Srirangapankajam

October 31, 2008

PESUM ARANGAN-138

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 11:12 pm
Chapter-138
 30.10.2008
 
அழகிய மணவாளன், ஆழ்வார் திருநகரியிலே, தம் ஆச்சார்யன் விருப்பப்படியே, ஆழ்வார்களிடத்திலும், அருளிச்செயல்களிலும்,  அதிக நாட்டமுடையவராய், ஆச்சார்யர்களிடம் மிக்க ஆதரம் உடையவராய், வைஷ்ணவ தர்சனத்தினை பரமன் உகக்கும் வண்ணம் வளர்த்துக் கொண்டு போகின்றார்.
 
ஸம்ஸார வாழ்க்கையினைத் துறந்து உத்தமாச்ரமம் பெற்று ”ஸௌம்யஜா மாத்ருமுனி” என்னும் மணவாள மாமுனியானார்.
 
இவரது திருவடிகளில் அழகியவரதர் எனும் பெரும் வித்வான் ஆஸ்ரயித்து அப்போதே ஸந்யாஸ தர்மத்தினையும் மேற்கொண்டார்.  இவரே ‘ராமானுஜ ஜீயர்” என்றும், ‘பொன்னடிக்கால் ஜீயர்” என்றும் அழைக்கப்பட்ட வானமாமலை மடத்தின் முதல் ஜீயர் ஆவார்.
 
மணவாள மாமுனிகள் ‘நமக்கெல்லாம் நற்சீவனமான நம்பெருமாளை
சேவித்து மங்களாஸாசனம் பண்ணிக்கொண்டு இவ்வுயிர் நிலைத்திருக்கும் வரை அங்கேயிருக்கையன்றோ நமக்குப் ப்ராப்தம்” என்று ஒரு உறுதியான எண்ணம் கொண்டார். ஆச்சார்யனின் கட்டளையும் இதுவேயானதால்,
திருநகரியிலே ஆழ்வாரின் திருமுன்பே சென்று சேவித்து,
”நண்ணாவகரர் நலிவெய்த நல்லவரமரர் பொலிவெய்த,
எண்ணாதனகளென்ணும் நன்முனிவரின்பம் தலை சிறப்ப,
பண்ணார் நம்பெருமாளுடைய ப்ரதிபக்ஷங்களெல்லாம் நிரஸ்தமாய்,
என்று பாடி வேண்டுகின்றார்.
 
”தேவரீர் மங்களாஸாசனம் செய்தருளுகையாலே பண்டுபோல அனைத்தழகும் கண்டருளுகின்றார்.    அடியேன் பெருமாளை சேவிக்க விடை பெறுகின்றேன்” என்று விண்ணப்பம் செய்கின்றார்.
 
ஆழ்வாரும் மணவாளமாமுனியினை ஆசீர்வதித்து விடை கொடுக்கின்றார்.
 
இந்த மண்ணுய்ய மணவாளமாமுனிகள் மாதவம் செய்த காவிரியின்
படுகை அரங்கம் நோக்கி தொழுது பயணிக்கின்றார்.
 
முதலில் ஆழ்வார் திருநகரியிலிருந்து,
 
தேவஸ்யமஹிஷீம் திவ்யாம் ஆதௌ கோதாமுபாஸதத்
யந்மௌலிமாலிகாமேவ ஸ்வீகரோதி ஸ்வயம் ப்ரபு:
எந்த ஆண்டாளுடைய திருக்குழலில் சாத்தினை திருமாலையையே
ஸ்வாமியான அழகிய மணவாளன் அன்போடு ஏற்று சாத்திக் கொள்கிறானோ, அந்த அழகியமணவாளனுடைய திவ்யமஹிஷியான கோதையை நமஸ்கரிக்கின்றேன்.
 
என்கிறபடி சூடிக் கொடுத்த சுடர்கொடியின் தாள் பணிகின்றார்.  அங்கிருந்து திருமாலிருஞ்சோலையடைந்து கருணைக்கடலான அழகனிடத்து பிரார்த்திக்கின்றார்.
 
விஞ்ஞாபநம் வநகிரிஸ்வரா! ஸத்யரூபா மங்கீகுருஷ்வ கருணார்ணவ மாமகீநாம் ! ஸ்ரீரங்கதாமநி யதாபுரமேஷஸோஹம் ராமானுஜார்யவஸக: பரிவர்த்திஷீய !!
கருணைக்கடலான திருமாலிருஞ்சோலையழகரே!  யதார்த்தமான அடியேனது விண்ணப்பத்தை திருவுள்ளம் பற்றியருள வேணும்.  அது ஏதெனில்,  அடியேன் முன்புபோலத் திருவரங்கம் பெரியகோயிலிலே எம்பெருமானாருடைய திருவடிகளிலே சேர்ந்து வாழ்வேனாம்படி அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றார்.
 
அங்கிருந்து கிளம்பி ஸ்ரீரங்கத்தின் காவிரிக்கரையினை அடைகின்றார்.
 
Advertisements

October 30, 2008

PESUM ARANGAN-137

Filed under: PESUM ARANGAN — Tags: , , , — srirangapankajam @ 11:37 pm
Chapter-137
 29.10.2008
 
 
அழகிய மணவாளன் தம் தந்தையிடமிருந்து அருளிச்செயல்களையும், ரஹஸ்யங்களையும் சிரத்தையாகக் கற்றுத் தேர்ந்தார். 
 
உரிய காலத்தில் சாஸ்திரோக்தமாக அழகிய மணவாளனுக்குத் திருமணமும் செய்விக்கப்பட்டது. 
 
அழகிய மணவாளனுக்கு ஒரு திருமகனும் பிறந்தார்.  அவருக்கு  ”எம் ஐயன் இராமானுஜன்” என்று எம்பெருமானாரின் திருநாமம் சூட்டி மகிழ்ந்தார். 
 
சிலகாலஞ்சென்றதும் அழகிய மணவாளனின் தந்தை பரமபதித்தார். 
 
அழகிய மணவாளன் தம் தந்தை பரமபதித்தவுடன், சிக்கில் கிடாரத்திலிருந்து கிளம்பி ஆழ்வார் திருநகரியினையடைகின்றார். அங்கு ஸ்ரீவைஷ்ணவ தர்ஸந ப்ரவர்த்தகராயிருந்த திருமலையாழ்வார் என்கிற திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகளிலே ஆஸ்ரயிக்கின்றார்.
 
 
திருவாய்மொழிப்பிள்ளை தமது சீடரான அழகிய மணவாளனை மிகவும் உகந்து திவ்யபிரபந்தங்களின் தாத்பர்யங்களையும்,  ஸம்ஸாரத்தையறுப்பதான எல்லா அருளிச்செயல்களின் தாத்பர்யங்களையும் உபதேசிக்கின்றார். 
 
அழகிய மணவாளன் இவ்வருளிச்செயல்களில் ஆழ்கின்றார். 
 
உடையவரின் திருவடிகளை இறுக்கப் பற்றுகின்றார். 
 
உடையவருக்கு தமது ஆச்சார்யனின் பரிபூர்ண கிருபையினாலும், தயவினாலும் ஒரு தனிக்கோவில் ஸ்தாபித்து, இராமானுஜ சதுர்வேதி மங்கலம் என்கிற திருவீதிகளையும் உண்டாக்கி, யதிராஜ விம்சதி என்னும் அற்புத பாமாலையையும் சமர்ப்பிக்கின்றார் அழகிய மணவாளன். 
 
அழகிய மணவாளனின் இராமானுஜ பக்தியை மெச்சிய திருவாய்மொழிப்பிள்ளை ஒரு அற்புத அரிய இராமானுஜரின் திருமேனியை அவருக்கு அருளுகின்றார்.  இந்த இராமானுஜ திருமேனி மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் கட்டளைப்படி தாமிரபரணி நீரை காய்ச்சிய போது முதலில் அவதரித்த திருமேனியாகும்.  ஆழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வாரின் திருமேனி, உலுக்கான் படையெடுப்பின் போது, வலசையாக எழுந்தருளியபோது, இதனை அங்கிருந்த திருப்புளிஆழ்வார் மரத்தினடியில் புதைத்து வைத்து பின்னர் திருவாய்மொழிப் பிள்ளையால் கண்டெடுக்கப்பட்டதாகும்.
 
அளவிலா ஆனந்தம் அழகிய மணவாளனுக்கு!.  எம்பெருமானாரையே பரதெய்வமாக நித்யமாய் ஆழ்வாருக்கும், எம்பெருமானாருக்கும் கைங்கர்யமே புருஷார்த்தமாகக் கொண்டு திருநகரியிலே கைங்கர்யஸ்ரீயுடன் வாழ்ந்தருளினார்.
 
உத்தமனே!  உலகாரியனே!  மற்றொப்பாரையில்லா
வித்தகனே!  நல்ல வேதியனே!  தண்முடும்பை மன்னா!
சுத்த நன்ஞானியர் நற்றுணையே!  சுத்த சத்துவனே!
எத்தனை காலமிருந்து உழல்வேன் இவ்வுடம்பைக் கொண்டே?
 
என்று பிள்ளைலோகாச்சாரியாரிடத்து திருமேனியோட்டை அறுதியிட்டு, திருவாய்மொழிப்பிள்ளை, தமக்கு விமோசனத்தினை வேண்டுகின்றார். 
 
அந்த சமயம் திருவாய்மொழிப்பிள்ளை தம் அந்திம காலம் நெருங்குவதையறிந்து அழகிய மணவாளனை அழைக்கின்றார். ”காலம் கலிகாலமாகையாலே
ஆழ்வார்களின் திவ்யஸூக்திகளான அருளிச்செயலிலே ருசியும், விசுவாசமும் கொண்டு இத்தை வளர்த்துப்போவார் யார்?”
என்று மிகவும்
க்லேசமுடையவராய் கேட்கின்றார். 
 
அழகிய மணவாளனுக்கு உள்ளுணர்வு உணர்த்துகின்றது.  தம்மை மனதில் வைத்துதான் பிள்ளைக் கேட்கின்றார் என்று. 
 
திருவடி பணிந்து ‘அடியேன் அப்படியே செய்கிறேன்” என்கின்றார் குரு உகக்கும் வண்ணம். 
 
பிள்ளை ”கேவலம் வார்த்தை போராது” என்கிறார். 
 
குருவின் திருவடிகளைப் பிடித்து சபதம் செய்கின்றார். 
 
குருவும் இந்த தீவிரமான சிந்தையைதானே எதிர்பார்த்திருந்தார்!  அந்த தாக்கத்தினை ஏற்படுத்திய மகிழ்வோடு அழகிய மணவாளனுக்குச் சில கட்டளையிடுகின்றார்.
 
-” ஸ்ரீபாஷ்யத்தினைக் கற்று ஒரு முறை அனைவருக்கும் காலக்ஷேபம் செய்யவும்.
 
ஸம்ஸ்கிருத சாஸ்திரங்களிலே பல காலும் கண் வையாமல், நமக்கும் எம்பெருமானாருக்கும் ப்ரியமான திருவாய்மொழி முதலான அருளிச்செயல்களிலே அநவரதமும் பரிசீலனைச் செய்து, அனைவருக்கும் அதன் உட்பொருளை பிரஸாதிக்கவும். 
 
பூர்வர்களைப் போல  மங்களாசாஸனபரராய் ஸ்ரீரங்கத்தில் நித்யவாஸம் செய்து, கைங்கர்யங்களை செய்து வரவும்.”
என்று நியமிக்கின்றார். 
 
அங்கு கூடியிருந்தோர் அனைவரிடத்தும் இவரிடத்துக் காட்டிக் கொடுத்தருளி, ”இவரை சாதாரணமாக நினைக்காதீர்கள்.  இவர் ஒரு அவதார விசேஷம்.  ஆதரித்து போருங்கள்” என்று அருளுகின்றார்.
 
வைணவ தர்ஸனத்திற்கு ஒரு அவதார புருஷர் கிடைத்ததையெண்ணி பெருமிதத்துடன், நிறைவுடனே எந்த கவலையுமின்றி, ‘மாகவைகுந்தம்
காண்பதற்கு என் மனமேகமென்னும்
” என்கிறபடியே தம் ஆச்சார்யன் பிள்ளைலோகாச்சாரியாரின் திருவடிகளைக் கண்மூடி தியானிக்கின்றார்.

ஆச்சார்யனின் திருவடி ஸம்பந்தத்தினால் விஷ்ணுதூதர்களுடன் விமானத்தில் மண்ணுலகை துறந்து விண்ணுலகிற்கு பயணிக்கின்றது அவரது சூக்கும சரீரம்!

October 29, 2008

PESUM ARANGAN-136

Filed under: PESUM ARANGAN — Tags: , — srirangapankajam @ 11:11 pm
Chapter-136
 28.10.2008
 
 
அவதரிக்கச் செய்தவன் அரங்கன். 
 
அவதரித்தது ஆதிசேஷன். 
 
உறங்குவான் போல் யோகு செய்த அரங்கன் ஜகத்ரக்ஷண சிந்தையையுடையவனாய் உடையவரைப் போன்று லோகமெங்கும் உஜ்ஜீவிக்கும்படி, தம் பிரபாவத்தினை உலகறிய, ஒரு விஷயத்தினை உண்டாக்கிட தீர்மானித்தவன், திருவநந்தாழ்வானேயே மீண்டும் கடாக்ஷிக்கின்றான். 
 
அனந்தன் நம்மை உஜ்ஜீவிக்க அவதரிக்கின்றான்.
 
யஸ்மிந்ஸ்வபாதபத்மேந பஸ்பாஸ ப்ருதிவீமிமாம்
கலிஸ்ச தத்க்ஷணேநைவ துத்ருவே தூரஸ்தராம்
(எப்போது அவர் தமது திருவடித் தாமரைகளால் இந்த பூமியைத் தொட்டாரோ அப்போதே கலிபுருஷனும் வெகுதூரம் ஓடி விட்டான்.)
 
இவரது கால் கண்ட கலியின் கொடுமை பறந்தோடியது. 
 
திருவரங்கத்தினை பீடித்த பீடையும் ஒழிந்தது. 
 
திகழ்கிடந்தான் திருநாவீறுடையபிரான் தாதரண்ணன் தம்முடைய குமாரருக்கு பத்துநாளும் கடந்த இரண்டாம் நாள் திருவிலச்சினையை பிரஸாதித்து,

(முன்காலத்தில்  குழந்தை பிறந்து புண்யாஹம் ஆனவுடன்
புஷ்ப ஸமாஸ்ரயணம்” என்ற ஸம்ஸ்காரத்தினைச் செய்து வந்தார்கள்.  சக்ர முத்ரையினையும், சங்கு முத்திரையினையும் அக்னி சம்மந்தம்
இல்லாமல் திருமண் ஸ்ரீசூர்ணத்தினைக் குழைத்து இவ்விரு முத்ரைகளையும் அதில் நினைத்து குழந்தையின் இரு தோள்களிலும் ஒத்துவது அனுஷ்டானம்.  பல அனுஷ்டானங்களை வைணவர்களாகிய நாம் கடைப்பிடிக்காது காற்றில் பறக்கவிட்டமையால்தான் வைணவ ஞானம், பக்தி, சிரத்தை அனைத்தும் குறைந்து ஒருவருக்கொருவர் விஷயம் தெரியாமலேயே அடித்துக்கொண்டு பலரின் நகைப்புக்கு இலக்காகி வருகின்றோம்!)
 

குழந்தை புஷ்ப ஸமாஸ்ரயணம் ஆனவுடனே அப்ராக்ருத (அளவிடமுடியாத) தேஜஸ்ஸூடன் விளங்கியது.  பணமாடவரவணைப் பற்பகாலமும் பள்ளிகொள் மணவாளரான அழகிய மணவாளனின் ஞாபகம் தந்தையினை ஆட்கொண்டது. 
 
அழகிய மணவாளன் என்று திருநாமத்தினை தம் குமாரருக்குச் சாற்றி மகிழ்ந்தார்.  தம்முடைய தாய்வழி ஊரான சிக்கில் கிடாரத்தில் அழகியமணவாளன் வளர்ந்தார்.
 
அழகிய மணவாளன் வளர வளர மூன்று விஷயங்கள் கூடவே ஆச்சர்யமாக அவருடன் வளர்ந்தன.  அவை பரபக்தி,   பரஜ்ஞானம்,   பரமபக்தி.
 
பரபக்தி: பரஜ்ஞாநம் பரமாபக்திரித்யபி
வபுஷாவர்த்தமாநேந தத்தஸ்ய வவ்ருதேத்ரயம்
(அந்த அழகிய மணவாளப் பெருமாள் நாயனாருடைய வளரும் தேஹத்துடனே பரபக்தி, பரஜ்ஞானம், பரமபக்தி என்னும்படியான மூன்றும் வளர்ச்சியடைந்தன. )
 
உரிய வயதில் அழகிய மணவாளனுக்கு சௌள உபநயனங்களும் நடந்து வேத சாஸ்திரங்களைக் கற்கத் தொடங்கினார்.
 
ஜனங்கள் இவரது செந்தாமரைப் போல் சிவந்த திருவடிகளையும், முழங்கால் வரை வளர்ந்துள்ள திருக்கைகளையும்,  தாமரைப்போன்ற திருக்கண்களையும் திருமேனியைக் கண்டு இராமபிரானை கண்ணுற்றது போல் கண்டு மகிழ்ந்து வணங்கினர்.  இவரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடின்றி, குலவேறுபாடுகளுமின்றி அனைவருடனும்  கபடமின்றி பழகியும், அனைவரிடத்திலும் அதீத ப்ரீதியுடையவராய் பூர்ணச்சந்திரனைப் போன்று பொலிவுடன் வளர்ந்தார்.

October 28, 2008

PESUM ARANGAN-135

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 11:25 pm

Chapter-135
24.10.2008
 
 
நம்பெருமாளும் நம்மைத் தேடித்தானே இங்கு வந்துள்ளான்.  அவன் அடியார்கள் இன்றி இருப்பது அவனுக்கும் கடினமே!  நாம் இருந்தாலும் இருப்போமே தவிர, ஒரு க்ஷணம் கூட அவன் இருக்க மாட்டான்.
தவித்து விடுவான்.   யாரேனும் ரங்கா என்று எவரையேனும் கூப்பிட்டால் கூட இவன் தன்னைத்தான் கூப்பிடுகின்றார்களோ என்று கபடமின்றி குழந்தை போன்று ஓடுவான்.  அப்படித்தானே காவிரியில் தன் பேரனை அந்த பாட்டிக் கூப்பிட ஸ்ரீரங்கத்திலிருந்து ஜீயர்புரம் வரை தான் ஓடிப்போனான் இந்த கிருபாளு!
எங்காவது குழந்தைக்குத் தாயை விட்டுப் பிரிய மனம் வருமோ?   அதே போன்றுதான் இந்த அரங்கக் குழந்தைக்கும் தாயைப் போன்று தன்னுயிர் மறந்த தன்னலம் கருதாத பக்தர்களிடம் வாஞ்சை அதிகம்!
 
பெரிய கோவில் நம்பி என்றவொரு கைங்கர்யபரர்.
ஸ்ரீரங்கம் சன்னதியின் சாவி இவரிடம்தான் இருந்தது.
அரங்கனிடத்து சிரத்தையுடன் பணிபுரிவார்.  மற்றபடி யாரையும் மதிக்க மாட்டார்.  
 
இராமனுஜர் ஸ்ரீரங்கம் வந்து புனரமைத்த போது அவர் மனம் புண்படும்படி நடந்து கொண்டுள்ளார்.   இராமனுஜருக்கு இவரை கைங்கர்யத்திலிருந்து நீக்கம் செய்ய விருப்பம்
 
இரவில் இராமனுஜரின் கனவில் அரங்கன் தோன்றி, “பெரிய கோவில் நம்பி எனக்கு சிரத்தையுடன் கைங்கர்யம் செய்பவன்!  மற்றபடி உன் விருப்பம்“ என்று கூறி மறைகின்றார்.  
 
பெருமாள் இம்மாதிரி சாதித்தது இராமனுஜருக்கு வருத்தம். 
 
அடுத்த நாள் காலை இராமனுஜர் கூரத்தாழ்வானிடம் கூறுகின்றார்
“அரங்கன் பெரிய கோவில் நம்பியிடம் பரிவாக உள்ளான்.   நாம் இனி இங்கு இருந்து நாம் நினைத்தது போல் சீர்திருத்திட முடியாது.  வா..!  நாம் காஞ்சிபுரம் திரும்பி சென்று விடலாம்’ என்று கூறுகின்றார்.
(இராமானுஜரின் விருப்பத்தினை விட,    தமக்கு கைங்கர்யம் செய்த அந்த பெரிய கோவில்
நம்பியினை விட அரங்கனுக்கு மனமில்லை பாருங்கள்
அவரிடத்து எவ்வளவு பரிவு இருந்தால் பரிவான்!)
 
அதற்கு கூரத்தாழ்வான் சொல்கின்றார்.  ”அம்மாதிரி அரங்கன் சொன்னால் நிச்சயம் ஒரு அர்த்தம் இருக்கும்.
ரஹஸ்யமாக அவனைத் திருத்திப் பணி கொள்! என்று
நமக்கு அரங்கன் அறிவுறுத்துகின்றான்“  என்று பணிவோடு
பதிலளித்தார்.   (என்னவொரு ஆக்கப்பூர்வமான சிந்தனை பாருங்களேன்!) 
 
சொல்லியவாறே கூரத்தாழ்வானே முன்னின்று அவரைத் திருத்தி பணி கொண்டார்.  
 
அவர்தாம் அமுதனார் என்று பெயர் கொண்டார்.   இராமானுஜ நூற்றந்தாதி என்னும் சிறப்பான கிரந்தத்தினையும் அருளினார். 
 
ஒரு சிலநாள் உண்மையாக கைங்கர்யம் செய்தாலும் சரி,  ஒரு நிமிடமாவது நம்மை அவனிடத்து முழுமையாக அர்ப்பணித்திருந்தாலும் சரி..!  மறக்க மாட்டான் அவன்! 
 
இராமனுஜரை மறக்கமுடியவில்லை அரங்கனுக்கு!
ஆதிசேஷனின் அம்சமான அவரின் அன்புக்கு மீண்டும் ஏங்கினான்….!.  இல்லை…!  அவரிடத்து தாம் சீடராகயிருந்து தாம் அன்பு காட்ட நினைத்தான்!  தாம் ஸ்ரீரங்கம் வருவதற்கு முன் தம்மோடு அன்பு காட்ட அதே ஆதிசேஷனின் அம்சமாக ஒருவரை ஜனிக்கச் செய்தான்!
 
அந்த மஹானுபாவர் அழகிய மணவாளன் என்னும் திருநாமத்துடன் ஆழ்வார் திருநகரியில்  (கி.பி.1370ல்)
சாதாரண வருடம் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தார். 
 

October 24, 2008

PESUM ARANGAN-134

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 11:54 pm
Chapter-134
23.10.2008
 
 
உடையவரின் காலத்தில் நித்யபடியே வைகுண்ட ஏகாதசி போன்று இருந்த ஸ்ரீரங்கம் இரு நூறு ஆண்டுகளில் பாழ்பட்டு சீர்கெட்டு மீண்டும் சிறிது சிறிதாக புனார்நிர்மாணம் பெற்று வந்தது. 
 
எதையுமே ஆக்குதல் கடினம் – அழித்தல் எளிது.  அழிந்ததை ஆக்குதல் மிகவும் கடினம்.

அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் வெகுவாகவே பாடுபட்டிருக்கின்றனர். 
 
அரையர்கள் ஜக்கிணி எனும் நாட்டியத்தில் மிகவும் தேர்ந்தவராயிருந்திருக்கின்றனர்.  முகமதிய சுல்தானுக்கு இந்த நாட்டியம் மிகவும் உகந்ததாயிருந்துள்ளது. அவனை சந்தோஷபடுத்தி அரங்கனை மீண்டும் பெற, அரங்கனைத் தவிர எவருக்கும் ஆடிப்பாடாத இவர்கள்  தம் கொள்கையினைச் சற்றே தளர்த்தி, அரங்கனைப் பெற்றே ஆகவேண்டும் என்று சாதுர்யமாக சிந்தித்து, அந்த சுல்தானின் முன்பு ஆடிப்பாடி அரங்கனை மீட்டு வந்துள்ளனர். 
 
12000 வைணவர்கள் ஸ்ரீரங்கத்தினை விட்டு அசையாமல் எவ்வளவு தைரியமாக தம் இன்னுயிரை இழந்திருப்பர்! 
அரங்கன் மீண்டும்  வெளியேறி 60 ஆண்டுகள் கழித்து ஆஸ்தானம் அடைந்தபோது உத்தமநம்பிகளும், ஸ்தலத்தார்களும் வெகுவாகவே பிரயத்தனப்பட்டிருக்கின்றனா!;;.
 
தாஸிகளின் தியாகம்…!
கொடவரின் வைராக்யம்… !
 
கண் தெரியாத அந்த வண்ணானின் பக்தி!  சிரத்தை!.
 
 அடடா..!  எதை விடுவது..எதை நினைப்பது! 
 
சற்றே நினைத்துப்பார்க்கும் போது இவர்களது தியாகங்கள் புல்லரிக்கச் செய்கின்றது. 
 
த்ரேதாயுகம் தொடங்கி எத்தனை நூற்றாண்டுகள் கழிந்து விட்டன!  கணக்கிடக் கூட முடியவில்லையே!
7 நூற்றாண்டுகள் முன்பு இவ்வளவு சிரமப் பட்டிருக்கின்றாரே அரங்கனும் அடியார்களும்!
 
இவ்வளவு நூற்றாண்டுகளாக எவ்வளவு கட்டங்களை, இன்பமும், துன்பமும், அழிவையும், ஆக்கத்தினையும், தியாகத்தினையும், ஆழ்வார்களையும், ஆச்சார்யர்களையும், கைங்கர்யபரர்களையும் கண்டு தாண்டி வந்திருப்பார்..!?. சில நிகழ்வுகளைத்தான் நாம் அறிவோம்.  அறியாதது ஏராளமாய் கண்டிப்பாய் இருக்கும்!
 
இத்தனையையும் தாண்டி, இன்னமும் சிறு மூக்கும்,
குறும்பு புன்னகையுமாய்,  நம் முன்னே  சேவை சாதித்தருளுகின்றானே!  சாத்தியம்தானா இது?
 
அரங்கனால் மட்டுமே இது முடியும்!
 
அவன் கருணையை நினைத்தால் அவன் திருப்பாதங்களைப் பிடித்து ஓவென்று கதறியழ வேண்டும் போலுள்ளது!
 
இன்று நாமும் அவனை தரிசிப்பது நாம் செய்த மஹாபாக்கியம்! 
 
நம்மோடு அவன் இருப்பது நாம் செய்த தவம்!
அவனுக்கு நாம் ஏதேனும் ஒரு வகையில் கைங்கர்யம் செய்து கொண்டிருப்பது நம் பூர்வஜன்ம புண்ணியம்! 
நம் பூர்வர்கள் செய்த புண்ணியம்! 

 

 

October 23, 2008

PESUM ARANGAN-133

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 11:22 pm
Chapter-133
22.10.2008
 
 
நம்பெருமாள் (கி.பி.1371ல்) ஆஸ்தானம் எழுந்தருளிய
போது மூலஸ்தானம் முழுதுமாக பாழ்பட்டு கிடந்தது.  வெயிலிலும் மழையிலும் மூலவர் ரங்கநாதர் காய்ந்தும் நினைந்தும் கிடந்திருக்கின்றார்.  ஆதிசேஷனின்
சேஷபடம் அவரது திருமுகத்தினை மட்டும் பாதுகாத்தபடியிருந்திருக்கின்றது. 
 
சுந்தரபாண்டியனால் வேயப்பட்ட தங்கவிமானம், தங்கத்தினால் ஆனக் கொடிக்கம்பம், தங்கத்தினால்
செய்த சேரகுலவல்லி, அணிகலன்கள், சிம்மாசனங்கள் அனைத்தும்
சுத்தமாக கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. 
 
இந்த சமயத்தில் உத்தமநம்பி வம்சத்தரான கிருஷ்ணராய உத்தமநம்பி செய்த கைங்கர்யங்கள் முக்யத்துவமானது. மகத்தானது.  இவர் வீரகம்பண்ண உடையாரையும்,
அவரது உறவினரான விருப்பண உடையாரையும்
விஜயநகரம் சென்று ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வந்துள்ளார். 
 
கம்பண்ண உடையாருடன் அவரது மனைவி கங்காதேவியும் உடன் வந்துள்ளாள்.  இவள் வடமொழியில் சிறந்த பாண்டித்யம் உடையவள்.  தாம் கண்ட நிலைமையனைத்தையும் ‘மதுரா விஜயம்’ என்று தொகுத்துள்ளாள்.

இதிலிருந்து அன்றைய ஸ்ரீரங்கத்தின் நிலைமையை நாம் தெளிவாக அறிய முடிகின்றது.  அதில் அவள் குறிப்பிடுகின்றாள்.
 

– கோயில் மண்டபங்களில் செடிகள் முளைத்து மரக்கதவுகளைக் கரையான் தின்கின்றன.
 
-இனிமையான மிருதங்க ஒலி கேட்டவிடமெல்லாம் ஊளையிடும் நரிகள் உலா வருகின்றது.
 
-அணைகளும் கரைகளும் உடைந்து ஊரே வெள்ளக்காடாகயுள்ளது.
 
-அக்ரஹாரங்களில் உள்ள யாக குண்டங்களில் முகமதியர்களால் மாமிசம் சுட்டெரிக்கப்பட்டு அதனுடைய துர்கந்தம் வீசுகின்றது.
 
-தென்னைஞ்சோலைகள் மறைந்து கழுமரங்கள் கட்டப்பட்டு அதில் மனிதர்களை கொன்று மனிதர்களின் மாமிசம் அக்கழுமரங்களில் ஆங்காங்கே திட்டுதிட்டாய் காணப்படுகின்றது.
 
இவ்வாறு பலவற்றைக் குறிப்பிடுகின்றாள். 
 
கம்பண்ணரும், விருப்பண்ண உடையாரும் திருவிடையாட்டமாக பல கிராமங்களை கோவிலுக்கென்று அர்ப்பணித்து திருப்பணி வேலைகளை மேற்கொள்கின்றனர். 
 
கோவிலின் ஸ்தலத்தார்களும், உத்தமநம்பிகளும், கோவிலார்களும் வெகுவாக அரசர்களுடன் சேர்ந்து பாடுபட்டு ஸ்ரீரங்கத்தினை புனர்நிர்மாணம் செய்கின்றனர். 
 
சித்திரையில் விருப்பண உடையார், கோவிலின் நிதிநிலைமையை சீர்செய்யும் பொருட்டும், கோவிலில் ஆராதனைகள் சீராக நடைபெறுவதற்கு தானியங்களை பெருக்குவதற்கும் அருகிலுள்ள அனைத்து கிராம மக்களையும் அரவணைத்து அன்போடு அழைத்து, அரங்கனுக்கு ஒரு தேரோட்டத்துடன் பிரம்மோற்சவம் ஒன்றை கொண்டாடுகின்றார். 
 
கிராமத்துமக்கள் அனைவரும் தாங்கள் விளைநிலங்களில் விளைந்த தானியங்களை அரங்கனுக்குக் காணிக்கையாக்கி உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். 
 
அரங்கனது நித்யபடி பூஜைகளுக்குக் குறைவின்றி தான்யங்கள் குவிந்தன.  அன்று தொடங்கிய இவ்விழா இன்றும் அன்று போன்றே குறைவற நடந்து வருகின்றது.  இந்த விழாவிற்கு ‘விருப்பண் திருநாள்” என்று பெயர்

October 22, 2008

PESUM ARANGAN-132

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 12:11 am
Chapter-132
20.10.2008
 
 
திருதாழ்வாரை தாஸரின் வம்சத்தவர்கள்,  தாயாருக்கும் பெருமாளுக்கும் நடைபெறும் ஒவ்வொரு உற்சவத்தின்
இறுதி நாளன்றும்,  அரங்கன் ஸ்ரீரங்கம் வந்தது –  வந்தது  முதல் எந்தெந்த மண்டபம் யார் யார் காலத்தில் எப்போது நிர்மாணம் செய்யப்பட்டது என்பது வரை படித்து வந்தார்கள்.  இதற்கு படிப்பு என்று பெயர்.  இந்த வழக்கம், திருத்தாழ்வாரை தாஸரின் வம்சம் இல்லாது போனதால், ஏறத்தாழ 45 வருடங்களாக விட்டு போயிற்று.
 
ஸ்ரீரங்கம் கோவிலைப் பொறுத்தவரை வாய்க்கரிசியை இரண்டு கைங்கர்யபரர்கள் பெற்று வந்தனர்.
 
ஒருவர் கோவிலின் தேவதாஸி.  இவர்களில் யாரேனும் திருநாடு அலங்கரித்தால் கோவிலிலிருந்து வாய்க்கரிசியும், மாலையும்,  கோவில் மடப்பள்ளியிலிருந்து நெருப்பும் கோவில்
மரியாதையுடன் திருமங்கைமன்னன் படித்துறைக்கு அனுப்பப்படும்.
இவர்களது வம்சம் அரசாங்கத்தினால் 1953ம் ஆண்டு அறவே நீக்கப்பட்டு ஒழிக்கப்பட்டது.
 
இன்னொருவர் உயிருடன் இருக்கும் போதே முதல்நாள் கோவிலிலிருந்து வாங்கி வீட்டில் வைத்துவிட்டு,
இருந்தால் அரங்கன் கைங்கர்யம் – இறந்தால் பரமபதம்”  என்ற வைராக்யத்துடனே விரதமிருந்து கைங்கர்யத்தினைச் செய்வார். 
 
அவர் திருச்சுற்று மிராசுக்காரர்.
அவர் திருக்கார்த்திகையன்று கோவிலில் கார்த்திகை கோபுரத்தின் எதிரில் அமைக்கப்படும் நெடிய பனை ஓலைகளால் வட்டவடிவமாக வேயப்பட்டச் சொக்கப்பானையைக் கொளுத்துபவர்.  இவர் இந்த நெடிய சொக்கப்பானையின் மேலேறி கொளுத்திவிட்டு அந்த நெருப்பு பரவுவதற்குள் கீழிறங்க வேண்டும்.
அரங்கன் இந்த சொக்கப்பானையைக் கொளுத்துவதற்கு முன் சுற்றிவந்து, சக்கரத்தாழ்வார் சன்னிதியின் முன் இந்த சொக்கப்பானையைக் கொளுத்தி விட்டு வரும் கைங்கர்யகாரருக்காக காத்திருப்பான்.  அவன் வந்தபின் அவனுக்கு தீர்த்தம், சடாரி மரியாதைகள் ஆனபின்புதான் நகருவான்.
 
அதுவரை நம்மைப் போன்று அவனும் கவலைப்படுவதை நாம் அவன் திருமுகத்தில் காணலாம்.  கைங்கர்யபரர் திரும்பிவந்து மரியாதையானவுடன் அவன் திருமுகமலர்ச்சியினை நாம் உணரலாம்.

அனுபவம்தானே வைணவம்!  இந்த அனுபவத்தில் ஆழங்கால் பட்டதால்தானே நாலாயிர திவ்ய பிரபந்த பெருக்கு! ஆழ்வாருகளும் ஆச்சார்யர்களும்!
 
 

October 20, 2008

PESUM ARANGAN-131

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 11:28 pm
Chapter-131
18.10.2008
 
அழகிய மணவாளனுக்கும், புதிதாய் வந்த அர்ச்சை மூர்த்திக்கும் தனித்தனியே திருமஞ்சனம் நடக்கின்றது.  பல நாட்கள் கடந்து நடந்த இத்திருமஞ்சனத்திற்கும், அரங்கன் யார்?  என்ற புதிருக்கு விடை காணவும் ஏராளமான வைணவர்களும், அரசரும், கோபண்ண
உடையாரும், பொதுமக்களும் அரங்கன் திருமுற்றத்தில் நிறைந்திருந்தனர்.
 
பல வருடங்கள் கழித்து, அரங்கனடியார்களால் பொலிவுறுகின்றது ஸ்ரீரங்கம்.  மீண்டும் தன்னடியார்களைக் கண்ட அரங்கனது திருமுகம் பூரிக்கின்றது. 

அவனது திருமேனி இப்பூரிப்பினால் மாற்றமடைந்து,
சுகந்த மணம் கமழ்ந்தது. 
முதலில் அரங்கனாய் இதுகாறும் மக்கள் நினைத்திருந்த அந்த அர்ச்சையின் தீர்த்த பிரஸாதம் வண்ணானுக்கு அருளப்பட்டது.  அரங்கனின் திருமேனி சுவையறிந்து பண்பட்ட அவனது முகத்தில் எந்த சலனமும் காணப்படவில்லை.  ‘இதுவன்று அழகிய மணவாளன்”  என்றுரைத்தான்.
 

அடுத்ததாக அரங்கனின் ஈரவாடை தீர்த்தம் வண்ணானுக்கு அருளப்பட்டது.

பல வருடங்களாய் சுவைத்து,  நடுவில் 60 வருடங்களாய் இத்தெய்வீகச் சுவை விடுபட்டு, ஏங்கியிருந்த அவன் நாவு இந்த அமிர்தத்தையுணர்ந்தது!
நாவின் உணர்வு நரம்புகள், உடலில் மின்சாரம் போன்று பாய்ந்தது!
உணர்வு பிழம்பானான் வண்ணான்.  ஆர்ப்பரித்தான்! 
 
‘இவரே நம் பெருமாள்! இவரே நம்பெருமாள்” என்று கதறியழுதான்!.   கண்களில் கண்ணீர் பெருக்க மூர்ச்சையானான்.   தெளிந்தான்!  மீண்டும் அழுதான்!  மீண்டும் மயக்கமடைந்தான்!
 

கொடவரும் உணர்வுகள் கொந்தளிக்க, ‘ரங்கா! ரங்கா!’ என்று கதறியழுதார். 
 
அழகிய மணவாளன் வண்ணானால் ‘நம்பெருமாள்” ஆனான்!. 
 
நம்பெருமாள் என்ற பெயர் – அந்த வண்ணான் வைத்தப் பெயர்தான்,  இன்றும்,  அவனுக்கும் நமக்கும் உகப்பாகயிருக்கின்றது!.  அவன் நம்மோடு கலந்தவன்! 
நம்மோடு நம்பக்கம் இருப்பவன்!.   நம்மை உகப்பவன்!.   நம்மை காப்பவன்!.  நம் நலம் விரும்புபவன்!.    நம் வீட்டுப் பிள்ளை!.   நம் குழந்தை!.    நம் ஜீவன்!. நம்மை ஆள்பவன்!.
 
இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகுற்கும் தெய்வம்
இனியறிந்தேன் எம்பெருமான்!  உன்னை – இனியறிந்தேன்
காரணன் நீ  கற்றவை நீ கற்பவை நீ – நற்கிரிசை
நாரணன் நீ நன்கறிந்தேன் நான்.
                                                                 -நான்முகன் திருவந்தாதி-96-
 
 
அரங்கன், தனியொருவராக தம்மை ஆராதித்து பாதுகாத்த வ்ருத்தரான அந்த கொடவரை அருகில் அழைக்கின்றான்.  அவரை ‘திருத்தாழ்வாரை தாஸர்” என்று அருளப்பாடிட்டு உகக்கின்றான்.
 
வண்ணானுக்குஈரங்கொல்லி” என்று அருளப்பாடிட்டு அழைத்து, மன்னன் மூலமாக பஹூமானங்கள் பல செய்து கௌரவிக்கின்றான்!
 
அரையருக்கு ‘இசையறியும் பெருமாள் கூட்டத்தார்” என்று அருளப்பாடிட்டு கௌரவிக்கின்றான்
 
ஸ்ரீரங்கத்திலிருந்து சுல்தான் தளபதியை கண்ணனூருக்கு அழைத்துச் சென்று, ஸ்ரீரங்கத்திற்கு மேலும் சேதம்வராமல் தம் கற்பைக் கொடுத்துக் காப்பாற்றிய தாஸியினை அழைக்கின்றார்.  போர உகந்தருளி ”உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்று திருவாய் மலர்கின்றார்.

தாஸி ஒரு வரம் கேட்கின்றாள்.  ‘தம்முடைய வர்க்கத்தார்களில் யாரேனும் திருநாடு
அலங்கரிப்பாராகில் (இறப்பார் ஆகில்) நம் கோவில் திருமடைப்பள்ளியிலிருந்து
தாங்களை தகனம் செய்வதற்கு நெருப்பும்,  திருக்கொட்டாரத்திலிருந்து வாய்க்கரிசியும்,
அரங்கனது திருமாலையும், எந்த காலத்திலும் சாதிக்க வேண்டும்”
என்று தனக்காக ஏதும் வேண்டாது,
தன்னலம் கருதாது தம் வர்க்கத்தார்களின் நலத்திற்காக அரங்கனிடத்து யாசித்தாள். 
 

அரங்கன் உளம் குளிர்ந்து ‘அப்படியே ஆகட்டும்” என்று ஆசீர்வதிக்கின்றான். 

(இந்த வரத்தால் 1953ம் ஆண்டு தாஸிகள் ஒழிப்புச் சட்டம் அமுல்படுத்திய நாள் வரை,  திருவரங்கத்து தாஸிகள் யாரும் பரமபதிப்பார்களாகில், இந்த மரியாதைகள் செவ்வனே  நடைபெற்று வந்தது)
 
அரங்கன் அன்றிரவு சோழ மன்னனின் கனவில் தோன்றி, நடந்த வ்ருத்தாந்தங்களை சாதித்தருளினான். 
 
(ஸ்ரீரங்கம் கோவிலின் சம்பிரதாயங்கள் பல பலரது தியாகங்கள், அதனது பிரதிபயனாக அரங்கனோ அல்லது நமது பூர்வாச்சார்யர்களாலோ ஏற்படுத்தப்பட்ட பழக்கங்களைக் கொண்டதாகும்.  இங்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தருணத்தில் கௌரவம் உண்டு.  இந்த கௌரவத்தில் சமுதாய பிரிவுகளோ, வகுப்புணர்வுகளோ, ஏற்றத்தாழ்வுகளோ இல்லை.  சாதிப்பாகுப்பாடு இல்லை என்பது இக்கோவில்
சம்பிரதாயங்கள் நன்கறிந்தவர்களுக்கு விளங்கும்.)

October 18, 2008

PESUM ARANGAN-130

Filed under: PESUM ARANGAN — Tags: , — srirangapankajam @ 11:48 pm
Chapter-130
17.10.2008
 
 
                                                              
கொடவரான அந்த வயோதிகர்,  அழகிய மணவாளனின்
திவ்ய மங்கள விக்ரஹத்தினோடும், உபயநாச்சிமாரோடும்
செய்வதறியாது திகைத்து நிற்கின்றார். 

ஆர்யபடாள் வாசலின் வெளியே மேற்கே, குலசேகரன் திருச்சுற்றிலுள்ள, திருமங்கைமன்னன் மண்டபத்தில்எழுந்தருளப் பண்ணுகின்றார்.  

ஜனங்கள் கொடவரை குழப்பம் விளைவிக்க வந்தவராகக் கருதி அலட்சியபடுத்தி கேவலப்படுத்துகின்றது. 

அழகிய மணவாளன் அமைதி காக்கின்றான்.

அரங்கன் எழுந்தருளிய மறுநாள் உதயகாலத்தில் பெருமழையொன்று பொழிகின்றது.  பல நாட்கள் தேடியும் கிடைக்காத ரெங்கநாயகித்தாயார் வில்வமரத்தினடியில் மண் நீங்கப்பெற்று, தன்மணிமகுடத்தினை மண்ணின் மேல் காட்டி தரிசனம்கொடுக்கின்றாள்.  (இங்கு மூலவர் தரிசனம் கொடுத்தாராஅல்லது உற்சவர் கொடுத்தாரா என்பது தெரியவில்லை. சிலர் தற்போதுள்ள பூமிதேவி தாயார்தான் உற்சவர் தாயாரின்அசல் மூலவர் – அவர் பூமியில் புதைக்கப்பெற்று கிடைத்தமையால் பூமிதேவி என்றும்,  வேறெரு அர்ச்சை விக்ரஹம் ஸ்ரீரங்கத்தில் அழகிய மணவாளன் என்று கருதி ஸ்தாபிதம் செய்யப்பட்டபோது கல்பிதம் செய்யப்பட்ட அர்ச்சை சொரூபமே தற்போதுள்ள ஸ்ரீதேவி தாயார் என்றும் ஒரு கருத்துண்டு. ஆனால் தற்போதுள்ள உற்சவரும் மூலவரும் அழகிய மணவாளன்
ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளியப்பிறகே வெளிப்பட்டனர் என்பது மட்டும் மறுக்கமுடியாத ஒரு உண்மை.) 

அர்ச்சையில் கூட அழகிய மணவாளனைத் தவிர்த்து வேறெரு அர்ச்சையுடன் சேராத ஒரு சிறந்த பத்னித் தெய்வமாய் தாயார் இருந்துள்ளாள். 

 

ஒரு விரதமாய் 60 வருடங்கள் மண்ணிலேயே புதைந்து, எவர் கண்ணிற்கும் தென்படாமல், அரங்கன் எழுந்தருளிய பிறகு,     தெளிந்து எழுந்துள்ளாள். 

 

60 வருடங்களாக பெய்த மழையில் வெளிப்படாத இவள் அரங்கனின் நகைமுகம் கண்டு ஆதவனைக் கண்ட தாமரைப் போன்று மலர்ந்து எழும்பியுள்ளாள்.  அரங்கன் வந்தபிறகு வெளிப்பட்ட அரங்கநாயகியினால் ஜனங்களுக்கு ஒருக்கால் இவர்தான் அரங்கநாயகனோ? என்று ஒரு ஐயம் உண்டாகின்றது.  கொடவரிடத்தும் ஒரு மதிப்பு உண்டாகின்றது.

 

மன்னன் நடந்தவற்றையறிந்து வருகை புரிகின்றான். அனைத்து  மூர்த்திகளையும் தரிசிக்கின்றான்.

(கோயிலொழுகு இந்த மன்னனை சோழ மன்னன் ராஜேந்திர சோழன் என்கின்றது.   அதற்குள் கோபண்ண உடையார் சோழனுக்கு
பட்டம் சூட்டி செஞ்சிக்குத் திரும்பினாரா என்பது தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக இந்நிகழ்ச்சியின் போது
கோபண்ண உடையாரும் அருகிலிருந்திருக்க வேண்டும்!)

 எவரேனும் அசலான அழகியமணவாளனைப் பற்றி
அறிந்தவர் கிடைப்பாரா என்று தேடுகின்றனர். 

 ஒருவரேயொருவர்,  93 வயதான ஒரு வயோதிகர் கிடைத்தார். 
ஆனால் கண்பார்வையின்றியிருந்தார்.  இவர் அரங்கன்
ஆஸ்தானத்திலிருந்த போது அரங்கனின் வஸ்திரங்களை
அன்றாடம் துவைத்து காயவைத்துத் தரும் வண்ணான் ஆவார். 
  

இவர் அரங்கனைப் பற்றிக் கூறிய விசேஷங்களும்
வயோதிக கொடவர் கூறிய விசேஷங்களும் ஒத்திருந்திதைக்கண்ட மன்னன் எழுந்தருளியிருப்பவர் அழகிய
மணவாளனாகத்தாயிருக்கும் என்ற தெளிவிற்கு வந்தான். 

அந்த சமயம் அந்த வண்ணான் அரசனிடம், ‘அரசே!
நான் அரங்கனின் ஆடைகளைத் தோய்க்கும்
முன் அவற்றை ஒரு முறை நினைத்து அந்த ஆடையைப் பிழிந்து
தீர்த்தத்தினைப் பிரஸாதமாய் தவறாது உட்கொள்வேன்  
அழகியமணவாளன் உடுத்தி களைந்த ஆடையின்
தீர்த்த பிரஸாதம் ஒரு தெய்வீகருசியுடையது.  அதனை என்
நாக்கு இனம் கண்டு கொள்ளும்.  தயைகூர்ந்து
இருவருக்கும் தனித்தனியே திருமஞ்சனம் செய்வித்து
எனக்கு அந்த ஈரவாடை தீர்த்தம் பிரஸாதியுங்கள்.  நான்
யார் அழகிய மணவாளன் என்று அறுதியிடுவேன்”
என்றுரைக்கின்றார். 

அதிர்கின்றான் அரசன்!.

 

(”நம்பெருமாளுக்கு வியர்க்கும்!  விசிறி விடு!” என்கின்றார் பிள்ளைலோகாச்சாரியார்.  அதன்படியே வியர்க்கின்றது அவன்
திருமேனி!.  இங்கு வண்ணானின் தெய்வீக அனுபவத்தினை என்னச் சொல்வது.? அன்றாடம் அவன் துணியைத் தோய்த்த
அவனுக்கு அவனது உடலிலிருந்து வெளிப்படும் தெய்வீக 
 மணம் அத்துப்படியாகின்றது.  அழகிய மணவாளன்
வெறும் அர்ச்சை சொரூபமில்லை!  அரங்கன் ஜீவிதன்!)

 

Date: Tue, 21 Oct 2008 15:46:41 -0700
From: ContactUsForm@officelive.com
To: muralibattar@srirangapankajam.com
Subject: A message from robert vaz

You have received the following message through the Contact Us form on your Microsoft Office Live Small Business Web site:

From: robert vaz
E-mail: robertovaze@gmail.com
Message:
You have been writing about Kodavars who had kept the archa murthy in a cave at Tirumala. Kodavars may be one of the 20 ‘kothu’ workers of the temple. It may have been derived from the word kudam. They are the people who bring water for thirumanjanam – thirukkaragakkaiyar. I am not able to quote any reference. Pl check up from reliable sources.

————————

தாங்களில் யாரேனும் கொடவரின் கைங்கர்யம் பற்றி அறிவீர்களா?
கொடவரின் கைங்கர்யம் குறித்து வந்த சில தகவல்கள் கீழே அளித்துள்ளேன்
Dear Murali Bhattarji
I quote from your own blog on Ramanuja Vaibhavam – Chapater I
“Kovanavar, Kodavar, Koduval Edupar, Aaduvaar, Paaduvar, Thazhaieduvar”
These five set of people were reclassified by Ramanujar as 20 “kothu”
I also quote below the practice in the temple in ancient times.
“காலை வழிபாடு
திருவாயில் பணியாளன் மடப்பள்ளிக்குச் சென்று பொங்கல் தயாராக  உள்ளதா என்று பார்த்த  உடன் அந்த நாளின் முறைக்காரி (தாசி) கொண்டு வந்திருக்கிற தட்டித்திரியை அரிசிக்காரன் வாங்கி திருமடப்பள்ளியில் உள்ள தீபத்தை  ஏற்றி தாசியி.ன் கையில் கொடுக்க அவள் வாங்கி தட்டியில் வைத்துக்கொண்டு வீரவண்டி சேமக்கல இசையுடன் கொடிக்கம்பத்தை சுற்றி வந்து சந்நதியை அடைந்தவுடன் வீரவண்டி இசை நிற்கிறது. திருப்பதிய ஊழியக்காரர் அர்ச்சகர்களைக் கேட்டுக்கொண்டு  குடத்திரியை எடுத்துக் கொண்டு வந்து தாசியிடமிருந்து தீபத்தை ஏற்றி மாவிலையினால் அலங்கரிக்கப்பட்ட குடத்தில் திரியை வைத்தவுடன் திருமணி ஒலிக்கிறது. பின் உதவிப்பணியாளரிடமிருந்து அர்ச்சகர் குட தீபத்தை
பெற்றுக்கொண்டு மங்களாரத்தி செய்கிறார். அவ்வமயம் நாயனம், மேளம், திருச்சின்னம், எக்காளம், ஆகியவைகள் இசைக்கப்பட்டுக்கின்றன.
பின்பு திருப்பதிய ஊழியக்காரர் ஆரத்தி செய்த குடத்தை வாங்கி தாசியிடம் கொடுக்க வீரவண்டி, நாயனம், மேளம் முழங்க அர்ச்சகர், தாசி மற்றும் உதவியாளர் மேலப்படி வழியாக இறங்கி செங்கமல நாச்சியார், சேனை முதலியார்,துலுக்க நாச்சியார்  ஆகியோர் இருப்பிடங்களுக்கு சென்று ஆங்காங்கு குட தீபம் செய்கின்றனர்.
பின் வீரவண்டி சேமக்கலம் முழங்க பணியாளர் அமுதுடன் நாழிகேட்டான் வாசலில் நுழைந்த உடன் உள்ளூரார் சாமரம் வீச பால்காரர் குடை பிடிக்க சந்நதி ஊழியர் போகலாம் என்று சொன்னவுடன் உள்ளே வந்து அமுது பலகையில் அமுது இறக்கப்படுகிறது. மணிக்கதவு அடைக்கப்பட்டவுடன் நாயனம் பெரிய மேளம் முதலானவைகள் முழங்க பெரிய பெருமாளுக்கு அமுது படைக்கப்படுகிறது.”
source:  “Thiruvarangam Thantha Isaikkodai” – Doctoral thesis of Dr. R Lalitha Rukmani
Kodavars may be either those who carry “kudam” (thirumanjana theertham) from Cauvery or those who assist the archagas during kuda deepam.
Please look into other inputs before coming to any conclusion.
 
S. Parthasarathy
—————————————–
 
சுவாமி,
              திருவரங்கன் உலாவில் உள்ள செய்தி தான் அடியாளுக்குத் தெரியும். அதனை இதோ கீழே எழுதுகின்றேன்.
                                               
இந்தக் கொடவர் என்பார் திருவரங்கம் கோவிலில் பணி செய்யும் பத்துக் கொத்துப் பிரிவில் இரண்டாம் கொத்துப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களை கொடவ்ர்கள் என அழைக்கப்படுவது உண்டு. கோவில் ஊழியங்களை இவ்விதம் சீர்படுத்தி  பிரித்தவர் இராமனுஜர்.
 
 
குருகூர்தாசர் அவரது மைத்துனர் வில்லிபுத்தூர்தாசர் மற்றும் குருகூர்தாசரின் மகன் ஸ்ரீராமதாசர் என்னும் மூவர் கொடவர் பிரிவினைச் சேர்ந்தவர்கள்.  அவர்கள் சந்திரகிரி என்னும் கட்டில் அரங்கனைக் காத்தனர். இதில் அரங்கனுக்காக தன் உயிரையும் பொருட்படுத்தாது துரிக்கியரிடம் இருந்து அரங்கனைக் காக்க வேண்டி மலை முகட்டில் இருந்து கீழே சரிந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இதனைக் கண்ட வில்லுபுத்தூர் தாசர் மூத்தக் கொடவர் இறந்ததும் தானும் இறந்தார். ஸ்ரீராமதாசர் என்னும் மூன்றாம் கொடவர் பதினெட்டு வருடங்கள் தனியே சந்திரகிரி காட்டில் பேசுவதற்கு துணை இல்லாமல், சித்த ப்ரம்மைப் பிடித்து அரங்கனோடு மட்டும் பேசிக் கொண்டு உயிர் வாழ்ந்து, அரங்கனுக்கு எந்த விதத்திலும் குறை ஏற்படாதவாறு கைங்கர்யம் செய்தார்.
 
 
வல்லபன், தத்தன் என்னும் இளைஞர்கள் இருவரும் அரங்கனைத் தேடி, அரங்கனோடு புறப்பட்ட சிங்கழகர் என்பவரிடம் ரங்கனின் அடையளாங்களைக் கேட்டுக் கொண்டு இறுதியில் அவர் ச்ன்றகிரி கட்டில் இருந்தார் என்பதைத் தெரிந்துக் கொண்டு அங்கே சென்று, விஜயநகரப் பேரரசரான கம்பனரிடம் உதவிக் கேட்டு அரங்கனை மீண்டும் திருவரங்கத்தில் எழுந்தருளச் செய்தார்கள்.
 
 
(இதில் வல்லபன் என்பான் திருவரங்கத்தில் துருக்கியர் வந்தவுடன் போர் செய்த குலசேகர பெருமாள் பிள்ளான் என்பாரின் மகன்.)
 
 
swami after reading it reply me.        -கிருஷ்ணப்ரியா-
 

October 17, 2008

PESUM ARANGAN-129

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 11:44 pm
Chapter-129
16.10.2008
 

ஸ்வாமி வேதாந்த தேசிகர் அரங்கன் செஞ்சி வந்தடைந்ததையெண்ணி மகிழ்கின்றார்.  ஸ்ரீரங்கத்தில்
அரங்கன் விரைவில் எழுந்தருள வேண்டி பிரார்த்திக்கின்றார்.  துருக்கர்கள் படையொழிந்து நிர்பயமாய் ஸ்ரீரங்கம் மலர ‘அபீதீஸ்தவம்” என்னும் அற்புதமான சுலோகத்தினைப் படைத்து பரமனை வேண்டுகின்றார்.
கி.பி.1369ல், தன்னுடைய 101வது வயதில்  சத்யாகாலம் எனும்  அந்த  ஊரிலேயே அரங்கன் திருவடிகளை அடைகின்றார்.
 
அரங்கன் திருவரங்கத்தில் எழுந்தருளப் போவதற்கான நற்சகுணங்கள் பல உண்டாயின.  சூரிய உதயமாவதற்கு
முன் அருணோதயம் போன்று ஸ்வாமி ஸ்ரீமணவாளமாமுனிகள் எனும் பெரும் வைணவ எழுச்சி, கி.பி.1370ல் அவதரிக்கின்றார்.
 
நம்பெருமாளை ஸேவிக்கும் ஒவ்வொரு நாளும் கோபண்ண உடையாருக்கும் அவரது படைவீரர்களுக்கும்
ஸ்ரீரங்கத்தில் கொட்டமடிக்கும் உலுக்கானின் படையை நிர்மூலமாக்கி சிதறடித்து ஓட ஓட விரட்ட
வேண்டும் என்னும் ஒரு வெறித்தனம் வளர்கின்றது. 
 
க்ஷத்திரியர்களுக்கு இந்த ரௌத்ரம் அவசியம்.
கோபண்ண உடையார் அதிபுத்திசாலியும் கூட.   திருவரங்கத்தில் படையெடுத்து போர் நடத்துகையில்
பாண்டிய மண்டலத்திலிருந்த உலுக்கானின் படைவீரர்கள் உதவிக்கு வந்தால் என்ன செய்வது? என்று
யோசிக்கின்றார்.
 
விஜயநகர சாம்ராஜ்யத்தினை அரசாண்டு கொண்டிருந்த கம்பண்ண உடையாரை கலந்து ஆலோசிக்கின்றார்.  இரு படைகளும் ஒரே நேரத்தில் தனித்தனியே பாண்டிய மண்டலத்தின் மீதும்,  திருவரங்கத்தின் மீதும் போர் நிகழ்த்துவது என்று தீர்மானிக்கின்றனர். 
 
அதன்படி (கி.பி.1371ம் ஆண்டு), விஜயநகரப் படைகள் மதுரையின் மீதும், செஞ்சியின் படை கண்ணனூர் வழியே திருவரங்கத்தின் மீதும் மூர்க்கத்தனமாக உலுக்கானின் படை மீது மோதின. 
 
கோபண்ண உடையார் அரங்கனைக் கண்டு
கண்டு, நடந்தவற்றை அறிந்து, தன் சிந்தையில் தேக்கி வைத்திருந்த வெறியைப் போரில் தீர்த்துக் கொண்டான்.
உலுக்கானின் படை பாண்டிய மண்டலத்திலும், சோழ மண்டலத்திலும் உலுத்துப் போயிற்று. எப்படி 12000
நிராயுதபாணியாய் இருந்த சாது ஸ்ரீவைணவர்கள் இறக்க நேரிட்டார்களோ அது போன்று 12000க்கும் அதிகமான
ஆயுதம் கொண்ட இந்த அட்டூழியர்கள் அழிந்தனர். 
 
விஜயநகர சாம்ராஜ்யத்தின் எல்லை விரிவானது.
அரங்கன் 1371ம் ஆண்டு வைகாசி மாதம் 17ம் தேதி (ஜூன் மாதம்) ஏறத்தாழ 59-1/2 ஆண்டுகளுக்குப் பிறகு
திருவரங்கத் திருப்பதியினில் மீண்டும் கால்பதிக்கின்றார்.
 
அழகிய மணவாளன் கோயிலிலிருந்து வெளிச்சென்று ஏறத்தாழ 60 வருடங்களானபடியாலும், இந்த
காலக்கட்டத்தில் நம்பெருமாளோடு நெருக்கமாயிருந்த அனைவருமே பரமபதித்தப்படியாலும், அரங்கனது
அர்ச்சாத் திருமேனியை ஸேவித்து அறியாதவர்களே ஸ்ரீரங்கத்தில் இருந்தனர்.   
 
இவர்கள் ஏற்கனவே ஒரு வைணவர் ஸ்தாபிதம் செய்த மூர்த்தியினை, அரங்கனாக நினைத்து வழிபாட்டில் இருந்தமையால்,  அழகிய மணவாளனை மீண்டும் ஆஸ்தானத்தில் எழுந்தருளச் செய்ய அனுமதி மறுத்தனர்.

Older Posts »

Blog at WordPress.com.