Srirangapankajam

January 31, 2009

Pesum Arangam-26

Filed under: PESUM ARANGAM — Tags: , — srirangapankajam @ 11:46 pm
Chapter-26
31.01.2009
 
ஆழ்வார்களிலேயே நம்மாழ்வார் போன்று சிறப்பானவர் எவரும் இல்லை.  பிறவி முதல் இடைவிடாத பக்தி அவருடையது.  பெருமாளைத் தவிர எதையும் நினைக்காத நம்மாழ்வாரே பாதுகையாய் அவதரிக்கின்றார்.

இத்தகைய பாதுகையையும், அவரது பாசுரங்களையும்
ஸேவிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் ஸகல பாபங்களும் தமோகுணமும் போய், பெருமாளிடத்தில் எல்லையில்லாத பக்தி உண்டாகின்றது. 
 

இதற்கெல்லாம் நமக்கு ஏது இப்போது அவகாசம்..?  அகத்தில் பெருமாளுக்கு திருவாராதனம் பண்ணுவதே பெரிய காரியமாகி விட்டது.  அதோடு கூட பாசுரங்கள் ஸேவிப்பதாவது..?  சரி..? கோவிலில் அருளிச்செயல் கோஷ்டியிலாவது போய் கேட்கலாமே..? உஹூம்.. சிறிது நேரம் நின்று ஸேவிக்கவே பொறுமையில்லை.. வீட்டில் டிவியில் ஏதாவது சிரீயல் போய்விடும்..!  அது முக்கியமா..இது முக்கியமா..?
 
நமக்கு ஏதேனும் தெரிந்தால்தானே நம்மிடத்து நாலு பேர் வந்து விஷயங்களை பகிர்ந்து கொண்டு ஆழ்வார்களின் அருளிச்செயலைப் பற்றி பேசுவதற்கு..!
விவாதிப்பதற்கு..!  அல்லது நமக்கு ஏதேனும் நாட்டம் இருந்தால்தானே நாலு பேர் அருளிச்செயலைப் பற்றி விவாதிப்பதைக் கேட்பதற்கு..!
 
முன்பெல்லாம் ஸ்ரீவைஷ்ணவர்கள் வீட்டில் எப்போது சத்சங்கம்தான்.   என்னுடைய வீதியிலேயே அவரவர்கள் வீட்டிற்கு வெளியூரிலிருந்தும், உள்ளுரிலிருந்தும் ஸ்ரீவைஷ்ணவர்கள் வருவதும், பெருமாளைப் பற்றி ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகளைப் பற்றி பேசுவதும், நல்ல ஒரு ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணத்தோடு பெருமாளை ஸேவிக்கப் போவதும் வருவதும் தெருவே களைக்கட்டி நிற்கும்.  இன்று காலிங்பெல்லை அழுத்தினால் கூட ஜன்னலின் ஒரு பகுதி மட்டுமே திறக்கப்படுகின்றது.  வீட்டில் ஸ்ரீவைஷ்ணவர்களின் பாததுளிகள் படுவதில்லை.  சத்விஷயங்கள் பேசப்படுவதில்லை.  ஓயாமல் அழும் சீரீயல்களும், சதா வன்முறை, பலிகள் அறிவிக்கும் செய்திகளும் கேட்டு கேட்டு நம் மக்களின் மனது
பரந்து இருக்காமல் மனதின் விசாலம் ஒடுங்கி விட்டது.  சுயநலம் ஓங்கி விட்டது.  விருந்தினர்கள் உபசரிப்பு அடியோடு இல்லாமல் போய்விட்டது.  இதனால் நாம் அனுபவிக்கும் வேதனைகளும் அதிகரித்து விட்டது.
 
முன்பெல்லாம் தர்ப்பணத்திற்கு மற்றும் இதர கார்யங்களுக்காக வரும் வாத்யார்களுக்கு தட்சணையும், வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் மற்றும் அரிசி முதலானவற்றைக் கொடுத்து கௌரவிப்பார்கள்.  இந்த  அரிசி தானம் சிறந்த சந்திர கிரஹ கோளாறுக்கான பரிகாரம்.  வீட்டிற்கு வந்த சான்றோர்களை கௌரவமாக நடத்துவது சிறந்த குருப்ரீதி!.
இது போன்ற பல நடைமுறைகளையெல்லாம் கடைப்பிடித்த வந்த நம் முன்னோர்கள் வருமானம் இல்லாத போதும் சந்தோஷமாக வாழ்ந்தனர்.  நாம் வருமானம் இருந்தபோதும் சந்தோஷம் தொலைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
 
நல்ல ஒரு ஆச்சார்யன் கிடைப்பதென்பது மிக அரிது. எதுஎதற்கோ வேண்டுவதைத் தவிர்த்து நல்ல ஆச்சார்யன் அடைவதற்காக பிரார்த்திக்க வேண்டும்.   ஹோமத்தில் நாம் எந்த ஒரு தேவதையினை நினைத்து அன்னம், ஆஜ்யம், சமித்து முதலானவைகளை அந்த தேவதைக்குரிய மந்திரத்தினை ஜபித்துக் கொண்டு சேர்க்கின்றோமோ அந்த அக்னி மூலமாய் இந்த திரவியங்கள் அந்தந்த தேவதைகளுக்கு சேர்ப்பிக்கப்படுமாம்.  அது போன்று நல்ல ஒரு ஆச்சார்யனிடத்தில் இந்த ஆத்மாவை நாம் சமர்ப்பிப்போமாயின் அது பெருமாளிடத்தில் சேருவதைப் பற்றி சந்தேகமேயில்லை.
Advertisements

January 29, 2009

Pesum Arangam-25

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 11:08 am
Chapter-25
28.01.2009
 
சத்வ குணத்தினால் என்ன உண்டாகும்..?
 
தயை, பொறுமை, ஒழிவு, பணிவு, தீர்க்கமான தீர்மானமான முடிவு, தெய்வபக்தி போன்ற நல்ல பல குணங்கள் உண்டாகும்.
 
இந்த சத்வ குணத்தினை அடைவதெப்படி..?
 
ஆழ்வாரை இந்த உலகத்தினைக் காப்பாற்றுவதற்கு ஏற்படுத்தி, பெருமாள் கவலையற்று இருக்கின்றார்.  ஆழ்வார்களுடைய பாசுரங்கள் ஸேவிக்கும் போது அவர்களுடைய சத்வ குணத்திற்கு எல்லையேயில்லை.  ஆகவே ஆழ்வார்களுடைய பாசுரங்களை அநுசந்திப்பதனாலும், ஸகலலோக காப்பாற்றுதலை ஏற்று கொண்டிருக்கும் பாதுகையினை சிரஸ்ஸில் ஏற்பதாலும் அடையமுடியும். 
 
பாதுகையில் இழைக்கப்பட்டுள்ள முத்துக்களின் காந்தி நாலாபுறமும் பரவி, பாதுகையின் எல்லையில்லாத சத்வ குணத்தினை எல்லா லோகத்திற்கும் காண்பிப்பது போலுள்ளது.
 
ஜோதிட சாஸ்திரம் சந்திரனை மனோ காரகனாகவும், தாய்மை கிரஹமாகவும் கூறுகின்றது.  சூரியனைத் தந்தை கிரஹமாகக் கூறுகின்றது.  சந்திரன் என்னும் இந்த கிரஹத்திற்குரிய ரத்னம் முத்து ஆகும்.  ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் அவரது மனநிலை
அதாவது சத்வ குணம் குறைந்து ரஜோ, தமோ குணங்கள் அதிகரித்து,  பாதிக்கப்பட நிறைய வாய்ப்புண்டு.  அப்போது ஜோதிடர் முத்தாலான ஆபரணத்தினையோ அல்லது மோதிரத்தினையோ அணியச் சொல்லுவர்.  இந்த முத்தின் காந்தியானது மனநிலையை சீராக்கும். ஜாதகரின் சந்திர கிரஹ கோளாறினை சமப்படுத்தும்.  மனநிலை சமனப்படுவது, சாந்தி பெறுவது சத்வகுணம்.    ஒரு நல்முத்திற்கே இவ்வளவு சக்தியென்றால் தேசிகரது காலத்தில் நம்பெருமாளின் பாதுகையில் பதிக்கப்பெற்ற நல்முத்துக்களின் காந்திக்கு எவ்வளவு சக்தியிருந்திருக்கும்!.  
மூலவருக்கு அத்யயன உற்சவத்தின் போது சாற்றப்பெறும் முத்தங்கியினை ஸேவிக்கப் பெறும் பாக்யம் பெற்றவர்கள் பெறும் காந்தி – அவர்களது சத்வகுணத்தினை எவ்வளவு மேம்படுத்தியிருக்க வேண்டும்!.
 
எனக்கு வெகுநாட்களாக ஒரு சந்தேகம்!  அத்யயன உற்சவத்தின் போது மட்டும் பெருமாளுக்கு முத்தங்கி மற்றும் இரத்னங்கி ஏன் சாற்றுகின்றார்கள் என்று?

பெரியவர்கள் முத்தங்கியை திருப்பாற்கடல் ஸேவைக்கு ஓப்பாகக் கூறுவர்.  பெரியபெருமாள் நல்முத்துக்கள் குவிந்த க்ஷீராப்தி சமுத்திரத்தில் பள்ளிக் கொண்டவன்.  ஆகவே இந்த ஸேவை க்ஷீராப்திநாதன் ஸேவை என்று!
இருக்கலாம்….! 
 
அதனை ஏன் அத்யயன உற்சவத்தின் போது மட்டும் சாற்றிக் கொள்ள வேண்டும்..? வேறு உற்சவங்களே இல்லையா…..என்ன..,?
பாதுகையினை ஆழ்வாராகவும், அதிலுள்ள முத்துக்கள் ரத்னங்கள் அனைத்தையும் ஆழ்வாரின் பாசுரங்களாக பாவிக்கின்றார் ஸ்வாமி தேசிகன்.
அப்படியிருக்க முழுக்க ஆழ்வார்களின் அனுபவத்திலும்,  ஆழ்வார்களது தீந்தமிழ் பாசுரங்களையும் ஆடிப்பாடிக் கொண்டாடும் அத்யயன உற்சவத்தில், பாதுகையாயுள்ள நம்மாழ்வாரின் மோட்சத் திருநாளில், இந்த முத்துப் போர்வையினை, முத்தங்கியையும்,  இரத்னங்கியையும் சாற்றுவதுதான் மிகவும் பொருத்தமாகும்!  சாலச் சிறந்ததாகும்! 
———————————————-

From: Sriram Rengarajan
Phone: 9840407209
E-mail: sriramrl@gmail.com
Message:
dear swami,

During vaikunda ekadesi ksheerapthi-nathan thirukolam is made to perumals in south(azhwar thirunagari and nava-thirupathi etc).

it is sayana thirukolam. perumal will be in this thirukolam from morning to evening. In the evening erapathu thirnal begins from viswaroopa-sevai (as a awakening sevai from sayana thirukolam)
followed by paramapatha vasal sevai…

we have to take this as, when a person vists all 106 divyadesams perumal himself give his thiruparkadal sevai and finally take him to paramapatham. to complete 108 divya desams…

same thing is happening to azhwar… perumal shown him thiruparkadal sevai on erapathu 1st thirunaal and then paramapatha-sevai during azhwar moksham…

as namperumal himself is para-vasudevan we never do any specific thirukolam on azhwar moksham.

so periya perumal gives ksheerapthi nathan thirukolam to azhwar during adhyayanostavam. as adhyayanostavam is mokshostavam.
and ksheerapthi-nathan thirukolam is relavent to only this utsavam.

January 28, 2009

Pesum Arangam-24

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 11:08 pm
Chapter-24
27.01.2009
 
ஸ்வாமி தேசிகர் காலத்தில் பல ஜாதி வைரங்களும், ரத்னங்களும், முத்துக்களும் இழைத்தத் திருவடிகள் இருந்திருக்க வேண்டும்.  இந்த ரத்னங்களின் காந்தியினைப் பற்றி நிறையவே விமர்சித்திருக்கின்றார் அவர்.

பாதுகையிலுள்ள நம்பெருமாளின் திருப்பாதங்களின் நகங்கள் பூரணச் சந்திரனைப் போல ஜொலிக்கின்றனவாம்.  இந்த விரல் நகங்களைச் சுற்றி பாதுகையில் வரிசையாக பதிக்கப்பெற்ற முத்துக்கள் அனைத்தும் சந்திரனைக் கணவனாய் அமையப்பெற்ற 27 நட்சத்திரங்களின் கூட்டம் போலுள்ளதாம்.  இதில் முத்துக்களை நாம் ஆழ்வார்களின் பாசுரங்களாகக் கொண்டால், பெருமாளின் திருவடிகளின் பெருமையை கூறும் பாசுரங்களும், அவனது திருவடிக் கிருபையும், அஞ்ஞானமென்கிற இருட்டை போக்கடித்த நிலாவினைப் போலவும், நிலாவினை சுற்றியுள்ள பாசுரங்களாகிய நட்சத்திரங்கள் போலவும் சூக்குமமாக உணர்த்துகின்றார்.
 

எவரொருவர் பாதுகையினை தியானிக்கின்றார்களோ அவர்கள் மேன்மை அடைவர்.  ஆழ்வாரிடத்திலும் அவர்களது பக்தர்களிடத்திலும் உண்மையாய் பக்தி பண்ணுகிறவர்களும், ஆழ்வாரின் பாசுரங்களை தெளிவாக அறிந்தவனுடைய அறிவு விருத்தி பெறுகின்றது.  ஆழ்வார்களுடைய பக்தர்களுக்குக் கிடைக்காத ஐஸ்வர்யம் என்பது ஒன்றுமில்லை!
 
ஆழ்வார்கள் அனைவரும்,  அது பிரும்ம பட்டமே ஆயினும்,  எதையும் விரும்பாது,  எதையும் நாடாது, பெருமாள் திருவடிகள் ஒன்றே கதியென்று பாசுரங்களை அருளிச் செய்துள்ளார்கள்.  நமக்கு நல்ல ஞானமும்,
ஸம்ஸார பந்தத்தில் ஒழிவும் பெற வேண்டுமாயின் நாம் பாதுகையினை பிரார்த்தித்து சிரம் தாழ்த்தி அதனை ஏற்று ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகளை தவறாது அநுஸந்திக்க வேண்டுமென்கிறார்.
 
பாதுகையையும் போற்ற வேண்டும்!  பாதுகையாயுள்ள ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகளையும் அநுஸந்திக்க வேண்டும்!  நாம் இந்த ஸம்ஸார சூழலில் கிடந்து திண்டாடுவதற்குக் காரணமே, இந்த பிரகிருதியின்
ஸம்பந்தத்தாலே இந்த உடம்பையும், இதனின்று வேறான ஜீவனையும், இதற்கெல்லாம் யஜமானான தெய்வத்தினையும் அறிவதில்லை.  இந்த அறியாமையினால் அநேக பாபங்களைச் செய்கிறோம்.  பாபங்களாகிய இந்த பழக்கம் விருத்தியாகி இந்த பாபங்கள் செய்வதில் ஆசையுண்டாகி, மறுபடியும் சரீரம், சரீரத் தொந்தரவுகளை பெற்று, அறியாமை சூழலில், ஸம்ஸாரத்தில் திக்கித் தவிக்கின்றோம்.  (இந்த சரீரத் தொந்தரவுகளை ஆறாகப் பிரிக்கின்றார் பெரியோர்கள் – அதாவது சமுத்திர அலைகள் போன்று ஓய்ச்சல் இல்லாத பசி, தாகம், துக்கம், நல்ல ஸங்கதிகளை அறியாமை, கிழத்தனம், சாவு என்கின்ற ஆறு உபத்திரவங்கள்).
 
இதனை போக்கும் வழி..? 
 
உயர்ந்த முத்துக்களால் இழைக்கப்பட்ட பாதுகையினை தலையில் சாற்றிக் கொண்டும்,  பாதுகை திருமஞ்சன தீர்த்தத்தினை சாப்பிடுவதாலும் போக்கிக் கொள்ளலாம் என்கிறார்.

ஜனங்களுடைய கஷ்டமாகிற ஸம்ஸார கஷ்டமாகிற சமுத்திரத்தினைக் கடக்க உதவும் ஓடம் பாதுகை.  அதில் பதிக்கப்பெற்றுள்ள கம்பி போன்று முத்துக்களின் காந்தியைப் பார்த்தால் ஓடத்தைக் கட்டுகின்ற கயிறு போலிருக்கின்றது. 
 
ஆழ்வார்களின் ரொம்பவும் இன்பமான, ஜீவன் – தெய்வம் முதலான நல்ல விஷயங்களை உள்ளடக்கிய,  முத்துக்கள் போன்ற பாசுரங்களை அநுஸந்திப்பதால், வெகுபேர்கள் நல்ல ஸூகிருதங்களால், நல்ல ஆச்சார்யனை அடைந்து நல்ல சங்கதிகளை தெரிந்து, பெருமாளுடைய அழிவில்லாத இடத்தினை (மோக்ஷத்தினை) முன்னேயும் அடைந்தார்கள்.  இப்பவும் அடைகிறார்கள்.  எதிர்காலத்திலும் அடையப்போகிறார்கள்.

 

January 26, 2009

Pesum Arangam-23

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 6:34 pm
Chapter-23
23.01.2009
 
ஒருவன் சுலபமாய் மோக்ஷத்தை அடைவது ஆச்சார்யன் அனுக்ரஹத்தினாலே மட்டுமே சாத்தியம்!  அவ்விதம் மோக்ஷமடையும் போது அவனது புண்ணிய கர்ம பலன்கள் யாவும் யார் அவனிடத்தில் ப்ரியமாகயுள்ளாரோ அவனிடத்து சேருமாம்.  யார் இவனிடத்து விரோதியாய் இருக்கின்றார்களோ அவர்களிடத்து இந்த பாப பலன்கள் அனைத்தும் சேரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 
 
ப்ரும்ஹ சூத்ரத்தில் 3-3-26 எம்பெருமானார் இதனை
 
“தஸ்ய புத்ரா தாயம் உபயந்தி ஸூஹ்ருத – ஸாது க்ருத்யாம் த்விஷந்த  பாபக்ருத்யாம்”
                                                           -(சாட்யாயன ஸாகை)
மோக்ஷத்திற்கு செல்லும் உபாஸகனது பிள்ளைகளிடத்தில் அவன் சோ்த்து வைத்துள்ள சொத்துக்களும்,  அவனது நண்பர்களிடத்தில்
புண்யமும், விரோதிகளிடத்தில்  அவன்  செய்த பாபங்களும் சேரும்
– என்பதனை மேற்கோள் காட்டியும்
 
“தத் ஸூஹ்ருத் துஷ்க்ருதே தாநுதே – தஸ்ய ப்ரியா ஞாத யஸ் ஸூஹ்ருதம், உபயந்தி அப்ரியா துஷ்க்ருதம்“
                                                           -(கௌஷீதஹி உபநிஷத்)
உபாஸகன் ஸரீரத்தினை விடும் போது அவனது மனதிற்கினிய உறவினிடத்தில் அவன் செய்த புண்யங்களும், விரோதியிடத்தில் இவனது பாபங்களும் சென்றடைகின்றன“
  என்கின்றார்.
 
எப்போது இந்த புண்ய பாபங்கள் பாதிக்கும்?  சரீரத்தினை விட்டு, உயிர் பிரியும் போதே,  இந்த  புண்ய பாபங்கள் பிரிந்து போகும் என்கிறார்.
 
நம்பெருமாளின் பாதுகையில் பதிக்கப்பெற்ற நல்முத்துக்களைக் காணும் போது, அவனிடத்தில் ப்ரீதியுள்ள பக்தர்களின் புண்யங்கள் அனைத்தும் சேர்ந்தது போன்று தேஜஸ்ஸோடு விளங்குகின்றதாம். 
 
இந்த நல்முத்துக்கள் ஆழ்வார்களின் பாசுரங்களைக் குறிக்கின்றது.  இந்த பாசுரங்களை நாம், நமக்கு மஹாசுகிருதம்(புண்ய கர்மபலன்) இருந்தால்தான் அனுபவிக்க இயலும்.
 
பாதுகையில் பதிக்கப்பெற்றுள்ள நல்முத்துக்களின் காந்தி, கடுமையான கோடையிலும் கரைபுரளும் வெள்ளம் போன்று காட்சியளிக்கின்றதாம்.

இந்த வெள்ளத்தினால் சரணாகதர்கள் என்கின்ற நெல்லுகள் விருத்தி அடைந்து கொண்டேயிருக்கின்றதாம்.  அதாவது, ஆழ்வார்களின் பாசுரங்கள் தோன்றுவதற்கு முன், பெருமாளை அடைவது என்பது ஒரு சிலருக்கே (வானம் பார்த்த பூமியின் விளைச்சல் போன்று)  சாத்தியமாயிருந்தது. ஆழ்வார்கள் அவதரித்தப் பிறகு, அவர்களது ஸ்ரீஸூக்திகளை அனுபவிக்கும் அனைவரும் (ஆற்று பாய்ச்சலுள்ள பூமியின் விளைச்சல் போன்று) பெருமாளை ஆஸ்ரயித்து அடைந்து கொண்டேயிருக்கின்றார்கள்.
 
 

 

கால் நகம் மட்டிலும் தனித்து காட்சியளித்தால் எப்படியிருக்கும்? அல்லது நகம் இல்லாத திருவடிகளின் விரல்கள் எப்படியிருக்கும்?  இரண்டுமே காண சகிக்காது.  அதுபோன்றுதான் நகங்கள் போன்ற முத்துக்கள் பதிக்கப் பாதுகையும்!.  தனித்திருந்தால் மதிப்பிருந்திருக்காது.  இதில் முத்துக்கள் – ஆழ்வார்களின் பாசுரங்கள்.   பாதுகை  – ஆழ்வார்.  நகங்கள் பெருமாள் திருவடியை விட்டு பிரியாதிருப்பது போன்று ஆழ்வார்களின் பாசுரங்களும் பெருமாளின் திருவடியை விட்டு பிரியாமலிருந்து, நம்பெருமாளின் திருவடிகளுக்கு அழகு சேர்க்கின்றது.  நகங்களுக்கு திருவடியால் அழகு.  திருவடிக்கு நகங்களால் அழகு.  ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு பெருமாளால் பெருமை.  பெருமாளுக்கு பாசுரங்களினால் பெருமை.
 
ஆழ்வார்களின் பாசுரங்களை நல்ல ஆச்சார்யனது அனுக்கிரஹத்தினால் அனுபவிக்கப் பெற்றவர்கள், கங்கை போன்று ஸகல லோகங்களிலும்,  ஸகல கஷ்டங்களையும் போக்கி, எல்லா க்ஷேமங்களையும் உண்டாக்குவர். 

January 23, 2009

Pesum Arangam-22

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 11:07 pm
Chapter-22
20.01.2009
 
உண்மையான ஞானம் என்பது ஆழ்வார், ஆச்சார்யன் ஆகியோர்களுடைய உபதேசங்களால் பெறப்பட்ட ஞானமே!

இந்த உபதேசமில்லாதவர்கள் எவ்வளவு சாஸ்திரஞானமிருந்தாலும் பிரயோசனமில்லை!. 
 
நம்பெருமாளின் பாதுகையில் பதிக்கப்பெற்ற சிகப்புரத்னங்களின் காந்தியும், நம்பெருமாள் உள்ளங்கால்களிலிருந்து வெளிப்படும் காந்தியும் சேர்ந்து பிரகாசிக்கும் போது கோடி சூர்யர்கள் சேர்ந்து பிரகாசித்தால் கூட அவர்களது பிரகாசம் மின்மினி பூச்சியின் பிரகாசம் போன்றதுதான் என்கிறார் ஸ்வாமி தேசிகர்.  அதில் சிகப்புரத்னங்கள் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள்.  நம்பெருமாளின் திருவடிக் காந்தி ஆச்சார்யனது உபதேசங்கள்.  இதனுடைய இரண்டு காந்திகளும் சேர்ந்து பெறப்பட்டது ஞானம்.  இவையல்லாமல் பெறப்பட்ட ஞானம் மின்மினி பூச்சியின் பிரகாசத்திற்கு ஓப்பும்.
 

 

இந்த ஜீவர்களை மூன்று விதமாக பிரிக்கலாம். 
(!) கர்மத்தாலே கட்டுபட்டவர்கள் – ஸம்ஸாரிகள்
(2) கர்மத்தாலே விடப்பட்டவர்கள் – முக்தர்கள்
(3) கர்ம ஸம்பந்தம் ஒருக்காலும் இல்லாதவர்கள் – நித்யசூரிகள் .
 
இந்த மூவரும் பாதுகையினை தலையில் சாற்றிக் கொள்கின்றார்கள்.  
 
பெருமாள் உயர்ந்தவர் – இவர்கள் பெருமாளுக்கு கீழ்பட்டவர்கள்.
இந்த பாதுகைக்கு இந்த மூன்றுவித ஜீவர்களும், பெருமாளும் சேஷமாக இருக்கின்றார்கள். 
 
சேஷமென்றால் பெருமைப்படுத்துகிறது – சேஷி என்றால் பெருமையை அடைகின்றது.
 
உயர்ந்த பெருமாளின் அனுக்கிரஹத்தினைப் பெற்றுதரும் இந்த பாதுகை நமக்கு ஸ்வாதீனமாக வேண்டும்.
 
எப்போது ஸ்வாதீனமாகும்? 
 
எப்போது பாதுகையினிடத்தில் பொய்யில்லாமல் எல்லையற்ற பக்தி ஏற்படுகின்றதோ அப்போதே ஸ்வாதீனமாகும்.
ஆழ்வாருக்கு(பாதுகைக்கு) இந்த மூன்றுவித ஜீவர்களும், பெருமாளும் சேஷமாக இருக்கின்றார்கள்.    ஆழ்வார்களுடைய பாசுரங்களுக்கு பெருமாள் சேஷபூதராயிருக்கின்றார். அதாவது ஸ்வாதீனராயிருக்கின்றார்.  இன்னும் விரிவாகச் சொன்னால் ஆழ்வார் ‘வா’ என்றால் வருகின்றார். 
என்ன சொல்கிறார்களோ கேட்கின்றார்.  தம் பிராட்டியைக் கூட மறந்து விடுகின்றார்.

ஸ்ரீரங்கத்தில் ‘ரக்ஷாபந்தனம்” (காப்பு கட்டும்) திருவிழாக்களில் ஏழாம் திருநாளன்று தவறாது தாயார் ஸந்நிதிக்கு நம்பெருமாள் உபயநாச்சிமாரோடு எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருளுவார்.  இதற்கு அத்யயன உற்சவம் மட்டும் விதிவிலக்கு.  ஆயிரங்கால் மண்டபத்தில் ஆழ்வார் ஆச்சார்யர்கள் பெருமாள் வருவதற்கு முன்னமேயே வந்து எழுந்தருளியிருப்பார்கள்.  பெருமாள் பரமபதவாசல் திறந்து பிரவேசிப்பார்.  பத்தடி தூரம்தான் தாயார் ஸந்நிதி!  லட்சியமே செய்ய மாட்டார்!  அப்படியே வலது புறம் திரும்பி மணல்வெளி வழியே ஆழ்வார்கள் காத்திருக்கும் திருமாமணி மண்டபம் அடைவார்.!  இந்த உற்சவத்தின் போது தாயாரையும் சரி, உபயநாச்சிமாரையும் சரி! எதுவும் இவனுக்கு லட்சியம் கிடையாது.  ஆழ்வாரது – அரையரது இயல் இசை நாட்டியம்தான் பெரிது! இன்று வரை  இந்த அரங்கன் ஆழ்வாரது பாசுரங்களில் கொண்ட வேட்கை மகத்தானது!
இத்தகைய மாபெரும் சக்திப் பெற்ற ஆழ்வார்களுடைய பாசுரங்களில் நமக்கு எல்லையற்ற ப்ரீதியுண்டாக வேண்டும்!  பிரார்த்திப்போம்….!

 

 

January 19, 2009

Pesum Arangam-21

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 11:11 pm
Chapter-21
18.01.2009
 
பாஞ்சராத்ர ஆகமம் பெருமாள் அக்னியில் உறைகின்றான் என்று கூறுகின்றது.  பாதுகையில் பதிக்கப்பட்ட சிகப்பு ரத்னத்தின் காந்தி தகதகவென்று மின்னுகின்றது.  இத்துடன் நம்பெருமாளின் மிருதுவான சிவந்த தளிர் போன்ற பாதங்களின் காந்தியும் சேர்ந்து நம்பெருமாள் அக்னியின் போல் நிற்பது போல் உள்ளதாம்.  இதனைக் கண்ணுறும் போது ஆகமத்தில் பெருமாள் அக்னியில் வசிக்கின்றார் என்று கூறுவதை மெய்பிப்பது போலுள்ளதாம்.
 
 
பாதுகையிலுள்ள அநேக சிகப்பு ரத்னங்களின் காந்தி, முன்னொரு சமயம், பெருமாள் மது, கைடபன் என்ற அசுரர்களை தொடையில் வைத்து முறித்தராம்.  அந்த சமயத்திலே பெருகிய ரத்தம் இன்னும் பாதுகையிலேயே இருப்பது போல் உள்ளதாம்.  பெருமாள், தன் திருவடிகளைச் சரணடைந்த அடியார்களின் பாபங்களை வெட்டுகின்றபடியினால் இவ்விதம் இருப்பது போலுள்ளதாம். 
 
ஆழ்வார் பெருமாளைப் பற்றி ஆசைப்பட்டுச் சொல்லும் பாசுரங்களை, தம் பக்தர்கள் சொல்ல, பெருமாள் கேட்டருளும் போது, அவர்களது ரஜோகுணத்தாலும் தமோகுணத்தாலும் உண்டாகின்ற கெட்ட புத்தியை போக்கி, தன்னிடத்திலே விசேஷமான ஆசையினை உண்டுபண்ணுகின்றார்.
 
 
நம்பெருமாளின் பாதுகையிலுள்ள ரத்னகாந்தி, பாபமாகின்ற சமுத்திரத்தினையே வற்றச்செய்ய ப்ரளயகாலத்து அக்னி போன்றுள்ளதாம்.
நம்முடைய பாபசிந்தனைகள் கொண்ட மனம் – பாபமாகின்ற சமுத்திரம்.
ரத்னகாந்தி – ஆழ்வார்களுடைய பாசுரங்கள். 
இந்த பாசுரங்களின் பொருள் அறிந்து ஒழுகுவோமாயின் பெரிய பெரிய பாபங்களெல்லாம் கூட போய்விடும்.
 
இந்த பாதுகையின் ரத்னகாந்தி உதயகாலத்து சூரியனைப் போலுள்ளது.  பெருமாளுடைய ஸ்வபாவமான உள்ளங்கால்களின் காந்தியும் சேர்ந்த போது அந்த சிகப்புக்கு எல்லையேயில்லைபெருமாளுக்கு ஜனங்களிடத்து ஏற்கனவே பரிவு உள்ளது. இதன் பொருட்டுதானே இவன் இறங்கி இங்கு கோயில் கொண்டுள்ளான்..? ஆழ்வார்களின் சூக்திகளை மனதார அனுஸந்திப்பதால் இவனது பரிவு, அன்பு பன்மடங்காக ஆகின்றதாம்!
 
பாதுகையே!  உன்னுடைய காந்தி யார் பேரில் படுகின்றதோ அவர்களுக்கு ஸகல க்ஷேமத்தினையும் நீ அருளுகின்றாய்.   நீயே மஹாலக்ஷ்மீ!  நல்ல ஆச்சார்யனுடைய கடாக்ஷம் பெற்றவர்களுக்கு இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் ஒருவித குறைவும் இல்லை!
 
