Srirangapankajam

June 30, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 02

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 9:31 am

ஸ்ரீ பாஞ்சராத்ரம் – 02
26.06.2009

பாரமேஸ்வர ஸம்ஹிதை (1,39-41) சொல்கிறது.

“அடர்ந்த இருளைப்போன்று, பஞ்சபூதங்களான நிலம், நீர், அக்னி, வாயு, ஆகாயம் ஆகிய பிரகிருதியின் சம்பந்தமுடைய அனைத்தும் உண்மை நிலையறியாது அஞ்ஞானத்தினால் மூடப்பட்டு கிடக்கின்றன. இந்த அஞ்ஞானத்தினை அகற்றி, ஞானவிளக்கேற்ற வந்த தீபமே பாஞ்சராத்ரம்“ என்கிறது.

விஸ்வாமித்ர ஸம்ஹிதை (2.3.5) சொல்கிறது

பஞ்சேந்திரியங்களினால் இயங்கும் இந்த மனிதனுக்கு “பஞ்சரா“ என்று பெயர். இந்த பஞ்சேந்திரியங்களினாலும் எது அறியப்படவேண்டுமோ, எது அடையப்பட வேண்டுமோ, அதற்கான வழிமுறையை வகுத்து அவனை வழிநடத்திக் கொண்டுபோகும் சக்தி “பாஞ்சராத்ரம்“ என்கின்றது.

புருஷோத்தம ஸம்ஹிதை (1.4) சொல்கிறது

பக்தி ஒன்று மட்டுமே ஒருவனை பிறவிதனிலிருந்து விடுவிக்கக்கூடியது. இந்த பக்தியை ஊட்டுவது, பரப்புவது பாஞ்சராத்ரம் என்கிறது.

பிள்ளைலோகாச்சாரியாரின் “முமுக்ஷுபடி“ வ்யாக்யனத்திற்கான மாமுனிகளின் அவதாரிகையில் மாமுனிகள் கூறுகின்றார். இவர் பாஞ்சராத்ரத்தைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லவில்லையானாலும் இங்கு இத்தருணத்தில் நினைவுகூறத் தக்கது..

“நித்யசூரிகளோ பாதி தன்னை அனுபவித்து நித்ய கைங்கர்யரஸராய் வாழ்க்கைக்கு ப்ராப்தி உண்டாயிருக்கச் செய்தேயும், அத்தை இழந்து “அஸன்னேவ” என்கிறபடியே அசத் கல்பராய் கிடக்கிற ஸம்ஸாரி ஸேதனருடைய இழவை அனுசந்தித்து அத்யந்த வ்யாகுல சித்தனாய் இவர்கள் கரண களேபரங்களை இழந்து, இறகொடிந்த பட்சிப் போல கிடக்கிற தசையிலே, கரணாதிகளைக் கொடுத்து…….”

பகவானை அனுபவிக்க முடியாது அசக்தராய் அஞ்ஞானத்தில் உழன்று, சிறகொடிந்த பறவை போல தவிக்கின்ற ஸம்ஸாரிகளை, நித்யசூரிகளைப் போன்று நித்யம் கைங்கர்யம் செய்யும் ஆசையுண்டாகி, அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு ஒரு “ப்ராப்தி“ உண்டாக, இந்த வாழ்க்கையில் கடைத்தேற, இந்த சேதனருடைய
வாழ்க்கை வீணாகிவிடுமோ என்ற கவலையினால் பகவான் கவலைப்பட்டுக் கொண்டே யோசித்து. அவர்கள் உய்யும் வழிக்கான ஞானத்தினை அளிக்கின்றான் என்கிறார்.

பாஞ்சராத்ரம் இந்த உலகம் உய்யும் வழிக்கான ஞானம். இந்த ஜீவன்கள் கடைத்தேற பகவானாலேயே அருளப்பெற்ற வழிமுறை.

எல்லாமுமாய் அனைத்தையும் தன்னுள் அடக்கி ஏகமாய் நிற்கும் அவனைத் தொழும் வழிக்கு, நம்மை அழைத்துச் செல்லும் அயனம் (பாதை) – அதாவது “ஏகாயனம்”.

Advertisements

June 26, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 01

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — Tags: — srirangapankajam @ 10:24 am

ஸ்ரீபாஞ்சராத்ரம்-01

ஸ்ரீ:
ஸ்ரீபாஞ்சராத்ரம்

நமஸ் ஸகல கல்யாண தாயிணே சக்ரபாணயே
விஷயார்ணவ மக்நாநாம் சமுத்தரண ஹேதவே!
நமஸ் சாண்டில்ய குரவே சனகாயன நமோ நம:
ஔபகாயண சாண்டில்ய பாரத்வாஜஸ்ச கௌசிக:
மௌஜ்யாயநஸ்ச பஞ்சைதே பாஞ்சராத்ர ப்ரவர்த்தகா:
தீக்ஷாச்சார்ய: ஜகத் ப்ரக்ஞா: திசந்து ஞானமத்புதம்

இது ஸ்ரீரங்கதிவ்ய க்ஷேத்திரத்திலே நம்பெருமாளின் அர்ச்சகர்கள் அநுதினமும் அநுசந்திக்கும் ஸ்ரீபாஞ்சராத்ர தியான ஸ்லோகம்.

என்ன சொல்லி துதிக்கின்றது இந்த ஸ்லோகம்..?

உன்னை ஆராதிக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும், ஔபகாயநர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர்ஆகிய ஐந்து ரிஷிகளுக்கும் போதித்து அவர்களை பாஞ்சராத்ர ப்ரவர்த்தகளாகவும், இந்த ஜகத்திற்கே பிரகாசம் அளிக்கக் கூடியவர்களாக்கி, அத்புதமான ஞானத்தினை அவர்களுக்கு அருளிய சகலவிதமான கல்யாண குணங்களையும் உடைய, சக்கரத்தினை கையில் தரித்துள்ள ஸ்ரீமந் நாராயணனை வணங்குகின்றேன். சாண்டில்ய மகரிஷியினையும், சனகரையும் வணங்குகின்றேன்!

இந்த ஸ்லோகத்தில் “சக்ரபாணயே“ என்று துதிப்பதற்கு என்ன காரணம்..? யார் இந்த ஐந்து ரிஷிகளும்..?
ஔபகாயநர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர்ஆகிய இந்த ஐந்து ரிஷிகளுமே பஞ்சாயுதங்களின் அம்சம்! இதில பிரதானமானது ஸ்ரீசுதர்ஸனர்!.

இந்த ஐந்து ரிஷிகளுக்கும் ஐந்து ராத்ரிகளில் பகவான் தனித்தனியே தன்னை ஆராதிக்கும் முறையை கற்பித்தான். ஐந்து ராத்ரிகளில் இது உபதேசிக்கப்பட்டமையால் இது பாஞ்சராத்ரம் என்றழைக்கப்படுகின்றது.

விஹகேந்திர ஸம்ஹிதை என்றவொரு க்ரந்தமானது, அனந்தன், கருடன், விஷ்வக்ஸேனர், பிரம்மா, சிவன் ஆகிய ஐவருக்கும் முறையே ஐந்து ராத்ரிகளில் உபதேசித்தார், என்கிறது.

பாரத்வாஜ ஸம்ஹிதை என்கின்ற க்ரந்தமானது வேறொரு விதமாக பாஞ்சராத்ரத்தினை கூறுகின்றது.

நாம் இங்கு ஸ்ரீரங்கத்தில் எது பிரமாணமாக உள்ளதோ, ஸ்ரீரங்கத்தில் வழக்கத்தில் உள்ள தியான ஸ்லோகத்திலுள்ளபடி எடுத்துக் கொள்வோம்.

“ராத்ரி” என்றால் “இருள்” இந்த இருள் அறியாமையைக் குறிக்கும்.

“பாஞ்ச” என்றால் சூரியன் என்ற ஒரு பொருளுண்டு.

இந்த சூரியன் அறியாமையாகிய இருளை விரட்டவந்தபடியால் “பாஞ்சராத்ரம்”.

எது அறியாமை..?

எது முக்யமாக அறியப்பட வேண்டுமோ அதனை அறியாதது அறியாமை..!

எது முக்யமாக அடையப்பட வேண்டுமோ அதனை விடுத்து மற்றவற்றையெல்லாம் அடைதல், அடைய ஆசைப்படுதல் அறியாமை..!

பாஞ்சராத்ரம் சொல்கின்றது..

“யஸ்மின்யுக்தம் வாஸூதேவனே சாக்ஷாத்
ஞானம் யோக: கர்ம பக்தி: விபுக்தி:
ஏதத் ஞாத்வா ப்ரம்மபூதோ மஹாந்த:
தத்வத் சாஸ்த்ரம் பாஞ்சராத்ரம் ப்ரபத்யே..”

”பரம்பொருள் சாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணனே. நாம் ஞானத்தினாலோ, யோகத்தினாலோ, கர்மங்களினாலோ அடையப்பட வேண்டியவன் இவனே“ என்கின்றது.

மற்றுமோர் தெய்வமுண்டோ? மதியிலா மானிடங்காள்*
உற்றபோதன்றி நீங்கள் ஒருவனென்று உணரமாட்டீர்*
அற்றம் மேல் ஒன்று அறியீர் அவனல்லால் தெய்வமில்லை*
கற்றினம் மேய்ந்த எந்தை கழலிணை பணிமின்நீரே !

பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் கூட எளியவனாய் இருக்கும் இந்த கண்ணனின், நம்பெருமாளின் பொற்பாதங்களை பணிமின்! இவனைத் தவிர ”நானே ஈஸ்வரன்” என்று சொல்லிகொண்டிருக்கும் தெய்வங்கள் பல உண்டானாலும், இவனல்லால் வேறு தெய்வமில்லை..! இந்த பரமபருஷனிடத்து, அபயமளித்துக் காக்கும் எளியவனிடத்து அன்பில்லாது மதிகெட்டு நிற்கும் மானிடர்காள்! உற்ற போது வரும்வரை இவனை நீங்கள் உணரமாட்டீர்கள்! ஸர்வேஸ்வரனான இவன் ஒருவனால் மட்டுமே நமக்காக அவதரித்து, தம் நிலை தாழநின்று தன்னைப் பற்றினார்காக தன்னோடு ஒத்த போகத்தினைத் தர காத்திருப்பவன்!.

June 13, 2009

Pesum Arangam – 79

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 7:16 am

Chapter-79
10.06.2009

பேசும் அரங்கத்தின் இந்த பாதுகா பிரபாவத்தினை நிறைவு செய்பவர்
திரு. Madhusudhanan Kalaichelvan

ஆழ்வார், அரங்கனின் நிர்ஹேதுக க்ருபையே வடிவானவர் என்பதைப் பார்த்தோம். இனி ஆழ்வாரைப்போலே, எம்பெருமானுக்கு நெருக்கமாக இருந்தவர்களோடு ஆழ்வாரை ஒப்பிட்டு நோக்கும் நாயனாரின் கருத்துக்களை அநுபவிப்போம்.

இளைய பெருமாள் :

இளைமைக்காலம் தொடங்கி இளையபெருமாள், எம்பெருமானுக்கு எல்லாக் கைங்கர்யங்களையும் இடைவிடாது எல்லாக் காலங்களிலும் செய்ய வேண்டும் என்று பாரித்து, சீதாபிராட்டியின் புருஷகாரமடியாக அக்கைங்கர்யத்தையும் பெற்று ஸ்ரீராமனே தனக்கு செல்வம் என்றிருந்தார்.

ஆழ்வாரும் இவரைப்போலே “அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து” என்று சிறு பிராயம் துவங்கி, “அலர்மகளை முன்னிட்டு அவன் தன் மலரடியை” மன்னி, “ஒழிவிலாக் காலமெல்லாம்” எம்பெருமானுக்கு எல்லாவித கைங்கர்யங்களையும் செய்ய வேண்டும் என்று பாரித்தார்.

மேலும், தனக்கு எல்லா உறவும் ஸ்ரீராமனே என்றிருந்த இளைய பெருமாளைப்போலே இவரும் “சேலாய் கண்ணியரும், அருஞ்செல்வமும், நன் மக்களும் மேலாய் தாய் தந்தையரும் அவரே” என்று எம்பெருமானே தனக்கு எல்லாம் என்றிருந்தார்.

ஸ்ரீ பரதாழ்வான் :

பரதாழ்வான், தன் தாயான கைகேயி, பெருமாளை வனத்திற்கு அனுப்பினாள் என்ற காரணத்தால், அவளை வெறுத்து, வந்த அரசையும் செல்வத்தையும் துச்சமாக நினைத்து பெருமாளைத் தேடிச் சென்று, அவர்தம் “பாதுகையை” பெற்றுவந்து, அவர் வருமளவும் கண்ணீர் வடித்து காத்திருந்தார்.

அதே நிலையில் ஆழ்வாரும் அரங்கனைப் பிரிந்து வாடும் அவர் பதற்றத்திற்கு இசையாது இருந்த தன் தாயாரை வெறுத்து, “பெருஞ் செல்வம் நெருப்பு” என்று ஒதுங்கி, எம்பெருமானை வேண்டிச் சென்று, “திருவடியே சுமந்துழலக் கூட்டரிய திருவடிகள் கூட்டினை” என்று அவன் திருவடிகளை தலை மேல் தாங்கினார். அதோடு எம்பெருமான் தன்னருகே இவரைச் சேர்த்துக் கொள்ளும் அளவும் கண்ணீர் பொங்க அழுது கிடந்தார்.

ஸ்ரீ சத்ருக்நாழ்வான்

சத்ருக்நாழ்வான் மற்ற இருவரைப்போல், இராமனின் வடிவழகிலும் ஈடுபடாது, பரதனுக்கு தொண்டு செய்து, பரதனுக்கு உகப்பு என்பதற்காக, இராமனின் வடிவழகையும் மனதில் கொண்டார்.
அதே நிலையில் ஆழ்வாரும், ததீயர்களுக்கு அடிமை பட்டிருப்பதை விரும்பி, அவர்களின் உகப்புக்காக, எம்பெருமானின் த்வ்ய மங்கள விக்ரஹத்தை தன் மனதிலே கொண்டார். தாமே இதை “புலன் கொள் வடிவு என் மனத்தாய்” என்றும் பாடியுள்ளார்.

தசரத சக்ரவர்த்தி :

ஸ்ரீராமனின் வடிவழகிலே ஈடுபட்ட தசரதன், எப்போதும் தன் கண் நிறைய அந்த வடிவழகை நெஞ்சில் நிறுத்தி அநுபவித்து வந்தது போல, ஆழ்வாரும் “எப்போழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி” என்று அநாதி காலம் வரை அநுபவித்தாலும், “அப்போதைக்கப்பொழுது என் ஆராவமுது” என்கிற படி மேன் மேலும் அநுபவிக்க ஆசை கொண்டிருந்தார்.

பிரஹலாதன் :

தன்னை துன்புறுத்திய நெருப்பு, போன்றவைகளைக் கூட எம்பெருமானுக்கு அனுகூலமான வஸ்துவாக நினைத்து, எம்பெருமானின் அந்தர்யாமித்வத்தை எல்லோருக்கும் உபதேசித்து வந்தார்.
அதே போல் ஆழ்வாரும், “அறிஉம் செந்தீயைத் தழுவி அச்சுதன் என்றும் மெய் வேவாள்” என்பது முதலாக, நெருப்பு முதலான வஸ்துக்கள் எம்பெருமானை உயிராகக் கொண்டிருப்பதனால், அனுகூலமாகக் கொண்டதோடு,
“கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்தெங்கும் பரந்துளன் ”
என்று எம்பெருமான் எங்கும் பரந்திருப்பதை பாடியதாலும் ப்ரஹலாதனோடு ஒப்பாகிறார்.

விபீஷ்ணாழ்வான் :

லங்கா ராஜ்யதோடு கூட, மனைவி, மக்கள் என்று எல்லாவற்றையும் விட்டு, இராமனின் திருவடிகளே தஞ்சம் என்று பற்றினான் ஸ்ரீவிபீஷ்ணாழ்வான்.
அதே நிலையில், ஆழ்வாரும் ஸம்ஸாரத்தில் உள்ள எல்லா உறவுகளையும் அறுத்து விட்டு, “தயரதற்கு மகன் தன்னைபற்றி மற்றிலேன் தஞ்சமாகவே” என்று இராமபிரானையே எல்லாமாகப் பற்றினார்.

திருவடி :

திருவடி இராமனின் வைபவத்தை தவிற மற்றெதிலும் நெஞ்சு செல்லாதவராய், ஸ்ரீராமனைத் தன்னுள்ளே உடையவராய் இருந்தார். அதுபோல, ஆழ்வாரும் “ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நன்னெஞ்சே ஓவாத ஊணாக உண்” என்று இராம வைபவத்தை போக்கியமாகவும், “திருக்கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான்” என்று ஸ்ரீராமன் தன்னுள்ளே உறைவதையும் பாடியுள்ளார்.

அருச்சுனன்:

பாரத போரின் இடையில், எம்பெருமானின் விஸ்வரூப சேவைப் பெற்ற அர்ச்சுனன், மகிழ்ச்சியோடு பயமும் கொண்டு, எப்போதும் போல் நான்கு தோள்களோடே சேவை சாதிப்பாய் என்று ப்ரார்தித்த்தாப் போலே;
ஆழ்வாரும், “ நல்குரவும் செல்வமும் ” என்று பலவகை பொருள்களாலான உலகை உடையவனாய் கொண்ட பெருமாளை, “கூராராழி வெண் சங்கேந்தி வாராய்” என்று அரங்கனின் சங்கு சக்கரம் தாங்கிய திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காண ஆசைப்பட்டார்.

பிராட்டிமார்கள்:

மேற் சொன்னவர்கள் எல்லோரையும் விட, ஆழ்வாரின் மேன்மையை பிராட்டியாரோடு ஒப்பிடுகையில் அறியலாம். “பின்னை கொல், நிலமாமகள் கொல், திருமகள் கொல் பிறந்திட்டாள்” என்ற பாசுரத்தில் ஆழ்வாரை நீளாதேவி, பூமிபிராட்டி, ஸ்ரீரங்கநாச்சியார் என்று தேவிமாரோடும் ஒப்பிட்டு; மேலும் சில பாசுரங்களால் ஆழ்வாரின் பாவம், கோபியஸ்திரிகளோடும், மதுரா நகரஸ்திரீகளோடும், த்வாரகையில் இருந்த பதினாராமாயிரவரோடும் ஒக்கும் என்று சாதிக்கிறார்.

இவர்கள் அனைவரும் தனித் தனியே எம்பெருமானோடு சம்பந்தம் பெற்று, ஒவ்வோர் காரணங்களால் வைபவம் படைத்தவர்கள். ஆனால் இவர்கள் வைபவமெல்லாம் ஒரு சேரப் பெற்றவராகையாலே, இவர்களனைவரையும் விட வைபவம் ஆழ்வாருக்கு உண்டு என்பது அறிய முடிகிறது.
பிராட்டி மார்களைவிடவும் அதிக வைபவம் ஆழ்வாருக்கு என்றால், ஆழ்வாருக்கும் அரங்கனுக்குமான நெருக்கம் நமக்கு நன்கு புலப்பட வேண்டும். இத்துடன் வைபவம் பெற்ற ஸ்ரீநம்மாழ்வாரின் சம்பந்தத்தை, அரங்கனின் ஸ்ரீ பாதுகைகள் மூலம் பெற்று, ஆழ்வார் க்ருபைக்கு பாத்திரமாவோம்.

//இத்துடன் ஸ்ரீபாதுகாப்ரபாவம் முற்றிற்று//

பெரிய பெருமாள், பெரிய பிராட்டியார் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் திருவடிகளே சரணம்.
எம்பெருமானார் திருவடிகளே சரணம்.
நாயனார் திருவடிகளே சரணம்.
ஜீயர் திருவடிகளே சரணம்.
ஜீயர் திருவடிகளே சரணம் !!

June 8, 2009

Pesum Arangam – 78

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 7:59 am

 
Chapter-78
08.06.2009
 
பேசும் அரங்கத்தின் இந்த பாதுகா பிரபாவத்தினை நிறைவு செய்பவர்
திரு. Madhusudhanan Kalaichelvan <madhuraamanujam@gmail.com>
 
அரங்கனாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஸ்ரீ நம்மாழ்வார், அந்த அரங்கனின் காரணம் பாராத, க்ருபையாலேயே திருவவதாரம் செய்தார் என்றும், அரங்கனின் நிர்ஹேதுக க்ருபையே வடிவானவர் என்றும் நேற்று பார்த்தோம்.

அரங்கனின் அருள் வடிவான ஆழ்வாரின் அருளின் விசேஷத்தை இன்று மதுரகவிகளின் சொற்களைப் கொண்டு சற்றே அநுபவிப்போம்.

இவர் ஆழ்வாரை சேவிக்கும் முன் வரை, பிறர் பொருளையும் உடைமைகளையும் தன்னதாக நினைத்திருந்தாராம். இத்தால், வேதம் அறிந்த வைதீகர்கள் இவரை பாவத்தின் உருவமாகவே பார்த்து ஒதுக்கினாகள். அப்படி அவர்கள் இவரை ஒதுக்கியதே காரணமாகக் கொண்டு ஆழ்வார் இவருக்கு க்ருபைச் செய்தார். அவ்வாறு ஆழ்வார் இவருக்கு செய்த அருளை “கண்ணி நுண்சிருத்தாம்பில்” எட்டாம் பாசுரத்தில் கொண்டாடுகிறார்.
“அருள் கொண்டாடும் அடியவர் இன்புற,
அருளினான் அவ்வருமறையின் பொருள்,
அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்,
அருள்கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே! ”

ஆழ்வார் நம்மைத் திருத்த வேண்டி த்வயத்தின் அர்த்தத்தை திருவாய்மொழியின் மூலம் பாடினார். நமக்கு செய்ய வேண்டிய உபதேசங்களையெல்லாம் எம்பெருமான் அளித்த மயர்வற மதிநலத்தின் மூலம் செய்தார். அந்த அருளானது, எம்பெருமானின் அருளையே எதிர் பார்த்திருக்கும் அடியார்க்காய் செய்தது.
யார் இவர்கள் ?
வேறு ப்ரயோஜனத்துக்காக எம்பெருமானை அண்டாதவர்கள், தங்கள் கைம்முதலில் ஏதும் செய்ய முடியாது என்று அறிந்தவர்கள், தாங்கள் உய்ய, அரங்கனின் அருளல்லது மற்றில்லை என்று, அவன் அருளுக்காக காத்திருந்து, அதையே கொண்டாடியும் வாழ்பவர்கள். இவர்கள் “அருள் கொண்டாடும் அடியவர்கள்”.
இந்த பெருமை பெற்றவர்களுக்காக மட்டுமே திருவாய்மொழி பிறந்தது. திருவாய்மொழியின் அர்த்தங்களைக் கொண்டு எம்பெருமானின் அருளால் மட்டுமே வாழ்ச்சி என்றிருப்பவர்கள் “அருள் கொண்டாடும் அடியவர்கள்”. அவர்கள் இன்புற வேண்டி ஆழ்வார் ‘எம்பெருமானின் அருளாய்’ திருவாய்மொழியை அருளினார். அவரின் ‘அருள்’ உலகிலே சீறிய பேரருள் என்கிறார் மதுரகவிகள்.
பெரிய கோவிலில் அரையர் ஸ்வாமிகள் அரங்கனுக்கு கொண்டாட்டங்கள் சேவிப்பார். அதில், “ரிக் யஜுஸ் ஸாம அதர்வன நான்மறை சிகரக்கோவில் பெருமாள்!!” என்பதும் ஒன்று. அதன்படி, நான்மறையின் பொருளாய் விளங்குவது அரங்கரே என்பது பூர்வாச்சார்யர்கள் திருவுள்ளம் என்பது தேறுகிறது.
இந்த பாசுரத்தில், “அருமறையின் பொருள், அருள் கொண்டு” என்று பிரித்தால், அரங்கனின் நிர்ஹேதுக க்ருபையினாலே ஆயிரம் பாசுரங்களையும் ஆழ்வார் பாடினார் என்பது தேறும்.
ஆக, “அவனை அடைய, அவனே வழி” என்னும் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தின் படி நம்மை அவன் திருவடிக் காட்படுத்திக் கொள்ள, அவனருளே உருவான ஆழ்வாரைக் கொண்டு ஆயிரம் தமிழ் பாட வைத்தான்.
ஆனால், மதுரகவிகள் அரங்கனின் அருளுக்கு ஏங்காது, அவனைக் காட்டிக் கொடுத்த ஆழ்வாரின் திருவருளுக்கு பல்லாண்டு பாடுகிறார். மேலும் ஆழ்வாரின் அருள் உலகில் உள்ள எல்லாவற்றையும் காட்டிலும் மேலானது என்கிறார். இது எவ்வாறு சாத்தியமானது ?
ஆழ்வாரின் , ஆயிரம் இன் தமிழில் –
“திருவடியை அடைவிக்கும் திருவடி சேர்ந்துய்மினோ”
என்று, அரங்கன் திருவடியை அடைய அதையே பற்றுங்கோள் என்று நமக்கு உபதேசம் செய்கிறார்.
அரங்கனின் திருவடி வேறு, ஆழ்வார் வேறல்லவே(இதை ஸ்ரீ வேதந்தவாசிரியருடைய வாக்கினால் பல முறையும் கேட்டோம்). ஆக, ஸம்ஸார தாபத்தை தகிக்க வேண்டி அரங்கனாகிற நிழலிலே (வாசுதேவ தருச்சாயா) ஒதுங்கினார் ஸ்ரீ நம்மாழ்வார். அதே காரணத்திற்காக ஆழ்வார் திருவடிகளில் ஒதுங்கினார் ஸ்ரீ மதுரகவிகள்.
ஆயிரம் இன்தமிழ் பாடும் வரை, ஆழ்வாரை சம்சாரத்தில் காக்க வைத்தார் அரங்கர். பதினொரு பாசுரம் பாடிய அளவிலேயே ஸ்ரீமதுரகவிகளுக்கு ஆழ்வார் அருள் கிடைத்தது. இது தான் ஆழ்வாரின் அருளுக்கும், அரங்கனின் அருளுக்கும் உள்ள வேறுபாடு.
இங்கே ஆழ்வாரை சொல்வது, அவர் தொடக்கமாக, உடையவர் வரையிலும், அவரைத் தொடர்ந்து மணவாள மாமுனிகள் பர்யந்தமும் வந்த நம் குருபரம்பரையில் இரத்தினங்களாய் மிளிரும் நம் ஆச்சார்யர்கள் அளவும் ஒக்கும். ஆழ்வாரிடமிருந்து துவங்கும் இந்த ஆச்சார்ய பரம்பரையில், நம் ஆச்சார்யர்கள் அளவும் உள்ளவர்கள் எல்லாம், அரங்கனின் திருவடிகளே. ஆழ்வார் மதுரகவிகளுக்கு செய்த அநுக்கரஹம் போல், அரங்கனின் பாதுகைகளாக இருந்து, இவர்கள் நமக்கும் செய்கிறார்கள்.
ஆக, ஆச்சார்யர்களின் அருளால் மட்டுமே அரங்கனின் திருவடியில் நாம் ஒதுங்க முடியும் என்பதை உணர்ந்து, ஆழ்வார் ஆச்சார்யர்களின் க்ருபைக்கு பாத்திரமாக வேண்டியது மட்டுமே, நாம் செய்ய வேண்டியது. இதற்கான உபாயமும் அவர்களே. அவர்கள் திருவடியில் ப்ராவண்யம் ஏற்பட, அவர்கள் ஸம்பந்தத்தால் நம் அஞ்ஞானமாகிற பாபம் அழிக்க பட்டு அரங்கனின் திருவடியில் நித்ய கைங்கர்யம் ப்ராப்த்தமாகிறது.
பெரிய பெருமாள், பெரிய பிராட்டியார் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் திருவடிகளே சரணம்.
எம்பெருமானார் திருவடிகளே சரணம்.
நாயனார் திருவடிகளே சரணம்.
ஜீயர் திருவடிகளே சரணம்.
ஜீயர் திருவடிகளே சரணம்
!!
 

Pesum Arangam – 77

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 7:42 am

 
Chapter-77
06.06.2009
 
பேசும் அரங்கத்தின் இந்த பாதுகா பிரபாவத்தினை நிறைவு செய்பவர்
திரு. Madhusudhanan Kalaichelvan <madhuraamanujam@gmail.com>
 
நல்ல ஆச்சார்யர்கள் நமக்கு கிடைப்பது என்பது,  நமக்கு பாக்யம் இருந்தால் மட்டுமே சாத்யமாகும்.   நாம் எண்ணியபடி கிடைக்காது போனால், நமக்கு பாக்யமில்லாது போயின் என்ன செய்யலாம்.? ஆச்சர்யனை விட்டு பல மைல் தூரம் தள்ளி போனாலும், அவர்கள் நம்மை கிருபை கொண்டு அநுக்ரஹிக்க, அவர்கள் போல்வாரை நம்மை காக்க அனுப்பி வைப்பார்கள்.
 
நம்முடைய பூர்வாச்சார்யர்களை  ஒருமனதோடு தியானிப்பதும்,  அவர்களை நம்முடைய ஸவப்னத்தில் தரிசிக்கப் பெறுதலும் நமக்கு பகவத்கிருபையைப் பெற்றுத்தரும்.  ப்ரத்யக்ஷமாக ஸேவிக்க முடியாத இவர்களை நாம் ஆராதிக்க வேண்டியது கூட அவசியமில்லை.  இவர்களிடத்து நம் மனமானது பூர்ணமாக லயித்திருந்தால் போதும்.  அப்படிப்பட்ட அனுக்ரஹ சீலர்கள் இவர்கள்.  நாதமுனி காலமெங்கே..?  நம்மாழ்வார் வாழ்ந்திருந்த காலமெங்கே..?   நம்பிக்கையோடு ஒருமனதோடு தியானித்திருந்த நாதமுனிக்கு நம்மாழ்வார் கடாக்ஷித்துள்ளாரே..? நம்மாழ்வார் காலம் முடிந்தாலும், நாதமுனிகளுக்கு அணுக்ரகாம் செய்ய, ஒரு “பராங்குச தாசரை” அனுப்பி வைத்தாற்போல்.
நாம் அஞ்ஞானத்தினால் மூடப்பட்டு ஆச்சார்யனை மறந்து அதனால் தெய்வத்தையும் மறந்து, தேஹத்தையும் அது மூலம் ஏற்படும் சுகத்தினையும் பெரிதாய் எண்ணி ஒருவித அஞ்ஞானமயக்கத்தில் உள்ளோம்.
 
வைதீக கார்யம் மட்டும் இல்லை, லௌகிகத்தில் கூட, வீட்டில் நடக்கும் விவாஹம், சீமந்தம் என்று எல்லாவற்றிற்கும், ஆசார்யனே பொறுப்பேற்று நடத்தி வைக்கும் அழகு, ஸ்ரீவைஷ்ணவ சம்பரதாயத்தின் தனிச்சிறப்பு. யாராலும் சொல்லி முடிக்க முடியாத ஆச்சர்ய வைபவம், ஆச்சார்யா வைபவம். 
 
பரம பக்தியுடையவர்களாய்  பகவானோடு இரண்டற கலந்த நம் ஸதாச்சார்யர்களை சதா நினைத்து அனுபவிக்கப்பெற்ற பாக்கியவான்களுக்கு பரமபதப்ராப்தியைப் பற்றி கவலையே படவேண்டியதில்லை.  ஸதாச்சார்ய கடாக்ஷத்தினால் எப்படி இங்கு நிரந்தர அனுபவம் கிடைக்கின்றதோ அது போன்று அவர்களின் அந்திமகாலத்தில் பகவத் சிந்தனையும், பரமபத ப்ராப்தியும் தானாகவே வந்து வாய்க்கும்.   அவர்கள் சரீர சம்பந்தம் விலக வேண்டியதுதான், தாமதமின்றி நித்யசூரிகள் அவர்களை பரமபத்த்திற்கு அழைத்துப்போக தயாராய் வந்துவிடுவர்.  ஏனென்றால் இந்த பொறுப்பானது ஆச்சார்யனுடையது.  இவர்கள் இதற்கென்றே ஏற்பட்டவர்கள்.  ஜீவன்கள் கடைத்தேற அவதரித்தவர்கள்.   பகவத் கடாக்ஷத்தைக் காட்டிலும் ஆச்சார்ய கடாக்ஷம் மிகவும் விசேஷமானது. 
நாம் செய்யவேண்டியதெல்லாம் ஆச்சார்யனிடத்து பரம விசுவாசமும் பக்தியும் மட்டுமே.  பதிலாக நமக்கு கிடைப்பதோ பேரானந்தமயமான பரமபதப்ராப்தி……!
 
மதிளரங்கரின் பொற்பாதுகைப் பற்றி கடந்த 6 – 7 மாதங்களாக நம் பட்டர் ஸ்வாமி ஸ்ரீ வேதாந்தவாசிரியருடைய ஒப்புயர்வற்ற க்ரந்தமான “ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்” கொண்டு நாம் அனுபவித்து உய்யும்படி செய்து வருகிறார்.
 
இதையும், இதற்குமுன் “பேசும் அரங்கன்” என்ற தலைப்பில் ஸ்வாமி பெரிய பெருமாளாகவே இருந்து நம்மிடையே பேசியவற்றையும், தொடர்ந்து அனுபவித்து வருபவர்களுக்கு ஒரு விஷயம் நன்கு புலப்படும். இங்கிருந்து தொடங்குவோம், இதைப்பற்றி பேசுவோம், இத்தோடு பூர்த்தி செய்வோம் என்ற நோக்கு ஏதும் முன் கூட்டியே வரையறுத்துக் கொள்ளாமல்தான், ஸ்வாமி எழுதத் துவங்குவார். ஆம் ! எழுதுவது மட்டும்தான் அவர் கார்யம், பேசுவது பெரிய பெருமாளாயிற்றே ! அர்ச்சா ஸங்கல்பத்தையெல்லாம் மீறி, பெரிய பெருமாள் புரியும் விந்தைகளையும், விநோதங்களையும் அனுபவிப்பவர்களுக்கு இது வியப்பாக இராது.
 
ஆழ்வார் தொடக்கமாக, மணவாள மாமுனிகள் பர்யந்தம், நம் ஓராண் வழி குருபரம்பரையில் வந்த மஹணீயர்களிடத்தே பெரிய பெருமாள் பேசியதும், அவர்களைக் கொண்டு தம் கார்யம் செய்து கொண்டதும், நம் போன்ற ஸாமான்யர்களுக்கு செய்ய வேண்டிய உபதேசங்களை செய்ததும் நாமறிந்ததே. அதே க்ரமத்தில், இன்று நமக்கு “பேசும் அரங்கம்” அமைந்தது என்று கொள்ளத் தட்டில்லை.
 
“ஸ்ரீ பாதுகா ப்ரபாவம்” எழுத துவங்கி இன்று “ஸ்ரீ பாதுகா சஹஸ்ரத்தின்” 1008 ரத்தினங்களின் ஒளியையும் ஓர் அளவு நாம் அறியும் படிச்செய்த க்ருபையோடு, இதை பூர்த்தி செய்ய ஸ்வாமி திருவுள்ளம் கொண்டார். ஆனால், சில நாட்களுக்குமுன் பாதுகா ப்ராபாவத்தை விட, அந்த பாதுகையான ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றி ஸ்வாமி அதிகம் பேசியதும், அத்தோடு கூட அடியேன், இந்த விஷய மாற்றத்துக்கு ஒரு முறை காரணம் கேட்டதற்கு, “பாதுகை தான் ஆச்சார்யன் ! ஆச்சார்யன் தான் பாதுகை ! ” என்று பதில் அளித்தார்.
 
அவர் அளித்த பதிலின் தாக்கத்தால், “பாதுகாப்ரபாவம்” பேசிய இந்த பகுதியில், பெரிய பெருமாளின் பாதுகையான பராங்குசரைப் பற்றியும் பேசி முடிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தேன். அதுவும் “வைகாசி விசாகம்” நெருங்கும் வேளையில் இதைச் செய்வதைக் காட்டிலும் வேறு சிறந்த நேரம் இருக்க முடியாது. “அப்படியானால், இதை நீயேச் செய்” என்று ஸ்வாமியின் நியமனத்தை ஏற்று அடியேனின் சிற்றறிவிற்கு தோன்றுவதை எழுதி ஸ்வாமியின் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.
 
ஆழ்வாரின் வைபவங்களை அவர்தம் திருவடியாக இருக்கும் ஸ்ரீமதுரகவிகள் தொடக்கமாக பலர் பேசியுள்ளனர். அப்படி பலர் பேசிய ஸ்ரீசுக்திகளையெல்லாம் கொண்டு, ஒன்று திரட்டி ஸ்ரீ பிள்ளை லோகாசாரியரின் திருத்தம்பியரான  ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆழ்வார் விஷயமாக செய்த பெரும் காவியம் “ஆச்சார்ய ஹ்ருதயம்” என்னும் க்ரந்தம். இதுபோல் ஒரு க்ரந்தம் இதற்கு முன் வந்ததில்லை, இனியும் வர வாய்ப்பில்லை என்னும் அளவிற்கு விஷய பூர்த்தி, சொல்லழகு எல்லாம் ஒரு சேரப் பெற்ற க்ரந்தம். இந்த க்ரந்தத்தில் சொல்லப்பட்டுள்ள செய்திகளைக் கொண்டு ஆழ்வார் வைபவத்தை ஈண்டுச்சிறிது அனுபவிப்போம்.
 
ஆழ்வாரின் அவதாரம்:

ஆழ்வாரின் அவதார விஷேஷத்தை பற்றி நம்மிடையே நிலவும் பல கருத்துக்களை ஆராய்கிறார் நாயனார். யுகங்கள் தோறும் அரங்கன் ஒவ்வொரு வர்ணத்தில் ஒருவருக்கு பிள்ளையாக அவதரித்தான்.
 

 

யுகம்

பெற்றோர்

குலம்

அவதாரம்

கிருதயுகம்

அத்ரி மஹரிஷ ஜமதக்நி

 அந்தணர்            

அந்தணர்

தத்தாத்ரேயர்     பரசுராமர்

த்ரேதாயுகம்

தசரத சக்ரவர்த்தி

க்ஷத்ரியர்

ஸ்ரீராமன்

த்வாபரயுகம்

வசுதேவ நந்தகோபர்கள்

வைஸ்யர்

ஸ்ரீக்ருஷ்ணன்

 


இதன் தொடர்ச்சியாக கலியுகத்தில் வேளாளர் குலத்தில் காரி-உடையநங்கையாருக்கு மகனாக ஸ்ரீசடகோபராக எம்பெருமானே அவதரித்தானோ? என்று ஒரு சாரார் கருதுவர்.
 
வேதங்களை தொகுத்தல் போன்ற சில அரிய செயல்களைச் செய்ய வ்யாச பகவான் பேரில் ஆவேசித்தான் அரங்கன். அதுபோலே, இவரைக் கொண்டு தமிழ் மறையை வெளிப்படுத்துவதற்காக இவர் பேரில் ஆவேசித்தானோ ? என்றும் ஒரு சாரார் கருதுவர்.
 
இதெல்லாம் இல்லை; பரமபதத்தில் உள்ள நித்ய சூரிகளில் ஒருவர் அல்லது முக்தர்களில் ஒருவர், அல்லது அந்த ஸ்தானத்திற்கு ஒப்பான “ஸ்வேத த்வீப” வாசிகளில் ஒருவர், நம்மைத் திருத்த ஆழ்வாராக அவதரித்தார்களோ ? என்றும் ஒரு சாரார் கருதுவர்.
 
( “ஸ்வேத த்வீபம்” என்பது திருப்பாற்கடலுக்கருகில் உள்ள ஒரு “வெள்ளைத் தீவு”. பெரிய பெருமாளுக்கு நித்ய திருவாராதனம் செய்யும் அர்ச்சகர்கள் இங்கிருந்து வந்தவர்கள் என்பது நம்மில் பலரும் அறியாத ரகசியம். அரங்கனை ஆராதிக்கும் இவர்கள் ஆழ்வாருக்கு ஒப்பானவர்கள் என்பது இங்கு கவனிக்கத் தக்கது.)
 
இந்த காரணங்கள் ஏதும் இல்லை, நம்மைப் போன்று சம்சாரிகளில் ஒருவர் முற்பிறவி பலனாக இப்படி திருந்தினாரோ? என்று கருதுபவர்களும் உண்டு.
 
இதையெல்லாம் விட சிறந்த காரணமும் ஒன்று உண்டு. யாதொரு காரணத்தையும் பற்றாத எம்பெருமானின் “நிர்ஹேதுகமான க்ருபை” (causeless mercy) என்னும் அருளின் சிறப்பினால், அரங்கன் ஒருவனையே பலனாக, எண்ணியிருந்து பலிக்கப் பெற்றவர் என்று ஆழ்வாரை கருதுவோரும் உண்டு.
 
ஆக இப்படியெல்லாம் பல கருத்துக்கள் நிலவுவது ஆழ்வாரின் சிறப்பையே காட்டும். இன்னதென்று வரையறுத்து சொல்ல முடியாத சிறப்பு அது ஆழ்வாரின் அவதாரச் சிறப்பு.
இவரைத் தொடர்ந்து வந்த ஆச்சார்யர்களும் அப்படியே. அரங்கனின் நிர்ஹேதுக க்ருபையே உருவானவர்கள். பெரிய பெருமாளின் பாதுகையாகவே இருந்து, நமக்கு ஸம்ஸாரமாகிற கடற்கரையில் நின்றும் வழிகாட்டும் கலங்கரை விளக்கங்கள்.
இனி இவர்களின் “அருளின் தன்மையை” அடுத்து அனுபவிப்போம்.
 
பெரிய பெருமாள், பெரிய பிராட்டியார் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் திருவடிகளே சரணம்.
எம்பெருமானார் திருவடிகளே சரணம்.
நாயனார் திருவடிகளே சரணம்.
ஜீயர் திருவடிகளே சரணம்.
ஜீயர் திருவடிகளே சரணம்
!!
 

June 6, 2009

Pesum Arangam – 76

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 8:49 pm

திருதராஷ்டிரனுக்கு,  பகவான் ஸ்ரீகிருஷ்ணருடைய விஸ்வரூப தரிசனத்தையும்,  ஸ்ரீகீதா உபதேசத்தினையும்,  தாம் வெகுதூரத்திலிருந்தாலும், சஞ்சயன் தமது யோகத்ருஷ்டியினால் அறிந்து அவருக்கு அறிவிக்கின்றான்.  அதுபோன்று,  பாதுகையினைப் பற்றிய பெருமைகளை,  பாதுகையின் சூக்குமமாகயிருக்கும் நம்மாழ்வரின் மஹிமையை,  ஆழ்வார் ஆச்சார்யர்களின் உபதேசங்களை,  புகழை,
இந்த அற்புத பாமாலை பாதுகா ஸஹஸ்ரம் மூலமாய் நமக்கு உபதேசிக்கின்றார் ஸ்வாமி தேசிகர்.
 
அற்புதமான இந்த அம்ருதவர்ஷத்தினை பொழிந்து விட்டு கடைசியில் அவர் பகவானைக் கூட வேண்டவில்லை..!  நம்மிடத்து வேண்டுகின்றார்..!
 
யதி ஸ்பீதா பக்தி:   ப்ரணயமுக வாணீ பரிபணம்
பத்த்ராண ஸ்தோத்ரம் ஹ்ருதி பிப்ருத ரங்க்க்ஷிதி ப்ருத: !
நிருந்மாதோ யத்வா நிரவதி  ஸுதா நிர்ஜ்ஜரமுசோ
வசோபங்கீ ரேதா:  ந கதமநுருந்தே ஸஹ்ருதய:  !! 1007 !!
 
ஸ்பீதா=பூர்ணமான – பக்தி:=(பாதுகையினடத்தில்) பக்தியானது – யதி=உங்களுக்கு இருக்குமேயானால் – ப்ரணயமுக=நம்பிக்கையைக் கொடுக்கிறதாக இருக்கும்  – வாணீ=வேதத்தை – பரிபணம்=வேதம் என்ன சொல்லுகின்றதோ அதனையே பிரதிபலிக்கும் – பதத்ராண ஸ்தோத்ரம்= இந்த பாதுகா ஸ்தோத்திரத்தை – ஹ்ருதி=ஹ்ருதயத்திலே – பிப்ருத=தரியுங்கோள் (நன்கு உரு ஏற்றி மனதில் நிலைத்திருக்கும்படி செய்யுங்கள்) – யத்வா=இல்லாவிட்டால் (ஒருக்கால் அப்படியெல்லாம் உங்களுக்கு பக்தியில்லாவிட்டாலும்) – நிருந்மாதோ=சாமான்யமான பக்தியுடைய  – ஸஹ்ருதய:=நல்லமனதோடுள்ள ஒருவன் – நிரவதி=முடிவில்லாததான – ஸுதா=அம்ருதத்தினை ஒக்கும் – நிர்ஜ்ஜர=வெள்ளத்தினை – முச:=கொட்டுகிறதான – ஏதா= இந்த – வசோபங்கீ= வார்த்தைகளுடைய இன்பமான பதங்களின் சேர்க்கையை – கதம்=எப்படி – நாநுருந்தே=அனுபவிக்காமலிருப்பான்..?
 
”ஹே! ஜனங்களே!  நீங்கள் உய்வடைய எளிமையான பரமஹிதமான ஒரு வழியைக் கூறுகின்றேன்! கேளுங்கள்! 
 
இந்த பாதுகா ஸ்தோத்திரமானது மகத்தானது..! நமக்கு ஸகலவிதமான நன்மைகளும் அளிக்க்க்கூடியது வேதமும் – வேதம் காட்டும் வழியும்தான்!  நீங்கள் நாஸ்திகர்களாய் இல்லாத பட்சத்தில் இந்த வேதத்தினைக் கண்டிப்பாய் நம்பவேண்டும்.!   அந்த வேதம் நாம் உய்வடைய பாதுகைகள்தான் என்று சூக்குமமாய் அறுதியிடுகின்றது!. 
 
அந்த வேத்த்தினுடைய உருவம்தான்,  ப்ரதிபாத்யமான வஸ்துவான பாதுகையினை துதிக்கும் இந்த பாதுகா ஸஹஸ்ரத்தினை தினசரி பாராயணம் செய்யுங்கள்.   இதுதான் பரம ஹிதத்தினைத் தரக்கூடியது!. இதுவே பரமபலம் – இதுவே பரமக்ஷேமம் – ஒருக்கால் உங்களுக்கு அப்படிப்பட்ட அனுபவிக்க்க்கூடிய பக்தியில்லையென்றாலும்,  இதிலுள்ள வார்த்தைகளின் கோர்வை – காதிற்கும் வாக்கிற்கும் இனிமையான ஸப்தரசங்களின் தன்மையினை அனுபவித்து உருப்போடுங்கள் –
 
அறிந்தோ அல்லது அறியாமலோ எப்படி நெருப்பைத் தொட்டால் அதனுடைய ஸ்வபாவமானது நம்மை சுடுகின்றதோ அதைப்போன்று நாம் பக்தி மேலிட்டோ அல்லது இதிலுள்ள இனிமையான ரஸஞானத்தினால் ஈர்க்கப்பட்டோ இதனை அப்யாஸிக்கத் தொடங்குவீர்களாயின்,  பாதுகையின் ஸ்வபாவமான மஹிமையினால்,  கருணையினால் ஸகல க்ஷேமங்களையும் பெற்று இவ்வுலகிலும், பரம ஸ்ரேயஸ்ஸான மோக்ஷத்தினையும் பெற்று உய்வீர்கள்.  இது ஸர்வோப ஜீவ்யமான அம்ருதம்.    ஏதோ ஒருவித்த்தில் இதனை அனுஸந்தித்தாலும் போதும் – பரமக்ஷேமத்தினையடைவது உறுதி!.”    என்று நாம் உய்வதற்காக நம்மை
பிரார்த்திக்கின்றார் இந்த பரமதயாளு – ஸ்வாமி தேசிகர்.

 
பாதுகைதான் நம்மாழ்வார்.  நம்மாழ்வார்தான் பாதுகை!
ஸ்வாமி தேசிகரின் இந்த பாதுகையின் ப்ரபாவமானது நம்மாழ்வாரின் அவதாரதினத்தினமான இன்று (வைகாசி-விசாகம் 5.6.2009) பூர்த்தி பெறுகின்றது.  இந்த ப்ரபாவத்தின் முடிவுரையை என் அருமை நண்பரும், வைணவப் பிரகாசரும் ஆன திரு. மதுராமாநுஜம் அவர்கள் எழுதுகின்றார்.  

 

June 5, 2009

Pesum Arangam – 75

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 8:39 am

Chapter-75
29th May’2009

பக்தி என்பது ஊட்டி வளர்த்துதான் வரவேண்டும் என்பதில்லை. பரம நாஸ்திகனாய் இருந்தவர்களில் பலபேர் சில வினாடி நெகிழ்வுகளில், பகவானின் அற்புதங்களினால், அனுகிரஹத்தினால் பக்தி பிழம்பாய் மாறியுள்ளார்கள். சில மஹான்களின் அண்மை, காருண்யம் பலரை மாற்றியுள்ளது. சில சொற்கள் பலரை பாதித்து ஆன்மீகத்திற்கு திருப்பியிருக்கின்றது. இதுபோல நன்கு பக்தியோடு வளர்ந்தவர்கள், சில சூழ்நிலைகளாலோ, சந்தர்ப்பங்களாலே அல்லது சில சிந்தனை தூண்டுதலாலோ நாஸ்திகர்களாயும் மாறியுள்ளார்கள். எனக்குத் தெரிந்த ஒரு பிரபல எழுத்தாளர், அவரிடத்திலுள்ள பல கெட்ட பழக்கவழக்கங்கள், ஒரு மஹான் அவரை தொட்ட மாத்திரத்தில், அவரை விட்டு விலகின. ஒரு க்ஷண நேர ஸ்பரிஸம் ஒரு மாயாஜாலத்தினையே நிகழ்த்தியுள்ளது.

மனதளவில் தீயவனாய் இல்லாமல் இருந்தால் போதும். அவனருள் கண்டிப்பாய் வந்து சேரும்.

துருவன் ஒரு சிறு பாலகன். ஏதுமறியாத குழந்தை. பகவானிடத்துள்ள பக்தி மிகுந்து அக்குழந்தை தபஸ் செய்கின்றது. துருவனின் தபஸ்ஸினால் பகவான் நேரில் காட்சியளிக்கின்றான். ப்ரத்யக்ஷமாக பகவானைக் கண்ட அக்குழந்தைக்கு என்ன செய்வது என்பது தெரியவில்லை. திக்குமுக்காடி போனது. வாயார ஸ்தோத்திரம் பண்ணமுடியவில்லை. பதறியபடியே பகவானிடத்து அக்குழந்தை, ”ஸ்தோதும் த்வாமஹமிச்சாமி தத்ர பிரக்ஞாம் ப்ரயச்ச மே” – ” உன்னை ஸ்தோத்திரம் பண்ணவேண்டும் என்று மிகுந்த ஆவலாயுள்ளது! எனக்கு சொல்லத் தெரியவில்லையே ப்ரபோ! அதற்குண்டான ஞானத்தைக் கொடேன்!“ என்று கெஞ்சியது. இந்த பிரார்த்தனையால் நெகிழ்ந்து போனான் பரந்தாமன்!. தன்னுடைய பாஞ்ச்சன்னியமாகிய சங்கைக் கொண்டு துருவனது முகத்தினை வருடினான்!. திவ்யஞானமும் உண்டாகி ஸ்தோத்திரம் செய்தது அக்குழந்தை!.

துருவனை பாஞ்ச்சன்யத்தினால் வருடியதைப்போன்று, தேசிகரை ஸ்ரீபாதுகாதேவி அரங்கனின் அர்ச்சகர் மூலமாய் தேசிகரின் சிரஸ்ஸினை தீண்டி சற்று நேரம் அவரது சிரஸ்ஸில் அமர்ந்து அனுகிரஹித்துள்ளாள். ஸ்ரீபாதுகையின் ஸ்பரிஸம் ஸ்வாமி தேசிகரிடத்து ஒரு அற்புத நெகிழ்வை, உணர்வை, ஊக்குவிப்பை, உந்துதலைத் தந்தது. கருத்துள்ள கவிமழையை
கார்மேகமாய் ஒரு ஜாமத்திற்குள் பொழிந்து தள்ளிவிட்டார்.

ப்ருதுக வதந சங்க ஸ்பர்ஸ நீத்யா கதாசித்
சிரஸி வினிஹிதாயா: ஸ்வேந பூம்நா தவைவ !
ஸ்துதிரிய முபஜாதா மந்முகேநேத்யதீயு:
பரிசரண பராஸ்தே பாதுகே பாஸ்த தோஷா: !!

ப்ருதுக=பாலகனுடைய (துருவனுடைய) – வதந=முகத்திலே – சங்கஸ்ப்ர்ஸ நீத்யா=ஸ்ரீபகவானுடைய பாஞ்சஜன்யம் என்னும் சங்கத்தின் ஸ்பர்ஸத்தினால் ஏற்பட்டதை (ஏற்பட்ட மாறுதலைப்) போன்று – கதாசித்=ஒரு சமயத்தில் (ஸ்ரீரங்கநாதன் இந்த ப்ரபந்த்த்தை பண்ணும்படி அனுமதி கொடுக்கும் சமயத்தில்) – சிரஸி=என்னுடைய சிரஸ்ஸில் – விநிஹிதாயா=(அர்ச்சகரால்)நன்றாக சாதிக்கப்பெற்ற – தவ=உன்னுடைய – ஸ்வேன=ஸ்வாபிகமான – பூம்நா ஏவ=மஹிமையினாலே – மந்முகே=என்முகமாக (அதாவது என்னை ஒரு கருவியாக்க் கொண்டு) – ஈயம் ஸ்துதி= இப்படி உயர்ந்த்தான ஸ்தோத்திரமானது – உபஜாதா = உண்டானது –– அபாஸ்த தோஷா:=த்வேஷங்கள் அற்றவர்களான – பரிசரணபரா=உன்னுடைய கைங்கர்யங்களில் ஈடுபாடுள்ள பெரியோர்கள் –
இதி அதீயு:= எண்ணக்கடவர்கள் (அதாவது வேத்த்தினை அத்ய்யனம் செய்வது போல் சிரத்தையுடன் இதை நித்யமாக பாராயணம் செய்யக்கடவர்கள்.

ஹே! பாதுகே! இந்த ஸஹஸ்ரத்தை நான் பண்ணுவதற்கு முன் நியமனம் கேட்பதற்காக உன் ஸந்நிதியில் நின்றபோது, துருவனை பாஞ்சஜன்யத்தினால் பகவான் வருடியதை போன்று, அர்ச்சகாள் மூலமாய், என் தலையில் நீ சாதிக்கப்பெற்று வெகுநேரம் எழுந்தருளி அனுமதியளித்தாய்! உன் மூலமாக உன்னை ஸ்தோத்திரம் பண்ணும்படியான ஞானத்தினையும் வாக்கினையும் அளித்தாய்!. உன்னுடைய ப்ரபாவத்தினாலேயே உன்னை ஸ்தோத்திரம் பண்ணும்படியான ஞானம் எனக்கு ஏற்பட்டது!. உன்னுடைய அனுக்ரஹரூபமாக தானாக வெளிப்பட்டது!. பெரியோர்கள் இந்த உண்மையை உள்ளபடி அறிந்து, வேத்த்திற்கு சமமாக பாவித்து சிரத்தாபக்தியுடன் தங்களுடைய நித்யபாராயணத்திற்கும் வைத்துக் கொண்டு விடுவார்கள். இந்த ப்ரபந்தம் உன்னால் ஏற்பட்டது. எல்லோராலும் கொண்டாடத்தக்கது.

பாதுகையும் நம்மாழ்வாரும் ஒன்றுதான்! நம்மாழ்வார்தான் பாதுகை! பாதுகைதான் நம்மாழ்வார்!. இந்த பாதுகா ஸஹஸ்ரமும் நம்மாழ்வாரின் அனுக்ரஹத்தினால், வேதம் தமிழ் செய்த மாறனின் திவ்ய கடாக்ஷத்தினால் ஏற்பட்டது என்கிறார் ஸ்வாமி தேசிகர்!.
———-

swamin dasan,

on reading your pesum arangam dt.29/05/2009, i would like to share my
views with you :

Muthal THIRUVAAYMOZHI, mundram patthu, muthal pattu (1-3-1) (sri.namamazwar aruliyathu)

pathuudai adiyavargu eliyavan; perarku ariyavidakan….

pagthi udayavargaluku elimaiyai eruppan, pagthi
illathavargaluku pulappadan. (we can see this in our practical life
for so many times). he helps us during our critical situation.

this point coincides with your article.

apthan

Blog at WordPress.com.