Srirangapankajam

December 30, 2008

Pesum Arangam-14

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 12:24 am
Chapter-14
29.12.2008
 
வசிஷ்டரிடம் காமதேனு வளர்ந்து வந்தது.  அது அவரிடமிருந்து தினமும் ஒரு கைப்பிடி அருகம்புல்லைதான் எதிர்பார்த்ததாம்!.
பிரதிபலனாக வேண்டியதையெல்லாம் ஈந்தது!. 
 
ஆனால் பாதுகை எதையுமே எதிர்ப்பார்ப்பதில்லை.  அதனை ஒருவர் தினந்தோறும் தியானித்தாலோ, தம் சிரஸ்ஸில் சிரத்தையோடு ஏற்றாலே போதும்.  வேண்டாமலேயே வேண்டியதைத் தந்து விடுவாள். ஒரு புஷ்பம் கூட அளிக்காதவனுக்கும் ஸகல புருஷார்த்தங்களையும் காருண்யத்தோடு அருளுவாள்,
ஸகல சம்பத்துக்களும் கூடிய பிருமாண்ட நாயகனாம் அரங்கனின் திருவடிகளை ஏந்தியிருக்கும் பாதுகைதேவி!
 
ஸ்ரீரங்கவிமான தரிசனமே போதும்! நம் கஷ்டங்கள் விமோசனம் பெறும்! பாவம் தொலைக்கும் இந்த விமானதரிசனம் செய்து, கருவறைச் சென்று பாதுகையோடு கூடிய நம்பெருமாளையும் தரிசிக்கும் போது, நமக்கேது குறை! ஸ்ரீரங்கவிமானம் தேவர்களால் கற்பகவிருக்ஷத்தின் பெறுதற்கரிய மலர்களைக் கொண்டு பூஜிக்கப்பட்டதாம். 
 
ஸ்வாமி தேசிகர் கூறுகின்றார்,
”ஹே! பாதுகை!  ஸ்ரீரங்கநாதன் ஸமஸ்த உலகங்களையும் காப்பாற்ற எண்ணம் கொண்டு, கற்பக மலர்களால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீரங்கவிமானத்தின் நடுவில், உன் மீது ஏறி கூத்தாடுகின்றார்” என்று! 
 
இந்த பாதுகையினை தேவதைகள் சகல லோகங்களும் எந்த தொந்தரவும் இல்லாமல் சுகித்திருக்க தேவலோகத்திலுள்ள பலவகையான அரிய புஷ்பங்கள் கொண்டு பூஜிக்கின்றனராம். 
 
மனிதர்கள் எளிதில் கிடைக்கும் துளஸி போன்றவற்றைக் கொண்டு அர்ச்சிக்கின்றார்கள்.  இவையனைத்தையும் ஸ்ரீரங்கநாதன், ஸம்ஸாரம் என்னும் ஸர்ப்பத்தின் விஷத்தினைப் போக்கும் அரிய ஓஷதியாக (மூலிகையாக) மாற்றுகின்றான்!  சிரத்தையோடு இரண்டு மூன்று இதழ்கள் சமர்ப்பித்தாலும் இந்திரபட்டத்தை முறைப்படிப் பெறுகின்றார்கள்.

எட்டு வகையான தியான புஷ்பங்களால் (1. அஹிம்சை 2.இந்திரிய நிக்ரஹம் 3. தயை 4.பொறுமை 5.ஞானம் 6.தவம் 7. தியானம் 8. சத்யம்) அர்ச்சிக்கின்றவர்களின் திருவடிகளைத் தேவர்களும் வணங்கும் பேறு பெறுகின்றனராம்.
 

பரமபதம், ஸத்யலோகம், திரு அயோத்தி, ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு இடங்களில் பவித்ரமான புஷ்பங்களாலே திருவாரதனம் நடந்தது.

இது பாஞ்சராத்ர ஆகமத்தில் பெருமாளை கும்பம், அக்னி, ஸ்தண்டிலம், பிம்பம் என்ற நான்கு ஸ்தானங்களில் ஆராதனம் செய்வதைப் போலிருக்கின்றது என்கிறார் ஸ்வாமி தேசிகர்.
 

ப்ரஸமயதி ஜநாநாம் ஸஞ்ஜ்வரம் ரங்கபர்த்து:
பரிஸரசலிதாநாம் பாதுகே!  சாமராணாம்!
அநுதிநம் உபயாதைருத்திதம் திவ்யபுஷ்பை:
நிகமபரிமளம் தே நிர்விஸந் கந்தவாஹ:!!
 
பாதுகையே! தேவர்கள் ஸமர்ப்பிக்கும் புஷ்பங்களால் அறியப்படும் உன்னுடைய வேதமணத்தை அதாவது வேதம் கூறும் உன் மஹிமையை அனுபவிக்கும் ஸ்ரீரங்கநாதனுடைய, சாமரக்காற்று ஜனங்களின் ஸம்ஸார தாபத்தைப் போக்குகின்றது.
 
Advertisements

December 29, 2008

Pesum Arangam-13

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 11:29 pm
Chapter-13
27.12.2008
 
அரங்கனுடைய திருவடிகள்தாம் – வேதத்தின் சாரம். 
அதன் எல்லையில்லாத சேமிப்பு!. 
 நிர்கதியாய் நிற்பவர்களுக்கு அதுவே கதி!.
 
அனைவரும் துதிக்கும் அந்த திருவடிகளின் புகலிடம் பாதுகையே! 
 
அரங்கனை ஸேவிக்க இயலாது, அவனையே நினைத்து உருகும் நிர்கதியானவர்கள் ஸேவிக்கும் வண்ணம், அவனை திருவடியோடு சேர்த்து தெருவிற்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கிறாள் இந்த பாதுகா தேவி!.
 
தேசிகர்,  நம்பெருமாளின் ஓய்யார நடையழகை கண்ணார கண்டு மகிழ்கின்றார், தமது 292வது சுலோகத்தில். 
இயற்கையாகவே நடையழகு என்பது ஆண்களுக்கு அரிதே!  அரங்கனுக்கு இது சாத்தியமானது பாதுகாதேவி திருவடியில் இருப்பதால்தானோ..?
 
தேசிகர் கூறுவார், ஹே! பாதுகையே!  ஸ்ரீரங்கநாதன் உன்னைச் சாற்றிக் கொண்டு ஓய்யாரநடை போடுகிறார். 
அந்த சமயத்தில் குடையை வேகமாக சுற்றுவார்.  அது பார்ப்பதற்கு அசைவின்றி நிற்பது போலத் தென்படுகின்றது.  ஸேவிப்பவர்க்கு அந்த நடைகள் பரம போக்யங்களாகின்றன’
என்கிறார்.  
 
நம்பெருமாள் தோன்றிய காலம் முதல் இன்று வரை இந்த நடையழகு இருப்பதற்குக் காரணம் நம்பெருமாளின் பாதுகையேத் தவிர நாமன்று!
 
இந்த சமயத்தில் நான் படித்த ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகின்றது!

தேரெழுந்தூர் ஆண்டவன் என்றவொரு ஸந்யாசி!  பெரிய மகான்!.  ஆண்டவன் ஆஸ்ரமத்தினை அலங்கரித்தவர்!
பாதுகா சஹஸ்ரத்திற்கு அவர் எழுதிய வியாக்யானம் அற்புதமானது.  பிரதிதினமும் பாதுகா சஹஸ்ரம் அனுசந்திப்பவர். 
 
இவர் அமுதன் சந்நிதியில் ஒரு வெள்ளி
தோளுக்கினியான் நம்பெருமாளுக்கு இருப்பதைப் போன்று செய்து சமர்ப்பித்தார்.  அத்தோடு கூட நம்பெருமாள் போன்றே அமுதனுக்கு நடையழகுக் காண ஆவலுற்றார்.  ஸ்ரீரங்கத்திலிருந்து வடபத்ரன் என்னும் ஸ்ரீமான்தாங்குவோர் தலைமையில் ஸ்ரீமான்தாங்குவோர்கள் அமுதன் ஸந்நிதி எழுந்தருளி மூன்று நாட்கள் உற்சவம் கொண்டாடி அவரவர்களுக்கு சன்மானமும் கொடுத்தாயிற்று. 
 
ஸ்ரீமத் தேரெழுந்தூர் ஆண்டவன் ஸ்வாமிக்கு மட்டும் ஒரு குறை! அரங்கன் போன்று நடையழகு அமையவில்லையே என்று!  வடபத்ரன் ஸ்வாமியிடம் இந்த ஆதங்கத்தினைச் சொல்லியும் விட்டார்!  அதற்கு வடபத்ரன் ஸ்வாமி,
‘இதை முன்னமேயே சொல்லியிருந்தால் நாங்கள் வந்தேயிருக்க மாட்டாமே!  ஸ்ரீரங்கத்தில் நாங்களா இந்த நடையழகுக்குக் காரணம் – நம்பெருமாளுக்கே உரித்தான பாதுகையன்றோ!” என்று பதில் கூறினாராம்.  இதைக் கேட்டவுடன் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் அழுது விட்டராம் – இவ்வளவு நாள் பாதுகா சஹஸ்ரம் படித்த எனக்கு இது புரியாமற் போய் விட்டதே!  என்று வருத்தப்பட்டு அழுதாராம்!
 

நம்பெருமாளுக்கே உரிய ஏற்றம் பலவுண்டு.  அதில் பிரதானமாயிருப்பது பாதுகைளே!. 
 
இந்த பாதுகையினை பகவான் அணிந்திருக்கும் போது தம் பக்தர்களை ரக்ஷணம் பண்ணுகின்றானாம்.  பக்த ரக்ஷணம் சாத்தியமாவது பாதுகையினால்தாம்.  அசுரர்களை சம்ஹாரம் செய்யும் போதும், துஷ்டர்களை அழிக்கும் போதும் அதாவது துஷ்ட நிக்ரஹத்தின் போது, கருடனின் மீதேறி பறக்கின்றாராம் நம்பெருமாள்.  அப்போதெல்லாம் நம்பெருமாள் விட்டுச் சென்ற இந்த பாதுகாதேவியினை ஐராவதம் என்கின்ற யானையின் அழகிய வெண்கொற்றக் கொடையுடன் சாமரங்கள் வீசி தேவர்கள் பூஜிக்கின்றனராம். 
 
எதனால்..?
 
நம்பெருமாளையும்,  அவர் இருப்பிடத்தையும் யாரால் அறிய முடியும்? எவராலும் அடைய முடியாத, அறிய இயலாத நம்பெருமாளை எல்லோருக்கும் இனியனாய், ஒப்புயர்வற்ற, எல்லையற்ற பெரும்நிதியை, தேவர்களும், நாமும் தொழும் வண்ணம் நம்மிடையேயும், ப்ரம்மலோகத்திலிருந்து அயோத்திக்கும், அயோத்தியிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கும்,  ஸ்ரீரங்கத்தினை விட்டு எங்கும் அகலாதபடி, நம்மிடையே சேர்த்து வைத்தது பாதுகைகள்தானே!
 
இந்த பாதுகைகளில் எழுந்தருளியுள்ள நம்பெருமாளை ஸேவிக்கின்றவர்களுடைய பா வம் ஒழிந்து,  து க்கம்  அகலுகின்றது.  தன் சஞ்சாரத்தினால் வணங்குபவர்களுடைய தீவினை முனைகளை துகைத்து அழித்து, பரமபதத்தினில் நமக்கு கை ங்கர்ய பிராப்தியினை அளிக்கின்றாள்.
 
தேசிகர் பாதுகையிடுத்து வேண்டுகின்றார்.  ”ஹே! பாதுகையே!  இந்த ஆத்மா சரீரத்தினை விடுத்து கிளம்பும் சமயம் இந்திரியங்களெல்லாம் செயலற்று விவேகம் அழிந்துவிடும்!  அந்த சமயம் கர்பவாஸ க்லேசம் நேராதபடி அதைப் போக்கவல்ல புண்டரீகாக்ஷனை என்னருகில் கொண்டு வந்து நிறுத்தி, நீதான் என்னைக் கடாக்ஷித்து அருள வேண்டும்! ” என்று அப்போதைக்கு இப்போதே சொல்லி பிரார்த்திக்கின்றார். (ஸஞ்சாரபத்ததி – ஸ்லோகம்:310)
 
பாதுகையே! ஸ்ரீரங்கநாதனை விட்டு க்ஷண நேரம் கூட பிரியாத நீயே எனக்குக் கதி!  எல்லா நலன்களையும் நீ எனக்கு அருள வேண்டும்! (ஸஞ்சாரபத்ததி – ஸ்லோகம் 311)

December 27, 2008

Pesum Arangam-12

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 11:46 pm
Chapter-12
26.12.2008
 
நம்பெருமாளின் திருமேனி விக்ரஹ திருமேனியைச் சார்ந்ததன்று!  அந்த திருமேனி உன்னத புனித ஜீவிதம்!
 
அதற்கென்று ஒரு தனி மணம் உண்டு!
தனி குணம் உண்டு!   தனி தன்மையுண்டு!
 
அனைவரோடும் கலந்து பேசி, உறவாட, கரை சேர்த்திட,  அவன் அரங்கத்துனுள் எழுந்தருளியிருக்கின்றான்!

அவனுள் நாம் ஆழ்ந்தால் நம்முள் அவன் புகுவான்!
உணர்ததுவான்…!  பேசுவான்….!
நாம் அவனை கல் என்றோ,  விக்ரஹம் என்றோ நினைத்தால் அவன் கல்தான்! உலோகக் கலவைதான்!
 
யத் பாவோ – தத் பவதி…!  என்ன நினைக்கின்றோமோ
அது போல்தான் அவன்..!
 
நாம், அவன் திருவடிகளில்,   ”ரங்கா!  உன் திருவடிகளை விட்டால் எனக்கு வேறு கதியில்லை!
அநந்ய கதி:!”  என்று பற்றுவோமாயின் உவகையோடு கைக்கொடுத்து காத்திடுவான் அந்த காருண்யன்! 
நமக்கு என்னத் தேவையோ அதனை கேட்கமாலேயே கொடுத்துக் காத்திடுவான்,  அந்த கருணா சாகரம்!.
 

அவன் உடுத்திக் களைந்த வஸ்திரத்தின் ஈரவாடைத் தீர்த்தத்தினைப் பருகி இவர்தான் நம்பெருமாள் என்று அறிவித்தானே, ஏதும் வேதம் அறியாத, சாஸ்திரம் அறியாத அந்த எளிய ஈரங்கொள்ளி!  எப்படி அவனுக்குச் சாத்தியாமாயிற்று.  அவனது கைங்கர்ய பலத்தினால் அன்றோ ..?  அந்த கைங்கர்யத்தினை ஒரு ருசியோடு, ஈடுபாட்டோடு செய்ததாலன்றோ சாத்தியமாயிற்று?
 
பிள்ளைலோகாச்சாரியார் ஜ்யோதிஷ்குடியில் ஒரு குகையினில் அமர்ந்து ஏதோ ஒரு கார்யம்
செய்து கொண்டிருக்கின்றார்.  அந்நேரம் பார்த்து திருமலையாழ்வாரின் தாயார் அங்கு வந்துள்ளாள்.
அவளைப் பார்த்து நம்பெருமாளைக் கவனியாமலே, ”நம்பெருமாளுக்கு வியர்க்கும்!  விசிறி விடு!” என்று
பணிக்கின்றார்.  அந்த அம்மையார் ஒருவித ஆச்சர்யத்தோடு நம்பெருமாளை நெருங்குகையில்
நம்பெருமாளின் முகத்தில் பனித்துளிகாய் வியர்வை முத்துக்கள்!  ஈன்ற தாய்க்குத்தான் குட்டியின்
அசைவுகள் அத்துபடி!  இவருக்கு இது எப்படி இது சாத்தியமாயிற்று!  தாய் பாசத்தினை ஒக்கும் பரிவோடு
அந்த பரிமளனைப் பராமரித்ததால்!  அன்பு செலுத்தியதால்!  அவருக்குத் தாயைப் போன்ற குணம்!
சேயைப் போன்ற குணத்தானாக இவன் மாறினான்!
 
அத்யயன உற்சவம் வருகின்றது.  பகல் பத்து இராப்பத்து ஆகிய இருபது நாட்கள் முழுதும் கோலாகலம்தான்!
வைர வைடூர்யங்கள் விலை மதிப்பிடமுடியாத பல ஆபரணங்களைச் சாற்றிக் கொண்டு சர்வாபரணாய் அந்த
சரண்யன் காட்சி தருவான்! இது ஒரு அழகு!  நம்மாழ்வார் மோட்சத்தன்று தாம் சாற்றியிருக்கும் திருமாலையினைக்
கூட நம்மாழ்வாருக்கு ஈந்து ஒரு ஒற்றை சரமாலையுடன் வெறும் கௌஸ்துபம் மட்டும் அணிந்து, ஆழ்வாருக்கும்
மோட்சம் தந்து,  திருமாமணி மண்டபத்தினை விட்டு, 20 நாட்கள் அருளிச்செயல் கொண்டாட்டத்தில் ஆழ்ந்து,
அது கழிந்தபின், இதனையெல்லாம் இழந்து, ஆஸ்தானம் திரும்பும் போது அவனது வாட்டம் அவனது திருமுகத்தில் பிரதிபலிக்கும்.  அரங்கனும் அகன்றபின்பு, அனைவரும் சென்ற பின்பு, அந்த திருமாமணி மண்டபத்தில் நாம் சற்று
நேரம் நிற்போமாயின் அங்குள்ள ஒவ்வொரு தூணும் அழும்..!  
 
அரங்கனுக்கே உரித்தான இந்த மணம், குணம் முதலானவைகளை நம் பூர்வாச்சார்யர்கள் அனுபவித்து அதற்கேற்றாற்போல் செயலாற்றியிருக்கின்றனர். 
 
ஸ்வாமி தேசிகர் பாதுகா ஸஹஸ்ரத்தில் அரங்கனைப் பற்றி கூறும் போது எத்தனை அனுபவித்தாலும் அவன் ஒரு புதியவனாகவேயிருக்கின்றான் என்கிறார்.
ஆம்!  நம் அனுபவத்திற்கெல்லாம் எட்டாத  கடல் அவன்.!
 
எந்த வித ஆபரணங்களும் அணியாத போதும், ஆபரணங்கள் அணிந்ததவனைப் போன்று காட்சியருளுகின்றான் என்று சிலாகிக்கின்றார்.
 
 255. நிர்விச்யமாநம் அபி நூதந ஸந்நிவேசம்
         கைவல்ய கல்பித விபூஷண காயகாந்திம்
         காலேஷு நிர்விசஸி ரங்கயுவாநம் ஏகா
         ச்ருங்கார நித்ய ரஸிகம் மணிபாதரஷே

 
பொருள்-
 
இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! எத்தனை அனுபவித்தாலும் புதியவனாகவே  ஸ்ரீரங்கநாதன் உள்ளான். அத்தனை அழகான திவ்யமான திருமேனி கொண்டவனாக உள்ளான். எந்தவித ஆபரணங்களும் அணியாமல் உள்ளபோதும் ஆபரணங்கள் அணிந்தவன் போலே தோன்றுகிறான். இவ்விதமாக அந்தந்த  காலகட்டங்களில் நீ அவனுடனே இருந்து கொண்டு அவனைத் தனியாக அனுபவித்தபடி உள்ளாய்!

December 25, 2008

Pesum Arangam-11

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 12:21 pm
Chapter-11
25.12.2008
 
ஸ்ரீரங்கத்தில் ‘விஸ்வரூபம்’ என்றழைக்கப்படும் காலை முதல் நேர பூஜை மகத்தானது.  இது ஸ்ரீரங்கத்திற்கே
உரித்தான ஒரு தனி வழிப்பாட்டு முறையாகும். 
 
‘விஸ்வம்’ என்றால் ‘பெரிய’ என்றும் ஒரு பொருள் உண்டு.
‘ரூபம்’  என்றால் உருவம்.
 
இங்கு உறையும் பெருமாளுக்கே பெரிய பெருமாள் என்றுதான் திருநாமம்.  பெரியபெருமாள் காலை உறங்கியெழும் இந்த வேளைக்கு விஸ்வரூபம் என்று பெயர் வைத்தது சரியே!
 
வேறு ஏதாவது காரணம் உண்டோ?  உண்டு..!
 
108 திவ்யதேசங்களில் உள்ள அனைத்து பெருமாளும் முதல் நாள் இரவு இங்கு வந்து அரங்கனிடத்து ஒடுங்கி,
ஒன்றாகி
அடுத்த நாள் காலை அவரவர் தம் யதாஸ்தானத்திற்கு எழுந்தருளிவிடுவார்கள்.  அனைத்து திவ்யதேச எம்பெருமான்களும் ஒன்றாகி சேவை சாதிக்கும் இந்த நேரம் மிகப்பெரிய மகத்துவம் பொருந்திய சேவைதானே?

 

அதனால்தான் இந்த தரிசனம் ‘விஸ்வரூப தரிசனம்’!

 

தேசிகர் தமது பாதுகாஸஹஸ்ரம் வைதாளிகப் பத்ததியில் (242 சுலோகம்) இந்த திருப்பள்ளியெழுச்சியின் போது
சிவன், நான்முகன், ஸநகர் ஆகியோர் அரங்கனது வாயிலில் இந்த விஸ்வரூப ரங்கனைக் காண்பதற்காக, தரிசிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டு, உன் திருவடிகளினால் சுகம் பெற்று கொண்டிருக்கும், சக்ரவர்த்தினியாய் விளங்கும் பாதுகையை நீ சாற்றிக் கொண்டு எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கின்றார்.
 
இதனால்தானே என்னவோ? ஆகம ரீதியாகவும்,  காவேரியினின்று யானையின் மேல் புனித நீர் கொண்டு வந்தவுடன், அந்த நீர் கொண்டு அர்ச்சகர்களால் முதலில் பாதுகைக்குத் திருமஞ்சனம் செய்விக்கப் படுகின்றது.  இதற்கு ‘திருவடி விளக்குதல்” என்று பெயர்.  ஸ்வாமி தேசிகர் சொன்னது போல் அரங்கன் அதனைச் சாற்றிக் கொள்ளும் முன் முதலில் தன்னை கங்கையிற் புனிதமான காவிரி நன்னீரால் ஸ்நானம் பண்ணிக் கொள்கின்றது.
 
அரங்கன் கண் விழித்தலுக்கு முன் வீணை இசைக்கப்படுகின்றது.  காவிரி நன்னீர் வந்தவுடன் பசுமாடு பின்பக்கமாய் திரும்பி நிற்க வைக்கபபடுகின்றது.  யானை அந்த பரந்தாமனை நோக்கிய வண்ணம் தயாராய் நிற்கின்றது.  பசுமாட்டின் வால்பக்கம் மஹாலக்ஷ்மி வாஸம் செய்கின்றாள்.  யானையின் முகத்தில் வாஸம் செய்கின்றாள்.  பகவான் மஹாலக்ஷ்மியினை
கடாக்ஷித்தவாறு திருக்கண்ணை மெதுவே திறக்கின்றான்.
 
இந்த அழகினை ரசிக்கின்றார் ஸ்வாமி தேசிகர்.
 
பத்மா ஜுஷ்டம் பஜது சரணம் பாதுகா லப்தவாரா
ப்ரத்யாஸந்தா தவ பரிஜநா ப்ராதரஸ்தாந யோக்ய
அர்த்த உந்மேஷாத் அதிக சுபகாம் அர்த்த நித்ராநுஷங்காம்
நாபீ பத்மே தவ நயநயோ நாத பஸ்யந்து ஸோபாம் ||
 
பொருள்:
 
  ஸ்ரீரங்கநாதா!  காலைவேளையில் உனக்கு தொண்டு புரியும் கைங்கர்யபரர்கள் வந்து விட்டனர்.  உனது தாமரைப் போன்ற கண்களில் உள்ள உறக்கம் பாதி கலைந்தும், கலையாமலும் உள்ளதால், உனது இமை பாதி மூடியும், திறந்தும் உள்ளது.   இந்த
அழகைக் கண்டு நாபி கமலத்தில் உள்ள தாமரை மலர்
உனது கண்கள் போலவே மலர்ந்தும் மலராமலும் உள்ளது.  இந்த அழகை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.
உனது திருவடியினை வணங்கி வருடிய மஹாலக்ஷ்மியின் ஸேவையினை இனிப் பகலில் பாதுகை ஏற்றுக் கொள்ள வேண்டும்.  (ஆகவே துயில் எழுவாயாக!)

December 24, 2008

Pesum Arangam-10

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 11:31 pm
Chapter-10
22.12.2008
 
ஸ்ரீரங்கநாதன் ஸ்ரீரங்கம் வருவதற்கு முன்பும் இரு நதிகளுக்கிடையேதான் பள்ளிக் கொண்டிருந்தான்.
 
அயோத்தியில் தமஸா, ஸரயு அகிய இரு புண்ய நதிக்கிடையேதான் பள்ளிக் கொண்டிருந்தான்!
 
அரங்கன்தான் இராமனாய் அவதரித்தான். 
 
பாதுகையோடு இருக்கும் ஒரே பெருமாள் நம்பெருமாள்! 
 
அதனால்தானோ என்னவோ இராமனது பாதுகையும் மிகுந்த மேன்மையடைந்தது.  நம்பெருமாளின் பாதுகைக் காப்பாக நிற்க, ஸ்ரீராம பாதுகை அரசாண்டது.
 
இராம பாதுகா பட்டாபிஷேகத்தன்று தமஸா, ஸரயு நதியின் புனித நீர் கொண்டு வசிஷ்டரால் பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டது.
 
எப்போது பட்டாபிஷேகம் செய்யப்பட்டதோ அந்த நேரத்திலிருந்து விரோதிகள் ஒழிந்தனர்.  அவர்களால் ஏற்பட்ட துன்பமும் அறவே ஒழிந்தது.  நாட்டைப் பற்றிய கவலையும் இராமனை விட்டு நீங்கியது.
 
அயோத்தி மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.  பதினான்கு வருடங்கள் பாதுகையினை அவர்கள் துதித்து போற்றி வந்த காரணத்தினால் மிக உயர்ந்த உன்னத லோகமான, ஸநந்தனர் போன்ற தபஸ்விகள் கூட அடைய இயலாத ஸாந்தாநிக லோகம் என்றவொரு பரமபதத்தினையடைந்தனராம்.
 
சீதையிடம் அனுமன் தூது சென்றது போல், பாதுகையிடமும் பரதனிடமும் இராமனின் சார்பில் அனுமன் வந்து வணங்கி இராமனைக் குறித்து விண்ணப்பித்திருக்கின்றான்.
 
இராமன் இராவண வதம் முடிந்து, கானக வாஸம் செய்து அயோத்திக்குத் திரும்புகின்றான்.  பரதன் பாதுகையினை பட்டத்து யானை மேல் வைத்து இராமனிடத்து சமர்ப்பிக்கின்றான்.  அப்போது சீதையும் அவளது தோழியான தாரையும் பாதுகையை வணங்கி போற்றினார்களாம். 
 
பாதுகை, சீதை இருவருமே இராமனைச் சேர்ந்தவர்கள் என்றாலும்,  இராமனுடைய சிம்ஹாசனத்தில் பாதுகை அரசாண்டமையினால்,  சீதை தன்னை விட பாதுகை உயர்ந்தது என்று உணர்ந்திருந்தாள்.
 
இராமனும் பாதுகையையே அரசாள விட்டிருப்பான்.  அவ்விதம் செய்தால் பரதன் உயிர் துறப்பது நிச்சயம் என்று அறிந்திருந்தமையினால்தான் தாம் பட்டம் சூட்டிக் கொண்டான். 
 
அவனை தாயைப் போன்ற பரிவோடு பாதுகாதேவி காக்கத் தொடங்கினாள்.  சக்ரவர்த்தினியாய் அரசாண்ட பாதுகையை இராமனாய் அவதாரமெடுத்த ஸ்ரீரங்கநாதன் மிகவும் அன்புடனும், புத்திகூர்மையுடனும், அனைத்து தெய்வங்களும் வணங்கக்கூடிய தம் திருவடிகளில்; அணிந்து கொண்டான்.
 
—————————————
 
இது ஒரு புராணக் கதை!
 
நம்பெருமாள் விஸ்ராந்தியாய் சற்றேயிருக்க விரும்பினான்.  தம் சங்கு, சக்ரம், கதை முதலான பஞ்சாயுதங்களையும் ஆதிசேஷனின் படுக்கை மேல் வைத்தான்.  பாதுகையை ஆதிசேஷனின் கீழ் தரையில் கழற்றி வைத்து சற்றே உலாவச் சென்றனாம். 
 
பஞ்சாயுதங்களும் பாதுகையைத் தரையில் விட்டமையால் ஏளனம் செய்தனவாம்.  பாதுகையின் முகம் வாட்டமடைந்தது.  பெருமாள் திரும்பவந்து பாதுகையின் வாட்டமான முகம் கண்டு, நடந்ததையறிந்து கொண்டார். 
 
ஹே! பாதுகா! இனி உனக்கு மட்டும்தான் ஆசனம்!  இந்த பஞ்சாயுதங்கள் எதற்கும் இனி ஆசனம் கிடையாது! 
 
இவர்கள் அனைவரும் இனி ரிஷிகளாகவும் பின்னர் ஆழ்வார்களாகவும் பிறந்து உன் பெருமையெண்ணி போற்றி தம் தலைமீது உன்னை ஏற்று மகிழ்வர்!  நீ கவலைக் கொள்ளாதே! என்று வரம் தந்தார். 
 
அன்று முதல் தாம் அணிந்த பாதுகையின் கீழ் பத்மாஸனம் அமையப் பெற்றது.
 
ஐந்து ஆயுதங்களும், ஓளபகாயணர்,  சாண்டில்யர்,  பாரத்வாஜர்,  கௌசிகர், மௌஞ்சாயனர் என்று ஐந்து ரிஷிகளாக அவதரித்து ஐந்து ராத்ரிகளில் ரங்கநாதனை ஆராதிக்கும் முறையினை பகவானாலேயே உபதேசிக்கப் பெற்று ‘பாஞ்சராத்ரம்” என்னும் ஆகம முறையினைத் தோற்றுவித்தனர்.
 
பின்னர்  இந்த ஐந்து ஆயுதங்களும் ஆழ்வார்களாகவும் அவதரிக்கப் பெற்று பெருமாளின் புகழைப் போற்றிப் பரவினர். 
 
பாதுகை எந்த அவதாரமும் எடுக்கவில்லை!
 
இராமாவதாரம் எடுத்தப்போது இராமனுக்கு முன் பட்டத்து இருக்கையில் அமரும் பேறு பெற்றது.  அப்போது ஆசனமே கிடைக்காத பாதுகை இப்போது அரசாண்டது. 
இது பகவான் பாதுகையின் மேல் கொண்ட பரிவு! அன்பு! தயை! கருணை! 
 
இந்த பாதுகையினைப் போற்றி நாமும் பெரும்பேறு பெறுவோம்!

December 22, 2008

Pesum Arangam-09

Filed under: PESUM ARANGAM — Tags: , — srirangapankajam @ 9:32 am
Chapter-09
21.12.2008
 
 
அமர்க்களமாய் மங்களகரமாய் திகழ்ந்த அயோத்திக்கு அசாதாரண நிலைமையேற்பட்டது.
 
தந்தையின் வாக்கைக் காப்பாற்ற வேண்டும்.  அசுரர்களை அழிக்க வேண்டும்.  கானகம் ஏகினான் இராமன்
இது அவனது விரதம்.
 
இராஜ்ய பரிபாலனம் செய்யலாம்.  அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கலாம்.  எதுவும் அனுபவிக்கவில்லை – அனுபவிக்கப் போவதில்லை –
இது பரதனின் விரதம்.
 
சதா சர்வகாலமும் தம் சிரஸ்ஸில் ஏந்தி காப்பாற்றிய பாதுகையினை விட்டு பிரிந்த இராமனை,  எப்போதும்
விழித்திருந்து காக்க வேண்டும் – இது இலக்குவனின் விரதம்.
 
இராமனின் திருவடிகளை விட்டு என்றுமே அகலாத பாதுகை இராமனை பிரிந்துள்ள பரதனையும்,  நாட்டையும்
காக்க வேண்டும் – இது பாதுகையின் விரதம்.
 
இதில் எது மேம்பட்டதுபாதுகையின் விரதம்தான் என்கிறார் ஸ்வாமி தேசிகர்!
 
தசரதன் மறைவிற்கு தாம்தானே காரணம் என்றெண்ணி வெட்கினான் பரதன்.  பட்டமேற்காததற்கு இதுவும் ஒரு
காரணம்.  இராமனை மட்டுமே இலக்குவன் காத்தான்.  பாதுகாதேவியோ இராமனைப் பிரிந்த பரதனையும் தேற்றி, இந்த பாரதத்தையும் காப்பாற்றினாள்.  அதுவும் இராமனை விட்டுப் பிரிந்த துக்கம் ஒரு புறம் தீராத வேதனையாய்
வாட்டினாலும், தாம் பூண்ட விரதத்தில் வைராக்யமாய் தனி ஒருவளாய் இருந்து அனைத்தையும் காப்பாற்றினாள்.
முழுமையான காத்தல் இதுவே! (அம்ப ஜகத் சமஸ்தம் ஜாகர்த்தி..) என்கிறார்.
 
பாதுகை ஆண்ட காலம் முழுதும் போர் இல்லை.  பகைமை மறைந்து தோழமையுணர்வு எல்லா ராஜ்யத்திலும் இருந்ததால் அயோத்தியின் கோட்டைக் கதவுகள் திறந்தே கிடந்தனவாம்.  யானைப்படை குதிரைப்படை ஆகியவற்றில் உள்ள யானைகள் குதிரைகள் எவையும் கட்டப்படாமல் வீதியில் சுதந்திரமாக திரிந்தனவாம்!
 
இராமனால் ஆராதிக்கப்பட்டதால் அரங்கனுக்குப் பெருமை!  பாதுகை, ஸிம்ஹாஸனத்தில் இருந்து ஆராதிக்கப் பெற்றமையினால்,  இந்த பாரதத்திற்குப் பெருமை!  பாதுகா ராஜ்யத்திற்கு பின் பட்டமேற்று அரசாண்ட மனு குலத்து மன்னர்களுக்குப் பெருமை  – பாதுகை அரசாண்ட ஆசனத்தில் அவர்களும் அமர்ந்து ஆண்டமையினால்!
 
பிரதிபலன் ஏதும் எதிர்பாராது பாதுகாதேவியினை தியானிப்பவர்களுக்கு, அவர்கள் எதிர்பாராத மிகவும் உயர்ந்த பலன்களை இவள் அருளுவாள்!
இவளை முதலில் ஆராதித்தவன் பரதன்!  பரதனின் மனோவருத்தத்தினை நீக்கினாள்!  அவன் ஏற்க மறுத்தும் தாம் முன்னின்று பரதனை பின்நிறுத்தி இந்த ராஜ்யபரிபாலனம் நடத்தினாள்.
 

144      போகாந் அநந்ய மநஸாம் மணிபாதுகே த்வம்

புஷ்ணாஸி ஹந்த பஜதாம் அநுஷங்கஸித்தாந்

தேநைவ நூநம் அபவத் பரதஸ்ய ஸாதோ:

அப்ரார்த்திதம் தத் இஹ ராஜ்யம் அவர்ஜநீயம்

 

பொருள் – இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! உன்னை விட்டு வேறு எங்கும் தங்கள் மனதைத் திருப்பாமல், உன்னை மட்டுமே த்யானிப்பவர்களுக்கு நீ செய்வது – அவர்கள் கேட்காமலேயே பல நன்மைகளை ஏற்படுத்துகிறாய். என்ன வியப்பு இது! இதனால்தான் மிகவும் உத்தமனான பரதனுக்கு அவன் கேட்காமலேயே, உலகைக் காப்பாற்றும் ராஜ்யப் பொறுப்பு வந்து சேர்ந்தது அல்லவா?

விளக்கம் – எந்தப் பலனையும் எதிர்பாராமல் பாதுகையைத் த்யானித்தபடி உள்ளவர்கள் மிகவும் உயர்ந்த பலனை, அவர்கள் கேட்காமலேயே அடைந்துவிடுகின்றனர். இதற்கு ஏதேனும் சான்று உண்டா? உண்டு, பரதன் விஷயத்திலேயே இது நடந்தது என்றார்.

இந்த தாய்மையினைத் தியானிப்பதால் நமக்கும் நன்மை – மேன்மை – பெருமை – வாய்மை ஆகியன வாய்க்கும்.
 

————–
 
இது இப்போது நடந்த ஒரு சம்பவம்.
 
அடியேன் சில வாரங்களுக்கு முன் எதிர்பாராத பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டேன்.  உண்மைக்கு புறம்பான பல குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் ஒரு சில பத்திரிக்கைகள் மூலம் பரப்பப்பட்டது.  இதனால் பல தொடர்ச்சியான இன்னல்கள்.  அதிகமான மன உளச்சலும் ஏற்பட்டது.  என் பணியில் தொய்வு ஏற்பட்டது. 
 
எனது ஆத்ம நண்பன் திரு.ஸ்ரீதரன் அவர்கள் என் நிலைமை கண்டு மிகவே வருந்தினார்.  பாதுகா ஸஹஸ்ரத்திலிருந்து தினமும் ஒரு சுலோகமாவது ஒரு டைரியில் எழுதி வாருங்கள் என்று கூறினார்.
இல்லை..! ஸ்ரீதரன் மூலமாய் அந்த ஸ்ரீரங்கனே கூறினான்!   ஒரு டைரி ஒன்றை எடுத்து முதல் இரண்டு நாள் ஒரு ஐந்து சுலோகங்கள்தான் எழுதியிருப்பேன்!  மனோதைர்யம் மிகுந்தது.  எதையும் எதிர்கொள்ளும் தீரம் வந்தது.
தொய்வு மறைந்தது. 
 
இது அனைத்தையும் விட எதிர்பாராத பலன் – பாதுகா ஸஹஸ்ரத்திலிருந்து தினமும் சில பகுதிகளை படிக்கின்றேன்.  ஆழ்கின்றேன்.  உங்களோடு அன்றாடம் பகிர்ந்து கொள்கிறேன்!.

December 21, 2008

Pesum Arangam-08

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 9:07 am
Chapter-08
19.12.2008
 
 
சீதை உயர்ந்தவளா..? அல்லது பாதுகாதேவி உயர்ந்தவளா..?

ஸ்வாமி தேசிகர்,  ”சீதையை காட்டிலும் மேன்மை பாதுகாதேவிக்கே!” என்கிறார்.
 

தன்னுடன் கானகம் வரவேண்டாம் என்றுரைத்த இராமனின் சொல்லை மறுத்து கானகம் ஏகினாள் சீதை. 
 
பரதனுடன் பாதுகையினை அயோத்திக்கு அனுப்பினார் இராமன்.  மறுப்பேதும் இல்லாமல் அயோத்தி திரும்பினாள் பாதுகாதேவி!  
 
ஆண்புலியாகிய இராமன் இராவண சம்ஹாரம் செய்ய கானகம் ஏகினான்!
 
பெண்புலியாகிய பாதுகை,  பரதன் என்ற குட்டியுடன் அன்பு மிக கொண்டு, அயோத்தி திரும்பியது. 
 
பாதுகாதேவி ராஜ்ய பாரம் ஏற்க வந்ததைக் கண்ட, இராமனை விட்டுப் பிரிந்ததால் அயோத்தி மக்களின் வருந்தி கறுத்து இறுக்கமுடன் காணப்பட்ட முகங்கள் தாமரைப் போல மலர்ந்தனவாம்!
 
இராமன் ஏறுவதற்கு முன் பாதுகாதேவி பட்டத்து யானையின் மேல் அமா;ந்து ஒரு பேரரசி போல அயோத்தியினை வலம் வந்தாள்.
 
