Srirangapankajam

November 29, 2008

PESUM ARANGAN-156

Filed under: PESUM ARANGAN — Tags: , — srirangapankajam @ 11:59 am
Chapter-156
 27.11.2008
 
மாசில்லாத மணவாள மாமுனிகள் மாசி கிருஷ்ணபக்ஷம் துவாதசியன்று திருநாட்டுக்கு எழுந்தருளினார். 

அவர் வசித்துவந்த திருமலையாழ்வார் கூடம் நிரம்பி வழிந்தது.  உத்திர வீதிகளெங்கும் நெற்றியில் பளீரென திருமண், திருச்சூர்ணம் துலங்க ஸ்ரீவைஷ்ணவர்கள் அலைப் பொங்கியது.
 

ஜீயர் நாயனார் மன்னுலகு சிறக்க வந்த மாமுனிகளின் சரம கைங்கர்யத்திற்கு பொறுப்பேற்கின்றார். 
 
சீடர்கள் குழாமுடன் திருக்காவேரி எழுந்தருளி நீராடி பெரிய திருமஞ்சனக் குடத்தில் கங்கையிற் புனிதமான காவிரியின் நன்னீர் சேந்தி சகலவிதமான மங்கள வாத்யங்கள் முழங்க, அலங்காரமாக திருமஞ்சன குடத்தினைக் கொண்டு வருகின்றனர்.
 
ஜீயரின் விமல சரம திருமேனியினை திருமஞ்சன வேதிகையில் எழுந்தருளப்பண்ணுகின்றனர். 

நான்கு உத்திரவீதிகளிலும் அலைப்போன்று ஆர்ப்பரித்து நின்ற ஸ்ரீவைணவர்கள் புருஷசூக்தத்தினை
தழுதழுத்தக் குரலுடன் பாராயணம்
செய்கின்றனர். 
 
அந்த சந்தர்ப்பத்திற்கேற்ப வானம் மூட்டமிட்டு கதிரவன் சற்றே மறைந்து மெல்லிதாக பூமாரி பொழிகின்றது. 
 
திருமஞ்சனம் முடிந்து திருவொற்றுவாடையினால் திருமேனியை ஒரு குழந்தை குளித்து முடித்தபின்பு துவட்டுவது போன்று கவனமாக ஒத்தி ஒத்தி துவட்டுகின்றனர். 
 
திருப்பரிவட்டம் சாற்றுகின்றனர். 
 
த்வாதசோர்த்வ புண்டரங்களை திருமேனியில் சாற்றுகின்றனர்.  காந்தி வீசும் விசாலமான நெற்றியில் விசாலமான அத்திருமண்காப்பும். ஸ்ரீசூர்ணமும் தேஜஸ்ஸோடு விளங்கியது. 
 
ஜீயரை திவ்ய சிம்ஹாசனத்திலே எழுந்தருளப் பண்ணுகின்றனர்.        அனைத்து ஸ்ரீவைணவர்களும்
‘எம்பெருமானாரை சேவியாத குறையெல்லாம் இவரையடைந்து தீர்ந்தோம் நாம்!  இப்போது இவ்வவதாரமும் தீர்த்தம் பிரஸாதித்துப் போவதே!”

என்று மிகவும் துக்கித்து கண்ணீர் மல்க கதறுகின்றனர்.
 
ஒவ்வொருவராக அவர்தம் திருவடியினை தம் தம் சிரஸ்ஸிலும் நெஞ்சிலும் ஒற்றிக் கொள்கின்றனர். 
 
 ‘அத்தன் மணவாள யோகி அடியிணையைச் சித்தப் பெருங்கோயில் கொண்டருளி” என்றபடி அவரது திவ்யமங்கள சொரூபத்தினை தம் தம் திருவுள்ளங்களில் கடைசிமுறையாக தேக்கிக் கொண்டு வைத்தக் கண் வாங்கதே விமல சரம விக்ரஹ அனுபவத்திலே விக்கித்தவாறு இருக்கின்றனர்.
 
உத்தமநம்பி மூலமாக அரங்கன், ‘தாம் அரைச்சிவக்கச் சாற்றிக் கழித்த  பீதகவாடையான சிகப்புப் பட்டினையும், அவன் திருமார்பணிந்த வனமாலையையும்’ ஒரு பொற் தட்டிலே வைத்து கோயில் மரியாதையுடனே,  சகல வாத்ய கோஷங்களுடனே, சகல பரிகரர்களையும் உடன் அனுப்பி,  மடத்து வாசலுக்கு அனுப்பி, கோயிலின் மூலஸ்தானத்தில் தான் மட்டும் தனித்திருந்து துக்கித்து அதனால் அவனது திருமேனி கறுத்து வாடியபடியிருக்கின்றான்.
 
மாமுனிகளின் மடத்து வாசலில் ஜீயர் நாயனார் உட்பட அனைத்து முதலிகளும் அரங்கனிடமிருந்து வந்த கோயில் மரியாதையினை எதிர்கொண்டு, சாஷ்டாங்கமாக வீழ்ந்துசேவித்து அங்கீகரித்து ‘உடுத்து களைந்த பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு தொடுத்துழாய் மலர் சூடிக்களைந்தன சூடுமித்தொண்டரான ஜீயருக்கு அவற்றைச் சூட்டி அலங்கரிக்கின்றனர். 
 
கோயிலார்கள் அனைவருமே சோகார்த்தராய் ஜீயரை சேவிக்கின்றனர்.
 
திருச்சூர்ண பரிபாலனம் நடக்கின்றது. 
 
பின்பு எண்ணெய் சுண்ணங்கொண்டாடுகின்றனர். (சிறிது எண்ணெய் அவரது சிரஸ்ஸில் தேய்த்து, தேய்த்த கையிலுள்ள மீதமுள்ள நல்லெண்ணையை கொப்பரையிலுள்ள எண்ணெயோடு கலந்து அனைவருக்கும் பிரஸாதிப்பது)

நறுமணம் வீசும் அனைத்து ஜாதி புஷ்பங்களினாலும் பல்லக்கை அலங்கரித்து அதனில் அவரது திருமேனி ஏறியருளப் பண்ணுகின்றனர்.
அரங்கனது ஸ்ரீமாந்தாங்குவோர் அனைவரும் காவிவண்ண ப்ரபன்னபாகையுடன் கவனமுடன் பல்லக்கினை எழுந்தருளப் பண்ணுகின்றனர். 
 
சத்ர, சாமர, தாள வ்ருந்தாதிகள் பணிமாற,  மத்தளங்கள், சங்க,  காஹள பேரிகள் தொடக்கமான ஸகல வாத்யங்களும் ஒரு சேர முழங்க, 
 
பொய்யில்லாத பெரிய ஜீயர் – கர்வம் அறியாத கர்மவீரன் – சாத்வீகமே உருவெடுத்த சத்தியன் – அரங்கனே அடியவனாய் வந்தும் அகங்காரம் சற்றும் கொள்ளாத அழகிய மணவாளன் –  கைங்கர்யத்திற்காகவென்ற சம்ஸாரம் துறந்து சந்நியாசம் மேற்கொண்ட ஸௌம்ய ஜாமாத்ரு முனி, பூவுலகு நீங்கி புறப்படுகின்றார்.
அவரது விமல சரம திருமேனி வருகையையொட்டி உத்திர வீதி, சித்திரை வீதியெங்கும் கொடிகள் அழகாக ஒரு சீரான க்ரமத்தில் நாட்டப்பட்டு நடுநடுவே மகரதோரணம் போன்று தோரணங்கள் கட்டப்பட்டு, வீதியெங்கும் நீர் தெளித்து, சுத்தமாக மொழுகி, கோலமிடப்பட்டு, நடுநடுவே புஷ்பங்களை சொரிந்து, அங்காங்கு கமுகு, குலையுடன் கூடிய வாழைமரங்கள் நட்டு, மஹாஞானியின் கடைசி வருகைக்காகக் காத்திருந்தது. 
 
அடியார்கள் சூழ அரங்கநகரே பிரிவாற்றமையினால் அழுதது.  மாமுனிகளின் புஷ்பகவிமானம் ஊர்ந்தது. 
 
பின்னால் ஸ்ரீவைணவர்கள் அனைவரும் கையில் கரும்புடன் இராமானுஜ நூற்றந்தாதி முதலாக அனுசந்திக்கின்றனர். ஜீயரின் திருமேனி முன் பொரியும் புஷ்பமும் சிதறுகின்றது.  ‘தர்ஸநத்திலே மணவாளமாமுனிகள் திருநாட்டுக்கு எழுந்தருளினார்;” என்று ஒற்றை திருச்சின்னம் பணிமாற,  ஸூமங்கலிகள் அனைவரும் கையில் மங்கள தீபமேந்தி நிற்க, எட்டு திருவீதிகளிலும் மாமுனிகள் கடைசியாக அனைவருக்கும் ஸேவை தந்து வலம் வருகின்றார்.
 

வடக்கு வாசல் வழியே தவராசன் படுகையிலே ‘மகிழாதிகேசவன் தன்னடிக் கீழாக” என்கிறபடியே அங்குள்ள ஆதிகேசவ பெருமாளின் திருவடிக் கீழாக தென்பாலில்,  ஆளவந்தார், இராமானுஜர் ஆகியோருக்கு செய்த கிரமம் போன்று யதிஸம்ஸ்காரவிதியடங்க திருப்பள்ளிப்படுத்துகின்றனர்.
 
பூமிதேவியானவள் ஜனகனின் திருமகளான சீதையை தம் மடியிலே வைத்து அணைத்துக் கொண்டு ஆதரித்தாற்போன்று,  மாமுனிகளான இவரையும் தம் மண்ணால் மூடி தம் மடி மீது கிடத்தி அணைக்கின்றாள்.
 
சீயரெழுந்தருளி விட்டார் செகமுழுதும்
போயிருள் மீளப் புகுந்ததே தீய
வினைநைய வெம்புலனா வீடழிந்து மாய்வோ
ரனைவார்க்குமேதோ வரண்?
 
என்று சிஷ்யர்கள் அனைவரும் மிகவும் துக்கித்து, தங்களுடைய திருமுடியினை விளக்குவித்துக் (தலைச்சவரம்) கொண்டு, வடதிருக்காவிரியில் நீராடி மீண்டும் மடத்துக்கு எழுந்தருளுகின்றனர்.

நம்மாழ்வார் மோட்சம் முடிந்து நம்பெருமாள் ஆஸ்தானம் அடைந்த பின்  வெறிச்சோடும் திருமாமணி மண்டபம் போன்று,  ஜீயரின்றி வெறித்துப் போய் கிடந்த திருமலையாழ்வார் கூடம் கண்டு மீண்டும் அழுகின்றனர்.
 

நானெதென்னும் நரகத்திடையழுந்திப்
போனவிந்த காலமெல்லாம் போதாதோ? – கானமலர்
மாலையணிதிண்டோன் மணவாள மாமுனியே
சால நைந்தேன் உன் பாதம் தா!
 
என்றும்
 
புண்ணாராக்கை தன்னுள் புக்குழலும் தீவினையேன்
தண்ணாருமென் கமலத்தாளணைவதென்று கொலோ
பண்ணரு நால்வேதம் பயின்றுய்யும் பண்டிதனே
மண்ணாள வந்த மணவாள மாமுனியே
 
என்று மண்ணுலகம் சிறக்க வந்த மாமுனிகளை நினைத்து நினைத்து திருமிடறு தழுதழுப்ப விண்ணப்பஞ்செய்து,  தமக்குத் தானே ஒருவாறு தேறி ஜீயரின் திருவத்யனன கைங்கர்யத்தினைப் பெருக்கச் செய்கின்றனர். தீர்த்த பிரஸாதங்களை ஸ்வீகரித்து ஜீயர் அவரவர்க்கிட்ட பணி செய்ய திரும்புகின்றனர் அனைவரும்.
 
பெரியபெருமாள்,  ஜீயர் நாயனாருக்கு தீர்த்தம் பிரஸாதம் திருப்பரிவட்டம் ஸ்ரீசடகோபம் எல்லாம் சாதித்து, ஜீயர் நாயனாரை ”ஸ்ரீரங்கராஜரையும் மடத்தையும் நோக்கிக்கொண்டு போரும்” என்று நியமிக்கின்றார்.

இத்தைக் கண்டு ஜீயருடைய அபிமாந அந்தர்பூதரெல்லோரும் சற்றே ஆறுதலடைந்தவர்களாய், ஜீயர் நாயனாரை பெரிய ஜீயரைக் கண்டாற் போல கண்டு அநுவர்த்தித்து, ஆஸ்ரயித்து ஸேவித்துக் கொண்டிருந்தார்கள்.
 

வரவரமுநி: பதிர்மே தத்பதயுகமேவ சரணமநுரூபம்
தஸ்யைவ சரணயுகளே பரிசரணம் ப்ராப்யமிதி நநுப்பராப்தம்
 
மணவாளமாமுனிகளே அடியேனுக்கு ஸ்வாமி.
அவருடைய திருவடித் தாமரைகளே பேற்றுக்கநுருபமான உபாயம்.
அவருடைய திருவடித் தாமரைகளில் கைங்கர்யமே மேலான உபேயம்.
                                                     -எறும்பியப்பா.
 
அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ
சடகோபன் தண்டமிழ் நூல் வாழ – கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ மணவாள மாமுனியே!
இன்னுமொரு நூற்றாண்டிரும்!.
 
ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே
ஸ்ரீரங்க வாஸிநே பூயாத் நித்யஸ்ரீர் நித்ய மங்களம்
.
 
 
மணவாள மாமுனிகள் திருவடிகளே சரணம்.
 

இத்தொடர் ஆரம்பிக்கும் போது  அரங்கனிடத்து புறப்பாட்டின் போது மணவாளமாமுனிகள் சம்பந்தமாக கூறும் கட்டியம் திடீரென சிந்தையில் அவன் தோற்றுவிக்க மாமுனிகளை முன்வைத்து அவனருளால் தொடங்கினேன். 
 
ஆரம்பித்தாயிற்று…..! 
 
எதனைக் குறித்து முதலில் ஆரம்பிப்போம் என்று குழப்பமுடன் இருந்தபோது என் ஆத்ம பந்து, ஆன்மீக சிந்தை செறிந்து விளங்கும் அஹோபிலதாஸன் க.ஸ்ரீதரன் அவர்கள் ‘மத்ஸ்யம் தொடங்கி எழுதும்” என்று நியமித்தார்.
ஏதோ ஒரு பத்து அல்லது பதினைந்து தொடர்தான் எழுதுவோம் என்று நினைத்து எழுதிய அடியேனே,   ஆச்சர்யப்படும் வகையில் 156 தொடர்களை எழுதி திரும்பி பார்க்கும் போது,  அதிர்ந்து நின்றேன்.
‘ஸ்வாமி! என்னமோ நீர்தான் எழுதியதாக நினைத்துக் கர்வ படாதிரும்!
இவையனைத்தும் நம்பெருமாள் உம்மை பயன்படுத்தி எழுதிக்கொண்டது.
இதில் நீர் கர்வபட்டால் அதைவிட அபத்தம் ஒன்றுமில்லை”
என்று என் தோழன் மதுஇராமானுஜன் சொன்னபோது,   இதுவும் என் தோழன் சொன்ன வார்த்தையாக நான் நினைக்கவில்லை.  அன்று அரங்கனே அவன் மூலம் என்னிடம் பேசியதாகத்தான் நினைத்தேன்;. அன்றிரவு ஏதோ ஒரு புரியாத ஆனந்தம் அடைந்து அழுதேன் நான்.
 
 
எனது நான் என மமதையுற்று அலைந்த என்னை
இனியனாக்கி இணைய வைத்த இன்ப தெய்வமே
எனதுளத்தில் உனது நாமம் எழுதி வைத்து நடனமாட
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ
 
என்று அரற்றியவாறே உறங்கிப் போனேன். 
 
உண்மைதான்…!. 
 
ஒன்றுக்கும் உபயோகப்படாத குப்பை நான்!. 
காலக்ஷேபம் கேட்டவனில்லை!
திருவாய்மொழி அறிந்தவனில்லை!
திவ்யசரிதங்கள் பல படித்தவனுமில்லை!
ஆழ்வார் ஆச்சார்யர்கள் பற்றி அதிகம் அறிந்தவனுமில்லை! 
அறிந்தது ஏதோ அரைகுறை ஆகமம்தான்!
அந்தரங்கத்தில் அவனிருந்து எழுதாவிடின் இவ்வளவு நாட்கள் வருமோ இது!. 
 
அவ்வப்போது என் போற்றுதலுக்குhpய நண்பர்கள் குழாம் என்னை ஊக்கப்படுத்தும் போதெல்லாம் அரங்கனுக்கு நன்றி கூறுவேன் நான்.
அறிமுகமேயில்லாத பலர்,   இந்த வலைத்தளத்தின் மூலமாய், அவன் இயக்கிய இத்தொடர் மூலமாய் என் ஆத்ம நண்பராயினர்.
பேசும் அரங்கன் மூலம் என் குடும்பம் பெரிதானது. 
 
