Srirangapankajam

December 28, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 26

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 10:11 am

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 26
28-12-2009

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
மூன்றாம் அத்யாயம்
ஸமாதிவ்யாக்யானம்

என்னென்ன அலங்காரங்கள் அர்ச்சகர்கள் தமக்குச் செய்து கொள்ள வேண்டும்..?

உச்சந்தலையில் க்ஷோபன அக்ஷதைகளோடு விளங்க வேண்டும்.

தூய்மையான வ்ரதத்தினைக் கடைப்பிடிக்கவேண்டும்.

வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ள வேண்டும்.
மணம் கமழத் திகழ வேண்டும்.

தாம்பூலம் தரித்துக்கொள்ள வேண்டும். (கோவிலுக்குச் செல்வதற்கு முன்பே வாயைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். கோவிலின் எல்லைகளுக்குள் எங்கும் உமி்ழ்வதோ, துப்புவதோ கண்டிப்பாகக் கூடாது. வாய் துர்நாற்றம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.)

மாலைகள் அணிந்து கொள்ள வேண்டும்.

தூய்மையான நல்ல வெண்மையான வஸ்திரங்கள் அணிந்து கொள்ளல் வேண்டும்.

கர்ணபூஷணம் (காதுகளுக்கான கடுக்கண் போன்ற ஆபரணங்கள்) அணிந்து கொள்ள வேண்டும்.

கழுத்துக்கு ஹாரங்கள் (ஆபரணங்கள்) அணிந்து கொள்ள வேண்டும்.

கைக்குக் கடகம்

கைவிரல்களில் மோதிரங்கள்.

இவை எதற்கும் வசதியில்லாவிடின் கைவிரலில் ஒரு மோதிரமாவது தரிக்க வேண்டும்.

தம்முடைய சுவாசக்காற்று எம்பெருமான் மேல்படாதவாறு நாசித் துவாரங்களை வஸ்திரத்தினால் மூடிக்கொள்ள வேண்டும். (இதனால்தான் பெரும்பாலான அர்ச்சகர் மூன்றாவது உத்தரீயமாக தமது வலதுதோளில் இன்னொரு வஸ்திரத்தினை அணிந்து கொள்கின்றனர்)

இவையனைத்தும் செய்து கொண்டுபின் அர்ச்சகர்கள் எம்பெருமானைத் திருப்பள்ளி உணர்த்த வேண்டும்.

சரி..? எப்படி திருப்பள்ளியெழுச்சிச் செய்ய வேண்டும்..?

(இங்கு நாம் சற்று சிந்திக்கவேண்டும். அர்ச்சகர்கள் இவ்வளவு அலங்காரங்கள் செய்து கொள்ள வேண்டுமா..? என்றால், ஆமாம் என்றுதான் சொல்லவேண்டும். எல்லோருமே முக்தி ஒன்றே பிரதானமாகக் கொண்டு கோவில்களுக்கு வருவதில்லை.. பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு வேண்டுகோளுடனோ அல்லது ஏதேனும் கஷ்டங்கள் நிவர்த்திக்காகவோ வருகின்றனர். அவர்கள் அனைவருக்குமே கடவுளிடத்தில் அவர்களது பிரார்த்தனைகளை எடுத்துச் செல்வது – சொல்வது அர்ச்சகர்கள்தாம். அவர்களே உடலில் துர்நாற்றம் பிடுங்க அழுக்குமூட்டையாயிருந்தால் சேவார்த்திகளிடத்து அவநம்பிக்கைத்தான் பெருகும். எனவே அர்ச்சகர்கள் மேற்கூறியவற்றில் எவையெவைக் கடைப்பிடிக்க முடியுமோ அவற்றை செய்தல் நன்று. குறிப்பாக சுத்தமாயிருத்தல் மிக மிக அவசியம்.

இன்னொரு விஷயம் அர்ச்சகர்களே இவ்வளவு அலங்காரம் செய்து கொள்ள வேண்டுமாயின் அவன் ஆராதிக்கும் பெருமாள் இந்த அர்ச்சகனைக் காட்டிலும் பலமடங்கு சுத்தமாகவும் பரிமளத்துடனும், தேஜஸ்ஸூடனும்
இருக்க வேண்டியது மிகமிக அவசியம். இதனை அனைத்து அர்ச்சகர்களும் உணர்ந்து பணியாற்றுதல் வேண்டும்.)

(கடந்த தொடரில் பவித்ரம் தரித்துக் கொள்ள வேண்டியதின் அவசியம் பற்றி பார்ததோம். அதில் மேல்கோட்டையில் மட்டும்தான் அர்ச்சகர்கள் இரு கைகளிலும் பவித்ரம் தரித்துக் கொள்கிறார்கள் என்று சொன்னேன். அங்கு அர்ச்சகர்கள் மட்டுமல்ல அங்குள்ள உடையவரின் திவ்யமங்கள வி்க்ரஹத்திலும் உடையவர் இரு கைகளிலும் பவித்ரம் அணிந்துள்ளார் என்று என் நண்பன் ஸ்ரீ ஸ்ரீராம் அவர்கள் தெரிவிக்கின்றார். )

Advertisements

December 14, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 25

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 11:25 am

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 25
14-12-2009

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
மூன்றாம் அத்யாயம்
ஸமாதிவ்யாக்யானம்

நான்கு பட்சமாக ஊர்த்வ புண்டரம் இட்டுக் கொள்வோமேயானால்

நெற்றியில் – ஸ்ரீவாஸூதேவனையும்,
ஹ்ருதயத்தில் – ஸ்ரீசங்கர்ஷணனையும்
வலதுதோள் – ஸ்ரீப்ரத்யும்னனையும்
இடது தோளில் – ஸ்ரீ அநிருத்தனையும்

தியானித்தவண்ணம் இட்டுக் கொள்ளவேணும்.

12 பட்சத்தில்

நெற்றி – கேசவன்
உதரம் – நாராயணன்
ஹ்ருதயம் – மாதவன்
கண்டம் – கோவிந்தன்
வலதுபக்க உதரம் – விஷ்ணு
வலது தோள் – மதுசூதனன்
வலது கழுத்து – த்ரிவிக்ரமன்
இடது உதரம் – வாமனன்
இடது தோள் – ஸ்ரீதரன்
இடது கழுத்து – ரிஷிகேசன்
பின்புறம் பிருஷ்டபாகத்திற்கு மேல் – பத்மநாபன்
கழுத்து பின்புறம் – தாமேதரன்.
சிரஸ்ஸின் மேல் – ஸ்ரீவாஸூதேவன் (இது சம்ஹிதையில் சொல்லப்படவில்லை ஆனால் சிலர் அனுஷ்டானத்தில் தற்சமயம் உள்ளது).

யக்ஞம், தானம், தபஸ், ஹோமம், போஜனம், பித்ரு கர்மாக்கள் இவையனைத்தும் ஊர்த்வபுண்டரம் இன்றி செய்வோமாயின் பலனற்றதாகிவிடும். ஆகையினால் அனைத்து சித்தியையும் கொடுக்கக்கூடியதான ஊர்த்வ புண்டரத்தினைச் சிரத்தையுடன் தரிக்கவேண்டும்.

ஊர்த்வபுண்டரங்கள் தரித்து அனுஷ்டானங்கள் முடிந்தவுடன் இரண்டு கைகளிலும் மோதிரவிரலில் பவித்ரம் தரித்துக் கொள்ளவேண்டும். (தற்சமயம் எல்லா அர்ச்சகர்களும் ஒரு கையில் (வலது கை) மட்டும் பவித்ரம் தரித்துக் கொள்கின்றனர். ஒருசிலர் தங்கத்தினிலான பவித்ரமோதிரம் மட்டும் தரித்துக்கொள்கின்றனர். மேல்கோட்டை திருநாராயணபுரத்தில் மட்டுமே இன்று வரை அர்ச்சகர்கள் இரு கைகளிலும் பவித்ரம் தரித்துத் திருவாரதனம் முதலானவற்றைச் செய்து வருகின்றார்கள்). பவித்ரம் அணியாமல் பெருமாளுக்குச் செய்யப்பட்ட ஸ்நானம், நைவேத்யம், அர்ச்சனம், நாம் செய்யக்கூடிய தானம், ஜபம், ஹோமம், பித்ருதர்ப்பணம் இவையெல்லாம் பயனற்றது. ஆகையினால் இக்காலங்களில் அவசியம் பவித்ரம் தரித்துக் கொள்ள வேண்டும்.

Create a free website or blog at WordPress.com.