Srirangapankajam

October 22, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 22

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 4:37 pm

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 22
20-10-2009

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
இரண்டாம் அத்யாயம்
ஸ்நான விதி

இயற்கைச் சீற்றம், வெள்ளப் பெருக்கு, ஏதேனும் நதி தீரத்திற்குப் போக முடியாத அளவுக்குக் கஷ்டங்கள் அல்லது நமக்குத் தள்ளாமை – அப்போது என்ன செய்யலாம்….?

கை மற்றும் கால்களை நன்கு அலம்பிக் கொண்டு ஆசமனம் செய்யவும். 10 திக்குகளிலும் (8 திக்குகள், ஆகாயம் + பூமி) ஜலத்தில் ப்ரோக்ஷித்து சுத்தி செய்யவும்.
நடுவில் அமரவும். மூலமந்திரம் சூழ்நிலைக்கேற்ப ஜபம் செய்யவும். பின்னர் பிராணாயாமம். பிறகு பூதசுத்தி செய்யவும். இதற்கு மந்திர ஸ்நானம் என்று பெயர்.
சிரத்தையுடன் செய்வோமாயின், பிரயாகை முதலான தீர்த்த ஸ்நானத்தினைக் காட்டிலும் இது மிகவும் உயர்ந்தது.

தியான ஸ்நானம்

மேற்கூறியவாறு செய்து முடித்தவுடன் ஆகாயத்தில் மந்த்ரமூர்த்தியாய் இருக்கும் ஸ்ரீமந் புண்டரீகாக்ஷனை “ஓம் புண்டரீகாக்ஷாய நம:” என்று தியானித்து தேஜோமயமான அவனது திருவடிகளில் இருந்து தீர்த்தம் பெருகி நமது சிரஸ்ஸின் பிரும்மரந்தரத்தின் வழியே நமது சரீரத்தினுள் அந்த புண்ணிய தீர்த்தம் விழுவதாக மனதினால் பூரணமாக தியானிக்கவும்.
இது தீர்த்த ஸ்நானம், மந்த்ர ஸ்நானத்தினைக் காட்டிலும் மிக மிக உயர்ந்தது. ஒரே ஒரு விஷயம் நம் மனம் ஒருநிலைப்பட்டு, வேறெந்த சிந்தனையுமில்லாது ஆத்மார்த்தமாக செயல்படுதல் மிக முக்கியம்.

திவ்ய ஸ்நானம்

சூர்யனின் கிரணங்களோடு கூடிய மழையில் ஸநானம் செய்வது.

பஸ்ம ஸ்நானம்

கோமயம், ஸமித்துக்களால் எரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட தூய வெண்மையான பஸ்மத்தில், நெற்றி முதலான அங்கங்களில் அந்தந்த ஸ்தானத்திற்குரிய மந்திரங்களைச் சொல்லி ஊர்த்வ புண்டரமாக இட்டுக் கொள்ளுதல். (சாண்டில்யரின் காலத்தில் நாம் இப்போது இட்டுக் கொள்ளும் திருமண் என்பது வழக்கத்தில் இல்லை..!)

வாயவ்ய ஸ்நானம் அல்லது கோதூளி ஸ்நானம்

கோமாதா செல்லும் போது அதன் குளம்பிலிருந்து கிளம்பும் கோதூளிகள்(மண் துகள்கள்) நம் சரீரத்தில் படுவது.

பார்த்திவ ஸ்நானம்

உயர்ந்த மலையுச்சி, புண்ணிய க்ஷேத்திரங்கள் முதலான இடங்களில் பெறப்பட்ட வெண்மையான மண்ணினால் கேசவாதி நாமங்களைச் சொல்லி நம் அங்கங்களில் ஊர்த்வபுண்டரமாக இட்டுக் கொள்ளுதல். இது அனைத்து பாவங்களையும் போக்கக் கூடியது.

இந்த ஏழு விதமான ஸ்நானங்களில் ஏதாவது ஒன்றை அவஸ்யம் செய்யவேண்டும்.

இந்த ஸ்நானம், ஆசமனம், பிராணயாமம் முதலியவைகளால் சரீரத்தின் உள்ளும், புறமும் தூய்மையானவனாய் செய்யப்படும் கிரியைகள் அனைத்தும் நிச்சயமாக பலனைத் தரும்.

இத்துடன் இரண்டாம் அத்தியாயம் “ஸ்நானவிதி“ முடிந்தது.

(ஒரே ஒரு கொசுறுத் தகவல் சமீபத்தில் செய்திகளில் படித்தது. சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகால்களை நன்கு அலம்பி சுத்தம் செய்து கொண்டு சாப்பிட்டால் பன்றிகாய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் அண்டதாம். விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..! இதனை அன்றே நம் சாஸ்திரங்கள் “ஆசமனம்” என்ற ஒரு செயல்முறையில் சொல்லிவிட்டனர்…! )

Advertisements

October 9, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 21

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 10:34 am

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 21
09-10-2009

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
இரண்டாம் அத்யாயம்
ஸ்நான விதி

யார் யாரைத் தியானித்து ஜபிக்க வேண்டும்…?

முதலில் ஆஸநத்தில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து,

1) இந்திரன் முதல் விஷ்ணு வரையிலும்

2) வாஸூதேவன் தொடங்கி அநிருத்தன் வரையிலும்

3) கேசவன் தொடங்கி தாமோதரன் வரையிலும்
(த்வாதசம்)

4) பரமாத்மா

5) ப்ருதிவ்யாதி பஞ்சபூதங்கள் (நீர் தொடங்கி ஆகாயம்
வரை)

6) ரிஷிகள் வரை தியானித்து ஜபம் செய்க.

7) பித்ருக்களைத் தியானித்து தெற்கு நோக்கி அமர்ந்து எள் கொண்டு அனைவருக்கும் தாந்தரீக தர்ப்பணம் செய்யவும்.

பின்னர் பவித்ரம் விசர்ஜனம் – ஆசமனம் – திக்குகள் அனைத்திற்கும் அந்தந்த திக்கு நோக்கி நமஸ்காரம் செய்யவும்.

திக்பந்தனம் செய்து, பிராணயாமம் முடித்து, பூதசுத்தி செய்யவும்.

ஜலமத்தியில் எம்பெருமானை தியானித்து, மானஸீகமாக எல்லா உபசாரங்களையும் செய்யவும். முடியுமாயின் புஷ்பங்களால் மானஸீகமாய் தியானித்துள்ள எம்பெருமானிடத்து அர்ச்சிக்கவும்.

எள், ஸமித்து, பசுநெய் கொண்டு ஹோமம் செய்க.

சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்க.

இத்துடன் தீர்த்த ஸ்நானம் நிறைவுற்றது.

இவ்விதம் செய்யும் கார்யகிரமமானது, நம் குறைபாடுகள் அனைத்தையும் நீக்கி, நிறைவடையச் செய்யும்.

சரி..! இதுவரையில் நதிக்கரையினில் நாம் அன்றாடம் செய்யக்கூடிய கார்யகிரமங்கள் அனைத்தையும் பார்த்தோம்..!

இயற்கைச் சீற்றம், வெள்ளப் பெருக்கு, ஏதேனும் நதி தீரத்திற்குப் போக முடியாத அளவுக்குக் கஷ்டங்கள் அல்லது நமக்குத் தள்ளாமை – அப்போது என்ன செய்யலாம்….?

Quote

sriram rengan

ஸ்வாமீ,
அடியேனுடைய மந்த மதிக்கு இவ்வாறு தோன்றுகிறது, காவிரில தீர்த்தமாடி, சந்த்யாவந்தனாதி (தேவ, ரிஷி) பித்ரு தர்பணம் வரை நதி கரையிலேயே முடித்து, கலசத்தில் தீர்த்தம் எடுத்துக்கொண்டு ஆத்துக்கு சென்று , பூத சுத்தி , கலச ச்னபணம் பண்ணி (மூல மந்த்ரம் ஆவாகனம்) புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனம் , மூலமந்த்ரம் சொல்லி ஹோமம் செய்து, அந்த கலச தீர்த்தத்தை கொண்டு ஆத்து பெருமாளுக்கு திருவாராதனம் பண்ண வேணும்.
இப்படி செய்வது தான் இன்றளவும் சாத்யம் என்று தோனுகிறது.
நதிக்கரை இன்று ஹோமம் செய்யும் நிலையில் இல்லை, நதியில் ஓடும் தீர்த்தத்தில் பெருமாளை ஆவாகனம் செய்யவேண்டும் என்றல்
நாம் ஹோமம் முடிக்கும் வரை யாரும் நதியில் இறங்க முடியாது !!!
திருத்தி பணிகொள்ள பிரார்த்திக்கிறேன் .
அடியேன் ஸ்ரீராம ராமானுஜதாசன்.

unquote

அடியேன் ஸ்வாமி! சாண்டில்யர் இந்த ஸம்ஹிதையில் பலவற்றை அப்போது நிலவியுள்ள சூழ்நிலையினை அடிபபடையாகக் கொண்டு எழுதியுள்ளார். ஒரு சில காலத்தினால் மறைந்தும் கூட போயிருக்கலாம்.
உதாரணமாக “இந்திரன் முதல் விஷ்ணு வரை“ என்று எழுதியுள்ளார். இது என்ன கிரமம் என்றே தெரியவில்லை..!. பூர்வாச்சார்யர்களின் வியாக்கியானம் எதுவும் கிடைக்காததினால் இதனை எழுதும் எனக்குச் சற்று கடினமாகவும் உள்ளது. அதே சமயம் ஸம்ஹிதையில் உள்ளதைத் தெரிவிக்காமலும் இருக்க முடியவில்லை..! யாரேனும் தெரிந்திருப்பார்களோ அல்லது ‘இதன் உண்மையான பொருள் இதுதான்..!’ என்று சொல்வார்களோ என்ற ஆசைதான் காரணம்..! தாங்களின் கருத்துக்கு நன்றி..! – முரளீ பட்டர்-

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 20

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 6:33 am

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 20
29-09-2009

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
இரண்டாம் அத்யாயம்
ஸ்நான விதி

ப்ராணயாமம் செய்து எழுந்து சூர்யமண்டலத்தினை இரு கை விரல்களையும் கோர்த்து (இந்த விரல்களைக் கோர்ப்பதற்கு ஒரு முறையுள்ளது. பெரியோர்களிடம் கேட்டு அறிக.!) இருகைவிரல்களுக்கும் இடையே தரிசிக்கவும்.

கரையேறி ஈரவஸ்திரத்தினைக் களைந்து மாற்று வஸ்திரம் உடுத்தி, நம் வலதுபுறமாக அனைத்து சிகையையும் தள்ளி சிகையினைப் பிழிந்து அந்த தீர்த்தத்தினை சேகரித்து, ‘அஸ்த்ர’ மந்திரம் சொல்லி அந்த தீர்த்தத்தினை பூமியினில் ப்ரோக்ஷிக்கவும். இது அனைத்து தோஷங்களையும் போக்கவல்லது.

சிகையினை முடிந்து கொண்டு ஆசமனம் செய்க.
பின்னர் நித்ய தர்ப்பணம் செய்க. கட்டை விரல்கள் மூலம் ரிஷி தர்ப்பணம். மற்ற விரல்களின் மூலமாக கையை நேராக வைத்து தேவ தர்ப்பணம், கட்டை விரலுக்கும் இதர விரல்களுக்குமிடையே பித்ருதர்ப்பணம் என்ற கிரமத்தில் செய்ய வேண்டும்.
ரிஷி தர்ப்பணம் முடிந்தவும் தீர்த்தம் சிறிது பருக வேண்டும். தேவ தர்ப்பணம் முடிந்தவுடன் அங்கந்யாஸம் செய்க. பித்ரு தர்ப்பணம் முடிந்தவுடன் தேகத்தினைத் துடைத்துக் கொள்க. இந்த தர்ப்பணாதிகளை விருப்பப்பட்டால் செய்யலாம்.

வலது கையினால் ஜலத்தினை சேகரித்து, நாசிக்கு அருகில் கொண்டுவந்து, ‘ஹ்ருண்’ மந்திரத்தினைச் சொல்லி முகர்ந்து ‘கவச’ மந்த்ரம் சொல்லி பின்பு ‘அஸ்த்ர’ மந்த்ரம் சொல்லி பூமியினில் தெளிக்கவும்.

பின்னர் இரு கைகளினாலும் தேஹந்யாஸம் செய்க.!

ஜலத்தினைக் கையில் அஞ்சலி செய்வது போல் எடுத்துக் கொண்டு சூர்யமண்டலத்தின் நடுவில் எம்பெருமான் வீற்றிருப்பதாக தியானித்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஆஸநத்தில் அமர்ந்து, கையில் பவித்ரம் தரித்து, ஆஸநத்தில் அமர்ந்து ஜபிக்கத் தொடங்க வேண்டும்.

யார் யாரைத் தியானித்து ஜபிக்க வேண்டும்…?

Create a free website or blog at WordPress.com.