சரி! எழுதிக் கொண்டே போகின்றோமே… மன்னிக்கவும்.. எழுதிக்கொண்டே போகின்றானே எங்கு முடிப்பான்? என்ற சிந்தனையிலிருந்த போது திரு.சுருதபிரகாசிகபட்டரிடமிருந்து ஒரு மெயில் மணவாளமாமுனிகளைக் குறித்து வந்தது.   அதில்
 
……ooranvazhi finished in this stage.
Lakshmi Nadhan [Periyaperumal] started as 1st acharya pursha and he him finished the same paramparai.
always a thing must end in a same place where it started then only its a perfect circle…..’

என்று குறிப்பிட்டிருந்தது.  ஆஹா!  எப்படியெல்லாம் அவன் பேசுகின்றான் என்று அதிசயித்துப் போனேன்.  பேசும் அரங்கனும் ஒரு perfect circle – மணவாள மாமுனிகளில் ஆரம்பித்து மணவாள மாமுனியில் முடிகின்றதே!…

 
அவனது திருவுள்ளப்படியே மணவாள மாமுனிகளின் திருவடிகளைப் போற்றிப் பணிந்து முடித்துக்கொள்கின்றேன் இத்தொடரை!.
 
இத்தொடர் மூலமாக யார் மனதாவது புண்பட்டிருந்தால் அவர்களது திருவடித்தாமரைகளில் அத்தவற்றிக்கு அடியேனை பொறுத்தருளி மன்னிக்க வேண்டுகின்றேன்.
 
இத்தொடர் முடித்த போது சில பிரார்த்தனைகள் அடியேனது மனதில் எழுந்தது.  பிடித்திருந்தால் தாங்களனைவரும் பிரார்த்திக்க வேண்டுகின்றேன்!
 
1) பெரிய பெருமாளின் கைங்கர்யங்கள் அனைத்தும் குறைவற நடக்க வேண்டும்.
 
2) கலை பேதமற்று வைணவ சமுதாயம் ஒன்று பட வேண்டும்.  வைணவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.  வைணவ ஒற்றுமை ஓங்க வேண்டும்.
 
3) திவ்யதேசங்களனைத்தும், அதனதன் கைங்கர்யரர்கள் உட்பட பொலிவுற விளங்க வேண்டும்.
 
4) ஆழ்வார் ஆச்சார்யர்களின் பிறந்தவிடம், திருவரசு இரண்டும் பேணிக் காக்கப்பட வேண்டும்.  அதனை அனைவரும் அறியும் வண்ணம் வெளியிட வேண்டும்.  சென்றடைய எளிதாக பாதை அமைக்கப்பட வேண்டும்.
 
5) கடைசியாக, மணவாள மாமுனிகளின் திருவரசு உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும்.  அங்குள்ள ஆதிகேசவப் பெருமாளுக்கு மீண்டும் கோயிலமைக்கப்பட வேண்டும்.
 
உன்னிகிருஷ்ணன் பணிக்கர் பிரஸன்னம் சொல்லும் போது, ”இந்த கோவிலிலும் நவக்கிரஹங்கள் இரண்டு இடத்தில் உள்ளன” என்றார்.

எங்களுக்குப் புரியவில்லை. 

 
ஆர்யபடாள் வாசலில் நிலைப்படிக்குக் கீழேயும்,   நாழிகேட்டான் வாசல் நிலைப்படிக்குக் கீழேயும் 12 இராசிகள் பொறிக்கப்பட்டிருந்தன.  ”இதைத்தான் அந்தந்த இராசிக்கு சொந்தமான கிரஹங்கள் சூக்குமாக இந்த சின்னங்கள் மூலமாய் குடி கொண்டுள்ளன” என்றார். 
 
எதற்காக…..? என்று வினவியபோது
 
அவைகள் அனைத்தும் தம் பாவங்களைத் தொலைத்துக்கொள்ள பரம ஸ்ரீவைணவர்களின் ஸ்ரீபாததுளிகள் தம் தலை மேல் விழுவதற்காக வணங்கி காத்திருக்கின்றன’ என்றார்.
 

உண்மைதான்.  ஸ்ரீவைணவரின் பாதத்துளி எல்லாவற்றையும் ஸ்ரேஷ்டமானதுதான்!. 
 
ஸ்ரீவைணவர்களாகிய தாங்களின் பொற்பாதங்களில், மானசீகமாக, அடியேனது தலை வைத்து வணங்கி விடைபெறுகின்றேன்.
 
 
அடியேன் இராமானுஜ தாஸன்,
முரளீ பட்டர்-
இத்தொடர் குறித்த தாங்களின் அபிப்பராயங்களை எழுதுங்கள். 
 
Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: