Srirangapankajam

November 27, 2008

PESUM ARANGAN-155

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 11:43 pm
 
Chapter-155
 24.11.2008
 
அரங்கனை மனத்தினுள் சிறைவைத்து ஆராதித்த மாமுனிகளுக்கு,   தமக்கு ப்ராப்யரான உடையவர் திருவடிகளிலே பக்தியானது நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றது.  ஆர்த்தி அதிகரிக்கின்றது.  அதனால் பரமபக்தி தலையெடுக்கின்றது. நாள்தோறும் தம் ஆர்த்தியினை அவர் திருமுன்பே விண்ணப்பஞ் செய்கின்றார். 
 
வாழியெதிராசன் என்ற அவரது ஆர்த்தியின் வெளிப்பாடாய் பிரபந்தமாய் அருளி அறுபது பாட்டாய், ஆர்த்தி பிரபந்தம் என்னும் ஒரு அற்புத பாமாலையாய் தலைக்கட்டிற்று. 
(Pls Click here for Aarthi Prabhandam with meaning)
 
ஆச்சார்யன் திருவடிகளையடைய வேண்டும் என்ற எண்ணம் மிகவோங்கியது. 
 
சீரங்கநாயகியிடத்து இறைஞ்சுகின்றார்.
 
தென்னரங்கர் தேவியே!  சீரங்கநாயகியே!
மன்னுயிர்கட்கெல்லாம் மாதாவே! – என்னையினி
இவ்வுலகந்தன்னிலிருந்து நலங்காமல்
அவ்வுலகில் வாங்கியருள்
 
என்றும்
 
சீரங்கநாயகியே! தென்னரங்கன் தேவியே!
நாரங்கட்கெல்லாம் நற்றாயே!  மாருதிக்கு
வந்தவிடாய் தன்னையொரு வாசகத்தால் போக்கின நீ
எந்தனிடர் தீராததென்?
 
என்று தாயாரிடத்தும்
 
இந்தவுடம்போடினியிருக்கப் போகாதுதான்
செங்கமலத்தாள் தன்னைத் தந்தருள் நீ – அந்தோ
மையார் கருங்கண்ணி மணவாளா!  தென்னரங்கா!
வையாமலிருப்பாயேயிங்கு
 
என்று அரங்கனிடத்து மெய்யுருகி விண்ணப்பிக்கின்றார்.
 
சென்று திருமாலடியார் தெய்வக்குழாங்கூடு
மென்று மொரு நாளாமோ?  ஆழ்வாரே! – துன்னுபுகழக்
கமலம்பாடினீரையோ அடியேனுமிக்
கமலஞ்சேர் காயம் விட்டு
 
என்று ஆழ்வாரிடத்து கெஞ்சுகின்றார்.
 
இந்தவுடம்போடிருவினையாலிவ்வளவும்
உந்தனடிசேராதுழன்றேனே – அந்தோ
அரங்கா! இரங்காயெதிராசர்க்காக
இரங்காய் பிரானே இனி
 
என்றும், ‘திருவரங்கா! அருளாய் இனியுன் திருவருளால் அன்றி காப்பாதரிதால்” என்று அரற்றுகின்றார். 
 
தம் அந்திம தசையினையறிகின்றார். 
 
தம் சீடர்களனைவரும் செய்ய வேண்டிய கைங்கர்யங்களை நிர்ணயித்து நியமிக்கின்றார். 
 
மேலுலகில் வழுவிலாவடிமைச் செய்ய புறப்பட்டுயெழுந்தருள நாலு நாள்தான் உள்ளது என உணர்கின்றார். 
 
‘நாலாயிரமும் தொடங்கி நடத்துங்கோள்” என்று நாயனார் தொடக்கமான முதலிகளை நியமிக்கின்றார். 
 
அவர்களும் அப்படியே அனுசந்திக்க இவைகளையெல்லாம் திருச்செவிசாத்தியருளி திவ்யபிரபந்தனுபவங்களில் உகப்புடனே அஞ்சலிஹஸ்தராய் கண்மூடி அகக்கண்களாலே அரங்கனை தியானித்தவண்ணம் அருளிச்செயல்களின்
அர்த்த அனுபவத்திலே ஆழ்ந்தபடி கிடக்கின்றார்
.
 
 
ஏகாதசி கழிந்து அன்று துவாதசி காலை. 
 
உத்தமநம்பி தொடக்கமான அனைத்து பரிகரத்தையும் அழைக்கின்றார்.

‘ஸர்வ அபராதங்களையும் பொறுத்தருள வேண்டும்”
என்று அபராத க்ஷமாபணம் பண்ணுகின்றார்.
அனைவரும் கண்களில் நீர் சொரிய, அளவிலாத சோகார்த்தராய், ‘தேவரீருக்கும் அபசாரமுண்டோ?” என்று உதடுகள் துடிக்க தழுதழுத்து அழுகின்றனர். 
 
மாமுனிகள் கண்ணிலும் இவர்களது பிரிவாற்றாமையினால் கண்கள் பனிக்கின்றது. 
 
அவர்களனைவரிடத்தும் கடைசியாக, ”பெரியபெருமாளுடைய ஸ்ரீகார்யத்தை குறைவற நடத்துங்கள்’ என்று பணிவாக வேண்டுகின்றார். 
 
அனைவருக்கும் மடத்தில் அமுது செய்விக்கின்றார். 
 
மடத்திலுள்ள எல்லாரும் அமுது செய்து, மாமுனிகளிடத்து நெருங்கி சுற்றி நின்று கண்ணநீர் கொப்பளிக்க அஞ்சலிஹஸ்தராய், ப்ரஹ்மவல்லி, ப்ருகுவல்லி ஆகிய வேதங்களையும்,
சூழ்விசும்பணிமுகில், அர்ச்சிராதி, இவைகளை ஒரு சாரார் ஒரே சுருதியுடன் அநுசந்திக்க, ஒரு சாரார் இராமானுஜ நூற்றந்தாதியினை அநுசந்திக்கின்றனர். 
 
இவர்களது அநுசந்தானங்களால் அந்தவிடம் மேலும் தெய்வீகப்பொலிவோடு விளங்கியது. 
 
 ‘கநககிரி மேலே கரியமுகில் போல
விநதை சிறுவன் மேற்கொண்டு’
என்றும்,
‘எந்தை திருவரங்கரேரார் கருடன் மேல் வந்த முகங்காட்டி வழிநடத்த’ என்றும் இவர் வேண்டியபடியே மாமுனிகளை அழைத்துப்போக நித்யசூரிகள் வராது பெரியபெருமாளே கருடவாகனத்தின் மீது அமர்ந்து மாமுனிகளுக்கு சேவை சாதிக்கின்றான்.
மாமுனிகள் ‘பிள்ளை திருவடிகளே சரணம் – வாழி உலகாசிரியன்‘ என்றபடியே அணையிலே சாய்ந்தருளுகின்றார்.
 
இராமானுஜ நூற்றந்தாதியிலிருந்து 108வது பாசுரம் ‘அங்கயல்பாய் வயல் தென்னரங்கன்” என்னும் பாசுரம் ஒலிக்கின்றது. 
 
இவர் உடல் சிலிர்க்கின்றது. 
 
க்ருதாஞ்சலிபுடராய் ‘எம்பெருமானார் திருவடிகளே சரணம்” என்று அநுசந்தித்து திருக்கண்களை செம்பளித்து கொண்டிருக்கின்றார்.
”நோய்களாலென்னை நலங்காமல் சதிராக உன் திருத்தாள் தா”
 
என்றும்
”மாதவன் தன் துணையா நடந்தாள்”
 
 என்றும்,
 
“அரங்கத்துறையுமின் துணைவனொடும் போய்” என்று சொல்லுகின்றபடியே மாமுனிகளின் உள்ளுறையும் அந்த மஹா ஆத்மாவானது ச்ரிய: பதியான பெரியபெருமாள் பெரியதிருவடி மேற்கொண்டு அவரது திருவடியினைப் பற்றி, சுஷூம்நா என்கின்ற சிரக்கபாலத்தின் ப்ரஹ்மரந்த்ரத்தினை வெடித்து,  அவர் உள்ளிருந்து ஆட்டுவித்த அந்த ஜோதி சேஷ ஸ்வரூபமாய் சேஷ ஜோதியானது.   மஹா சக்தி பொருந்திய மின்னலைப் போன்று   அவர் திருமாளிகையின் மேற்குப்புறம்
சுவற்றில் ஒரு துளையினையிட்டு அதன் வழியே ஜோதிர்மயமாய் பெரியபெருமாளோடு கலக்கின்றது.
 
(இன்றும் மாமுனிகளின் மடத்தில் இந்த மேற்குத் துவாரத்தில் தினந்தோறும் ஒரு அகண்ட விளக்கு ஏற்றி வைத்து வழிபடுகின்றனர்) 
 

ஜீயர் திருநாட்டுக்கெழுந்தருளினார்.
 
ஜீயரின் ஸ்ரீபாதத்து முதலிகளெல்லாரும் ‘ஐயோ கண்ணபிரான்! அறையோ! முறையோ! அரவணைமேல் முகில் கொண்ட முகில் வண்ணனே! என்று பெருமிடறு செய்து கையெடுத்துக் கதறி துடிக்கின்றனர்.
 
நம்பெருமாளின் திருக்கண்ணங்கள் கசிந்தது
 
எப்போதும் பொலிவுடன் விளங்கும் அத்திருமுகம் கறுத்தது.
 
இளையபெருமாளை பிரிந்த ராமபிரான் சோகதுக்கங்களின் வசமானான். ஸௌம்ய ஜாமாத்ரு யோகி எனும் மணவாளமாமுனிகளாகிய இளையபெருமாளை பிரிந்த நம்பெருமாள் அமுது புசியாமல் முசித்து மூடிக்கிடந்தார்.
 
கும்பம்பாஸ்வதி யாதி தத்ஸூததிநே பக்ஷே வளர்க்ஷதரே
த்வாதஸ்யாம் ஸ்ரவணர்க்ஷபாஜி ருதிரோத்கார்யாக்ய ஸம்வத்ஸரே
தீபக்த்யாதி குணார்ணவோ யதிவராதீநாகிலாத்மஸ்த்திதி:
ஸ்ரீவைகுண்டமகுண்ட வைபவமகாத் காந்தோபயந்தா முநி:
 
ஜ்ஞாந பக்தி வைராக்யம் முதலான குணங்களுக்கு மஹாஸமுத்ரம் போன்றவரும்,  எம்பெருமானாருக்கு ஸ்வாதீனமான தமது ஸமஸ்தமான நிலைகளையுடையவருமான மணவாளமாமுனிகள் ருதிரோத்காரி ஸம்வத்ஸரத்தில் சூரியன் கும்பராசியையடைந்த அளவில் (மாசி மாதத்தில்) சனிக்கிழமையில் க்ருஷ்ண பட்சத்தில் திருவோண நட்சத்திரம் கூடிய த்வாதசி தினத்தன்று எல்லையற்ற பெருமையுள்ள ஸ்ரீவைகுண்டத்தை அடைந்தருளினார்.
 
Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: