Srirangapankajam

September 29, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 19

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 8:23 am

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 19
24-09-2009

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
இரண்டாம் அத்யாயம்
ஸ்நான விதி

மீண்டும் ஒரு நெல்லிக்காய் அளவு நதியினில் நாம் குளிக்குமிடத்திலுள்ள மண்ணை எடுத்து சூரிய கிரணங்களிடத்துக் காண்பித்து, ஒருக்கால் சூரியகிரணங்களை மேககூட்டம் மூடி அந்த கிரணங்கள் இல்லையென்றால் மனதில் அந்த மண்ணின் மீது சூரிய கிரணங்கள் படுவதாக மனதினால் பாவித்து, நம் உடலின் அனைத்து அங்கங்களையும் அந்த மண் கொண்டு தொட வேண்டும். பின்னர் கவச மந்திரம் சொல்லி நம் அங்கங்கள் மற்றும் கையிலுள்ள மண்துகள்களைப் போக்கிக் கொள்ளவேண்டும்.

பின்னர், வலது கையினால் ஒரு தர்பமுஷ்டியை எடுத்துக் கொண்டு ஒடும் ஜலத்தில் “அப்பு சூக்த“ மந்திரத்தினால், ஜலத்தினைச் சுற்றி பின்பு உள்ளங்கைகள் இரண்டையும் ஒன்றாய் குவித்து கும்பம் போல் வைத்துக் கொண்டு, அப்படியே இருகைகளினாலும் ஜலம் எடுத்து தலை, காதுகள், கண்கள், முகம் மற்றுமுள்ள அங்கங்களை ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும். பின்னர் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும். ஜ்யோதிர்மயமான நம் ஹ்ருதய புண்டரீகத்தில் இருக்கும் ஹரியைத் தியானம் செய்ய வேண்டும். புருவ மத்தியில் எம்பெருமானைத் த்யானிக்கவும்.

இது “அகமர்ஷண ஸ்நானம்“ எனப்படும். இது அனைத்து பாபங்களையும் போக்கக் கூடியது.

Advertisements

September 24, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 18

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 11:38 pm

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 18
19-09-2009

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
இரண்டாம் அத்யாயம்
ஸ்நான விதி

நதியினில் நீராடுவதற்கு முன் முதலில் ஆசமனம் செய்ய வேண்டும். இதன் பிறகு நீரில் மூழ்க வேண்டும்.
நம் சரீரம் நன்கு நனைந்த பின்பு முதலில் கோமயம் கொண்டு உடம்பை தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மண் கொண்டு தேய்த்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் பாசிப்பருப்பு அல்லது உளுந்து ஆகியவைகளின் மாவுப்பொடியினைக் கொண்டு தேய்த்துக் கொள்ள வேண்டும். கவச மந்திரத்தினைச் சொல்லியபடியே நீராட வேண்டும். பின்பு ஹ்ருண் மந்த்ரத்தினை உச்சரித்தப்படியே கந்த பொடிகளைக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.

ஒரு நெல்லிக்காய் அளவு நதியிலுள்ள ஈரமண்ணை எடுத்து இடது கை மணிக்கட்டின் அருகில் வைத்துக் கொண்டு அஸ்த்ர மந்த்ரம் மற்றும் மூல மந்த்ரம் முதலானவற்றை உச்சரித்தப்படி அந்த மண்ணை ஸ்பர்ஸித்து, அந்தமண்ணில் ஒரு பாகத்தினை ஒரு கையில் எடுத்துக் கொண்டு மீதமுள்ள ஒரு பாகத்தினை நாம் நிற்கின்ற இடத்தினில் விட வேண்டும். கையிலுள்ள ஒரு பாகத்தினை இரண்டாக பண்ணி இதில் ஒரு பாகத்தினை நதியினில் சேர்த்தும், மீதமுள்ள ஒரு பாகத்தினை உடம்பினை தேய்த்து பின்னர் நீராடுதல் வேண்டும். இம்மாதிரி செய்வதனால் அந்த தீர்த்தத்தினில் கங்கை, யமுனை, ப்ரயாகை, சக்ர தீர்த்தம், ப்ரபாயம், புஷ்கரம் முதலான தீர்த்த சக்திகள் அனைத்தும் அங்கே சூக்கும ரூபத்தில் வந்து விடும்..!
மேலும் ஸ்நானத்திற்கு உண்டான இடைஞ்சல்கள் பலமற்று போய்விடும்..

September 19, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 17

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 12:12 pm

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 17
10-09-2009

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
இரண்டாம் அத்யாயம்
ஸ்நான விதி

பல் துலக்கும் குச்சியானது 12 அங்குலமுள்ளதாக இருக்கவேண்டும். அது வளைந்தோ அல்லது முடிச்சுக்களுடன் இருத்தல் கூடாது.
பல் துலக்குவதற்கு முன், கைகால்கள் அலம்பிக்கொண்டு, ஆசமனம் செய்து,
கிழக்கு முகமாகவோ அல்லது வடக்கு முகமாகவோ பல்துலக்க வேண்டும்.

குச்சியின் மிருதுவான பாகத்தினைக் கடித்து பல்துலக்க வேண்டும். குச்சியிலிருந்து வெளிப்படும் துவர்ப்பான அல்லது கசப்பான சாற்றினை சுவைத்தப்படி பல் துலக்கச் சொல்கின்றார்.

குச்சி கிடைக்காவிட்டாலோ அல்லது அசக்தமாய் இருந்தாலோ ஆட்காட்டி விரலினால் 12 முறை ஜலத்தினால் பல் துலக்க வேண்டும்.

நாக்கு வழிப்பதற்கு 16 அங்குல நீளமுள்ள குச்சி வேண்டும். முடிச்சுடன் கூடாது. உயர்ந்த உலோகங்களால் செய்யப்பட்ட குச்சியாலும் நாக்கு வழிக்கலாம்.

சாண்டில்யர் அடுத்து “ஸ்நானம்“ பற்றிச் சொல்லும் போது, “ஒரு ஊரில் குளங்கள் இருக்கும்போது கிணற்றில் ஸ்நானம் செய்தல் கூடாது மற்றும் எந்த குளத்தில் அதிகம் நீர் உள்ளதோ அந்த குளத்தில் குளிக்க வேண்டும் எனவும், அந்த ஊரில் ஓடுகின்ற நதியிருக்குமாயின் நதியில்தான் குளிக்க வேண்டும்“என்றும் குறிப்பிடுகின்றார்.

இந்த நதிகளைப் பற்றி சில குறிப்புகளைச் சொல்கின்றார்.

எந்த நதியானது சமுத்திரத்தில் சென்று கலக்கின்றதோ அந்த நதி மிகச் சிறந்த புண்ய நதியாம்!

இதில் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பிரவாகம் எடுத்து ஓடும் நதி மிகமிகச் சிறந்த புண்ய நதியாம்!

இவற்றில் எந்த பக்கத்து நதிக்கரை நித்ய அனுஷ்டானம் பண்ணுவதற்கு ஏற்றது..?

கிழக்கு நோக்கி ஓடும் நதிகளின் தென்கரை வடக்குக் கரையினைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தது.

வடக்கு நோக்கி ஓடும் நதிகளுக்குக் கிழக்குக் கரை நல்லது!

இதில் ஒவ்வொன்றைக் காட்டிலும் சிறந்தவற்றில் 10 மடங்கு பலன் அதிகமாம்!

நம் பூர்வாச்சார்யர்களை நாம் தற்சமயம் நினைவு கூறுவோம்..!

ஸ்ரீரங்கத்தில் ஓடும் இரு நதிகளுமே வடக்கிலிருந்து கிழக்கு நோக்கித்தான் பாய்கின்றது. அதில் நம் பூர்வாச்சார்யர்கள் அனைவருமே கொள்ளிடக்கரையின் தென்கரையில் தற்சமயம் சிதிலமடைந்து காணாமலே போய்விட்ட ஆதிகேசவ பெருமாள் சன்னிதியினைச் சுற்றியுள்ள (மணவாள மாமுனிகள் திருவரசு இருந்த இடம்.!) சதுர்வேதி மங்கலத்தில் அன்றாட அனுஷ்டானங்களுக்கு ஏதுவாக வசித்து வந்துள்ளார்கள்! அவர்கள் எவ்வளவு தெளிவான வாழ்க்கை வந்துள்ளனர் என்பதினை நினைக்கும்போது மனம் பூரிப்படைகின்றது..!

September 10, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 16

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 8:20 am

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 16
04-09-2009

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
இரண்டாம் அத்யாயம்
ஸ்நான விதி

இயற்கையோடு மனிதர்கள் ஒன்றி வாழ்ந்துள்ள காலகட்டத்தில் எழுதப்பட்டமையினால் இதில் கூறப்பட்டுள்ள பல விஷயங்கள் நமக்கு அதிசயமாக உள்ளது.

செளசம் (மலஜலங்கழித்தல்) பற்றிச் சொல்லும் போது
பகலிலும், சந்த்யாகாலங்களிலும் மலஜலங்கழிப்பதனால் வடக்கு நோக்கி அமர்ந்தும், இரவில் தெற்கு நோக்கி அமர்ந்தும் கழித்தல் வேண்டும். சௌசத்திற்கு பின் மண் இட்டுக் கொள்வதற்காக மண்ணை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த மண்ணை தெய்வஅக்னியுள்ள இடம், மலை, மாட்டுக்கொட்டில், நதியிலிருந்து, மசானத்தில், புற்றில், எலிவலை, மரத்தடி, கோவிலருகில், ஜலத்தின் நடுவில், வழிப்பாதையில் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கக் கூடாது.

அந்த மண்ணில் பிராணிகளின் எலும்புக்கூடு, உமி, சாம்பல், சிறு மரக்கட்டைகள், கரித்துண்டு ஆகியவைக் கலந்திருக்கக்கூடாது.

நதிக்கரையோரம் மேலேச் சொன்னவற்றைக் கருத்தில் கொண்டு நல்ல மண்ணாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜல பாத்திரத்தினை “அஸ்த்ர“ மந்த்ரம் சொல்லி எடுக்க வேண்டும். (இங்கு சில மந்த்ரங்களின் பெயர் மட்டும் கூறியுள்ளேன் – அவரவர் ஆச்சார்யர்களைக் கேட்டு இந்த மந்திரங்களை அறிந்து கொள்ளவும்…) மண் எடுக்கும் போதும் அஸ்திர மந்திரம் சொல்லி சேகரித்துக் கொள்ளவும்.

வன்னித்துளிர், அத்தி, அரசம், இச்சிமரம், தர்ப்பம், மூங்கில்,
மாமொட்டு, நாயுருவி, மருதம் இதில் எது சாத்தியமோ
அவற்றையெல்லாம் சேகரிக்க வேண்டும். இதில் சில பல் துலக்குவதற்கும், மண்இட்டுக்கொள்ளும் போது பயன்படுத்திக் கொள்வதற்கும், வைத்துக் கொள்ளவும்.

September 4, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 15

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 11:04 pm

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 15
29-08-2009

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
இரண்டாம் அத்யாயம்
ஸ்நான விதி

பகவானை ஆராதனம் செய்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை நியமங்களை இந்த இரண்டாம் அத்யாயத்தில் விவரிக்கின்றார் ஸ்ரீசாண்டில்ய மஹரிஷி..!

ஆராதகன் பிரம்ம முஹூர்த்தத்தில் (அதிகாலை -சூரியன் உதிக்கும் முன்பு) எழவேண்டும்.

படுக்கும் போதும், எழும் போதும்

“ஓம் நமோ வாஸூதேவாய நம: சங்கர்ஷணாய தே (ச)|
ப்ரத்யும்னாய நமஸ்தேஸ்து – அனிருத்தாய தே நம: ||

என்றும்

“நமோ நம: கேசவாய, நமோ நாராயணாய ச
மாதவாய நமஸ்ச்சைவ, கோவிந்தாய நமஸ்தத:
விஷ்ணவே த நமஸ்குர்யாத் நமஸ்தே மதுசூதன
நமஸ் த்ரிவிக்ரமாயத, வாமனாய நமஸ்தத:
ஸ்ரீதராய நமஸ்ச்சாத, ரிஷிகேசாய ஓம் நம:
நமஸ்தே பத்மநாபாய, நமோ தமோதராய ச”

என்று மேலே சொல்லப்பட்ட பகவானின் 16 நாமாக்களையும் (முதல் ஸ்லோகத்தில் நான்கு நாமாக்கள் – இரண்டாவது ஸ்லோகத்தில் 12 நாமாக்கள்)
மற்றும் எம்பெருமானின் தச அவதாரங்களின் நாமாக்களையும், சொல்லியபடியே படுக்க வேண்டும் – எழ வேண்டும்.

இந்த நாமாக்களை மனதிற்குள்ளேச் சொல்லக்கூடாது.
உரத்தகுரலில் சந்துஷ்டியுடன் சொல்ல வேண்டும்.
கீர்த்தனையைப் போல உரத்து பாடவும் செய்யலாம்.
(இவ்வாறு சொல்வதால் நாம் மட்டுமின்றி அருகில் இருப்பவரும் இந்த பகவானின் நாமாக்களைக் கேட்பார்கள் – அவர்கள் மனதிலும் பதியும் அல்லவா…?)

படுக்கையிலிருந்து எழும் போது, “ஹரி.., ஹரி…,“ என்று
சொல்லியபடியே எழ வேண்டும்.

அவ்வாறு எழும் போது, “நம: க்ஷிதிதராய“ என்று சொல்லிக் கொண்டு முதலில் இடது காலை பூமியில் பதித்து எழுதல் வேண்டும்..“

இதன் பிறகு “சௌச ப்ரகாரம்“ (மலங்கழித்தல், சுத்தம் செய்தல்) சொல்கின்றார். இதனை விவரணமாக எழுதுதல் என்பதும் கடினம் – கடைப்பிடித்தல் என்பது ஏறத்தாழ தற்கால சூழ்நிலைக்கு இயலாத ஒன்று – அந்த காலத்தில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்துள்ள ஒரு காலகட்டத்தில் இதனையெல்லாம் கடைப்பிடித்து வாழ்ந்துள்ளனர் நம் பெரியோர்கள். ஒரு சிறிய உதாரணம் சொல்கின்றேன். மலத்தினை நேரடியாக பூமியின் மீது கழித்தல் கூடாது என்கின்றார். புற்செடிகளைப் பிடுங்கி பூமி மீது பரப்பி அதன் மீது கழிக்கச் சொல்கிறார்..

தற்போதுள்ள கால சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு
நமக்கு ஒத்துவரக்கூடிய செயல்கள் சிலவற்றைக் காண்போம்..!

Create a free website or blog at WordPress.com.