Srirangapankajam

November 20, 2008

PESUM ARANGAN-151

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 11:20 pm

 

Chapter-151
 19.11.2008
 
பெரிய ஜீயருக்கு பெரிய பெருமாளே சிஷ்யனாய் ஆனான்.  பெரிய பெருமாளே சிஷ்யனாய் ஆனதால்
பெரிய ஜீயராய் மாமுனிகள் ஆனார்.

வெறும் சிஷ்யனாய் அப்போதைக்கு இருந்தால் மட்டும் போதாது –  சிஷ்யன் ஆச்சார்யனை தன் உயிருள்ளவரை நினைத்திருக்க வேண்டும்.  சிஷ்யனானவன் சிலவற்றை பின்பற்ற வேண்டும்.  
 
அரங்கன் இதையெல்லாம் செய்தானா?  பின்பற்றினனா..?
 

1. சிஷ்யனானவன் ஆச்சார்யனுக்கு  தனியன் செய்ய வேண்டும் அல்லது ஆச்சார்யனின் தனியனை அனுசந்திக்க வேண்டும்
 
ஈட்டிற்கு,  ஈடு இணையில்லாத தனியனை, ஆச்சார்யனின் முன் தளிர்நடையிட்டு, ஆச்சார்யனை தண்டனிட்டு, தயாநிதியாய், இத்தரணி உய்ய அளித்தான் அரங்கன்.
2. தனியன் செய்தாலோ அல்லது அநுசந்தித்தாலோ மட்டும் போதாது.  ஆச்சார்யனது புகழ் பரவச் செய்ய வேண்டும்.
 
ஸ்ரீபந்நகாதீஸமுநே: பத்யம் ரங்கேச பாஷிதம்
அஷ்டோத்தர ஸத ஸ்தாநேஷூ அநுசந்தாநமாசரேத்
இத்யாஜ்ஞா பத்ரிகா விஷ்வக்ஸேநே ப்ரதிபாதிதா
ததாரப்ய மஹத்பிஸ்ச பட்யதே ஸந்நிதே: புரா
 
ஸ்ரீரங்கநாதனால் மணவாள மாமுனிகள் விஷயமாக அருளிச் செய்யப்பட்டது இந்த ஸ்லோகம்.
 
இது மாமுனிகளுக்காக தாம் அருளிய தனியனை நூற்றெட்டு திருப்பதிகளிலும் அநுசந்தானம் செய்யக்கடவர்கள் என்று நியமனமிட்டு, இந்த நியமனப்பத்திரிக்கை ஸேனைமுதலியாரால் அனுப்பப்பட்டது.
 
அரங்கன் பலரது கனவினில் தோன்றி இத்தனியனையருளி அவர்களது மனதினை விட்டு அகலாதவாறு செய்திட்டான்.
 
அயோத்யா இராமானுஜதாஸர் எனும் ஒரு வைணவ சிரேஷ்டர்.  மிகத் தெளிந்த மனமும் நல்லொழுக்கமும் கொண்டவர், சமஸ்த பாபங்களையும் துரிதமாகப் போக்கக் கூடிய பத்ரிகாஸ்ரமத்தில் பத்ரிநாராயணனை ஆராதித்து வந்து கொண்டிருந்தார்.   அவரது கனவில் பத்ரிநாராயணனாய்  தோன்றி அரங்கன் இத்தனியனை உபதேசித்துள்ளான்.
 
(அயோத்யா இராமானுஜதாஸரின் கனவில் அரங்கனாகவே தோன்றி உபதேசித்திருக்காலாமே?  ஏன் பத்ரிநாராயணனாய் தோன்றி உபதேசித்தார்?

அவரவர் திவ்யதேச பெருமாள்தான் அவரவர் உகக்கும் பெருமாள்.
(திருக்குடந்தை ஆண்டவன் ஸ்வாமிகள் பூர்வாஸ்ரமத்தில் அன்றாடம் அமுதனைத் தரிசியாமல் இருக்கமாட்டாராம்.  ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆஸ்ரமத்தில் பட்டமேற்றுக் கொண்ட பின்பும் பல ஆண்டுகள் அமுதனை மறக்க முடியாமல் இருந்தார்.  அரங்கனை ஸேவிக்க ஸேவிக்கதான் பற்று உண்டாயிற்று அவருக்கு.  ஒரு கட்டத்தில் என்னோடு மணையில் அமரப் போகின்றவன் அரங்கன்தான்.  அவன்தான் எனக்கு சகலமும்.  இருந்தாலும் அமுதன் எனக்கு கள்ளப்புருஷன் மாதிரி மறக்கமுடியவில்லையே என்பாராம்)
 
(எனது வீட்டின் அருகிலுள்ள ஒரு மாமிக்கு கும்பகோணம் பூர்வீகம்.   மாமிக்கு அமுதன் மீது அலாதிப் பற்று.   ஒரு நாள் நம்பெருமாள் வேஷ்டி அணியும் விதம் பற்றி பேச்சு வந்தது.   அமுதனுக்கு சாத்தியிருக்கும் விதத்தினைப் பற்றி பெருமையாக பேசிக்கொண்டேயிருந்தாள் மாமி!.  ஒரு கட்டத்தில் எனக்கு நம்பெருமாளை விட அமுதனை அளவுக்கதிகமாக புகழ்ந்து கொண்டேயிருக்கின்றார்களே என்று எரிச்சல்.   ”மாமி!  கும்பகோணத்தில் கொசுக்கடி அதிகம்.  அதனால் யானைக்காலாய் ஒரு கால்  அமுதனுக்குயிருக்கலாம்.   அதனால் எப்போதும் ஒரு காலை மூடியே தரையையிடிக்கும் வரை அமுதனை மூடி மறைக்கின்றார்கள்.   நீங்கள் அதனைப் பெருமையாய் பேசிக் கொண்டேயிருக்கின்றீர்களே!”  என்று விளையாட்டாய் வாய்கொழுப்பில் சொல்லி விட்டேன்.  ஓரு முறை முறைத்த மாமி இன்று வரை என்னிடம் சரியாய் பேசுவதில்லை.   அன்றிரவு அமுதனிடத்தும் அரங்கனிடத்தும் மானசீகமாக, பேசியதை மறந்து மன்னிக்குமாறு,  பிரார்த்தித்தேன்.)
 

இளையாழ்வார் பிள்ளை என்பாரும்,   இராமானுஜதாஸர் என்பாரும் மணவாளமாமுனிகளிடத்து உத்திரவு பெற்று திவ்யதேசங்களெல்லாம் ஸேவித்து அங்கெல்லாம் ஸ்ரீசைலேசதயாபாத்ரத் தனியனை கொண்டாடி பத்ரிகாஸ்ரமம் வருகின்றனர். 
 
அயோத்யாராமானுஜதாஸர் இவ்விருவரையும் நரநாராயணர் பெருமாள் ஸந்நிதியில் திவ்யபிரபந்தம் தொடங்கும்படி வேண்டுகின்றார். 
 
இருவரும் ‘ஸ்ரீசைலேச” தனியனைச் சொல்லித் தொடங்குகின்றனர்.  அதுகண்டு அயோத்யா இராமானுஜதாஸர் அதி ஆச்சர்யமடைந்தார். 
 
‘ஸ்ரீபத்ரிகாஸ்ரம பெருமாளாலே நமக்கு அருளப்பட்டதன்றோ இது!  இவர்களுக்கு தெரிந்ததுயெப்படி?’  என்று விசாரிக்க இளையாழ்வார் பிள்ளையும் ‘பகவத் ப்ரஸாதலப்தமன்றோ இத்தனியன்!” என்று கூறி மணவாள மாமுனிகளின் வைபவங்களையெல்லாம் ராமானுஜதாஸருக்கு
ஸாதித்து உகப்பித்தருளுகின்றார். 
 
அயோத்யா இராமானுஜதாஸரும் பத்ரிநாராயணரிடத்து விடைபெற்று இளையாழ்வாரோடு திருவரங்கம் நோக்கி பயணிக்கின்றார்.
 
அன்று முதல் இத்தனியன் இன்றளவும் பத்ரிகாஸ்ரமத்தில் இன்றும் அனுசந்திக்கப்பட்டு வருகின்றது.  விடியற்காலையில் இத்தனியனைத்தான் முதலில் அநுசந்திக்கின்றனர்.
 
முதலில் அனுஷ்டானத்தில் கொண்டு வந்தவர்  இளையாழ்வார்பிள்ளையும், இராமனுஜதாஸரும். 
 
 
(இந்த பத்ரி நாராயணனை முதலில் புத்தர் என்றே பௌத்தர்கள் பூஜித்து வந்தனர்.   ஆதி சங்கரர்தாம் பத்ரி நாராயணன் என்று உறுதி படுத்தியவர். 
இராமானுஜர் காலத்திலிருந்து இது தமிழக வைணவர்கள் கட்டுபாட்டில்தான் இருந்து வந்தது.  மாமுனிகளின் காலத்திற்கு பின் இந்த நிலைமை மாறிவிட்டது.  இன்றும் கோவிலின் துவாரபாலகர்கள் மற்றுமுள்ள சிலைகள் நம் தமிழ்நாட்டிலுள்ளது போலிருக்கும்)
 
பகவானால் அருளப்பட்டமையினாலேயே இன்றளவும் இதன் அனுஸந்தானம், புகழ்,  வடக்கே பத்ரிகாஸ்ரமம் முதல் தெற்கே திருப்புல்லாணி வரையிலும் இன்றளவும் அழியாது போற்றப்பட்டு பேணப்பட்டு வருகின்றது.
Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: