Srirangapankajam

May 30, 2009

Pesum Arangam – 74

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 11:06 am

 Chapter-74
23rd May’2009
 

நல்ல ஆச்சார்யர்கள் நமக்கு கிடைப்பது என்பது,  நமக்கு பாக்யம் இருந்தால் மட்டுமே சாத்யமாகும்.   நாம் எண்ணியபடி கிடைக்காது போனால், நமக்கு பாக்யமில்லாது போயின் என்ன செய்யலாம்.?

 

நம்முடைய பூர்வாச்சார்யர்களை  ஒருமனதோடு தியானிப்பதும்,  அவர்களை நம்முடைய ஸவப்னத்தில் தரிசிக்கப் பெறுதலும் நமக்கு பகவத்கிருபையைப் பெற்றுத்தரும்.  ப்ரத்யக்ஷமாக ஸேவிக்க முடியாத இவர்களை நாம் ஆராதிக்க வேண்டியது கூட அவசியமில்லை.  இவர்களிடத்து நம் மனமானது பூர்ணமாக லயித்திருந்தால் போதும்.  அப்படிப்பட்ட அனுக்ரஹ சீலர்கள் இவர்கள். 

 

நாதமுனி காலமெங்கே..?  நம்மாழ்வார் வாழ்ந்திருந்த காலமெங்கே..?   நம்பிக்கையோடு ஒருமனதோடு தியானித்திருந்த நாதமுனிக்கு நம்மாழ்வார் கடாக்ஷித்துள்ளாரே..?

 

நாம் அஞ்ஞானத்தினால் மூடப்பட்டு ஆச்சார்யனை மறந்து அதனால் தெய்வத்தையும் மறந்து, தேஹத்தையும் அது மூலம் ஏற்படும் சுகத்தினையும் பெரிதாய் எண்ணி ஒருவித அஞ்ஞானமயக்கத்தில் உள்ளோம்.

 

பரம பக்தியுடையவர்களாய்  பகவானோடு இரண்டற கலந்த நம் ஸதாச்சார்யர்களை சதா நினைத்து அனுபவிக்கப்பெற்ற பாக்கியவான்களுக்கு பரமபதப்ராப்தியைப் பற்றி கவலையே படவேண்டியதில்லை.  ஸதாச்சார்ய கடாக்ஷத்தினால் எப்படி இங்கு நிரந்தர அனுபவம் கிடைக்கின்றதோ அது போன்று அவர்களின் அந்திமகாலத்தில் பகவத் சிந்தனையும், பரமபத ப்ராப்தியும் தானாகவே வந்து வாய்க்கும்.

 

அவர்கள் சரீர சம்பந்தம் விலக வேண்டியதுதான், தாமதமின்றி நித்யசூரிகள் அவர்களை பரமபத்த்திற்கு அழைத்துப்போக தயாராய் வந்துவிடுவர்.  ஏனென்றால் இந்த பொறுப்பானது ஆச்சார்யனுடையது.  இவர்கள் இதற்கென்றே ஏற்பட்டவர்கள்.  ஜீவன்கள் கடைத்தேற அவதரித்தவர்கள்.

 

பகவத் கடாக்ஷத்தைக் காட்டிலும் ஆச்சார்ய கடாக்ஷம் மிகவும் விசேஷமானது. 

 

நாம் செய்யவேண்டியதெல்லாம் ஆச்சார்யனிடத்து பரம விசுவாசமும் பக்தியும் மட்டுமே.  பதிலாக நமக்கு கிடைப்பதோ பேரானந்தமயமான பரமபதப்ராப்தி..!

 

Advertisements

May 22, 2009

Pesum Arangam – 73

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 11:57 pm

Chapter-73
16th May’2009

ஒருவனுக்கு பெரும் புதையல் கிடைத்தப் பின்னும் பிச்சைக்கு அலைவானாயின் என்ன சொல்வது..? அவனைப் போன்ற மூடன் எவனும் உண்டோ..?