பாதுகையின் ராஜ்ய பரிபாலனத்தில் விவசாயம் இரு மடங்கு விளச்சலைத் தந்தது.  ஐஸ்வர்ய லட்சுமி அனைவரது இல்லத்திலும் குடிகொண்டாள்.  சத்திய ஆட்சியினால் சாதாரண அடித்தட்டு மக்கள் முதல் உயர்தட்டு மக்கள் வரை சகல சௌபாக்கியத்துடன் மிளிர்ந்தனர்.
 
சீதைக்காவது இராமனைப் பிரிந்த துக்கம்தான் எப்போதும்!  ஆனால் பாதுகா தேவிக்கோ இராமனை இழந்த துக்கம் ஒரு புறம்!  ராஜ்ய பாரம் மற்றொரு புறம்! 
 
இராமன் தூரஸ்தன் ஆனாலும்,   இராமனது பாதுகை மக்களோடு கிட்டி நின்று நல்லாட்சி நடத்தியது.  ‘அவன் தூரஸ்தன் ஆனாலும் இது கிட்டி நின்று உதவும்” என்று பிள்ளைலோகாச்சாரியார் திருநாமத்தின் மகிமையைப் பற்றி தமது முமுக்ஷூபடியில் கூறுவார்.

அது போன்று பாதுகை செயல்பட்டது

December 19, 2008

Pesum Arangam-07

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 6:31 am
Chapter-07
17.12.2008
 
பாதுகையை ஆராதனம் செய்பவர்கள் வீண் பழிக்கு ஆளாக மாட்டார்கள்.  
 
இராமனைப் பிரிந்த தசரதன் இறந்தான்.
பரதன் துடித்தான்.  பட்டமேற்றால் வீண் பழி சுமப்பது நிச்சயம்.  ஜானகியும் வனவாசம் சென்றதால் அயோத்தி
மக்கள் ஆறுதலுக்குக் கூட ஆளின்றி தவித்தனர். 
 
பாதுகை பட்டமேற்றது –  பதட்டம் தணிந்தது. 
 
பெரும் பழியிலிருந்து பரதன் தப்பினான். 
 
பாதுகையைத் தியானித்ததால்,  கொண்டாடியதால்,  மக்களிடம் பக்தி மிகுந்தது.  அவர்களது மனப்பாரம் குறைந்தது.  குற்றம் என்பது எள்ளளவும் இல்லாது
பாதுகா ராஜ்யம் நடந்தது. 
 
இராமனைக் காட்டிலும் இராமனது பாதுகை
உயர்ந்தது.  இல்லாவிடின்,  இராமனைத் தவிர மற்றொன்றை நாடாத பரதன், பாதுகையினை ஏற்பானோ?
 
சாக்ஷாத் ஸ்ரீரங்கநாதனே ஸ்ரீராமனாக அவதரித்தான்.  தன்னைத் தாங்கப் பெற்ற பாதுகையை பரதனுக்கு அளித்தான்.

அதனை பரதன் எப்போதும் உபாஸிக்கும் படி செய்தான். 
 
இந்த பாதுகைகள், இல்லாதனவற்றை
அளிக்கவும்(யோக), உள்ளதை காப்பாற்றவும் (க்ஷேம) வல்லது. 
 
பரதனை களங்கமில்லாமல் காப்பாற்றியது. 
 

பாதுகையினை இராமன் கொடுத்ததற்கு மற்றொரு காரணமும் உண்டு.  பாதுகாதேவிக்குக் காருண்யம் அதிகம்.

தம்மை ஏற்பவரை, வெள்ளத்தில் தத்தளிப்பவரை கைக் கொடுத்து காப்பாற்றுபவன் போல இந்த சம்ஸார ஸாகரத்தில் தத்தளிக்கும் நம்மை அது தான் சற்றே தாழ்ந்து, நம்மை உயர்த்ததான் அதற்குத் தெரியும். 
 
எப்படிப்பட்ட குற்றத்தையும் மன்னித்து விடுவாள்.
இவள் தம் கூடயிருப்பின் இராவணனை அழிக்க முடியாது என்பதனை அறிந்தான் இராமன்.  தாம் அவதரித்த தர்மத்தினை நிலைநாட்டிட தற்காலிகமாக பரதனுடன் அனுப்பினான்.  பாதுகையைப் பிரிந்த அந்த பரந்தாமன், பரலோகம் அனுப்பினான் இராவணனை.
 

பரதனிடம் அளிப்பதற்கு முன் இராமன் தம் பாதுகையின் மேல் சற்று நேரம் ஏறி நின்றராம்.  எதற்குத் தெரியுமா?
பாதுகையிடமிருந்து அதற்கு இயற்கையாக உண்டான சக்தியினை தாம் ஏற்றிக் கொள்ளவாம்!
(சமர்ப்பண பத்ததி-116).

 

116       நியதம் அதிருரோஹ த்வாம் அநாதேய சக்திம்
நிஜசரண ஸரோஜ சக்திம் ஆதாது காம:
ஸ கதம் இதரதா த்வாம் ந்யஸ்ய ராம: விஜஹ்ரே
த்ருஷத் உபசித பூமௌ தண்டகாரண்ய பாகே


பொருள் – பாதுகையே! இராமன் உன்னைப் பரதனிடம் அளிப்பதற்கு முன்பு உன் மீது எழுந்தருளி நின்றான். ஏன் தெரியுமா? உன்னிடம் இயற்கையாகவே உள்ள சக்தியைத் தனது தாமரை போன்ற திருவடிகளுக்கு ஏற்றுவதற்காகவே ஆகும். இவ்விதம் அவன் செய்யவில்லை என்றால் உன்னைப் பரதனிடம் அளித்த பின்னர், கற்கள் போன்று கடுமையான பாதைகள் நிறைந்து தண்டகாரண்யத்தில் அவன் எவ்விதம் நடந்திருக்க முடியும்? அவன் திருவடிகள் எவ்விதம் தாங்கியிருக்கும்?
விளக்கம் – பாதுகையிடம் இயல்பாகவே சக்தி உள்ளதால்தான் இராமனால் கானகத்தில் எளிதாக நடக்க முடிந்தது. பாதுகையைப் பரதனிடம் அளிக்கவேண்டிய சூழ்நிலையில், தனது திருவடிகளுக்குப் பாதுகையிடமிருந்து சக்தியைப் பெற இராமன் எண்ணினான். அதனால்தான், அதன் மீது சற்று நேரம் எழுந்தருளிவிட்டு, பின்னர் பரதனிடம் அளித்தான்.

அன்றாடம் இந்த பாதுகையினை தம் தலையில் பெறுபவரின் நன்மைகளை விவரிக்கவும் இயலுமோ?
ஒரு முறை ஏற்றவனுக்கே எமவாதனை இல்லை என்கிறார் ஸ்வாமி தேசிகர்!.

இவள் கற்பக விருக்ஷம் –  வேண்டியதை தரும் – களங்கம் தவிர்க்கும் – கலக்கம் நீக்கும்!
——–
இது நடந்து சுமார் 13 வருடங்களிருக்கும்!. 
 
காலை 10.00 மணியிருக்கும். . .
 
நல்ல தேஜஸ்ஸூடன் ஒரு சேவார்த்தி.

அவருக்கு சடாரி சாதித்ததுதான் தாமதம்! – உடல் முழுதும் 1000 வாட் மின்சாரம் பாய்ந்தது போன்று ஒரு அதிர்ச்சி. 
நடுநடுங்கி சடாரியை எழுந்தருளச் செய்தால் போதும் என்று எழுந்தருளப் பண்ணி, அவரைப் பார்க்கின்றேன். 
 
அவரோ ஒரு புன்சிரிப்பு சிரித்து விட்டு விறுவிறுவென போய்விட்டார். 
 
 நான் சற்று என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவரை எப்படியும் சந்தித்து பேச வேண்டும் என்று அப்பிரதட்சிணமாக ஒடினேன். 
 
அவர் கீழஸ்ரீபட்டாபி ராமர் சன்னிதியில் அமர்ந்து கொண்டிருந்தார்.
என்னைப் பார்த்ததும் சிரித்தார். 
 
நான் எப்படியும் அவரைத் தேடி வருவேன் என்று தெரியும் என்றுரைத்தார்.
அவரைப் பணிந்து வணங்கி என் இல்லம் அழைத்துப் போய் உபசரித்தேன். 
 
மீண்டும் என்னுடன் கோயிலுக்கு வந்தார். 
 
அப்போது என் அனுபவத்தினைச் சொன்னேன். 
 
புரிந்து கொண்டேன் என்றார். 
 
எதனால் இப்படி ஒரு ஷாக்…? ஆவலுடன் கேட்டேன். 
 
சற்று நேர யோசித்தலுக்குப் பின் சொன்னார். 
 
அவர் பிறப்பால் வைணவன்.. 
 
ஏதோ ஒரு உந்துதலில் சில வருடங்கள் திருவண்ணாமலையில் (வேலூர்) மலை மீது யாரும் நெருங்க இயலாத ஒருவிடத்தில் தபஸ்ஸில் ஆழ்ந்திருக்கின்றார். 
 
அரங்கன் அவரது முன்தோன்றி தபஸ்ஸை பூர்த்தி செய்து அழைத்திருக்கிறான்.  (அவர் அப்போது ஜாம்பவானையும் தரிசித்ததாகக் கூறினார்.  தபஸ்ஸை முடித்தப் போது வானரங்கள் பெரிய பெரிய கொட்டாங்கச்சிகளில்
தமக்கு தூய நீரை பருகக் கொடுத்ததாகவும் கூறினார்.  அவைகள்தாம் தாம் தபஸ் செய்த காலம் முழுதும் தம்மைச் சுற்றி பாதுகாத்தன என்றும் கூறினார்)
 
வந்தவிடத்தில் என்னோடு அரங்கன் ஸ்ரீசடாரி மூலமாய் பந்தமேற்படுத்தி விட்டான்.! 
 
ஸ்வாமி தேசிகர் கூறுகின்றாரே பாதுகையின் மேல் ஏறி நின்று இராமன் அதற்கு இயற்கையாகயுள்ள
சக்தியினை ஏற்றிக் கொண்டான் என்று…!   
 
பாதுகைக்கு சக்தியினை ஏற்றவும் தெரியும்.
பிறருக்குள்ள சக்தியினை உணர்த்தவும் தெரியும்!
அன்று தபஸ்வியின் சக்தியினை எனக்கு உணர்த்தினாள்.!

December 17, 2008

Pesum Arangam-06

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 11:14 pm
Chapter-06
16.12.2008
 
பாதுகைகளை பூஜிப்பவருக்கு துக்கம் தொலையும். 
 
இராமனைப் பிரிந்த பரதன் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தான்.
வருந்தி திரும்ப அழைத்தான்.  இராமனுக்கோ வனவாசம் செய்ய வேண்டும் அதே சமயத்தில் தன் தம்பியின் துக்கத்தினையும் போக்க வேண்டும்.  விளைவு ஸ்ரீராமனின் பாதுகைகளை பரதன் அடைந்தான்.  இராமனைப் பிரிந்த துக்கத்தினை இராமனது பாதுகைகள் அருகில் இருந்து போக்கின. 
 
னிதர்களேயில்லாத அடர்ந்த வனத்தில்,  நம்மை ரக்ஷிக்கவென்றே வந்த பாதுகாதேவியும் வசிக்க விரும்பவில்லை போலும்!  துக்கித்திருந்த அயோத்தி மக்களின் துக்கம் போக்கி இப்பாரதம் முழுதும்
ஆண்டாள் 14 வருடங்கள்! 
 
 பாதுகா ராஜ்யம்! 
 
பாரதத்தின் உன்னதத்திற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்!
 
ஸ்வாமி தேசிகர் கூறுகின்றார்.  பாதுகையை தலையில் ஸ்பரிசிக்கும்போது பக்தியோடு வேண்டுங்கள்!
வேண்டியது நடக்கும் என்று! 
 
செல்வம் வேண்டுபவர் குசேலரை நினையுங்கள் என்கிறார்! 
 
வறுமை மிகுந்தோடிய குசேலன் தன் பால்ய சிநேகிதனான கிருஷ்ணனை அன்போடு சந்திக்கின்றான்.  தன்னால் இயன்ற உபசாரத்தினை
ஆத்மார்த்தமாக செய்கின்றான்.  அவனையுமறியாமல் அவனது வீட்டில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் குடி கொண்டன! லக்ஷ்மீ கடாக்ஷம் தாண்டவமாடியது. 
 
இது போன்று ஸ்ரீபாதுகையையும் அர்ப்பணிப்போடு ஏற்பவரின் வாழ்வில் ஐஸ்வர்யம் குடி கொள்ளும்.! 
 
அனைத்து ஐஸ்வர்யங்களும் கொண்டவன் அரங்கன்!  அவனது திருவடிகளில் மிளிரும் இந்த பாதுகையை பரமபக்தியுடன் ஆராதிப்பவர்களின் இல்லம் குபேரபுரியாவது திண்ணம் என்கிறார் தமது ப்ரபாவ பத்ததி 96வது சுலோகத்தில்.
 
63 விகாஹந்தே ரங்கக்ஷிதிபதி பதத்ராயிணி ஸக்ருத்
     வஹந்த: த்வாம் அந்தர் விநிஹத குசேல வ்யதிகரா:
     மது உத்தாம் ஸ்தம்பேரம் கரட நிர்யத் மதுஜரீ
     பரீவாஹ ப்ரேங்கத் ப்ரமர முகாராம் அங்கணபுவம்
 
பொருள் – ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! குசேலரை மனதில் நினைத்தபடி உன்னைத் தங்கள் தலையில் வைத்துக்கொண்டால் போதுமானது. அவர்கள் தங்கள் வீட்டிற்குத் திரும்பும்போது அங்கு கொழுப்பினால் பருத்த யானைகள் கட்டப்பட்டுள்ளதையும், அவற்றின் மத ஜலங்களில் வண்டுகள் ரீங்காரம் செய்தபடி உள்ளதைக் காண்பார்கள் (யானை வீட்டில் உள்ளது என்றால் ஐஸ்வர்யம் நிறைந்துள்ளது என்று பொருள்).
 
விளக்கம் – உன்னைத் தலைகளில் ஏற்பவர்கள் பெறுவது என்ன? க்ருஷ்ணனிடம்தான் ஏதேனும் பெற்றோமா இல்லையா என்று அறியாமல் குசேலர் இருந்தார். இப்படியாகத் தாங்கள் பெற்றது என்ன என்று அறியாதபடி அவர்களுக்கு அதிக ஐச்வர்யம் அளித்து விடுகிறாய். அவர்கள் வீடு திரும்பும் போது மதயானைகள் கட்டப்பட்டுள்ளதைக் காண்கின்றனர் (ஐச்வர்யம் வந்தது என்று பொருள்).
 
 
இந்த பாதுகை நமது சிரஸ்ஸினை தீண்டுவதால் நம்மை அரங்கனின் திருப்பாதங்களுடன் பந்தமேற்பட செய்கின்றது!

எப்படி..!? 
 
இதன் மேல் பகுதி அரங்கனது திருவடிகளையல்லவா தாங்கியபடியுள்ளது.!
ஆச்சார்யன் செய்ய வேண்டியதை பாதுகை செய்வதால் பாதுகையே நமக்கு சிறந்த ஆச்சார்யனாகவும் ஆகின்றது.
பாதுகையே பரம பாக்கியத்தினையும், அனைத்துப் பலன்களும் அளிக்கவல்ல ஆச்சார்யன்!
ஆச்சார்யன் பெரியவரா…?  அரங்கன் பெரியவரா….?
 
முன்னமேயே மதுரகவியாழ்வார் அருளியுள்ளார்,  தம்
ஆச்சார்யனான நம்மாழ்வாரைத் தவிர தேவு மற்றறியேன்..! என்று. 
 
நம்மாழ்வாரும்,  அரங்கனின் பாதுகையும்
ஒன்றுதானே! 
 
 பாதுகா ஆராதனம் பரமபத சாதனம்!

December 16, 2008

Pesum Arangam-05

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 11:29 pm
Chapter-05
15.12.2008
 
ஸ்ரீகிருஷ்ணர் யமுனாநதிக்கரையில் ஆடிப்பாடி விளையாடும் போது அவரது பாதங்கள் பட்ட மரங்கள் எல்லாம் வேதத்திற்கு சமமான அங்கீகாரத்தினைப் பெற்றனவாம்.  அவரது பாதஸ்பரிசம் பெற்றக் கிளைகள் யாவும் வேதங்களின் சாகைகள் போன்றதாகின்றன. இத்தகைய பெருமை வாய்ந்த திருவடிகள் பெருமைப் பெற்றது பாதுகையை அமையப் பெற்றதால்தான் என்கிறார் ஸ்வாமி தேசிகர்.
 
பரமபத்திலிருந்து உதித்த இந்த நம்பெருமாளின் பாதுகையினைப் பக்தியினால் வணங்கி, தம்முடைய சிரஸ்ஸில் சாதிக்கப் பெற்றவர்கள்,  யாரும் எளிதில் அடைய இயலாத நம்பெருமாளின் திருவடிகளையே அடைகின்றார்கள் என்கிறார்.
 
இந்த பாதுகை சேதனராகிய நம்மையும் பரமசேதனனாகிய அவனையும் இணைக்கும் ஒரு பாலம்.  பாவங்களை ஒழித்து பரமனிடத்து சேர்க்கும் பரம உன்னதம். 
 
நரகம், ஸ்வர்க்கம் ஆகிய இரண்டுக்கும் அப்பால் மோக்ஷசபை என்று ஒன்று உள்ளதாக இதன் மூலம் தெரிவிக்கின்றார் ஸ்வாமி தேசிகர்.

பாதுகையினை பக்தியோடு தம் தலையில் தரிப்பவர்கள் நரகத்தினையும் சொர்க்கத்தினையும் எளிதில் கடந்து தமது ஆச்சார்யர்கள் வசித்துக் கொண்டிருக்கும் மோக்ஷசபையினை அடைவார்கள் என்கிறார்.
 

மஹாத்மா என்றால் தம்மைப் பற்றிக் கவலைப்படாது பிறரரின் நலம் பேணுபவர் அல்லது பிறரரின் நலத்திற்காக அல்லது பொதுவான ஒரு நல்லகாரியத்திற்காக செயலாற்றுபவர் என்றும் கூறலாம்.  கீதையில் கண்ணன் ”மஹாத்மா துர்லபம்” என்று தெளிவாக கூறுகின்றார்.  நமக்காகவே உள்ள இந்த நம்பெருமாளின் திருவடிகளுக்காகவும், பாதுகைக்காகவும் லட்சத்தில் ஒருவர் இருந்தால் பெரிது.  அந்த ஒருவரின் பொருட்டுதான் தாம் இன்னும் பெரியபெருமாள் இந்த பூமியில் பொறுமையுடன் எல்லாரையும் கடாக்ஷித்துக் கொண்டு வருகின்றான்.

இவ்விதம் நம்மைப் போல் எல்லாம் இல்லாமல் என்றும் நம்பெருமாளின் திருவடிகளை பேணிக் காக்கும் ரக்ஷை பாதுகாதேவிதான் என்கிறார். 
 
55 சம தம குண தாந்த உதந்த வைதேசிகாநாம்
     சரணம் அசரணாநாம் மாத்ருசாம் மாதவஸ்ய
     பதகமலம் இதம் தே பாதுகே ரக்ஷ்யம் ஆஸீத்
     அநுதயநிதாநாநாம் ஆகமாநாம் நிதாநம்

 
பொருள் – பாதுகையே! கண் முதலான இந்த்ரியங்களைத் தன்வயப்படுத்தி அடக்குதல்; மனதைக் கட்டுப்படுத்தல்; தயை போன்ற குணங்கள் கொண்டிருத்தல்; பக்தியுடன் இருத்தல் – இது போன்ற உயர்ந்த தன்மைகளுக்கு மாறுபட்டவர்களாக நாங்கள் உள்ளோம். எங்களை இவ்வாறு உள்ள நிலையில் இருந்தும் காப்பாற்றுவது எது? தோற்றம் மற்றும் அழிவு போன்றவை இல்லாமல், என்றும் உள்ள வேதங்களுக்கும் புதையல் போன்று உள்ள நம்பெருமாளின் திருவடிகளே எங்களைக் காக்கின்றன. அப்படிப்பட்ட உயர்ந்த திருவடிகளையே நீ காப்பாற்றுகிறாய்.
 
விளக்கம் – நமக்காக திருவடிகள் உள்ளன. அந்தத் திருவடிகளுக்காகவும், நம்பெருமாளுக்காகவும் கவலைப்பட யாரேனும் உள்ளனரா என்றால் லக்ஷத்தில் ஒருவர் கூடக் கிடைப்பது அபூர்வம். இதனைக் கண்ணனும் கீதையில் தெளிவாகவே கூறுகிறான் (மஹாத்மா துர்லபம்). இவ்விதம் லக்ஷத்தில் ஒருவன் நம்பெருமாளின் நலத்தைப் பற்றி நினைக்கிறான் அல்லவா? அந்த ஒருவனுக்காக மட்டுமே அவன் பெரியகோயிலில் இன்னமும் உள்ளான். இவ்விதம் அல்லாமல் அவனது திருவடிகளை எப்போதும் பாதுகாத்து நிற்பதால், திருவடிகளைக் காட்டிலும் பாதுகைக்கு மேன்மை அதிகம் என்றார்.

 
——————————————-
ஸ்ரீரங்கம் பெரியகோவிலில் சடாரி சாதிக்கப் பெறுதல் என்பது அவ்வளவு சுலபமாக கிடைக்காது.
 
கோவிலின் நிர்வாகத்திற்குப் போகும் பாதி புகார்கள், ஸ்ரீசடாரி சாதிக்காததினால் ஏற்படும் புகார்தான்.
 
கூட்டம் மிகுந்த இந்த காலம் மட்டுமல்ல – இந்த அளவிற்கு கூட்டம் இல்லாத அந்த காலத்திலும் இது குறித்த புகார்தான் அதிகம். 
 
இதுகுறித்து ஆராய சுமார் 20 வருடங்களுக்கு முன்னமேயே நிர்வாகம் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.  அந்த கூட்டத்திற்கு என் தகப்பனாருடன் நானும் சென்றிருந்தேன். 
 
உயரதிகாரிகள் ஏன் நீங்கள் தொடர்ந்து ஸ்ரீசடாரி சாதிக்க மறுக்கின்றீர்கள்? என்று வினவினார்கள். 
 
அப்போது பல காரணங்கள் சொல்லப்பட்டன.  அதிகமான அர்ச்சகர்கள் கூறிய ஒரே காரணம் ஸ்ரீசடாரியின் எடை அளவுக்கதிகமாகயுள்ளது (சுமார் 5 கிலோவிற்கு மேல்தான் இருக்கும்)  தொடர்ச்சியாக சாதிக்க முடிவதில்லை என்பதுதான்.

மெல்லியதாக எடை கம்மியாக வேறு ஒரு ஸ்ரீசடாரி செய்து இந்த பழைய சடாரியினை பெரிய பெருமாள் திருவடியில் எழுந்தருளப்பண்ணலாம் என்று ஒரு ஆலோசனை எழுந்தது. 
 
ஸ்தலத்தார்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். 
முளையிலேயே இந்த ஆலோசனைக் கிள்ளியெறியப்பட்டது.
 

எதற்கு இதனைச் சொல்லுகிறேன் என்றால் இந்த பாதுகைதேவி நம்பெருமாளுக்காகவென்றே அவதரித்தவள்.  
 
நம்பெருமாள் திருவடிகளை விட்டு க்ஷண நேரம் கூட அகலாதவள்!

இவள்தான் நம்பெருமாளின் பாதங்களுக்கு ரக்ஷை என்று ஸ்வாமி ஸ்ரீதேசிகர் சொன்னது எவ்வளவு உண்மை! நிதர்சனம்!
 
 
 
———————————————————————————————
Older Posts »

Create a free website or blog at WordPress.com.