Srirangapankajam

May 29, 2008

PESUM ARANGAN-38

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 12:21 pm

Dear SwAmin,
I have a few questions….in your latest post you mention a verse from ParASara smriti and state that even achetana vasthu can attain moksham…is this consistent with SribAshyam? Moreover, how can there be ‘moksham’ for achetanas as they do not have any prajnA?
I think the verse is to be understood as praising a bhAgavathA and not making any metaphysical point……

என் அன்புக்குரிய நண்பர் ஒருவர் கேட்டக் கேள்வி இது.

இன்று இன்னொரு நண்பரிடமிருந்து வந்த பதிலை இங்கேக் கொடுத்திருக்கிறேன.

The answer for the following question can be like this. Chith and Achith has to attain the Param. The grant of Moksham by Namperumal to achethanams are thanks to his Nirhethuka krupai ( Causeless Mercy) and Sarva thanthra svathanthram (boundless freedom). There is no stood fast rule for him to grant Moksha to any vasthu and neither by practicing any stood fast rule, a jeevan can attain Moksha without HIS consent. so the UPAYAM (ultimate way) and UPEYAM (the ultimate goal) is one and ONLY Mama Kulanatham, mama kula dhaivatham, mama Boghyam, Mama Matharam, Mama Pitharam, Mama Sarvam NAMPERUMAL. So It is HIS WISH which grants the moksham to achethanas. So Finding the applicable Rules in any sort of sashthras or any Granthas do not seems to be Appropriate. Sarva Apacharan Kshamasva. Venum Ramanuja Dasan RAJAGOPALAN

சரி! இன்றைய விஷயத்திற்கு வருவோம்!

பேரன்பு கொண்டு தன்னை விட்டு அங்கிங்கு அகலாவண்ணம் ஆட்கொள்வான் அரங்கன்.
ஆட்கொண்ட அவனிடம் பித்தனாயும் நிற்பான். அவர் என்ன சொல்கின்றானோ அதை செயல்படுத்தவும் செய்வான் இவன்.

திருப்பாணாழ்வார் ”..அணியரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே” என்கிறார். அவர் இதனைச் சொன்னபின்பு மேற்கொண்டு பாடவும் இல்லை. எவரையும் காணவும் இல்லை – அந்த அரவரச பெருஞ்சோதி இவரை ஆட்கொண்டது. தன்னுள் உட்கொண்டது.

அமுதம் உண்டவருக்கு இறப்பில்லை. ஆசைதீர கண்குளிர ரங்கஅமுதத்தினைப் பருகிய இவர் இறப்பில்லாது அவனுடனேயே கலந்தார். இவரின் பிறப்பும் சரி, அரங்கனோடு கலந்த கலப்பும் சரி, நம் மானுடத்திற்கு சம்பந்தப்படாமலேயே அமைந்து விட்டது.

ஆழ்வார்களைக் கண்டாலே ‘தான் ஈன்ற இளங்கன்றைக் கண்ட தாய்பசு” போல இவன். எல்லா உற்சவங்களின் போதும் 7ம் திருநாள் தாயார் சன்னிதி சென்று திருமஞ்சனம் கண்டு திரும்பும் இவன், அத்யயன உற்சவத்தின் போது மட்டும் தாயாரைக் கண்டு கொள்வதேயில்லை. சதா ஆழ்வார்களுடன் அரையர்கள் கொண்டாட்டத்தினைக் கேட்டவண்ணம்தான்.

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை
யுண்ட வாயன், என்னுள்ளம் கவர்ந்தானை –
அண்டர்கோன் அணியரங்கன் என்னமுதினைக்
கண்ட கண்கள், மற்றொன்றினைக் காணாவே.

மழைநீர் நிரம்பிய மேகம் போன்ற நிறம் கொண்டவனை, கண்ணபிரானாய் பிறந்து வெண்ணை முதலானவற்றைத் திருடி உண்ட வாயினைக் கொண்டவனை, மேலே சொன்ன பல காரணங்களாலும் எனது மனதினைக் கொள்ளை கொண்டவனை, வானோர்களின் தலைவனை, இந்த பூமிக்கே ஆபரணம் போன்ற ஸ்ரீரெங்கநாதனை, எனக்கு அமுதம் போன்று உள்ளவனை – இப்படிப்பட்ட அழகிய மணவாளனாகிய பெரியபெருமாளை வணங்கிய என்னுடைய கண்களானவை வேறு எவனையும் காணாது.

இதனை எழுதும் போது எனக்கு மூன்று முக்தாத்மாக்களின் நினைவு வருகின்றது.

நம்பெருமாளை ஆராதனம் முடியும் வரை கண்குளிர ஸேவித்து சிறிது நேரத்திற்கெல்லாம் பரமபதித்த திரு வேளுக்குடிக் கிருஷ்ணன் அவர்களின் திருத்தகப்பனார் திரு.வேளுக்குடி வரதாச்சாரி ஸ்வாமிகளின் நினைவு வருகின்றது. இவரைப் பற்றி முன்னமேயே இத்தொடரில் எழுதியுள்ளேன்.

மேலச் சித்திரை வீதியில் பண்டாரி இராமய்யங்கார் என்றவொருவர் தாயார் ஸந்நிதியில் கைங்கர்யம் பார்த்த பண்டாரி ஸ்வாமிகள். அன்று தாயார் ஸந்நிதி கைங்கர்யம் முடித்து இரவு தாயார் ஸந்நிதி புஷ்பங்கள் பிரஸாதங்களோடு நாங்களிருக்கும் வீதி வழியே, என்னையும் என் தகப்பனாரையும் பார்த்து புன்சிரிப்போடு நல்ல முகமலர்ச்சியோடு தன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். சுமார் 10 நிமிடம் கூட ஆகியிருக்காது அவர் பரமபதித்து விட்டார் என்று தகவல் வந்து சேர! அவரின் புன்சிரிப்போடு கூடிய முகம் இன்னமும் என் மனதினில் நிற்கின்றது.

நாமஸங்கர்த்தனத்தில் புகழ்பெற்று விளங்கியவர் ஸ்ரீஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள். இவரின்
நாமஸங்கீர்த்தனம் கேட்பவரை சுண்டியிழுக்கும். அவனருகில் கொண்டு சேர்க்கும். அபங்கங்கள் எனும் மராட்டிய பஜன்கள் பாடுவதில் இவருக்கு நிகர் இவரேதான். பண்டரிபுரம் விட்டலனின் பரம பக்தர். பாகவத ஸ்ரேஷ்டர். தன் சீடர்களுடன் கங்கையில் இறங்கி குளிக்கின்றார். சுற்றிவர குளித்துக்கொண்டிருந்த சீடர்கள் கரையேறினார்கள். இவர்களின் மத்தியில் குளித்துக்கொண்டிருந்த இவரை மட்டும் காணோம்! ஸ்ரீசைதன்ய மஹாப்ரபு கங்கையோடு கலந்தது போல கலந்துவிட்டார்!

-மேலும் பேசுவோம்- Posted on 28.5.2008.

Advertisements

May 28, 2008

PESUM ARANGAN-37

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 6:42 pm

Dear SwAmin,
I have a few questions….in your latest post you mention a verse from ParASara smriti and state that even achetana vasthu can attain moksham…is this consistent with SribAshyam? Moreover, how can there be ‘moksham’ for achetanas as they do not have any prajnA?
I think the verse is to be understood as praising a bhAgavathA and not making any metaphysical point……

என் அன்புக்குரிய நண்பர் ஒருவர் கேட்டக் கேள்வி இது.

ததிபாண்டன் கிருஷ்ணனிடம் மோக்ஷம் கேட்கிறார். கிருஷ்ணர் அசேதன வஸ்துக்களான அவரிடத்தேயுள்ள சட்டி பானைகளுக்கும் மோக்ஷத்தைக் கொடுக்கின்றார். வைகுண்டத்திலுள்ள இந்த வஸ்துக்களைப் பற்றி பராசரப்பட்டர் கூட ஒரு இடத்தில் குறிப்பிடுகின்றார்.

பிள்ளைலோகச்சாரியர் ஜ்யோதிஷ்குடியில் பிராணன் பிரியும் சமயம், நம்பெருமாள் அவருக்குக் காட்சிக்கொடுக்கின்றார். நீர் காணுகின்ற, தொடுகின்ற அனைத்திற்கும் எம்பக்கம் இடம் உண்டு என்கிறார். உடனேயே பிள்ளைலோகச்சாரியார் தன்னருகில் முளைத்துள்ளத் தாவரங்கள், கல், மண் என எது எது முடியுமோ அனைத்தையும் தன்னோடு அணைத்துக்கொள்கின்றார். எதிரேயுள்ள மலையினை முடிந்த மட்டும் பார்க்கின்றார், எல்லாம் மோக்ஷத்தினையடையட்டுமேயென்று அந்த பரம பாகவதோத்தமர்!

என்னைப் பொறுத்தவரை ஸ்மிருதி வார்த்தைகள் பொய்யாகாது. ஒருக்கால் என்னால் தக்க பதில் சொல்லமுடியாமற் போகலாம். அதற்கு என்னுடைய அஞ்ஞானம்தான் காரணமாகும்.

சரி! நாம் விஷயத்திற்கு வருவோம்!

‘என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தாரென்பர் போலும்”

என்கின்றபடியே லோகசாரங்கர் செய்த ஒரு சிறு தவறும் கூட திருப்பாணர் அர்ச்சா சொரூபமாகயுள்ள அரங்கனைக் காண ஏதுவாகின்றது. எந்த நேரத்தில் எது நடக்குமோ அதது இன்னமும் நடந்து கொண்டுதானிருக்கின்றது. சில சூக்ஷூமத்தினை நாம் புரிந்து கொள்ளமுடிகின்றது. சிலவற்றை நம்முடைய சிற்றிவினால் புரிந்து கொள்ள இயலாமற் போகின்றது. பகவானின் கைங்கர்யத்தினில் நாம் அபசாரப்பட்டு விட்டோமே? என வருந்திக் கொண்டேயிருந்த திருப்பாணரிடம் பரிவோடு நெருங்கின்றார் லோகசாரங்கர். தவற்றிக்கு அவரிடம் வருந்துகின்றார். திருப்பாணர் எவ்வளவோ மறுத்தும் இது அரங்கன் ஆணை! என்று அவரை வலுக்கட்டாயமாக தோளில் ஏற்றி புறப்படுகின்றார் பலிஷ்டரான லோகசாரங்கர். (நம்பெருமாளுக்கு தீர்த்த கைங்கர்யம் பண்ணுகின்றவர்கள் பலவானாகவே மாறிவிடுவார். அந்த மிகப்பெரிய செப்புக்குடத்தைத் தேய்த்து, தினமும் இரண்டு முறை தீர்த்தம் கொண்டு செல்வதே ஒரு சிறந்த உடற்பயிற்சி!.)

எதற்காக பாணர் ஏங்கித் தவித்தாரோ, இதோ! அரங்கனை, அழகனை, அர்ச்சையின் முதல்வனை, ஆசை தீர தரிசிக்கப் போகின்றார். லோகசாரங்கரின் தோளிலிருந்து இறங்குகின்றார். திருவடிகளைத் தரிசிக்கின்றர். அரைச்சிவந்த ஆடையினால் கவரப்படுகின்றார். பாடுகின்றார். கருத்த, விசாலமுள்ள, செவ்வரியோடிய அரங்கனது கண்ணழகு கவருகின்றது! கண்ணீர் மல்க துதிக்கின்றார்! எண்ணி பத்தே பாடல்கள் ஒரு பேரோளி தோன்றுகின்றது. இந்த தூண்டாவிளக்கு அதனுடன் கலக்கின்றது. பாணர் கலந்தார் அரங்கனுடன்!

காண்பனவும் உரைப்பதையும் மற்றொன்றின்றிக்
கண்ணனையே கண்ணேந்த கடிய காதல்
பாண்பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பா மறையன் பொருள்!

என்று துதிக்கின்றார் ஸ்வாமி தேசிகன்!

கடவுளுடன் ஒன்றுவதற்கு குலம் ஒரு பேதமில்லை! குணமிருந்தால் போதும் என்றுணர்த்துகின்றார் திருப்பாணர்!

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னையாட்படுத்த
விமலன்!விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்!
நிமலன்நின்மலன்நீவானவன் நீள்மதிளரங்கத்தம்மான்-திருக்
கமலபாதம் வந்து என் கண்ணினுள்ளனவொக்கின்றதே!

மிக்கத் தூய்மையுடையவனாய், இந்த உலகினுக்கே ஆதியாய் உடையவனாய், எனக்கு வழிகாட்டியாய், தாழ்ந்த குலத்தில் பிறந்த என்னைத் தன்னுடைய அடியார்களது அடியாராக, மாற்ற வந்தவன் நம்பெருமாள்!. சிறந்த ஒளியினையுடையவனாய், வானோர்களுக்கும் அவனுடன் அன்றாடம் வாசம் செய்யும் அடியார்களுக்கும் தலைவனாய், மணம் வீசுகின்ற சோலைகள் நிரம்பிய திருமலையிலுள்ள திருவேங்கடமுடையானாய், பலனை எதிர்பாராமல் உதவிகள் செய்பவனாய், தர்மத்தையே கூறும் பரமபதத்தின் நாயகனாய், உள்ளவன் எம்பெருமாள்! இப்படிப்பட்டவனும், உயர்ந்த நீண்ட மதிற்சுவர்களையுடைய பெரியகோயிலில் வந்து சயனித்துக் கிடக்கும் அழகிய மணவாளனும் ஆகிய எம்பெருமாளுடைய தாமரைப் போன்ற திருவடிகள், என்னுடைய கண்களுக்குள் புகுந்து கொண்டு எப்போதும் காட்சி அளித்துக் கொண்டுள்ளன.)

திருப்பாணர் திருவரங்கத்தைத் தவிர எந்த திவ்யதேசமும் சென்றதில்லையே! எப்படி திருவேங்கடமுடையானைப் பற்றி வர்ணிக்கின்றார்?. இவர் அரங்கனைத் தரிசிக்கும் முன்பே திருமலையப்பன் இவருக்குக் கண்டிப்பாக ஸ்ரீரங்கத்திலேயே காட்சியளித்திருப்பார். அவரை வணங்கி இவரை துதிக்க வந்திருப்பார். இதனால்தான் நான் அர்ச்சா சொரூபமாயுள்ள அரங்கனைத் தரிசிக்கவருகின்றார் என்று சொன்னேன். இவர்களெல்லாருமே முன்னமேயே காட்சியளித்து அவரை ஆட்கொண்டிருப்பார். இது அனைத்து ஆழ்வார்கள் விஷயத்திலும் நடந்திருக்கின்றது.

இதில் பூர்வாச்சாரியார்கள் ‘திருக்கமலபாதம்’ என்பதை மூன்றாகப் பிரிக்கின்றார்.

1. திருப்பாதம்: ‘துயரறு சுடரடி” இது துயர்போக்கும் பேரருளாளன் காஞ்சி வரதனைக் குறிக்கும்.

2. கமலப்பாதம்: ”பூவார் கழல்கள்” – புஷ்பம் போல் தரிசித்த மாத்திரத்தில் மனதிற்கு ஹிதத்தைத் தரக்கூடிய திருவேங்கடமுடையானுடைய கமலப்பாதம்.

3. திருக்கமலப்பாதம்: ”பொது நின்ன பொன்னங்கழல்’
சமஸ்தலோகத்திற்கும், அனைவரையும் உஜ்ஜீவிக்கச் செய்யக்கூடியதான, எல்லாருக்கும் பொதுவான பாதங்கள். இது ஸ்ரீரெங்கநாதனுடையது!

-மேலும் பேசுவோம்- Posted on 27.5.2008.

May 27, 2008

PESUM ARANGAN-36

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 5:06 pm

”மத்பக்தாந் ஸ்ரோத்ரியோ நிந்தந் ஸத்யஸ் சண்டாளதாம் வ்ரஜேத்”
”வேத அத்யயனம் செய்தவனேயாகினும் என் பக்தனை நிந்தித்தானேயாகில் உடனே சண்டாளத்தன்மையை அடைகிறான்” என்கிறார் பகவான்.

இதனையே திருமாலையில் தொண்டரடிப்பொடிகள்,

‘அமரவோ ரங்கமாறும் வேதமோர் நான்கு மோதித்
தமர்களில் தலைவராய சாதியந்தணர்களேலும்
நுமர்களைப் பழிப்பராகில் நொடிப்பதோரளவிலாங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகருளானே”

ஒப்பற்ற ஆறு வேதங்களையும், ஈடு இணை இல்லாத நான்கு வேதங்களையும் நன்கு நெஞ்சில் பதியும் வண்ணம் கற்று, ஓதி, முதன்மைப் பெற்று விளங்கும் பிராம்மண குலத்தவர்கள் ஆனாலும், அவர்கள் உன்னடியார்களை பழிப்பாரேயாகில், அந்த நொடிப் பொழுதிலேயே அவர்கள் சண்டாளர்கள் ஆகிறார்கள்
என்கிறார்.

”ஜாதி சண்டாளனுக்கு காலாந்தரத்திலே பாகவதன் ஆகைக்கு யோக்யதை உண்டு. அதுவும் இல்லை இவனுக்கு: ஆருட பதிதன் ஆகையாலே” என்கிறது வசனபூஷணம்.
(ஜாதியினால் தாழ்ந்த குலத்தவர் காலப்போக்கிலே தன்னுடைய உயர்ந்த பக்தியினாலே பாகவதன் ஆகைக்கு யோக்யதை உண்டு. ஆனால் பாகவதர்களிடத்தில் செய்த அபசார ரூபமான கர்மத்தினாலே சண்டாளனான இம்மகாபாபிக்கு அந்த தகுதியும் இல்லை – ஆருடபதிதன்-கர்மசண்டாளன்)

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் – கீழிருந்தும்
கீழல்லார் கீழல்லவர்

மேற்பிறந்தாராயினும் கல்லாதார் – கீழ்ப்பிறந்தும்
கற்றாரனைத்திலர் பாடு

ஆகிய திருக்குறளும்

”வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட்படுமே” என்ற புறநானூற்றுப் பாடலும் இங்கு ஒப்புநோக்கத் தக்கது.

இதையெல்லாம் நன்கு அறிந்தவராகத்தானிருந்திருப்பார் லோகசாரங்கர். நடந்ததையெண்ணி, எண்ணி, கண்ணீர் உகுத்திருப்பார். கதறி அழுதிருப்பார். அரங்கன் அவரை தேற்றுவதற்கு அவரது கனவில் வருகின்றார். சூக்குமமாக அவர் செய்த பாபத்திற்கு பரிஹாரமும் சொல்கிறார்.

‘பஸூர் மநுஷ்யா பக்ஷீவாயேச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா:
தேநைவதே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்”

”நாற்கால் விலங்காயினும் மனிதனாயினும் பறவையாயினும் இவை ஒரு வைஷ்ணவனைச் சார்ந்தனவாயின் அந்த வைஷ்ணவ சம்பந்தத்தாலே அந்த விஷ்ணுவினுடைய பரமபதத்தை அடைகின்றன” என்கிறது பாரத்வாஜ ஸ்மிருதி.

பரம பாகவத உத்தமரான, உத்தம ஸ்ரீவைஷ்ணவரான, திருப்பாணின் சம்பந்தத்தைப் பெற, திருப்பாணனைத் அவரதுத் தோளின் மீது எழுந்தருளப்பண்ணி வர ஆணையிடுகிறார் அரங்கன்.

”யம்யம் ஸ்ப்ருஸதி பாணிப்யாம் யம்யம் பஸ்யதி சக்ஷூஷா
ஸ்தாவராண்யபி முச்யதே கிம்புநா பாந்தவாஜநா:”

”பாகவதன் தனது கரங்களால் எதை எதைத் தொடுகின்றானோ, எதை எதைக் கண்களால் பார்க்கின்றானோ, அவைகள் நிலையியற்பொருள்கள் ஆயினும் மோக்ஷத்தையடைகின்றன. அப்படியிருக்க, அவனுக்கு உற்றாரைப்பற்றி கூறவும் வேண்டுமோ?” என்கிறது பராசரஸ்மிருதி.

இத்தகைய பரமபாகவதர் லோகசாரங்கரைக் கருணை கூர்ந்து மன்னித்து, தொட்டு ஆசிர்வதித்தாலேப் போதும் – லோகசாரங்கர் செய்த அபராதம் ஒன்றுமில்லாது போகும். அவரை தன் தோளின் மீது எழுந்தருளப் பண்ணிக் கொண்டுவந்தால் இவரது பாக்கியத்தைக் கூறவும் வேண்டுமோ?. லோகசாரங்கமுனி மீது அரங்கன் எவ்வளவு கருணையிருந்தால் இத்தகைய உயர்ந்ததொரு பரிஹாரம் சொல்லியிருப்பான். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளான் அரங்கன். திருப்பாணாழ்வாருக்கும் ஏற்றம் – லோகசாரங்கருக்கும் நிவர்த்தி.

தவறுதனைத் திருத்துவதாகட்டும், திருத்திப் பணிக் கொள்வதாகட்டும், இவனின் பாணியே தனி!

-மேலும் பேசுவோம்- Posted on 26.5.2008.

May 26, 2008

PESUM ARANGAN-35

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 6:42 am

தொண்டரடிப்பொடியாழ்வார் மட்டும் திருவேங்கடமுடையானைப் பற்றி பாடியிருந்தால், திருவேங்கடமுடையானும் பதின்மர் பாடிய பெருமாளாக ஆகியிருப்பார். அரங்கனைத் தவிர அவர் யாரையுமே பாடவில்லை. அரங்கன் முதல்வன் ஆனார். பதின்மர் பாடிய பெருமாள் ஆனார். ஆனால் தொண்டரடிப்பொடி அரங்கனடியார்கள் பற்றி பாடியுள்ளார். பாடியுள்ளார் என்பதை விட அவர் காலத்திற்கு பின் வரும் சந்ததியினரை எச்சரித்துள்ளார். ஒருக்கால் திருப்பாணாழ்வார் பற்றி முன்னமேயே அறிந்திருப்பாரோ என்னவோ? சதுர்மறையும் பயின்ற பிராமணர் வகுப்பை சார்ந்த அவர் பாடலைப் பாருங்களேன்!

பழுதிலாவொழுகலாற்றுப் பலசதுப்பேதிமார்கள்!
இழிகுலத்தவர்களேனும் எம்மடியார்களாகில்
தொழுமின் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும்
ஒக்க வழிபட அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே


மதிள்கள் சூழ்ந்து விளங்கும் பெரிய கோயிலில் கண் வளரும் பெரியபெருமாளே! பிரம்மன் முதல் தங்கள் காலம் வரை நீண்டு விளங்கும் பரம்பரையில் ஒழுக்கக் குறைபாடு இல்லாமல் நான்கு வேதங்களையும் ஓதி வருகின்றவர்களே! ‘இப்போது உள்ள பிறப்பைக் காட்டிலும் இழிந்த பிறப்பு இல்லை என்ற குலத்தில் பிறந்திருந்தாலும், என்னுடைய உறவினைப் புரிந்து கொண்டு நடப்பதாகயிருந்தால், எனது அடியார்கள்’ என்று பெரியபெருமாளே கருதுவான். ”அப்படிப்பட்டவர்கள் கீழ்குலத்தினைச் சேர்ந்தவர்களானாலும், அவர்களை நீங்கள் வணங்குங்கள். உங்களுக்குத் தெரிந்தவற்றை அவர்களுக்கும் உபதேசம் செய்யுங்கள். அவர்களுக்குத் தெரிந்தவற்றை அவர்கள் உபதேசிக்கக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.” – இவ்வாறு நீ அருளிச் செய்து உனக்கு சமமான இடத்தை அவர்களுக்கும் கொடுத்தாய் போலும்.

இராமானுஜர் பிராம்மணர். திருக்கச்சிநம்பிகள் வைசியர். ஆயினும் இராமனுஜர் திருக்கச்சிநம்பிகள் சாப்பிட்ட உணவின் சேஷத்தை(மீதமுள்ளதை) உண்ண விரும்பினார். இராமனுஜர் உயிருடன் இருந்தவரையில் இவரால் இது இயலாமற் போயிற்று. அரங்கன் இவரது உள்ளக்கிடக்கையை இராமனுஜர் அர்ச்சை ரூபத்தில (விக்ரஹரூபமாய்) இருக்கும்போது தீர்த்து வைத்துக் கொண்டிருக்கின்றார். ஸ்ரீரங்கம் கோவிலில் அத்யயன உற்சவத்தின் போது, தளிகை அமுது செய்யும் சமயம் ஆழ்வார்களுக்குக் கிரமப்படியாகி, ஆச்சார்ய க்ரமம் வரும் போது திருக்கச்சிநம்பிகளுக்கு முதலில் நிவேதனமாகி பின்னர், அதே பிரஸாதத்தை இராமனுஜருக்குக் கண்டருளப்பண்ணுவர்.

திருப்பாணாழ்வார் நெல் வயலிலே கிடந்து பண்ணிசைக்கும் பாணர்கள் குலத்தவரால் வளர்க்கப் பட்டவா;. அரங்கனின் மீது ஆறாத காதல் கொண்டவர். ஆனால் தாழ்மையுணர்வினால ஸ்ரீரங்கம் மண்ணைக் கூட மிதிப்பதற்கு அஞ்சி, காவிரிக் கரையோரம் நின்று ஸ்ரீரங்கம் கோபுரத்தைப் பார்த்து வணங்கி ஆறுதலடைந்தவர். அன்றிலிருந்து இன்று வரை காவிரி நீர்தான் அரங்கன் ஆராதனத்திற்கு. அன்று லோகசாரங்கமுனியெனும் அந்தணர் ஆராதனத்திற்காக குடத்தில் காவிரிநீரை நிரப்பக் காவிரிக்குச் செல்கின்றார். அங்கு திருப்பாணர் கண்ணீர் சிந்தி அரங்கனைத் துதித்து மெய்மறந்து நின்று கொண்டிருக்கின்றார்.    லோகசாரங்கர் குரல் கொடுத்தும் திருப்பாணர் கவனம் திரும்பவில்லை.     சிறிது நேரம் போராடிய லோகசாரங்கர் பொறுமையிழந்து ஒரு சிறுகல் எடுத்து அவர் மேல் எறிகின்றார். அது சற்று வேகமாகப் பட்டு திருப்பாணருக்கு சற்று பலமான அடி. சிறிது ரத்தமும் அடிப்பட்ட இடத்தில் தோய்கின்றது.    ஒருவரை புண்படுத்தி விட்டோமோ? என்று பதறுகிறது லோகசாரங்கருக்கு! இருப்பினும் அரங்கனுக்கு பவித்ரமாக நீர் கொணர்ந்து செல்லப் போகத்தானே தாம் இம்மாதிரி நடக்கவேண்டியதாயிற்று என்ற ஒரு சிறு ஆறுதலுடன் கர்ப்பகிரஹத்தினுள் நுழைகின்றார்!   அங்கு அரங்கனின் நெற்றியில் இரத்தம்!    அங்கு அவன் அடியவரை அடித்த அடி இங்கு இவனைப் பாதித்துள்ளது.   பதறி கதறுகின்றார் லோகசாரங்கர். அவர் கனவில் அரங்கன் அவருக்கு உணர்த்துகின்றர்.      பாபமும் புண்ணியமும் குலத்தால் அல்ல. குணத்தாலேயே என்று!.      திருப்பாணாழ்வாரை தோள் மீது சுமந்து கருவறைக்கு அழைத்து வர ஆணையிட்டு மறைந்தான் அரங்கன்!

அன்று முதல் இன்று வரை அரங்கனுக்கு கனவில் வருவதுதான் அதிகமாகப் பிடிக்குமோ?-மேலும் பேசுவோம்-      Posted on 26.5.2008.

