Srirangapankajam

August 3, 2010

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 32

Filed under: Sri Rangaraja Sthavam — srirangapankajam @ 7:04 am

::ப்ராணாயாமம் ::

ப்ராணயாமம் என்பது சுவாசத்தினைக் கட்டுப்படுத்துவது.

சுவாசம் என்பது மூன்று செயல்பாடுகள் உடையது.

வெளிக்காற்றின் உபயோகத்தோடு மூக்கினால் காற்றை உள்ளே இழுத்துக் கொள்வது – இது “நிஷ்வாஸம்“ எனப்படும்.

உள்ளேயிருக்கும் காற்றினை வெளியேற்றுதல் “ உச்வாஸம்“ எனப்படும்.

இதன் இரண்டிற்கும் நடுவே சிறிது நேரம் மூச்சுக்காற்றை நிலைநிறுத்துதல் “ஸ்தம்பனம்“ எனப்படும்.

இதில் நிஷ்வாஸம் – “ரேசகம்“ என்றும்
உச்வாஸம் – “பூரகம்“ என்றும்
ஸ்தம்பனம் “கும்பகம்“ என்றும் அழைக்கப்படுகின்றது.

இதில் “ரேசகம் “ – அதமம் என்றும்,
“பூரகம்“ – மத்திமம்“ என்றும்
“ஸ்தம்பனம்“ – உத்தமம் என்றும் சொல்கின்றார் சாண்டில்யர்.

(இது இப்போது விஞ்ஞானப்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வேகவேகமாக சுவாசத்தினை உள்ளிழுத்தலும் வெளியேற்றுதலும் ஆயுளைக் குறைக்கும் என்றும் எவ்வளவுக்கெவ்வளவு உள்ளிழுத்த மூச்சுக்காற்றினை நிறுத்தி நிதானமாக சுவாசிக்கின்றோமோ ஆயுள் விருத்தி என்பதனை யோகம் கற்பிக்கின்றவர்களும், ஆழ்நிலை தியான பயிற்சியாளர்களும் வலியுறுத்துகின்றனர். நமது ஆயுளானது நாம் விடும் சுவாசித்தினைக் கொண்டே கணக்கிடப்படுகின்றது.)

சரி..! எந்தளவு காற்றினை உள்வாங்கலாம்.., அடக்கலாம்.., வெளியிடலாம்..?

இது தெரிந்து கொள்வதற்கு ஒரு கால அளவு உள்ளது. அது “மாத்திரை“
எனப்படும்.

இதனை எப்படி கணக்கிடுவது…?

உங்களது முழங்காலைச் சுற்றி வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இன்றி நிதானமாக உங்கள் கைவிரல்களால் ஒரு சொடுக்குப்போடும் காலத்தின் அளவே ஒரு மாத்திரையாகும்.

இப்போது சுவாசத்திற்கு வருவோம்.

ரேசகம் – 12 மாத்திரை அளவு
பூரகம் – 24 மாத்திரை அளவு
கும்பகம் – 36 மாத்திரை அளவு.

இந்த கணக்கின்றி வெறுமனே காற்றினை உள்வாங்கி வெளியிடுவதற்கு “ரேசகம்“ அதாவது “அதமம்“ என்றே பெயர்.

பிராணனை அடக்க விரும்புவன் இந்த மாத்திரைகளை நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும். மாத்திரைகள் மாறினாலோ அல்லது குறைந்தாலோ அது பயன் தராது. அது அதமம்.

ரேசகம் செய்யும்போது வலதுகை விரல்களாலே இடது நாசிகா துவாரத்தினை மூடிக்கொண்டு நாபிதேசத்தில் இருக்கக்கூடிய “ஸ்ரீமந் நாராயணனை“ மூலமந்திரத்தினால் தியானம் செய்தவண்ணம் குறிப்பிட்ட மாத்திரையளவு காற்றினை உள்வாங்கவேண்டும்.

இந்த ப்ராணயாமம் இரு வகைப்படும்.
அவை (1) அகர்ப்பம் (2) சுகர்ப்பம்.

ஜபம் மற்றும் தியானம் ஆகிய ஏதும் இல்லாது செய்யும் ப்ராணயாமம்
“அகர்ப்பம்“ – இவைகளை உடையது “சுகர்ப்பம்“.

அகர்ப்ப ப்ராணயாமத்தினைக் காட்டிலும் “சுகர்ப்ப“ ப்ராணயாமம் நூறு மடங்கு உயர்ந்தது.

Blog at WordPress.com.