யாரொருவருடைய திவ்யகடாக்ஷத்தினால் ஜீவராசிகள் மோக்ஷபர்யந்தமான ஐஸ்வர்யங்களை அடைகின்றார்களோ அத்தகைய லோகமாதா, மஹாலக்ஷ்மியோடு கூடினவராய், தன்னை ஆஸ்ரயிப்பவர்களுக்கு வாத்ஸல்யராய், சுலபராய், எளியவராய், இந்த ரங்கவிமானத்தில் குடிகொண்டு, ஸர்வ அபீஷ்டங்களையும் தரும் மஹாநிதியாம் நம்பெருமாளை, நாம் பாதுகையின் மூலமாக அடைந்தபிறகு, அல்ப சுகத்திற்கும், அல்ப தனத்திற்கும், அல்ப பலன்களுக்கும் எவரையேனும் நாடுதல் தகுமோ..?

கற்பகவிருக்ஷத்தின் கீழ் அமர்ந்து கஞ்சிக்கு பறப்பவர் உண்டோ..?

அபரஸ்பரபாதிநா மமீஷாம்
அநிதம்பூர்வ நிரூட ஸந்ததீநாம்
பரதவ்யஸநாத் அநூநஸீம்நாம்
துரிதாநாம் மம நிஷ்க்ருதிஸ்த்வமாஸீ: !975!

அபரஸ்பர=எப்பொழுதும் – பாதிநாம்=மேன்மேலும் வ்ருத்தியடைகின்றதும் – அநிதம்பூர்வம்=இதுதான் முதல் என்றில்லாமல் அநாதியானதும் – நிரூட=த்ருடமானதும் – ஸந்த்தீநாம்=வரிசைகளையுடைத்தாயிருக்கிறதும் – பரத:=ஸ்ரீபரதாழ்வானுடைய – வ்யஸநம்=துக்கத்தைக்காட்டிலும் – அநூந: அதிகமான – ஸீம்நாம்=எல்லையை உடைத்தாயிருக்கிறதுமான – மம=என்னுடைய – துரிதநாம்=பாபங்களுக்கு – நிஷ்க்ருதி=இல்லாமல் – த்வம்=நீ – ஆஸீ:=ஆக்குகின்றாய்.

ஹே! பாதுகே! பரதாழ்வான் இராமனைப் பிரிந்து எவ்வளவு வருந்தி துடித்திருப்பான்?
இந்த துக்கம் அவனுடைய பாபத்தினால் அன்றோ ஏற்பட்டிருக்க வேண்டும்.
அத்தகைய பரதனைக் காட்டிலும் மிகக் கடுமையான பாபி நான்!
ஆனாலும் பரதனது பாபங்கள் அனைத்தும் அவன் உன்னையடைந்ததும், ஒரு நொடியில் நசித்து போயிற்று.! அதுபோன்று நானும் உன்னையடைந்து உன் பரிபூர்ண கடாக்ஷத்தினை பெற்றபின்பு அநாதியான என்னுடைய மாளாத வல்வினைகள் அப்போதேயன்றே நசித்துப் போயிருக்கக் கூடும்..! மோக்ஷத்தினை அடையப் பெற்றவனாக(முக்ததுல்யனாக) அன்றோ நான் உன்னை இப்போது அனுபவிக்கின்றேன்!

பாதுகைகளையோ, ஆழ்வார் ஆச்சார்யர்களின் திவ்ய சூக்திகளை யாரொருவர் த்யானம், ஆராதனம் முதலானவைகளைச் செய்து ஆராதிக்கின்றார்களோ அவர்களது மனதில் பாப எண்ணங்களேத் தோன்றாது. எப்படி பகவானோ அப்படியேதான் ஆழ்வார் ஆச்சார்யர்களும்!. மனமது, மமதையற்று தீதற்றுயிருப்பின், அந்த பாகவதனின் உள்ளம் ஒரு கோவிலாகும். இறை கூத்தாடும் கூடமாகும். மோக்ஷம் கைகூடும்.!

மாடமாளிகை சூழ் திருமங்கை மன்னன்
ஒன்னலர் தங்களை வெல்லும் *
ஆடல் மாவலவன் கலிகன்றி
அணிபொழில் திருவரங்கத்தம்மானை *
நீடுதொல் புகழாழி வல்லானை
எந்தையை நெடுமாலை நினைந்த *
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்!
பாட நும்மிடை பாவம் நில்லாவே *
-திரு.226-

ஏ! திருமால் அடியவரான தொண்டர்களே! ஆழ்வார் அனுபவித்த அந்த உணர்வுநிலை உனக்கு இல்லையாயினும், நெடுமாலாம் திருமால், திருவரங்கத்தில் கோயில் கொண்ட பெருமாளை, நீடுதொல் புகழ் ஆழி வல்லானை, “ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” எல்லா தீவினைகளிலிருந்தும் ரக்ஷிக்கின்றேன் என்று தன்னுடைய அபயஹஸ்த்தினால் குறிப்பால் உணர்த்திக் கொண்டிருக்கும், நம்பெருமாளைப் பற்றிய கலிகன்றியின் (தீவினைகளுக்கு எதிரான) இப்பாசுரங்களை சிரத்தையோடு பாடுங்கள்!

பாடும் நும்மிடையே பாபங்கள் எதுவும் நில்லாது நசித்துப் போகும்!

May 13, 2009

Pesum Arangam – 72

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 10:45 am

 Chapter-72
 
11th May’2009
 
காலே ஜந்தூந் கலுஷகரணே க்ஷிப்ரமாகாரயந்த்யா:
கோரம் நாஹம் யமபரிஷதோ கோஷமாகா்ணயேயம்
ஸ்ரீமத் ரங்கேஸ்வர  சரணயோ: அந்தரங்கை: ப்ரயுக்தம்
ஸேவாஹ்வாநம் ஸபதி ச்ருணுயாம் பாதுகாஸேவகேதி !!969!!
 
கலுஷ=கலங்கியிருக்கின்ற – கரணே=இந்திரியங்களுடைய – காலே=செத்துப் போகிற காலத்திலே – ஜந்துாந்=ஜந்துக்களை (ஜீவன்களை) – க்ஷிப்ரம்=சீக்கிரமாக – ஆகாரயந்த்யா:=அழைக்கிறதாயிருக்கின்ற – யமபரிஷத:=யமக்கூட்டத்தினுடைய – கோரம்=பயத்தையுண்டுப் பண்ணுவதான – கோஷம்= இரைச்சலை – அஹம்=நான் – நாகர்ணயேயம்=கேட்கமாலிருக்க வேண்டும்.  – ஸ்ரீமத்=மஹாலக்ஷ்மியோடு கூடிய – ரங்கேஸ்வர=ஸ்ரீரங்கநாதனுடைய – சரணயோ:=திருவடிகளுக்கு – அந்தரங்கை:=அந்தரங்கமாய் – ப்ரயுக்தம்= சொல்லப்படுகின்ற – பாதுகாஸேவகேதி= பாதுகா ஸேவகரே என்று – ஸேவா=ஸேவைக்காக – ஆஹ்வானம்=பகவத் ஸந்நிதிக்குள் அருளப்பாடிட்டு (என்னை)அழைப்பதை – ஸபதி=சீக்கிரமாக – அஹம்=நான் – ச்ருணுயாம்=கேட்கவேண்டும்.
 
ஹே பாதுகே!  உன்னுடைய அனுக்ரஹத்தினால் எனக்கு இந்த சரீரசம்பந்தமானது சீக்கிரத்தில் நீங்கப்போகின்றது..! அந்த சமயத்தில் எனக்கு நீ செய்யவேண்டிய ஒரு காரியத்தினை நான் இப்போதே வேண்டிக் கொள்கின்றேன்..!  என்னுடைய இந்திரியங்கள் யாவும் செயலிழந்து  போனாலும் போகலாம்.!  இறக்கும் தருவாயில் பகவானுடைய நாமத்தினைச் சொல்வதற்கோ நினைப்பதற்கோ முடியாமல் போனலும் போகலாம்..!  அந்த சமயத்தில் யமதூதர்கள் வந்து “பாபி! சீக்கிரம் கிளம்பு..” என்று பயங்கரமாக அதட்டி ஆர்ப்பரிக்கும் படியாக இருக்கக்கூடாது.    நான் வாங்கிய விருதுகள் எதுவும் என் மரணத்தின் போது உதவாது.   நீ இப்போதே,  நான் உன்னை ஸேவிக்கவரும்போது “ஸ்ரீமத் ரங்கநாத பாதுகா ஸேவகருக்கு அருளப்பாடு” என்று அரங்கனின் மூலஸ்தானத்தில் கைங்கர்யம் செய்பவர்களால் அருளப்பாடிட்டு அழைக்கும்படிச் செய்ய வேண்டும்.    இவ்வாறு அழைக்கப் பெறுவேனாயின்  உலகத்தாரிடையே இந்த பெயர் பிரபலமாகும்.   என் உயிரானது பிரிய தவிக்கும்போது என் பக்கத்திலுள்ள ஜனங்கள் “ஸ்ரீமத்ரங்கநாத பாதுகா ஸேவகரின் உயிரானது தவித்துக் கொண்டிருக்கின்றது.”  என்று எனக்கு வழங்கப்பட்ட இந்த பெயரையும் சேர்த்துச் சொல்லுவார்கள்.    இதனைக் கேட்கும் யமதூதர்கள், “நல்லவர்களோ கெட்டவர்களோ பகவானை ஆஸ்ரயித்தவர்களின் (ஸ்ரீவைஷ்ணவர்களின்) ஸமீபத்தில் கூட போகதீர்கள்.  அது மிகவும் அபாயமானது”  என்ற எமதர்மராஜாவின் ஆக்ஞைப்படி விலகி ஓடிவிடுவார்கள்.  யமவாதனை என்னை வாட்டமலிருக்க இதுவே உபாயம்.!
ஆகையினால் நீ அப்படிச் செய்ய வேணும்..!
 
அணியார் பொழில்சூழ் அரங்கநகரப்பா ! *
துணியேன் இனி நின்னருளல்லது எனக்கு *
மணியே மணிமாணிக்கமே!  மதுசூதா!*
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதீ!

                                                     -திருமங்கையாழ்வார் – திரு.232-

அழகும் திரட்சியும் மிக்க சோலைகளின் நடுவே உகப்புடன் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே!  களைப்பைப் போக்கி கண்குளிரும்படி ஸேவை தந்தருளும் கருமணியே!  வடிவழகு மட்டும் இல்லாமல் பெரும் வாத்சல்யமும், அருளும், குணமும் கொண்ட குணக்குன்றே!  இனி நான் நின்னருள் அல்லாது வேறு துணையை நாடமாட்டேன்.!  போர்களத்தில் வருந்திய அருச்சுனனை நோக்கி, ”உன்னுடைய எல்லாச் சுமைகளையும் எம் தலையில் ஏற்றி வைத்து எம்மையே பற்றுக்கோடாக நினைத்திரு!  நாம் உம் பகைகளை எல்லாம் போக்குகிறோம், “மாகச:’ (வருந்தாதே)” என்று நீ அன்று அருச்சனனைத் தேற்றியது போல,  பரஞ்சோதீயே!  நான் உய்யும் வகையை எனக்குச் சொல்வாயாக! நான் இந்த இன்னல்களிருந்து பிழைத்து வாழும் வகையில் எனக்கு ஒரு வார்த்தை தேவரீர் அருளவேண்டும்! 
 
 
திறம்பேன்மின் கண்டீர்; திருவடிதன் நாமம் *
மறந்தும் புறந்தொழா மாந்தர் * – இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள்“ என்றான் * நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு ..
                                                                 -நான்முகன் திருவந்தாதி-68-
 
 
பகவத் ஸம்பந்தமும், ஆழ்வார்-ஆச்சார்ய ஸம்பந்தமும்,  பகவத் ப்ராப்தியும், ஆச்சார்ய பிரபத்தியும், நாம் செய்யும் அனுஷ்டானங்கள்  மட்டுமே ஒருவனது மரணகாலத்தில் உதவும்.   மற்றபடி வேறு எந்த ஒன்றினாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.  நல்ல ஆச்சார்ய ஸம்பந்தத்தினையடைந்தவர்களுக்கு நரகமில்லை..!  யமவாதனையில்லை..!

May 11, 2009

Pesum Arangam – 71

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 11:27 am

 Chapter-71
 
07th May’2009
 
உண்மையான புருஷார்த்தம் அல்லது உண்மையான பக்தி என்பது எப்படியிருக்கும்..?

பகவானை அனுபவிக்கும் போது சந்தோஷப்படுவர்.  அந்த பகவதனுபவம் தம்மை விட்டு விலகும் போது துக்கப்படுவர்.   
இந்த புருஷார்த்தம் அல்லது பக்தி என்பது பகவான் யாரை இந்த விஷயமாக சங்கல்ப்பித்து இருக்கின்றானோ அவனுக்குத்தான் உண்டாகும்.

அவனுக்கு ஸம்ஸாரத்தில் ஒழிவும்,  உலகியல் இன்பங்களில் வெறுப்பும்,  பகவதனுபவம் மட்டிலும் ருசியாகவும் இருக்கும்.  இதற்காக இவ்விதம் சங்கல்ப்பித்து இருக்கின்றவனை,  பலவிதங்களில் பகவான் பக்குவப்படுத்துவான்.

ஸம்ஸாரிகள், பகவதனுபவத்தைத் தவிர,   எந்த விஷயங்களில்  அதீத ஈடுபாட்டுடன் செய்து சுகிக்கின்றார்களோ,  அதே விஷயங்களில் அலுப்பையும்,  துக்கத்தையும் பகவான் தான் ரக்ஷிப்பதற்காக சங்கல்ப்பித்தவர்களுக்குத்தான் கொடுக்கின்றான்.    இப்படி இருக்கவேண்டும் என்பதை உலகுக்கு இவன் மூலமாய் காட்டிக் கொடுக்கின்றான்.  இதற்காக தான் தேர்ந்தெடுத்த ஸம்ஸாரிகளிடத்து பெரும் அவதியை உண்டாக்குகின்றான். 

யாரொருவர் இந்த ஸம்ஸாரத்தில் அதிக துக்கம் அனுபவிக்கின்றார்களோ அவர்கள்  பகவானால் இந்த ஸம்ஸார சாகரத்திலிருந்து மீட்டு ரக்ஷிக்கப் படுகின்றவர்கள்.   யாரொருவருக்கு  பகவானை மறக்கும்படியாக இந்த ஸம்ஸார வாழ்வு மேன்மேலும் ருசியாகவே இருக்கின்றதோ அவர்கள் மேன்மேலும் இந்த ஸம்ஸாரத்திலேயே தள்ளப்படுகின்றார்கள். 
ஸதாச்சார்யர்கள் மூலமாய் சரியானபடி மோக்ஷார்த்த சரணாகதியை அநுஷ்டித்தவர்கள் விஷயத்தில் மட்டும் எப்படியிருந்தாலும் பகவான் தயையோடு (ஸதாச்சார்யர்கள் ஸம்பந்தத்தினால்) ஸம்ஸார ருசிக்கும்,  ஸம்ஸார பந்தத்திற்கும் காரணமாயுள்ள சகலவித பாபங்களையும் இந்த ஜன்மத்திற்குள்ளேயே கழித்து அவர்களை முடிவில் மோக்ஷத்திற்கே கொண்டு போகின்றார். 

அளவிடமுடியாததும், அழிவில்லாத்தும், எல்லா நற்குணங்கள் நிறைந்த்துமான ஸ்ரீரங்கவிமானத்தில் ஸர்வ சுலபனாயும், ஆஸ்ரித வாத்ஸல்யத்துடனும் குடிகொண்டு ஸ்ரீரங்கநாதன் என்கின்ற மஹாதனத்தினை வைத்துக்கொண்டிருக்கும் பாதுகையை விரும்பி, அதனிடத்தே ஸர்வசுகமும் அனுபவித்துக்கொண்டிருக்கும்படியாகவும் சபலமான நம் மனதை நிறுத்தும்படியாகவும் பிரார்த்திப்போம்.

நம்முடைய பாபத்தினால் அல்ப விஷயங்களில் ருசி உண்டாகி,  அதற்காக அல்ப மனிதர்களைத் தேடி அலைவதைத் தடுத்து ஸ்ரீஆழ்வார் ஆச்சார்யர்களையும், அவர்களது திவ்ய சூக்திகளையும் நினைத்துக் கொண்டிருந்தால் இந்த உலகிலும்,  அவ்வுலகிலும் ஒரு குறைவுமில்லை!.

May 7, 2009

Pesum Arangam – 70

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 11:17 pm

 Chapter-70
 
05th May’2009
 
யத்யப்யஹம் தரளதீ:  தவ ந ஸ்மரேயம்
ந ஸமர்த்துமர்ஹதி கதம் பவதீ ஸ்வயம் மே !
வத்ஸே விஹாரகுதுகம் கலயத்யவஸ்தா
கா நாம கேசவ பதாவநி ! வத்ஸலாயா:  !!

 
தரளதீ:=சபலபுத்தியுடையவனான – அஹம்=நான் – தவ=உன்னை – நஸ்மேரயம் யத்யபி=நினைக்காமலிருக்கலாம் – பவதீ=நீயாவது – ஸ்வயம்=தானாகவே – மே=என்னை —  நஸ்மர்த்தும்=நினைக்காமலிருப்பதற்கு – கதம்=எப்படி – அர்ஹதி=தகுந்தவளாகிறாய்? – வத்ஸே=கன்றானது – விஹார=விளையாட்டிலே – குதுகம்=ஆர்வமாய் – கலயதி=(துள்ளி குதித்து) விளையாடும் போது – வத்ஸலாயா:=கன்றினிடத்தில் ஆசையுள்ள தாய்பசு —நாம=எப்படியெல்லாம் – அவஸ்தா=அவதிப்படுகின்றது.
 
புதிதாக ஒரு பசு கன்றினை ஈன்றுகின்றது.  அந்த கன்றனாது துள்ளி குதித்து தாய்பசுவினை விட்டு சில அடிகள் நகர்ந்தால் கூட தாய்பசுவானது படாதபாடு பட்டுவிடும்!.  உறுமும்..!  கன்றைத் தொடர்ந்து ஓடும்..!  கன்றுக்கு என்ன ஆபத்து வந்து விடுமோ என்ற பயத்தினால் கன்றுக்கு அருகே வருபவர்களை முட்டப் போகும்..!  ஒரு மிருகத்திற்கு இவ்வளவு வாத்ஸல்யம் இருக்கின்றதே!    எல்லையில்லாத ஞானம், தயை, வாத்ஸல்யம் முதலிய குணங்களையுடைய  ஹே! பாதுகையே!  நீ  என்னிடத்தில் எப்படியிருக்க வேண்டும்..?   
 
என்னுடைய ஜன்மாந்திரத் தொடர்பினால் வந்த பாபவாஸனையினால்,  இந்த உலகப்பற்று நீங்காமல்,  ஆசையுடையவனாய்,  பற்றுடையவனாய்,
ஸம்ஸார கடலில் போக்யதாபுத்தியினால்  உழன்று,  உன்னை விட்டு விலகி நான் ஓடினால் கூட,  நீ அந்த தாய்பசுவினைப் போன்று என்னை  துடர்ந்து வந்து ,  உன் கடாக்ஷத்தினால் என் பாபங்களைப் போக்கி,   வைராக்கியமான மனதையளித்து,   என் மனதை உன்னிடத்திலேயே நிலைக்கொள்ளுமாறு வைத்திருக்க வேண்டாமா..?   இவ்விதம் செய்யாமல் என்னை ஒதுக்கி வைப்பது உனக்கு அழகா..?  இது தகுமா..?
 
இந்த ஸம்ஸாரருசி என்பது வெறும் ஞானத்தினால்  போகாது.  பகவத் அனுக்கிரஹம் ஒன்றினால் மட்டுமே நீங்கும்.   இந்த பகவத் அனுக்ரஹத்தினை  ஆச்சார்யன் சம்பந்தமானது மிகவும் எளிதாக ஆக்கும். ஆச்சார்யனது வாத்ஸல்யம் இருந்தால் பகவத் அனுக்ரஹம் பரிபூர்ணம்.
 

May 5, 2009

Pesum Arangam – 69

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 9:44 am

அபி ஜந்மநி பாதுகே!  பரஸ்மிந்
அநகை: கர்ம பிரீத்ருசோ பவேயம் !
ய இமே விநயேந ரங்கபர்த்து:
ஸமயே த்வாம் பதயோஸ் ஸமர்ப்பயந்தி !! 952 !!
 
ரங்கபர்த்து:=ஸ்ரீரங்கநாதனுடைய – பதயோ:=திருவடிகளிலே – விநயேந=மிகுந்த பணிவோடு – ஸமயே=அந்தந்த உசிதமான சமயங்களில் (அதாவது நித்யபடி ஆராதனத்தில் ஆறு காலங்களிலும் மற்றும் சஞ்சாரங்களின் போது அந்தந்த மண்டபங்களிலும்)  — ய=யாதொரு – இமே= அர்ச்சகர்கள் –  கர்மபி:= காரியங்களாலே  — ஸமர்ப்பயந்தி = ஸமர்ப்பிக்கின்றார்களோ – இத்ருசோ = இவர்களைப் போன்றவனாக – பரஸ்மிந் ஜந்மநி=அடுத்த ஜன்மத்தில் – அபி பவேயம்= ஆவேனா..?
 
அர்ச்சகராய் பிறந்த ஒவ்வொருவரும் குறிப்பாக ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர் அனைவரும் தேசிகரின் இந்த பாசுரத்தினை அவ்வப்போது நினைவில் கொள்ள வேண்டும்.    பாதுகையினைப் பார்த்து வேண்டுகின்றார். 

“ஹே! பாதுகே!  நீ எனக்கு மோக்ஷம் கொடுத்தால் கொடு அல்லது கொடுக்காவிட்டால் எனக்கு அடுத்த ஜன்மத்திலாவது ஸ்ரீரங்கநாதனுக்கு கைங்கர்யம் செய்யும் அர்ச்சகராய் பிறக்கச் செய்!  இந்த அர்ச்சகர்களைப் போல மிகுந்த ப்ரீதியுடனும் பவ்யத்துடனும் உன்னை ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளில் தடங்கலில்லாமல் அந்தந்த உசித காலங்களில் ஸமர்ப்பிக்கிறது முதலிய கைங்கர்யங்கள் கிடைக்குமாயின் அதுவே எனக்கு மோக்ஷம்!.  அதற்கும் கூட நான் கொடுத்து வைக்கவில்லையே!  எனக்கு அந்த பாக்யம் இந்த ஜன்மத்தில் இல்லாது போயிற்றே!  எங்கிருந்தாலும் உனக்கு இடைவிடாது கைங்கர்யம் பண்ணுவதுதானே மோக்ஷம்!  அதற்காகத்தானே அங்கு (பரமபதம்) போகிறது – அது இங்கேயே (ஸ்ரீரங்கத்தில்) கிடைத்து விட்டால்  எவ்வளவு பாக்யசாலியாவேன் நான்!“
 
ஸ்ரீரங்கம் கோவிலின் பூஜை முறைகள் ஓளபகாயநர். சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர் என்ற ஐந்து ரிஷிகளுக்கும் ஐந்து ராத்ரியில் பகவானால் உபதேசிக்கப்பட்டமையால் இது ‘ராத்ரி ஆகமம்“  – இது ஐந்து(பஞ்ச) ரிஷிகளுக்கு ஐந்து நாட்கள் உபதேசிக்கப்பட்டமையால்
“பாஞ்சராத்ர ஆகமம்”  என்று திருப்பெயர்.    ஸ்ரீபாஞ்சராத்ர தியான ஸ்லோகம் நிர்த்தாரணமாய்  முதலிலேயே சொல்லிவிடுகின்றது.. ”….ஓளபகாயந  சாண்டில்ய  பாரத்வாஜஸ்ச  கௌசிக:  மௌஜ்யாயநஸ் ச பஞ்சைதே  பாஞ்சராத்ர  ப்ரவர்த்தகா: ..’’

இவர்கள்தான் இந்த பாஞ்சராத்ர ஆகமத்தின் ப்ரவர்த்தகர்கள்  அதாவது இந்த பூஜை முறைக்கு அதிகாரமானவர்கள் என்று.   இதன்படியேதான் இன்று வரை இந்த  ஐந்து கோத்ரங்களில் வந்த வழிமுறையினர்தான் பூஜைகளைச் செய்து வருகின்றனர்.   இதைத் தவிர ஸ்ரீரங்கம் கோவிலில் கடைப்பிடிக்கப்படுவது “ஸ்ரீசுக்ல யஜூர்”  வேதமாகும்.  அர்ச்சகர்கள் அனைவருமே சுக்ல யஜூர் வேதிகள் – இதில் காண்வ சாகை பிரிவினர்.

ஒருவன் ஸ்ரீரங்கம் கோவிலில் அர்ச்சகராய் ஆவதற்கு முதலில் இந்த தகுதியோடு பிறக்க வேண்டும்.  இதற்கு பின்   நிறைய கற்க வேண்டியதுள்ளது. 

தேசிகருக்குத் தெரியாத ஆகமமா?  அவருக்கு இல்லாத தகுதியா..? இத்தகைய மஹானே  என்னை ஒரு அர்ச்சகனாய் பிறக்கச்  செய்யேன் ..?  என்று வேண்டுவராயின் அர்ச்சகர்களாய் இருப்பவர்கள்  எவ்வளவு பெருமைக்குரியவர்கள்..?
 
இத்தகைய பெருமைக்குரியவர்களாகிய நாம்  தற்சமயம்  நம் அடைந்த பெறர்கரிய பேற்றினை உணர்ந்து செயல்படுகின்றோமா..?
 
கௌரவமாக நடத்தப்படுகின்றோமா..?
 
பாரம்பரியமிக்க இந்த விதிமுறை இனி வருங்காலத்தில் கடைப்பிடிக்கப்படுமா..?
 

May 1, 2009

Pesum Arangam – 68

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 10:28 am

CHAPTER-68
29.04.09 

 
 

ப்ரபத்யே பாதுகாம் தேவீம் பரவித்யாமிவ ஸ்வயம்

யாமர்ப்பயதி தீநாநாம் தயமாநோ ஜகத்குரு  !! 951 !!

 

ப்ரபத்யே=உபாயமாக நம்புகிறேன் (நான் அனுபவித்து கொண்டிருக்கும் ஸம்ஸாரதுக்கம் நீங்குவதற்கான) —  பரவித்யா=மோக்ஷத்திற்கு உதவக்கூடிய அறிவு (பக்தி, ப்ரபத்தி) – ஸ்வயம்=தாமாகவே முன்வந்துயாம் அர்ப்பயதி=யாதொரு பாதுகையின் மூலமாய் கொடுக்கின்றாரோ – தீநாநாம்=ஸம்ஸாரத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் தயமாநோ=தயவுள்ளவராய்

 

பகவான் ஸம்ஸரத்தில் உழன்று கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்ற ஜீவாத்மாக்கள் கடைத்தேற, மோக்ஷம் பெறுவதற்காக உண்டான அறிவை அதாவது பக்தி மற்றும் சரணாகதி என்கிற ஞானத்தினை வேதங்கள் மூலமாய் ஏற்படுத்தி வைத்துள்ளார்.  இந்த அறிவிற்கு “பரவித்யை“ என்று பெயர்.  ஆச்சார்யன் மூலமாய் இந்த பரவித்யையை ஆஸ்ரிதர்கள் அடைவது போன்று, ஆழ்வார் ஆச்சார்யனின் மற்றொரு ரூபமான பாதுகையும்  மோக்ஷஸாதனமே!.  இந்த ஸ்ரீசடாரியான பாதுகையை நாம் சாதிக்கப்பெறுவதும் மோக்ஷஸாதனமே!  

 

இத்தகைய மஹிமைகள் பொருந்திய எங்களைக் காப்பாற்றுவதற்காக அவதரித்த பாதுகா தேவீ!

என்னை இன்னுமும் ஸம்ஸாரத்தில் தவிக்கவிட்டு வேடிக்கைப் பார்க்கின்றாயே?   நான் என்ன செய்வேன்,.!   இது உன்னுடைய குணத்திற்கு அழகாகுமா..?   ஆகையால் உன்னை சரணமாக அடைகின்றேன்..!   என்னுடைய ஸம்ஸாரபந்த்த்தினை அடியோடு போக்கி சாஸ்வதமான பரமபுருஷார்த்தத்தினை எனக்கு நீ அருள வேண்டும் ..!

 

ஒரு முமுக்ஷு ஆனவன் பகவத் ப்ராப்தியில் குன்றாத ஆர்வம் தோன்றி,  மோக்ஷார்த்தமான சரணாகதியினை அனுஷ்டித்து,  ஸம்ஸாரம் பிடிக்காமல், விருப்பு வெறுப்பு தவிர்த்து பகவான் ஒருவனையே உபாயமாக நினைத்து செயல்புரிவானாயின்,  ஆச்சார்யனின் அனுக்கிரஹத்தினால் சீக்கிரம் பரமபுருஷார்த்தத்தினை ஸாதித்துக் கொள்ளலாம்.

 

Blog at WordPress.com.