Srirangapankajam

November 23, 2008

PESUM ARANGAN-154

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 8:01 pm
Chapter-154
 22.11.2008
 
‘ரங்கேதாம்நி ஸூகாஸீநம்” என்கிறபடியே திருவரங்கத்தில் மணவாளமாமுனிகள் தம்முடைய மடத்தில் திருமலையாழ்வார் கூடத்தில், வ்யாக்யாநித்து அகிலருக்கும் ஆன்மீக ஆனந்தம் அளித்து வாழ்ந்து கொண்டு வருகின்றார்.
 
ஜயதுயஸஸாதுங்கம்ரங்கம் ஜகத்த்ரயமங்களம்
ஜயதுஸூசிரம் தஸ்மிந்பூமா ரமாமணி பூஷணம்
வரதகுருணார்த்தம் தஸ்மை ஸூபாந்யபிவர்த்தயந்
வரவரமுநி: ஸ்ரீமாந்ராமானுஜோ ஜயதுக்ஷிதௌ
 
பெருமையினால் உயர்ந்து மூவுலகுக்கும் மங்களாவஹமான திருவரங்கமானது பெருமையுற்று விளங்கவேணும்.  அத்திருப்பதியிலே பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீகௌஸ்துபத்தையும் திவ்யாபரணமாகவுடையனான எம்பெருமான் பல்லாண்டாக விளங்கவேணும். அவ்வெம்பெருமானின் பொருட்டு வரதகுருவுடன் மங்களங்களை மேலும் மேலும் உண்டாக்குபவரான ஸ்ரீராமானுஜர் அவதாரமான மணவாளமாமுனிகள் இப்புவியில் விளங்கவேணும்.
 
என்று வைணவ உலகும் மாமுனிகளுக்காக அரங்கனிடத்து பல்லாண்டு பாடி வளர்ந்து வந்தது.
 
மாமுனிகள் அரங்கனை 
 
கஸ்தூரி ஹிமகற்பூரா ஸ்ரக் தாம்பூலாநுலேபநை:
திவ்யைரப்யபஜத் போஜ்யை: ரங்கநாதம் திநே திநே
 
என்கிறபடியே பிரதிதினமும் கஸ்தூரி, பச்சைகற்பூரம், பூமாலை, அடைக்காயமுது, பரிமளத்ரவியங்கள் இவற்றினால் உபசரித்து ஆராதித்தார். 
 
ஆச்சார்யன் சிஷ்யனை ஆராதிக்கின்றார்.  சிஷ்யனான அரங்கன் ஆச்சார்யனை பேணிக் காக்கின்றான்.  இந்த வினோதம் எல்லாம் இவனிடத்தில்தான் சாத்தியம்!.
 
Supreme’ என்று சொன்னால் எல்லா பரிமாணத்தையும் உள்ளடக்கியது.  எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்டது.

அரங்கனுக்கே இந்த வார்த்தைப் பொருந்தும். 
 
 ‘Sri Ranganath The Supreme”.
 

காலே கோதண்ட மார்த்தாண்டே காங்க்ஷந்நே வாருணோதயம்
ந்யஷேவதவிஸேஷண சேஷிணம் சேஷசாயிநம்
மங்களாநிப்ரயுஞ்ஜாதோ மாதவம் ப்ரத்யபோதயத்
ஸம்யகேநம் ஸமப்யர்ச்ய ஸர்வதாநுகதை: க்ரமை:
ஸ்வஸ்வகாலோசிதைர்திந்யை: ஸ்வஸங்கல்போபலம்பிதை:
அபோஜயதயம் போஸ்யை: ஸாகமூலபலாதிபி:
ஸூபாகபூப க்ருதக்ஷீர சர்க்கரா ஸஹிதம் ஹவி:
 
தநுர்மாதத்தில் அருணோதயத்திற்கு முன்னே அரவணைமேல் பள்ளியானான எம்பெருமானை விசேஷமாக பூஜித்தார்.
மங்களமான (தமிழ்) பாசுரங்களை அநுஸந்தித்து மணவாளனை திருப்பள்ளியெழுச்சி செய்தார்.  எல்லாப்படியாலும் சாஸ்த்ர முறையான திருவாராதனக்கிரமங்களால் நன்கு ஆராதித்து பின்னர் உயர்ந்தவையான காய், கிழங்கு, பழம், முதலானவைகளுடன் இனிப்பு கலந்த திருபள்ளியெழுச்சிப் பொங்கலையும், வடை பருப்பு நெய் பால் சர்க்கரை இவைகளுடன் கூட ப்ரஸாதத்தினை அமுது செய்தருளப் பண்ணினார்.
 
 
தென்னரங்கர் சீரருளுக்கிலக்காகப் பெற்றோம்
திருவரங்கத் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னியசீர்மாறன் கலை உணவாகப் பெற்றோம்
மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராநங்குரவர் மொழிகளுள்ளப் பெற்றோம்
முழுதுநமக்கிவை பொழுதுபோக்காகப் பெற்றோம்
பிள்ளையொன்றுதனில் நெஞ்சம் போராமற்பெற்றோம்
பிறர்மினுக்கம் பொறாமையில்லா பெருமையும் பெற்றோமே 
 
என்றபடியே,  அரங்கனையும், அடியார்களையும் மகிழ்வித்துக் கொண்டு இந்த திவ்யதேசத்திலே தமது வைபவங்களை பிரகாசிப்பித்து கொண்டு தமது 72ம் பிராயம் வரை அலுப்பேயின்றி கைங்கர்யங்களைச்
செய்து வந்தார்.
 
அயர்வறுமரர்களதிபதியானவனுடைய மேலை வைகுந்தந்தில் சென்று இமையாத கண்ணினராய் ஆதியஞ்சோதியுருவை அநுபவிக்க வேண்டிய தருணத்தினையடைந்தார். 
 
விண்ணுலகுச் செல்ல இசைந்தார். 
 
திருமேனி தளர்ச்சியுற்றது.  நடமாடமுடியாதயளவிற்கு மிகவும் தளர்ச்சியுற்றார். 
 
விண்ணுலகுச் செல்லும் முன் அகிலஉலகு நாயகன் அரங்கனைக் காண ஆவலுற்றார்.
 
திருநாளுக்காக திருவீதியிலரங்கர்
வருநாளுமாற தெந்தைக்கின்று – பெருமாள்தன்
அந்த வடிவழகைத்தானோர் நாளுங் காணேனே
இந்த உடம்போடு இனி
!
 
என்று புலம்பி அழுதவாறே போராசையோடு பெருமாள் ஸேவையை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்.  
 
நம்பெருமாள் உடுத்து முடித்து அலங்கரித்து திருவீதியில் புறப்பட்டவர், (மாசித் திருநாளாயிருக்குமோ..?) இவரின் மடத்து வாசலிலே நிற்கின்றார்.  மாமுனிகள் நடக்க முடியாததால் கைத்தலத்தில் எழுந்தருளப்பண்ணி அரங்கனிடத்து சேர்க்கின்றனர் அடியவர்கள். நெடுநேரமாய் நின்று தம் ஆச்சார்யனுக்காக ஸேவை சாதித்தருளுகின்றான அரங்கன்.

வாடிக்கிடந்த பயிரினை தளிர்ப்பிக்கின்ற மழைமேகம் போல நம்பெருமாள் பரிவுடனே தம் திருக்கண்ணை மலர்த்தி ஸேவை சாதிக்கின்றார்.
‘நீடுபுகழ் தென்னரங்கர் தேவியரும் தாமுமாகவந்து என்னிடர் தீர்த்ததாரிப்போது’   என்று தம் ஆர்த்தி (ஆதங்கம்) தீர சேர்த்தியையநுபவித்தருளுகின்றார்.
 

இந்த உடல் நோய் வீழ்ந்தென்னை வல்வினையேன்
அந்தோ!  எனக்குத் தென்னரங்கா!….
 
என்று கண்ணீர் மல்க கரைந்து உருகுகின்றார் அரங்கனைக் கடைசி முறையாகக் கண்டு! 
Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: