Srirangapankajam

April 29, 2009

Pesum Arangam – 67

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 12:53 pm

CHAPTER-67
27.04.09

ஸ்ரீபாதுகைகள் பர, வ்யூஹ ரூபத்திலிருந்தாலும், ஸ்ரீபகவான் ராமனாக மனுஷ்ய அவதாரம் எடுத்த காலத்திலும், இப்போது ஸ்ரீரங்கவிமானத்தில் அது அர்ச்சவதாராமாயிருக்கும் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளின் கீழ் இணைபிரியாதுயிருக்கும் போதும் அதனுடைய ரக்ஷிக்க்க்கூடிய சக்தி எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் தொய்வில்லாதது. குன்றாத வலிமை கொண்டது. அதனால்தான் புத்திசாலியான பரதன் அதனை இராமனிடத்துப் பிரார்த்தித்துப் பெற்றான். நம்பெருமாளின் திவ்யபாதுகைகள் எந்த ஒரு சூழ்நிலையிலும் மிகுந்த வலிமையோடு விளங்கக் கூடியது.

இது போன்றுதான் நித்யசூரிகளாய் இருந்தபோதும், ஸதாச்சார்யர்களாய், ஆழ்வாராய் அவதரித்த காலத்திலும், இப்போது அர்ச்சாரூபியாயிருக்கும் போதும், ஆழ்வார் ஆச்சார்யர்கள் குறைவேயில்லாதவர்கள். மிகுந்த மஹிமைப் பொருந்தியவர்கள். ஜீவன்களுடைய ஸர்வ தொந்திரவுகளையும் போக்கி, ஸர்வ அபீஷ்டங்களையும் தரவல்லவர்கள். ஸர்வ லோகங்களிலும் ஸ்துதி, கீர்த்தன, வந்தானாதிகளால் பூஜிக்கத் தக்கவர்கள்.

இவர்களுடைய பிரார்த்தனையால்தான் பகவான் நம்மிடையே இருக்கின்றார். இருக்குமிடம் தேடி வருகின்றார். இவர்களுடைய உபதேசங்களினால்தான் ஆஸ்ரிதர்களின் மனம் தெளிவடைகின்றது.
மனம் இருட்டடையாமல் நற்குணங்களால் நிரம்புகின்றது. பெருமாள் வந்தமரும் மகரந்தமாய் மாறுகின்றது.

ஆச்சார்யன் தங்களுடைய தேஜோமயமான ரூபத்தினாலும், பரம கருணையினாலும், வாத்ஸல்யத்தினாலும், எல்லாரிடத்திலும் அவர்களுடைய தாய் தந்தையரைக் காட்டிலும் வெகுவாக அன்பு காட்டி அவர்கள் கடைத்தேற வழிகாட்டுபவர்கள்.

சரம் அசரம் ச நியந்து: சரணாவநிதம்பரேதரா சௌரே
சரம புருஷார்த்தசித்ரௌ சரணவநி! திசஸி சத்வரேஷுஸதாம் !!950 !!

சரணாவநி=பகவானுடைய திவ்ய சரணங்களைக் காப்பாற்றும் பாதுகையே!-
அனிதம்பரேதரா=இந்த காரியத்தினை முக்கிய கவனத்துடன் கவனித்துக் கொண்டு – சரம்=ஜங்கம வஸ்துக்களையும் – அசரம்=ஸ்தாவர வஸ்துக்களையும் – நியந்து:=ஏவுகிறவராகயிருக்கின்ற – சௌரே=ஸ்ரீரங்கநாதனுடைய — சரம=கடைசியான – புருஷார்த்தம்=புருஷார்த்தத்தினுடைய – சித்=ஞானத்தை – ரௌ=காப்பாற்றுகிறவராகயிருக்கின்ற – சரணௌ=திருவடிகளை – ஸதாம்=முமுக்ஷக்களுடைய – ஸத்வரேஷு=வீட்டினுள் (பூஜாபிரதேசங்களில்) — திசஸி=அழைத்துச் செல்கிறாய்.

பரம ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களது கிரஹங்களில் பகவானையும் பாதுகையையும் அர்ச்சாரூபமாக ஆராதனம் செய்வார்கள். மிகவும் அகிஞ்சனரான அந்த ஸ்ரீவைஷ்ணவரின் பூஜா அறைகளில் அவர்களால் ஆராதிக்கும்படி அரங்கனை பரமசுலபமாக எழுந்தருளப்பண்ணிக் கொண்டு வந்து விடுகின்றாய்! உனக்கும் உன்னோடு எழுந்தருளியிருக்கும் பெருமாளுக்கும் அவர்கள் செய்யும் சிரத்தையான ஆராதனங்களினால், அவர்களுக்கு தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகிய நான்கு புருஷார்த்தங்களுள் முதல் மூன்றில் புத்தி செலவிடாமல் பண்ணி, கடைசி புருஷார்த்தமாகின்ற மோக்ஷ விஷயத்தில் ஞானத்தையும், விருப்பத்தையும் கொடுத்து அவர்களை இப்பிறவியிலிருந்து காப்பாற்றி விடுகின்றாய்! உன் அனுக்ரஹத்தினால்தான் பகவானது ஸம்பந்தமும், மோக்ஷ உபாயமும் ஆஸ்ரிதர்களுக்கு சாத்தியமாகின்றது. உன்னுடைய இந்த தயாகுணமானது ஆச்சர்யகரமானது!.

ஸ்ரீரங்கநாதன், எப்படிப்பட்ட பாபிகளையும் காப்பாற்றி கரைசேர்ப்பதிலேயே ஊக்கமுடைய பாதுகையை, இந்தவொரு விஷயத்தில் தன்னை எதிர்பார்க்காதபடிக்கு, பாதுகைக்கு ஸர்வ சுதந்திரமும் அளித்து, அந்த பாதுகைகளே தானே ரக்ஷிக்கும்படியான எஜமானியாக செய்து, இந்த ஒரு விஷயத்தில் பாதுகையின் இஷ்டத்தையெல்லாம் அங்கீகரித்துக் கொண்டு, அதற்கு ஆதரவாகவே எழுந்தருளியுள்ளார்.

Advertisements

April 24, 2009

Pesum Arangam – 66

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 6:06 pm

CHAPTER-66
24.04.09

பாடாகாளீ ஜ்ஜாட துச்சே காதாபாநாய புல்லகே !
ஸமாதௌ சடஜிச்சூடாம் வ்ருணோஷி ஹரிபாதுகே

பாடா=அழிக்கமுடியாத – காதா=பிரபந்தங்கள் – –
ஸமாதௌ=மனதிலுள் பகவானைப் பற்றிய விடாத
தியானம் – சடஜிச்சூடாம்=ஸ்ரீநம்மாழ்வாருடைய சிரஸ்ஸை – வ்ருணோஷி=அடைகின்றாய்.

(இந்த ஸ்லோகத்தில் ஒரு முறை வந்த அக்ஷரமானது மீண்டும் வராது. இதனைத் தமிழில் எழுதியதினால் ஒரு அக்ஷரம் திரும்ப வருகின்றது. ஆனால் ஸம்ஸ்கிருதத்தில் வராது.)

ஸமாதி நிலை என்று தியானத்தில் ஒரு உன்னதமான நிலையுண்டு. பகவான் ஒருவனை மட்டும் மனதில் நினைத்து இடைவிடாது தியானிக்கும் மஹனீயர்கள் இந்த நிலையினையடைவர்.

தியானத்தில் இந்த ஸமாதி நிலையை ஒருவன்
அடையும்போது, சாதாரணமான ஜீவன்களை
வருத்தியெடுக்கும் மாளாத வல்வினைகளால்
ஏற்படுகின்ற துக்கங்கள் ஏதும் மனதில் தோன்றாது.
பாபவர்க்கங்கள் நசித்துப் போகும். அந்த ஒரு
நிலையில் பகவானின் ஸ்வரூபம், ரூபம், குணம்,
விபவங்கள் அனைத்தும் நேரில் அனுபவிப்பார்கள்.

இந்த உன்னதமான நிலையில்தான் பேரானந்தமும்,
ஜ்ஞானபிரகாசமும் உண்டாகும். அந்த நிலையில்
உண்டானதுதான் திருவாய்மொழி! அந்த
நிலையிலேயே இருந்தவர் ஸ்வாமி நம்மாழ்வார்.!
அவர் உள்ளத்தே உறைந்த எம்பெருமானே ஆழ்வாரின்
திருநாவில் சுகமாய் அமர்ந்தார். திருவாய்மொழி
மலர்ந்தது. வேதம் தமிழாய் மாறி பூரித்தது.

அப்பேற்பட்ட நம்மாழ்வாரை அனுக்ரஹிக்கும் பொருட்டு
ஆஸ்ரிதர்களின் ஸகல பாபங்களையும்
போக்கக்கூடிய ஹரி பாதுகையே! “ செழும்
பறவை தானேரித்திரிவான் தன் தாளினையென்
தலைமேலவே” என்கின்ற ஆழ்வாருடைய
சூக்தியின்படி அவரது சிரஸ்ஸின் மேல்
ஸாந்தித்யம் கொள்கின்றாய்!

ஆழ்வார் திருநகரியில் நடக்கும் ஆழ்வார் மோக்ஷத்தில் இதர திவ்யதேசங்களில் நடைபெறும் மோக்ஷ உற்சவத்தினைக் காட்டிலும் ஒரு விசேஷ ஏற்றம் உண்டு. இதர திவ்யதேசங்களில் ஆழ்வாரே வந்து பெருமாளின் திருவடிகளில் தம் சிரம் தீண்டி மோக்ஷ உற்சவம் நடைபெறும். ஆனால் ஆழ்வார் திருநகரியில் மட்டும் பெருமாள் தாம் ஆழ்வார் எழுந்தருளியிருக்கும் இடம் கைத்தலமாய் வந்தடைந்து தம் திருவடிகளால் நம்மாழ்வாரின் திருமுடி தீண்டி மோக்ஷம் அருளுவார்.

அந்தளவிற்கு பெருமாளுக்கு ஆழ்வாரின் ஸம்பந்தம், நெருக்கம் தேவையாயுள்ளது.

ஸ்ரீநம்மாழ்வார் ஸமாதி நிலையில் பகவானை

விடாது தியானம் செய்கின்றார். அந்த நிலை
தன்னைவிட்டு அகலாதவாறு சித்திக்கும்
பொருட்டு பாதுகைகளையும் தியானிக்கின்றார். பாதுகை
அகலாது நின்றால் பகவானும் அங்கு நின்றுதானே ஆக
வேண்டும் ஏனெனில் ஒன்றையொன்று பிரிக்க முடியாதன்றோ இருக்கின்றது.

பாதுகையினைத் தியானியுங்கள். பகவான்
உங்கள் வசப்படுவான்!

Pesum Arangam – 65

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 9:49 am

CHAPTER-65
21.04.09

ராமபாத கதாபாஸா ஸாபாதா கத பாமரா !

காது பாநஞ்ச காஸஹ்யா ஹ்யாஸ காஞ்சந பாதுகா !!

(இந்த ஸ்லோகத்தின் முதல் இரண்டு வாக்யங்களை தலைகீழாய் வாசியுங்கள். இதற்கடுத்த இரண்டு வாக்யங்கள் வருகின்றதா..!? –

சரி..! இப்போது ஒவ்வொரு வரியினையும் தலைகீழாய் வாசியுங்கள்!

தலைகீழாய் வாசித்தாலும் ஒரே மாதிரியானச் சொற்றொடர் வருகின்றது பாருங்கள்..! இந்தவிதமாக அமையும் இத்தன்மைக்கு “பாதப்ரதி லோமயமகம்” என்று பெயர்..!)

ராமபாதகதா=ஸ்ரீராமனுடைய திருவடிகளை அடைந்த – அகதபாமரா அகதபா வியாதியைக் காப்பாற்றிக் கொள்ளுகிறவர்களாக இல்லாமலிருக்கின்ற (கதம் என்றால் ரோகம், பா(ஹி) என்றால் காப்பாற்றுதல் “அ“ என்றால் இல்லை என்று பொருள்) அமரா=தேவர்களை உடைத்தாயிருப்பதும் – கதபா=வியாதியைக்(துக்கத்தினை) காப்பாற்றுபவர்கள் (சத்ருக்கள்) – அஸஹ்யா=தாங்கக்கூடாத்துமான (தன்னுடைய தேஜ்ஸ்ஸினால் சூரியனைக்கூட கொளுத்த கூடியதுமான – ஸா=அந்த (சௌலப்யம், தயை, தேஜஸ் முதலியதால் பிரஸித்தமான) – காஞ்சனபாதுகா=தங்கமயமான பாதுகையானது – காது=பிரம்மாவிடத்திலிருந்து – உபாநஸ்ச = ஸமீபத்தில் (ஸ்ரீரங்கவிமானத்தோடு பூமிக்கு வந்தது).

ஸ்ரீரங்கநாதனுடைய பாதுகையானது ஸ்ரீரங்கநாதனுடனேயே அவதரித்தது.

பிரும்மலோகத்திலிருந்து ஸ்ரீரங்கவிமானத்தோடு ரங்கநாதனை விட்டு பிரியாமல் இப்பூவுலகிற்கு வந்தது.

தேவர்களுக்கு ஏற்படும் ஆத்மவியாதியையும், அவர்களுடைய சத்ருக்களிடமிருந்து அவர்களை ரக்ஷிக்கின்றது. சூரியனின் தேஜ்ஸ்ஸை விட பலமடங்கு தேஜஸ்ஸினால் சூரியனின் தேஜஸ்ஸினையே மழுங்க அடிக்கக்கூடியது. ஜீவராசிகளை அது ரக்ஷிக்க எண்ணியது. ஸ்ரீரங்கநாதன் இராமனாக அவதரித்தப் போது

“ராகவோத்பவத் சீதா ருக்மணி கிருஷ்ண ஜன்மனி

அன்யேஷு சாவதாரேஷு விஷ்ணோரேஷாநபாயினீ !!”

என்றபடி எப்படி தாயார் இராமனாய் அவதாரம் எடுத்தபோது சீதையாகவும், கிருஷ்ணவதாரத்தில் ருக்மணியாகவும் அவதரித்தாளோ அது போன்று பாதுகையும் ஸ்ரீராமபாதுகையாய் ஸ்ரீராமனோடு கூடவே தம்முடைய இயல்பான சௌலப்யம், பக்த ரக்ஷணம், வாத்ஸல்யம் முதலான குணங்களோடே ஜீவராசிகளைத் தேடி தாம் வந்தது.

அதனால்தான் ஸ்ரீராமனுடைய பிரதிநிதியாக இந்த இராஜ்யத்தினை விசேஷமாக ஆளக்கூடிய சக்தி அதற்கு இருந்தது.

ஸ்ரீநம்மாழ்வார் துடக்கமாகவுள்ள நம்முடைய குரு பரம்பரையானது பெருமாளிடத்திலிருந்தே தொடங்குகின்றது. ஆஸ்ரிதர்களுடைய ஆத்மவியாதியைத் தெளிய வைத்து பகவானின் திருவடிகளில் அவர்களை கொண்டு சேர்த்து ரக்ஷிப்பவர்கள். அவர்கள் எந்த காலத்திலும் எப்படிப்பட்ட பண்டிதர்களாலும் அவமதிக்க முடியாதவர்கள். நித்யசூரிகள்…!

பகவானின் விபவ அவதாரமாகட்டும், அர்ச்சாவதாரமாகட்டும், இந்த லோகரக்ஷணத்திற்காக, பெருமாளுக்கு உதவியாய் இந்த பூமியில் வந்து அவதரிக்கின்றார்கள்.

April 21, 2009

Pesum Arangam – 64

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 7:49 am

CHAPTER-64
18.04.09

அநந்ய சரணஸ் ஸீதந் அநந்தக்லேச ஸாகரே!

சரணம் சரணத்ராணம் ரங்கநாதஸ்ய ஸம்ஸ்ரயே !! 915 !!

அநந்த = அளவில்லாத – க்லேச = கஷ்டங்களை (ஸம்ஸாரத்தில் உழல்வதால்) – ஸாகரே = சமுத்திரத்தில் – ஸீதந் = சங்கடப்பட்டுக்கொண்டு – அநந்ய சரண: = (உன்னைத் தவிர) வேறு ஒரு ரக்ஷகர் இல்லாத நான் – ரங்கநாதஸ்ய= ஸ்ரீரங்கநாதனுடைய – சரணத்ராணம்=திருவடியைக் காப்பாற்றுகின்ற பாதுகையையே – சரணம் = உபாயமாக – ஸம்ஸ்ரயே = அடைகின்றேன் (வரிக்கின்றேன்)

இந்த பாடலின் முதல் வரியை ஒரு முறை மீண்டும் படியுங்களேன்! உங்கள் உதடுகள் இரண்டும் ஒட்டுகின்றதா..? ஒட்ட வில்லைதானே..? இப்போது இதன் அர்த்த்தைக் கவனியுங்கள்!

பாதுகையின் சம்பந்தம் பெறாமல், அளவில்லாத கஷ்டங்கள் நிறைந்த இந்த துக்கமயமான ஸம்ஸாரக் கடலில் உழன்று, உன்னைத் தவிர வேறு ஒரு உபாயமும் இல்லாத நான்…

பாதுகையினிடத்து சம்பந்தம் பெறுவது இருக்கட்டும்.., இந்த வரிகளின் மூலமாய் ஜீவன்கள் வெளிப்படுத்தும் வேதனை, தம்மோடு மிக நெருக்கமாயிருக்கும் இன்னொரு உதட்டினோடு கூட சேர முடியவில்லை பாருங்கள்..!

அடுத்தவரியைக் கவனியுங்கள்..!

ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளைக் காப்பாற்றுகின்ற பாதுகையினையையே இந்த கஷ்ட கடலில் இருந்து காப்பாற்றக் கூடிய உபாயமாக வரிக்கின்றேன்!

பாதுகையினையே உபாயமாகப் பற்றுகின்றது இந்து ஜீவன்.

உடனடியாக சேராத உதடுகள் ஒன்று சேருகின்றது!

இந்த ஸ்லோகம் அமைந்த இந்த பத்ததிக்கு ‘சித்ர பத்ததி’ என்று பெயர். இந்த பத்த்தி முழுதும் ஸ்வாமி தேசிகர் கவிநயத்தோடும், பொருள் நயத்தோடும், அதியற்புதமாய் கிறங்க வைக்கின்றார் ஸ்வாமி தேசிகர்.

யோசிப்பதற்கே பல மணித்துளிகள் ஆகும் இந்த பாதுகா ஸஹஸ்ரத்தினை எப்படி ஒரேயொரு இரவில் அதுவும் கடைசி ஒரு ஜாமத்தில் இவரால் கவிமழைப் பொழிய முடிந்ததோ…? நினைக்க நினைக்க திகைப்புதான் மிஞ்சும்! இது அவரே நினைத்தாலும் முடியாது என்பதுதான் உண்மை!

பாதுகா தேவிதான் அவரது நாவில் நின்று அந்த ஒரு ஜாமம் முழுதும் நர்த்தனமாடியிருக்கின்றாள்.. !

இதோ..! அவரே சொல்லுகின்றார்…! கேட்போமா…?

ச்ருணுதே பாதுகே! சித்ரம் சித்ராபிர் மணிபிர் விபோ: !

யுக்க்ரம புவோ வர்ணாத் யுகபத் வஹஸே ஸ்வயம் !! 912 !!

யுக்க்ரம = இரட்டிப்பதை உடைத்தாயிருந்து அந்த்ந்த பத்ர விசித்ரங்களுக்கு வேண்டிய படி வரிசையாகவும், புவ = உண்டாயிருக்கின்ற – வர்ணாத் = அக்ஷரங்களை – யுகபத் = ஒரே காலத்தில் – ஸ்வயம் = தானே – வஹஸே = வஹிக்கின்றாய்

ஹே! பாதுகே! பகவான் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நிறமுள்ளவராய் இருந்தார். (க்ருதயுகத்தில் – வெளுப்பு, த்ரோதாயுகத்தில் – சிகப்பு, துவாபரயுகத்தில் – பொன் நிறம், கலியுகத்தில் – கருப்பு ) ஆனால் நீயோ பகவானின் அனைத்து வர்ணங்களையும் , உன் மீது பதிக்கப்பெற்றிருக்கும் ரத்னங்களின் காந்தியினால் ஒரே சமயத்தில் வெளிப்படுத்துகின்றாய் !

உன்னைப் பற்றி ஸ்தோத்திரம் பண்ணவேண்டும் என்று ஆரம்பித்தேன்..!

உன்னுடைய பரம அனுக்கிரஹத்தினால் மட்டுமே அக்‌ஷரங்களும், பதங்களும், ஆச்சர்யமான பல சந்தர்ப்பங்களையும் , அர்த்தங்களையும் கொடுக்கும்படி தானாகவே அமைகின்றன..! உன்னுடைய அனுக்ரஹமில்லாமல் என்னால் ஒன்றும் செய்ய இயலாது…!

April 18, 2009

Pesum Arangam – 63

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 7:31 am

CHAPTER-63
15.04.09

நமக்கு ஒரு பெரிய மனிதரிடத்து ஒரு கார்யம் ஆக வேண்டியிருக்கின்றது.. என்ன செய்யலாம் நாம்?

ஒன்று அவரிடத்து நேரடியாகச் சென்று பேசலாம்.

இதில் சில சிக்கல்கள் உள்ளன. முதலில் அவரது குணம் பற்றி

நாம் அறியோம். சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பற்றியும் அறியோம்.

முதலில் அவருக்கு நெருக்கமானவர்களிடத்துப் பரிச்சயம் செய்து கொண்டு, அவரிடத்து நன்கு பழகி, அந்த பெரிய மனிதரின் விருப்பு வெறுப்புக்களையெல்லாம் அறிந்து கொண்டு, நெருக்கமானவர்களின் மூலமாக சரியான சந்தர்ப்பம் அறிந்து செயல்படுவோமாயின் 99 சதவீதம் வெற்றி நிச்சயம்.

இதுதான் கெட்டிக்காரத்தனம்.

ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை தமது வியாக்யானத்தில்

சொல்கிறார் – “கையைப் பிடித்து காரியம் கொள்வதைக் காட்டிலும், காலைப் பிடித்து காரியம் கொள்வது“.

நம்மை விட பெரியோர்களிடத்து கைகூப்பி காரியம் கொள்வதை விட, அவர்களது காலில் வீழ்ந்து நாம் வந்த காரியத்தை நிறைவேற்றுவது எளிது.

அதே போன்று பெரியபெருமாளிடத்து நேரடியாக வேண்டுவது கையைப் பிடித்து காரியம் கொள்வது போல. பெருமாளின் திருவடியாக இருக்கும் ஆழ்வார், ஆச்சார்யனைப் பற்றுவோமாயின் அது பெரிய பெருமாளின் திருவடிகளைப் பற்றியது போல –

கண்டிப்பாக நாம் எண்ணிய காரியம் நிறைவேறும்.

சாதாரண மனிதர்களாகிய நாம் அசக்தர்கள். ஸம்ஸாரத்தில் மாட்டிக் கொண்டு உழல்பவர்கள். நாம் மறுபடியும் இந்த கர்ம ஸரீரத்தினை எடுக்காமல் அவன் திருவடிகளை சாஸ்வதமாக அடைவதென்பது, நமது பிரயத்தனத்தினால் முடியாத காரியம். இது பெருமாளுடைய தயையினால் மட்டுமே சாத்தியமாகின்ற ஒன்று. இதற்காகப் பெருமாளை நேரில் பிரார்த்தனைச் செய்வதைக் காட்டிலும் ஆச்சார்யன் திருவடிகளைப் (பாதுகைகளைப்) பற்றி பிரார்த்திப்பதுதான் கெட்டிக்காரத் தனமாகும்!

இந்த பாதுகைகள் பகவானின் திருவடிகளுக்கு ஒரு கஷ்டமும் தராமல், மிகவும் சுகமாக நம்பெருமாள் தன்னை விட்டு ஒரு க்ஷணம் கூட பிரியாது இருக்கும் வண்ணம் தன்னுடைய குணத்தினால் நம்பெருமாளையேயன்றோ வசியம் பண்ணிக் கொண்டிருக்கின்றது.

ஸதாச்சார்யர்கள் தங்களுடைய ஸ்வரூபத்தினால், குணத்தினால், செயலினால், பிரேமையினால், பிரபத்தியினால் பகவானை ஸ்வாதீனம் பண்ணினவர்கள். இந்த ஆச்சார்யனை எவரொருவர் வேறு கதி ஏதும் இன்றி, அநந்ய கதியாய் ஆஸ்ரயிக்கின்றார்களோ அவர்களுக்கு மீண்டும் பிறப்பு என்பது சர்வ நிச்சயமாகயில்லை!

April 16, 2009

Pesum Arangam – 62

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 12:19 am

 
Chapter-62
14.04.2009
 
 
 சேஷத்வ காஷ்டை“….?

 

என்ன இது..? 

 

கெளரவம் பார்க்காமல், ப்ரதிபலன் பாராமல், மிகுந்த வினயத்துடன், ப்ரீதியுடனும், எவ்விதமான தாழ்வான வேலையையும், ஆவலுடனும் அக்கறையுடனும் செய்வது.

 

அரங்கனிடத்து ஆதிசேஷன் இப்படித்தானே கைங்கர்யங்கள் செய்கின்றது!  குடையாகவும்,  ஸிம்ஹாசனமாகவும், பாதுகையாகவும்,   படுக்கும் மெத்தையாகவும்,  மிருதுவான தலையணையாகவும்,  திருவிளக்காகவும்,  பீதாம்பரமாகவும், பற்பல ரூபங்கள் எடுத்துக்கொண்டு கைங்கர்யம் செய்கின்றது!

 

நித்யசூரிகளும், ஜீவ முக்தர்களும் எவ்விதமான உருவத்தையும், ஒரே நேரத்தில் பலவித உருவங்களையும் பெருமாள் திருவுள்ளத்திற்கு அனுகூலமாக,  அனுகுணமாக, தாங்கள் இஷ்டபடிக்கு எடுத்துக்கொண்டு கைங்கர்யம் செய்யமுடியும்!.

 

எஜமானனின் இஷ்டப்படிக்கு, தன் கஷ்டநஷ்டம் பாராது, ப்ரீதியோடு கட்டுப்பட்டு எஜமானின் கட்டளைகளை நிறைவேற்றுவது வேலைக்காரனுக்கு ஸ்வரூபமும் குணமுமாம்.

 

அதுபோன்று பர்த்தாவிற்கு கீழ் பத்நி,  ஆச்சார்யனின் கீழ் சிஷ்யன், பிதாவின் கீழ் புத்ரன்,  தமையன் கீழ் தம்பி. 

 

இந்த சேஷத்வ நிலைகளை  பர்த்தாவிற்கு கீழ் பத்நி (இராமன்சீதை), ஆச்சார்யனின் கீழ் சிஷ்யன் (விஸ்வாமித்ர்ர்-இராமன்), பிதாவின் கீழ் புத்ரன் (தஸரதன்இராமன்), தமையன் கீழ் தம்பி (இராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்ன்ன்) இராமவதாரத்தில் உயர்வாகக் காணலாம்.

 

காலே தல்ப புஜங்கமஸ்ய பஜத:  காஷ்டம் கதாம் சேஷதாம்

மூர்த்திம் காமபிவேத்மி ரங்க ந்ருபதே: சித்ராம் பதத்ரத்வயீம்!

ஸேவா நம்ர ஸூராஸூரேந்த்ர மகுடீசேஷாபடீஸங்கமே

முக்தா சந்த்ரிகயேவ யாப்ரதயதே நிர்மோகயோகம் புந: !!

 

ரங்கந்ருபதே:=ஸ்ரீரங்கநாதனுடையசித்ராம்=ஆச்சர்யமானபதத்ரத்வயீம்=இரண்டு பாதுகைகளைகாலே=சஞ்சார காலத்தில்காஷ்டாம்=மிகவும் உயர்த்தியான(கடைசி எல்லை) – கதாம்=அடைந்திருக்கின்றசேஷதாம்=தாஸனது வேலையை இந்தவிடத்தில் திருவடியை வஹிக்கிறதான கைங்கர்யத்தினை – பஜத:=அடைந்தவராயிருக்கின்ற  தல்ப புஜங்கமஸ்ய=எப்போதும் பெருமாளுக்கு படுக்கையாயிருக்கின்ற ஆதிசேஷனுடைய. – காமபி=விலக்ஷணமான அதாவது ஒரு ஆச்சரியமானமூர்த்திம்=திருமேனி விசேஷமாகவேத்மி=அறிகின்றேன்.

 

நம்பெருமாளின் ஆச்சர்யகரமான பாதுகையினை சேவிக்கும் போது  எப்போதும் பெருமாளுக்கு படுக்கையாக இருப்பதுடன், பெரிய பெருமாளுடன் ஸர்வதேச (எல்லாவிடங்களிலும்), ஸர்வகால(எல்லா காலங்களிலும்), ஸர்வாவஸ்தோசித (எல்லாவித அவஸ்தைகளிலும்) ஸமஸ்தவித (எல்லாவிதமான கைங்கர்யங்களையும்) , ஒரு வேலைக்காரனுக்குடைய சேஷத்வ கோஷ்டையுடன்,  அதனாலேயே சேஷன் என்று திருநாமத்தினையும் பெற்ற, ஆதிசேஷனுடைய  இன்னொரு உருவம்தான் பாதுகை.  

 

இவ்விதம் கூறுவதற்கு இரண்டு காரணங்களை இந்த ஸ்லோகத்தில் கூறுகின்றார். 

 

1)  (1) ஆதிசேஷனை வெள்ளிமலை போல் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றது.   நல்முத்துக்கள் பதிக்கப்பெற்ற பாதுகையிலிருந்து வெளிப்படும் காந்தியானது வெள்ளிமலையை போன்று காட்சியருளுகின்றது.

 

2) (2)    தம் பக்தர்களை கௌரவிக்கும் போது, அவர்களது சிரஸ்ஸில் வெள்ளைத் திருப்பரிட்டத்தினைச் சுற்றி கட்டி அதன் மேல் பாதுகையை சாதிக்கும் போது, வெள்ளைத் திருப்பரிவட்டம்,  உரித்து விட்ட பாம்பு சட்டைப் போன்றும், பாதுகை ஆதிசேஷனின் சிரஸ் போன்றும் காட்சியருளுகின்றது.

 

(“சேஷப்படிஎன்பது திருப்பரிவட்டத்திற்கான சமஸ்கிருதப் பெயர்.   இந்த சுலோகத்தின் மூலம் இது அந்த காலத்தில் வெளுப்பு வர்ணத்திலிருந்த்து அறியப்படுகின்றது.)

 

சேஷத்வ காஷ்டை மிகுந்தவர்கள் ஆழ்வார் மற்றும் ஆச்சார்யர்கள். இவர்கள் ஆதிசேஷன் போன்ற நித்யசூரிகளின் அவதாரமேயாவர்.  (ஸ்வாமி மணவாள மாமுனிகள் சொரூபத்தில் கூட சட்டை உரித்த பாம்பினைப் போன்று  பால் போன்ற நிறத்தில்தான் இருப்பாராம்.)

 

சுத்த சத்துவ குணத்தோடேயே அவதரித்தவர்கள்.  இவர்களை, இவர்களின் ஸ்ரீசூக்திகளைப் போற்ற போற்ற  நமக்கு சத்துவ குணம் மேலிடும், தோலுரித்த பாம்பின் பிரகாசம் போன்று.

April 11, 2009

Pesum Arangam-61

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 1:05 am

 
Chapter-61
11.04.2009
 
ஸ்ரீரங்கநாதனை,  நம்பெருமாள் அதாவது நம்முடைய பெருமாளாக ஆக்கியதும், பாதுகைகள்தாம்!
 
ஸ்ரீரங்கேந்தோ : சரணகமலம் தாத்ருசம் தாரயந்தீ
காலே காலே ஸஹகமலயா க்லுப்த யாத்ரோ த்ஸவஸ்ரீ: !
கத்வா கத்வா ஸ்வய மநுக்ருஹ த்வாரம் உந்நித்ர நாதா
பௌராந் நித்யம் கிமபிகுசலம் பாதுகே!  ப்ருச்சஸீவ !! 904 !!
 
ஸ்ரீரங்கேந்தோ:=ஸ்ரீரங்கநாதனுடைய சந்திரன் போன்று
குளிர்ச்சியுடைய சரணகமலம்=தாமரைப்போன்ற திருவடிகளை – தாத்ருசம்=அப்படிப்பட்ட (வாக்குக்கு எட்டாத பெருமையோடு கூடியஇ நீ ஒருத்தி மட்டுமே வஹிக்க்க் கூடியதான) – தாரயந்தீ=தாங்குபவளாகிய நீ —  காலே காலே=அந்தந்த உசிதமான காலங்களில் – ஸஹகமலயா=மஹாலக்ஷ்மியோடு கூட – க்லுப்த=ஏற்படுத்தப்பட்ட – யாத்ரோத்ஸவஸ்ரீ: = சஞ்சாரங்களோடு கூடிய உத்ஸாவாதிகள் – கத்வா கத்வா= (தாமே வலுவில்) போய் போய் – கிமபிகுசலம்=எல்லாவித க்ஷேமங்களையும் – ப்ருச்சஸீவ=கேட்கின்றாய்.
 
ஹே பாதுகே!  ஸ்ரீரங்கநாதனின் திவ்ய திருவடிகள் உலகத்திலுள்ள அனைவருக்கும் அமிர்தம் பிரவாஹித்து பொழிவதற்கு ஒப்பான சந்தோஷத்தினை உண்டுபண்ணும் குளிர்ச்சியையுடையது.  அத்தகைய திவ்யமான ஒப்பில்லாத திருவடிகளை உன் ஒருத்தியால் மட்டுமே தாங்கமுடியும்! உன்னை தம் திருவடிகளில் சாற்றிக் கொண்டு தாயாரோடு உற்சவாதிகாலங்களில் பெருமாள்,  வெளியூர்களுக்கும், லீலார்த்தமாகவும் எழுந்தருளுகின்றார்.   இவ்விதம் எழுந்தருளி திரும்ப ஆஸ்தானம் திரும்பும் போது ஆங்காங்கு வீடுகள் தோறும் நின்று எழுந்தருளுகின்றார்.   அப்போது பாதுகைகளாகிய உன்னிடமிருந்து வெளிப்படும் சப்தமானது ஒவ்வொரு குடும்பத்தினின் க்ஷேம லாபங்களை அவரவர்களுக்குத் தகுந்தபடி ப்ரியமான வார்த்தைகளால் அக்கறையோடு விசாரிப்பது போன்று உள்ளது.  இராஜாக்கள் காட்டுக்குச் சென்று வேட்டையாடி திரும்பும் போதும், யுத்தம் சென்று திரும்பும் போது தங்களுடைய ஜனங்களின் சௌகர்யங்களை விசாரிப்பது வழக்கம்.  இது போன்று இருக்கின்றது இந்த பாதுகையின் செயல்கள்.

ஸ்வாமி தேசிகரின் இந்த பாசுரத்தினை வேறுவிதமாகவும் அர்த்த விசேஷம் கொள்ளலாம்.

ஸ்ரீரங்கேந்தோ:  இதில் “இந்து“ என்ற சப்தம் பகவான் அமிருதம் போன்ற தயையை ஸர்வர்க்கும் வர்ஷிக்கின்றார்.  ஸம்ஸார தாபத்தினை நீக்கி குளிர்ச்சியையும் ஆனந்த்த்தினையும் உண்டு பண்ணுகின்றான்.  இது அவனது பரம காருணிகத்வம்.

தாத்ருசம் –  பெருமாள் மற்றும் பாதுகையினுடைய  சொரூபம், குணவிசேஷங்கள் வாக்குக்கு எட்டாத்த்து.  இதற்கெல்லாம் அப்பாற்பட்டது.  இது பெருமாளுடைய பிரபாவம் மற்றும் பரத்வம்.

ஸஹகமலயாக்லுப்த யாத்ரோத்ஸவஸ்ரீ –  கோபிப்பது மற்றும் தண்டிப்பது என்பதே அறியாதவர்களாகிய  பாதுகையும், மஹாலக்ஷ்மியும் எப்போது பெருமாள் கூடவேயிருந்து,  ஆஸ்ரிதர்களை  எப்படியேனும் ரக்ஷணம் செய்கின்றார்கள்.  இது இவ்விரு தாயார்களின் பரம கருணை.

கத்வா கத்வா – ஆஸ்ரிதர்கள் தம்மை தேடி வரும் வரை காத்திருக்காமல் தானே ஒவ்வொருவரையும் பரம ப்ரீதியினாலும், கவலையினாலும், வாஞ்சையோடு வலுவில் அவர்களைத் தேடிப் போதல் – இது வாத்ஸல்யம்

அனுக்ரஹத்வாரம்  — பக்தன் தம்மைத் தேடி பாதிதூரமாவது வரட்டுமே என்று எண்ணாது அவர்களின் வீடு வரையில் தானே போய் அவர்களை அனுக்ரஹித்தல் – இது சௌலப்யம்

ஸ்வயம் – இந்த விசாரித்தல் மற்றும் அனுக்ரஹித்தல் ஆகியவற்றை இன்னொருவரை அனுப்பி செய்வதில்லை.  தாமே நேரில் செய்கின்றார் – இது சௌசீல்யம்.

உந்நித்ரநாதா –  எல்லாரிடத்தும் பொதுவான ஒரே மாதிரியான அணுகுமுறையின்றி,  தனிதனியாக அவரவர்களுக்கேற்றாற் போன்று,
அவரவரின் தேவையறிந்து விசாரித்தல். – இது சாதுர்யம்.
பெளராந் – ஒதுங்கிவசிக்கும் ஞானமிக்க ஜனங்களைக் காட்டிலும், தம்மையண்டி நிற்கும் சாதாரண ஜனங்களிடத்து விசேஷ கவனிப்புடன் இருத்தல் – இது எளிமை.

நித்யம் – இன்று கவனித்து விட்டு நாளை அலட்சியமாகயில்லாமல் என்றும் ஒரே மாதிரியான அன்புடன் ரக்ஷித்தல் – இது ஆதராதிசயம்

கிமபிகுசலம்  – ஆஸ்ரிதர்களுடைய எல்லா யோக க்ஷேமங்களைப் பற்றிய சூக்ஷூம ஞானமும்,  அவர்களது எல்லா விஷயங்களிலுமுள்ள கவனிப்பு –
இது பரிபூர்ண கடாக்ஷம்.
 
 
பாதுகையும், ரங்கனும் பாமரனுக்கும் தோழன். 

April 9, 2009

Pesum Arangam – 60

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 2:10 am

Chapter-60
08.04.2009
 
இன்று பங்குனி உத்திரம்  –  திவ்ய தம்பதிகளின் சேர்த்தித் திருநாள்.   தாயாருக்கும் பெருமாளுக்கும் உள்ள பிணக்கைப் போக்கி  இருவரையும் இணைத்து நம் பிறவிப் பிணிப் போக்கும் அற்புதமான நாளாக்குகின்றார் இன்றைய நாளை ஸ்வாமி நம்மாழ்வார்!

இன்றைய நாளை தேர்ந்தெடுத்து ஸ்ரீஇராமானுஜர் பரிபூர்ண சரணாகதி செய்து கத்யத்ரயம் என்னும்  பிறவிப் பிணி போக்கும் மூன்று அருமையான ப்ரபத்திகளை நாம் உய்ய அருளிச் செய்தார்!
.  
நம்மாழ்வாராகிய  பாதுகையினை  ஸ்வாமி தேசிகர்,
 
“நித்யம் ரங்க க்ஷிதிபதி பதந்யாஸ தந்யாத்மநஸ்தே
சிஞ்ஜாநாதம் ச்ரவண மதுரம் பாதுகே! தீர்க்கயந்த:
காலே தஸ்மிந் கரண விகம க்லேசஜாதம் விஹந்யு:
ஸந்தாபம் நஸ்த்ருண துளஸீகந்திநோ கந்தவாஹா: “

என்று பிரார்த்திக்கின்றார்.

நித்யம் = எப்போதும் –  ரங்க்க்ஷிதிபதி = ஸ்ரீரங்க பூமிக்கு எஜமான் ஆகிய – ச்ரவண = கேட்பதற்கு  – மதுரம் = மதுரமாயுள்ள – சிஞ்ஜாநாதம் = சலங்கைக்களுக்குள் உள்ள இரத்னங்களால் உண்டாகும் சப்தம்
துளஸீகந்தினோ = துளசியின் மணம்  – கந்தவாஹா =  காற்றில்  (பரவச்செய்து)  க்லேச = கஷ்டத்தினாலே – ஜாதம் =  உண்டாயிருக்கின்ற – ஸந்தாபம் = மரணவேதனையை – விஹண்யு: = போக்கடிக்க வேணும்.

ஸதா ஸ்ரீரங்கபதியின் திருவடிகளைத் தாங்கக்கூடிய பாதுகையே!  மரணம் என்னை நெருங்கும் போது என்னுடைய ஐந்து இந்திரியங்களும் ஒவ்வொன்றாக செயலிழந்து கொண்டு வரும்.  அப்போது நான் பொறுக்கமுடியாத வேதனைக்கு உள்ளாவேன்.  அந்த தருணத்தில் உன்னைத் தழுவி வரும் காற்றில் உன்னுடைய குளுமையையும்,  உன்னிடத்துள்ள துளஸியின் பரிமணத்தையும்,  இனிமையான உன் பாதுகையிலுள்ள ரத்னங்களிலிருந்து வெளிப்படும் மதுரஓசையும் கலந்து என் சுவாசத்தில் துளஸியின் பரிமணமும், காதில் மதுரமான ஓசையும், தேஹமெங்கும் உன்னுடைய குளுமையையும் பரவச் செய்ய வேணும்.

மரண வேதனையில் தவிக்கும் என் இந்திரியங்களுக்கு ஆறுதலை அளித்து அவ்வேதனையை நீ எங்கள் விஷயத்தில் பரம கிருபைப் பண்ணிப் போக்க வேண்டும்“  என்று பிரார்த்திக்கின்றார்.

இதன் உட்கருத்தினைச் சுருங்கச் சொன்னால்,   அந்திம தசை நெருங்கி அந்தமில் பெருநாடு புகுவதற்கு ஆச்சார்ய கடாக்ஷம் அவசியம் தேவை என்கிறார்.

இந்திரியங்கள் செயல்பாடு ஒவ்வொன்றாக சுருங்கி அதிதுக்கமான மரணவேதனையின் போது பரம ஸ்ரீவைஷ்ணவனாவன் ஆழ்வார் ஆச்சார்யர்களுடைய ஸ்ரீஸூக்திகளைக் கேட்டாலும்,  பெருமாளுடைய
திருமாலை, திருப்பரிவட்டம், திருவடி ஜோடு, திருஅபயஹஸ்தம் முதலான பிரஸாதங்களைப் பெறும் பாக்யம் கிட்டினாலும், அல்லது பெருமாளுடைய கைங்கர்யபர்ர்கள் அருகிலிருக்கப் பெற்றாலும்,  இந்த பரமலாபத்தினால் தாம் அனுபவிக்கும் துக்கம் மறந்து,  மரண வேதனையைக் கூட மறந்து விடுவார்கள்.   ஸ்ரீஸூக்திகளைச் சொல்பவரையும்,  பெருமாள பிரஸாதங்களைக் கொண்டு வந்தவர்களையும்,  தங்களை அழைத்துக் கொண்டு போகவந்த பெருமாளால் அனுப்பப்பட்ட தூதர்களாகவேக் கருதுவர். 

கூரத்தாழ்வார்  நம்பெருமாளை கடைசியாக ஸேவித்து விட்டு தம் திருமாளிகை வந்து சேருகின்றார்.   அந்திம தசை நெருங்குகின்றது. நாக்கு வரளுகின்றது.  உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது.  எம்பெருமானார் விரைந்து வருகின்றார்.  அவரை அணைத்துத் த்வயம் அனுசந்திக்கின்றார். அதுவரைத் தவித்துக் கொண்டிருந்த கூரத்தாழ்வானின் உயிர் ஊசல்  சற்றே நிதானம் அடைகின்றது.  இப்போது எம்பெருமானார்  அரற்றித் தவிக்கின்றார்.  “ஆழ்வான்!   என்னுயிர் நிலையான உன்னைவிட்டு நான் எங்ஙனே தரிப்பேன்..?  என்னையும் உடன் கொண்டு போகத் திருவுள்ளம் பெற்றிலீர்!  பரமபதநாதனும் அங்குள்ள நித்ய முக்தரும் என்ன பாக்யம் பண்ணினார்களோ..?  இங்கு உறங்கும் ஸ்ரீரங்கநாதனும் நாங்களும் என்ன பாபம் பண்ணினோமோ..?” என்றெல்லாம் அரற்றித் தவிக்கின்றார்!
 
உற்றவரின் உயிர் போகும் சமயம் உடனிருந்தவரின்  உயிர் தவிக்கின்றது! 
 
ஆழ்வான் வேரற்ற மரம் போன்று உடையவரின் திருவடிகளில் வீழ்ந்து கிடக்கின்றார்.   உடையவர்  அவரை வாரியெடுக்கின்றார்.  ஊசலாடும் உயிருக்குத் தெம்பு பிறக்கின்றது.   உடையவரின் திருவடிகளைத் தம் கையில் ஏந்தி தம் திருக்கண்களிலும், திருமார்பிலும் ஒற்றிக் கொள்கின்றார் கூரத்தாழ்வார்!  
 
உடையவர் தம் திருக்கைகளினால் பிரஸாதிக்க, ஆழ்வான் பிரஸாதப்படுகின்றார்.

“யோநித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம வ்யாமோஹதஸ் கதி தராணி த்ருணாய மேநே!   அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ இராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே!” 

என்று  அனுசந்தித்து ஸ்ரீஇராமனுஜரைத் தொழுத  வண்ணம் க்ருதாஞ்சலிபுடராய் விடைகொடுத்து அன்றே திருநாட்டுக்கு எழுந்தருளுகின்றார் ஆழ்வான்!

ஆழ்வானின் உயிர்நிலை ஆடும் போது உய்விக்க வந்தார் உடையவர்!
 

April 7, 2009

Pesum Arangam-59

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 6:41 am

 
Chapter-59
07.04.2009
 
பாதுகைகள் ரங்கநாதனின் திருவடிகளில் சேர்ந்தவுடனேயே ஜனங்களுக்கும் பகவானுக்கும் உள்ள பொறுப்புக்கள் எளிதாகிவிட்டது. 
 
ரக்ஷித்தல் என்பதனை பகவான் பாதுகையினிடத்து விட்டுவிட்டு  நிம்மதியடைகின்றான் அவன்!.  
 
அவன் பாதுகையின் ஸ்வரூபம், ரக்ஷணபரம், ரக்ஷணபலம் நன்கறிவான்!.  
 
ஜனங்களுக்கு ஸம்ஸார பந்தம் விடுபட்டு  மோக்ஷமானது, அவர்களுக்கு பாதுகையோடுள்ள உறவாலும்,  இந்த உறவினால் பாதுகை அவர்களிடத்துச் செய்யும் அனுக்ரஹத்தினாலும் எளிதாகின்றது. 
 
பரமபுருஷார்த்தமாகிய மோக்ஷம் கிட்டுவதற்கு அவர்கள் பாதுகையினிடத்துச் செய்யும் சரணாகதியே போதுமானது. 
 
தனியாக ஒரு சரணாகதி பெருமாள் திருவடிகளில் செய்ய வேண்டியதில்லை!.
 
ஸ்வாமி தேசிகர் சொல்கிறார்…

மாதர் மஞ்ஜூஸ்வந பிணத ப்ராத்தநா வாக்ய பூர்வம்
நிக்ஷிப்தாயாம் த்வயி சரணயோ: பாதுகே!  ரங்கபர்த்து: !
த்வய்யாயத்தம் கிமபி குசலம் ஜாநதீநாம் ப்ரஜாநாம்
பர்யாப்தம் தந்நகலு நபவத்யாத்ம நிக்ஷேப க்ருத்யம் !!
கிமபிகுசலம் :  எல்லா நன்மைகளும் இந்த ஸம்ஸாரபந்தம் விடுபட்டு பெருமாளையடைவது  –  நபவத்யாத்ம  :  அவர்களுடைய ஆத்ம நிக்ஷேபணத்திற்கு போதுமானதாக ஆகிறது.

நாம் பாதுகையையே சரணமடைந்து விட்டால்  நாம் பாதுகையினோடு சேர்ந்தவராகி விடுவோம்.   நாம் பாதுகையின் வஸ்துவாகி விடுவோம்.

நம்முடைய பாதுகையின் சம்பந்த்த்தினால் தானும் தன்னைச் சேர்ந்த்தான நம்மையும் ஸமர்ப்பணத்தில் உள்ளடக்கியதாகவன்றோ பாதுகை விளங்கும்!.

இந்த எளிய ஸமர்ப்பணம் போதுமே!   வேறொரு பிரயத்தனம் அவசியமா என்ன..?
 

April 2, 2009

Pesum Arangam-58

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 8:20 pm

 
Chapter-58
02.04.2009
 
 

ரம்யா லோகா லளித கமநா பத்மராகா தரோஷ்டி

மத்யே க்ஷாமா மணிவலயிநீ மௌக்திக வய்க்த ஹாஸா

ச்யாமா நித்யம் ஹரித மணிபி:  சார்ங்கிண: பாதரக்ஷே!

மந்யே தாதுர்  பவஸி  மஹிலா நிர்மிதௌ மாத்ருகா த்வம் !! 898 !!

 

ரம்யா : அழகானலோகா : பிராகாரம் உடையவள் (பார்வையை உடையவள்) – லளித : மெதுவாய் அழகான –  கமநா : நடையையுடையவள் – மாத்ருகா : பார்த்துக் கொண்டு அதே மாதிரி  பண்ணுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு உருவமாய்

 

ஹே!  சார்ங்கம் எனும் ஆயுதமுடைய பெருமாளின் பாதுகையே!

உன்னிடமிருந்து வெளிப்படும் காந்தியானது யுவதிகளின் கண்பார்வையின் சோபைப் போலுள்ளது.   உன்னுடைய நடையழகு லளிதமாயுள்ளது.   உன்பேரில் பதிக்கப் பெற்றுள்ள பத்மராக கற்கள் அந்த சுந்தரியின் சிவந்த கீழ் மேல் உதடுகள் போலுள்ளது.  உன்னுடைய சிறுத்த மத்யபாகம் குறுகிய இடையை ஒத்துள்ளது.    உன் மேல் இழைக்கப்பட்ட ரத்ன கூட்டங்கள்  வளையல் போலுள்ளது.   உன்னிடத்துள்ள முத்துக்களின் காந்தி அழகியதான பல்வரிசைக் கொண்டு புன்சிரிப்பை நினைவுறுத்துகின்றதுஉன்னுடைய மரகத கற்களின் காந்தி  பசுமையானதும், சௌகுமார்யம் முதலான குணங்களால் சோபிக்கும் யுவதி போன்று,  பிரும்மா உயர்ந்த  ஸ்தீரிகளை ஸ்ருஷ்டிப்பதற்காக  அடையாளமாக  பெருமாள் ஸ்ருஷ்டித்த ஒரு பெண் பிரதிமையென்று நினைக்கின்றேன்.

 

இந்த சுலோகத்தினை அதியற்புதமாய் ஒரு சிலேடை நடையில் அமைத்துள்ளார்.   இதிலுள்ளநித்யஎன்னும் ஒரு வார்த்தையை எடுத்துக் கொண்டு  மீதமுள்ள பதங்களோடு சேர்த்து  விசேஷமான அர்த்தங்களைக் காண்போம்!

 

நித்யம் ரம்யாலோகா     எப்பொழுதும் தெளிவும்,  ஆனந்தமும் கொண்ட ஆத்மாவிலிருந்து உண்டான வெளிப்படையான தேஜஸ்ஸை உடைத்தாயிருக்கை.

 

நித்யம் லலிதகமனா    ஜனங்களுக்கு நடையில் பல கோணல், விகாரங்கள் இருப்பது போல் அவர்கள் கடைபிடிக்கும் அனுஷ்டானத்திலும் பல தோஷங்கள் உண்டு.   அம்மாதிரியெல்லாம் இல்லாமல் சாஸ்திர ரீதியாய், ஸத் ஸம்ப்ரதாயமான ஆசார அனுஷ்டானங்களை விதிப்படிக்கும்,  பெரியவர்களது உபதேச க்ரமபடிக்கும்,  சிரத்தை, பக்தி, விசுவாசத்தோடு , ஆடம்பரம், அஹங்காரம்,  பிரதிபலன்கள் ஏதும் எதிர்பார்க்காமல், எப்போதும் ஒரே மாதிரியாய் அனுஷ்டிப்பது.

நித்யம் பத்மராகாத்ரோஷ்டி     தன்னுடைய  நற்குணங்களாலும்,  நல்வாக்கினாலும்,  தம்முடைய வாக்கு,  கேட்பவர்களிடத்து ஆனந்தமான மெய்யுணர்வு ஏற்படும்படி இருக்கை.

நித்யம் மத்யே க்ஷாமா   இத்தனை பெருமைகளும்,  யோக்யதைகளும் இருந்தும் கூட பவ்யமாகயிருத்தல்.

 

நித்யம் மணிவலயிநி   வேதம் கூறும் சாஸ்திரங்களையும், அது குறித்த பூர்வாச்சார்யர்களுடைய விளக்கங்களையும்,  வியாக்யானங்களையும் எப்போதும் ஆபரணம் போன்று நினைவில் கொண்டிருக்கை

.

நித்யம் மெளக்திகவ்யக்தஹாஸா  எப்போதும் தன்னுடைய சௌஹார்த்ததாலும் (எல்லாரையும் அன்போடு அணைத்துச் செல்லும் குணம்) மலர்ச்சியோடு கூடிய தோற்றத்தினாலும் எப்போதும் இவர் நம்மோடுயிருந்து அருள வேண்டும் என்றிருக்கை.

 

நித்யம் ஸ்யாமா ஹிதமணிபி  நல்ல இறையனுபவத்தாலே காமக்ரோதாதிகள் அறவேயொழிந்து,   புத்தி தெளிவடைந்து,  அதனால் சரீரம் நல்ல தேஜஸ்ஸையடைந்திருக்கை.

 

நித்யம் சார்ங்கிண: பாதரக்ஷே  பெருமாளுக்கு எந்தவிதமான அபராதங்களும் ஜனங்கள் செய்யமால், அபஹாரம் வராதபடிக்கு நித்ய ரக்ஷகர்களாய் இருக்கை.  இதற்கு ஜனங்களுக்குப்  பெருமாளைக் குறித்த தெளிவான அறிவு வேண்டும்.  அதனை பல ப்ரமாணங்கள் மூலம் புகட்டும்  தெளிவு வேண்டும்.

 

இவைகள்தாம் ஸதாச்சார்யனுடைய லக்ஷணங்கள்.  அவர்களால் சிக்ஷையடைந்து தேறிய நல்ல சீடர்களின் லக்ஷணமும் ஆகும்.

Blog at WordPress.com.