுக்கு,   தமக்கு ப்ராப்யரான உடையவர் திருவடிகளிலே பக்தியானது நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றது.  ஆர்த்தி அதிகரிக்கின்றது.  அதனால் பரமபக்தி தலையெடுக்கின்றது. நாள்தோறும் தம் ஆர்த்தியினை அவர் திருமுன்பே விண்ணப்பஞ் செய்கின்றார். 
 
வாழியெதிராசன் என்ற அவரது ஆர்த்தியின் வெளிப்பாடாய் பிரபந்தமாய் அருளி அறுபது பாட்டாய், ஆர்த்தி பிரபந்தம் என்னும் ஒரு அற்புத பாமாலையாய் தலைக்கட்டிற்று. 
(Pls Click here for Aarthi Prabhandam with meaning)
 
ஆச்சார்யன் திருவடிகளையடைய வேண்டும் என்ற எண்ணம் மிகவோங்கியது. 
 
சீரங்கநாயகியிடத்து இறைஞ்சுகின்றார்.
 
தென்னரங்கர் தேவியே!  சீரங்கநாயகியே!
மன்னுயிர்கட்கெல்லாம் மாதாவே! – என்னையினி
இவ்வுலகந்தன்னிலிருந்து நலங்காமல்
அவ்வுலகில் வாங்கியருள்
 
என்றும்
 
சீரங்கநாயகியே! தென்னரங்கன் தேவியே!
நாரங்கட்கெல்லாம் நற்றாயே!  மாருதிக்கு
வந்தவிடாய் தன்னையொரு வாசகத்தால் போக்கின நீ
எந்தனிடர் தீராததென்?
 
என்று தாயாரிடத்தும்
 
இந்தவுடம்போடினியிருக்கப் போகாதுதான்
செங்கமலத்தாள் தன்னைத் தந்தருள் நீ – அந்தோ
மையார் கருங்கண்ணி மணவாளா!  தென்னரங்கா!
வையாமலிருப்பாயேயிங்கு
 
என்று அரங்கனிடத்து மெய்யுருகி விண்ணப்பிக்கின்றார்.
 
சென்று திருமாலடியார் தெய்வக்குழாங்கூடு
மென்று மொரு நாளாமோ?  ஆழ்வாரே! – துன்னுபுகழக்
கமலம்பாடினீரையோ அடியேனுமிக்
கமலஞ்சேர் காயம் விட்டு
 
என்று ஆழ்வாரிடத்து கெஞ்சுகின்றார்.
 
இந்தவுடம்போடிருவினையாலிவ்வளவும்
உந்தனடிசேராதுழன்றேனே – அந்தோ
அரங்கா! இரங்காயெதிராசர்க்காக
இரங்காய் பிரானே இனி
 
என்றும், ‘திருவரங்கா! அருளாய் இனியுன் திருவருளால் அன்றி காப்பாதரிதால்” என்று அரற்றுகின்றார். 
 
தம் அந்திம தசையினையறிகின்றார். 
 
தம் சீடர்களனைவரும் செய்ய வேண்டிய கைங்கர்யங்களை நிர்ணயித்து நியமிக்கின்றார். 
 
மேலுலகில் வழுவிலாவடிமைச் செய்ய புறப்பட்டுயெழுந்தருள நாலு நாள்தான் உள்ளது என உணர்கின்றார். 
 
‘நாலாயிரமும் தொடங்கி நடத்துங்கோள்” என்று நாயனார் தொடக்கமான முதலிகளை நியமிக்கின்றார். 
 
அவர்களும் அப்படியே அனுசந்திக்க இவைகளையெல்லாம் திருச்செவிசாத்தியருளி திவ்யபிரபந்தனுபவங்களில் உகப்புடனே அஞ்சலிஹஸ்தராய் கண்மூடி அகக்கண்களாலே அரங்கனை தியானித்தவண்ணம் அருளிச்செயல்களின்
அர்த்த அனுபவத்திலே ஆழ்ந்தபடி கிடக்கின்றார்
.
 
 
ஏகாதசி கழிந்து அன்று துவாதசி காலை. 
 
உத்தமநம்பி தொடக்கமான அனைத்து பரிகரத்தையும் அழைக்கின்றார்.

‘ஸர்வ அபராதங்களையும் பொறுத்தருள வேண்டும்”
என்று அபராத க்ஷமாபணம் பண்ணுகின்றார்.
அனைவரும் கண்களில் நீர் சொரிய, அளவிலாத சோகார்த்தராய், ‘தேவரீருக்கும் அபசாரமுண்டோ?” என்று உதடுகள் துடிக்க தழுதழுத்து அழுகின்றனர். 
 
மாமுனிகள் கண்ணிலும் இவர்களது பிரிவாற்றாமையினால் கண்கள் பனிக்கின்றது. 
 
அவர்களனைவரிடத்தும் கடைசியாக, ”பெரியபெருமாளுடைய ஸ்ரீகார்யத்தை குறைவற நடத்துங்கள்’ என்று பணிவாக வேண்டுகின்றார். 
 
அனைவருக்கும் மடத்தில் அமுது செய்விக்கின்றார். 
 
மடத்திலுள்ள எல்லாரும் அமுது செய்து, மாமுனிகளிடத்து நெருங்கி சுற்றி நின்று கண்ணநீர் கொப்பளிக்க அஞ்சலிஹஸ்தராய், ப்ரஹ்மவல்லி, ப்ருகுவல்லி ஆகிய வேதங்களையும்,
சூழ்விசும்பணிமுகில், அர்ச்சிராதி, இவைகளை ஒரு சாரார் ஒரே சுருதியுடன் அநுசந்திக்க, ஒரு சாரார் இராமானுஜ நூற்றந்தாதியினை அநுசந்திக்கின்றனர். 
 
இவர்களது அநுசந்தானங்களால் அந்தவிடம் மேலும் தெய்வீகப்பொலிவோடு விளங்கியது. 
 
 ‘கநககிரி மேலே கரியமுகில் போல
விநதை சிறுவன் மேற்கொண்டு’
என்றும்,
‘எந்தை திருவரங்கரேரார் கருடன் மேல் வந்த முகங்காட்டி வழிநடத்த’ என்றும் இவர் வேண்டியபடியே மாமுனிகளை அழைத்துப்போக நித்யசூரிகள் வராது பெரியபெருமாளே கருடவாகனத்தின் மீது அமர்ந்து மாமுனிகளுக்கு சேவை சாதிக்கின்றான்.
மாமுனிகள் ‘பிள்ளை திருவடிகளே சரணம் – வாழி உலகாசிரியன்‘ என்றபடியே அணையிலே சாய்ந்தருளுகின்றார்.
 
இராமானுஜ நூற்றந்தாதியிலிருந்து 108வது பாசுரம் ‘அங்கயல்பாய் வயல் தென்னரங்கன்” என்னும் பாசுரம் ஒலிக்கின்றது. 
 
இவர் உடல் சிலிர்க்கின்றது. 
 
க்ருதாஞ்சலிபுடராய் ‘எம்பெருமானார் திருவடிகளே சரணம்” என்று அநுசந்தித்து திருக்கண்களை செம்பளித்து கொண்டிருக்கின்றார்.
”நோய்களாலென்னை நலங்காமல் சதிராக உன் திருத்தாள் தா”
 
என்றும்
”மாதவன் தன் துணையா நடந்தாள்”
 
 என்றும்,
 
“அரங்கத்துறையுமின் துணைவனொடும் போய்” என்று சொல்லுகின்றபடியே மாமுனிகளின் உள்ளுறையும் அந்த மஹா ஆத்மாவானது ச்ரிய: பதியான பெரியபெருமாள் பெரியதிருவடி மேற்கொண்டு அவரது திருவடியினைப் பற்றி, சுஷூம்நா என்கின்ற சிரக்கபாலத்தின் ப்ரஹ்மரந்த்ரத்தினை வெடித்து,  அவர் உள்ளிருந்து ஆட்டுவித்த அந்த ஜோதி சேஷ ஸ்வரூபமாய் சேஷ ஜோதியானது.   மஹா சக்தி பொருந்திய மின்னலைப் போன்று   அவர் திருமாளிகையின் மேற்குப்புறம்
சுவற்றில் ஒரு துளையினையிட்டு அதன் வழியே ஜோதிர்மயமாய் பெரியபெருமாளோடு கலக்கின்றது.
 
(இன்றும் மாமுனிகளின் மடத்தில் இந்த மேற்குத் துவாரத்தில் தினந்தோறும் ஒரு அகண்ட விளக்கு ஏற்றி வைத்து வழிபடுகின்றனர்) 
 

ஜீயர் திருநாட்டுக்கெழுந்தருளினார்.
 
ஜீயரின் ஸ்ரீபாதத்து முதலிகளெல்லாரும் ‘ஐயோ கண்ணபிரான்! அறையோ! முறையோ! அரவணைமேல் முகில் கொண்ட முகில் வண்ணனே! என்று பெருமிடறு செய்து கையெடுத்துக் கதறி துடிக்கின்றனர்.
 
நம்பெருமாளின் திருக்கண்ணங்கள் கசிந்தது
 
எப்போதும் பொலிவுடன் விளங்கும் அத்திருமுகம் கறுத்தது.
 
இளையபெருமாளை பிரிந்த ராமபிரான் சோகதுக்கங்களின் வசமானான். ஸௌம்ய ஜாமாத்ரு யோகி எனும் மணவாளமாமுனிகளாகிய இளையபெருமாளை பிரிந்த நம்பெருமாள் அமுது புசியாமல் முசித்து மூடிக்கிடந்தார்.
 
கும்பம்பாஸ்வதி யாதி தத்ஸூததிநே பக்ஷே வளர்க்ஷதரே
த்வாதஸ்யாம் ஸ்ரவணர்க்ஷபாஜி ருதிரோத்கார்யாக்ய ஸம்வத்ஸரே
தீபக்த்யாதி குணார்ணவோ யதிவராதீநாகிலாத்மஸ்த்திதி:
ஸ்ரீவைகுண்டமகுண்ட வைபவமகாத் காந்தோபயந்தா முநி:
 
ஜ்ஞாந பக்தி வைராக்யம் முதலான குணங்களுக்கு மஹாஸமுத்ரம் போன்றவரும்,  எம்பெருமானாருக்கு ஸ்வாதீனமான தமது ஸமஸ்தமான நிலைகளையுடையவருமான மணவாளமாமுனிகள் ருதிரோத்காரி ஸம்வத்ஸரத்தில் சூரியன் கும்பராசியையடைந்த அளவில் (மாசி மாதத்தில்) சனிக்கிழமையில் க்ருஷ்ண பட்சத்தில் திருவோண நட்சத்திரம் கூடிய த்வாதசி தினத்தன்று எல்லையற்ற பெருமையுள்ள ஸ்ரீவைகுண்டத்தை அடைந்தருளினார்.
 

November 23, 2008

PESUM ARANGAN-154

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 8:01 pm
Chapter-154
 22.11.2008
 
‘ரங்கேதாம்நி ஸூகாஸீநம்” என்கிறபடியே திருவரங்கத்தில் மணவாளமாமுனிகள் தம்முடைய மடத்தில் திருமலையாழ்வார் கூடத்தில், வ்யாக்யாநித்து அகிலருக்கும் ஆன்மீக ஆனந்தம் அளித்து வாழ்ந்து கொண்டு வருகின்றார்.
 
ஜயதுயஸஸாதுங்கம்ரங்கம் ஜகத்த்ரயமங்களம்
ஜயதுஸூசிரம் தஸ்மிந்பூமா ரமாமணி பூஷணம்
வரதகுருணார்த்தம் தஸ்மை ஸூபாந்யபிவர்த்தயந்
வரவரமுநி: ஸ்ரீமாந்ராமானுஜோ ஜயதுக்ஷிதௌ
 
பெருமையினால் உயர்ந்து மூவுலகுக்கும் மங்களாவஹமான திருவரங்கமானது பெருமையுற்று விளங்கவேணும்.  அத்திருப்பதியிலே பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீகௌஸ்துபத்தையும் திவ்யாபரணமாகவுடையனான எம்பெருமான் பல்லாண்டாக விளங்கவேணும். அவ்வெம்பெருமானின் பொருட்டு வரதகுருவுடன் மங்களங்களை மேலும் மேலும் உண்டாக்குபவரான ஸ்ரீராமானுஜர் அவதாரமான மணவாளமாமுனிகள் இப்புவியில் விளங்கவேணும்.
 
என்று வைணவ உலகும் மாமுனிகளுக்காக அரங்கனிடத்து பல்லாண்டு பாடி வளர்ந்து வந்தது.
 
மாமுனிகள் அரங்கனை 
 
கஸ்தூரி ஹிமகற்பூரா ஸ்ரக் தாம்பூலாநுலேபநை:
திவ்யைரப்யபஜத் போஜ்யை: ரங்கநாதம் திநே திநே
 
என்கிறபடியே பிரதிதினமும் கஸ்தூரி, பச்சைகற்பூரம், பூமாலை, அடைக்காயமுது, பரிமளத்ரவியங்கள் இவற்றினால் உபசரித்து ஆராதித்தார். 
 
ஆச்சார்யன் சிஷ்யனை ஆராதிக்கின்றார்.  சிஷ்யனான அரங்கன் ஆச்சார்யனை பேணிக் காக்கின்றான்.  இந்த வினோதம் எல்லாம் இவனிடத்தில்தான் சாத்தியம்!.
 
Supreme’ என்று சொன்னால் எல்லா பரிமாணத்தையும் உள்ளடக்கியது.  எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்டது.

அரங்கனுக்கே இந்த வார்த்தைப் பொருந்தும். 
 
 ‘Sri Ranganath The Supreme”.
 

காலே கோதண்ட மார்த்தாண்டே காங்க்ஷந்நே வாருணோதயம்
ந்யஷேவதவிஸேஷண சேஷிணம் சேஷசாயிநம்
மங்களாநிப்ரயுஞ்ஜாதோ மாதவம் ப்ரத்யபோதயத்
ஸம்யகேநம் ஸமப்யர்ச்ய ஸர்வதாநுகதை: க்ரமை:
ஸ்வஸ்வகாலோசிதைர்திந்யை: ஸ்வஸங்கல்போபலம்பிதை:
அபோஜயதயம் போஸ்யை: ஸாகமூலபலாதிபி:
ஸூபாகபூப க்ருதக்ஷீர சர்க்கரா ஸஹிதம் ஹவி:
 
தநுர்மாதத்தில் அருணோதயத்திற்கு முன்னே அரவணைமேல் பள்ளியானான எம்பெருமானை விசேஷமாக பூஜித்தார்.
மங்களமான (தமிழ்) பாசுரங்களை அநுஸந்தித்து மணவாளனை திருப்பள்ளியெழுச்சி செய்தார்.  எல்லாப்படியாலும் சாஸ்த்ர முறையான திருவாராதனக்கிரமங்களால் நன்கு ஆராதித்து பின்னர் உயர்ந்தவையான காய், கிழங்கு, பழம், முதலானவைகளுடன் இனிப்பு கலந்த திருபள்ளியெழுச்சிப் பொங்கலையும், வடை பருப்பு நெய் பால் சர்க்கரை இவைகளுடன் கூட ப்ரஸாதத்தினை அமுது செய்தருளப் பண்ணினார்.
 
 
தென்னரங்கர் சீரருளுக்கிலக்காகப் பெற்றோம்
திருவரங்கத் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னியசீர்மாறன் கலை உணவாகப் பெற்றோம்
மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராநங்குரவர் மொழிகளுள்ளப் பெற்றோம்
முழுதுநமக்கிவை பொழுதுபோக்காகப் பெற்றோம்
பிள்ளையொன்றுதனில் நெஞ்சம் போராமற்பெற்றோம்
பிறர்மினுக்கம் பொறாமையில்லா பெருமையும் பெற்றோமே 
 
என்றபடியே,  அரங்கனையும், அடியார்களையும் மகிழ்வித்துக் கொண்டு இந்த திவ்யதேசத்திலே தமது வைபவங்களை பிரகாசிப்பித்து கொண்டு தமது 72ம் பிராயம் வரை அலுப்பேயின்றி கைங்கர்யங்களைச்
செய்து வந்தார்.
 
அயர்வறுமரர்களதிபதியானவனுடைய மேலை வைகுந்தந்தில் சென்று இமையாத கண்ணினராய் ஆதியஞ்சோதியுருவை அநுபவிக்க வேண்டிய தருணத்தினையடைந்தார். 
 
விண்ணுலகுச் செல்ல இசைந்தார். 
 
திருமேனி தளர்ச்சியுற்றது.  நடமாடமுடியாதயளவிற்கு மிகவும் தளர்ச்சியுற்றார். 
 
விண்ணுலகுச் செல்லும் முன் அகிலஉலகு நாயகன் அரங்கனைக் காண ஆவலுற்றார்.
 
திருநாளுக்காக திருவீதியிலரங்கர்
வருநாளுமாற தெந்தைக்கின்று – பெருமாள்தன்
அந்த வடிவழகைத்தானோர் நாளுங் காணேனே
இந்த உடம்போடு இனி
!
 
என்று புலம்பி அழுதவாறே போராசையோடு பெருமாள் ஸேவையை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்.  
 
நம்பெருமாள் உடுத்து முடித்து அலங்கரித்து திருவீதியில் புறப்பட்டவர், (மாசித் திருநாளாயிருக்குமோ..?) இவரின் மடத்து வாசலிலே நிற்கின்றார்.  மாமுனிகள் நடக்க முடியாததால் கைத்தலத்தில் எழுந்தருளப்பண்ணி அரங்கனிடத்து சேர்க்கின்றனர் அடியவர்கள். நெடுநேரமாய் நின்று தம் ஆச்சார்யனுக்காக ஸேவை சாதித்தருளுகின்றான அரங்கன்.

வாடிக்கிடந்த பயிரினை தளிர்ப்பிக்கின்ற மழைமேகம் போல நம்பெருமாள் பரிவுடனே தம் திருக்கண்ணை மலர்த்தி ஸேவை சாதிக்கின்றார்.
‘நீடுபுகழ் தென்னரங்கர் தேவியரும் தாமுமாகவந்து என்னிடர் தீர்த்ததாரிப்போது’   என்று தம் ஆர்த்தி (ஆதங்கம்) தீர சேர்த்தியையநுபவித்தருளுகின்றார்.
 

இந்த உடல் நோய் வீழ்ந்தென்னை வல்வினையேன்
அந்தோ!  எனக்குத் தென்னரங்கா!….
 
என்று கண்ணீர் மல்க கரைந்து உருகுகின்றார் அரங்கனைக் கடைசி முறையாகக் கண்டு! 

November 22, 2008

PESUM ARANGAN-153

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 11:49 pm

 

Chapter-153
 21.11.2008
 
அடியவனாயிருந்து அரங்கத்துறையும் ஆதிசேஷனின் சொரூபமாம் மாமுனிகளுக்கு அரங்கன் சிஷ்யனாயிருந்து ஆற்ற வேண்டிய மூன்று கார்யங்களையும் செவ்வனே செய்து வருகின்றான் இன்றளவும்.

அடுத்து என்ன….?
 

4. சிஷ்யனானவன் ஆச்சார்யனின் திருநாமத்தினைத் தாம் வைத்துக் கொள்ள வேண்டும்.
 
எப்போது பூர்வாஸ்ரமத்திலிருந்த அழகிய மணவாளன் அரங்கனிடத்து ஸந்யாஸம் மேற்கொள்ள அனுமதி கேட்டாரோ அன்றே அரங்கன் உறுதி செய்துவிட்டான் இவர்தாம் தம்முடைய ஆச்சார்யன் என்று.
 
மணவாள மாமுனிகளுக்கு நம்மாழ்வார் மீது அதீதப் பற்றுதல்.  அவருக்கு ரொம்பவே ஆசை தாம் ஸந்யாஸம் மேற்கொண்ட பின்பு தமது தீக்ஷாநாமம் நம்மாழ்வாரின் மற்றொரு பெயரான ‘சடகோபன்’ என்ற திருநாமத்தினைச் சேர்த்து தம்முடைய திருப்பெயரை ‘சடகோப ஜீயர்” என்று வைத்துக் கொள்ள வேண்டுமென்று.
 
அரங்கனிடத்து அனுமதி கேட்கின்றார்.
 
அரங்கன் மறுக்கின்றான். 
 
அவரை மணவாள மாமுனிகளாக ஆக்குகின்றான்.
 
அரங்கனுக்கு ‘அழகிய மணவாளன்” என்ற ஒரு திருநாமமும் உண்டு.
 
அழகிய மணவாளன் ஸந்நியாஸம் மேற்கொண்டு மணவாள மாமுனிகளாய் ஆகின்றார்.  அரங்கன் அவரது சீடனாய் ‘அழகிய மணவாளன்’ என்ற திருநாமத்துடன் விளங்குகின்றான்.
 
இது எல்லாம் அரங்கன் க்ரமேண செய்து விட்டான்.  ஒன்றேயொன்று பாக்கி அது..
 
5) சிஷ்யனானவன், தன்னுடைய ஸர்வ சம்பத்துக்களையும் ஆச்சார்யனிடத்து அர்ப்பணித்து ஆச்சார்யன் நமக்கு பிரித்துத் தருவதை வைத்து வாழ வேண்டும்.
 
 
உபய விபூதிகளுக்கும் (லீலா விபூதி, நித்ய வீபூதி) தலைவன் அரங்கன்தான். 
 
இந்த இரண்டிலும் அரங்கனோடு அந்தரங்கமாய் இருப்பது ஆதிசேஷன்தான். 
 
அவனைத் தாங்கி அரவணைத்துக் கொண்டிருக்கும் ஆதிசேஷனையே மாமுனிகளுக்கு உகந்து அளித்தான் அவன். 
 
இன்றும் மாமுனிகள் சேஷ பீடத்தின் மேல் அமர்ந்து தரிசனம் கொடுக்கின்றார்
 
அரங்கன் தம் அனைத்து சொத்தின் பிரதிநிதியாயிருந்த ஆதிசேஷனை அவருக்கு உகந்து அளித்ததனால்.  ஒரு ரூபமாயிருக்கும் ஒன்று நமக்கு இரு ரூபமாய் தரிசனம் அளிக்கின்றது. 
 
அரங்கனைத் தாங்கும் ஆதிசேஷன் மாமுனிகளுக்கு பீடமாகவும், இப்புவியில் அவதரித்து, அரங்கனது இதயத்தில் குடி கொண்டு, ஆச்சார்யனாய் மாறிய அவரே, நமக்கு மாமுனிகளாகவும் ஸேவை சாதித்து அருளுகின்றது.
 
இந்த மன்னுலகம் உய்ய வந்த மாமுனியை ஸேவித்தாலே போதும் மணவாளனைத் தரிசித்தப் பயன்!.
 
உன்னத சிஷ்யனாய் உகந்து ஏத்தும் இந்த உத்தமனை நினைத்தாலே போதும் நமது உன்மத்தம் விலகும்.  உண்மை குடி கொள்ளும்.
 
கடும் தவம் வேண்டாம்.  கால் கடுக்க நிற்க வேண்டாம்.  முடிந்த போதெல்லாம் அவர் வாழ்ந்த,
சூக்குமமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இவரின் சன்னிதிக்கு வந்து பாருங்களேன்!. 

அரங்கன் உகப்பான் உங்களை கண்டிப்பாய்!.

November 21, 2008

PESUM ARANGAN-152

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 11:19 pm
Chapter-152
 20.11.2008
 
அரங்கன் சிஷ்யனாயிருந்து தனியன் அருளிச் செய்து, அதனை அனைத்து திவ்யதேசங்களிலும் அருளிச்செய்தாயிற்று. 

அடுத்ததாய் சிஷ்யன் என்ன செய்ய வேண்டும்?
 

3. ஆச்சார்யன் திருநட்சத்திரம் (பிறந்த தினம்) கொண்டாட வேண்டும் – தீர்த்தத் தினம் (முக்தியடைந்த தினம்) – நினைவு கூறுதல் வேண்டும்.
 
இன்று வரை, ஐப்பசி மூல நட்சத்திரம், மாமுனிகளின் அவதார தினத்தினை அரங்கன் சிஷ்யனாயிருந்து அபாரமாய் கொண்டாடுகின்றான்.
அனைத்து ஆழ்வார்களும் அவரவர் திருநட்சத்திரத்தன்று சந்தன மண்டபத்தில் விஸ்வரூபம் போதே எழுந்தருளி அரங்கன் திருவாராதனம் கண்டருளிய பின்பு பஹூமானங்கள், மரியாதைகள் பெற்று திரும்புகின்றனர்.

அதாவது அவரவர்கள் அரங்கனிடத்து வந்து மரியாதைப் பெற்று திரும்புகின்றனர்.
 
மாமுனிகளுக்கு மட்டும் அரங்கன் இங்கிருந்து கோவிலார்கள் மூலமாய் மரியாதைகளை அனுப்புகின்றான்.
 
மாமுனிகளின் திருநட்சத்திரத்தன்று பெரியவசரம் தளிகை ஆனபின்பு, அத்தளிகை முழுவதும், பஹூமானங்களோடு, மாலை மரியாதையோடு, பெரிய கோவில் அர்ச்சகர் மாமுனிகளின் ஸந்நிதி எழுந்தருளி மாமுனிகளுக்குக் கண்டருளுவர்.
 
அன்றைய தினம் அரவணைப் பிரஸாதமும் அப்படியே மாமுனிகளின் ஸந்நிதி அடைந்து கண்டருளப்படுகின்றது.
 
அன்று இரவு மாமுனிகளுக்கு அரங்கன் கண்டருளுவது போன்று வீணை ஏகாந்தமும் நடைபெறும்.  இந்த வீணை ஏகாந்தம் அரங்கனைத் தவிர மாமுனிகளுக்கு மட்டுமே இன்றளவும் நடந்து வருகின்றது.
 
இவ்வளவு கொண்ட்டாங்களையும் அரங்கன் சிஷ்யனாயிருந்து மாமுனிகளின் திருநட்சத்திரத்தன்று இன்றளவும் அனுபவித்து மகிழ்கின்றான்.
 
இதைப்போன்று மாசி சுக்லபட்சம் துவாதசி திதியன்று பெரியவசரத் தளிகை பெரியகோவில் அர்ச்சகர்களால் மாமுனிகளின் ஸந்நிதி சென்று கண்டருளப்படுகின்றது.
 
அன்றைய தினம் தம்முடைய ஆச்சார்யனின் தீர்த்த தினமாகையினாலே அரங்கன் சந்தனம் ஏற்றுக் கொள்வதில்லை.  தாம்பூலமும் தரிப்பதில்லை.
 
ஸ்ரீரங்கம் கோவிலில் 2002ம் ஆண்டு தேவப்பிரஸ்ஸனம் பார்க்கப்பட்டது.

இந்த பிரஸன்னத்தினைப் பற்றிய சர்ச்சையை நாம் மறப்போம்.  அப்போது பிரஸ்ஸனம் பார்த்த திரு. உன்னிகிருஷ்ணன் பணிக்கர் ஒரு செய்தியினைச் சொன்னார். 
 

அரங்கனுக்கு ஒரு தீராத மனவேதனையிருக்கின்றது.
 
அதிர்ந்தோம் அனைவரும்.  அனைத்தும் வல்ல அரங்கனுக்குக் கூடவா மனவேதனையிருக்கும்..?
 
தொடர்ந்தார் அவர்…
 
”தம்முடைய ஆச்சார்யனின் திருவரசு(மாமுனிகள் பள்ளிப்படுத்தப் பட்ட இடம்) பாழ்பட்டிருப்பது கண்டு மிகுந்த தீராத மனவேதனையுடன் உள்ளார் அவர். அந்த திருவரசினை சீர் செய்தால் அவரது வேதனை நீங்கும்.  யார் அதனைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அரங்கனது பரிபூர்ண கடாக்ஷம் உண்டு.  மணவாள மாமுனிகள் லோககுரு. அர்ச்சையின் தலைவனான அரங்கன் ஏத்தும் அந்த ஆச்சார்யனை, தினந்தோறும் 108 திவ்யதேச எம்பெருமானார்களும் வந்து தரிசித்து செல்கின்றார் இன்றும்”   என்றார்.
 
இந்த ஒரு விஷயத்தினை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

நிச்சயமாக அரங்கன் இது குறித்து கவலையுடன், தீராத வேதனையுடன்தான் பள்ளி கொண்டிருப்பான். 
 

அவனது தயையிருந்தால் போதாதா!  மாமுனிகளின் திருவரசு ஒரு பெரிய திருக்கோயிலாய் உரு மாறாதா?
 
மாறும்…!  கண்டிப்பாய் ஒரு திவ்யமான திருக்கோயிலாய் மாறும்!  எல்லாவற்றிக்குமே ஒரு காலம் உண்டு!. 

அரங்கன் இந்த சேஷ பீடத்தில் பள்ளி கொண்டிருப்பது கூட ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான். 
உலுக்கானின் படையெடுப்பில் ஸ்ரீரங்கமே சிதையவில்லையா?
மீண்டும் மாமுனிகளின் காலத்தில் தழைத்தோங்கவில்லையா?
இந்த காலத்திற்காக அரங்கனும் கட்டுண்ண பண்ணியவனாய் கவலையுடன் காத்துக் கொண்டிருக்கின்றான். 
 
இதனை எடுத்துக் கட்டி பொலிவுறச் செய்பவர் எவரோ..?
 
அரங்கனின் பரிபூர்ண கிருபையினை அடைபவர் எவரோ..? 
பிரார்த்திப்போம் நாம்!.

November 20, 2008

PESUM ARANGAN-151

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 11:20 pm

 

Chapter-151
 19.11.2008
 
பெரிய ஜீயருக்கு பெரிய பெருமாளே சிஷ்யனாய் ஆனான்.  பெரிய பெருமாளே சிஷ்யனாய் ஆனதால்
பெரிய ஜீயராய் மாமுனிகள் ஆனார்.

வெறும் சிஷ்யனாய் அப்போதைக்கு இருந்தால் மட்டும் போதாது –  சிஷ்யன் ஆச்சார்யனை தன் உயிருள்ளவரை நினைத்திருக்க வேண்டும்.  சிஷ்யனானவன் சிலவற்றை பின்பற்ற வேண்டும்.  
 
அரங்கன் இதையெல்லாம் செய்தானா?  பின்பற்றினனா..?
 

1. சிஷ்யனானவன் ஆச்சார்யனுக்கு  தனியன் செய்ய வேண்டும் அல்லது ஆச்சார்யனின் தனியனை அனுசந்திக்க வேண்டும்
 
ஈட்டிற்கு,  ஈடு இணையில்லாத தனியனை, ஆச்சார்யனின் முன் தளிர்நடையிட்டு, ஆச்சார்யனை தண்டனிட்டு, தயாநிதியாய், இத்தரணி உய்ய அளித்தான் அரங்கன்.
2. தனியன் செய்தாலோ அல்லது அநுசந்தித்தாலோ மட்டும் போதாது.  ஆச்சார்யனது புகழ் பரவச் செய்ய வேண்டும்.
 
ஸ்ரீபந்நகாதீஸமுநே: பத்யம் ரங்கேச பாஷிதம்
அஷ்டோத்தர ஸத ஸ்தாநேஷூ அநுசந்தாநமாசரேத்
இத்யாஜ்ஞா பத்ரிகா விஷ்வக்ஸேநே ப்ரதிபாதிதா
ததாரப்ய மஹத்பிஸ்ச பட்யதே ஸந்நிதே: புரா
 
ஸ்ரீரங்கநாதனால் மணவாள மாமுனிகள் விஷயமாக அருளிச் செய்யப்பட்டது இந்த ஸ்லோகம்.
 
இது மாமுனிகளுக்காக தாம் அருளிய தனியனை நூற்றெட்டு திருப்பதிகளிலும் அநுசந்தானம் செய்யக்கடவர்கள் என்று நியமனமிட்டு, இந்த நியமனப்பத்திரிக்கை ஸேனைமுதலியாரால் அனுப்பப்பட்டது.
 
அரங்கன் பலரது கனவினில் தோன்றி இத்தனியனையருளி அவர்களது மனதினை விட்டு அகலாதவாறு செய்திட்டான்.
 
அயோத்யா இராமானுஜதாஸர் எனும் ஒரு வைணவ சிரேஷ்டர்.  மிகத் தெளிந்த மனமும் நல்லொழுக்கமும் கொண்டவர், சமஸ்த பாபங்களையும் துரிதமாகப் போக்கக் கூடிய பத்ரிகாஸ்ரமத்தில் பத்ரிநாராயணனை ஆராதித்து வந்து கொண்டிருந்தார்.   அவரது கனவில் பத்ரிநாராயணனாய்  தோன்றி அரங்கன் இத்தனியனை உபதேசித்துள்ளான்.
 
(அயோத்யா இராமானுஜதாஸரின் கனவில் அரங்கனாகவே தோன்றி உபதேசித்திருக்காலாமே?  ஏன் பத்ரிநாராயணனாய் தோன்றி உபதேசித்தார்?

அவரவர் திவ்யதேச பெருமாள்தான் அவரவர் உகக்கும் பெருமாள்.
(திருக்குடந்தை ஆண்டவன் ஸ்வாமிகள் பூர்வாஸ்ரமத்தில் அன்றாடம் அமுதனைத் தரிசியாமல் இருக்கமாட்டாராம்.  ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆஸ்ரமத்தில் பட்டமேற்றுக் கொண்ட பின்பும் பல ஆண்டுகள் அமுதனை மறக்க முடியாமல் இருந்தார்.  அரங்கனை ஸேவிக்க ஸேவிக்கதான் பற்று உண்டாயிற்று அவருக்கு.  ஒரு கட்டத்தில் என்னோடு மணையில் அமரப் போகின்றவன் அரங்கன்தான்.  அவன்தான் எனக்கு சகலமும்.  இருந்தாலும் அமுதன் எனக்கு கள்ளப்புருஷன் மாதிரி மறக்கமுடியவில்லையே என்பாராம்)
 
(எனது வீட்டின் அருகிலுள்ள ஒரு மாமிக்கு கும்பகோணம் பூர்வீகம்.   மாமிக்கு அமுதன் மீது அலாதிப் பற்று.   ஒரு நாள் நம்பெருமாள் வேஷ்டி அணியும் விதம் பற்றி பேச்சு வந்தது.   அமுதனுக்கு சாத்தியிருக்கும் விதத்தினைப் பற்றி பெருமையாக பேசிக்கொண்டேயிருந்தாள் மாமி!.  ஒரு கட்டத்தில் எனக்கு நம்பெருமாளை விட அமுதனை அளவுக்கதிகமாக புகழ்ந்து கொண்டேயிருக்கின்றார்களே என்று எரிச்சல்.   ”மாமி!  கும்பகோணத்தில் கொசுக்கடி அதிகம்.  அதனால் யானைக்காலாய் ஒரு கால்  அமுதனுக்குயிருக்கலாம்.   அதனால் எப்போதும் ஒரு காலை மூடியே தரையையிடிக்கும் வரை அமுதனை மூடி மறைக்கின்றார்கள்.   நீங்கள் அதனைப் பெருமையாய் பேசிக் கொண்டேயிருக்கின்றீர்களே!”  என்று விளையாட்டாய் வாய்கொழுப்பில் சொல்லி விட்டேன்.  ஓரு முறை முறைத்த மாமி இன்று வரை என்னிடம் சரியாய் பேசுவதில்லை.   அன்றிரவு அமுதனிடத்தும் அரங்கனிடத்தும் மானசீகமாக, பேசியதை மறந்து மன்னிக்குமாறு,  பிரார்த்தித்தேன்.)
 

இளையாழ்வார் பிள்ளை என்பாரும்,   இராமானுஜதாஸர் என்பாரும் மணவாளமாமுனிகளிடத்து உத்திரவு பெற்று திவ்யதேசங்களெல்லாம் ஸேவித்து அங்கெல்லாம் ஸ்ரீசைலேசதயாபாத்ரத் தனியனை கொண்டாடி பத்ரிகாஸ்ரமம் வருகின்றனர். 
 
அயோத்யாராமானுஜதாஸர் இவ்விருவரையும் நரநாராயணர் பெருமாள் ஸந்நிதியில் திவ்யபிரபந்தம் தொடங்கும்படி வேண்டுகின்றார். 
 
இருவரும் ‘ஸ்ரீசைலேச” தனியனைச் சொல்லித் தொடங்குகின்றனர்.  அதுகண்டு அயோத்யா இராமானுஜதாஸர் அதி ஆச்சர்யமடைந்தார். 
 
‘ஸ்ரீபத்ரிகாஸ்ரம பெருமாளாலே நமக்கு அருளப்பட்டதன்றோ இது!  இவர்களுக்கு தெரிந்ததுயெப்படி?’  என்று விசாரிக்க இளையாழ்வார் பிள்ளையும் ‘பகவத் ப்ரஸாதலப்தமன்றோ இத்தனியன்!” என்று கூறி மணவாள மாமுனிகளின் வைபவங்களையெல்லாம் ராமானுஜதாஸருக்கு
ஸாதித்து உகப்பித்தருளுகின்றார். 
 
அயோத்யா இராமானுஜதாஸரும் பத்ரிநாராயணரிடத்து விடைபெற்று இளையாழ்வாரோடு திருவரங்கம் நோக்கி பயணிக்கின்றார்.
 
அன்று முதல் இத்தனியன் இன்றளவும் பத்ரிகாஸ்ரமத்தில் இன்றும் அனுசந்திக்கப்பட்டு வருகின்றது.  விடியற்காலையில் இத்தனியனைத்தான் முதலில் அநுசந்திக்கின்றனர்.
 
முதலில் அனுஷ்டானத்தில் கொண்டு வந்தவர்  இளையாழ்வார்பிள்ளையும், இராமனுஜதாஸரும். 
 
 
(இந்த பத்ரி நாராயணனை முதலில் புத்தர் என்றே பௌத்தர்கள் பூஜித்து வந்தனர்.   ஆதி சங்கரர்தாம் பத்ரி நாராயணன் என்று உறுதி படுத்தியவர். 
இராமானுஜர் காலத்திலிருந்து இது தமிழக வைணவர்கள் கட்டுபாட்டில்தான் இருந்து வந்தது.  மாமுனிகளின் காலத்திற்கு பின் இந்த நிலைமை மாறிவிட்டது.  இன்றும் கோவிலின் துவாரபாலகர்கள் மற்றுமுள்ள சிலைகள் நம் தமிழ்நாட்டிலுள்ளது போலிருக்கும்)
 
பகவானால் அருளப்பட்டமையினாலேயே இன்றளவும் இதன் அனுஸந்தானம், புகழ்,  வடக்கே பத்ரிகாஸ்ரமம் முதல் தெற்கே திருப்புல்லாணி வரையிலும் இன்றளவும் அழியாது போற்றப்பட்டு பேணப்பட்டு வருகின்றது.

November 19, 2008

PESUM ARANGAN-150

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 11:45 pm
Chapter-150
 18.11.2008
 
 

ஈடு இணையில்லாத இந்த “ஸ்ரீசைலேச தயாபாத்திரம்“  தனியனுக்கு பெரியோர்கள் அருளியுள்ள வியாக்யானம் அற்புதமானது.  வைகுண்டவாசி பிரதிவாதி
பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் அருளியுள்ள இந்த வியாக்யானம் அற்புதமானது.

 ஸ்ரீசைலேச தயா பாத்ரம் –

 
இராமாவதாரத்தின்போது “சைலேச தயா பாத்ரன்” என்பவனிடம் இராமன் சரணம் என்று புகுந்தான். சைலம் என்றால் ரிஷ்யமுக மலையாகும். அதன் அதிபதி மாதங்க மஹரிஷி ஆவார். அவரது கருணையைப் பெற்றவன் சுக்ரீவன் ஆவான். ஆக சைலேச தயா பாத்ரன் என்பது சுக்ரீவனைக் குறிக்கும். தனக்கு உதவும்படி இராமன் சுக்ரீவனிடம் சரணம் புகுந்தாலும், சுக்ரீவன் தான் இராமனுக்குப் பட்ட கடனை அடைக்கவில்லை என்பதால், அவனை இராமன் கண்டிக்க வேண்டியதாயிற்று. இது சரணாகதிக்கு விரோதமாக ஆனதால், தனது சரணாகதி தவறியது என்று இராமன் வருத்தம் கொண்டான். இக்குறை தீர உயர்ந்த ஒரு ஆசார்யனிடம் சிஷ்யனாக இருப்பதே சிறந்தது என்று எண்ணினான்.
தீபக்யாதி குண அர்ணவம்
 
– இது போன்று ஸமுத்ர ராஜனிடம் இராமன் சரணம் அடைந்தான். ஆனால், ஸமுத்ர ராஜன் இராமனின் சொற்களுக்கு ஏற்ற மதிப்பு அளிக்கவில்லை என்பதால், அவன் மீதும் இராமன் சீற்றம் கொள்ள வேண்டியதானது. ஸ்வாமி மணவாளமாமுனிகள் விஷயத்தில் கடல் போன்ற ஞானம், அறிவு, பக்தி கொண்ட ஸ்வாமியிடம் சரணம் அடைந்தான்.
 
யதீந்த்ர ப்ரணவம்
 
இராமாநுச நூற்றந்தாதியின் 97-ஆவது பாசுரமான – தன்னை உற்றச் செய்யும் தன்மையின் ஓர் – என்பதை திருவரங்கன் கேட்டான். இந்தப் பாசுரத்தில் எம்பெருமானாரின் சிஷ்யர்களின் மேன்மை கூறப்பட்டுள்ளது. இதனைக் கேட்டவுடன், எம்பெருமானாருக்கு சிஷ்யனாக இருப்பதைக் காட்டிலும், அவரது சிஷ்யனுக்கு சிஷ்யனாக இருப்பது மேலானது என்று முடிவு செய்தான்.
வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்
 
இராமனின் குருவான விச்வாமித்ரரின் குறைகளை நாம் அறிவோம். கண்ணனின் குருவான ஸாந்தீபநி முனிவரும், குரு தக்ஷிணையாக தனது பிள்ளையைக் கேட்டாரே அன்றி, மோக்ஷம் கேட்கவில்லை. ஆக தனது அவ்விரு குருவிடமும் எம்பெருமானுக்கு அந்த அளவு பிடிப்பு உண்டாகவில்லை. ஆகவே குருவுக்கு இலக்கணமான ஒருவரைத் தேர்ந்தெடுத்தான்.

November 18, 2008

PESUM ARANGAN-149

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 11:20 pm
Chapter-149
 17.11.2008
 
 

அரங்கன் தன் சரிதைக் கேட்டு, தன் திவ்ய மணியாசனத்திலிருந்து இறங்கி, வைணவர்களோடு வைணவராய்,  சாமானியனாய் கலந்து,  பாலகனாய் வந்து, அப்பால் போ என்று விரட்டியும் அதனை பொருட்படுத்தாது, தம் செம்பவளத் திரல் வாயால், தனியன் அருளிச் செய்தான். 
 
ஓராண் வழி ஆச்சார்ய பரம்பரை,   மணவாள மாமுனிகளோடு முற்றுப்பெற்றதை சூசகமாய் அறிவித்தான்.
இந்த தனியன் ஈடு இணையில்லாதது. 
 
ஈட்டிற்கு ஈடாக ஈந்தது.
தனியன் அவதாரம் ஆயிற்று.  வாழி திருநாமம்…? 
 
‘நீர் வாழித் திருநாமமும் ஓதும்!” என அப்பிள்ளையை வேண்டினர் சபையார்.
 
அப்பிள்ளைத் தமிழில் அதிசாதூரர். 
 
அரங்கன் அவர் நாவில் அமர்கின்றான் இம்முறை. 
 
வாழி திருவாய்மொழிப்பிள்ளை மாதகவால்
வாழும் மணவாள மாமுனிவன் – வாழியவன்
மாறன் திருவாய்மொழிப் பொருளை மாநிலத்தோர்
தேறும்படியுரைக்கும் சீர்
 
என்றும்
 
செய்ய தாமரை தாளினை வாழியே
சேலைவாழி திருநாபி வாழியே
துய்ய மார்பும் புரிநூலும் வாழியே
சுந்தரத் திருத்தோளிணை வாழியே
கையுமேந்திய முக்கோலும் வாழியே
கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யிலாத மணவாள மாமுனி – புந்தி வாழி
புகழ் வாழி – வாழியே
 
என்றும்
 
அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ
சடகோபன் தண்டமிழ்நூல் வாழ – கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ  மணவாள மாமுனியே!
இன்னுமொரு நுhற்றாண்டிரும்!
 
என்றும் அருளினார். 
 
நம்பெருமாள் இதனை உகந்து அங்கீகரிக்கின்றார்.
வாழி திருநாமமிட்டார்க்கு மரியாதைகள் பல செய்கின்றார்.
 
(இந்த மூன்று தனியன்களையும் இயற்றியவர் குறித்து நிறைய பேதங்கள் உண்டு.  ஒரு சிலர் முதல் சுலோகம் மடத்துப்பிள்ளை அருளியது – 2வது 3வது ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா அருளியது என்பர்.  தெலுங்கு
பதிப்பில் இம்மூன்றுமே அப்பிள்ளை அருளியதாக உள்ளது).
 
கோயில் கந்தாடையண்ணன் இந்த கோஷ்டியிலே அந்வயித்துயிருக்க, அவரது திருமாளிகைக்கு ஒரு ப்ரும்ஹச்சாரி வைணவன் நுழைகின்றான்.
தேவிகளிடத்தில் ஒரு ஓலையினை அளித்து அதனை அண்ணன் திருக்கையிலே சமர்ப்பியும் என்கிறான். 
 
தேவி அதனைப் பிரித்து ‘இது ஒரு சுலோகமிருந்தபடியே” என்று பார்வையிட்டு அந்த பிரம்ஹச்சாரியைத் தேட அவனைக் காணவில்லை. 
 
அங்குள்ளோர் வியந்து,  கோயிலுக்கு வந்து கோஷ்டியில் அன்வயித்திருந்த அண்ணனிடத்தில் இந்த ஓலைச் சீட்டைத் தருகின்றனர். 
 
அந்த ஓலையிலும் ஸ்ரீசைலேசதயாபாத்ரம் எழுதப்பட்டிருந்ததைக் கண்ட அண்ணன் வியந்து, அங்கிருந்த அனைவரும் ஏகோபித்து முடிவெடுக்கின்றார்கள். 
 
இந்த தனியன்தான் எல்லாருக்கும் உத்தாரகம் என்று முடிவு செய்கின்றனர்.
 
பெருமாள் பெரிய ஜீயரான மாமுனிகளுக்கு சகலவிதமான மரியாதைகள் அனைத்தையும் செய்கின்றார்.  
 
கோயிலின் அனைத்துக் கொத்து ஊழியர்களும் ஜீயரை கேடயத்தில் எழுந்தருளப் பண்ணிவித்து
திருவீதி பிரதட்சிணமாக மடத்திலேயெழுந்தருள பண்ணுகின்றார்.
 
ஜீயரை ‘ஈடு முப்பதாறாயிர பெருக்கர்” என்று வைணவயுலகமே கொண்டாடியது.
 
==========
From: srutha prakash bhattar
Phone: 09894213431
E-mail: srivathsan.parasarabattar@gmail.com
Message:
swami dasan
SRISAILESA vaibhavam very super
namperumal withdrew all his utsavams for one year to hear bhagavat vishayam that shows his nirhethuka krupai on jeevathmas
and acharya sishya lakshanam.
because of him and that act only all where rectified within our sampradhayam.
the thanayan is right but when we spell it we must say RAMYA JAMATHARAM MUNIM[Azhagiya Manavalan]
but all of us say RAMYAJA MATHARAM MUNIM[Azhagiyama Navalan]
which is wrong.
odhiyadhu odiyadhu olindhu mariandhadu

he didnt hide he is still there. only maraindhadhu is ok.[dont mistake me i had told this to my knowledge]

ooranvazhi finished in this stage.
Lakshmi Nadhan [Periyaperumal] started as 1st acharya pursha and he him finished the same paramparai.
always a thing must end in a same place where it started then only its a perfect circle.

so that only srivaishnavism is very perfect in its manner and steam lined.

dasan
Sri Prasara Srutha Prakash Bhattar

 

November 17, 2008

PESUM ARANGAN-148

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 11:23 pm
Chapter-148
 15.11.2008
 
 

அனைத்தும் அறிந்த அரங்கனே மாமுனிகளின் ஈடு உரை கண்டு அதிசயித்தவனாய், அனுதினமும் விடாது கேட்டு அவரின் அந்தரங்க சிஷ்யனாய் மாறிப் போனான். 
 
ஒரு வருட காலம் ஸ்ரீரங்கத்திலுள்ளோர் அனைவரின் செவிக்கின்பமாய், ஆன்மாவிற்கு விருந்தாய், அரங்கனோடும், கிடைத்தற்கரிய ஆச்சார்யனையும் அடைந்த வைணவர்கள் அனைவரும் பெறுதற்கரிய பேறு பெற்றோரானார்கள். 
 
ஸ்ரீரங்கம் செழிப்புற்று விளங்கியமையால் அனைத்து திவ்யதேசங்களும், இந்த உலகும் செழிப்புடன் விளங்கியது.
 
அமைதியும், ஆன்மீக உணர்வும், பக்தியும், புவியில் படர்ந்து செழித்தது.
 
மாமுனிகள் ஒருவரால்  வைணவர்கள் பலரும் திருந்தி தர்மசிந்தனையுடன் வாழ்ந்தனர்.  பல வைணவர்கள் தர்மத்தோடுயிருந்தமையினால் அவர்களது தாக்கம்  ஸ்ரீரங்கத்தினையேத் திருத்தி, ஸ்ரீரங்கம் அதிதிவ்யமானது.  ஸ்ரீரங்கம் தர்மதேவதையின் இருப்பிடமானதால் உலகெங்கும் அநீதி குறைந்து அமைதி படர்ந்து நிம்மதியடைந்தது.
 
திருவாய்மொழி ஈடு முப்பதாறாயிரத்துடனே ஒரு வருடகாலம் முடிந்து அன்று கடைசிநாள்.  சாற்றுமுறை. (கலி 4534 – பிரமாதீச வருடம் ஆனி மாதம் பெளர்ணமி ஞாயிற்றுக்கிழமை – மூல நட்சத்திரம் (09-07-1433))
மாமுனிகளை கௌரவிப்பதற்காக நம்பெருமாளின் முன்பு ஸம்பாவணைத் தட்டு, பலவகைப்பட்ட உபஹாரங்கள் ஸித்தப்படுத்தப்பட்ட தட்டுகள், ஏலாலவங்க கற்பூராதிகள் கொண்ட தட்டு, பழத்தட்டுக்கள், அடைக்காய் எனப்படும் வெற்றிலைகள் நிரம்பிய தட்டு, திருப்பரிவட்டம் போன்றவை பரத்தி விரித்து வைக்கப்பட்டிருந்தன. 
 
அரங்கன் முகத்தில் குறும்பு தோன்ற தரிசனம் தந்து கொண்டிருந்தான். 
 
மாமுனிகள் அரங்கனின் நிர்ஹேதுக கிருபையாலும், பூர்வாச்சார்யர்களின் திவ்ய அனுக்ரஹத்தாலும் நடைப்பெற்று முடிந்தமைக் குறித்து கண்ண நீர் வழிந்தோட,  கைக்கூப்பி, அஞ்சலிஹஸ்தராய் நம்பெருமாளையும், நம்மாழ்வாரையும் தியானித்த வண்ணம் அமர்ந்திருந்தார். 
 
ஒரு சிறு ஓசைக் கூட கேட்காமல் கோயில் முழுதும் அமைதியாய் அவரவர்கள் ஆனந்தகண்ணீருடனே அமர்ந்திருந்தனர்.
 
திடீரென ஒரு சின்ன சலசலப்பு.  அர்ச்சசகரின் குமாரன் நான்கு பிராயம் முடிந்து ஐந்தாம் பிராயத்திலுள்ள ‘ஸ்ரீரங்கநாயகம்’ எனும் பாலகன், அனைவரையும் தாண்டி வந்து,  நம்பெருமாளுக்கு முன் மணவாள மாமுனிகளுக்கு எதிரே கைகூப்பி நின்று கொண்டிருந்தது. 
 
கோவிலார்கள் இடையூறாக நிற்கின்றதே இக்குழந்தை என்று தூக்கி தூக்கி அப்பால் விட விட இந்த குழந்தை வேகமாய் வேகமாய் அனைவரையும் ஏமாற்றி விட்டு ஓடி ஓடி மீண்டும் மீண்டும் மாமுனிகளின் எதிரே கைக்கூப்பியபடி நின்றது. 
 
அங்குள்ள ஆச்சார்யார்களுக்குப் புரிந்துவிட்டது.
இது வெறுமனன்று. ஒரு ஆச்சர்யமுண்டாக வேணும்” என்று எல்லாரும் குழந்தையினை கண்காணிக்கத் தொடங்கினர். 
 
ஆச்சார்யர்களில் ஒருவர் குழந்தையிடம் அன்பாய் கேட்டார்   ‘குழந்தாய்! நீர் நிற்கிற காரியமேதென்ன?” என்று.  
 
அந்த குழந்தை சிறிதும் பயப்படாமல், சபை கூச்சமுமின்றி, கணீரென்று ஒரு முறை சொன்னதே மனதில் என்றென்றும் நிலைத்து நின்று எதிரொலித்துக் கொண்டேயிருக்கும் வண்ணம், இந்த வையம் உகக்கும் வண்ணம்,
 
 
‘ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் !

யதீந்தர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் !!
(திருமலையாழ்வாரான ஸ்ரீசைலேசரின் பரமக்ருபைக்குப் பாத்திரமானவரும், அதனால் ஞான பக்தி  வைராக்யங்களான குணக் கடலாகவும், யதீந்தரரான எம்பெருமானார் திறத்தில் ப்ரேமையே வடிவெடுத்தவராகவும் விளங்கும் அழகிய மணவாள மாமுனியை வணங்குகின்றேன்.)

 
என்று  மாமுனிகளைப் பார்த்து கைகூப்பி ஸேவித்தது – ஓதியது – ஓடியது –  மறைந்தது. 
 
அந்த வைணவ சபையே அதிர்ந்தது. 
 
இது மணவாள மாமுனிகளுக்கு ஈட்டுக்கு ஈடாக நம்பெருமாள் உகந்து அளித்த பரிசு என்று உணர்ந்தது. 
 
அதனை அப்படியே பட்டோலைப்படுத்தி, மஞ்சள் காப்பிட்டு நம்பெருமாளின் திருவடிகளில் வைத்து அரங்கனின் கிருபையை எண்ணி ஆனந்தமாய் அழுதனர் அனைவரும்.
 

November 15, 2008

PESUM ARANGAN-147

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 11:29 pm
Chapter-147
 14.11.2008
 
 

மாமுனிகளைக் கண்ட மாயகூத்தனுக்கு முகமெல்லாம் பூரிப்பு –  திருமுகம் சிவந்து புன்முறுவல் தோன்ற, திருக்கண்கள் மலர்ந்து விரிந்து அன்றலர்ந்த தாமரையினைப் போன்று ஸேவை சாதித்தருளினான். 
 
மாமுனிகளின் கண்களில் ஆனந்த கண்ணீர் பிரவாகமாய் வழிந்தோடுகின்றது.
 
நம்பெருமாள் திருச்சி எனப்படும் தோளுக்கினியானில் உபயநாச்சிமாரோடு எழுந்தருளி சந்தன மண்டபம் அடைந்து அங்குள்ள திவ்ய ஸிம்ஹாஸனத்தில் நாச்சிமாருடனேகூட அங்குள்ள திவ்யகோஷ்டியின் நாயகனாய், அயர்வறு அமரர்களான திருவநந்தாழ்வான், பெரியதிருவடி, ஸேநாதிபதியாழ்வான் ஆகியு நித்யசூரிகளுடனும், வைகுந்தத்து முனிவராயிருந்துள்ள நம்மாழ்வார் தொடக்கமான ஆழ்வார்கள் பதின்மரோடும், நாதமுனி தொடக்கமான ஆச்சார்யகளோடும், ஸ்ரீரங்கநாராயண ஜீயர், திருமாலை தந்த பட்டர் தொடக்கமானரோடும், அணியரங்கன் திருமுற்றத்தடியார் பெருங்குழுவோடும் கூடி, போரோலக்கமாக, ஆர்ப்பரித்து எழுந்த வைணவ கடல் போன்று சந்தனு மண்டபம் நிரம்பி வழிந்தோடியது. 
 
நம்பெருமாளின் அருகில் மணவாள மாமுனிகள் தேஜஸ்வியாய், உடல் முழுதும் ஒளிர்பவராய்,  பூர்ணசந்திரன் அருகில் ஜொலிக்கும் துருவ நட்சத்திரம் போன்று, நம்பெருமாளின் அருகில் கைகூப்பிய வண்ணம் பூர்வாச்சார்யர்களையும், பிள்ளைலோகாச்சார்யாரையும், தமது குருவான திருவாய்மொழிப் பிள்ளையையும் மானசீகமாக தியானிக்கின்றார்.
 
ஈடு தொடக்கமான ஐந்து வியாக்யானங்களுடனே திருவாய்மொழி காலட்சேபத்தினை கணீரென்ற மணிபோன்ற குரலுடனே தொடங்குகின்றார்.
அவ்வவிடங்களிலே இது ச்ருதிப்ரக்ரியை, இது ஸ்ரீபாஷ்யப்ரக்ரியை, இது ச்ருதப்ரகாசிகை ப்ரக்ரியை, இது கீதாபாஷ்ய ப்ரக்ரியை, இது ஸ்ரீராமாயண ப்ரக்ரியை, இது மஹாபாகவத ப்ரக்ரியை என்று பல க்ரந்தங்களிலிருந்து அவ்வப்போது மேற்கோள் காட்டியும்,   இது பதார்த்தம், இது வாக்யார்த்தம்,  இது மஹா வாக்ய அர்த்தம்,  இது ஸமபிவ்யாஹாரார்த்தம், இது தவந்யார்த்தம்,  இது வ்யங்கயார்த்தம், இது ப்ரதிகோட்யர்த்தம் என்று வாக்யங்களுக்கு பலவிதமான அர்த்தங்களை அருளியும், இது ஸப்தரஸம் என்று ஸப்தங்களுக்கும்,  இது அர்த்த ரஸம் என்று அர்த்தங்களுக்கும், இது பாவரஸம் என்று அந்த பாவத்திற்கும் உண்டான ஏற்றங்களையருளியும்,  இது ஒண் பொருள், இது உட்பொருள் என்று பகுத்து ஆராய்ந்தும் நித்யபடி அருளிச் செய்த வண்ணம், ஸ்ரீவைணவர்கள் மேலும் மேலும் வந்து சேர்ந்த வண்ணம் திருவாய்மொழி வைபவம் நடந்தேறியபடி,
 
ரங்கீ வத்ஸனமேகமேவ ஸ்ருணோத் வ்யக்தம்
யதோக்தம் க்ரமாத்
ஸ்ரீரங்கநாதன் மாமுனிகளால் முறையே ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்ட விஷயத்தை இங்ஙனமே ஒரு வருடகாலம் கேட்டருளினார்.
 
என்கிறபடியே ஒரு ஸம்வத்ஸரம் (ஒருவருடம்) திருச்செவி சாத்தி, தனது வைபவங்கள் அனைத்தையும், ஏதும், இந்த ஒரு வருடகாலம் கொண்டாடாது, மாமுனிகளின் வாக்பிரபாவத்திலே, அவரது அந்தரங்க சிஷ்யனாய் மாறி, அமிழ்ந்து கிடந்தான் அரங்கன்!.

Older Posts »

Create a free website or blog at WordPress.com.