Srirangapankajam

August 31, 2008

PESUM ARANGAN-103

Filed under: PESUM ARANGAN — Tags: , , , — srirangapankajam @ 11:01 pm

 

Chapter-103

மஹாபாஷ்யபட்டர் என்னும் சீடர் நம்பிள்ளையிடத்து, ”உலகப்பற்றின்றியிருக்கும் ஆத்மாவிற்கு பரமபதம் ஸித்தமாவது எவ்வர்த்ததாலே?’ என்று கேட்கின்றார். 

 

அதற்கு நம்பிள்ளை,

 

 ‘ஸ்ரியப்பதியே உபாயம் (இலக்கு அடைவதற்கான வழி) மற்றும் உபேயம்(வழி மூலம் அடையப்படும் இலக்கு) என்று உறுதியாயிருப்பது.

 

நெடுங்காலம் இழந்து கிடந்த வஸ்துவைக் காட்டிக்கொடுத்த ஆச்சார்யன் பக்கத்திலேயே கநக்க விஸ்வாஸத்துடன் இருப்பது

 

ஸ்ரீபாஷ்யத்தின்படி எம்பெருமானார் தர்ஸநமே ஸித்தாந்தமென்றிருப்பது

 

ஸ்ரீராமாயணத்தினாலே பகவத் குணங்களை அனுபவிப்பது

ஆழ்வார்கள் அருளிச்செயல்களை ஓதி பொழுது போக்குவது.

 

இம்மாதிரி வாழ்பவர்களுக்கு இப்புவி வாழ்க்கை தீர்ந்தால் ஸந்தேஹிக்க வேண்டா.  கண்டிப்பாக வைகுந்த மாநகர் புகுவர்”   என்றருளினார்.  ஆகையாலே உபாயோபேய நிர்ணயமும், ஆச்சார்ய விஸ்வாஸமும்,  தர்ஸந விஸ்வாஸமும், பகவத் கல்யாண குண அநுபவ பாரவஸ்யமும் உண்டானால் வைகுண்ட பிராப்ய சித்தியுண்டாம்.

 

நம்பிள்ளையிடத்து ஒரு ஸ்ரீவைஷ்ணவர் வந்து ஸேவித்து, ‘தேவரீர் திருமேனி மிகவே இளத்திருக்கின்றதே?” என்று விண்ணப்பம் செய்கின்றார்.  அதற்கு நம்பிள்ளை ”ஒரு தேய்தல், ஒன்று வளர்தலன்றோ?” என்று அருளுகின்றார்.  ஞான, பக்தி, வைராக்யங்கள் வளர வளர பகவானை நினைந்து நினைந்து நைந்து உள்கரைந்துருகி நம்பிள்ளையின் சரீரம்
தேய்கின்றதை மறைமுகமாக இவ்விதம் அவருக்குத் தெரிவிக்கின்றார்.

 

நம்பிள்ளையிடத்து ஒரு நாள் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் வந்து ஸேவிக்கின்றார்.  பின்பு அவரைப்பார்த்து, ”ஆரோக்யமொன்றுமில்லையோ?” என்று கேட்கின்றார்.  அதற்கு அவர், ‘யுத்தம் பண்ணப்போகிறோமோ?
பெருமாளை ஸேவிப்பதற்குத் தேவையான ஆரோக்யமுண்டு.  ஒரு குறையுமில்லை”
  என்று அருளுகின்றார்.  ஒரு ஸ்ரீவைஷ்ணவனுக்குத் தேவைக்கேற்ப அனைத்தும் இருத்தலே போதும் என்பதை சூசகமாக அவருக்குத் தெரிவிக்கின்றார்.

 
 

                                                                    -Posted on 31st August’2008-

Advertisements

PESUM ARANGAN-102

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 6:35 am

Chapter-102

 
 நம்பிள்ளையும் அவரது சீடர்களும் திருவெள்ளறைச் சென்று அங்குள்ள புண்டரீகாக்ஷரை தரிசித்து திரும்புகின்றனர்.

 

வடதிருக்காவிரியிலும், காவிரியிலும் வெள்ளம் கடலைப்போன்று பிரவாகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றது. 

 

போகும்போது ஓடம் கிடைத்துச் சென்றவர்கள்
திரும்பும் போது ஓடம் ஏதும் கிடைக்காததால் ஒரு தாழியினில் திரும்புகின்றனர்.  நடுவழியில் அஸ்தமித்து, மழை வேறு பெய்யத் தொடங்கியது.  தாழி ஓட்டுபவன் ஒரு சிலர் தாழியிலிருந்து இறங்கினால் கரை சேரலாம். இல்லாதுபோயின் நாம் அனைவரும் மூழ்க வேண்டியதுதான் என்று கூற ஒருவரையொருவர் திகைத்து மரணபயத்தில் நிற்க ஒரே ஒரு அம்மையார் மட்டும், தாழி ஓட்டுபவனைப் பார்த்து, ”நூறுபிராயம் புகுவாய் (நூறாண்டு வாழ்வாய்!) உலகங்கட்கெல்லாம் ஓருயிரான நம்பிள்ளையைப் பேணிக்கொண்டு கரையிலே விடு” என்று அவனை ஆசீர்வதித்து, அடுத்த க்ஷணம் வெள்ளப்பிரவாகத்தினில் தாழியிலிருந்து குதித்து விட்டாள்.  தாழி கரை சேர்ந்தது.  நம்பிள்ளையின் மனம் வருந்தியது.  ”ஓரு ஆத்மா தட்டுபட்டுப் போச்சுதே – என்னப் பாடு அவள் உயிர் படுமோ” என்று துக்கித்துப் போனார்.  அரங்கனிடத்து பிரார்த்தனைப் பண்ணுகிறார். 

 

 ‘ஸ்வாமீ! நீர் வருத்தப்பட வேண்டாம்!.  நான் இங்கே இருக்கிறேன்” என்று ஆற்றின் நடுவிலிருந்து அந்த அம்மையாரின் குரல் ஒலிக்கின்றது.  தாழிக்காரன் விரைந்து அந்த குரல் வந்த திசையில் தாழியை ஓட்டிச் செல்கின்றான்.  அந்த அம்மையார் குதித்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் ஒரு கோரைப்புல் வளர்ந்து ஒரு மேட்டுப்பகுதியில் நின்றுக் கொண்டிருக்க அவளையும் மீட்டு பத்திரமாகக் கரை சேர்க்கின்றான். 

 

அம்மையார் கரையினின்று ஓடோடி வந்து நம்பிள்ளையின் திருப்பாதங்களை நமஸ்கரித்து,

”அடியாள் ஆற்றிலே அடித்துப் போனபோது தேவரீர் அங்கே ஒரு கோரைமேடாய் வந்து ரக்ஷித்து அருளிற்றோ?” என்று கேட்க அதற்கு நம்பிள்ளை,
‘உம்முடைய விஸ்வாஸம் இதுவான பின்பு அதுவும் அப்படியாகாதோ?’ என்று அருளி அவளை மனதார ஆசீர்வதித்தார். 

 

ஆச்சார்யனை பேண வேண்டும் என்ற எண்ணம் உண்டாகின் அரங்கன் அவனைப் பேணி ரக்ஷிக்கமாட்டானோ?

 

                                                                   -Posted on 29th August’2008-

August 29, 2008

PESUM ARANGAN-101

Filed under: PESUM ARANGAN — Tags: , , , , — srirangapankajam @ 11:12 pm

 

Chapter-101

 
 நம்பிள்ளை மஹாவைபவமுடையவராய் வாழ்ந்து கொண்டிருந்தார்.  நஞ்சீயர் அவரோடு கூடவே தமது நூறவது வயது வரை எழுந்தருளி நம்பிள்ளைக் குறித்து சந்தோஷத்துடனிருந்தார்.  நஞ்சீயருக்கு அந்திம தசை நெருங்குகின்றது. 

 

குட்டிக்குறியிளையாழ்வார் என்று நஞ்சீயரின் சீடரொருவர், நஞ்சீயரை பார்த்து, ‘த்வயத்தை அநுஸந்திக்கலாகாதோ?” என்று வினவுகின்றார்.  அதற்கு சீயர், ” அது என், உனக்கு வேண்டாதே எனக்கு வேண்டுகிறதென்?  நடையாடித் திரிபவருக்கு வேண்டாதே, கிடக்கைப்பட்டார்க்கு வேண்டியோ த்வயமிருப்பது?”  என்றருளினாராம்.  (ஸ்ரீவைஷ்ணவர்கள் எப்போதுமே த்வயத்தினை அனுசந்தித்தவாறுயிருக்க வேண்டும்).