கூத்தாடுகின்ற பெண் ஸபையில் தலைவனைப் பணிந்து ஸேவித்து புஷ்பங்களை வாரி இறைப்பது வழக்கம். புஷ்பங்களை வாரி இறைத்ததைப் போன்று பெருமாளின் பாதுகையில் சிகப்புரத்னங்கள் இழைக்கப்பட்டுள்ளதாம்.  நல்ல ஆச்சார்யன் பரமபதத்தினை அடைவதற்காக எம்பெருமானுடைய திருவடிகளிலே ஆத்மாவை
ஸமர்ப்பித்து விட்டு தம் உயிர் உள்ளவரையிலும் பெருமாள் திருவடிகளில்
புஷ்ப கைங்கர்யங்கள் உள்ளிட்ட கைங்கர்யங்களை செய்து வருவராம்!
 
நம்பெருமாளின் பாதுகையில் பதிக்கப்பெற்ற சிகப்புரத்னங்களின் காந்தி ஸ்ரீரங்கத்தினைச் சுற்றியும் பரவி, அரண் போன்று, அக்னி ஜ்வாலை போன்று, பிரகாசிக்கின்றது.  இதனைத் தாண்டி கலிபுருஷன் இந்த ஊருக்குள் நுழையமுடியவில்லை!.  கெட்ட சங்கதிகளில் ஆசை, கோபம், கர்வம், பொறாமை முதலான கெட்டகுணங்கள்தாம் கலிபுருஷனின் அம்சமாம்.
ஆழ்வார் பாசுரங்களின் அபிப்ராயம் மனதிற்கு பட்டால் இந்த கலி கிட்டேகூட நெருங்குவதில்லை. 
 
அர்த்தபஞ்சகம் என்றால் ஐந்து அர்த்தங்கள் என்று பெயர்.  அந்த ஐந்து அர்த்தங்கள் என்ன..?

(1) ஜீவன் (2) பெருமாளின் கோபத்தினை (3) (ஆழ்வார்களின் பாசுரங்களை மனதார அறிந்து) ஸமாதானம் பண்ணி (4) (ஆச்சார்யனின் அனுகிரஹத்தினால்) பெருமாள் கிட்டே போய்
(5) கைங்கர்யம் செய்யவேணும் –  என்று ஐந்து அர்த்தம். 
 
நாம் அனைவரும் இந்த புவியில் பிறவி எடுத்திருப்பதே,  பெருமாளிடத்தில் கிட்டேப் போகவேணும்” என்பதற்காகத்தானே! 
 
இதனை நம்மால் ஏன் உணரவே முடியவில்லை..?
 

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும்போது உடலுக்கே கரைந்து நைந்து
தண்டுழாய் மாலை மார்பன் தமர்களாய் பாடியாடி
தொண்டு பூண்டமுத முண்ணா தொழும்பர் சோறு உகக்குமாறே
                                            
                                                                           -தொண்டரடிப்பொடியாழ்வார்-
 
தேவிற் சிறந்தவனான நம்பெருமாள் திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ளான் என்ற நினைவற்று போய், தேஹத்தினைக் காட்டிலும் வேறுபட்டதன்றோ ஆத்மா என்ற நினைவற்றுப் போய், ஆத்மாவைப் பற்றிய எண்ணமில்லாமல் உடலுக்கு உறுதி தேடவேக் கவலைப்படுகின்றான்.  நித்யமான ஆத்ம ஸ்வரூபத்திற்கு பகவத் சேஷத்வ கைங்கர்யங்கள்தாம் என்று அறியாது அநித்யமான தேஹத்துக்கு சோறு தாரகம் என்பதை மட்டும் எப்படி அறிந்து,  உண்டு உயிர் வாழ்கின்றான்..?.
 
———-
swamin, artha panjagam pathi innum konjam better a ezhudhi
irukkalaam..arthapanchagam Avadhu:
1.emperumaanin swaroopam
2.jeevaathma swaroopam
3.avanai adaivadharkaana vazhi
4.adaindhu angu seiyyum kaaryam-kainkaryam
5.avanidathe poga vidaamal nammai thadukkum viroddigal..
mathapadikku emperumanukku kovam enbadhellam kidayaadhu..avanukku
endraikkume kovam varaadhu..avan samastha kalyaana guna nidhi…
dasan..

Madhusudhanan Kalaichelvan
Graduate Student,
Knowlton School of Architecture,
Ohio State University.

January 16, 2009

Pesum Arangam-20

Filed under: PESUM ARANGAM — Tags: , — srirangapankajam @ 11:12 pm
Chapter-20
14.01.2009
 
சுயம்வரம் நடக்கும் போது ராஜகுமாரிகள் கையில் வைத்துக் கொண்டிருக்கும் மாலை எந்த பூக்களால் அந்த காலத்தில் கட்டப்பட்டது தெரியுமா? அருகம் புல்லாலும் இலுப்பைப்பூக்களாலும் மட்டும் கட்டப்பட்டிருக்கும். 
 
பாதுகையில் இழைக்கப்பட்டுள்ள பச்சைகற்களும், முத்துக்களும் பாதுகை இந்த சுயம்வர மாலையை கையில் வைத்துக் கொண்டு காத்திருப்பது போலுள்ளதாம். 
 
இந்த லோகத்திலிருக்கும் முட்டாள்களுக்குப் பெருமாளைக் கல்யாணம் செய்து கொள்ளத் தெரியவில்லை.  பெருமாள் ஜனங்களை ஸ்ருஷ்டிக்கச் செய்ததே அழிவில்லாத தன்னுடைய லோகத்திற்கு கூப்பிட்டுக் கொள்வதற்காகத்தான்.
அறிவு கொஞ்சம் குறைவாகயிருந்தாலும் பெருமாளிடத்தில் ஆசையிருந்தால் போதும். 
 
பாதுகை கையிலுள்ள இந்த மாலையினால் பெருமாள்,  அஞ்ஞானிகளாய் திரியும் நம்மையும்,   தம் திருவடிகளை ஆஸ்ரயிக்கச் செய்கின்றாராம். பாதுகை நம் மேல் கொண்ட ஆச்சார்ய அபிமானத்தினாலேயே இது சாத்தியமாகின்றது.
 
‘சிந்தயந்தீ’ என்று ஒரு கோபிகாஸ்த்ரீ.  பெருமாளையநுபவித்ததினால் புண்ணியம் போய், பெருமாளையடைய முடியவில்லையே என்ற துக்கத்தினாலே பாபமும் போய் மோக்ஷத்தை அடைந்தாளாம்.  அது போன்று ஆழ்வார் பெருமாளையனுபவிக்கிறேனென்று சில பாசுரங்களில் ஸந்தோஷப்படுகின்றார். அது அவருடைய ஸூகிருத பலம். இது பாதுகையில் பதிக்கப்பட்டுள்ள முத்து.  சில பாசுரங்களில் அடைய முடியவில்லையே வருத்தப்படுகின்றார்.  அது பாப பலம்.  அது பாதுகையில் பதிக்கப்பட்டுள்ள இந்திரநீலம்.
 
நல்ல ஆச்சார்யனுடைய அனுக்கிரஹம், உபதேசங்கள் பெற்று, அவர்களாலே பாசுரங்கள் உபதேசிக்கப்பெற்று பழக்கப்பட்ட மனது தெளிந்தவர்கள், பாசுரங்களை அநுசந்திக்கும் போது அதனுடைய உண்மையான அர்த்தம் அறிந்து சுக துக்கங்களை அனுபவிக்கின்றார்கள்.
முத்துவென்றால் சந்தோஷமாக அனுபவிக்கக் கூடிய பாசுரங்கள்.  இந்த்ரநீலமென்றால் துக்கத்தோடு சொல்லுகின்ற பாசுரங்கள்.
 
ஆழ்வார் பகவானுடைய குணங்களை நினைத்த சந்தோஷத்தோடும் (முத்துக்கள்), அதே பகவான் கண்ணுக்கும், கைக்கும் அகப்படவில்லையே என்ற வருத்தத்தோடு அழுது கொண்டும் (இந்திரநீலம்) இருக்கின்றார்.
 
ஸேது சமுத்திரத்தினில் மட்டுமே அமாவாஸ்யை, பெளர்ணமி ஆகிய நாட்களில் கூட தீர்த்தமாடலாம்..  வேறு எந்த சமுத்திரத்தினிலும் இந்த நாட்களில் தீர்த்தமாடக் கூடாது. அதுவும் தீட்டுக் காலத்தில் ஸேதுவில் தீர்த்தமாடக் கூடாது. 
 
பாதுகையிலுள்ள முத்துக்கள் சமுத்திரம் போன்றும் பச்சைரத்னங்கள் ஸமுத்திரத்தின் காந்தியைப் போன்றும் பிரதிபலிக்கின்றது. இது எல்லாகாலத்திலும் எல்லோரும் ஸ்நானம் பண்ணக்கூடியதாய் ஒரு புது ஸமுத்திரத்தினை உண்டு பண்ணுவதாய் உள்ளது. 
இந்த புது ஸமுத்திரம் ஆழ்வாரின் திருவாய்மொழி ஆகும்.
 
ஜன்மாந்திர ஸூகிருதத்தினாலே நல்ல ஆச்சார்யனை அடைந்து ஆழ்வாரின் பாசுரங்களுடைய அபிப்பிராயத்தினை அறிந்தால், இந்த ஸ்நானங்களினால் வரும் ஸூகத்தினைக் காட்டிலும் விசேஷமான சுகத்தினை அநுபவிக்கின்றான்.
 
பாதுகையில் பதிக்கப்பட்டுள்ள சிகப்பு ரத்னம் விளக்கினுடைய ஜோதி போன்று உள்ளது.  இந்திரநீலம் அந்த விளக்கினால் உண்டான மையைப் போன்றுள்ளது.  ஆழ்வாருக்கு பெருமாளின் குணங்களை அனுபவித்து அநுபவித்து எல்லையில்லாத ஆசை (ஜோதி) உண்டாகின்றது.  அதனாலே துக்கமும் (மை) அதிகமாகயுண்டாகின்றது.
 
இவ்வாறு பஹூரத்ன பத்ததி என்னும் பதினொறாவது பத்ததி முழுதும் பாதுகையில் பதிக்கப்பட்டுள்ள ரத்னங்களை ஆழ்வாரின் அநுபவித்தினையும் ஸ்ரீஸூக்தியினையும் ஒப்பு நோக்கி மிகவும்
ரஸனையோடு அனுபவிக்கின்றார் ஸ்வாமி தேசிகர்.

January 12, 2009

Pesum Arangam-19

Filed under: PESUM ARANGAM — Tags: , — srirangapankajam @ 11:39 pm
Chapter-19
12.01.2009
 
ஆச்சார்யன் எப்போது மகிழ்வடைகின்றார்..?
 
தோஷமுள்ள ஜீவர்களை பெருமாளின் திருவடியில் சரணாகதி பண்ண வைத்து தாம் அவர்களுக்காக பெருமாளிடத்தில் பிரார்த்திக்கும் போது சந்தோஷமடைகின்றார்களாம் ஒரு ஜீவன் கடைத்தேற வழி செய்தோமேயென்று!
 
பாதுகையும் அதைத்தானேச் செய்கின்றது.!
நம்மையும் நம்பெருமாளின் திருவடியையும் பந்தபடுத்தி பிரார்த்திக்கின்றது.  நம்பெருமாளின் ஸ்ரீசடாரி சாதிக்கப்பெற்ற அனைவருமே நம் பரம ஆச்சார்யரான ஸ்வாமி நம்மாழ்வாரின் அனுக்ரஹம் பெற்றவர்கள். 
 
பொன்னிசூழ் அரங்கமேய பூவை வண்ண! மாய! கேள்
என்னதாவி என்னும் வல்வினையினுட்கொழுந்தெழுந்து
உன்ன பாதமென்ன நின்ற ஓண்சுடர்க் கொழுமலர்
மன்னவந்து புண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே   (திரு-17)
 
எம்பெருமான் பரமபதத்தில் துயில்வது நித்யசூரிகள் அனுபவிப்பதற்கு – திருப்பாற்கடலில் உறைவது அதன் கரையில் வாழும் ஸ்வேத தீப வாஸிகள் அனுபவிப்பதற்கு – ஆனால் பரமபதத்தினை விரஜாநதி சூழ்ந்திருப்பது போல பொன்னி சூழ்ந்த திருவரங்கத்தில் உறைவது பாபக்குவியலான எனக்கு.  
 
வேறு எவரிடமும் காண முடியாத நீர்மையையும், எளிமையையும் உடைய,  தேவரீரிடம் ருசியை உண்டாக்கி என்னை அனுபவிக்கச் செய்வதற்கு!  பாபக்குவியலான என்னுடைய ஆத்மாவிற்கு உன்னைக் குறித்த ஈடுபாடு தோன்றிற்று. 

பாதுகையில் பதிக்கப்பட்டுள்ள ரத்னங்களும், முத்துக்களும் சேர்ந்து பாதுகை தம் செம்பவளவாய் திறந்து, தம் முத்துப்பல் காட்டி சிரிக்கின்றதாம். 
 
எதற்கு..?
 
பிழைசெய்த மக்கள்தமை பெருமாள் திருவடியில் சேர்ப்பித்து திருப்தியோடு புன்னகை புரிகின்றதாம்.
 
பாதுகையில் பதிக்கப்பட்டுள்ள அநேக ஜாதிகற்களும் சேர்ந்து மயில் தோகை போன்றுள்ளதாம்.  இது கிருஷ்ணாவதாரத்தில் அவரின் திருமுடியில் ஏறியமர்ந்ததற்கு மன்னிப்புக் கேட்டு பெருமாள் திருவடியில் அடைக்கலம் புகுந்தது போலுள்ளதாம்!.
 
நாம் இப்போது இருக்கும் லோகத்திலிருந்து பிரும்மலோகம் வரையில் லீலாவிபூதி என்று பெயர்.  இது பிரகிருதியால் செய்யப்பட்டது. இந்த பிரகிருதிக்கு ஸத்வம், ரஜஸ், தமோ மூன்று குணமுண்டு. நம்பெருமாளின் பாதுகையில் பதிக்கப்பட்டுள்ள சிகப்பு, வெளுப்பு, கறுப்பு ஆகிய ரத்னங்கள் இந்த மூன்று குணங்களின் பிரதிபலிப்பாக,  பிரகிருதியின் பிரதிபலிப்பாக, நம்பெருமாளின் திருவடியில் சேர்ந்திருக்கின்றது.   இந்த மூன்று குணங்களால் அனைத்து ஜீவன்களும் திண்டாடுகின்றது. 
இந்த பிரகிருதியானது ஸம்ஸாரம், மோக்ஷம் இரண்டுக்குமே உதவுகின்றது. ஆனால் பாதுகை, அதாவது நம்மாழ்வார், மோக்ஷத்திற்கு மாத்திரமே உதவுகின்றார்.
 
பாதுகையில் வைரமும், இந்திர நீலக்கல்லும் பதிக்கப்பட்டுள்ளன.  இதனைப் பார்க்கும் போது பகலும், இராத்திரியுமாக, தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு மோக்ஷத்தினை கொடுப்பதற்காக, பகல், இரவு இரண்டினையும் விலங்கில் போட்டிருப்பது போலுள்ளதாம்.  நல்ல ஆச்சார்யனை ஆஸ்ரயித்தவர்களுக்கு புண்ணியம், பாபம் இரண்டும் தொலைந்து நித்யமான பெருமாளுடைய லோகம் கிடைக்கின்றது.
 
பாதுகைதான் நல்ல ஆச்சார்யன்!  பாதுகையினைப் பணிவோம்!  பெறுதற்கரிய பேறு பெறுவோம்!

Pesum Arangam-18

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 11:33 pm
Chapter-18
11.01.2009
 
ஸ்வாமி தேசிகர் பாதுகா ஸஹஸ்ரத்தினை மிக நேர்த்தியாய் முப்பத்திரண்டு பத்ததிகளாய் பிரித்துள்ளார்.

பத்ததி என்றால் மார்க்கம் என்று பொருள். 
 
உபநிஷத்துக்களில் பகவானை உபாஸிப்பதற்கு 32 வித்யைகள் கூறப்படுகின்றது.
இவைக்கு ‘பரவித்யை’ என்று பெயர். 
 
இவ்விதமே பாதுகையினை வழிபட ஸ்வாமி தேசிகர் 32 பத்ததிகளை வகுத்துள்ளார்.
இதில் ‘நாத பத்ததி’ சிறப்பான ஒன்று.  இது 100 பாடல்கள் கொண்டது.  திருவாய்மொழியின் சிறப்பினை சூக்குமமாக உணர்த்துவது.
நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் பாடல்களின் பொருளை தன் கருவாகக் கொண்டு அமைந்துள்ளது இந்த பத்ததி.
இவ்வளவு விஷயங்களை உள்ளடக்கி, ஒரே இரவில், அதுவும் ஒரே யாமத்தில், கடைசி ஒரு ஜாமத்தில் எப்படித்தான் பாடினாரோ..?  அவரே சொல்கிறார்..
 

அநுக்ருத நிஜநாதாம் ஸூpக்திமாபாதயந்தீ
மநஸி வசஸிச த்வம் ஸாவதாநா மம ஸ்யா: !
நிசயமதி யதாஸௌ நித்ரயா தூரமுக்த
பாரிஷதி ஸஹ லக்ஷ்ம்யா பாதுகே ரங்கநாத: !!
 
ஹே! பாதுகையே!  இராத்திரியில் இந்த க்ரந்தத்தைப் பண்ணும்படி நியமித்தாய்! (தேசிகருக்கு ‘கவிதார்க்கிஹ சிம்மம்” என்ற விருதின் பெயரில் ஏற்பட்ட பொறாமையில் இந்த கட்டாயம் தேசிகருக்கு ஏற்பட்டது!  இதனை அவர் பாதுகையின் நியமநம் என்று ஏற்கின்றார்.  இந்த மனோபாவம்  – பக்தி முக்யம்.  விரோதம் முக்யமல்ல.  நமக்கு விரோதமாய் கஷ்டங்கள் ஏற்படினும், அதுவும் பகவத் ஸங்கல்ப்பம் என்று ஏற்றுக் கொள்வேமேயாயின், மன கஷ்டமுமில்லை! பகையுமில்லை!  பரந்தாமன் பார்த்துக் கொள்வான் அனைத்தையும்!)  உன்னுடைய சப்தம் போல (இங்கு அவர் பாதுகையின் சப்தம் என்று கூறுவதற்கு ‘ஆழ்வார்களின் ஸூக்திகளைப் போல என்று பொருள்) பெருமாளுக்கு மிகவும் இன்பமான வார்த்தைகள் தாமதமின்றி என் மனதில் தோன்றி அதிவேகமாய் (குறைந்த பட்ச அவகாசமேயுள்ளதால் பாதுகையினை அவசரப்படுத்துகின்றார்) என் வாக்கில் வரும்படியாக
நீ தயை செய்ய வேண்டும்!  இதன் ஸ்வாரஸ்யத்தாலே தாயாருக்கும் பெருமாளுக்கும் தூக்கம் மறந்து போய் ஸபையிலே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று மனதார பிரார்த்திக்கின்றார்.  தம் பக்தர்களைக் கரை சேர்ப்பதுதானே பாதுகையின் அவதார நோக்கம்.  கவிமழையை பொழிய வைக்கின்றாள்.  ஒரு ஜாமத்திற்குள் 1008 பா பூக்கள்!  ஒரு கருவிதான் தேசிகர்!
கரு பாதுகையின் கருணைதான்! 
 
எப்படி ஸ்வாமி ஸ்ரீ இராமானுஜர் மறுபிறப்பில் மணவாள மாமுனியாய் அவதரித்தாரோ, அது போன்று ஸ்வாமி நம்மாழ்வார், மீண்டும் இறப்பு, பிறப்பற்ற பாதுகையாகவேயானார். 
 
நம்மாழ்வாராய் இருந்த சமயம் இவர் சிறப்பை வெளிப்படுத்த – மதுரகவி!  பாதுகையாய் அவதரித்தப் போது  – ஸ்வாமி தேசிகர்!
 
பெருமாளின் பாதுகையில் வெளுப்பு, சிகப்பு, கருப்பு முதலான பல வர்ணங்களில் ரத்னங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இதைப் பார்த்த ஸ்வாமி தேசிகருக்கு பெருமாள் க்ருதயுகத்தில் வெளுப்பாயும், த்ரேதாயுகத்தில் சிகப்பாயும், துவாபரயுகத்தில் மஞ்சளாயும், கலியுகத்தில் கருப்பாயும் ஸேவை சாதித்தருளும் நம்பெருமாள் இதையெல்லாம் ஒரே காலத்தில் தம் திருவடி கீழே காண்பிப்பது போலுள்ளது என்கிறார்.  (சதுர் யுகத்திற்கும் இவர்தானே அதிபதி!)
 

நவரத்னங்கள் எனப்படும் (ரத்னம், வைடூர்யம், வைரம்,மாணிக்கம்,நல்முத்து, பவழம், கோமேதகம், புஷ்பராகம், நீலம், மரகதம்) ஒன்பது ரத்னங்களில் பாதுகையானது அலங்கரிக்கப்பட்டுள்ளது.  இதைப் பார்த்த ஸ்வாமி தேசிகர்,  பாரத, கிம்புருஷ, ஹரிவர்ஷ, இளாவிருத, பத்ராசல, கேதுமால, ரம்ய, ஹிரண்மய, குரு என்று ஒன்பது பாகமாயுள்ள இந்த பரந்த பூமி பிறந்தகத்தினையடைந்தது போல் ஆசையாக பெருமாள் திருவடிகளையடைந்தது போலுள்ளது என்று ரசிக்கின்றார்.

January 10, 2009

Pesum Arangam-17

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 12:09 pm
 
Chapter-17
09.01.2009
 
ஸ்வாமி தேசிகர் நம்பெருமாள் புறப்பாட்டினை அணுஅணுவாக ரசித்திருக்கின்றார்.
 
நம்பெருமாள் மூலஸ்தானம் எழுந்தருளுகின்ற சமயம் வாத்யங்கள் இசை முதலானவற்றை நிறுத்தி அரையர் இசையோடு (அரையர் தாளம் மட்டும் இசைப்பார்!) ஆஸ்தானம் எழுந்தருளுவார்.  இதனை ஸ்வாமி, பாதுகையின் சப்தத்தினைக் கேட்டபடியே எழுந்தருளுகின்றார் என்கிறார்.
 
பாதுகை எழுப்பும் சப்தம் திருவாய்மொழி!  பாதுகையாயிருப்பது நம்மாழ்வார்! 
நிசப்தமாக ஆழ்வாரின் அருளிச்செயலைக் கேட்டவாறே எழுந்தருளுகின்றார். 
 
அதே போன்று புறப்பாட்டின் போதும் பாதுகையின் சப்தம் முன்னே கேட்க பெருமாள் பின்னே எழுந்தருளுகின்றார் என்கிறார்.  பெருமாள் புறப்பாட்டின் போது அருளிச்செயல் கோஷ்டிதான் முன் செல்லும்.  இந்த தமிழ் பின்னே அரங்கன் பித்தனாய் செல்வான்!
 
நம்பெருமாள்தான் ஸர்வவேதப்ரதிபாத்யன்!
 
ஸர்வவேதங்களும் நிர்ணயம் செய்யக்கூடிய பரத்வம் அவன்தான்.  இதனை நம்மாழ்வார் திருவாய்மொழியில் நிர்த்தாரணம் பண்ணுகின்றார்.  பாதுகைகளிலிருந்து எழும்பக்கூடிய சப்தங்களும் இதையே சொல்லுகிறதாம்!.
 
பாதுகையின் சப்தங்கள் ஸ்வாமி தேசிகருக்கு விடாது கேட்டவண்ணம் இருக்கின்றது.  ஒரு சமயத்தில் இவருக்கு அந்த சப்தம் கேட்கவில்லை!.  அப்போது அரங்கன் ஆதிசேஷனின் படுக்கையில் சயனித்தவாறுயிருக்கும் நேரம்.  அப்போது இந்த பாதுகாதேவி இந்த உலகை எப்படி ரக்ஷிக்கலாம் என்ற யோசனையிலிருக்கின்றாளாம்!.
 
திருவாய்மொழி என்னும் வேதசாரத்தின் சொரூபியாய் உள்ள பாதுகையின் ரத்னகாந்தி தீண்டப்பெறுபவர்கள், யமனுடைய தொழிற்சாலையில் சாட்டையினால் அடிபடுகிறதில்லை! நரகமில்லை! யமலோகமில்லை!
இதற்கே இவ்வளவு பலன்கள்!  திருவாய்மொழியினை அதன் தாத்பர்யத்தினை அறிந்து நம்பெருமாளைத் தியானிப்பவர்களின் உன்னத நிலைமை.. விளக்கவும் முடியுமோ..?
 
இராமன் சமுத்திரத்தினைத் தாண்டுவதற்கு சேது அணையைக் கட்டினாற்போன்று,  ஸ்வாமி நம்மாழ்வார் நம் ஸம்ஸாரமாகிய பிறவிப்பெருங்கடலைக் கடப்பதற்காக பாதுகையாய் அவதரித்து
பழியாய் நம்மை கரை சேர்த்தே தீருவேன்! என்று கங்கணம் கட்டிக்கொண்டு பரமனின் திருவடியில் பாய்விரித்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்!.
 
பாதுகை ஒரு ஓடம் போன்று இருக்கிறதாம்!
அதனை செலுத்தும் ஓடக்காரனாய் ஸ்ரீரங்கநாதன் அதன் மேல் எப்போதும் எழுந்தருளியிருக்கின்றான்!
 
ஓது வாய்மையும் உவனிய பிறப்பும்
உனக்கு முன் தந்த அந்தணனொருவன்
காதலென் மகன் புகலிடம் காணேன்
கண்டு நீ தருவாய் எனக்கு என்று
கோதில் வாய்மையினான் உனை வேண்டிய
குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்
ஆதலால் வந்து உன்னடியிணையடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்தம்மானே! (திருமங்கையாழ்வாh; – திரு.223)
 
சாந்தீபினி முனிவரை குருவாய் ஏற்றான் கண்ணன்! குருகாணிக்கையாக கடலில் முழ்கி இறந்த தம் மைந்தனைக் கேட்கின்றார் முனிவர்! கையில் வில்லெடுத்து கடற்கரை சேர்ந்தான் கண்ணன். 
 
அச்சமுடன் வருணன்,  ‘பஞ்சஜனன்’  என்ற அசுரன் அவனை விழுங்கிவிட்டான் என்றுரைத்து தன் கடல் நீரை விலக்கி அவனை அடையாளம் காட்டினான். 
 
பஞ்சஜனனை அழித்தான் கண்ணன். 
 
யமபுரம் சென்றான். 
 
யமன் கண்ணனை உபசரித்து, அவன் வந்த கார்யம் பற்றியறிந்து ஒரு நரகக் குவியலிலிருந்து இந்த அந்தண முனிவரின் மைந்தனை எடுத்துத் தருகின்றான்.
 
உண்ட சோற்றை அதே வடிவில் மீட்டுத் தர முடியுமோ..?  இந்த சர்வேஸ்வரனால் முடிந்தது!. பஞ்சஜனன் உண்ட சிறுவனை பழய வடிவோடு, மோந்து பார்த்தாலும் இவன் என் பிள்ளையே என்று எண்ணும்படியாய் இரத்தசம்பந்தத்தோடு மீட்டுத் தந்தான்.
 
கடல் கொண்ட சிறுவனை மீட்டு பழைய வடிவத்தோடு குருவிடம் சமர்ப்பித்தாற் போன்று, உலகியல் கடல் கைப்பற்றிய என்னையும், கரைசேர்க்கும் ஓடக்காரனாய், என்னை பரமபதத்தில் உனக்கு கைங்கர்யம் செய்வதற்காக அன்றோ, தேவரீர் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டு எழுந்தருளியுள்ளீர்..!?
 
ஒருவித கஷ்டமுமில்லாமல், யமபயம் இல்லாமல் நம் ஆத்மா பயணப்பட, ஸ்வாமி தேசிகரின்,  கீழே கொடுக்கப்பட்ட  இந்த ஒரு ஸ்லோகமேப் போதும்.  இதனை நித்யம்  அனுஸந்திக்கலாம்.  உடனே உயிர் போய் விடுமோ என்று அச்சம் கொள்ள வேண்டாம்.  அவன் நிர்ணயித்த விதி நமக்கு என்று முடிகின்றதோ, அன்று நாம் நல்லபடியாய் கடைத்தேறுவோம்! 
 
தவ ரத்ந கரார்ப்பிதம் நவீநம்
பரிக்ருஹ் ஸ்திரம் அம்சகம் மநோஜ்ஞம்!
ஜரதம்சுகவத் ஸூகேந தேஹம்
க்ருதிந: கேசவ பாதுகே! த்யஜந்தி !!
 
ஏ பாதுகையே!  உன் காந்தி எவர் மேல் படுகின்றதோ, அவர்களுக்கு தேஹம் போகும் சமயத்தில் ஒரு தொந்தரவும் இல்லாமல் சரீரம் போகின்றது.  ஒருவன் பழைய துணியை அவிழ்த்து எறிந்து புதுத்துணியை ஸந்தோஷத்துடன் கட்டிக்கொள்வது போல,   பிரயாஸமில்லாமல் பரம ஸந்தோஷத்துடன் போகிறார்கள்.
—–
அன்று கிருஷ்ண ஜயந்தி.  சாயங்காலம் அகத்தில் கிருஷ்ணருக்கு திருவாராதனம் எல்லாம் முடிந்து பக்ஷணங்கள் எல்லாம் அகத்துப் பெருமாளுக்கு அமுது செய்தாயிற்று.  என்னுடைய தகப்பனார் சற்றே உடல்நலமின்றி பூஜை அறைக்கு நேரே உட்கார்ந்தபடி அடியேன் செய்வதையெல்லாம் உற்று கவனித்துக் கொண்டிருந்தார்.  அவருக்குப் பெருமாள் தீர்த்தம் சாதித்து, பின் பெருமாள் திருவாராதனத்தில் உள்ள சிறிய சடாரியை அவருக்கு சாதித்தேன்.  அப்போது அவர் கைகூப்பி இந்த பாதுகா ஸஹஸ்ர சுலோகத்தினை அனுஸந்தித்தார்.  அவர் தம்முடைய இறப்பினை முன்னமேயே அறிவார்!  இரண்டு நாள் கழித்து ஏகாதசி! என்னைக் கூப்பிட்டு இனி உனக்கு என்னால் தொந்தரவு ஏதும் இருக்காது என்றார்.  என் மனம் கலங்கியது.  அன்றிரவு தன் படுக்கையிலிருந்து இறங்கி தெற்கு நோக்கி சாஷ்டாங்கமாக கைகூப்பிய வண்ணம் தம் உயிர் நீத்தார்.  இப்போது இதனை நான் படிக்கும்போது அன்று அவர் எதற்காக இதனை அனுசந்தித்தார் என்பது புரிகின்றது! பாதுகா ஸஹஸ்ரத்தின் மீது அவருக்கிருந்த ஈடுபாடு அளவில்லாதது.  இந்த பாதுகா ஸஹஸ்ரத்திலிருந்து சில அற்புத பாசுரங்களைத் தொகுத்து ‘நல்வரம் தரும் ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்’ என்று, வியாக்யானத்துடன், ஒரு சிறு இலவச வெளீயிடும் அவர் வெளியிட்டுள்ளார். !
Older Posts »

Blog at WordPress.com.