Srirangapankajam

July 31, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 09

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 12:02 pm

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 09
28-07-2009

அர்ச்சாவதாரம் பகவானுடைய அளவிடமுடியாத காருண்யத்தின் பிரதிபிம்பம். இதில் விந்தையென்னவென்றால் அவன் நம்மை ரக்ஷிக்க எடுத்த இந்த அவதாரத்தில், அவனை ஒருவனால் (அர்ச்சகனால்) ரக்ஷிக்கப்படுவனாய் மாறியதுதான்.

ஸர்வசக்தி படைத்த அவன் சக்தியேயில்லாத ஒரு குழந்தை போல மாறி அர்ச்சகரை எதிர்பார்த்திருப்பதுதான்!.

ததிச்சயா ஹோதேஜா புங்கத்தே வை பக்தவத்ஸல
ஸ்நானம் பாநம்ததா யாத்ராம் குருதே வை ஜகத்பதி:
ஸ்வதந்த்ரஸ் ஸஜகந்நாதோ ப்யஸ்வதந்த்ரோயதாததா
ஸர்வசக்தி: ஜகத் தாதாப்ய சக்த இவசேஷ்டதே
-விஷ்வக்ஸேன ஸம்ஹிதை-

ஸ்வதந்தர ஸஜகந்நாதோ – ஸர்வ சுதந்திரம் பெற்றவனாயிருக்கும் இந்த ஜகத்திற்கே அதிபதியான ஜகந்நாதன் –

ப்யஸ்வதந்த்ரோயதாததா – ஸ்வதந்தரம் இல்லாதவன் எப்படியிருப்பானோ அம்மாதிரியாக மாறி

த்திச்சயா ஹோதேஜா புங்கத்தே வை பக்தவத்ஸல – அடியார்களது குற்றங்களை பொருட்படுத்ததாது அந்த பரம்பொருள் தன்னை ஆஸ்ரயித்தவர்களின் விருப்பப்படி உண்கின்றான்!

ஸ்நானம் பானம்த்தா யாத்ராம் குருதே ஜகத்பதி: – தன்னை ஆராதிப்பவர்களுடைய விருப்பத்தின்படி நீராடலையும், நீர் பருகுதலையும், புறப்பாடு(யாத்ரை) கண்டுருளுதலையும் செய்கின்றான்!

ஸர்வசக்தி: ஜகத் தாதாப்யசக்த இவசேஷ்டதே – எல்லா சக்திகளையும் அடைந்தவனாயிருந்தும், சக்தியில்லாதவனைப் போன்று நடிக்கின்றான்!

தான் நினைப்பதற்கு அரியவனாயிருப்பின் தன்னுடைய சொத்து தன்னை விட்டு விலகிவிடுமோ என்ற அச்சத்தினாலேயே, நம்மை தடுத்து ஆட்கொள்ள அந்த அரியவனாகிய ஹரி எளியவனாய் அர்ச்சையில் தாமே வந்து அகப்பட்டு கொள்கின்றான்!

ஆழ்வார் சொல்கின்றார், ”இந்த அர்ச்சாவதாரத்தினை நான் ரஸித்து பருக வேண்டிய அமுதமாக இருக்க, அதற்கு மாறாக இவன் என்னை முழுவதுமாய் பருகிவிட்டானே“ என்கிறார்.

தன்னழகைக் காட்டி நம்மை ஆட்கொள்ளத்தானே அவன் அர்ச்சையாய் அவதரிக்கின்றான்!

தானேயாகி நிறைந்து எல்லாவுலகும் உயிரும் தானேயாய் *
தானேயானென்பானாகித் தன்னைத்தானே துதித்து* எனக்கு
தேனே பாலே கன்னலேயமுதே திருமாலிருஞ்சோலை *
கோனேயாகி நின்றொழிந்தான் என்னைமுற்றும் உயிருண்டே!

-திருவாய்மொழி 10-7-2

“ வாரிக்கொண்டு ன்னை விழுங்குவான் காணில்“ என்று *

ஆர்வுற்ற என்னை யொழிய – என் னில்முன்னம்

பாரித்து * தான் என்னை முற்றப் பருகினான் *

காரொக்கும் காட்கரை யப்பன் – கடியனே .

-திருவாய்மொழி 9-6-10

Advertisements

July 28, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 08

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 11:56 am

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 08
22-07-2009

இந்த அர்ச்சையின் சிறப்பினைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கையில் திரு.ஸ்ரீதரன் (www.namperumal.com) அவர்கள் “ஸ்ரீரகஸ்யத்ரய ஸாரம்“ பற்றிய வெளியீட்டில் ‘அர்ச்சை நிலையினைப்” பற்றிய விளக்கம் அற்புதமாகயிருந்தது. இதனுடைய தொடர்ச்சியாகவும் அமைந்தது ஆச்சர்யமாயிருந்தது. அதனை அப்படியே இங்கு மறுபதிப்பு செய்துள்ளேன்!.
திரு ஸ்ரீதரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!.

அர்ச்சை நிலைக்குக் கைங்கர்யம் செய்தல்

மூலம் – அப்போது, நித்யஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ ஸந்நிதிம் வ்ரஜேத் என்றும், யதா ஸாஸாமுத்ரமம்ப: அப்தை: ஸ்ப்ருஷ்டமேத்யுபோக்யதாம் ததைவ ஹி மநுஷ்யாணாம் பக்தை: ஸம்பாவிதோ ஹரி: என்றும் சொல்லுகிறபடியே ஓர் அதிகாரி விசேஷத்துக்காக ஸாந்நித்யாதிகளைப் பண்ணிப் பரமைகாந்தியான தன்னையுகந்து வந்து அர்ச்சாவதாரம் பண்ணியிருக்கிற எம்பெருமான் பக்கலிலே ஸர்வாதிசாயி ஷாட்குண்யம் ஸம்ஸ்திதம் மந்த்ர பிம்பயோ: என்கிற பூர்த்தியையும், ஆபீடாந்மௌலி பர்யந்தம் பச்யத: புருஷோத்தமம் பாதகாந்யாசு நச்யந்தி கிம் புநஸ்தூபபாதகம் என்கிற பாவநதமத்வத்தையும், ஸந்தர்சநாதகஸ்மாச்ச பும்ஸாம் ஸம்பூட சேதஸாம் குவாஸநா குபுத்திச்ச குதர்க்க நிசயச்ச ய: குஹேதுச்ச குபாவச்ச நாஸ்திகத்வம் லயம் வ்ரஜேத் என்கிறபடியே ப்ரத்யக்ஷாதி ப்ரமாணத்ரயத்திலும் ஹேதுபலபாவத்தாலே வரும் மதிமயக்குகளெல்லாவற்றுக்கும் மருந்தாய் இருக்கிற படியையும், யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் என்றும், “தமருகந்தது எவ்வுருவம்” என்கிற பாட்டிலும் சொல்லுகிறபடியே அவாங்மனஸாபரிச்சேத்யமான ஆச்ரித பாரதந்த்ர்யத்தையும், “கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா” என்கிற ஆகர்ஷகத்தையும் அநுஸந்தித்து,
ஸதீவ ப்ரியபர்த்தாரம் ஜநநீவ ஸ்தநந்தயம்
ஆசார்யம் சிஷ்யவந்மித்ரம் மித்ரவல்லாலயேத்திரம்
ஸ்வாமித்வேந ஸுஹ்ருத்வேந குருத்வேந ச ஸர்வதா
பித்ருத்வேந ததா பாவ்யோ மாத்ருத்வேந ச மாதவ:
யதா யுவாநம் ராஜாநம் யதா ச மதஹஸ்திநம்
யதா ப்ரியாதிதம் யோக்யம் பகவந்தம் ததா அர்ச்சயேத்
யதா ச புத்த்ரம் தயிதம் ததைவோபசரேத்திரம்
என்கிறபடியே அவ்வோ ஸம்பந்தவர்க்க பரத்வ ஸௌலப்யாதிகளுக்கு அநுரூபமான வ்ருத்தியைப் பண்ணவும்.

விளக்கம் –

அவ்விதம் கைங்கர்யம் செய்யும்போது, தனக்கும் ஸர்வேச்வரனுக்கும் உள்ள உறவுமுறைக்கு ஏற்றபடியும், ஸர்வேச்வரனின் எஜமானத்தன்மை மற்றும் எளிமை ஆகியவற்றுக்கு ஏற்றபடியும் செய்தல்வேண்டும்.

தன்னிடம் ஆழ்ந்த அன்பு கொண்ட அடியார்களுக்காக அர்ச்சை ரூபமாக வந்துள்ள ஸர்வேச்வரனுக்கு ஏற்றபடி கைங்கர்யம் செய்யவேண்டும்.

பௌஷ்கர ஸம்ஹிதை – நித்யஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ ஸந்நிதிம் வ்ரஜேத் –

எப்போதும் நிலையாக உள்ள ஸர்வேச்வரனின் திருமேனி குறித்தும், அவன் அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவன் என்பது குறித்தும் யார் மனதில் உள்ளதோ அவன் அருகில் ஸர்வேச்வரன் எப்போதும் வருவான் – என்றும்,

பௌஷ்கர ஸம்ஹிதை – யதா ஸாஸாமுத்ரமம்ப: அப்தை: ஸ்ப்ருஷ்டமேத்யுபோக்யதாம் ததைவ ஹி மநுஷ்யாணாம் பக்தை: ஸம்பாவிதோ ஹரி: – கடலில் உள்ள நீரைப் பருகிய மேகங்களால் மழையாகப் பொழியப்பட்ட பின்னர், அந்தக் கடல்நீரே அனைவராலும் பருகும்படியாக உள்ளது; இது போன்று எம்பெருமான் அர்ச்சையாக நின்ற பின்னர் அனைவராலும் கைங்கர்யம் செய்து, அனுபவிக்கும்படியாக உள்ளான் – என்றும் கூறியது காண்க.

விஷ்வக்ஸேந ஸம்ஹிதை – ஸர்வாதிசாயி ஷாட்குண்யம் ஸம்ஸ்திதம் மந்த்ர பிம்பயோ: – மந்த்ரங்களில் காணப்படும் எம்பெருமானின் ஞானம் உள்ளிட்ட ஆறு குணங்களானவை அர்ச்சையாக உள்ள அவனது வடிவத்தில் காணப்படுகின்றன – என்பதன் மூலம் பூர்ணமாக உள்ளது கூறப்பட்டது.

சாண்டில்ய ஸம்ஹிதை (2-89) – ஆபீடாந்மௌலி பர்யந்தம் பச்யத: புருஷோத்தமம் பாதகாந்யாசு நச்யந்தி கிம் புநஸ்தூபபாதகம் – அர்ச்சையாக நிற்கின்ற புருஷோத்தமின் ரூபத்தை திருவடிப்பீடம் தொடங்கி திருமுடிவரை காண்பவனின் அனைத்துப் பாவங்களும் உடனே அழிந்துவிடும், இப்படி உள்ளபோது சிறு பாவங்கள் குறித்துக் கூறவேண்டுமா – என்பதன் மூலம் அவனது அர்ச்சை ரூபமானது அனைத்து பாவங்களையும் நீக்கவல்லது என்பதை அறியலாம்.

பௌஷ்கர ஸம்ஹிதை (1-31-32) – ஸந்தர்சநாதகஸ்மாச்ச பும்ஸாம் ஸம்பூட சேதஸாம் குவாஸநா குபுத்திச்ச குதர்க்க நிசயச்ச ய: குஹேதுச்ச குபாவச்ச நாஸ்திகத்வம் லயம் வ்ரஜேத் – மதிமயக்கம் கொண்டவர்கள் அர்ச்சையாக நிற்கும் எம்பெருமானின் ரூபத்தைத் தற்செயலாக வணங்கினாலும் அவர்களது தீயவாஸனை, வஞ்சனைகளின் தொகுப்பு, தீய காரணம், தீய எண்ணங்கள் மற்றும் நாஸ்திகத்தன்மை ஆகியவை அழிந்துவிடும் – என்றது. இப்படியாக அறிவுதடுமாற்றம் என்னும் நோய்க்கு ஏற்ற மருந்தாக அர்ச்சாரூபம் உள்ளது.

மனம் மற்றும் வாக்கால் அளவிட இயலாதபடி உள்ள எம்பெருமான், தனது அடியார்களின் பொருட்டு, அவர்களுக்காகத் தன்னையும் கொடுத்தபடி நிற்கும் நிலையை எண்ணி த்யானித்தல் வேண்டும். இதனை – கீதை (4-11) – யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் – என்னை அடைய விரும்புகிறவர்கள் எந்த வடிவில் என்னை அமைக்கின்றனரோ, அந்த வடிவிலேயே நான் என்னை அவர்களுக்குக் காண்பிக்கிறேன் – என்றும்,

முதல் திருவந்தாதி (44) – தமருகந்தது எவ்வுருவம் – அடியார்கள் அந்த உருவத்தை விரும்புகின்றனரோ – என்றும் கூறியது காண்க. மேலும்

அமலனாதிபிரானில் (10) – கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா – என்னும்படியாக அவனது அர்ச்சா ரூபத்தில் உள்ள ஈர்ப்பை அனுபவிக்க வேண்டும். அடுத்து அவனது எளிமை மற்றும் எஜமானத்தன்மை ஆகியவற்றுக்கு ஏற்றபடி கைங்கர்யம் செய்தல் வேண்டும்.

கீழே உள்ள பல வரிகள் காண்க:

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-37) – ஸதீவ ப்ரியபர்த்தாரம் ஜநநீவ ஸ்தநந்தயம் ஆசார்யம் சிஷ்யவந்மித்ரம் மித்ரவல்லாலயேத்திரம் – உண்மையான மனைவி தனது கணவனையும், பெற்ற தாய் தனது குழந்தையையும், சிஷ்யன் தனது ஆசானையும், நண்பன் தனது நண்பனையும் உபசரிப்பது போன்று ஸர்வேச்வரனை உபசரிக்க வேண்டும்.

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-38) – ஸ்வாமித்வேந ஸுஹ்ருத்வேந குருத்வேந ச ஸர்வதா பித்ருத்வேந ததா பாவ்யோ மாத்ருத்வேந ச மாதவ: – மஹாலக்ஷ்மியைத் தரித்த எம்பெருமானை எப்போதும் எஜமானன், நண்பன், ஆசார்யன், தந்தை, தாய் என எண்ணியபடி இருத்தல் வேண்டும்.

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-31) – யதா யுவாநம் ராஜாநம் யதா ச மதஹஸ்திநம் யதா ப்ரியாதிதம் யோக்யம் பகவந்தம் ததா அர்ச்சயேத் – இளவரசன் மற்றும் மதம் கொண்ட யானை ஆகியவர்களை எவ்விதம் பயந்து உபசரிப்போமோ, அது போன்று எம்பெருமானை உபசரிக்க வேண்டும். இதே போன்று வீட்டிற்கு வந்த விருந்தினரை மகிழ்வுடன் உபசரிப்பது போன்று எம்பெருமானை உபசரிக்க வேண்டும்.

• யதா ச புத்த்ரம் தயிதம் ததைவோபசரேத்திரம் – தனக்குப் பிரியமான குழந்தையைக் கொண்டாடுவது போன்று எம்பெருமானைக் கொண்டாட வேண்டும்.

July 22, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 07

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 9:52 am

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 07
17-07-2009

அர்ச்சையில் தம்மை தாமே கூண்டில் அடைத்துக் கொள்வது போல் அவன் அடைத்துக் கொண்டும், ஆழ்வார்கள் தன்னுள் ஆழும்படியாகச் செய்தும், தம்மிடத்து ஆழங்கால் பட்டோரிடத்து அவர்கள் சொன்ன வண்ணம் செய்தும், எழுந்திருந்து பேசியும், எங்கோ யாரோ ஒரு பாட்டி தன் பேரனைக் காவிரிக் கரையில் காணாது அவனது பெயரான “ரங்கா“ என்று கதறிய மாத்திரத்தில் தம் பெயரைச் சொல்லி கதறுவோர் மனவருத்தம் கொள்ளல் ஆகாது என்று தாம் அவள்தம் பேரனைப் போன்று சவரம் செய்து கொண்டு, நீராடி, அந்தம்மையார் கொடுத்த பழைய சோற்றையும், மாவடுவினையும் ரசித்து உண்டும், “வாராய் செல்லப்பிள்ளை” என்றழைத்தவுடனேயே தளிர்நடையிட்டு உடையவர்தம் மடியில் ஏறி அமர்ந்து, ஏதுமறியா குழந்தையைப் போன்று அவரின் கைக்குழந்தையாகவே மாறியும். மாமுனிகளிடத்து அர்ச்சகரின் குமாரனாய், அவரின் சிஷ்யனாய் தோன்றி ஆச்சார்ய தட்சிணையாக தமது சேஷபீடத்தை அர்ப்பணித்தும், இந்த மாயவன் செய்த லீலாவினோதங்கள் சொல்லி மாளாது.

ஸ்ரீபாஞ்சராத்ரமே அர்ச்சைக்கான வழிபாட்டு முறைதான். எனவே முதலில் நாம் அர்ச்சையின் விசேஷத்தினை, அருமையினை உணர்ந்து அதனிடத்து
பேரன்பு கொள்ளுதல் வேண்டும். இவ்விதமாக அன்புடன் ஆராதிக்கும் அர்ச்சைதான் தேஜஸ்ஸோடு விளங்கும். ஆராதகனுக்கு முதல் தேவை –தகுதி, அவன் ஆராதிக்கும் அர்ச்சையினிடத்து அளவிலாத உள்ளன்புதான்.

– பூதக ஜலம் போலே அந்தர்யாமித்வம்
– ஆவரண ஜலம் போலே பரத்வம்
– பாற்கடல் போலே வ்யூகம்
– பெருக்காறு போலே விபவங்கள்
– அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் – ஸ்ரீவசனபூஷணம்(40)

பூமிக்கடியில் கண்ணுக்குத் தெரியாதிருக்கும் ஜலம் போன்று அந்தர்யாமித்வம். மஹாயோகிகளுக்கு மட்டுமே சித்தி தருவது இது.

பரத்வம் இந்த அண்டத்திற்கு புறம்பாக எங்கும் சூழ்ந்திருக்கும் ஆவரண ஜலம் போன்று அதாவது கடல் நீரைப் போன்றது பரத்வம். இதுவும் சாமான்யர்களாகிய நம்மால் சாத்தியபடாத ஒன்று.

சென்றடையமுடியாத பாற்கடல் போன்றது வ்யூகம்.

காட்டாறு போன்றது விபவதாரங்கள். அந்த காலத்தில் இருந்தவர்களைத் தவிர யாரும் அடையத் தக்கதல்லதான அவதாரங்கள்.

அர்ச்சாவதாரம் ஆங்காங்கு தேங்கிய மடுக்கள் போன்றதாம். வேட்கைக் கொண்டவனின் தாகம் தீர பருகலாம் இங்கு. கோயில்களிலும், வீடுகளிலும் வணங்கத்தக்கதான அர்ச்சை எல்லாரும் அணுகக்கூடியது. அடிபணிந்து வணங்கக் கூடியது.

”ஸௌலப்யத்திற்கு எல்லைநிலம் அர்ச்சாவதாரம்” – (முமுக்‌ஷுப்படி-139)

July 17, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 06

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 11:23 am

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 06
13-07-2009

பெருமாள் ஐந்து நிலைகளில் வீற்றிருக்கின்றான். அவையாவன:

பரம்
வ்யூகம்
விபவம்
அர்ச்சை
அந்தர்யாமி

விண் மீதிருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
மண் மீது உழல்வாய்! இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்!
எண்மீதியன்றபுற வண்டத்தாய்! எனதாவி *
உள்மீதாடி உருக்காட்டாதே ஒளிப்பாயோ ?
– (திருவாய்மொழி 6-9-5)

விண்மீதிருப்பாய் – பரத்வம்
கடல் சேர்ப்பாய் – வ்யூஹம்
மண்மீது உழல்வாய் – விபவம்
மலைமேல் நிற்பாய் – அர்ச்சை
மறைந்துறைவாய் – அந்தர்யாமி

பரம் என்பது பரமபதம். இது நித்தியவிபூதி என்றழைக்கப்படும்.

