Srirangapankajam

November 17, 2008

PESUM ARANGAN-148

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 11:23 pm
Chapter-148
 15.11.2008
 
 

அனைத்தும் அறிந்த அரங்கனே மாமுனிகளின் ஈடு உரை கண்டு அதிசயித்தவனாய், அனுதினமும் விடாது கேட்டு அவரின் அந்தரங்க சிஷ்யனாய் மாறிப் போனான். 
 
ஒரு வருட காலம் ஸ்ரீரங்கத்திலுள்ளோர் அனைவரின் செவிக்கின்பமாய், ஆன்மாவிற்கு விருந்தாய், அரங்கனோடும், கிடைத்தற்கரிய ஆச்சார்யனையும் அடைந்த வைணவர்கள் அனைவரும் பெறுதற்கரிய பேறு பெற்றோரானார்கள். 
 
ஸ்ரீரங்கம் செழிப்புற்று விளங்கியமையால் அனைத்து திவ்யதேசங்களும், இந்த உலகும் செழிப்புடன் விளங்கியது.
 
அமைதியும், ஆன்மீக உணர்வும், பக்தியும், புவியில் படர்ந்து செழித்தது.
 
மாமுனிகள் ஒருவரால்  வைணவர்கள் பலரும் திருந்தி தர்மசிந்தனையுடன் வாழ்ந்தனர்.  பல வைணவர்கள் தர்மத்தோடுயிருந்தமையினால் அவர்களது தாக்கம்  ஸ்ரீரங்கத்தினையேத் திருத்தி, ஸ்ரீரங்கம் அதிதிவ்யமானது.  ஸ்ரீரங்கம் தர்மதேவதையின் இருப்பிடமானதால் உலகெங்கும் அநீதி குறைந்து அமைதி படர்ந்து நிம்மதியடைந்தது.
 
திருவாய்மொழி ஈடு முப்பதாறாயிரத்துடனே ஒரு வருடகாலம் முடிந்து அன்று கடைசிநாள்.  சாற்றுமுறை. (கலி 4534 – பிரமாதீச வருடம் ஆனி மாதம் பெளர்ணமி ஞாயிற்றுக்கிழமை – மூல நட்சத்திரம் (09-07-1433))
மாமுனிகளை கௌரவிப்பதற்காக நம்பெருமாளின் முன்பு ஸம்பாவணைத் தட்டு, பலவகைப்பட்ட உபஹாரங்கள் ஸித்தப்படுத்தப்பட்ட தட்டுகள், ஏலாலவங்க கற்பூராதிகள் கொண்ட தட்டு, பழத்தட்டுக்கள், அடைக்காய் எனப்படும் வெற்றிலைகள் நிரம்பிய தட்டு, திருப்பரிவட்டம் போன்றவை பரத்தி விரித்து வைக்கப்பட்டிருந்தன. 
 
அரங்கன் முகத்தில் குறும்பு தோன்ற தரிசனம் தந்து கொண்டிருந்தான். 
 
மாமுனிகள் அரங்கனின் நிர்ஹேதுக கிருபையாலும், பூர்வாச்சார்யர்களின் திவ்ய அனுக்ரஹத்தாலும் நடைப்பெற்று முடிந்தமைக் குறித்து கண்ண நீர் வழிந்தோட,  கைக்கூப்பி, அஞ்சலிஹஸ்தராய் நம்பெருமாளையும், நம்மாழ்வாரையும் தியானித்த வண்ணம் அமர்ந்திருந்தார். 
 
ஒரு சிறு ஓசைக் கூட கேட்காமல் கோயில் முழுதும் அமைதியாய் அவரவர்கள் ஆனந்தகண்ணீருடனே அமர்ந்திருந்தனர்.
 
திடீரென ஒரு சின்ன சலசலப்பு.  அர்ச்சசகரின் குமாரன் நான்கு பிராயம் முடிந்து ஐந்தாம் பிராயத்திலுள்ள ‘ஸ்ரீரங்கநாயகம்’ எனும் பாலகன், அனைவரையும் தாண்டி வந்து,  நம்பெருமாளுக்கு முன் மணவாள மாமுனிகளுக்கு எதிரே கைகூப்பி நின்று கொண்டிருந்தது. 
 
கோவிலார்கள் இடையூறாக நிற்கின்றதே இக்குழந்தை என்று தூக்கி தூக்கி அப்பால் விட விட இந்த குழந்தை வேகமாய் வேகமாய் அனைவரையும் ஏமாற்றி விட்டு ஓடி ஓடி மீண்டும் மீண்டும் மாமுனிகளின் எதிரே கைக்கூப்பியபடி நின்றது. 
 
அங்குள்ள ஆச்சார்யார்களுக்குப் புரிந்துவிட்டது.
இது வெறுமனன்று. ஒரு ஆச்சர்யமுண்டாக வேணும்” என்று எல்லாரும் குழந்தையினை கண்காணிக்கத் தொடங்கினர். 
 
ஆச்சார்யர்களில் ஒருவர் குழந்தையிடம் அன்பாய் கேட்டார்   ‘குழந்தாய்! நீர் நிற்கிற காரியமேதென்ன?” என்று.  
 
அந்த குழந்தை சிறிதும் பயப்படாமல், சபை கூச்சமுமின்றி, கணீரென்று ஒரு முறை சொன்னதே மனதில் என்றென்றும் நிலைத்து நின்று எதிரொலித்துக் கொண்டேயிருக்கும் வண்ணம், இந்த வையம் உகக்கும் வண்ணம்,
 
 
‘ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் !

யதீந்தர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் !!
(திருமலையாழ்வாரான ஸ்ரீசைலேசரின் பரமக்ருபைக்குப் பாத்திரமானவரும், அதனால் ஞான பக்தி  வைராக்யங்களான குணக் கடலாகவும், யதீந்தரரான எம்பெருமானார் திறத்தில் ப்ரேமையே வடிவெடுத்தவராகவும் விளங்கும் அழகிய மணவாள மாமுனியை வணங்குகின்றேன்.)

 
என்று  மாமுனிகளைப் பார்த்து கைகூப்பி ஸேவித்தது – ஓதியது – ஓடியது –  மறைந்தது. 
 
அந்த வைணவ சபையே அதிர்ந்தது. 
 
இது மணவாள மாமுனிகளுக்கு ஈட்டுக்கு ஈடாக நம்பெருமாள் உகந்து அளித்த பரிசு என்று உணர்ந்தது. 
 
அதனை அப்படியே பட்டோலைப்படுத்தி, மஞ்சள் காப்பிட்டு நம்பெருமாளின் திருவடிகளில் வைத்து அரங்கனின் கிருபையை எண்ணி ஆனந்தமாய் அழுதனர் அனைவரும்.
 

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: