Srirangapankajam

April 28, 2008

PESUM ARANGAN-17

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 5:20 pm

பொய்கையாழ்வாரை அயோநிஜர் என்பர். கருவிலேயே பெரியபெருமாள் ஸேவை புரிந்து நான் பிண்டமாயிருக்கும் போதே கைத்தொழுதேன் என்கிறார்.  அப்படியென்றால் இவரின் முற்பிறவியிலிருந்து இவருக்கு அரங்கனின் சம்பந்தம் உள்ளதாகின்றது.

அடுத்து வருகின்ற பூதத்தாழ்வார் என் நெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீரங்கநாதனே என்று பாடுகின்றார். பொய்கையாருக்கு கருவிலேயே காட்சி தந்தவர் இவரின் நெஞ்சத்தில் நிரந்தரமாக குடிபுகுந்தார்.

மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும்
நினைப்பரிய நீளரங்கத்துள்ளான் – எனைப்பலரும்
தேவாதி தேவனெனப்படுவான் – முன்னொருநாள்
மாவாய் பிளந்த மகன்

(எண்ணற்ற வேத விற்பன்னர்களால், தேவர்களுக்கெல்லாம் தேவன், என்று சொல்லப்படுகிறவன் எம்பெருமாள், மிகவும் பெரிய திருப்பாற்கடலில் சயனித்துக் கொண்டிருப்பவனும், முன்பு ஒரு யுகத்தில் (கிருஷ்ணவதாரத்தில்) குதிரை வடிவம் எடுத்துத் தாக்க வந்த கேசி என்னும் அரக்கனின் வாயினைப் பிளந்த கிருஷ்ணனும், மேலும் அந்தத் திருமலையில் நின்று கொண்டிருப்பவனும், திருவரங்கத்தில் சயனித்துக் கொண்டும் இருப்பவனாகிய எம்பெருமாளே! என் நினைவிலும் நெஞ்சத்திலும் என்றும் நீங்காமல் குடி கொண்டுள்ளான்)

இவர் வைகுண்டத்திற்கான ஒரே வழி அரங்கனது வழியில் செல்வதுதான் என்கிறார்.

”திறம்பிற்று இனியறிந்தேன் தென்னரங்கத்தெந்தை
திறம்பாவழி சென்றார்க்கல்லால் – திறம்பாச்
செடிநரகை நீக்கித் தாம் செல்வதன்முன் – வானோர்
கடிநகர வாசற் கதவு

(திருவரங்கத்திலே பள்ளி கொண்டுள்ள பெரியபெருமாள் என்பவனது வழியில் செல்லாமல் இருப்பவர்களுக்கு, இந்த உலகில் சம்சார பந்தத்தினை வேரறுத்து உள்ளே செல்லக்கூடியதும், வானோர்கள் வாசம் செய்வதும், நீண்ட அரண்களையுடையதும், ஆகிய ஸ்ரீவைகுண்டத்தின் வாயிற்கதவுகள் மூடிக்கொள்ளும் என்பதை நான் அறிந்து கொண்டேன். திறம்பாவழி: அரங்கனை மட்டுமே மார்க்கம் என்று எண்ணிப் பிற வழியிலே போகாமல்)

அது என்ன  திறம்பாவழி?.

சுமாh; 20 வருடங்களிருக்கும் என்று நினைக்கின்றேன். வேளுக்குடி ஸ்ரீவரதாச்சாரி என்றவொரு மகான். வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் அவர்களின் தந்தை. இந்த ஸ்வாமிக்கு உபன்யாஸம் தவிர கைங்கர்யத்திலும் மிக்க ஈடுபாடு. திருமலையில் மடப்பள்ளியில் கூட கைங்கர்யம் செய்ததாக கேள்விப்பட்டுள்ளேன். பெரியபெருமாளிடத்து மிகுந்த ஈடுபாடு. பெரும்பாலும் பெரியபெருமாள் திருவாராதனம் போது கூடவேயிருந்து ஸேவிப்பார்.. அன்று ஸ்ரீகிருஷ்ணபட்டர் என்னும் மூத்த அர்ச்சகர் திருவாராதனம். அடியேனும் அர்ச்சகருக்கு உதவியாக மூலஸ்தானத்திலிருந்தேன். வேளுக்குடி ஸ்வாமி திருமணி ஸேவித்துக் கொண்டிருந்தார். திருவாராதனம் முடிந்தது. ஸ்வாமிக்கு நம்பெருமாள் அபயஹஸ்தத்தினைக் கொடுத்து மாலை, துளசி எல்லாம் அனுக்கிரஹித்து ஸேவை முடிந்தது. ஸ்வாமி கையில் துளசி பிரசாதங்கள், வலது கையில் அபயஹஸ்தத்துடன் தாயார் ஸந்நிதி நோக்கி போய்கொண்டிருக்கின்றார்.  போகும் வழியில் பரமபதவாசல் அருகில் மூர்ச்சையாகி கீழே விழுந்தார். சில நிமிடங்களில், நம்பெருமாளின் பக்கம் போய் சேர்ந்தார். ப்ரத்யக்ஷமாக கைகளில் நம்பெருமாள் பிரஸாதங்களுடன் வைகுண்டம் புகுந்தவர் இந்த மஹான்.

இப்போது சொல்லுங்கள்  ‘திறம்பாவழி’?.

நான் சுருக்கமாக சொல்லவா?

அரங்கனிடம் மிக்க ஈடுபாடு. இது ஒன்றுபோதும்.
மற்றதெல்லாம் அவன் பாடு!

-Posted on 27th April’2008-

Advertisements

April 26, 2008

PESUM ARANGAN-16

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 7:28 pm

பொய்கையாழ்வார் கருவரங்கத்துள் கிடந்த போதே திருவரங்கன் அவருக்கு ஸேவை புரிந்துள்ளான். இவர் பிரஹ்லாதன் போன்று கருவிலேயே திருவையடைந்தவர்.

“ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ? ஏழைகாள் – அன்று
கருவரங்கத்துள்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்கமேயான் திசை” – (முதல் திருவந்தாதி-6)

(நான் ஒன்றும் அறியாமல் கர்ப்பத்திலிருந்த காலத்தின் போது, திருவரங்கத்துளிருந்த பெரிய பெருமாளையும் அவனது திருக்கல்யாண குணங்கள், ரூபம் முதலியனவற்றைக் கண்டேன். அவ்வாறு கண்டவுடன் கைத்தொழுதேன். என்றும் நிலையாகயுள்ளச் பெருஞ்செல்வத்தைத் தவறவிட்டு
நிலையில்லாத செல்வங்களை நினைத்திருக்கும் ஏழைகளே! என்னுடைய கர்ப்பத்திலிருந்து நான் வெளியே வந்தவுடன் அவனை மறப்பேன் என்று நினைத்தீர்களா? அவனுடைய ரூபம், குணம் போன்ற எதையும் நான் மறக்க மாட்டேன். தன்னிடம் வந்தவர்களை தன்னை விட்டு நீங்க முடியாமல் செய்பவனை நான் என்றும் மறக்க மாட்டேன்!)

ஏழை என்பதற்கு இவர் பெரியபெருமாளை இழந்து நிற்பவர்கள், பெருஞ்செல்வம் படைத்தோராயினும் ஏழையே என்கிறார்.

பரம ஏழையாக இவனடி சேர்ந்தாரை இன்பமாக வைத்திருப்பான்.
தன்ராஜ் என்றொரு வடக்கத்திக்காரர். பரம ஏழை! நம் பாஷையும் அறியாதவர்.
எப்படியோ தட்டு தடுமாறி, சுமார் ஒரு 50 வருஷம் முன்பு ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்து விட்டார். கோவிலில் கிடைத்த பிரஸாதத்தினையுண்டு ஏதோ ஸேவார்த்திகள் அளித்த காசையும் கொண்டு ஜீவித்திருந்தார். தினசரி நம்பெருமாள் ஸேவிக்காமலிருக்க மாட்டார். என் தகப்பனாருக்கு நெருக்கம் ஆனார். தகப்பனார் அவனிடம் ஒருநாள் “அரங்கனுக்கு வெண்ணையென்றால் பிரியமானது! “நவநீத சுபாஹாரினே நம:” என்று கூட ஒரு நாமாவளியுண்டு. நீ தினசரி உன் சக்தியேற்றபடி வெண்ணை அமுது செய்து வா” என்றார். அன்றிலிருந்து அவன் பிச்சையெடுத்த காசில் கொஞ்சம் வெண்ணை வாங்கி இலையில் வைத்து அமுது செய்து வந்தாh. நாளாக நாளாக அவனது ஸேவை வடக்கேயிருந்து வரும் ஸேவார்த்திகளிடையே ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள ரங்கா ரங்கா கோபுரத்திற்கு எதிரிலேயே
ஒரு வீட்டை வாங்கி சத்திரமாக மாற்றி இவரை அங்கு அமர்த்தினர். பசு மாடு போஷித்து தினசரி பசுவெண்ணை வெள்ளிக்கிண்ணியில் வைத்து நிவேதனம் செய்ய ஆரம்பித்தார். இவரது கீர்ததி பெருகி மிகப்பெரிய ஆளானார். எவ்வளவு பெருமை வந்து இவரைச்சேர்ந்த போதும் பெருமாளிடத்து மிகவும் அன்புடையவராய், அனைவரிடத்து பெரும் பணிவுடையவராய், கனிவோடு தன் சத்திரம் வந்தவர்களைக் காப்பவராய் வாழ்நது ஒரு நன்னாளில் அரங்கனடிச் சேர்ந்தார். இன்றும் இந்த தன்ராஜ் சத்திரம் உள்ளது. அவர் ஏற்படுத்திய ‘வெண்ணையமுது’ நடந்து கொண்டிருக்கின்றது. அரங்கன் வந்தாரை வாழ வைப்பவன். ஏழைக்கு இரங்கும் பெருமாள்!.

அரங்கனின் குணாதிசயத்தையும் ஒரே பாட்டில் வெளிப்படுத்துகின்றார்.
தன்னிடம் வந்தவர்களை தன்னை விட்டு நீங்க முடியாமல் செய்பவன் என்கிறார். உண்மைதான். சிலநாட்களே தொடர்ந்து தரிசித்தால் போதும் அதன் பிறகு அவர்களால் இவனது தரிசனம் இல்லாமல் இருக்கமுடியாது. ஸ்ரீரங்கத்தில் வீட்டிற்கு ஒருவராவது ரங்கதரிசனம் இல்லாமல் இருக்க மாட்டார்கள். நித்யபடி பெருமாள் ஸேவிக்கின்றவர்கள் எந்த ஊரினைக் காட்டிலும் இந்த ஊரில் அதிகமே!. இவர்களுக்கு பெருமாள் ஸேவை ஒன்றுதான் முக்கியம். யார் எது சொன்னாலும், அலட்சியப்படுத்தினாலும்,
ஏன் அவமானப்பட்டாலும் கூட பெரிது பண்ணமாட்டார்கள். பெருமாள் ஸேவையினில் நிறைவுகொண்டு சென்று விடுவார்கள். அரங்கன் அந்தளவுக்கு அவர்கள் ஒவ்வொருவரோடும் அந்தரங்கமானவன். பெருமாளுக்கு சாற்றுப்படியைப் பார்த்து எந்த அர்ச்சகர் முறை என்று கூட சொல்லிவிடுவார்கள். அந்தளவுக்கு அவனை நெருக்கமாகக் கவனிப்பவர்கள்.

-Posted on 26th April’ 2008-

April 25, 2008

PESUM ARANGAN-15

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 10:09 am

ஸ்ரீமந் நாதமுனிகள் ஆழ்வார்களனைவரும் பாடி களித்த பாசுரங்களை
தான் அபிநயித்து ஆடியும், பாடியும் நமக்காகவே விட்டுச் சென்றுள்ளார். இன்று இந்த அரையர் ஸேவை திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆழ்வார் திருநகரி ஆகிய திவ்யக்ஷேத்திரங்களில் மட்டுமே நடைபெற்று வருகின்றது.
அரையர்களுமே வெகுவாக குறைந்து விட்டனர். வைணவப் பெரியோர்கள் இதனையாவது அழியவிடாமல் பாதுகாக்க வேண்டும். பாடசாலைகள் அமைத்து வைணவப்பற்றுடையோர்களுக்குக் கற்று தர வேண்டும்.

ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை வகைப்படுத்தியவர் நாதமுனிகள்.
ஆழ்வார்கள் அனுபவங்களைச் சுவைப்பட நமக்கு பகிர்ந்தளித்தவர்கள் நம் பூர்வாச்சாரியர்கள். இந்த ஆழ்வார்களனுபவம் முழுதுமாக வகைப்படுத்தி முதலில் நமக்குக் கிடைத்தது ‘பிரபந்நாம்ருதம்’ எனும் சமஸ்கிருத நூலே!.
இதனை ஸ்ரீகருட வாகன பணடிதர் என்பவர் இயற்றியுள்ளார். இதனைத் தழுவி வந்த நூல் ‘ஆறாயிரப்படி’. இவைகள் மூலமாக நாம ஆழ்வார்களனுபவம் பெரியவாச்சான் பிள்ளைப் போன்ற சிறந்த ஆச்சார்ய புருஷர்கள் மூலமாகக் கிடைக்கப் பெற்றோம்.

நம்மில் பெரும்பாலானவர்கள் ஆழ்வார்கள் பாடியதனால்தான் 108 திவ்யக்ஷேத்திரம் என்று நினைக்கின்றோம். அது தவறு! வேதத்தில் பிரம்மா கேட்கின்றார். நீ தற்போது உள்ள இந்த பரமபதத்தினைத் தவிர எங்கெங்குள்ளாய் என்று? இதற்கு வேதவாக்யம் மூலமாக பெருமாள் உணர்த்துகின்றார்

“ஸதம் வோ அம்ப தாமானி ஸ்ப்தச்ச….” என்று.

ஸதம் என்றால் நூறு. ஸப்தச்ச என்றால் ஏழு. தாம் என்றால் கோவில் என்று பொருள். அவரிருக்குமிடத்தையும் சேர்ததால் 108 திவ்யக்ஷேத்திரமாகின்றது. இந்த 108 திவ்ய க்ஷேத்திரததின் பெருமாளும், நம் ஆழ்வார்களுக்கு ஸேவை புரிந்து அவர்கள் இவர்களிடத்திலே ஆழங்கால் பட்டு நமக்கும் காட்டி கொடுத்தனர். அத்துடன் வேதஸாரத்தினையும் தீந்தமிழ் பாக்களாக நமக்கு, எப்படி மடி கனத்த பசுக்கள் பாலைச் சொரியுமோ அம்மாதிரி நமக்கு சொரிந்து ஈந்தனர்.

இதற்கு விளக்கு ஏற்றித் தொடக்கியவர் பொய்கையாழ்வார். எப்படி விளக்கேற்றினார்?

” வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
சுடராழி யான் அடிக்கே சூட்டினென்சொன் மாலை
இடராழி நீங்கவே என்று “

(இவ்வுலகையே விளக்காக்கி, கடல்நீரையனைத்தையும் நெய்யாக்கி, கதிரவனையே சுடராக்கி, திருமாலுக்கு விளக்கு ஏற்றிடின், இருள் என்பதே இல்லாது பிரபஞ்சமே ஒளிமயம்தான்)

-Posted on 24th April’ 2008-

April 24, 2008

PESUM ARANGAN-14

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 8:09 pm

ஸ்ரீமந் நாதமுனிகளின் இயற்பெயர் ஸ்ரீரங்கநாதன். சிறந்த யோகியாக திகழ்ந்ததால் முனிவராகவே கருதப்பெற்றார். அதனால் அவரது பெயர் ஸ்ரீரங்கநாதமுனி என்றாயிற்று. அந்த பெயர் சுருங்கி ‘நாதமுனிகள்’ ஆனார். ஆனால் பெயருக்கு ஏற்றாற்போல் பிரபந்தங்களனைத்தையும் வகைப்படுத்தி நாதத்தோடும் (இசையோடும்) அபிநயத்துடனும் முறைப்படுத்தினார். அரையர் ஸேவையின் கர்த்தாவே இவர்தான். இந்த அரையர் ஸேவை ஒரு உன்னத வினோதம். எங்கள் ஊரில் அரையர்களுக்கு ‘நாதவினோத அரையர்’ என்று கூட ஒரு அருளப்பாடுண்டு. இவருடைய மருமகன்கள் இருவர்.
ஸ்ரீ மேலஅகத்தாழ்வார் மற்றொருவர் ஸ்ரீ கீழ அகத்தாழ்வார். இவர்கள் நாதமுனிகளிடமிருந்து இந்த அரையர் ஸேவையினைத் தொடர்ந்தவர்கள். இவர்களுக்குப் பின் திருவரங்க பெருமாளரையர். இப்படியாக இன்று வரை இவர்களது சந்ததி தெர்டர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. குரு பரம்பரையின் முதல் ஆச்சார்யனும் ஸ்ரீமந் நாதமுனிகள்தாம். நாதமுனிகளால்தான் நாலாயிரமும், அரையர் ஸேவையும். இவருக்கு இன்று திருவரங்கத்தில் மார்கழி அத்யயன உற்சவத்தில் எந்த பிராதான்யமும் இல்லை! ஏதேதோ அபிப்ராய பேதங்கள்! நிர்வாகம் இதில் தலையிடுவதேயில்லை. நினைக்கவே முடியாததெல்லாம் தற்போது அரசு தலையிட்டு சாதித்துக் கொண்டிருக்கின்றது. இந்த பிரச்சனையை இன்னமும் முடிக்க முடியவில்லை. இது இன்று வரை தொடரும் “விபரீத வினோதம்”! அரங்கன்தான் தலைக்கட்டவேண்டும்! நாதமுனிகள் கங்கை கொண்ட சோழபுரத்தில் பல காலம் யோகசமாதியிலிலிருந்து அரங்கன் திருவடியடைந்தார். “கண்ணிநின் சிறுத்தாம்பு..” அநுசந்தானம் இவர் அடைய நினைத்ததை அடையச் செய்தது.! உய்வித்தது!.

மதுசூதனன் என்று ஒரு வைணவர். எனக்கு ‘ஆர்கூட்’ மூலம் அறிமுகமான அற்புத நண்பர். சமீபத்தில் திருவரங்கம் வந்திருந்தார். அவருடன் சேர்ந்து அருகிலுள்ள ‘கோபுரப்பட்டி’ என்ற ஊரிலுள்ள ஒரு வைணவ ஆலயத்திற்குச் சென்றேன். வாகனம் ஓட்டும் போது ‘கண்ணிநின் சிறுத்தாம்பு’ பாராயணம் செய்து வந்ததைக் கவனித்தேன். பேசிக்கொண்டிருந்த போது அவர் அதனை 12,000 முறைக்கு மேலும் அநுசந்தானம் செய்துக் கொண்டிருப்பதையறிந்தேன். மனதிற்குள் நாதமுனிக்கு இதனால் நம்மாழ்வார் பிரத்யக்ஷமானார். இப்போது இதனால் இவருக்கு என்ன அனுக்ரஹம் ஆகுமோ? தெரியவில்லை! என்று நினைத்து அவரிடம் இதுபற்றி ஏதும் பேசாமலிருந்து விட்டேன்! மதியம் சுமார் 12.30 மணியிருக்கும். மதுசூதனன் ஒரு பரவசத்துடன் மீண்டும் வந்தார். முதலியாண்டான் திருமாளிகைக்கு ஸேவிக்கச் சென்றிருந்தேன்! அங்கு எனக்கு இதனை ஒருவர் அனுக்ரஹித்தார் என்று ஒரு பச்சைப்பட்டிலிருந்து ஒரு விக்ரஹத்தையெடுத்துக் காண்பித்தார். பார்த்தால் மிகப்பழமையான ஒரு நம்மாழ்வார் விக்ரஹம். அதிர்ந்தேன் நான்!. பூர்வாச்சார்யர்களின் சொல்லாகட்டும் செயலாகட்டும் ஒருபோதும் பொய்யாவதில்லை என்று அரங்கன் அன்றும் உணர்த்தினார் எனக்கு! அவருக்கு நம்பெருமாள் திருமேனி சம்பந்தபட்ட சில வஸ்துக்களைக் கொடுத்தேன். இவையனைத்தும் அவரின் ஆழ்வாரோடு இணைந்தன!. நம்மாழ்வார் என்னைப் பார்த்து புன்னகைத்தது போலிருந்தது!

(மேலும் பேசுவோம்)

Posted on 23rd april’ 2008 -muralibattar@gmail.com-

PESUM ARANGAN-13

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 8:05 pm

மீண்டும் ஸ்ரீரங்கம் உன்னதமான நிலையடைந்தபின் சில நூற்றாண்டுகள் கழித்து ஸ்ரீமந் நாதமுனிகள் அரங்கனை வழிபட்டு , திருவரங்கத்திலிருந்து புறப்பட்டு திருக்குடந்தை சென்றடைந்து அங்கு ஆராவமுதாழ்வாரை வணங்கி நின்றார். அங்கிருந்து தனது ஊரான வீரநாராயணபுரம் புறப்பட்டார். அப்போது ஒரு சில ஸ்ரீவைஷ்ணவர்கள் வீரநாராயணபுரம் வந்தனர். அவர்கள் மன்னனார் திருமுன்பாக –

“ஆராவமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே..” –

என்று தொடங்கும் திருவாய்மொழியை (5-8) கண்ணீர் மல்க அநுஸந்தித்தனர். இதனைக் கேட்ட நாதமுனிகள் அவர்களிடம், “இதில் முடியும்போது ஆயிரத்துள் இப்பத்தும் என்று முடிகிறதே! இதன் முழுப் ப்ரபந்தமும் உங்களுக்குத் தெரியுமா?”, என்றார். அதற்கு அவர்கள், “இவ்வளவே நாம் அறிந்தது”, என்று கூறிச் சென்றனர்.

உடனே நாதமுனிகள், “இப்ப்ரபந்தம் சடகோபன் அவதரித்தருளின திருக்குருகூர் ப்ரதேசத்திலே உண்டாக வேணும்”, என்று முடிவு செய்து திருநகரிக்கு எழுந்தருளி ஆழ்வாரையும் பொலிந்துநின்ற பிரானையும் வணங்கினார். அங்கு இருந்த மதுரகவியாழ்வாரின் சீடரான பராங்குசதாஸரை வணங்கி, “இங்கு திருவாய்மொழியை அறிந்தவர்கள் உண்டா? அந்தப் ப்ரபந்தம் கிட்டுமா?”, என்றார். அவர், “எங்கள் ஆசார்யரான மதுரகவிகள் அடியேனுக்கு –

” கண்ணிநுண்சிறுத்தாம்பு” –

என்னும் திவ்யப் ப்ரபந்தத்தை அருளிச்செய்து, இதனை ஆழ்வார் திருமுன்பே ஒரே ஆசனத்தில் அமர்ந்து, ஒரே சிந்தனையுடன் ஆழ்வார் திருவடிகளைத் த்யானித்தபடி 12000 முறை அநுஸந்தித்தால் ஆழ்வார் ப்ரத்யக்ஷமாவார் என்று உபதேசித்தார்”, என்று கூறினார்.

இதன்படியே நாதமுனிகள் ஆழ்வார் அவதரித்த திருப்புளியாழ்வார் அடியில் அமர்ந்து 12000 முறை அநுஸந்தித்தார். இதனைக் கண்ட ஆழ்வார் இவர் திருமுன்பே தோன்றி இவருக்கு ரஹஸ்ய த்ரயம், திருவாய்மொழி, மற்றுமுள்ள 3000 ப்ரபந்தங்கள், அஷ்டாங்கயோக ரஹஸ்யம் ஆகியவற்றை அருளிச்செய்தார். நாதமுனிகள் இல்லையேல் நமக்கு நாலாயிரமும் இல்லை. அனுக்ரஹித்தவர் ஆராஅமுதன்.

(ஸ்ரீ ஆராஅமுதன்)

-posted on 23rd April’2008-

PESUM ARANGAN-12

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 7:44 pm

மண்மூடி காடாய் போன ஸ்ரீரங்கவிமானத்தின் மேல் ஒரு கிளி ஒன்று விடாமல்

“காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்
ஸ வாஸுதேவோ ரங்கேஸ: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்!
விமாநம் ப்ரணவாகாரம் வேதஸ்ருங்கம் மஹாத்புதம்
ஸ்ரீரங்கசாயீ பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாஸக: !!”

(பொருள்: வைகுந்தத்தில் ஓடுகின்ற விரஜை நதிதான் காவேரீ! ஸ்ரீரங்கவிமானமே வைகுந்தமாம்! வாஸுதேவனே அரங்கன்! ப்ரணவமே விமாநம்! விமானத்தின் நான்கு கலசங்கள் நான்கு வேதங்கள்! உள்ளே கண்வளரும் அரங்கனே ப்ரணவத்தினால் விவரிக்கப்படும் பரம்பொருள்!)

என்று சொன்னதையே எப்போதும் சொல்லிக் கொண்டிருந்ததாம். அப்போது அரசாண்ட சோழ மன்னன் கவனத்திற்கு இது வந்து, அதே சமயம் அரங்கன் தான் இங்கு பள்ளி கொண்டிருப்பதை அவனுக்கு உணர்த்த, ஸ்ரீரங்கம் மீண்டும் மகோன்னதமானது. கிளியினால் இது உணர்த்தப் பெற்றமையினால் இன்றும் அரங்கன் திருமுற்றத்தில் ஒரு மண்டபத்திற்கு “கிளி மண்டபம்” என்றே பெயர்.

சில வருடங்களுக்கு முன் இராஜகோபுரம் கட்டிய ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் முன்னிலையில் ஒரு பெரிய வித்வத் ஸதஸ் நடந்தது. அடியேனின் தகப்பனாரும் அங்கு ஆஜரானார்.
“ஒரு விஷ்ணு கோவில் சம்ப்ரோக்ஷணை!. எங்கிருந்து பெருமாளை நீ ஆவாஹணம் செய்வாய்” என்று தகப்பனாரிடம் கேள்வி கேட்டார். அடியேனின் தகப்பனார் உடனேயே “ஸ்ரீவைகுண்டம் அல்லது திருப்பாற்கடல். ஆனால் இவையெல்லாவற்றையும் விட சிறந்தது ஸ்ரீரங்கத்திலிருந்து ஆவாஹனம் செய்வதுதான்” என்று பதில் கூறினார். “என்னடா பிரமாணம்? எதை வைத்து இதைச் சொல்கிறாய்?” என்று ஜீயர் கேட்க, அடியேனின் தகப்பனார் கிளிச் சொன்னதைத் திருப்பிச் சொன்னார்.

“காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்
ஸ வாஸுதேவோ ரங்கேஸ: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்!
விமாநம் ப்ரணவாகாரம் வேதஸ்ருங்கம் மஹாத்புதம்
ஸ்ரீரங்கசாயீ பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாஸக: !!”

ஜீயர் இரு கை நிறைய கொடுத்த ஸம்பாவணையுடன்
வீடு திரும்பி மனம் நிறைந்தார் அவர்!

–Posted on 21st April’2008-

PESUM ARANGAN-11

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 7:43 pm

ஸ்ரீரங்கவிமானம் மண்மூடிப் போனாலும் அதன் ஸாந்நித்யம் ஒருக்காலும் குறையாது. அன்றும் சரி! இன்றும் சரி! ஸ்ரீரெங்கநாதனின் ஸாந்நித்யம் எதனாலும் குறைவுபட சாத்தியமேயில்லை. பாக்கியுள்ள எல்லா கோவில்களுக்கும் ஒரு விதிமுறையென்றால் ஸ்ரீரங்கத்திற்கு மட்டும் ஒரு தனி முறை! இவர் வழி தனி வழி!. எதனால் சொல்கிறேன் என்றால் அரங்கன் அங்கே சத்யலோகத்தில் மத்யானம் பூஜை முடிந்து சாயங்காலத்திற்குள் இதே விமானத்துடன் இதே அர்ச்சாவிக்ரஹங்களுடன் மீண்டும் சத்யலோகத்திற்கு வருவதாக பிரம்மாவிடம் கூறியதாக புராணங்கள் கூறுகின்றன. (நம்முடைய நாட்கணக்கு வேறு, பிரம்மாவின் நாட்கணக்கு வேறு) பிரம்மாவினாலே பாதி பூஜை முடிந்த நிலையில் வந்தவருக்கு நாம் செய்யும் பூஜைகளனைத்தும் நமது ஆத்ம திருப்திக்காக மட்டுமேதான்!

தினசரி சாயங்காலம் க்ஷீரான்னத்தின் போது அரங்கன் 108 சரமாலைகள் சாற்றிக்கொள்வான். அதற்கும் மேல் வெள்ளை மாலை அதற்கும் மேல் வர்ணமாலை. இதற்கு ‘தர்பார் ஸேவை’ என்று பெயர். எதனால் இந்த பெயர்? தர்பார் என்றால் பல முக்யமான பேர்கள் கூடும் சபை. இந்த க்ஷீரான்னத்தின் போது 108 திவ்யதேச பெருமாள் அனைவரும் ஸ்ரீரங்கத்தில் வந்து அரங்கனுடன் ஐக்யமாகி விடுவார்களாம். இந்த நேரத்தில் அரங்கனை ஸேவி்ப்பது 108 பெருமாளையும் ஸேவித்த பலன்!.
ஸ்ரீரங்கவிமானம் மண்மூடி போயிருந்தாலும் இந்த பெருமாள்கள் வந்து ஒன்றித்து மறுநாள் காலை அவரவர் இடத்திற்குச் செல்வது நடந்து கொண்டுதானிருந்திருக்கும்!. இவ்வளவு சிறப்பு வாய்ந்தவருக்கு எள்ளளவும் அவர் ஸாந்நித்யம் குறைய வாய்ப்பேயில்லை!

2001ல் ஒரு சம்ப்ரோக்ஷணம் நடந்தது. இதற்கு முன்னர் பிரஸ்னம் பார்க்கப்பட்டது. இதில் நிறைய அபிப்பராய பேதங்கள்! அதெல்லாம் இருக்கட்டும்! இப்போது நமக்கு அது முக்யமில்லை! அப்போது மூலவரின் மேலுள்ள தைலகாப்புப்படலமனைத்தும் நீக்கப்பட்டு பழய மூலவரின் மேலேயே புதிதாக சுதை வேலைப்பாடுகள் அதே போன்று செய்து கொண்டிருந்தனர். ஸம்ஹிதை படி மூலவரின் திருமேனியை பால ஸ்தாபனம் செய்து அதைத்தான் வழிப்பாட்டுக்கு வைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் நடந்ததென்னவோ தினமும் ஸ்தபதிகள் வருவதற்கு முன் மூலஸ்தானத்தில் ஒரு புண்யாஹப்ரோக்ஷணம் ஆகும். பின்னர் வழக்கம் போல் திருவாராதனம், நிவேதனம் மீண்டும் உடனேயே பெரியவசர திருவாராதனம், பெரியவசரம் நிவேதனம் – இரவில் ஸ்தபதிகள் வேலை முடிந்து திரும்பிய பின் மீண்டும் ஒரு புண்யாஹம் பின்னர் பாக்கியுள்ளவை என அன்றாட பூஜைகள் எதுவும் குறைவில்லாமல் ஒரு பக்கம் ஸ்தபதிகள் வேலைப் பார்த்து வந்தாலும் மறுபக்கம் பெருமாள் கார்யங்களும் அதுப்பாட்டிற்கு நடந்து கொண்டு வந்தது. ஏன் ஸம்ஹிதையில் குறிப்பிட்டுள்ளபடி பண்ணவில்லை? ஏன் இந்த மாதிரி பண்ணினோம் இதுவெல்லாம் முடிவில்லாத நீண்ட விவாதமாகவே முடிந்தது. இவரது ஸாந்நித்யம் எதனாலும் குறையாத ஒன்று என்பதனை ரகஸ்யமாக உணர்த்தினார் போலும்! ஏன்? எதற்கு? என்ற கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு இதுதான் ரங்கநாதனின் திருவுள்ளம் என்பதுதான் மிக மிகச் சரியான உண்மை! இதனால்தான் சொல்கிறேன் எல்லா பெருமாளுக்கும் ஒரு முறையென்றால் இவருக்கு ஒரு தனி முறை!

-Posted on 20th Apr’ 2008-

PESUM ARANGAN-10

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 7:41 pm

துவாபர யுகத்தில் சந்தனு மஹாராஜா அரங்கனை பூஜித்திருக்கிறார். சந்தனு மண்டபம் அவர் ஏற்படுத்தியதுதான். பின்னாளில் ஸ்ரீரெங்கவிமானம் மண்மூடி போவதற்கு முன் பன்னிரு ஆழ்வார்களும் இந்த அரங்கனுடன் ஆழங்கால் பட்டு இவனுடன் லயித்திருக்கின்றனர். ஸ்ரீரங்கத்தின் வரலாறு மிக மிக நீண்ட வரலாறு. அரங்கன் அசாதாரணமாக பலருடன் பலவாறான அனுபவங்களுடன் இன்னரு்ள் சொரிந்துள்ளான்.
எல்லாரும் துன்பம் வந்திடினும் அல்லது துன்பம் வந்திடினும்,
தும்மினாலும், இருமினாலும், கேவினாலும், வழுக்கினாலும், தடுக்கினாலும், கொட்டாவி வந்தாலும் ‘ரங்கம், ரங்கம்” என்றே கூறுவர். அந்தளவுக்கு இவன் எல்லாருக்கும் ‘அந்தரங்க’னாகின்றான்.

” ரங்கம் ரங்கம் இதி ப்ரூயாத் க்ஷுதப்ரஸ்கலநாதிஷு
விஷ்ணு லோகம் அவாப்நோதி ஸத்ய: பாபக்ஷயாந்தர:”

பொருள் – தும்மல் வந்தாலும், இருமல் வந்தாலும், தடுக்கினாலும், அழுதாலும், கேவினாலும், கொட்டாவி வந்தாலும் “ரங்கம், ரங்கம்” என்றே கூறவேண்டும். இவ்விதம் கூறினால், பாவங்கள் அழிவதுடன், அதனால் விஷ்ணுலோகம் கிட்டுகிறது.

அரங்கன் ஆடி ஓடி அனைவருக்கும் உகந்தவனாகி களைப்புற்ற போது சிறிது நீண்ட ஓய்வு அவனுக்கும் தேவைப்பட்டதோ என்னவோ, தனது ஸ்ரீரங்கவிமானத்தினை மண்மூடி மறையச் செய்தான். பஞ்சபூதத்தின் சீற்றம் இவரை என்ன செய்து விட முடியும்? ஒரு சமயம் 1957ம் வருடம்(?) ஸ்ரீரங்கம் மூலஸ்தானம் முழுதும் தீப்பற்றி எரிந்தது. உற்சவர், ஸ்ரீதேவி, பூமிதேவியை எரிந்து கொண்டிருக்கும் மூலஸ்தானத்தில் அடியேனின் தகப்பனார் உள்ளே சென்று பத்திரமாக வெளியேக் கொண்டு வந்து விட்டார். மூலவரின் திருமேனியிலுள்ள தைலக்காப்பு படலங்கள் முழுதுமாக பஸ்பமாகிப் போனது. ஸ்ரீரங்கமே கதறியதாம்! சமீபத்தில் காலஞ்சென்ற எனது தகப்பனாரின் ஒரு டைரியைப் படிக்கும் சந்தர்ப்பம் வந்தது. அதில் அவர்,

” தீ விபத்திற்கானக் காரணங்கள் பல கோணங்களில் ஆராயப்பட்டது. ஆனால் இதற்குக் காரண, காரணி எல்லாம் அவனே!. அவன் திருஉள்ளம் அன்றி எது நடந்து விடும்? தீ முழுதும் அணைக்கப் பட்ட பிறகு உள்ளே சென்று தரிசித்தேன்! பெரியபெருமாள் தைலக்காப்பில்லாமல் ” பச்சைப் பசேல்” என்று காட்சியளித்துக் கொண்டிருந்தார்.
ஆழ்வார்கள் பாடிய “பச்சைமா மலை போல்” மேனியுடன் அன்று அருளியவாறு இருந்தார். என்னைப் பொறுத்தவரை இது ஒரு மஹா அற்புதம்! பாம்பு எப்படி தனது பழைய சட்டையை உறித்து புது சட்டையுடன் விளங்குமோ அது போன்று பெரியபெருமாள் தனது பழைய சட்டையை விலக்கிக் கொள்ள தீர்மானித்தார் போலும்! இந்த தீ ஜ்வாலை இவரை என்ன செய்து விட முடியும்? ” என்று குறிப்பிட்டிருந்தார். இவரின் இந்த சிந்தனை என்னை ஆச்சர்யபட வைத்தது.

” தீ விபத்திற்கானக் காரணங்கள் பல கோணங்களில் ஆராயப்பட்டது. ஆனால் இதற்குக் காரண, காரணி எல்லாம் அவனே!. அவன் திருஉள்ளம் அன்றி எது நடந்து விடும்? தீ முழுதும் அணைக்கப் பட்ட பிறகு உள்ளே சென்று தரிசித்தேன்! பெரியபெருமாள் தைலக்காப்பில்லாமல் ” பச்சைப் பசேல்” என்று காட்சியளித்துக் கொண்டிருந்தார்.
ஆழ்வார்கள் பாடிய “பச்சைமா மலை போல்” மேனியுடன் அன்று அருளியவாறு இருந்தார். என்னைப் பொறுத்தவரை இது ஒரு மஹா அற்புதம்! பாம்பு எப்படி தனது பழைய சட்டையை உறித்து புது சட்டையுடன் விளங்குமோ அது போன்று பெரியபெருமாள் தனது பழைய சட்டையை விலக்கிக் கொள்ள தீர்மானித்தார் போலும்! இந்த தீ ஜ்வாலை இவரை என்ன செய்து விட முடியும்? ” என்று குறிப்பிட்டிருந்தார். இவரின் இந்த சிந்தனை என்னை ஆச்சர்யபட வைத்தது.

-posted on 18th April’ 2008-

PESUM ARANGAN-9

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 7:39 pm

ஆழ்வார்களாகட்டும், ஆச்சார்ய புருஷர்களாகட்டும்
அவரவர் பிறந்த இடத்திற்கருகில் சிறந்த க்ஷேத்திரங்களிருந்தபோதும் வைணவத்தின் வேர்பற்றான அரங்கத்தினுள் அவனடிமையாக வாழ்ந்திருக்கவே விரும்பினர். திருவரங்க திருமுற்றத்தில் அன்றும் சரி, இன்றும் சரி நாம் எப்போதும் அரங்கனின் திருக்கல்யாண குணங்களைக் கேட்கலாம். ஏதாவது ஒரு ஸந்நிதியில் ஏதேனும் ஒரு ஆச்சார்யர் உபன்யாஸம் செய்து கொண்டிருப்பார். ஏதேனும் ஒரு பாராயணம் நடந்தவண்ணமிருக்கும். சதா இம்மாதிரி வைபவம் நடந்தவண்ணமிருக்கும் ஸந்நிதியின் அதிர்வலைகள் எவ்வாறு இருக்கும்! சற்றே சிந்தித்து பாருங்களேன்! இங்கு வந்து ஒரு அமைதியான இடம் தேடி சற்றே உட்கார்ந்து அனுபவித்துதான் பாருங்களேன்!. நாம் ப்ளுடூத்(bluetooth), இன்ப்ராரெட்(infrared) ஆகியவற்றின் அலைகளை பயன்பாட்டில் காண்கின்றோம். நம்புகின்றோம்! ஆனால் இந்த உன்னத அதிர்வலைகளைப் பற்றி நினைக்கவே மாட்டேன் என்கிறோம். இந்த திவ்யதேசத்தின் மகத்துவம் தெரிந்தும்கூட பய்னடைவதில்லை. கற்பக விருட்சத்தினடியில் அமர்ந்து காலணாக் காசுக்கு பறக்கின்றோம்.
இது எல்லாரையும் சொல்கிறேன் என்று தயைகூர்ந்து நினைக்க வேண்டாம். என் மாதிரியுள்ள சில் பிரகிருதிகளுக்காக வருத்தப் படுகின்றேன்!.

தர்மவர்மா அரங்கனின் அருள் பெற்றபின்பு, உன்னத திருப்பணிகள் பலவற்றை செய்தான். அரங்கனோடு அனபோடு அளவளாவி சிறப்புற்று வாழந்தான். அவனுக்குப் பிறகு அவன் சந்ததியினரும் நன்கு பரிபாலனம் செய்து வாழ்வாங்கு வாழ்ந்தனர். இவர்களைப் பற்றியக் குறிப்புகள் அதிகம் கிடைக்கவில்லை. த்ரேதாயுகம் முடிநது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பலராமரும் அரங்கனை வழிப்பட்டிருக்கின்றார். ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு இடத்தில் அரங்கன் மிக மிக ஸர்ந்நித்யத்துடன் இருப்பதாகக் குறிப்பிடுகின்றார். அர்ச்சுன மண்டபம் கூட அர்ச்சுனால் ஸ்தாபிதம் செய்யப்பட்டதாகக் கூறுவர்.

ஸ்ரீமத் பாகவதம் (ஸ்கந்தம் 10: அத்யாயம் 79: ச்லோகம் 14)

காமகோஷ்ணீம் புரீம் காஞ்சீம் காவேரீம் ச ஸரித்வராம்
ஸ்ரீரங்காக்யம் மஹாபுண்யம் யத்ர ஸந்நிஹிகோ ஹரி:

பொருள் – (பலராமன்) காமகோடி எனப்படும் புண்ணிய நகரான காஞ்சீபுரத்தையும், நதிகளில் சிறந்த காவேரியையும், எங்கு ஸ்ரீஹரி மிகவும் ஸாந்நித்யமாக உள்ளானோ அந்த மஹாபுண்ய க்ஷேத்ரமான ஸ்ரீரங்கத்தையும் அடைந்தார்.

துவாபர யுகத்தின் முடிவிலேயோ அல்லது கலியுக ஆரம்பமோ ஸ்ரீரெங்கவிமானம் பெருமாளுடன் சேர்ந்து பிரளயம் ஏற்பட்டு மண்மூடி போய் விட்டது. ரெங்கவிமானம் இருந்த இடமே மண்மூடி ஏதும் வெளியே தெரியாதாகி விட்டது.
-Posted on 16th April ‘ 2008-

PESUM ARANGAN-8

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 7:37 pm

அரங்கனின் கிருபை விசாலமானது. எப்போது, எப்படிச் செய்யவேண்டுமோ, அதன்படி சதுரங்கத்தில் கவனமாக காய் நகர்த்தி விளையாடுவது போல, நம்மை அவன் அரவணைத்துக் கொள்வான். இதில் நாம் செய்யவேண்டிய முக்கியமானது என்னவென்றால் அவன் கிருபைக்கு ஆளாக பூர்ணமாக ஆசைப்படுவதொன்றுதான்.

”அகிஞ்சனோ அநந்ய கதி: சரண்ய: த்வத்பாத மூலம் சரணம் சரணம் ப்ரபத்யே”

என்று எவனொருவன் எனக்கு உன் திருவடிகளைப்பற்றுதல் தவிர வேறு கதியில்லையென்று சரணாகதியடைகின்றனரோ, அவனுக்கு இவன் அடிமையாகிவிடுகின்றான். ”அத்தகையவர்கள் ஞானிகள், தபஸ்விகள், கர்மானுஷ்டர்கள் ஆகியோரைக் காட்டிலும் எனக்கு அருமையானவர்” என்கின்றார் கீதையில்!. அரங்கன் பக்தர்களுக்கு சுலபன்.

”அவன் என்னையாளி அரங்கத்து அரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் – அவன் என்னது
உள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத் தரவணையின் மேல்”

– திருமழிசையாழ்வார்-நான்முகன் திருவந்தாதி-(30)

விபீஷணன் ஸ்ரீரெங்கஸ்ரீயை தற்காலிகமாக இறக்கி வைத்த இடத்தினருகில், உறையூரினைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சோழப்பேரரசன் தர்மவர்மா அங்கே அரங்கன் நிரந்தரமாக தங்க வேண்டி அருந்தவம் செய்து கொண்டிருந்தான். அவனது நிஷ்டை கலைகின்றது. எதிரே அரங்கன் ஜ்வலிக்கும் ரெங்கவிமானத்துடன் எழுந்தருளியுள்ளார். அவனுக்குத் தான் கண்டது கனவா? அல்லது நினைவா? என்றே புரியவில்லை. நினைவு வந்த போதெல்லாம் அடிக்கடி மூர்ச்சையாகின்றான். தர்மவர்மாவின் தவத்தினை நிறைவு செய்தான் அரங்கன்! தர்மவர்மா அரங்கனை பரம ப்ரீதியுடனே தன் கூட்டத்தாருடன் சேர்ந்து பூஜித்தார். விபீடணன் தனது அனுஷ்டானங்களை காவிரிக்கரையில் முடித்து விட்டு வந்து பார்த்தால் இங்கு ஒரே கோலாகலம்!.

விபீஷணன் மறுநாள் இலங்கைக்குச் சென்று ஆதிபிரம்மோற்சவம் நடத்துவதற்காக முற்பட்டான். தர்மவர்மா அவரை திருவரங்கத்திலேயே அந்த உற்சவத்தை நடத்தித்தர பிரார்த்தித்தான். வெகுவிமரிசையாக முதன்முதலாக திருவரங்கத்தில் ஆதிபிரம்மோற்சவம் நடைபெற்றது. இன்று திருவரங்கத்தில் நடைபெறும் பிரும்மோற்சவங்களுக்கெல்லாம் ஆதியும் இதுவேயானது. பிரும்மோற்சவம் முடிந்து விபீடணனால் விமானத்தினைத் தூக்க இயலவில்லை. அரங்கன் காவிரிக்காகவும், தர்மவர்மாக்காகவும், நமக்காகவும் நமது சந்ததியினர்க்காகவும் நிரந்தரமாக இங்கேயே தங்கிவிட தீh;மானித்துவிட்டார். நாம் அனைவரும் அறிந்த அரங்கனின் பிரசித்தப்பெற்ற சேர்த்தி பங்குனி உத்திரம் மட்டும்தான். ஆனால் அரங்கன் நான்கு சேர்த்தி உற்சவம் கொண்டாடுகின்றார். இதில் சித்திரையில் இரண்டு! பங்குனியில் இரண்டு!. வருஷ ஆரம்பமான சித்திரையில் சித்ராபெளர்ணமியன்று காவேரிக்கரையில் முதல் சேர்த்தி. காவேரியில் பெருமாளின் மாலை மரியாதைகள் எல்லாம் சேர்த்து சேர்த்தி!. அதே மாதத்தில் ஸ்ரீராமநவமியன்று குலசேகராழ்வார் குமாரத்தியான சேரகுலவல்லியுடன் சேர்த்து. இரண்டாம் சேர்த்தி!. பங்குனி 6ம் திருநாள் ஆயில்ய நட்சத்திரத்தில் உறையூர் சோழராஜா குமாரத்தி கமலவல்லியுடன் சேர்த்தி! உத்திரத்தில் ரெங்கநாயகியுடன் சேர்த்தி! வருஷ ஆரம்பத்தினை கலயாணத்துடன் ஆரம்பித்து வருஷ முடிவினையும் கல்யாணத்துடன் முடிக்கின்றார் இந்த வைபோக ரங்கன்!

நீயும், தர்மவர்மா ஆகியிருவருமே மிக உன்னதமானவர்கள். எனக்கு அருமையானவர்கள். நீ ராட்சஸனாயிருப்பதால் எப்போது வேண்டுமானாலும் ஆகாயமார்க்கமாக வந்து தரிசிக்கமுடியும்!. நீ தர்மவர்மாவுக்கு கிருபை செய்!” என்று யாருக்காகவும் எந்த சிபாரிசும் தேவைப்படாத அந்த கிருபாளு ”தர்மவர்மாவுக்கு கிருபை செய்” என்று இந்த மாமனிதருக்காக இராட்சஸ விபீடணனிடம் வேண்டுகின்றார்!. பெரியபெருமாளின் சங்கல்பத்தைத் தெரிந்து கொண்ட விபீடணன் பிரிய மனதில்லாமல் இலங்கைக்கு புறப்படுகின்றான். அவனது மேல் மிக்க அன்பு கொண்ட அரங்கன் அவன் செல்லும் திக்கான தெற்கு நோக்கி திரும்பி படுத்து அவனை கண்களால் கடாக்ஷித்தவாறு கண்வளருகின்றார்!
-Posted on 13th april’ 2008-

Older Posts »

Blog at WordPress.com.