வ்யூகம் என்பது வாஸூதேவ, சங்கர்ஷண, ப்ரத்யும்ன, அநிருத்தர் என்னும் எம்பெருமானின் சக்திகள் தனித்தனியேப் பிரிந்து வெளிப்படும் ஸ்வரூபங்களாம்.

விபவம் என்பது எம்பெருமானின் அவதாரங்களாம்.

அர்ச்சை என்பது இப்போது நாம் வணங்கி ஆராதித்துக் கொண்டிருக்கும் எம்பெருமானின் திருவுருவங்களாம்.

அந்தர்யாமி என்பது எம்பெருமானின் சக்தி எங்கும் பரந்து எல்லாவற்றிலும் சூக்கும்மாய் உறைந்திருக்கும் சக்தியாம்.

இதில் ஆழ்வார்கள் அனைவரும் மோகித்து ஆழங்கால்பட்டது அர்ச்சையில் மட்டுமே. பாஞ்சராத்ரமும் இந்த அர்ச்சையின் ஆராதனையைதான் சொல்லித் தருகின்றது.

பாஞ்சராத்ரம், இதிஹாஸம், புராணங்கள், ஆழ்வாரின் பாடல்கள் ஆகியவற்றில் பகவானின் ஸ்வரூபம், ரூபம், குணம், நெறி, விபூதி, லீலைகள் ஆகிய எல்லாம் சொல்லப்பட்டிருந்தாலும்,

பாஞ்சராத்ரத்திற்கு பகவானுடைய ஸ்வரூபம், குணம் -அதற்கேற்ப என்னென செய்யலாம் என்பதில்தான் கவனம். இதிஹாஸங்கள் அவதாரங்களைப் பற்றிச் சொல்லுவதிலும், புராணங்கள் உலகங்களின் விரிவினைச் சொல்லுவதிலும், ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்கு திவ்ய மங்கள விக்ரஹங்களை அனுபவிப்பதிலும் ஈடுபாடு.

சாமான்யர்களான நமக்கு பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமி ஆகிய நிலைகளிலுள்ள எம்பெருமானை அனுபவித்தல் என்பது இயலாத ஒரு காரியம். இந்த கலியுகத்தினுள் அர்ச்சாவதாரம் என்பது எம்பெருமானால் நம்மை இங்கிருந்து நம்மை மீட்க எடுத்துக் கொள்ளப்பட்ட, நாம் சுலபமாக அவனை அணுக அவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு உபாயம்.

“உடைமைக்கு ஒரு முழுக்கு – உடையவனுக்கு நூறு முழுக்கு“ என்பார்கள்.

ஒரு பெரிய கிணறு. அதில் ஒரு சிறிய வெள்ளிச் சொம்பு வீழ்ந்து விட்டால் அது ஒரு முழுக்கில் அடியில் அமிழ்ந்து விடும். அதன் உடைமையாளன் அதனை எடுப்பதற்குள் சில சமயம் நூறு முழுக்குக் கூட போட நேரிடலாம்.

அது போன்று அவனது உடைமை நாம். இந்த ஆன்மா அவனது சொத்து.

நாம் இந்த சம்சார ஸாகரமாகின்ற கிணற்றுக்குள் அமிழ்ந்து விட்டால் நம்மை மீட்பதற்குள் அந்த பரந்தாமன், பரமாத்மா நூறு முழுக்குப் போட வேண்டியுள்ளது. நம்மை மீட்டு அவன் தன்னுள் வைத்துக்கொள்வதற்காக ஏற்பட்ட ஒரு உபாயம் அர்ச்சை.

Swamin dasan
Pesum arangan – Sri.Pancharathiram – 06 – 13-07-2009
Your explanation about emberuman five neelaigals is good.
In this connection, I would like to share my views
about archai neelai.
Swami Manavalamamunigal in his Thiruvaimozhi Nootranththai
pasuram 26 – (3rd Thiruvaimozhi aaram pathu explanation)

Seyya parathuvamai seeraar veeyugamai……

inneelathil archaavatharam elluthuennan …..

In this pasuram, swami mamunigal says, of all five neelaigals, inneelathil
pagthargaluku archaavathram megavum ellithagaullathu.

So we can also think of this pasuram.

Apthan swami
KASTHURI RANGAN

July 13, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 05

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — Tags: — srirangapankajam @ 11:39 pm

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 05
12-07-2009

ஆகமம் என்பது பொதுவில் வழிபாட்டுமுறையாகும். இது ஒரு குறிப்பிட்ட தெய்வ வழிபாட்டு முறையல்ல. அவரவர்கள் வழிபடும் தெய்வத்திற்கு பலவிதமான ஆகமங்கள் உள்ளன.

இந்த ஆகமங்கள் இரண்டு வகைப்படும்.

வைதீக ஆகமம் (Vedic Agamam) இது நமது வேதங்களின் கோட்பாடுகளுடன் திகழ்வது அல்லது ஒத்துப் போவது.

அவைதீக ஆகமம் (Non-Vedic Agamam). உதாரணம் புத்த ஆகமம் மற்றும் ஜைன ஆகமம். இவைகள் வேதங்கள் கூறும் கருத்திற்கு மாறுபட்டு விளங்குகின்றன. புத்த வழிப்பாட்டு முறையில் மட்டும் சுமார் 72 ஆகமங்கள் உள்ளன. மாறுப்பட்டு விளங்கும் இந்த புத்த ஆகமத்தில் சில பாஞ்சராத்ர ஆகமத்திலுள்ள தந்தரங்களோடு ஒத்துப் போவது ஆச்சர்யமானது.

ஜைன ஆகமத்தில் சில 3வது நூற்றாண்டிலும் மற்றும் 11வது நூற்றாண்டிலும் உருவானவை. இவை “தீர்த்தங்கரர்” என்றழைக்கப்படும் அவர்களது ஆச்சாய புருஷர்களால் பிரபலமாயிற்று.

இந்த ஆகமங்கள் அனைத்தும் குருவினால் சிஷ்யர்களுக்கு உபதேசம் மூலமாக வந்த ஒரு சாஸ்த்ரம். பல நூறு வகையான ஆகமங்கள் உள்ளன.
இதில் வைஷ்ணவ ஆகமமானது வைகாநஸம், பாஞ்சராத்ரம் என்று இரு வகை ஆகமங்களாகும்.

இதுவரை நாம் பாஞ்சராத்ரம் என்றால் என்ன..? ஆகமம் என்றால் என்ன..? என்பதனைப் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டோம்..! நாம் எடுத்துக் கொண்ட சங்கல்ப்பம் ஸ்ரீபாஞ்சராத்ரம் மட்டுமே என்பதால் இனி நாம் ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமம் பற்றிக் காண்போம்….

July 12, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 04

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 6:04 am

ஸ்ரீ பாஞ்சராத்ரம் – 04
06.07.09

ஆகமம் என்பது வேதத்தினை ஒரு சிலவிடங்களில் கையாண்டிருந்தாலும் அது குறிப்பாக அந்த ஆகமம் எந்த தெய்வத்தினைப் பற்றி பிரதானமாக கூறுகின்றதோ, அந்த தெய்வத்தினைப் பற்றிய வேத குறிப்புகள், எப்படி வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும், விழாக்களை எங்கெங்கு- எப்படிக் கொண்டாட வேண்டும், பூஜை செய்பவருக்கான தீக்ஷாவிதிகள், எப்படி தீக்ஷைத் தரவேண்டும் ஆகியவற்றினைப் பற்றிதான் பரவலாகக் கூறுகின்றது.

நிகமம் என்பது நான்கு வேதங்கள், வேத ஸம்ஹிதைகள், உபநிஷத்துக்கள், உபவேதங்கள் (தனுர் வேதம், ஆயுர் வேதம் முதலானவைகள்) ,ஜோதிடம், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிஹாசங்கள் முதலானவைகள். இவைகளனைத்தும் நிகமம் என்றழைக்கப்படும்.

ஆகம ரஹஸ்யம் என்னும் க்ரந்தத்தில்,

”ஆகதம் சிவ்வக்த்ரேப்யோ, கதஞ்சவ கிரிராஜாஷ்ருதௌ! மதம் ஸ்ரீவாஸூதேவஸ்ய தஸமாத் ஆகம உச்சேய்தே!“

– வாசுதேவரை பற்றி பேசும் ஆகமங்கள், சிவன் சொல்ல பார்வதி கேட்டதாக பேசபடுகிறது.

ஸ்ரீவாசஸ்பதி மிஸ்ரா என்பவர்,

ஆகச்சந்தி புத்திமாரோஹந்தி யஸ்மாத் அப்யுதயநி: ஷ்ரேயஸோபாயா: ஸ ஆகம:”

இந்த ஆகமங்கள் மூலமாக ஒருவன் மோட்ஷத்திற்கான உபாயாத்தை அறிந்து கொள்கிறான்.

வராஹி தந்தரம் என்னும் க்ரந்தம் ஆகமத்தினை ஏழு தலைப்புகளாகப் பிரிக்கின்றது.

1. படைத்தல்: இந்த தலைப்பில் படைத்தல் மற்றும் காத்தல் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளது.

2. அழித்தல்: இந்த தலைப்பில் அழித்தல் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளது.

3. வழிபாடு : இந்த தலைப்பில் வழிபடுதல் முறைகள் பற்றி விளக்கப்பட்டு உள்ளது.

4. தெய்வீக காரியங்கள் : பகவத் ஆராதனமாக செய்யும் கைங்கர்யங்கள் மற்றும் அதன் பலன்கள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.

5. புரஸ்சரண் : மந்திரங்கள் மற்றும் அதனை உச்சரிக்கும் முறைகள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

6. வினை : அந்தணர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள ஆறு தொழில்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

7. தியானம் : நான்கு வகை தியானங்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

எல்லா ஆகமங்களும் மேற்ச் சொன்ன வரையரைக்கு உட்பட்டு இல்லாத போதிலும், பொதுவாக ஆகமம் என்பது வழிபாட்டு வகைகளையும் அதன் முறைகளையும் எடுத்துரைக்கும் நூலாகவே கொள்ளப்படுகிறது. ஆனால், ஸ்ரீபாஞ்சராத்ரம் இந்த ஏழு வரையரைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. இது ஒரு தனி சிறப்பு.

July 6, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 03

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 9:51 pm

ஸ்ரீ பாஞ்சராத்ரம் – 03
30.06.2009

பாஞ்சராத்ரமானது “ஏகாயன வேதம்” என்றும் அழைக்கப் பெறுகின்றது. “சாண்தோக்ய உபநிஷத்“ என்று ஒரு உபநிஷத். இதில் நாரதரும் சனகரும் இருவரும் தம்தம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு பகுதி
இதில் “ருக்வேதம் பகவோத்யேபி, யஜூர் வேதம், சாமவேதம், ஹ்யதர்வணம், வாகோவாக்யம், ஏகாயனம்…“என்று பாஞ்சராத்ரத்தினை ஏகாயனம் என்று குறிப்பிட்டு ஒரு சொற்றொடர் வருகின்றது. இதன் மூலம் நாரதர் பேசுவதாக வரும் ”சாண்தோக்ய உபநிஷத்“ தின் காலத்திற்கு பலகாலம் முன்பே உள்ள பாஞ்சராத்ரத்தின் அருமையினை தெரிந்து கொள்ளலாம்.
(இந்த பாஞ்சராத்ர ஆகமத்தினை பகவான் ப்ரஹ்மாவிற்கு உபதேசித்து பிரம்மாவினால் நாரதருக்கு உபதேசிக்கப்பட்டு பின்னர் நாரதர் ஐந்து ரிஷிகளிடத்தும் உபதேசித்தாகவும் ஒரு கருத்துண்டு..!)

ஒரு காலத்தில் சில முக்கிய பாஞ்சராத்ர ஆகம முறைப்படியுள்ள கோவிலில் பூஜை செய்தவர்கள் அனைவருமே ஔபகாயன, சாண்டில்ய, பாரத்வாஜ, கௌசிக, மௌஞ்யாயன ஆகிய ஐந்து கோத்ரத்தினை சேர்ந்தவர்களாக மட்டுமேயிருந்தனர். அது போன்று அவர்கள் சுக்லயஜூர் வேதம், காண்வ சாகை என்ற பிரிவைச் சார்ந்தவர்களாயும் மட்டுமே இருந்தனர்.

தற்சமயம் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், மேல்கோட்டை ஆகிய மூன்று திவ்யதேசங்களில் மட்டும் இந்த ஐந்து கோத்ரத்தினைச் சார்ந்தவர்கள் மட்டுமே அர்ச்சகர்களாய் கைங்கர்யம் செய்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் அர்ச்சகர்கள் அருகிலுள்ள பல பாஞ்சராத்ரகோவில்களிலும் பணியாற்றியுள்ளனர். இப்போதும் ஸ்ரீரங்கம் கோவிலின் சில அர்ச்சகர்களுக்கு திருவெள்ளரை கோவிலில் முறைகள் உள்ளன.

வெகு வருடங்களுக்கு முன் காஞ்சிபுரத்திலும், கீழ்திருப்பதி அலர்மேல்மங்காபுரத்திலும் முறைகள் இருந்து வந்தன.

மேல்கோட்டையில் செல்லப்பிள்ளைக்கு இராமானுஜர் சில காலம் திருவாராதனம் செய்துவருகையில் கிரஹஸ்தர்கள் செய்தால் நன்றாகயிருக்குமே என்று தோன்றிமையினால் ஸ்ரீரங்கத்திலிருந்து “மௌஞ்யாயன“ கோத்திரகாரர்கள் அனைவரையுமே மேல்கோட்டைக்கு அழைத்து சென்றதால் ஸ்ரீரங்கத்தில் இந்த கோத்திரம் விடுபட்டுப்போனதாக ஒரு செய்தியுண்டு.

அப்படியிருக்க ஏன் ஸ்ரீரங்கத்திலும் காஞ்சிபுரத்திலும் உள்ள அர்ச்சகர்கள் வடகலை திருமண்காப்பும், மேல்கோட்டை அர்ச்சகர்கள் தென்கலை திருமண்காப்பும்
இட்டுக் கொள்கின்றனர்..?

எனக்குத் தெரிந்ததை மற்றும் நான் சிலரிடம் கேட்டு அறிந்ததைச் சொல்லுகின்றேன்..! இதில் ஏதும் தவறிருப்பின் திருத்திக் கொள்கிறேன்..!

இந்த அர்ச்சகர்கள் அனைவருமே வடகலை மற்றும் தென்கலை இதில் எந்த கலையும் சார்ந்தவர்கள் இல்லை..! இந்த கலாபேதம் சில நூற்றாண்டுகளுக்கு முன் வந்ததுதான்..! திருவாய்மொழியில் ஒரு பாசுரம்..!

கரியமேனிமிசை
வெளிய நீறு சிறிதேஇடும்
பெரியகோலத்தடங்கண்ணன்
விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசை மாலைகள்-ஏத்தி
உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு ?
இன்று தொட்டும் இனி என்றுமே (tiruvaimozhi 4-5-6)

“இதில் வெளிய நீறு சிறிதேஇடும்“ என்பதற்கு பன்னீராயிரப்படி திருவாய்மொழி வியாக்யானத்தில்
”கற்பூர தூளிதவளம் க்ருத்வா தேவஸ்ய விக்ரஹம்”
என்று உள்ளது.

“அதாவது பச்சைகற்பூரத்தினால் பகவானிடத்து (திருமுகமண்டலத்தில் ஊர்த்வமுகமாக) தூவுதல்“ என்று பொருள்.

இந்த அர்ச்சகர்களும் இந்த விதமாகதான் திருமணைக் குழைத்து ஊர்த்வபுண்டரமாக இட்டுக் கொண்டிருக்க வேண்டும். காலப்போக்கில் வாரிசுகள் இல்லாது வடகலை குடும்பத்தார்களிடத்திலிருந்து ஸ்வீகாரம் நிறைய வந்தமையாலும் மற்றுமுள்ள சூழ்நிலை காரணமாகவும் இந்த ஊர்த்வபுண்டரம் வடகலையாகவும், மேல்கோட்டையில் நிலவிவந்த சூழ்நிலை காரணமாக தென்கலையாகவும் மாறிப்போயிருக்கலாம்..!

இந்த அர்ச்சகர்கள் “சுயம் ஆச்சார்யர்கள்“ – இந்த அர்ச்சகர்களுக்குள்ளேயே எவர் தகுதியுள்ளவரோ அவரே ஆச்சார்யன் ஆவார். இவர்களுக்கு வேறு ஆச்சார்ய தனியன்கள் கிடையாது. இன்றும் திருமணப் பத்திரிக்கைகளில் ஸ்ரீசுக்ல வேத ரிஷியான “ஸ்ரீயாக்யவல்க்ய மஹாகுரவே நம:“ என்றுதான் குறிப்பிடுகின்றனர்.

இவர்களுக்கு “பரந்யாஸம்“ கிடையாது.

இன்றும் வீட்டில் நடக்கும் விசேஷங்களில் “ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணும்….“ என்று தொடங்கிதான் சங்கல்ப்பம்..! ஆரம்பமாகும்.

சரி..! இனி மற்ற விஷயங்களைப் பார்ப்போம்..!

இந்த ஏகாயன வேதமானது “ஸ்ரீமந் நாராயணனைத் தவிர இதர தெய்வங்களை நாடாதே“ என்கிறது.

“யஸ்து ஸர்வ பரோதர்ம: யஸ்மான் நாஸ்தி மஹத்தப:
வாஸூதேவைக நிஷ்டைஸ்து தேவாதாந்திர வர்ஜித:”

“ஸ்ரீவாஸூதேவனை மட்டுமே தியானி – இதர தேவதைகளை நாடவேண்டா ” என்று கூறுகின்றது.

மறந்தும் புறம் தொழா மாந்தர், என்னும் மாண்பை ஆழ்வார்களை போல் ஆகமமும் பறை சாற்றியது. ஸ்ரீவைஷ்ணவ சம்பரதாயத்தின் முக்கியமான இந்த கொள்கை பாஞ்சராத்ரத்தில் ஆழமாக எடுத்துரைக்க பட்டுள்ளது.

இந்த பாஞ்சராத்ரமானது ஸ்ரீமந் நாராயணனை எப்படியெல்லாம் வழிபடுதல் வேண்டும் – நாம் எந்த ஒரு திடமான முடிவோடுயிருக்க வேண்டும் – எப்படி அணுக வேண்டும் என்றெல்லாம் சொல்லுகின்றது. ஆகமம் என்பதற்கு அணுகுதல் (approach) என்ற ஒரு பொருளும், a traditional doctorin or percept, a sacred writing or scripture, sastra, a tantra என்று பலவித பொருள் கூறுகின்றது.
சமஸ்கிருத – ஆங்கில அகராதி. இங்கு அணுகுதல் என்று கொள்ளுதல் எல்லா அர்த்தங்களைவிட சாலப் பொருந்தும்.

பகவான் ஜீவன்கள் உய்விப்பதற்கு, தன்னை வந்தடைய தானே வந்து கற்பித்ததுதான் இந்த பாஞ்சராத்ரம் என்கின்ற அணுகுமுறை – அதாவது பாஞ்சராத்ர ஆகமம்.

மணவாள மாமுனிகள் முமுக்‌ஷூப்படியில் சொன்னார் போ, நாம் படும் இழவை அனுசந்தித்து, அரங்கன், நாம் அவனை வந்து அடைய செய்யாத பிரயத்தனங்கள் இல்லை. நமக்கு அறிவு வர வேண்டி பல சாத்திரங்களை கொடுத்தான். அதில் ஒன்று தான் பாஞ்சராத்ரமாகிற இந்த ஆகம சாத்திரமும்.

அவன் கொடுத்த இந்த அறிவின் பயன், அவனை அடைவதே. அவனை அடைய, அவனே உபாயம் என்பதை அரங்கன், அழகாக வலியுறுத்தினான்.

Create a free website or blog at WordPress.com.