 

நஞ்சீயரின் உடல் நலம் நாளுக்கு நாள் மோசமாகியது.   தெற்காழ்வார் பட்டர் எனும் சீடர் நஞ்சீயரிடத்து, ‘உமக்குச் செய்ய வேண்டுவதென்?’  என்று கேட்டார்.  சீயரும், ”நம்பெருமாள் ஸர்வஸ்வதானம் பண்ணி நான் அனுபவிக்க வேண்டுகின்றேன்
(ஸர்வஸ்வதானம் என்றால் பெருமாளின் கவசம், வஸ்திரங்கள் என பெருமாளை மூடிமறைக்கும் அனைத்தும் நீங்கி, அவர் எவ்வாறு ஆவிர்பவித்தருளினாரோ அந்த ஸேவையினை ஸேவித்தல்.  தற்சமயம் நம்பெருமாள் ஜ்யேஷ்டாபிஷேகம் ஒரு நாள்தான் ஸர்வமும் களைந்து ஸேவை சாதிப்பார் – அதுவும் ஏழு திரை தாண்டி – அர்ச்சகாள் தவிர யாருமே ஸேவிக்க இயலாது)

தெற்காழ்வார்பட்டர் இதனைத் திருமாலைத் தந்த பெருமாள் எனும் நம்பெருமாளின் கைங்கர்யபரருக்குத் தெரிவிக்கின்றார்.    அவர் இதனை பெருமாளிடத்து விண்ணப்பம் செய்கின்றார்.  நம்பெருமாள் நஞ்சீயரின் திருமாளிகைக்கேத் தோளுக்குனியானில்
(தோளுக்கு இனியன் என்பது நம்பெருமாளின் பல்லக்குப்போன்றது. நம்பெருமாளை இந்த பல்லக்குகளில் எழுந்தருளப் பண்ணுபவர்களுக்கு ‘ஸ்ரீமாந் தாங்குவோள்” என்று திருநாமம்.  என்ன அற்புதச் சொல் பாருங்கள்!) புறப்படுகின்றார்.

 

 

மடத்து வாசலிலே நம்பெருமாள் நிற்கின்றார்.  நஞ்சீயா; தள்ளாடிபடியே சீடர்களின் உதவியோடு நம்பெருமாளின் முன்னே வந்து ஸேவித்தப்படி நிற்கின்றார்.  நாற்புறமும் திரையிடப்பட்டு நம்பெருமாள், நஞ்சீயர், அர்ச்சகர் ஆகியோர் மட்டும் திரையினுள் இருக்கின்றனர். 

 

தமது மனைவிகள், புத்ரர்கள், தாம் வளர்ந்த க்ஷேத்திரம், சகோதரர்கள், பெருஞ்செல்வம், தம்முடைய தேசவாஸம் ஆகிய அனைத்தையும் துளிக்கூடக் கவலைப்படாமல் துறந்து ஆச்சார்யன் எழுந்தருளியிருந்த தேசமே பரமபாக்கியமென்று எழுந்தருளி, தம்
ஸர்வத்தையும் ஆச்சார்யன் திருவடிக்கே அர்ப்பணித்து,

ஸர்வத்தையும் துறந்த அந்த மஹனீயரின் ஒரே ஆசையினை நம்பெருமாள் நிறைவேற்றுகின்றார்.

 

நம்பெருமாள் சாற்றியிருந்த வஸ்திரங்கள் களையப்பட்டு,

தாம் தன் திருமேனியில் சாற்றியிருந்த ஸர்வத்தையும் துறக்கின்றார் அரங்கன்.     யாருக்குமே இதுவரை அளித்திராத  ‘ஸர்வஸ்வதான’ ஸேவையினை அருளுகின்றார்.  கடைசியாக கண்களில் ஆனந்தநீர் பெருக்கெடுக்க ஆனந்தமாக அரங்கனை அனுபவிக்கின்றார்
நம்சீயர்!.

 

பரமபதத்திற்குத் தயாராகிவிட்டார் நஞ்சீயர்!.  நம்பெருமாளும் சீயரின் அந்தரங்க ஆசையினை பூர்த்திசெய்த நிறைவோடு ஆஸ்தானம் திரும்புகின்றார்.  மஹாசந்துஷ்டியோடு நஞ்சீயர் அருளுகின்றார். ‘பெருமாள் எனக்கு ஸர்வஸ்வதாநம் பண்ணியருளினார்.
நாம் உங்களுக்கு ஸர்வஸ்வதானம் பண்ணுவதற்குத் தயாராகயுள்ளேன். 
(இதில் பெருமாளின்
ஸர்வஸ்வதானம் – மறைவற திருமேனிக் காட்டுகை.    நஞ்சீயர் அருளும் ஸர்வஸ்வதானம் –  மறைவற சரமார்த்த ரகசியங்களை வெளியிடுகை)
அபேக்ஷையுடையவர்கள் அபேக்ஷித்துக் கொள்ளுங்கோள் (வேண்டுபவர்கள் பெற்றுக் கொள்ளுங்கள்)
என்றருளுகின்றார்.  அவரவர்கள் சந்தேகங்களை நிவர்த்திச் செய்கின்றார். 

 

கடைசியில் நம்பிள்ளையை பார்த்து, ”என்னுடைய சீடர் என்றோ ‘லோகாச்சார்யா;’ என்றோ இறுமாந்திராதே!  எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்றிரும்” என்றருளுகின்றார்.  அங்குள்ள எல்லோரையும் அமுது செய்விக்க பண்ணுகின்றார்.  அனைவரும் அமுதுண்டபின்னர்,  தம் திருமாளிகையிலுள்ள கோயிலாழ்வார் நேரே பகவத்ஸேனாபதிசீயர் எனும் சீடர் மடியில் தலையை வைத்து, பின்பழகிய சீயர்
 மடியிலே திருவடிகளுமாக வைத்து,  கண்களை மூடி தம் ஆச்சார்யனான பட்டரின் திருவடிகளையே தியானித்துக் கொண்டு, திருநாடு அலங்கரித்தார்!. 

 

நூறுரு திருவாய்மொழிக்கு அர்த்தமருளிச் செய்து
நிர்வஹித்தருளி சதாபிஷேகம் பண்ணப்பெற்ற தன்னேற்றமுடையவர்,  ஆச்சார்யன் கைங்கர்யமே உயிர்மூச்சாய், பட்டர் திருவடிகளே கதியென்றிருந்த
 நஞ்சீயரின் உயிர் பிரிந்தது. 

 

வேதாந்தியாகவும் பின்னர் நஞ்சீயராகவும், பட்டரின் பரமகிருபைக்கு ஆட்பட்ட அந்த ஆன்மா ஆச்சார்யனைத் தேடி பறந்தது!..  உடல் தனியானது.  அரங்கன் சாற்றி களைந்த திருமாலை, திருப்பரிவட்டம் அனைத்தும் அந்த திருமேனிக்குச் சாற்றி கோயில் கொத்துக்கள் அனைவரும் வந்து ஸேவிக்க, நஞ்சீயரின் திருமேனி யதிசம்ஸ்கார விதியின்படி விசேஷமாய் திருப்பள்ளிப்படுத்தினார்கள்.  சீயருக்கு சீர்மையுடன் திருவத்யயநமும் நடத்தியருளினார்கள்.  நஞ்சீயர் இருக்கும் போதே தர்ஸனநிர்வாகம் நன்கு செய்தருளிய நம்பிள்ளை நஞ்சீயருக்குப் பின்னர் மேலும் அதிக சிரத்தையுடனே நிர்வாகம் செய்து வந்தார்.

 

                                                                   -Posted on 27th August’2008-

August 28, 2008

PESUM ARANGAN-100

Filed under: PESUM ARANGAN — Tags: , , , — srirangapankajam @ 7:29 am

 

Chapter-100

 

நம்பிள்ளையின் கோஷ்டி நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருந்தது.

நம்பிள்ளை உபந்யாசம் முடிந்து போகும் பெருந்திரளைக் கண்டு அப்போதிருந்த ராஜாவே, ‘நம்பெருமாள் திருவோலக்கம் கலைந்ததோ? நம்பிள்ளை கோஷ்டி கலைந்ததோ?‘ என்பனாம். இப்படி வைணவ பெருங்கூட்டத்தினரோடு நம்பிள்ளையின் புகழ் பெருகியது.
அந்த சமயம் முதலியாண்டானின் வம்சம் ஸ்ரீரங்கம் கோவிலில் குறட்டு மணியம் என்னும் ஒரு கைங்கர்யத்தினை நிர்வஹித்து வந்தனர்.  முதலியாண்டானின் மகன் கந்தாடையாண்டான்.  இவருடைய குமாரர் கந்தாடை தோழப்பர்.  இவரும் பெரிய வித்வான்.    ஆயினும் நம்பிள்ளையின் புகழ் கண்டு அசூயைப் பிறந்தது.      நம்பிள்ளை ஒரு நாள் பெரியபெருமாளை ஸேவிக்க வருகின்றார்.  தோழப்பரின் அசூயை அதிகமாகி அனாவசியமாக நம்பிள்ளையிடத்து சீறுகின்றார்.  ஏகமாக நிந்தித்து அவமரியாதை செய்து அவமானப்படுத்துகின்றார். 

 

தோழப்பர் வீடு திரும்புகிறார்.  அவரது மனைவி அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை! ஏதும் அவருக்கு கைங்கர்யம் பண்ணாது உதாஸீனம் செய்தாள்.  தோழப்பர் ‘ஏனிப்படி!’ என்கிறார்.  அதற்கு அவர் மனைவி
”ஆழ்வார்களுடைய அவதாரமோ என்று எண்ணும்படி, பெருமாளுக்கும் மிகவும் உகந்தவராயிருக்கும் நம்பிள்ளையிடத்து கூசாமல் அவமானப்படுத்தினீரே!  இப்படிச் செய்தோமே? என்று வருத்தம் கூட தோன்றாமலிருக்கும் உம்மோடு எனக்கு என்ன ஸம்பந்தம் வேண்டும் இனி? பாகவதநிந்தனைப் பண்ணினவர்களை ஒருக்காலும் மன்னிக்கமாட்டேன் என்று பெருமாளே அருளிச்செய்தும், இதனை அறியாதவர் போலயிருக்கின்ற எனக்கு உங்கள் சகவாஸம் கூடாது.  நிலம் பிளந்தால் இட்டு ரொப்பமுடியாது.  கடலுடைந்தால் கட்ட முடியாது.  மலை முறிந்தால் தாங்கமுடியாது.  அனுதாபமின்றி பாகவத அபசாரம் செய்தால் பொறுத்துக் கொள்ள முடியாது.  ஆகவே நான் என் வழியினைப் பார்த்துக் கொண்டு போகிறேன்!”  என்று உறவை முறித்துக்கொண்டு போக யத்தனிக்கையில்,   தோழப்பர் திகைத்து நின்றார்.  தம் தவற்றினையுணர்ந்து மிகவே வருந்தினார்.  ‘நான் பெரிய வித்வான் என்ற ஆணவத்தினாலும், என்னுடைய வம்சத்தின் செருக்கினாலும் தவறு செய்து விட்டேன்! இனிமேல் நான் என்ன செய்வது?’ என்று வருந்துகின்றார். அதற்கு அவரின் மனைவி, ”ஆற்றினைக் கெடுத்து குளத்தினில் மூழ்கி பரிகாரம் தேடாதீர்.
கெடுத்தவிடத்தேத் தேடுவீர்”
என்று கூற தோழப்பர் நம்பிள்ளையிடத்து மன்னிப்பு கேட்பதற்காக தம்முடைய மனைவியுடன் நம்பிள்ளை திருமாளிகைக்குக் கிளம்புகின்றார்.   பகல் கழிந்து இரவாகிவிட்டது!.

 

அங்கே நம்பிள்ளை தோழப்பரின் கடுமையான வார்த்தைகளினால் மனம் வருந்தி ஏதும் உண்ணாமல் சீடர்களெல்லாரும் சென்றபின்பு முட்டாக்கிட்டுக் கொண்டு நம்பிள்ளைக் கிளம்பி தோழப்பரின் வீட்டு வாசலில் கிடக்கின்றார் மனம் வெம்பி அழுதபடியே!   திருமாளிகை வாசலில் தம் தேவிகளோடு திருவிளக்கையேற்றி வந்த தோழப்பர் வெள்ளைத்துணிப் போர்த்தி ஓர் உருவம் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகின்றார். ‘யார் அது?‘ என்கிறார்.  ”அடியேன் ‘திருக்கலிகன்றிதாஸன்’ என்ற பதில் வருகின்றது.  அதன் பின் தோழப்பர்,  ‘நாமோ மஹா தேஜஸ்வீ!  இவரோடு நம்பெருமாளை ஸேவிக்கும் போது என்ன பேச்சு!  அவரது வீட்டிற்குச் சென்று கேட்போம் என்று கோபமுற்று இப்போது இங்கு வந்திருக்கின்றீரா?” என்று கேட்கின்றார்.
(இப்போது கூட சற்று செருக்கோடுக் கேட்பது போலில்லை? மனைவி இடித்துரைத்த வார்த்தைகளால் சற்றே மனம் வருந்தியது போலிருந்தாலும் மீண்டும் அந்த ஆணவம் சற்றே வார்த்தைகளில் இழைவது போலில்லை?
நம் முன்னோர்கள் செய்த கைங்கர்யத்தினால், நாம் முற்பிறவியில் செய்த புண்ணியத்தினால் ஒரு புனிதமான வம்சத்தில் பிறக்கின்றோம். அவர்கள் செய்த கைங்கர்யத்தில் ஒரு சிலவாவது நாமும் அஹங்காரமின்றி, சிரத்தையோடு, அர்ப்பணிப்போடு, பிறரிடத்து அபசாரப்படாமல் செய்தால்தான் நமக்கு ஸ்ரேயஸ்.   அந்த வம்சத்தில் பிறந்த ஆணவத்தோடு, செருக்கோடு பகவத் கைங்கர்யம் ஏதும் செய்யாமல் அதிகாரத் திமிருடனிருந்தால் நம்மோடு நம் வம்சம் அழிவதும் நிச்சயம்.  இம்மாதிரி சில வம்சங்கள் நம்பெருமாள் கைங்கர்யத்தை விட்டே அகன்றுள்ளன!)

 

அதற்கு நம்பிள்ளை கலங்கியவாறே கூறுகின்றார்,  ‘பெரியபெருமாள் ஸந்நிதியில் முதலியாண்டானின் திருப்பேரனாகிய தேவரீருடைய திருவுள்ளம் கலங்கும்படி அபசாரத்திற்கு ஆளாகிய மஹாபாபியானேன் நான்!.  அடியேனுக்கு இந்த அபசாரம் நீங்க தேவரீர் திருமாளிகை வாசல்லாது வேறு எந்த வாசல் கதி?” என்று தேம்புகின்றார்.

 

நம்பிள்ளையை அப்படியே வாரி அணைக்கின்றார் ஆணவம் அத்தனையும் ஒழிந்த தோழப்பர்.  ‘இத்தனை நாளும் தேவரீர் சிறிது பேருக்குத்தான் ஆச்சார்யர் என்றிருந்தேன்.  இப்போது இந்த உலகத்திற்கே நீர்தான் ஆச்சார்யராயிருப்பதற்கு தகுதியுடையவர் என்றறிந்தேன்.’ என்று புகழ்ந்து நம்பிள்ளைக்கு ‘லோகாச்சார்யர்” என்னும் திருநாமம் சாற்றி மிகவும் உகந்தருளினார்.  அன்றுமுதல் அவரும் அவரது தேவிகளுமாய் நம்பிள்ளையை ஆஸ்ரயித்து அநேக அர்த்தவிசேஷங்களைக் கேட்டறிந்து நம்பிள்ளையிடத்து அதீத அன்புடனேயிருந்தார்.

 

                                                             -Posted on 26th August’2008-

August 26, 2008

PESUM ARANGAN-99

Filed under: PESUM ARANGAN — Tags: , , , , — srirangapankajam @ 12:07 pm

 

Chapter-99

 

 நம்பிள்ளை நஞ்சீயரிடத்துக் கேட்கின்றார். 

‘அவதாரங்கள் எதற்காக?”  என்று!.
அதற்கு சீயர்  ‘ஓரோரவதாரங்களால் பண்ணின ஆனைத்தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பண்ணினவனை அந்தப் பலத்தை அநுபவிப்பிக்கைக்காக
(அவதாரங்கள் பெரும்பாலும் பாகவத அபசாரம் பண்ணியவர்களை அதற்குண்டான
தண்டனையை அநுபவிப்பதற்காகவே
) என்றருளினார்.

 

நம்பிள்ளை, பாகவதஅபசாரந்தான் எது? என்று கேட்கின்றார்.

 

சீயரும், ‘ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்டக்கால் தங்களோபாதி ப்ரக்ருதிமான்களாக
நினைத்திருக்கும் புல்லிமை’
(ஸ்ரீவைஷ்ணவர்களை தாங்களோடு ஒத்தவர்கள் என்று
நினைக்கும் பேதமை
) என்றருளுகின்றார்.

 

நஞ்சீயர் மேலும் கூறுகின்றார்.  ‘பகவத் அனுபவம் பண்ணுமவனுக்கு விஷயாநுபவத்தில் அந்வயமில்லை (பற்றுதலில்லை).  இதனை ஆழ்வார்கள் பலவிடங்களிலும் அருளிச்செய்துள்ளார்கள்.’ என்றருளுகின்றார்.  

 

நம்பிள்ளை நஞ்சீயரை விட்டு அகலாமல் சர்வார்த்த விஷயங்களையும் தெரிந்து, தம் அறிவினை மேம்படுத்தியவராய் சுடர் விட்டு பிரகாசிக்கும் ஜ்வாலைப் போன்று ஸ்ரீரங்கஸ்ரீயையும் நிர்வஹிக்க கணட நஞ்சீயர் பெருமை கொண்டார்.

 

நம்பிள்ளையிடத்து பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத்திருவீதிப் பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர், ஈயுண்ணிமாதவப்பெருமாள் முதலான அநேக
ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆஸ்ரயித்திருந்தனர்.

 

நம்பிள்ளையிடத்து பின்பழகியபெருமாள் சீயர் ஊண் உறக்கமின்றி கைங்கர்யம் செய்து நம்பிள்ளை திருவடிகளே கதியென்றிருந்தார். 

ஒரு நாள் அவருக்கு உடல்நலம் மோசமாகியது.  தம்முடன் அந்தரங்கமாய் பழகும் ஸ்ரீவைஷ்ணவர்களை அழைத்தார்.  ”அடியேன் இன்னும் சிறிது காலம் ஜீவித்திருக்க பெருமாள் சன்னிதியில், ‘ஏழையேதலன்” ‘ஆழியெழச் சங்கும்”  எனும் பாசுரங்களை மனமுருகி அனுசந்தித்து வேண்டிக் கொள்ளுங்கள்” என்று வேண்ட, அவர்களும் அவ்வாறே பிரார்த்திக்க
பின்பழகியசீயரின் உடல்நலம் நன்கு தேறி பழையபடி கைங்கர்யம் செய்து வந்தார். 

 

இந்த விஷயத்தினை நம்பிள்ளையிடத்து சில ஸ்ரீவைஷ்ணவர்கள் ‘பின்பழகியபெருமாள் சீயரின் ஸ்வரூபத்திற்கு, ஞானத்திற்கும் இது தகுமோ?” என விண்ணப்பம் செய்தனர்.  ஒவ்வொருவராக ஏன் இப்படி செய்தார் என்று விசாரித்துவருகையில்
ஒருவர், ‘நம்பெருமாளை விட்டு பிரிய முடியாததினால் இவர் இதனை விட்டு போகமாட்டராயிருக்கும்” எனச் சொல்ல, நம்பிள்ளை இது குறித்து பின்பழகிய ஜீயரிடம் விசாரிக்க சீயர் ‘இவை இத்தனையுமன்று’ என மறுத்தார்.  வேறு என்ன காரணம் என்று வினவ, அதற்கு அவர்,
”தேவரீர் (நம்பிள்ளை) திருமஞ்சனம் கண்டருளி (குளியல் முடித்து) தூயவுடையினைச் சாற்றியருளி உலா வரும் போது குறுவேர்ப்போடே (முத்துமுத்தாய் நீர் திவளைகளுடன்) கூடிய திருமுகமண்டலத்தையும், அடியேன் தேவரீருக்கு சுற்றி சுற்றி செய்கின்ற கைங்கர்யத்தினையெல்லாம் விட்டு விடடு பரமபதத்திற்கு போக விரும்பவில்லை.  இன்னம் சிறிது காலம் இங்கேயிருந்து கைங்கர்யம் செய்வதற்காகவே இதனைச் செய்தேன்”  என்று விண்ணப்பம் செய்ய, நம்பிள்ளையின் திருவுள்ளம் இளகி இரக்கம் கசிந்தது.

 

                                                             -Posted on 24th August’2008-

 

August 24, 2008

PESUM ARANGAN-98

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 11:20 pm

Chapter-98

 

நம்பிள்ளை, நஞ்சீயரிடத்து, ”ஒருவன் தனக்கு ஸ்ரீவைஷ்ணத்வம் (ஸ்ரீவைஷ்ணவ தன்மை) உண்டென்று அறிவது எவ்வாறு?’ எனக் கேட்கின்றார்.

 

இதற்கு நஞ்சீயர் அருளுகின்றார். 

‘அர்ச்சாவதாரத்திற்கு பரத்வமுண்டென்று அறிந்த அளவிலும்’
(அர்ச்சை சொரூபம் (விக்ரஹரூபம்) எல்லாவற்றையும் விட சிறந்தது, மேன்மையானது என்று அறிந்தலும்)

‘ஒரு ஸ்ரீவைஷ்ணவன் பக்கல் புத்ர தாராதிகள் பக்கலுள்ள
ஸ்நேகத்தளவாகிலும் ஸ்நேஹம் பிறந்தளவிலும்’
(ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவரிடத்தும் தம் மனைவி, மக்கள் மேல் காட்டும் பரிவு, நட்பு தோன்றினாலும்)

“ஒரு ஸ்ரீவைஷ்ணவர் கடுத்து வார்த்தையருளிச்செய்தால் தன் நெஞ்சில் சிவிட்குத் தட்டாமே போக ரூபமாய் இருந்தளவிலும்“
(யாராவது ஒரு ஸ்ரீவைஷ்ணவர் கோபமாய் நம்மிடத்து பேசிய போதும் தாம் அதனைப் பொருட்படுத்தாது,  அவரிடத்து பகைமைப் பாராட்டாமலும் தம் மனதளவில் சந்தோஷமாகயிருந்தாலும்)

தமக்கு ஸ்ரீவைஷ்ணத்வமுண்டென்று அறியலாம்.”  என்று அருளுகின்றார்.

 

நம்பிள்ளை ஒரு நாள் நஞ்சீயரிடத்து ஸ்ரீபாஷ்யம் வாசித்துக் கொண்டிருக்கின்றார்.  அதுசமயம் பெருமாளுக்கு அமுது தயாராகி விட்டது.  நஞ்சீயர் நம்பிள்ளையை பெருமாளுக்கு அமுது செய்விக்கச் சொல்கின்றார். 

 

 நம்பிள்ளை அதற்கு  ‘அடியேனுக்கு திருவாராதனக் கிரமம் தெரியாது” என்கிறார்.  அதற்கு சீயர், ‘நானோ சாலக்கிராமம் திருவாராதனம் மட்டுமே அறிந்திருக்கின்றேன்!’  நீர் த்வயத்திலிலுள்ள இரண்டாவது வாக்யத்தினை (ஸ்ரீமதே நாராயணாய!) அநுசந்தித்து திருவடி விளக்கி அமுது செய்விக்க வேண்டியதுதானே?”  என்றருளுகின்றார். 

 

அதற்கு நம்பிள்ளை, ‘பெருமாள் அர்ச்சாவதாரமாய் உகந்தருளின இடங்கள் பலவிடத்து இருக்க ஒரு இடத்திலே மட்டும் அமுது செய்தருளுவது எப்படி? என்கிறார்.  அதற்கு சீயர். ”த்வயத்தில் பூர்வம் (முதலில் உள்ள வாக்யத்தொடர்) உத்ரம் (இரண்டாவதாக உள்ள வாக்யம்) ஆகிய இரண்டிற்கும் நடுவே ‘ஸர்வமங்கள விக்ரஹாய” என்கிற விசேஷமான பதத்தினை உச்சரித்து அமுது செய்ய பண்ண வேண்டியதுதானே”  என்று பதிலுரைக்கின்றார்.

 

இதனால் நாம் அறிவது நம் பூர்வாச்சார்யர்கள் த்வயமில்லாது வேறு மந்திரங்கள் கொண்டு திருவடி விளக்கமாட்டார்கள் எள்பது தெளிவு!.

 

=============================================

 

அர்ச்சை ரூபத்தில், அரங்கனும், அருளாளனும் அதிகமாகவே பேசியிருக்கின்றார்கள்.   இன்னமும் பேசிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.  ஸ்ரீகிருஷ்ணப்ரியா ஒரு முறை அரங்கன் மீது சில போற்றித் துதிகள் மட்டுமே எழுதி அனுப்பியிருந்தார்.   நான் தவறுதலாக அதனை 108 போற்றித்துதிகள் அனுப்பியுள்ளார்கள் என்று எழுதிவிட்டேன்.  அன்றிரவு ஸ்ரீகிருஷ்ணப்ரியாவின் கனவில் அரங்கன் தோன்றி ”108ம் பூர்த்தி செய்“ என்றருள இதோ அந்த 108 போற்றித் துதிகள்.   அரங்கனது ஆணையால் அருளப்பெற்ற இந்த போற்றித்துதிகளால் நாமும் அவனைப் போற்றி உய்வோம்.

 

namkrishna94’s message in Tamil –
1 அரங்கனேப் போற்றி
2 நடை அழகனேப் போற்றி
3கௌஸ்துப மணியனேப் போற்றி
4காவிரி ஸ்னானனேப் போற்றி
5முக்கொடவர் காததவனேப் போற்றி
6ஒருகொடவர் சுமந்தவனேப் போற்றி
7உலகாச்சாரியார் துதித்தவனேப் போற்றி
8ஒய்யரனேப் போற்றி
9நம்பெருமாளேப் போற்றி
10என்பெருமாளேப் போற்றி

11நன்மதி அருள்பவனேப் போற்றி
12அழகனேப் போற்றி
13அலங்கார ரூபனேப் போற்றி
14புன்னகைத்தவனேப் போற்றி
15ஆழ்வார் பன்னிருவரால் பாடப்பட்டவனேப் போற்றி
16காவிரி தாண்டி சென்றவனேப் போற்றி
17வனவாசம் சென்றவனேப் போற்றி
18அமலனாதிபிரானேப் போற்றி
19பன்னிரு மாதம் உற்சவனேப் போற்றி
20தங்க விமானம் கொண்டவனேப் போற்றி
21திருவரங்கத்தானேப் போற்றி
22ஐயனேப் போற்றி
23அரசனேப் போற்றி
24முன்னோர்களால் துதிக்கப்பட்டவனேப் போற்றி
25உறையூர் நாச்சி மணாளனேப் போற்றி
26பள்ளி கொண்டவனேப் போற்றி
27சுய மூர்த்தியேப் போற்றி
28அடியவர்களை ஆட்கொண்டவனேப் போற்றி
29மன்மத மன்மதனேப் போற்றி
30ராமபிரான் துதித்த பெருமாளேப் போற்றி
31திருவரங்க அரசனேப் போற்றி
32பெரிய பெருமாளேப் போற்றி
33சினம் இல்லாதவனேப் போற்றி
34தாமரை கண்ணானேப் போற்றி
35கண்களால் அருள்பவனேப் போற்றி
36அவதாரனேப் போற்றி
37திவ்ய தேசத்தில் முதலானவனேப் போற்றி
38பெரிய கோபுரதனேப் போற்றி
39அகண்ட காவிரியனேப் போற்றி
40அருள் பாலிப்பவனேப் போற்றி
41ரங்கநாதனேப் போற்றி
42சோழ நாட்டானேப் போற்றி
43ராமானுசர் போற்றியவரேப் போற்றி
44மாமுனிவன் போற்றியவரேப் போற்றி
45தேசிகர் போற்றியவரேப் போற்றி
46பிரம்மனை தாங்கியவனேப் போற்றி
47பாமரரை கவர்ந்தவனேப் போற்றி
48நீதியை காப்பவனேப் போற்றி
49கேட்ட வரம் தருபவனேப் போற்றி
50துலுக்க நாச்சி மணாளனேப் போற்றி
51உபய நாச்சி மணாளனேப் போற்றி
52மாயவனேப் போற்றி
53சாதுவனேப் போற்றி
54பெரிய நம்பியை ஆட்கொண்டவனேப் போற்றி
55தொண்டரடிப்பொடியை ஆட்கொண்டவனேப் போற்றி
56வேடுபரியானேப் போற்றி
57வைரமேப் போற்றி
58வைர முடியானேப் போற்றி
59முத்து பந்தலேப் போற்றி
60ஸ்ப்தப்ராகாரனேப் போற்றி
61ஆதி ப்ரமோத்ஸவமேப் போற்றி
62அரங்க நாயகியின் மணாளனேப் போற்றி
63ஈரேழு லோகத்தை ஆள்கின்றவனேப் போற்றி
64மாம்பகியேப் போற்றி
65அதிமூலமேப் போற்றி
66மூலப்பொருளேப் போற்றி
67கஜேந்த்ராழ்வாந் துதித்தவனேப் போற்றி
68தென் திசை நோக்கியவனேப் போற்றி
69கீழ் திசை பாதம் நீட்டியவனேப் போற்றி
70பச்சை மாமலையேப் போற்றி
71அச்சுதனேப் போற்றி
72பெரிய பிராட்டி மணாளனேப் போற்றி
73பூலோக வைகுந்தனேப் போற்றி
77திருப்பள்ளிஎழுச்சி நாயகனேப் போற்றி
75அரங்க மாநகர நாயகனேப் போற்றி
76சதுர் யுகத்தானேப் போற்றி
77ஏகமுகத்தானேப் போற்றி
78நலம் தருபவனேப் போற்றி
79பரம்பொருளேப் போற்றி
80தீங்கு தராதவனேப் போற்றி
81சேரகுலவல்லி மணாளனேப் போற்றி
82என் தெய்வமேப் போற்றி
83கல்பக விருட்சமேப் போற்றி
84மும்மூர்த்தியில் நடு நாயகமேப் போற்றி
85நிர்மலனேப் போற்றி
86கஸ்தூரி திலகனேப் போற்றி
87அடியார்களை படைத்தவனேப் போற்றி
88மாமுனிவனுக்கு தனியன் அருளியவனேப் போற்றி
89கோயில் பெருமாளேப் போற்றி
90சேஷன் மீது பள்ளிகொண்டவனேப் போற்றி
91பிரம்மனின் படப்பை காப்பவனேப் போற்றி
92நடைக்கு எடுத்துக் காட்டேப் போற்றி
93எழுச்சியேப் போற்றி
94எழுச்சியின் சின்னமேப் போற்றி
95வல்லவனேப் போற்றி
96பிரம்மோட்ஸவமேப் போற்றி
97வஸந்தோத்ஸவமேப் போற்றி
98ஆழ்வார்களை ஆட்கொண்டவனேப் போற்றி
99முன்னோர்களை ஆட்கொண்டவனேப் போற்றி
100பெரிய கருடனை உடையவனேப் போற்றி
101சுடரேப் போற்றி
102இரங்கி அருள் தருபவனேப் போற்றி
103ஈர்ப்பு சக்தி உடையவனேப் போற்றி
104ஒளஷதமேப் போற்றி
105 பக்தர்களை கவர்பவனேப் போற்றி
106பரந்த உள்ளமேப் போற்றி
107அடியாளை ஆட்கொண்டவனேப் போற்றி
108)ரங்க நாச்சி சமேதா ஸ்ரீ அழகிய மணவாளனேப் போற்றி போற்றி

 

 

                                                              -Posted on 23rd August’2008-

 

August 23, 2008

PESUM ARANGAN-97

Filed under: PESUM ARANGAN — Tags: , , , — srirangapankajam @ 6:27 am

Chapter-97

 

உபதேசம் என்றால் வெறும் வாக்கினால் சொல்வது மட்டுமாகாது.  எம்முறையிலாவது பிறரை அனுஷ்டிக்கச் செய்வதே உபதேசமாகும்.  அதோடு ஒருவன் அனுஷ்டிப்பது போல், உபதேசத்தினைக் கேட்பதால் மட்டும் அனுஷ்டிக்க முடியாது.  இதனால்தான் ஸ்ரீபகவான் கண்ணன் கீதையில்

 

‘தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஸ்னேன ஸேவயா

 

‘மஹான்களின் அருகேயிருந்து ஸேவை செய்து அவர்கள் எப்படி அனுஷ்டிக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும்” என்று அர்ஜூனனுக்கு உபதேசிக்கின்றார்.  இதனை குருபரம்பரையில் நமது ஆச்சார்யர்கள்  சிரத்தையுடன் கடைப்பிடித்திருக்கின்றனர்.  நஞ்சீயரிடத்து நம்பிள்ளை இவ்வாறே இருந்துள்ளார்.  சற்றும் பிரியாது அருகேயேயிருந்தமையால் நஞ்சீயரிடத்து தமக்கு ஏற்படும் சகல சந்தேகங்களையும் நிவர்த்தித்துக் கொள்கின்றார்.  சகல சாஸ்திரங்களையும், அதன் ஆழ்பொருளையும் கசடற கற்கின்றார்.

 

நம்பிள்ளை நஞ்சீயரிடத்து ஒரு சரணாகதி பற்றி வினவுகின்றார்.

‘இதர உபாயங்களுக்கு (சரணாகதி தவிர்த்த மற்றவைகளுக்கு) ப்ரமாணமும் (சாட்சிகளும்) பஹூளமாய் (ஏராளமாய்) அநுஷ்டாதாக்களும் (சரணாகதி தவிர்த்த மற்றைய வழிமுறைகளை அனுஷ்ப்பவர்களும்)
பலராயிருக்க (ஏராளமானோர் இருக்க) இதுக்கு (சரணாகதி மார்க்கத்திற்கு) ப்ரமாணமும் சுருங்கி அநுஷ்டாதாக்களும்(அனுஷ்டிப்பவர்களும்) சிலரேயிருப்பானேன்’ 
எனக் கேட்கின்றார். 

 

 நஞ்சீயர் அருளுகின்றார்.
‘நான் நினைத்திருக்கும் அதுக்கு அவ்வருகு(உபாயம்) உமக்கு வேண்டுவது ஒன்றுண்டோ?

(அதாவது சரணாகதியைப் பொறுத்தவரை ஆச்சார்யனுடைய சிந்தனையைத் தவிர சிஷ்யனுக்கு வேறு எந்த விதமான ப்ரமாணமோ, உபாயமோ அவசியமில்லை.) 

 

‘இனி ப்ரமாணங்கள் காணவேண்டுமென்று நினைத்திரேன்”
(என்னால் அனுபவபூர்வமாக நான் என்னுடைய ஆச்சார்யன்(பட்டர்) அருகிலிருந்து உணர்ந்த இவ்விஷயத்திற்கு ப்ரமாணம் அவசியமில்லை!)

 

இதற்கு ப்ரமாணம் என்று வேண்டியதேயில்லை.” 
இருவர் கூடி ஓராற்றிலே இறங்கிபோகாநின்றால் (இறங்கிப் போகும்போது)  ஆற்றிலமிழ்ந்தவனை அமிழாதவன் கையைப் பிடித்து கரையேற்றுகைக்கு ஒரு பிரமாண அபேக்ஷை(உபாஸித்தல்) வேண்டுமோ
?’
(இதில் ஆற்றில் அமிழாதவன் ஆச்சார்யன் – ஆற்றில் அமிழ்ந்தவன் நம்மைப் போன்ற சம்ஸாரிகள். நம்மை கரை சேர்ப்பது ஆச்சார்யன் திருவடிகள் சம்பந்தமே)

 

ஒரு குள்ளன், ஒரு நெடியவன் இருவரும் ஆற்றில் இறங்குகிறார்கள் என்று கொள்வோம்.  குள்ளன் ஆற்றில் மூழ்க நேரிடின், நெடியவன் கையைப் பிடித்துக் கொள் என்று கரையிலிருந்து ஒருவன் சொல்லவும் வேண்டுமோ? அவன் கையை இந்த குள்ளன் பிடிக்கைக்கு ஒரு விதி வேண்டுமோ?”

(இதில் குள்ளன் நம்மைப்போன்றோர்.  நெடியவன் ஆச்சார்யன்! நாம் பற்ற வேண்டியது ஆச்சார்யன் திருவடிகளை மட்டுமே!)

 

ப்ரமாணங்கள் வேண்டுமாயினும், குறையேயில்லை(ஏராளமாகயுள்ளது)

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
யோ வை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை!
தம் ஹ தேவமாத்ம புத்திப்ரகாசம்
முமுக்ஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே !!
(எவன் ப்ரம்மனை முன் படைத்தானோ, எவன் வேதங்களையும் அவனுக்கு உபதேசித்தானோ, அப்படிப்பட்ட தேவனும், தன் விஷயமான ஞானத்தினைப் பிரகாசிப்பிப்பவனுமான பரம புருஷனை, மோக்ஷமடைய விரும்பும் நான் சரணமடைகின்றேன்.)

 

தஸ்மாந் ந்யாஸமேஷாம் தபஸாமதிரிக்தமாஹூ:
ஆகையால் ந்யாஸத்தை(சரணாகதியை) இந்த தபஸ்களுள் மேலானதாகச் சொல்லுகிறார்கள்

 

என்று சரணாகதியினைப் பற்றி விரிவாக நம்பிள்ளைக்கு நஞ்சீயர் அருளுகின்றார்.

 

+++++++++++++++++++++++++++++++++++++++++++

 

நம்பெருமாள் திருவடிகளே கதியென்று கிடப்பவர் விதியும் விருப்புற்று கேட்கின் மாறுமோ?.   எனது அருமை அண்ணா ஆர்.வீ.ஸ்வாமி.  கடந்த 7.7.2008 அன்று அவருக்கு கடுமையான நெஞ்சுவலி.  ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சைப் பெற்றவர் வேறு!  இம்முறை 98 விழுக்காடு ரத்தகுழாயில் அடைப்பு – பிழைப்பதரிது என்று உரைத்தார்கள் மருத்துவ நிபுணர்கள்.  நான் இங்கு கருவறைச் சென்று அரங்கனிடத்து பிரார்த்தித்தப்படி நிற்கின்றேன்.  சிறிது நேரம் கழித்து அபாயமில்லை.  ஆபத்தானக் கட்டத்தினைத் தாண்டி விட்டார் என்று செய்தியறிந்து வெகுவாக ஆறுதலைடைந்தேன்.  இவர் திவ்யதேச மணிமாலை என்னும் 108 திவ்யதேச கவிதைக் கடலை இயற்றிக்கொண்டுள்ளார். ஏறத்தாழ 4350 பாக்களை படைத்தும் இன்னும் அது தொடாந்த வண்ணமுள்ளது.  அன்றிரவு அந்த கடுமையான நெஞ்சு வலியிலும் ஒரு கவிதையொன்றை, அரங்கனுக்கு எழுதுகின்றார்.  அதனை அடியிற் கொடுத்துள்ளேன் தாங்களின் அனுபவத்திற்காக!

          

 

                          நேரில் வந்து பேச வேண்டுமே!

 

அஞ்சலென்று அபயக்கரம் அரங்கனே!
  நீ அளித்த பின்னர் நெஞ்சுவலி எனக்கு வருவதோ?
எஞ்சி நிற்கும் உனது பணி முடிக்குமுன்னர்
  எனக்கு அந்தக் காலதேவன் அழைப்பு விடுவதோ?
அஞ்சனையின் மைந்தன் தொழும் ராமன்
  நீயும் அருகிருக்க அச்சமெந்தன் மனதில் வருவதோ?
கஞ்சனைக் கடிந்த எங்கள் கண்ணன் உன்னைப்
  பிள்ளையாகக் கொண்ட பின்பும் கலக்கம் வருவதோ?

 

கொஞ்ச நேரம் நீ துயில அந்த நேரம் பார்த்து
  அந்தக் கோள்கள் ஆட்டம் போடத் துணிவதோ?
தஞ்சமெனத் தாளிணைகள் தந்த குருவின்
  பத்து நூறு ஆண்டதுவும் நெருங்கும் போதினில்
தஞ்சமெனக் கொண்டவரைத் தரணியெங்கும்
  வைணவத்தை வளர்க்கும்பணி துவங்கும் வேளையில்
கொஞ்சம்கூடப் பயமுமின்றி கோதையவள் பிள்ளை
  என்னை இதய நோயும் கொண்டு போவதோ?

 

கெஞ்சிடேன் இவ்வுலக வாழ்க்கை தொடர – நீயும்
  அருள்கவென்று கேசவனே!  எந்தன் அமுதனே!
அஞ்சினேன் என்றெண்ணிடாதே அரங்கனே! – நீ
  கொடுத்தப் பணிகள் அத்தனையும் முடிக்கும் முன்னரே
நஞ்சினையே அருந்தினாலும் நாரணா! – உன்
  அருளிருக்க நஞ்சு அதுவும் வேலை செய்யுமோ?
கொஞ்சியுன்னைப் பாடும் ஆவல் குறையுமுன்னர்
  மறைய மாட்டேன் கொற்றவனே!  எந்தன் அரங்கனே!

 

சஞ்சலங்கள் ஏதுமின்றி சகஜ வாழ்க்கை வாழ்ந்து
  யானும் சரஞ்சரமாய் கவிதை பொழியவே
நெஞ்சிலமர்ந்து நோயை நீக்கி நிமலனே!
  நீ காட்சி தந்து நேரில் வந்து பேச வேண்டும்!
விஞ்சி உனக்கொருவரில்லை! விண்ணவரும் தொழுது
  ஏத்தும் வேங்கடவா! எந்தன் அழகனே!
துஞ்சிடாது உனது பணிகள் தொடர்ந்து யானும்
  செய்யத் தேவராஜன் உந்தன் ஆணை வேண்டுமே!

 

நெஞ்சம் நிறைந்த மனைவியோடு நேசம் மிக்க
  பிள்ளைகளும்,  பாகவதர், சுற்றம்,  நட்பிவர்
அஞ்சி மனதில் அரங்கனே! நீ அபயம் தர
  வேண்டுமென்று அர்ச்சனைகள் செய்து தொழுகின்றார்!
பஞ்செனப் பறந்து இதய நோயும் போக வேண்டும்
  என்று பரிதவித்துக் கண் பனிக்கின்றார்!
கொஞ்சமேனும் கவலையின்றி குணக்கடல் உன்
  உள்ளமறிந்து குவலயத்தில் யான் உழல்கின்றேன்!

 

கெஞ்சி உன்னை முரளிபட்டர் கருவறையில்
  திருவடியில் கதறி உன்னைக் கைத்தொழுகின்றார்!
அஞ்சலென்று அபயம் தந்த எந்தன் குரு
  ரங்கராஜ பட்டர், கோட்டியூரின் ஸ்வாமியும்
பஞ்சமின்றிக் கருணைப் பொழியும் எங்கள்
  எதிராஜருடன், பிராட்டியுமே பரிந்துரைக்கவே
நெஞ்சினிலே நீயமர்ந்து பேச வேண்டும்
  அதனை விட உலகில் உயர்ந்த இன்பம் உள்ளதோ?

                 

                                       அடியேன்!
                       ரங்கநாத ராமானுஜ தாஸன்
                                (ஆர்.வீ.ஸ்வாமி)
                                        07.07.2008

 

தற்சமயம் உடல் நலம் நன்கு தேறி வருகின்றார்.  நீடித்த ஆயுளும்,  நோயற்ற வாழ்வும்,  குறைவற்ற கவிதையும் படைக்க நாம் அனைவரும் அரங்கனை வேண்டுவோம்!.

 

                                                                              -Posted on 19th August’2008-

August 19, 2008

PESUM ARANGAN-96

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 11:34 pm

பட்டர் நஞ்சீயருக்குத் திருவாய்மொழிக்கு பிள்ளான் என்பவரது உரைப்படி ஆறாயிரமும் நன்றாக உபதேசித்தார்.   நஞ்சீயரும் அதனை நன்றாக அறிந்து பட்டரை அனுசரித்து அவருடைய அனுமதியைப் பெற்று, திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரம் படியாக ஒரு
வ்யாக்யானம் அருளிச்செய்தார்.  ‘அதனைத் தெளிவற பட்டோலை கொண்டு எழுதி தருவார் எவரும் உண்டோ?’ என்று விசாரிக்க, நஞ்சீயரின் சீடர்கள் நம்பூர் வரதராஜன்
என்பவரை அறிமுகப்படுத்தினர்.  நம்பூர் வரதராஜனின் எழுத்து மணி மணியாய் இருந்தது.   ஆயினும்  நஞ்சீயருக்கு ஒரு சிறிய நெருடல்.  ‘இது திருவாய்மொழிக்கான வ்யாக்யானமாகையினாலே
ஒரு விலக்ஷணரைக் (வைஷ்ணவ லக்ஷணம் பூர்ணமாகக் கொண்டவர்) கொண்டு எழுதுவிக்க வேண்டும்.   வெறும் திருவிலச்சினம், திருநாமம் மாத்ரமுண்டான இவரைக் கொண்டு எழுதுதல் தகுமா?
என்று யோசிக்கலானார்.  வந்தவர் புத்திசாலி.  ‘அடியேனையும் தேவரீர் திருவுள்ளத்துக்கு வரும்படியே திருத்திப் பணிகொள்ளலாகாதோ?’ என்று கேட்க, நஞ்சீயர் மிகவும்
திருவுள்ளம் உகந்தார். பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்து பூர்ணமாய் பிரபந்நராக ஆக்குகின்றார்.

அவருக்கு ப்ரபந்நநிஷ்டைகளை பூர்ணமாக உபதேசித்து, தாம் எழுதிய திருவாய்மொழிக்கான ஓன்பதினாயிரம் படியையும் ஒரு முறை , தெளிவாக உபதேசித்து அருளுகின்றார்.    தாம் வியாக்யானம் எழுதிய பட்டோலையை அவர் கையிலே தருகின்றார். 
வந்தவர், ‘அடியேன்! ஊரிலே போய் எழுதிக்கொண்டு வருகிறேன்!” என்று கூறி அனுமதி பெற்று காவேரியினைக் கடந்து தம் ஊருக்குச் செல்கின்றார்.  ஓரிடத்தில்
காவேரியில் ஆழம் அதிகமிருக்கவே, தம்முடைய தலையில் நஞ்சீயரின் ஓலைப்பிரதிகளைக்
கட்டிக் கொண்டு நீந்துகின்றார்.  அவ்வோலைப் பிரதிகள் தவறுகின்றன. காவேரியின் பிரவாகத்தில் அடித்துச் செல்லப்படுகின்றது.  ‘பட்டோலை போய் விட்டதே! 
இனி நாம் என்ன செய்யக் கடவோம்
” என்று சோகமாகின்றார்.  பின்னர் ஒருவாறு தேறி
நஞ்சீயர் தமக்கு அருளிச் செய்தமையை நினைவுக்குக் கொண்டு வந்து அர்த்தங்களைத் தப்பாமல் பட்டோலைச் செய்கின்றார். அவர் தமிழ் புலமை மிக்கவரானதால் சில பதங்களுக்கு தமக்குதித்த கம்பீரமான பதங்களாலே வியாக்யானம் எழுதுகின்றார்.   மிக அழகாக நேர்த்தியாக
பட்டோலைப் படுத்தி திரும்பவும் நஞ்சீயரிடத்து வந்து அதனைச் சமர்ப்பிக்கின்றார். 

நஞ்சீயர் தாம் அருளிச் செய்தமை  சிலவிடங்களில் மாறுபட்டு அதியற்புதமான வியாக்யானங்களைக் கண்டு, ‘இதென்?” என்று வினவுகின்றார்.  நம்பூர் வரதராஜன்
நடுங்குகின்றார்.  பேசாது நிற்கின்றார்.  ‘நீர் பயப்பட வேண்டாம்! உண்மையைச் சொல்லும்!” என்கிறார் நஞ்சீயர்.  நடந்ததை கூறுகின்றார் வரதராஜன். 
நஞ்சீயர் வியந்து, ‘இவருடைய புத்தி விசேஷமிருந்தபடி என்தான்! இவர் மஹா சமர்த்தர்!  நன்றாக எழுதியிருக்கின்றார்” என்று புகழ்ந்து மிகவும் திருவுள்ளமிரங்கி வரதராஜனை
வாரியணைக்கின்றார்.

‘இவர் நம்முடைய பிள்ளை, திருக்கலிகன்றிதாஸர்” என்று திருநாமஞ்சாற்றி,  தம்முடனேயே அவரை அரைக்ஷணம் கூடப் பிரியாது ஸகலவித சாஸ்திரங்களையும்
அர்த்த விசேஷங்களையும் அவருக்கு அருளிச் செய்கின்றார். அவரும் ‘சீயரையல்லாது
‘தேவுமற்றறியேன்’
என்று எழுந்தருளியிருந்தார்.  சீயர் நம்முடைய பிள்ளை என்று அணைத்தமையால் அன்று முதல் வரதராஜன்  ‘நம்பிள்ளை’  என்றே அழைக்கப்பட்டார்.

 

_______________________________________________

 

ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரம்படி, 32000படி, என்கின்றோமே,  இந்த ‘படி’ என்றால் என்ன?

படி என்றால் அளவு.   உயிர்மை எழுத்து உயிரெழுத்து ஆகிய இரண்டும் சேர்த்து 32 அட்சரம் கொண்டது
ஒரு க்ரந்தம்.

ஒரு க்ரந்தம் என்பது தமிழில் ஒரு படி.

6000 க்ரந்தம் கொண்டது விஷ்ணு புராணம். 
குருபரம்பரை ஆறாயிரப்படியும், விஷ்ணுபுராணமும் ஏட்டில் சம அளவில் இருந்தமையால்
‘குருபரம்பரை ஆறாயிரப்படி ‘ என்றழைக்கப்பெற்றது.

 

இதேப் போன்று இராமாயணம் 24000 க்ரந்தம்.  இதுவும் பெரியவாச்சான் பிள்ளை 24000 படியும் சம அளவில்
இருந்ததால் பெரியவாச்சன் பிள்ளை 24000படி என்றழைக்கப்பெற்றது. 

சுதப்பிரகாசிகை 36000 க்ரந்தம்.  இதுவும் ஸ்ரீபாஷ்யமும் ஒரே அளவில் இருந்தமையால் ஸ்ரீபாஷ்யம் ஈடு 36000படி என்றழைக்கப்பெற்றது.

 

                                                                              -Posted on 18th August’2008-

August 18, 2008

PESUM ARANGAN-95

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 10:52 am

Chapter-95

பட்டரிடத்து அரங்கன் மேலே வீடு தந்தோம் என்றவுடனேயே ‘மஹாபிரஸாதம்’ என்று ஏற்றுக்கொண்ட பிறகு பட்டருக்கு ஒரு சந்தேகம். இதேப் போன்று நம்பெருமாள் அங்கு ஸேவை சாதித்தால்தான் போவேன் என்று அடம் பிடிக்கின்றார் அரங்கனிடம்!. நெகிழ்ந்து போனான் அரங்கன்!.

பக்தி என்பது எப்படியிருக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்துகின்றார்கள்.

ஸ்ரீமத் பாகவதத்தில் ப்ருது சக்ரவர்த்தி என்றொரு மகாராஜன். மஹாவிவேகி. ஒரு முறை இந்திரனே இவரது பாதத்தினைத் தொட்டு வணங்கி மன்னிப்புப் பெற்றவர். இவருக்கு ஸ்ரீமந்நாராயணனே நேரில் காட்சியளித்தார்.
பட்டரைப்போன்றே இவரும் இரு கைகளையும் மேலே தூக்கி நமஸ்கரித்தார். கண்களிருந்து ஆனந்தக்கண்ணீர் பெருக்கு!. கண்ணீர் பெருக்கெடுத்ததால் பார்க்கமுடியாத ஒரு நிலை!. தழுதழுத்த நெஞ்சினால் பேச்சும் போயிற்று! ஹ்ருதயத்தினால் ஸ்ரீபகவானை ஆனந்தமாக அணைத்துக் கொண்டார். கட்டுண்ட ஸ்ரீபகவான் அவரிடத்து வசமானார். இவரைப் பார்த்து பகவான் கருணைப் பொங்கி வரமொன்றைக் கேட்குமாறு அருளினார். அழியக்கூடிய பொருள்களை வரமாக கேட்கவில்லை. அழியாத அளவற்ற பக்தி ஒன்றினை மட்டுமே பகவானிடத்தில் யாசித்தார்.

ந காமயே நாத ததப்யஹம் க்வசித்
ந யத்ர யுஷ்மச் சரணாம்புஜாஸ்வ:
மஹத்தமாந்தா; ஹ்ருதயான் முகச்யுத:
விதத்ஸ்வ கா;ணாயுதமேஷ மே வர:

தங்கள் சரண கமல பக்தியை உண்டு பண்ணும் கதா ச்ரவணம் (பகவத் கதைகளைக் கேட்கும் பாக்கியம்) இல்லாதது எதுவாயினும், அது மோக்ஷமே ஆயினும் எனக்குத் தேவையில்லை! மஹான்களுடைய உள்ளத்தில் நிரம்பி, அங்கு இடமில்லாது அவர்கள் முகத்தின் வழியாக ததும்பி வெளிவரும் பகவத் குணங்களைக் கேட்பதற்குப் பதினாயிரம் காதுகளைக் கொடுக்க வேண்டும்! இதுவே எனக்கு வேண்டிய வரம்! என்று திட்டவட்டமாக யாசிக்கின்றார்.

இது போன்று பகவத் குணங்களை கேட்க வேண்டும். அதனை அவனது அர்ச்சையில் கண்டு மகிழ வேண்டும்.
வைணவமே அனுபவம்தானே!

கங்கை யமுனை ஆகிய இரண்டு நதிகளின் நடுவிலுள்ள ஒரு புண்யமான இடத்தில் ப்ருது மகாராஜன் விஷயத்தில் பற்று அற்றவராய் வசித்து வந்தார். (இரண்டு புண்ய நதிகள் நடுவே ஒரு க்ஷேத்திரம் இருக்குமாயின் அந்த இடமே மஹா பவித்ரமான இடமாகும். அம்மாதிரி இடங்களில் வசிப்பவர்கள் மஹா பாக்கியவான்கள்! அரங்கனுக்கும் இதுதான் உகப்பு! அயோத்தியில் சரயு, தமஸா ஆகிய இரு நதிகளுக்கிடையேதான் பள்ளிக்கொண்டிருந்தான் – இங்கு கங்கையிற் புனிதமாய காவிரி, கொள்ளிடம் ஆகிய இருகரைக்கு நடுவே!)
ஸத்ரயாகம் என்றவொரு மஹாயாகத்தினை நடுத்துகின்றார் இந்த ப்ருது மஹாராஜா. இந்த யாகத்தில் தேவர்களும், ப்ரும்மரிஷிகளும், ராஜரிஷிகளும் கலந்து கொண்டனர். இந்த யாகத்தின் நடுவில் அரசன் மீண்டும் யாசிக்கின்றான்.

தேஷாமஹம் பாத ஸரோஜ ரேணு
மார்யா வஹேயாதி க்ரீடமாயு:
யம் நித்யதா பிப்ரத ஆஸூ பாபம்
நஸ்யத்யமும் ஸர்வகுணா பஜந்தி
குணாயனம் சீலதனம் க்ருதஜ்ஞம்
வ்ருத்தாஸ்ரயம் ஸம்வ்ருணதேனு ஸம்பத:
ப்ரஸீததாம் ப்ரஹ்மகுலம் கவாம் ச
ஜனார்த்தன: ஸானுசரஸ்ச மஹ்யம்!

எந்த பகவானுடைய சரண சேவையில் ருசி வந்தால், பல ஜென்மங்களில் செய்த பாபம் விலகுமோ, அந்த தெய்வத்தை ஒருபோதும் மறக்கக்கூடாது. அந்த தெய்வத்தையே உபாஸித்து வர வேண்டும். (பட்டர் சொல்கின்றார் நம்பெருமாளின் அஞ்சேல் என்ற அபயமளிக்கும் கைகளே தஞ்சம்! அந்த கைகளே மறுத்தாலும் அரங்கன் திருமுற்றத்தினைத் தவிர வேறெரு போக்கு எனக்கு வேண்டாம் என்று! ) வேத வித்துக்களுடையதும், பகவத் பக்தர்களுடையதான சரணரேணுவை(பாதாரவிந்தங்களை) நான் தலையில் உயிருள்ளவரை தரிப்பேனாக!. அந்த பாதரேணுவைத் தரிப்பவனுக்கு எல்லா பாபங்களும் உடனே விலகி, எல்லா குணங்களும் வந்து சேருகின்றன.
நல்ல குணம் உள்ளவனிடத்தில், நல்ல பழக்க வழக்கங்களும், செய்நன்றி மறவாத தன்மையும், பெரியோர்களை அண்டி நிற்பதும் தானே அமையும். அத்தகையவனிடத்தில் நித்யம் சகல சம்பத்துக்களும் தேடி வருகின்றன. ப்ரம்ம குலமும், பசுவின் குலமும், பக்தர்களுடன் கூடின ஸ்ரீமந் நாராயணனும் எனக்கு அனுக்ரஹம் செய்ய வேண்டும்’ என்று வேண்டுகின்றான்.

-Posted on 17.08.2008-

PESUM ARANGAN-94

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 12:31 am

Chapter-94

பட்டர் அதிக திவ்யதேசங்களுக்குச் சென்றதாய் ஏதும் குறிப்புகளில்லை. பட்டரை அதிவிசேஷமாய் ஈர்த்து தம்மிடத்தேயே வைத்துக் கொண்டது அரங்கன்தான்!. நம்பெருமாள் யாரிடமுமே அதிகம் பேச மாட்டார். பெரும்பாலும் கனவில்தான் தோன்றி பேசுவார். பேசினாலும் சுருக்கமாகச் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டு மறைந்து விடுவார். அந்த அரங்கனே பட்டரிடத்தில் அதீதப்ரீயனாய், அந்தரங்கனாய், அதிகம் ஈர்க்கப்பட்டவனாய், அற்புத தந்தையாய், அளவற்ற நேசமுடையவனாய், பரிவுடனிருந்தார். அரங்கன் அதிகம் அளவளாவியது பட்டருடன் மட்டுமே!. பட்டரிடத்து அளவிலாத சந்தோஷத்துடன் மேலே வீடு அளித்தேன் என்று அனுப்பி வைத்தாலும் அர்ச்சையில் கண்டிப்பாக இருதலைக் கொள்ளி எறும்பாய் அவனும் அவதிப்பட்டிருப்பான்!.

பட்டரும் மேல்கோட்டை திருநாராயணபுரம், திருக்கோஷ்டியூர் முதலிய திவ்யதேசங்களில் எல்லாம் தங்கியிருந்தபோதும், எப்போது ஸ்ரீரங்கம் திரும்புவோம் என்றேதானிருந்தார்.

‘நம்பெருமாள் அஞ்சலென்ற கை மறுத்தாலும், அவ்வாசலெழிய வேறெரு போக்கு உண்டோ?’ என்று கூறியபடி திருவரங்கத் திவ்ய தம்பதிகளைத் தவிர மற்றொரு கதியின்றியிருந்தார். அரங்கனிடத்து கைங்கர்யம் செய்பவர்கள் யாருமே இப்படியிருப்பதுதான் நற்கதி! பிறவிப்பயன்! அரங்கன் கற்பக விருட்சம்! நாம் எதை மனதார வேண்டுகின்றோமோ அதை கைவல்யமாக அளிப்பதில் வல்லவன்!. நாமும் பட்டர் எப்படி நம்பெருமாளையும் தாயாரையும் ஆழ்வானும் ஆண்டாளுமாக நினைத்திருந்தாரோ, அதேப் போன்று
நம்முடைய தாயாகவும் தந்தையாகவும் போற்றி வணங்க வேண்டும். அந்த மனப்பக்குவத்தினை நன்கு வளர்த்து நம்பெருமாளும் தாயாருமே கதியென்று கிடக்க வேண்டும். நீயே கதியென்று கிடந்தால் நம் விதியை அவன் பார்த்துக் கொள்வான்.

‘எனது நான் எனச் செருக்கி மமதையுற்று அலைந்த என்னை
இனியனாக்கி இணைய வைத்த இன்ப தெய்வமே!
எனதுளத்தில் உனது நாமம் எழுதி வைத்து நடனமாடும்
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ!”

-Posted on 16.08.2008-

Older Posts »

Create a free website or blog at WordPress.com.