May 25, 2008

PESUM ARANGAN-34

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 9:38 am

எல்லாமே அரங்கனே! என்ற ஒரே கொள்கையில் உறுதியாக நின்ற தொண்டரடிப்பொடியாழ்வார் – அந்த ஸர்வேஸ்வரனை துயிலெழுப்புகின்றார், ஒப்பற்ற திருப்பள்ளியெழுச்சியின் மூலம்.

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்
கனையிருளகன்றது காலையம் பொழுதாய்
மதுவிருந்தொழுகின மாமலரெல்லாம்
வானவரரசர்கள் வந்து வந்தீண்டி
எதிர்திசை நிறைந்தனர், இவரொடும் புகுந்த
இருங்களிற்றீட்டமும் பிடியோடு முரசும்
அதிர்தலில் அடைகடல் போன்றுளது எங்கும்
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே!

திருவரங்கப் பெரிய கோயிலில் கண்வளரும் பெரிய பெருமாளே! நீ பள்ளி உணரும் பொழுதை அறிந்த சூரியன், கிழக்குத் திசையின் உச்சியிலே உதித்தான். அச்சமயம் மிகுதியான இருளானது மெதுவாக நீங்கத் துவங்கியது. அழகிய காலைப்பொழுது தோன்றத் துவங்கியவுடன், மிகவும் சிறந்த மலர்கள் அனைத்தும் மலர்ந்து தேன் பெருகி நின்றன. விண் ஆளும் தேவர்களும், மண் ஆளும் அரசர்களும் கூட்டமாகத் திரண்டு, உன்னுடைய திருக்கண்கள் நோக்கப் போகும் தெற்குத் திசையில் இருந்தனர். இவர்களுடன் வந்த ஆண் யானைகளும், பெண் யானைகளும், மங்கல வாத்தியங்களும் ஒலி எழுப்பும் போது, அலைகள் நிறைந்த கடலின் இரைச்சல் போன்று எங்கும் ஒலி பரவி உள்ளது. ஆகவே நீ திருப்பள்ளியை விட்டு எழ வேண்டும்.

இந்த திருப்பள்ளிnழுச்சி என்பது ஸ்ரீரங்கத்தில் ”விஸ்வரூபம்” என அழைக்கப்படுகின்றது. காலை 6.15 மணிக்கு இது தொடங்குகிறது. விஸ்வம் என்ற ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. ‘ரூபம்’ என்றால் தோற்றம். விஸ்வம் என்ற வார்த்தையின் எந்த ஒரு அர்த்தத்திற்கும் உண்டான தோற்றத்தினை இந்த ஸேவையின் போது நாம் காணலாம். விஸ்வம் என்பதற்கு அனைத்தையும் தன்னுள் அடக்கியவன் என்ற பொருளும் உண்டு. 108 திவ்வியதேசத்து எம்பெருமான்களும் முதல் நாள் இங்கு எழுந்தருளி, அரங்கனுடன் அந்தர்பவித்து, அவர்களனைவருடன் ஸங்கமித்து ஏகன் ஆன அரங்கனின் சொரூபம் என்பதினால் கூட விஸ்வரூபம் எனலாம். இந்த விஸ்வரூபத்தின் போது அரங்கனின் எதிரில் பூர்ணகும்பம் (காவிரிநீர் நிரப்பப்பட்டது – இந்த குடநீர் திருவாராதனத்திற்கு உபயோகப்படுத்தப்படும்) இருபுறமும் சாமரங்களுடன், அமுதுபாறையின் மேல் வீற்றிருக்கும். ஜய விஜயாள் தாண்டி கோயில் காராம்பசு நின்று கொண்டிருக்கும். இந்த பசுவிற்கு எதிரே கோயிலின் பட்டத்து யானை நின்றிருக்கும். மார்கழி மாதம் தவிர பெரும்பாலான நாட்கள் அரங்கன் கண்மலர்வது இவர்கள் எதிரில்தான். இந்த கோயில் பசுவும், பட்டத்து யானையும் பெரும் பாக்கியம் பெற்றப் பிறவிகள். இவைகள் மிகச்சிறந்த ஸ்ரீவைஷ்ணவப் பிறவிகள். நம் திருக்கோவிலின் பட்டத்துயானையின் பெயர் ‘ஆண்டாள்’ என்பதாகும். இதனைப்பற்றி தனியாக எழுதுகின்றேன். இது சிறப்பாக கைங்கர்யம், பெருமாள் ஸேவை இரண்டையும் அன்வயிக்கின்றது.

சுமார் ஒரு 15 அல்லது 16 வருடங்கள் முன்பு, அப்போதைய இணை ஆணையர், பெருகிவரும் கூட்டம் காரணமாக இந்த ‘விஸ்வரூபம்” ஸேவையினை சற்று முன்னதாக அதாவது அதிகாலை 4.30 மணி முதல் 5.00 மணிக்குள் நடத்தலாமா? என்று கோவிலார்களிடம் கலந்தலோசித்தார். அவ்வமயம் எனது தகப்பனார் இந்த திருப்பள்ளியெழுச்சியிலிருந்து இந்த பாடலையும், திருப்பள்ளியெழுச்சி இதர பாசுரங்களிலிருந்து, ‘கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ?” ”சுடரொளி பரந்தன சூழ்திசையெல்லாம்” என்பனப் போன்ற பலவரிகளையும் மேற்கோள் காட்டி, இவை நம்பெருமாளுக்காகவேயுள்ள திருப்பள்ளியெழுச்சி. எனவே கதிரவன் உதிக்கும் காலைப்பொழுதினைத் தவிர இதர நேரங்களில் இந்த விஸ்வரூபத்தினை நாம் நடத்தலாகாது – இது முறையல்ல’ என்று எடுத்துரைத்தார். இணை ஆணையரும் இந்த நடவடிக்கையைக் கைவிட்டார். சில வருடங்களுக்கு முன்பு கூட நிர்வாகம் அதிகமான கூட்டம் வருகின்ற நாட்களில், பெரும்பான்மையான நாட்கள், இந்த விஸ்வரூபத்தினைத் தவிர்க்க ஆரம்பித்தது. பலர் அதிருப்தியினைத் தெரிவித்து, அதன் பின்பு எந்தவித பிரச்சனையுமின்றி இன்று வரை நடந்துவருகின்றது. இந்தத் திருப்பள்ளியெழுச்சி – ‘விஸ்வரூபம்’ எனப்படும் இந்த ஸேவைகாலம் மிகவும் உயர்ந்தது. திருப்பள்ளியெழுச்சியினை மனதிற்குள் சொல்லியபடியே அமைதியாக அரங்கனைக் காணுங்களேன். உங்கள் உள்ளம் மேம்படும். தொண்டரடிப்பொடி காட்டிய வழியில் ‘அளியனென்றருளி உன்னடியார்க்கு ஆட்படுத்தாய்’ என வேண்டுங்கள். அரங்கன் அருள் செய்வான்.

கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?
கதிரவன் கணைகடல் முளைத்தனன் இவனோ?
துடியிடையார் சுரிகுழல் பிழிந்துதறி
துகிலுடுத்தேறினர் சூழ்புனலரங்கா!
தொடையொத்த துவளமும் கூடையும் பொலிந்து
தோன்றி தோள் தொண்டரடிப்பொடியென்னும்
அடியனை – அளியனென்றருளி உன்னடியார்க்கு
ஆட்படுத்தாய்! பள்ளியெழுந்தருளாயே!

காவிரி நதியால் சூழ்ந்து விளங்கும் திருவரங்கப் பெரிய கோயிலில் உறையும் ஸ்ரீரெங்கநாதனே! மணம் வீசும் தாமரை மலர்கள் நன்றாக மலர்ந்துள்ளன. எப்போதும் ஒலித்துக்கொண்டுள்ள கடலில் சூரியனும் வந்துவிட்டான். மிகவும் மெல்லிய இடையினை உடைய பெண்களும் தங்கள் சுருண்ட தலைமுடியினை நீர்காயும் வண்ணம் உதறிவிட்டுக் கொண்டு, ஆடைகளை அணிந்து கொண்டு, காவிரிக்கரையில் ஏறத் தொடங்கிவிட்டனர். நன்கு நேர்த்தியாய் தொடுக்கப்பட்டத் துளசி மாலையும், அழகான பூக்கூடையும் வைக்கப்படும் தோளினையுடைய ”தொண்டரடிப்பொடி” என்னும் பெயர் கொண்ட அடியேனை, உனக்குத் தொண்டு செய்வதற்கு ஏற்றவன் என்று ஏற்றுக்கொண்டு, உன்னுடைய அடியார்களுக்கு அடிமையாக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்குத் திருப்பள்ளி எழவேண்டும்.

-மேலும் பேசுவோம்- Posted on 24.5.2008.

May 24, 2008

PESUM ARANGAN-33

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 9:04 pm

மற்றுமோர் தெய்வமுண்டோ? மதியிலாமானிடங்காள்!
உற்ற போதன்றி நீங்கள் ஒருவனென்று உணரமாட்டீர்!
அற்றமேலொன்றறியீர் அவனல்லால் தெய்வமில்லை
கற்றினம் மேய்த்தஎந்தை கழலிணை பணிமின்நீரே.

தெளிவாக அறியும் ஞானம் இல்லாத மனிதர்களே! பெரியபெருமாளை அல்லாது ஒரு பரம்பொருள் சரணடைவதற்கு என்று வேறு யாரும் உண்டோ? உங்களுக்கு ஒரு ஆபத்துக் காலம் வரும்போது அல்லாமல் மற்ற நேரங்களில் இவனைத்தவிர வேறு எந்த கடவுளும் இல்லை என்று உணராமல் உள்ளீர்கள். மிகவும் மேலான வேதப்பொருட்களை நீங்கள் அறியவில்லை. அவனைத் தவிர சரண் அடைவதற்கு வேறு பரம்பொருள்
யாரும் இல்லை எனவே இதனையுணர்ந்து பசுக்கூட்டங்களை மேய்த்த என்னுடைய கண்ணபிரானாகிய பெரியபெருமாளின் இரண்டு திருவடிகளையும் நீங்கள் சரணம் என்று அடைவீர்களாக!.

நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோரருள் தன்னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பிமீர்காள்! கெருடவாகனனும் நிற்க
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே!

பல்வேறு இடங்களிலும் பலவித குணங்களுக்கான (தாமஸ, ரஜோ) தேவதைகளை உண்டாக்கினான். அவனையே அடைந்து நல்லகதி அடைய விருப்பம் உள்ளவர்கள், தாங்கள் எண்ணிய நிலையினை அடைவதற்காக தன்னுடைய ஈடு இணையற்ற ‘தயை’ என்னும் குணத்தினால் திருவரங்கம் என்பதைக் காண்பித்தான். பெரியபெருமாளைத் தவிர மற்ற விஷயங்களில் எதன் மூலமாவது எதையாவது அடைந்து,
அதனால் நிறைவு பெற்று விட்டதாக நினைக்கும் மனிதர்களே! நான் சொல்வதைக் கேட்கிறீர்களர்? பெரிய திருவடியாம் கருடவாகனத்தைக் கொண்டுள்ள எம்பெருமாள் உங்கள் அருகில் நிற்கும்போது, நீங்கள் மூதேவியின் அருகில் சென்று அவள் தரும் செல்வத்தினை எதிர்பார்த்து நிற்கின்றீர்களே!

மேலே கண்ட இரண்டு பாசுரங்களிலும் பரம்பொருள் அரங்கனேயென்றும், ஈடு இணையற்ற கருணையுடையவன் என்கிறார். பெரியபெருமாளை நாம் மறப்போமாகின், இழப்போமாகின், வாழ்வில் அனைத்தையுமே இழந்தவராவோம்.!

ஆழ்வார் கூறியது போல் அரங்கனும் அவனது தயையினால், தன்னடியார் எவரையும் இழக்க விரும்பமாட்டான். வாஞ்சையுடன் தன்னருகில்தான் வைத்துக் கொள்வான். ஏதேனும் தவறு செய்தாலும், மடியினைக் கன்று முட்டி வலித்தாலும் கன்றுக்கு பால் சொரியும் பசு போல, அவன் அன்போடு திருத்தவே பார்ப்பான்!

அந்த அர்ச்சகர் ஸ்ரீரங்கநாதரிடத்து கைங்கர்யம் பண்ணுகின்றவர். ஒரு நாள் மதியம் பூஜையின்போது சுற்றுக்கோவில்களில் நிவேதனம் செய்யப்போனவர், சேரகுலவல்லி ஸந்நிதி, துலுக்க நாச்சியார் ஸந்நிதி என வரிசையாக நிவேதனம் முடித்து, மூலஸ்தானம் திரும்புகையில் ஒரு விபரீத எண்ணம் உண்டாயிற்று. சாதாரண மானுடர்களான எங்களில் சிலருக்குதான் காமம் மிகுந்து ஒருவருக்கு மேல் பெண்டிர்தொடர்பு
கொள்வர்! உனக்கு எதற்கு இவ்வளவு நாச்சிமார்கள்? மூலஸ்தானத்தில் உபயநாச்சிமார்கள், தனிக்கோவில் நாயகி ஸ்ரீரெங்கநாயகி, சேரகுலவல்லி, கமலவல்லி, துலுக்கநாச்சியார், ஆண்டாள்…? என்ற சிந்தனையுடன் அன்றைய மதியம் பூஜையை முடித்து விட்டார்.

இரவு பணிமுடிந்து தனது வீடு திரும்பி கண்ணயர்ந்தார். அவரது கனவில் அரங்கன் அழகிய குருவாயூரப்பனைப் போன்று! அர்ச்சகா; அப்படியே அந்த அரங்கக்
குழந்தையை வாரிஎடுக்கின்றார். தனது வீடு திரும்பி பழங்கள், வெண்ணை, அன்று சமைத்த விசேஷபதார்த்தங்களையெல்லாம் ஊட்டுகின்றார். மயக்கும் புன்சிரிப்புடன் அரங்கன் அனைத்தையும் ஏற்கின்றான். தன் சுற்று வட்டாரத்திலுள்ள நெருங்கியவர்கள் வீட்டிற்கு எல்லாம் அரங்கனை அழைத்துச்செல்கிறார். அரங்கன் தன் இன்முகம் மாறாது அவர்கள்தம் உபசரிப்பையெல்லாம் ஏற்கின்றான். தனது நெருங்கிய நண்பரான வேற்றுமதத்தைச் சார்ந்த நண்பர் ஒருவரது வீட்டிற்கும் அழைத்துச் செல்கின்றார். அவர்
சற்றே பொருட்படுத்தாமல் ஏதோ ஒரு காரியத்திலிருக்கின்றார். இந்த அர்ச்சகர் அந்த நண்பர் மீது கோபித்துக்கொண்டு அந்த அரங்கக்குழந்தையைத் தோளில் சாற்றியவாறு கீழ உத்திர வீதியின் வழியாக வெள்ளைக்கோபுரம் உள்நுழைகின்றார்.

வெள்ளைக்கோபுரம் தாண்டி ‘தவிட்டறைவாசல்” எனும் சிறிய நுழைவு செல்லும்போது ஆதிசேஷன் பிரம்மாண்டமாக சினம்கொண்டு படுமெடுத்து நிற்கின்றது. விஷநாக்குகளால் விஷத்தினை அக்னிபோன்று அந்த அர்ச்சகர் மேல் கக்குகின்றது. அதுயனைத்தும் புஷ்பமாக மாறி இவர் மேல் விழுகின்றது. அந்த அர்ச்சகருக்கு ஒன்றும் புரியவில்லை. அரங்கனைப் பார்த்து கேட்கின்றான், “ஆதிசேஷனுக்கு எதற்காக இத்தனை சினம்?” என்று!. அரங்கன் நமட்டுசிரிப்புடன் என்னை மதியாதயொருவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றாய் அல்லவா? அதுதான் இதன் சினத்திற்கு காரணம் – நான் மட்டும் உன் தோளிலில்லாமலிருந்தால் நீ தொலைந்தாய்! பஸ்பந்தான்! சரி! விடு! நீ கவலைப்படாதே! அது தானாகவே சரியாகிவிடும்! நான் பார்த்துக் கொள்கிறேன் நீ போ! என்கிறார்.

அர்ச்சகரும் நாழிகேட்டான் வாசல் உள் நுழைந்து சேனை முதல்வர் சந்நிதி எதிரேயுள்ள நான்குகால் மண்டபத்தின் வழியே உள்ளே செல்லும் போது அரங்கன் அந்த நாலுகால் மண்டபத்தில் சற்றே நிற்கும்படி சொல்கிறான் – அர்ச்சகர் நின்றார்.

எப்படியிருந்தது? என்று வினவினான் அரங்கன். அர்ச்சகருக்கு நா தழுதழுத்தது. வார்த்தைகள் வரவில்லை. அரங்கன் அன்பே உருவான ஒரு குழந்தையாக அவரிடம் விளையாடியதை எண்ணி ஆனந்தகண்ணீர் உருண்டோடியது. அப்போது அரங்கன் சொல்கிறான், ”ஏ பட்டரே! உம்மிடம் எப்படி நான் குழந்தையாக விளையாடினேனோ அதே போன்றுதான் ‘சுரதாணி’ என்ற இந்த துலுக்க நாச்சியாரோடும் விளையாடிக்
கொண்டிருந்தேன்! கோவிலார்கள் என் விக்ரஹத்தை யாசித்துப் பெற்ற பின்பு, என்னை விட்டு பிரியமுடியாமல் நான் வருவதற்கு முன்பே அந்த துலுக்கநாச்சியார் இங்கு வந்து சேர்ந்தாள். இப்போது நீ நின்று கொண்டிருக்கின்றாயே இதே நாலுகால் மண்டபத்தில்தான் இவள் என் பிரிவை தாங்கமாட்டாமல், ஒரு தாயின்
பரிவோடு, குழந்தையை இழந்த தாயின் உயிர்தவிப்போடு, இதே இடத்தில் தன்னுயிரை இழந்தாள்! இதேப் போன்றுதான் ஒவ்வொருவரும் ஒரு தாயின் பரிவோடும், சகோதரி போன்ற வாஞ்சையுடனும், சுத்தமான அன்போடும் என்னைச் சேர்ந்தனரேத் தவிர நீ மதியம் நினைத்தாயே! காமம்! அது கொண்டு என்னைச் சேரவில்லை. காமம், குரோதம் இத்தியாதிகளெல்லாம் உங்களுக்குதான்! புரிந்ததா? என்றார். தூக்கத்திலேயே வியர்த்தது அந்த அர்ச்சகருக்கு! கனவு கலைந்தது! அதன் பிறகு தூக்கமா வரும் அவருக்கு? பொழுது எப்போது விடியும் எனக் காத்திருந்தார். அவனது திருவடியைப் பிடித்துக் கொண்டு வருந்தி கண்ணீர் சிந்தினார். தன்னைத் தவறாக நினைத்த அந்த அர்ச்சகனை அன்போடு திருத்தினான் அரங்கன்! அந்த மதிகெட்ட அர்ச்சகன் யாரென்று உங்களால் யூகிக்க முடிகின்றதா? ஆம்! நானேதான்!.

உள்ளத்தேயுறையும்மாலை உள்ளுவானுணர்வொன்றில்லா
கள்ளத்தே நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவாருள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறிதியென்று
வெள்கிப்போய் என்னுள்ளேநான் விலவறச் சிரித்திட்டேனே.

(எப்போதும் உள்ளத்தில் வாசம் செய்கின்ற பெரியபெருமாளை அறிந்து கொள்வதற்கான உயர்ந்த அறிவு எதுவும் இல்லாத கள்ளனாகிய நான், உனக்கு அடிமைத்தனம் செய்வதற்கு உரிய வேடம் அனைத்தையும் தரித்துக்கொண்டுள்ளேன். சிந்திப்பவர்களின் சிந்தனை முழுவதும் நீ அறிவாய் என்று அறிந்துகொண்டு, நான் வெட்கப்பட்டு உன்னை விட்டு விலகிச் சென்று, என்னுடைய போலித்தன்மையினை நினைத்து விலா எலும்பு முறிந்து போகும்படி சிரித்தேன்!)

-மேலும் பேசுவோம்- Posted on 21.5.2008.

From: Rajadesikan Srinivasan
Date: May 22, 2008 4:27 PM
Subject: Pesum Arangan
To: Murali Battar Rangaraja

Adiyen Swami…

அரங்கனின் வாத்சல்யதை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
சிலிர்க்க வைத்த அனுபவம்.

மேலும் அர்ச்சைக்கும் அர்ச்சகனுக்கும் நடுவில் சர்ச்சையேது?

எண்ணத்தில் தவறு என்று நீர் சொன்னலும், எண்ணிய பொருள் நம்பெருமாள் ஆனதால் திண்ணமாக சொல்கிறேன்..தேவரீர்பால் தேவனுக்கு உள்ள காருண்யமே கனவின் உட்பொருள்.

நீர் முன்னமே கூறியது போல்,
அரங்கனே கூறவில்லயா?

“என்னடியார் அது செய்யார்.. செய்தாரேல், நன்று செய்தார்…
!”

தாஸன்
,

இராஜாதேசிகன்


S.RajaDesikan
Ph: 99400 18540

May 21, 2008

PESUM ARANGAN-32

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 7:51 pm

ஸ்ரீமத் பகவத் கீதையில், கண்ணன்,

அபி சேத் ஸூதுராசாரோ பஜதே மாம் அனன்யபாக்
ஸாதுரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்வ்யவஸிதோஹி ஸ:
க்ஷப்ரம் பவதி தர்மாத்மா ஸஸ்வச்சாந்திம் நிகச்சதி
கௌந்தேய ப்ரதிஜானீஹி ந மே பக்த: ப்ரணஸ்யதி.

மிக்க கெட்ட நடத்தையுள்ள மனிதன் கூட ஸர்வேஸ்வரனான என்னையே கதியென்று என்னை பஜிக்க (பூஜிக்க) ஆரம்பித்தானேயாகில், அவனை நல்ல ஆசாரமுள்ள ஸாதுவென்ற உணரவேண்டும். ஏனெனில் நல்ல காரியத்தைச் செய்ய அவன் எத்தனித்துவிட்டான். வெகுசீக்கிரத்தில் தர்மாத்மாவாக ஆகி, நித்யமான மோக்ஷ சுகத்தையடைகிறான். ”ஹே! அர்ஜூனா! ஸர்வேஸ்வரனான என்னை பஜிப்பவன் ஒரு நாளும் கெட்டுவிட மாட்டான் என்பதை நீ பிரதிக்ஞைச் செய்! என்று அர்ஜூனனைப் பார்த்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சொல்கின்றார்.

இங்கு பகவான் தான் பிரதிக்ஞை செய்தால் ஒரு சமயம் பிரதிக்ஞையை விட்டு விடுமோ என்றஞ்சி, தன் பக்தன் பிரதிக்ஞை செய்தால் ஸத்யமாகத் தான் செய்துதானே ஆகவேண்டும் என்று திட ஸங்கல்பத்தினால்
அர்ஜூனனைச் செய்யச் சொல்கிறாh;.

பக்தனுடைய வாக்கைக் காப்பாற்ற தன்னை பூஜிப்பவர்களை, தன் நாமாவினை அர்ப்பணிப்போடு ஜபம் செய்கிறவர்களை, நாம சங்கீர்த்தனம் செய்பவர்களை காப்பாற்றியேத் தீருவான். எத்தனைத் தப்பு செய்தாலும், அவன் செய்தத் தப்பை உணருவானேயாகின், உணர்ந்து வருந்துவானேயாகின், மெய்வருந்தி கலங்குவானேயாகின், கலங்கி கதறுவானேயாகின் — இவன் பதறி வருவான்! பாசமுடன் நெருங்குவான்! மாசற்றவனாய் மாற்றுவான்! தன் அன்புக்கு, அருளுக்கு இலக்காக்குவான்!

அரங்கன், அன்று கீதையில் சொன்ன வாக்கை, தொண்டரடிப்பொடிகளின் வாழ்வில் நிகழ்த்திக் காட்டினார். அன்பே அரங்கன் ஆனாதல் ஒருபடி மேலே போய் தன் பக்தனைத் திருத்திப் பணிக்கொள்ள, தானே தாசி வீட்டின் கதவையும் தட்டுகின்றான். தன் பொன்வட்டிலையும் கொடுக்கின்றான்!.

இங்கு அரங்கனின் அன்பினை உணர்த்தும் இன்னொரு வைபவம். திருச்சியினருகே ஜீயர்புரம் என்றொரு ஊர். காவிரி கரையோரம் அமைந்த கவின்மிகு கிராமம். அந்த ஊரில் ஒரு வயதான அம்மையார் தன் பேரனுடன் வசித்துவருகின்றாள். பேரனின் பெயர் ரங்கன்! இருவருமே அரங்கனின் மேல் அளவற்ற பக்தி கொண்டவர்கள். ஒரு சமயம் முடிவெட்டிக் கொள்ள காவிரிக்கரையோரமாக ரங்கன் செல்கிறான். காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. முடிவெட்டிக்கொண்டு முழ்கிய அவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறான். ரங்காவென்று கதறுகின்றான். அவனை ஸ்ரீரங்கத்தில், அம்மாமண்டபத்தில் கரை சேர்க்கின்றார் அரங்கன். அவன் இவர் கிருபையை நினைத்து அரங்கனது சன்னிதானம் சென்று கண்ணீர் மல்க தரிசிக்கின்றான். இங்கு பேரன் வந்து சேராத அம்மையார் ”ரங்கா!ரங்கா!”வென்று கரையோரமாகப் பேரனுக்கு பசிக்கப்போகிறதே என்று பழையசோறும் மாவடுவும் வைத்துக் கொண்டு, கூப்பிட்டுக்கொண்டேயிருந்தாள். ஒரளவுக்கு மேல் பொறுக்கமாட்டாத அரங்கன் சவரம் செய்த முகத்துடன், ஈர உடையுடன், அம்மையாரிடத்து பிரசன்னமானர். உடை மாற்றியவுடன், தான் கொண்டு பழையசோற்றையும், மாவடுவினையும் அம்மையார், அவனுக்கு தன் கையாலேயே ஊட்டிவிடுகின்றார். வெள்ளம் வடிந்து அம்மையாரின் அசலான பேரன் வரும் வரையில் அரங்கன் அம்மையாருடனேயே அவளுடைய பேரன் ரூபத்திலிருந்து அம்மையாருக்கு பேருதவியாக இருக்கின்றான். அசல்பேரன் வந்து பாட்டியென விளித்ததும் இவன் மறைகின்றான். உண்மையுணர்ந்த இருவரும் மெய்யுருகுகின்றனர்.

இது நடந்த கதை! இன்று வரை இந்த சம்பவத்தினையுணர்த்தும் வகையில் பங்குனி பிரும்மோற்சவமன்று அரங்கன் ஜீயர்புரம் வரை வருகின்றார். இங்கு காவிரிக்கரையோரம் ஒரு தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டிருக்கும்! அதற்கு ‘அம்மையார் தண்ணீர் பந்தல்’ என்று பெயர். இங்கு இன்றும் தயிர்சாதமும் மாவடுவும் பெருமாளுக்கு நிவேதனமாகின்றது!

அரங்கன் என்றுமே பக்தர்தம் மெய்யன்புக்கு அடிமை!

-மேலும் பேசுவோம்- Posted on 20.5.2008.

May 20, 2008

PESUM ARANGAN-31

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 11:50 pm

ஆழ்வார்களில் பெரியாழ்வாருக்குயடுத்து நந்தவன கைங்கர்யம் செய்து, பூமாலைகளைக் கட்டி அரங்கனுக்கு சூட்டியழகுப் பார்த்தவர் விப்ரநாராயணன்யெனும் மண்டங்குடியில் அவதரித்த ஒரு சோழிய அந்தணர். பெரியாழ்வார்க்கு வேதஞானம் அவனளித்தது. இவர் முறையாக பயின்று சதுர்மறையுமறிந்த உத்தமர். புஷ்ப கைங்கர்யமே இந்த புவியுலகில் பிறந்ததின் பயனென்று சிரத்தையுடன் நந்தவனத்தினை அழகுற பராமரித்து செய்து வந்தார். இவரது நந்தவனம் நந்தகுமரன் ஆனந்தமாக வசிக்கும் நந்தவனமாக அனைவரின் மனத்தையும் பறித்தது. இவரின் தேஜஸ் பலரை மயக்கியது. தேவதேவியெனும் அழகு தேவதைத் தாசியும் இவ்வைராக்யசீலரை மயக்கத் திட்டமிட்டு, சில காலங்கள் அவரிடத்தே கஷ்டபட்டு, தன் திட்டத்தில் வெற்றியும் பெற்றாள்!. கடுந்தவம் செய்த ரிஷிகளே பலர் இதில் வீழ்ந்தபோது இவர் எம்மட்டும்? அவளே கதியானார். மதியிழந்தார்! கைங்கர்யம் மறந்தார்! தான் கொண்ட பொருளுமிழந்தார். பொருளில்லாத இவரை ஒருநாள் வெளித்தள்ளினாள் தேவதேவி!. தன்னை மறந்த, தான் செய்துவந்த கைங்கர்யத்தை மறந்த, விப்ரநாராயணனை அரங்கன் மறக்கவில்லை. தன்னிடமிருந்த பொன்வட்டில் ஒன்றினையெடுத்தான். தாசியின் கதவைத் தட்டினான். விப்ரநாராயணன் கொடுக்கச்சொன்னார் என்று அவளிடம் தன் பொன்வட்டிலைக் கொடுத்தான். நீ யார்? என தாசி வினவ, தான் அழகிய மணவாளன் என்றும், அவரின் தூதன் என்றுமுரைத்தான். விப்ரநாராயணரிடத்து தாசி வரச் சொன்னாள் எனக்கூறி மறைந்தான். காமுற்றிருந்த இவரும், பொன்வட்டில் கண்டு இன்புற்றிருந்த, தேவதேவியுடன் சுகித்திருந்தார்.

அடுத்த நாள், அரங்கனது பொன்வட்டில் காணாமல் திக்கித்துப் போயினர் கோவிலார்கள். சோழமண்டலமே அதிர்ந்தது. தாசியின் வீட்டில் பொன்வட்டில் கண்டதை அரசனிடம் தெரிவித்தாள் அவளின் சேடி!. இருவரும் அரசனின் இரும்புபிடிக்குள்! விப்ரநாராயணரைக் காவலில் வைத்து இரவு கண்ணயர்தான் அரசன். அவனது கனவில் அரங்கன்! ”விப்ரநாராயணன் சார்பில் பொன்வட்டில் யாமே தந்தோம்! அவன் குற்றமற்றவன் – விடுவித்துவிடு’ என்றான். வியர்த்தான் அரசன். விப்ரநாராயணரிடத்து பணிந்து போற்றி அவருக்கு எல்லா மரியாதைகளும் செய்து அவரது நந்தவனத்தில் கொண்டுவிட்டான். சொல்லித் திருந்துபவர்களை விட, பட்டுத் திருந்தியவர்களின் மனம் நன்கு பக்குவப்படும்.
இவர் பட்டுத் திருந்தியவர்! இவர் பிறவியெடுத்ததின் பயனை, அரங்கன் அவருக்கு உணரவைத்தான்.

”உபதேசத்தாலே மீளாத போது சேதனனை அருளாலே திருத்தும்”
என்கிறார் பிள்ளைலோகசார்யர் ஸ்ரீவசனபூஷணத்தில்.

அவனது அருளையுணர்ந்த விப்ரநாராயணர், உருண்டு, புரண்டு
அழுது அரங்கனிடத்துக் கதறினார். இனி எவராலுமே கெடுக்க முடியாத, வைராக்ய சீலரானர். திருமாலை எனும் 45 பாசுரங்கள் மற்றும் திருபள்ளியெழுச்சி எனும் 10 பாசுரங்கள் அரங்கன் மீது பாடினார். அரங்கனைத் தவிர வேறு எவரையும் இவர் பாடவில்லை. இவரைப் பொறுத்த மட்டில் திருவரங்கத்துக்கு ஈடு பரமபதம் கூட கிடையாது. இவரது திருமாலை அறியாதார் திருமாலை அறியார்; என்று ஒரு சொல் வழக்குக் கூட உண்டு. அவரது நந்தவனம் மீண்டும் பூத்துக்குலுங்கியது. அவரது தொண்டு தொடர்ந்தது. அரங்கனது தொண்டர்களுக்கும் தொண்டுகளுக்கும் இவர் அடிமையாகயிருக்க விரும்பினார். அதனால் இவர் தொண்டரடிப்பொடி என அழைக்கப்பெற்றார்.

காவலில் புலனை வைத்துக் கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே
மூவுலகுண்டுமிழ்ந்த முதல்வ! நின் நாமம் கற்ற
ஆவலிப்புடைமைக் கண்டாய் அரங்கமா நகருள்ளானே!

(திருவரங்கப் பெரியபெருமாளே! பிரளயம் ஏற்பட்ட காலத்தில் இந்த உலகினைக் காப்பதற்காக அதனை உன் வயிற்றினுள் விழுங்கி வைத்திருந்து, பின்னா; ஆபத்து நீங்கிய பின் மீண்டும் உலகத்தினை வெளிக்கொண்டு வந்தவனே! உன்னுடைய திருநாமத்தினையறிந்தவர்கள் என்ற ஒரே காரணத்தினால் உண்டான கர்வத்தின் விளைவாக – எங்களுடைய ஐந்து புலன்களையும், எந்தவிதக் கட்டுபாடுமின்றி அலையவிட்டு, அப்படி அலையவிட்டதால் ஏற்பட்ட பாவங்களை நாங்கள் உனது திருநாமத்தின் சக்தியினால், உதறித்தள்ளி, அதனால் வெற்றிமுழக்கம் செய்து யமனுடைய தூதர்களின் தலைகள் மீதே கால்களை பதித்து நடக்கின்றோம்)

இதில் தாம் புலன்களால் செய்த பாவங்களை நினைக்கின்றார். அவனது திருநாமத்தைச் சொன்ன சக்தியினால்,
நாம பக்தியினால் பாவங்களைப் போக்கும் வழியையும் சொல்லித் தருகின்றார்.

-மேலும் பேசுவோம்- Posted on 19.5.2008

May 18, 2008

PESUM ARANGAN-30

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 5:32 pm

தம்மையுகப்பவரை தாமுகக்கும் அரங்கன் தன்னையே நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் ஆண்டாளையும் ஆட்கொள்ள சித்தமானர். ஆண்டாள் மத்தளம் கொட்டி மதுசூதனன் வந்து கைப்பற்றக் கனாக் கண்டாள். அவரது தந்தை பெரியாழ்வாரோ, கோதைக்குத் தக்க வரன் கோயில்பிள்ளை -கைகூடுவது எங்ஙனமோ? என்று கவலையுடன் கண்ணயர, அவரது ஸ்வப்நத்தில் ‘ உம் புத்ரி கோதையைக் கொண்டு எம் திருமுற்றத்தே வாரும், அவளுக்குத் தகுதியாக நாமே பாணிக்ரஹணம் பண்ணுகிறோம்’ என்று அருளிச்செய்து, தம் பரிசகரத்தாருக்கு ” நம் சத்ர சாமர தாலவ்ருந்தாதி. ஸகல பரிஜந பரிச்சதங்களோடே ஸ்ரீவில்லிபுத்துhரேறப் போய் ஆணடாளை அழைத்துக் கொண்டு வாருங்கோள்” என்று கட்டளையிட்டுக் காத்திருந்தார் அரங்கன். எந்த நேரத்தில் எப்படி ஆட்கொள்ள வேண்டுமோ, அதற்கேற்றப்போல் சந்தர்ப்பங்களையமைப்பதில் வல்லவா; அரங்கன்!

ஆழ்வாரும் ப்ரீதராய் வடபத்ரசாயிடம் அனுமதிபெற்று, சகல மரியாதைகளுடனே, ஆண்டாள் வந்தாள்! சூடிக்கொடுத்தாள் வந்தாள்! கருப்பார் குழற்கோதை வந்தாள்! திருப்பாவைப் பாடிய செல்வி வந்தாள். தென்னரங்க தொழுஞ் தேசியள் வந்தாள்! என பல சின்னங்கள் பரிமாற திருவரங்க திருமுற்றம் வந்தடைந்தார்.

சூடிக்கொடுத்த நாச்சியாரும், அகிலருங் காணும்படி உதறியுடுத்த பட்டுச்சேலையும், சுற்றிய செங்கழுநீர் மாலையும், திருநுதற் கஸ்தூரித் திருநாமமும், காதளவும் ஓடிக் கயல்போல் மிளிருங் கடைக்கண் விழியும் கொடியே இடையுமாய், சீரார் வளையொலிப்ப, அன்னமென்ன நடை கொண்டு அழகிய மணவாளன் திருமுன்பேச் சென்று, மின்னலென உள்ளேப் புகுந்து, கண்களாரக் கண்டு, கேசவநம்பியின் கால்களைப் பிடித்துவிட்டு, நாகப்படுக்கையினை மிதித்தேறித் தீமுகத்து நாகணைமேற் சேருந் திருவரங்கரைச் சேர்ந்து, திருவரங்கன் திருவடி வருடியபடி அவனுடனே, ஆராக் காதலுடனே அந்தர்பபவித்தருளினாள்.

ஏகனாயிருந்த அரங்கன், இவளுடன் சேர்ந்து இருவரானான். இருவரும் ஒன்றேயாயினா;!. க்ஷீர ஸமுத்திரராஜன் போன்று ஆழ்வாரும் அரங்கனுக்கு மாமனாரானா;. அரங்கனுக்கே மாமனாரானதால் இவா; பெரியாழ்வார் ஆனார்! அரங்கன் இவருக்கு ஸகல மரியாதைகளும் செய்து, ‘வில்லிபுததூர்ருறைவான்றன் பொன்னடி பூண்டுகொண்டு வாழும்! என்று விடை கொடுத்தருளினார்.
.
கருவறையை விட்டு வெளியே வந்த ஆழ்வாருக்கு மகளின் பிரிவு பெருந்துயரைத் தந்தது. வாய்விட்டு கதறுகின்றார்,

”ஒரு மகன் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால்,
திருமகள் போல வளர்த்தேன் – செங்கண் மால்தான் கொண்டு போனாரே” – என்று.

ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் பெரியாழ்வாருடனும், சகல பரிஜனங்களுடன் வந்துறங்கிய இடம் இன்றும் மேல அடையவளைஞ்சான் தெருவில் ‘வெளி ஆண்டாள்’ ஸந்நிதியாகயுள்ளது. இங்கு ஆண்டாள் மூலவர் விக்ரஹம் கம்பீரமாக அமர்ந்த கோலம்.

இவள் வரப்பிரஸாதி. தாங்கள் ஸ்ரீரங்கம் வரும்போது அவசியம் இங்கும் வந்து தரிசித்துவிட்டு செல்லுங்கள். அரங்கனும் சரி ஆண்டாளும் சரி! இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அன்பு அலாதியானது. ஸ்ரீரெங்கநாயகித் தாயாருடனும் உறையூர் கமலவல்லியிடனும் அவரவர் சேர்த்தி தினத்தில் வருடத்திற்கொரு முறைதான் மாலை மாற்றிக்கொள்கிறார்.. ஆனால் ஆண்டாளுடன் அவள் ஸந்நிதி வழியே செல்லும் போதெல்லாம் மாலை மாற்றிக் கொள்கின்றார்

இந்த வெளி ஆண்டாள் ஸந்நிதியின் எதிரே திரு. பார்த்தஸாரதி என்றொருவர் இருக்கின்றார். இவருக்கு மன்னார்குடிதான் சொந்த ஊர். . 16 அல்லது 17 வயதில் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். . ஆண்டாள் ஸந்நிதியில் தன்னால் முடிந்த கைங்கர்யங்களை இன்று வரை செய்து வருகின்றார். வந்த புதிதில் இங்குள்ள அர்ச்சகர்களுக்கு உதவியாக பிரஸாதம் அனுப்புதல், கொண்டு கொடுத்தல் என்று உதவியாகயிருந்தார். கொஞ்சநாட்களில் ரெயில்வேயில் வேலைக் கிடைத்து விட்டது. தினசரி காலை ஆண்டாள் ஸந்நிதியிலிருந்து திருத்துழாய் சேகரித்து பெரியபெருமாளின் திருவாராதனத்திற்குக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.. அது போல் இரவு வந்து பெரிய பெருமாளிடத்து களைந்த கொண்டைமாலை, உற்சவர் சாத்திக் கொண்டிருந்த வெள்ளைமாலையென்று அர்ச்சகர்கள் அளித்தால் மறுநாள் ஆண்டாளுக்குச் சாற்றுவார் அல்லது பெருமாள் சாற்றிய புஷ்பங்கள் கிடைத்தால் சாற்றுவார்.. இந்த கைங்கர்யத்தினை இன்றளவும் விடாமல் செய்து வருகின்றார். இவருக்கு சுமார் 12 வருடங்களுக்கு முன் திருமணமாயிற்று. மனைவியின் பெயர் என்ன தெரியுமா? ‘ஆண்டாள்”!. திருமணமாகி இரண்டொரு வருடங்களிருக்கும். அன்று திருவாடிப்பூரம்! ஆண்டாளின் திருநக்ஷத்திரம். இவர் வெளி ஆண்டாளின் திருமஞ்சன கைங்கர்யத்தில் மும்முரமாகயுள்ளார் – ஆண்டாளுக்கு பாலாபிஷேகம் ஆகின்றது. அங்கு இவருக்கு ஒரு அழகிய பெண்குழந்தை ஜனனம்! ஏற்கனவே மனைவியின் பெயர் ஆண்டாள் என்றிருப்பதால் இந்த குழந்தைக்கு கோதையென்று பெயரிட்டுரிக்கின்றார்.
ஆச்சர்யமாக இல்லை?

-மேலும் பேசுவோம்- Posted on 17.5.2008.

May 17, 2008

PESUM ARANGAN-29

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 7:30 pm

ஆண்டாள்தான் அரங்கனுக்கும் நமக்கும் உள்ள நீக்கவொண்ணாத உறவை, சம்பந்தத்தை, உலகிற்கு வெளிப்படுத்தினாள்.

அவன் பிதா நாம் புத்திரர்கள் – அவன் சேஷி, நாம் சேஷ பூதர்கள்.

”உன்றன்னோடு உற்றோமேயாவோம் உமக்கே நாம் ஆட்செய்வோம்” என்றும்

”உன்றன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது’ என்றும், எப்போதும் அரங்கனுக்கும் நமக்கும் உள்ள பந்தத்தை தெளிவுபடுத்துகின்றாள்.

செம்மையுடைய திருவரங்கர்தாம் பணித்த
மெய்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பார்
தம்மையுகப்பாரைத் தாமுகப்பரெனும் சொல் –
தம்மிடையே பொய்யானால் சாதிப்பர் ஆர் இனியே?

(நேர்மையான குணம் நிரம்பிய திருவரங்கப் பெரியபெருமாள் கிருஷ்ணாவதாரம் எடுத்த காலத்தில் தனது திருவாயினால் அருளிச்செய்த சத்தியமானதும் பெருமையுடையதுமான சரம சுலோகத்தினை என்னுடைய தகப்பனாரான பெரியாழ்வார் கேட்டு, அதன்படி இருப்பார் – ”தம்மை விரும்புகிறவர்களைத் தாமும் விரும்புவர்” என்று உள்ள பழமொழியானது, உலகினுக்கே வரம்பினைக் கூறும் பெரியபெருமாள் விஷயத்திலேயே பொய்யாகி விட்டால், அதனை யார் வந்து சரி செய்வது?)”.

கருவூர் தேவர் என்ற ஒரு சித்தர் -. இவர் இராஜராஜ சோழன் காலத்திலிருந்தவர். இவர் ஸ்ரீரங்கம் நம்பெருமாளை தரிசித்து கருடமண்டபம் வழியே சென்று கொண்டிருக்கின்றார். திருக்கச்சிநம்பி ஸன்னிதியருகே ஒரு திருவரங்கத்துக் கோவில் தாசி இவரை விழுந்து வணங்குகின்றாள். இரவு உணவுக்கு இவரை வருந்தியழைக்கின்றாள். கருவூர் தேவரும் உணவு உண்டபின் தாசியை அனுக்கிரஹிக்க எண்ணுகின்றார். உனக்கு ஏதும் வேண்டுமோ? என கேட்கின்றார். தாசி நம்பெருமாளின் தங்கக் காசுமாலையை வேண்டுகின்றாள். இவளது வேண்டுகோளை இவரால் நிராகரிக்க இயலவில்லை. அரங்கனிடம் மனதார வேண்டுகின்றார். அடுத்தநொடி அவரது கையில் அரங்கனின் காசுமாலை! அவளிடம் கொடுத்துவிட்டு கருவூர்தேவர் புதுக்கோட்டை நோக்கி புறப்படுகின்றார்.

மறுநாள் காலை ஸ்ரீரங்கமே அமர்க்களப்படுகிறது காசுமாலையைக் காணாமல்!. அரசன் கண்டுபிடித்து விடுகிறான் தாசி வீட்டிலிருந்ததை! . விசாரணைத் தொடங்குகிறது. கருவூர்தேவரைப் பிடித்துவர நாளாபுறமும் ஆட்கள் செல்கின்றனர். புதுகோட்டை சமீபம் அவரைக் கண்டுபிடித்து ஸ்ரீரங்கம் கொண்டு வருகின்றனர். உனக்கு எப்படி கிடைத்தது? என வினவினான் அரசன். அரங்கன் கொடுத்தான் என்றார் தேவர்.. ‘அத்தாட்சி?’ மிரட்டுகிறான் அரசன்! ”யாமேயளித்தோம்!” என முழங்கினான் அரங்கன் அசரீரியாக!. அரங்கனின் அன்பு அப்படிப்பட்டது. தன் கோவில் வந்து சென்றவர் எவரும் மனமுருக வேண்டிடின், இவன் இளகி உருகுபவன்! தம்மையுகப்பாரை தாமுகப்பர்!

-மேலும் பேசுவோம்- Posted on 16.5.2008.

Older Posts »

Blog at WordPress.com.