Srirangapankajam

April 10, 2011

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 35

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 6:50 pm

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 35
10-04-2011

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
மூன்றாம் அத்யாயம்
ஸமாதிவ்யாக்யானம்

::பூத சுத்தி ::

பிறகு அனைத்து ஒளிமயமான வஸ்துக்களை தியானிக்கவும்.
பிறகு அக்னி தத்வமானது “ரூப சக்தி“யில் லயமடைந்ததாக தியானிக்கவும்.
இந்த “ரூப சக்தி“ ஞானமயமானது. பிறகு இந்த ரூபசக்தியை வாயுவிலே ரேசகத்தினாலே வெளியேற்ற வேண்டியது.

பிறகு வெளியே இருக்கக்கூடிய வாயுதத்துவத்தினைத் தியானிக்கவும்.
இந்த வாயுவானது பலவிதமான கந்தங்களோடு கூடியது.

பிறகு வாயுமந்த்ரத்தினை உச்சரித்து இந்த வாயுவின் சொரூபத்தினைத்
தியானிக்கவும். பிறகு பூரகத்தினால் கழுத்திலிருந்து நாபி வரை இந்த
வாயுவினால் வியாபிக்கப்பட்டதாய் நினைக்கவும். பிறகு இந்த வாயு தத்துவத்தினை “ஸபர்ச“ சக்தியிலே லயமடைந்ததாய் தியானிக்கவும்.
இந்த ”ஸ்பர்ஸ” சக்தியினை ஆகாய மண்டலத்தில் சேர்க்கவேண்டும்.
பிறகு வெளியே அனைத்து சப்தங்கள் கொண்டதும், நிறமற்றதும்,
பல உருவமற்ற, உடலற்ற சித்தர்களாலே நிரம்பியதுமான ஆகாயத்தினை அதற்குரிய மந்திரத்தினைக் கூறி தியானிக்கவும். பிறகு பூரகம் மூலமாக இந்த ஆகாயத்தினாலே கழுத்திலிருந்து ப்ரும்மரந்த்ரம் வரை வியாபிக்கப் பட்டதாய் நினைக்க வேண்டியது. பின்பு தந்மந்த்ரமாகவே மாறிய அந்த ஆகாய தத்துவத்தை கும்பகத்தினாலே தியானிக்க வேண்டியது. இந்த மந்த்ரமாக மாறிய ஆகாய தத்துவத்தினை பிறகு சப்த சக்தியாக மாறுவதாக தியானிக்கவும். பிறகு சப்த சக்தியை ப்ரும்மரந்தரத்தின் வழியே வெளிக் கிளம்பி, மற்ற நான்கு சக்திகளோடும் சேருகின்றதாக தியானிக்கவும்.

…..தொடரும்..
இந்த பரமேஸ்வர ஸம்ஹிதைக்கான வியாக்யானம் இருப்பதாக அறிந்தோமே தவிர இதுவரை முயற்சிகள் பலசெய்தும் பலன் கிட்டவில்லை. கிஞ்சித்காரம் டிரஸ்டில் பணிபுரியும் சம்ஸ்கிருத வல்லுநர் திரு் பரத் அவர்கள் இதுகாறும் மூன்று அத்யாயங்களின் சாராம்சங்களை தெளிவுபடுத்தினார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இதர அத்யாயங்களுக்கும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன். தெளிவுபட தெரிந்தால் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். அதுவரை தாங்களது பொறுமையை சோதிப்பதற்கு மன்னிக்க வேண்டுகின்றேன். தாஸன் -முரளீபட்டர்-

Advertisements

February 26, 2011

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 34

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 9:11 am

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 34
26-11-2011

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
மூன்றாம் அத்யாயம்
ஸமாதிவ்யாக்யானம்

::பூத சுத்தி ::

“கந்த சக்த“யினை “ரேசக“த்தினாலே வெளியகற்றிய பின்பு
சமுத்திரம், நதிஈ ஓடை இவைப் போன்ற நீர்நிலைகள் எவைகள்
உள்ளனவோ, இவைகளைப் “பிறைச் சந்திரன்“ போன்ற உருவத்தினை
உடையதாயும், தாமரைக் கொடி உடையதாயும், நமது சரீரத்திற்கு வெளியே மனதினால தியானித்து பின்பு “பூரக“த்தினாலே மெதுவாக நம்முடைய தேகத்தினுள் நிரப்பவேண்டியது.

அடித்தொடைப் பாகம் முதல் முழங்கால் வரை அந்த ஜலத்தினால் வியாபிக்கப்பட்டதாய் “கும்பக“த்தினால் தியானிக்கவும்.

இதன் நடுவே வாருண மந்திரத்தினால் தியானிக்கவேண்டியது.
இம்மந்திரத்தினாலே ஜலமயமான அனைத்து பதார்த்தங்களும் லயமடைந்ததாக தியானிக்கவும்.

பிறகு ஜலமயமான அனைத்து விபவங்களையும், ரச சக்தியினாலேயும், அந்த ரச சக்தியினை அக்னியினாலேயும் “ரேசக“த்தினால் நுழைக்க வேண்டியது.

இங்கு அக்னியுடைய உருவத்தினை விவரிக்கின்றார் சாண்டில்யர்.

அக்னியானது திரிகோண வடிவம் – மின்னல், சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், ரத்னங்கள், தாதுக்கள் மற்றும் ஒளி கொண்ட அனைத்து வஸ்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டது. மேலும் தானே பிரகாசிக்கக்கூடிய சரீரம் உடையவர்களும், சரீரமில்லாதவர்களுமான ஆகாயத்தில் சஞ்சரிப்பவர்களுடன், மங்கள ஸ்வரூபியான தேவதைகளுடன் கூடிய
இந்த அக்னியைத் தியானிக்கவேண்டியது.

பின்பு, அக்னி மந்திரத்தினைக் கூறி அந்த அக்னி மண்டலத்தினுள்
இருக்கக்கூடிய எம்பெருமானைத் தியானிக்கவும். இந்த அக்னி விபவத்தினை “பூரக“த்தினால் நாபியிலிருந்து அடித்தொடை வரை வியாபித்ததாய்
தியானிக்கவும்.

July 3, 2010

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 31

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 11:20 pm

நாடிகளைப் பற்றி விரிவாக கூறுகின்றார் சாண்டில்ய மஹரிஷி..!

இந்த நாடிகள் அனைத்திற்கும் உற்பத்தி ஸ்தானம் “கந்த நாடி“ என்றும்

(கந்தம் = ஹ்ருதயம்..? ). நமது தேஹம் முழுவதும் 14000 நாடிகள் வியாபித்துள்ளன என்றும் தெரிவிக்கின்றார்.

இதில் மேலே போகக்கூடிய நாடிகள் “ஆக்நேய“ நாடிகளாகும்.

கீழே போகக்கூடிய நாடிகள் “ சௌம்ய“ நாடிகளாகும்.

குறுக்கே போகக்கூடிய நாடிகள் “சௌம்யாக்நேய“ நாடிகளாகும்.

இந்த 14000 நாடிகளில் மிக முக்யமானவை 10 நாடிகளாகும்.

அவைகள்

(1) இடா (2) பிங்களா (3) மேலே செல்லக்கூடிய “சுழும்னா“

(4) காந்தாரி (5) ஹஸ்திஜிஹ்வா (6) பூஷா (7) யஸஸ்வினி

(8) அலம்புஸா (9) குஹூ (10) கோசினி.

இந்த நாடிகள் நமது தேஹத்தில் எங்கெங்கு உள்ளன..?

“சுழும்னா” என்கிற மத்ய நாடி கந்தபாகத்திலிருந்து மேல்நோக்கிச்

செல்கின்றது.

இந்த “சுழும்னா“ நாடியின் இடது புறம் “இடா“ என்கிற நாடியும்

வலது புறம் “பிங்களா“ என்ற நாடியும் நமது மூக்குவரை வியாபித்துள்ளது.

இந்த “சுழும்னா“ நாடிக்கு முன்புறம் “காந்தாரி” என்கிற நாடி நமது இடது கண் வரையிலும் ”ஹஸ்திஜிஹ்வா” என்னும் நாடி வலது கண் வரையிலும் வியாபித்துள்ளது. கந்த பாகத்திலிருந்து மேல் நோக்கிய வண்ணம்

இரு காதுகள் வரை ’பூஷா“ மற்றும் “யஸஸ்வினி” ஆகிய இரு நாடிகளும் உள்ளன. கந்தபாகத்திலிருந்து, பாதம் வரை உள்ளது “அலம்புஸா“ என்கிற நாடி. இரகஸ்ய பிரதேசம் வரை உள்ளது “குஹூ“ நாடி.

கால் கட்டைவிரலில் “கோசினி“ என்னும் நாடி உள்ளது.

இந்த நாடிகளின் நிறங்கள்…

இடா – வெள்ளை

பிங்களா – சிகப்பு

காந்தாரி – மஞ்சள்

ஹஸ்திஜிஹ்வா – கருப்பு

பூஷா – கருமஞ்சள்

யஸஸ்வினி – பச்சை

அலம்புஸா – சிகப்பரக்கு (Redish Brown)

குஹூ – இளஞ் சிகப்பு

கோசினி – கருப்பு

இவைகள் பிரதானமாக விளங்கும் 10 நாடிகளாம்.

இந்த 10 நாடிகளிலும் விளங்கும் 10 வாயுக்கள்.

இடா – பிராணன்

பிங்களா – அபானன்

அலம்புஸா – சமானன்

குஹூ – வ்யானன்

சுழும்னா – உதானன்

பிங்களா – நாகன்

பூஷா – கூர்மன்

யஸஸ்வினி – க்ருகரன்

ஹஸ்திஜிஹ்வா – தேவதத்தன்

கோசினி – தனஜ்ஜயன்

இந்த வாயுக்களின் நிறம்

பிராணன், நாகன் – பவள நிறம்

கூர்மன், அபானன் – இந்திர கோபன்

சமானன், க்ருகரன் – ஆகாய நிறம்

தேவதத்தன், உதானன் – தாமரை மகரந்த நிறம்

தனஜ்ஜயன், வ்யானன் – கடல்நுரை போன்ற நிறம்.

இவ்வளவு விவரங்களையும் தெளிவாகச் சொல்லிவிட்டு “ப்ராணயாம“த்தினைப் பற்றி விளக்குகின்றார் சாண்டில்ய மஹரிஷி.

========================

(மெய்ஞானம் கொண்டு அறிந்த இந்த நாடி அறிவிற்கு ஏதும் சமமாகுமா..?

நம் மஹரிஷிகள் காட்டிச் சென்ற பாதையினை நாம் மறந்து மேலைநாட்டு விஞ்ஞானத்தில் ஆழ்ந்து இன்று பல குழப்பங்களுக்கு உள்ளாகியுள்ளோம்.

நாடி பார்த்து நோய் தீர்க்கும் மிகச் சிறந்த வழிமுறை மறந்து போனோம்..! )

April 22, 2010

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 28

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 12:10 am

திருபள்ளியெழுச்சி

ஒரு அர்ச்சகர் கோவிலே இல்லாத ஒரு இடத்திற்குச் செல்ல நேரிட்டால்…..

அந்த அர்ச்சகர் சுத்தமான ஒரு பிரதேசத்திற்குச் செல்ல வேண்டும். மூல மந்திரத்தினைச் சொல்லியவண்ணம் அங்கு மனதினால் ஒரு கோவிலைக் கற்பனைச் செய்ய வேண்டும்.

மூல மந்திரத்தினைச் சொல்லி, கோடி சூர்ய பிரகாசமாயுள்ள எம்பெருமானை அங்கேத் தியானிக்க வேண்டும்.

அந்த எம்பெருமானின் ஹ்ருதயமாக “ஹ்ருண் மந்த்ரம்“
பிரும்ம நாடியாக “சிகோ மந்த்ரம்”
எம்பெருமானது க்ரியா சக்தி “கவச மந்த்ரம்“
இந்த மானஸீகக் கோவிலின் திருக்கதவுகள் மற்றும் ஜன்னல்கள் “நேத்ர மந்த்ரம்”
கர்ப்பகிரஹத்தில் ஆயிரம் அக்னிப் பொறிகள் சூழ்ந்து ஒளிமயமாகவும், அனைத்து விக்னங்களையும் போக்கக்கூடிய ஜோதியாக “ அஸ்த்ர மந்த்ரம்” —
ஆகிய இந்த மந்திரங்களைச் சொல்லி மேற்கூறிய ஸ்தானங்களைத் தியானிக்க வேண்டும்.

இந்த மானஸீக கோவிலின் த்வாரத்தினை (கர்ப்பக்கிரஹ நுழைவு வாயில்) மூன்றாக பிரித்து அதன் நடுபாகத்தினை மீண்டும் இரண்டாக பிரித்து, பின்பு இந்த இரண்டுபாகத்தின், இடது பாகத்தில் மெதுவாக வலதுகாலை முன்வைத்து நுழைய வேண்டும்.

பூமியினை கொஞ்சமாக பறித்து, எம்பெருமானையும், ஆச்சார்யனையும் மனதினால் வணங்கி அவர்களுடைய ஆக்ஞையினை சிரமேற்கொண்டு, தமக்கு விரும்பிய பலனை மனதினால் எண்ணி, அதனை அங்குள்ள எம்பெருமானிடத்துத் தெரிவி்க்கவேண்டும். பின்பு அந்த குழி பறித்துள்ள இடத்தின் நடுவில் நாம் தியானித்து கற்பனைச் செய்த எம்பெருமானின் விக்ரஹத்தினை மனதினால் அங்கு பொருத்தி, தர்பத்தினால் அந்த இடத்தினைத் துடைக்கவேண்டும்.

நிறைய தீர்த்தத்தினைச் சேர்த்து, கோமயத்தினால் அந்த மூலஸ்தானத்தினை சுத்தம் செய்து, பஞ்சகவ்யம், சந்தனம், தீர்த்தம் இவைகளை அஸ்த்ர மந்திரம் சொல்லி, அவ்விடத்தில் ப்ரோக்ஷணம் செய்யவேண்டும்.

குங்குமம், அகில், பச்சைக்கற்பூரம் ஆகிய கலவைக் கொண்டு மொழுக வேண்டும்.

தர்ப்பங்கள், அருகம்புல், அக்ஷதை ஆகியவற்றை அவ்விடத்தில் தூவவேண்டும்.

இவ்விதமாக கர்ப்பகிரஹத்தினை சுத்தம் செய்து பின்பு மௌனியாக எம்பெருமானுக்கு முன்பே அல்லது வலதுபுறமான இருந்து, வழக்கம் போல் ஆராதனம் செய்யவேண்டும்.

சரி..! எப்போதும் கோமயம் (பசுவினுடைய சாணம்) எப்படி எடுக்கவேண்டும்..?

புதிதாக இடப்பட்ட சாணமாகயிருக்க வேண்டும்.
கொழகொழவென்றோ, புழுக்கள் உள்ளதாகவோ இருக்கக்கூடாது.

February 7, 2010

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 27

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 7:31 am

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 27
07-02-2010

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
மூன்றாம் அத்யாயம்
ஸமாதிவ்யாக்யானம்

திருபள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சியின் போது துதிப் பாடகர்களலோ அல்லது அங்கு குழுமியுள்ள பாகவதர்களோ “ஜய ஜய” என்று ஒருமித்த உரத்தக் குரலில் கோஷமிடவேண்டும்.

சங்கநாதம் ஒலிக்க வேண்டும்.

சுப்ரபாத (ப்ரபோத) சுலோகங்களைச் சொல்லி எம்பெருமானை பள்ளியெழுப்ப வேணும்.

த்வாரம் அருகே சென்று தசதிக்பந்தனம்
(8 திக்குகள்+ஆகாயம்+பூமி) செய்து தர்ஜனி விரலால்(ஆட்காட்டி விரல்) அவகுண்டனம் செய்து, கவச மந்திரத்தினை உச்சரித்தவாறு, கருடன் முதலிய பரிவாரத்தோடு கூடிய ஏம்பெருமானை ப்ரணவம், நமஸ்ஸூக்களாலே புஷ்பங்களைக் கொண்டு “ஸமஸ்த பரிவாராய அச்சுதாய நமோ நம:“ என்று துதிக்க வேண்டும்.

பிறகு யதாக்ரமம் ‘வாஸ்து புருஷன்’ தொடங்கி அர்ச்சிக்க வேண்டும்.

ந்யாஸங்களோடோ அல்லது ந்யாஸங்கள் இல்லாமலோ, மூலமந்திரத்தினைச் சொல்லி, மூன்று தடவை “தாளத்ரயம்“ செய்யவேண்டும்.

மூல மந்திரத்தினை உச்சரித்தவாறு திருக்கதவுகளைத் திறக்கவேண்டும்.

பிறகு நேத்ர மந்திரத்தினை ஜபித்தவாறு திருவிளக்கு ஏற்றி விட்டு, தீர்த்தம் கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்க.

பின்பு தம் உதவியாளர்களையோ அல்லது சிஷ்யர்கள் அல்லது புத்ரர்களை ஒத்தாசைக்கு அழைத்து முதலில் அவர்களை பாத்ரசுத்திக்கு கட்டளையிட வேண்டியது.

(ஒத்தாசைக்கு வருபவர்கள் அனைவரும் நல்ஒழுக்கம், பகவத்சிந்தனை முதலியனை உடையவர்களாகவும், தீர்த்தமாடியவர்களாகவும் இருத்தல் அவசியம்)

பாத்ரங்களை எதனைக் கொண்டு சுத்தம் செய்யலாம்..?

தங்கம் மற்றும் தாமிரம் – புளி கரைசல்
வெள்ளி – புகை மற்றும் கரி சாம்பல்
இரும்பு பாத்ரங்கள் – சாம்பலும் தீர்த்தமும் கொண்டு
சங்குகள் – உப்பு
மரபாத்திரங்கள் – மண்ணும், தீர்த்தமும் கொண்டு

இந்த சுத்தம் செய்யபட்ட பாத்ரங்களை, அதனை சுத்தப்படுத்த பயன்படுத்திய வாசனை நீங்கும் வண்ணம் நன்கு அலம்பவேண்டும்.

சூர்யோதயம் ஆரம்பத்திற்கு முன்பே இந்த கர்மாக்களைத் தொடங்கவேண்டும்.

(இந்த இடத்தில் இந்த கார்யகிரமங்கள் அனைத்தும் சன்னிதிக்கு உண்டான கார்யகிரமங்கள் – ஒரு அர்ச்சகர் கோவிலே இல்லாத ஒரு இடத்திற்குச் செல்ல நேரிட்டால் என்ன செய்வது..? எப்படி பூஜை செய்வது..? இதனையும் தெளிவாக விளக்குகின்றார். இதனைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்..)

December 28, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 26

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 10:11 am

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 26
28-12-2009

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
மூன்றாம் அத்யாயம்
ஸமாதிவ்யாக்யானம்

என்னென்ன அலங்காரங்கள் அர்ச்சகர்கள் தமக்குச் செய்து கொள்ள வேண்டும்..?

உச்சந்தலையில் க்ஷோபன அக்ஷதைகளோடு விளங்க வேண்டும்.

தூய்மையான வ்ரதத்தினைக் கடைப்பிடிக்கவேண்டும்.

வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ள வேண்டும்.
மணம் கமழத் திகழ வேண்டும்.

தாம்பூலம் தரித்துக்கொள்ள வேண்டும். (கோவிலுக்குச் செல்வதற்கு முன்பே வாயைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். கோவிலின் எல்லைகளுக்குள் எங்கும் உமி்ழ்வதோ, துப்புவதோ கண்டிப்பாகக் கூடாது. வாய் துர்நாற்றம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.)

மாலைகள் அணிந்து கொள்ள வேண்டும்.

தூய்மையான நல்ல வெண்மையான வஸ்திரங்கள் அணிந்து கொள்ளல் வேண்டும்.

கர்ணபூஷணம் (காதுகளுக்கான கடுக்கண் போன்ற ஆபரணங்கள்) அணிந்து கொள்ள வேண்டும்.

கழுத்துக்கு ஹாரங்கள் (ஆபரணங்கள்) அணிந்து கொள்ள வேண்டும்.

கைக்குக் கடகம்

கைவிரல்களில் மோதிரங்கள்.

இவை எதற்கும் வசதியில்லாவிடின் கைவிரலில் ஒரு மோதிரமாவது தரிக்க வேண்டும்.

தம்முடைய சுவாசக்காற்று எம்பெருமான் மேல்படாதவாறு நாசித் துவாரங்களை வஸ்திரத்தினால் மூடிக்கொள்ள வேண்டும். (இதனால்தான் பெரும்பாலான அர்ச்சகர் மூன்றாவது உத்தரீயமாக தமது வலதுதோளில் இன்னொரு வஸ்திரத்தினை அணிந்து கொள்கின்றனர்)

இவையனைத்தும் செய்து கொண்டுபின் அர்ச்சகர்கள் எம்பெருமானைத் திருப்பள்ளி உணர்த்த வேண்டும்.

சரி..? எப்படி திருப்பள்ளியெழுச்சிச் செய்ய வேண்டும்..?

(இங்கு நாம் சற்று சிந்திக்கவேண்டும். அர்ச்சகர்கள் இவ்வளவு அலங்காரங்கள் செய்து கொள்ள வேண்டுமா..? என்றால், ஆமாம் என்றுதான் சொல்லவேண்டும். எல்லோருமே முக்தி ஒன்றே பிரதானமாகக் கொண்டு கோவில்களுக்கு வருவதில்லை.. பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு வேண்டுகோளுடனோ அல்லது ஏதேனும் கஷ்டங்கள் நிவர்த்திக்காகவோ வருகின்றனர். அவர்கள் அனைவருக்குமே கடவுளிடத்தில் அவர்களது பிரார்த்தனைகளை எடுத்துச் செல்வது – சொல்வது அர்ச்சகர்கள்தாம். அவர்களே உடலில் துர்நாற்றம் பிடுங்க அழுக்குமூட்டையாயிருந்தால் சேவார்த்திகளிடத்து அவநம்பிக்கைத்தான் பெருகும். எனவே அர்ச்சகர்கள் மேற்கூறியவற்றில் எவையெவைக் கடைப்பிடிக்க முடியுமோ அவற்றை செய்தல் நன்று. குறிப்பாக சுத்தமாயிருத்தல் மிக மிக அவசியம்.

இன்னொரு விஷயம் அர்ச்சகர்களே இவ்வளவு அலங்காரம் செய்து கொள்ள வேண்டுமாயின் அவன் ஆராதிக்கும் பெருமாள் இந்த அர்ச்சகனைக் காட்டிலும் பலமடங்கு சுத்தமாகவும் பரிமளத்துடனும், தேஜஸ்ஸூடனும்
இருக்க வேண்டியது மிகமிக அவசியம். இதனை அனைத்து அர்ச்சகர்களும் உணர்ந்து பணியாற்றுதல் வேண்டும்.)

(கடந்த தொடரில் பவித்ரம் தரித்துக் கொள்ள வேண்டியதின் அவசியம் பற்றி பார்ததோம். அதில் மேல்கோட்டையில் மட்டும்தான் அர்ச்சகர்கள் இரு கைகளிலும் பவித்ரம் தரித்துக் கொள்கிறார்கள் என்று சொன்னேன். அங்கு அர்ச்சகர்கள் மட்டுமல்ல அங்குள்ள உடையவரின் திவ்யமங்கள வி்க்ரஹத்திலும் உடையவர் இரு கைகளிலும் பவித்ரம் அணிந்துள்ளார் என்று என் நண்பன் ஸ்ரீ ஸ்ரீராம் அவர்கள் தெரிவிக்கின்றார். )

December 14, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 25

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 11:25 am

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 25
14-12-2009

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
மூன்றாம் அத்யாயம்
ஸமாதிவ்யாக்யானம்

நான்கு பட்சமாக ஊர்த்வ புண்டரம் இட்டுக் கொள்வோமேயானால்

நெற்றியில் – ஸ்ரீவாஸூதேவனையும்,
ஹ்ருதயத்தில் – ஸ்ரீசங்கர்ஷணனையும்
வலதுதோள் – ஸ்ரீப்ரத்யும்னனையும்
இடது தோளில் – ஸ்ரீ அநிருத்தனையும்

தியானித்தவண்ணம் இட்டுக் கொள்ளவேணும்.

12 பட்சத்தில்

நெற்றி – கேசவன்
உதரம் – நாராயணன்
ஹ்ருதயம் – மாதவன்
கண்டம் – கோவிந்தன்
வலதுபக்க உதரம் – விஷ்ணு
வலது தோள் – மதுசூதனன்
வலது கழுத்து – த்ரிவிக்ரமன்
இடது உதரம் – வாமனன்
இடது தோள் – ஸ்ரீதரன்
இடது கழுத்து – ரிஷிகேசன்
பின்புறம் பிருஷ்டபாகத்திற்கு மேல் – பத்மநாபன்
கழுத்து பின்புறம் – தாமேதரன்.
சிரஸ்ஸின் மேல் – ஸ்ரீவாஸூதேவன் (இது சம்ஹிதையில் சொல்லப்படவில்லை ஆனால் சிலர் அனுஷ்டானத்தில் தற்சமயம் உள்ளது).

யக்ஞம், தானம், தபஸ், ஹோமம், போஜனம், பித்ரு கர்மாக்கள் இவையனைத்தும் ஊர்த்வபுண்டரம் இன்றி செய்வோமாயின் பலனற்றதாகிவிடும். ஆகையினால் அனைத்து சித்தியையும் கொடுக்கக்கூடியதான ஊர்த்வ புண்டரத்தினைச் சிரத்தையுடன் தரிக்கவேண்டும்.

ஊர்த்வபுண்டரங்கள் தரித்து அனுஷ்டானங்கள் முடிந்தவுடன் இரண்டு கைகளிலும் மோதிரவிரலில் பவித்ரம் தரித்துக் கொள்ளவேண்டும். (தற்சமயம் எல்லா அர்ச்சகர்களும் ஒரு கையில் (வலது கை) மட்டும் பவித்ரம் தரித்துக் கொள்கின்றனர். ஒருசிலர் தங்கத்தினிலான பவித்ரமோதிரம் மட்டும் தரித்துக்கொள்கின்றனர். மேல்கோட்டை திருநாராயணபுரத்தில் மட்டுமே இன்று வரை அர்ச்சகர்கள் இரு கைகளிலும் பவித்ரம் தரித்துத் திருவாரதனம் முதலானவற்றைச் செய்து வருகின்றார்கள்). பவித்ரம் அணியாமல் பெருமாளுக்குச் செய்யப்பட்ட ஸ்நானம், நைவேத்யம், அர்ச்சனம், நாம் செய்யக்கூடிய தானம், ஜபம், ஹோமம், பித்ருதர்ப்பணம் இவையெல்லாம் பயனற்றது. ஆகையினால் இக்காலங்களில் அவசியம் பவித்ரம் தரித்துக் கொள்ள வேண்டும்.

November 21, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 24

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 11:09 am

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 24
21-11-2009

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
மூன்றாம் அத்யாயம்
ஸமாதிவ்யாக்யானம்

…..ஊர்தவ புண்டரம் இட்டு கொள்ள உதவும் மண் எங்கிருந்து எடுக்கலாம்…..?

கீழ்கண்ட இடங்களிலிருந்து சேகரித்துக்கொள்ளலாம்..!

1) புண்ய க்ஷேத்திரம்
2) மலையுச்சி
3) நதிக் கரை
4) சமுத்திரக் கரை
5) புற்று
6) துளசிச் செடி அடிப்பாகத்திலுள்ள மண்

மண் எந்த நிறத்தில் எல்லாம் இருக்கலாம்..?

1) சிகப்பு
2) மஞ்சள்
3) கருப்பு
4) வெண்மை – ஆகிய நிறங்களில் இருக்கலாம்.

எந்தெந்த நிறத்திற்கு என்ன பலன்கள்..?

1) சிகப்பு :: அனைவரையும் வசப்படுத்த விரும்புபவன்
2) மஞ்சள் :: தனத்தை அடைய விரும்புபவன்
3) கருப்பு :: மன அமைதி அடைய விரும்புபவன்
4) வெண்மை :: மோக்ஷத்தினை விரும்புபவன்

இந்த ஊர்த்வபுண்டரமானது எந்த வடிவினில் இருக்க வேண்டும்..?

1) திரியில் பிரகாசிக்கக்கூடிய தீபம் போன்றோ..
2) மூங்கில் இலை போன்றோ..
3) தாமரை மொட்டு போன்றோ..
4) அல்லி மொட்டு போன்றோ
5) மீன் அல்லது ஆமைப் போன்றோ..
6) சங்கு போன்றோ…

மேற்கூறிய ஆறு அம்சங்களில் ஏதேனும் ஒன்று போன்று தரித்துக் கொள்ள வேண்டும்.

எந்தெந்த விரலினால் இட்டுக் கொள்ளலாம். அந்த விரல்களுக்கானப் பலன்கள்…?

புஷ்டி வேண்டுமானால் … கட்டை விரல்
மோக்ஷம் வேண்டுமானல் … ஆட்காட்டி விரல்
விரும்பியதை அடைய .. மோதிர விரல்
ஆயுள் வேண்டின் … நடு விரல்

எக்காரணம் கொண்டும் நகத்தினால் இட்டுக் கொள்ளவேக் கூடாது.

நம் உடலில் எவ்வளவு ஊர்த்வ புண்டரம் இட்டுக் கொள்ளலாம்..?

4 பக்ஷம் அல்லது 12 பக்ஷம்

எந்தெந்த ஸ்தானத்தில் இட்டுக்கொள்ளலாம்..? அவ்வாறு இட்டுக் கொள்ளும் போது யார் யாரை தியானித்தல் வேண்டும்…?

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 23

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 10:35 am

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 23
02-11-2009

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
மூன்றாம் அத்யாயம்
ஸமாதிவ்யாக்யானம்

இந்த அத்யாயத்தினில் ஸ்நானத்திற்கு பிறகு செய்யவேண்டிய கர்மாக்களைப் பற்றி சாண்டில்யர் விரிவாக எடுத்துரைக்கின்றார்.

ஸ்நானம் முடிந்து சிகை முடிந்தபின், சிகையுள்ள இடத்தினில், இளம் அருகம்புல்லையோ, புஷ்பத்தினையோ அல்லது எள்ளையோ தீர்த்தம் சிறிது சேர்த்து அஸ்த்ர மந்த்ரம் சொல்லி சேர்த்துக்கொள்ளவும்.

பின்பு தீர்த்தம் நிறைந்த பாத்திரத்தினை வஸ்திரம் கொண்டு மூடி கையில் எடுத்துக்கொண்டு ஜனங்கள் அதிகம் செல்லாத வழியே, ஏகாந்தமாய், அழகானதாய்,
தோஷங்கள் அற்றதாய், மனதினை ஒருநிலைப்படுத்துவதற்கு ஏற்றதாய், சுத்தமாக இருக்கக்கூடிய எம்பெருமானின் திருக்கோவிலை நோக்கி, ஹ்ருதயத்தினில் வீற்றிருக்கும் ஞான, ஆனந்தமயனான எம்பெருமானை சிந்தையினில் வைத்து வேறு எந்த திக்கினையும் பாராது மௌனியாய் செல்ல வேண்டும்.

த்வாதசாக்ஷரியை ஜபம் செய்தவண்ணம் ஸந்நிதியின் உள் நுழைந்து ஸந்நிதியைச் சுற்றியுள்ள உட்பிராகாரத்தினை சுத்தம் செய்து, தாம் கையில் நதிதீரத்திலிருந்து கொண்டுவந்த ஜலத்தினால் பிராகாரம் சுற்றி ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.

கர்ப்பகிரஹ வாயிலில் இருந்து பலிபீடம் வரையிலும் உதவியாளர்களைக்(பரிசாரகர்கள்) கொண்டு தூய ஜலம் கொண்டு சுத்தம் செய்க.

பின்பு, ஆச்சார்யன் பாதத்திலிருந்து முழங்கால் வரையிலும், உள்ளங்கையிலிருந்து மணிக்கட்டு வரையிலும் கைகால்களை சுத்தம் செய்தபின்பு ஊர்த்வபுண்டரம் இட்டுக்கொண்டு ஆசமனம் செய்க.

ஊர்த்வபுண்டரத்தோடு சந்தனம் முதலான சுகந்த வஸ்துக்களை சேர்த்து குழைத்து ஊர்த்வபுண்டரம் இட்டுக் கொள்ளவும்.

சரி…! இந்த ஊர்தவ புண்டரம் இட்டு கொள்ள உதவும் மண் எங்கிருந்து எடுக்கலாம்..?

October 22, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 22

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 4:37 pm

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 22
20-10-2009

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
இரண்டாம் அத்யாயம்
ஸ்நான விதி

இயற்கைச் சீற்றம், வெள்ளப் பெருக்கு, ஏதேனும் நதி தீரத்திற்குப் போக முடியாத அளவுக்குக் கஷ்டங்கள் அல்லது நமக்குத் தள்ளாமை – அப்போது என்ன செய்யலாம்….?

கை மற்றும் கால்களை நன்கு அலம்பிக் கொண்டு ஆசமனம் செய்யவும். 10 திக்குகளிலும் (8 திக்குகள், ஆகாயம் + பூமி) ஜலத்தில் ப்ரோக்ஷித்து சுத்தி செய்யவும்.
நடுவில் அமரவும். மூலமந்திரம் சூழ்நிலைக்கேற்ப ஜபம் செய்யவும். பின்னர் பிராணாயாமம். பிறகு பூதசுத்தி செய்யவும். இதற்கு மந்திர ஸ்நானம் என்று பெயர்.
சிரத்தையுடன் செய்வோமாயின், பிரயாகை முதலான தீர்த்த ஸ்நானத்தினைக் காட்டிலும் இது மிகவும் உயர்ந்தது.

தியான ஸ்நானம்

மேற்கூறியவாறு செய்து முடித்தவுடன் ஆகாயத்தில் மந்த்ரமூர்த்தியாய் இருக்கும் ஸ்ரீமந் புண்டரீகாக்ஷனை “ஓம் புண்டரீகாக்ஷாய நம:” என்று தியானித்து தேஜோமயமான அவனது திருவடிகளில் இருந்து தீர்த்தம் பெருகி நமது சிரஸ்ஸின் பிரும்மரந்தரத்தின் வழியே நமது சரீரத்தினுள் அந்த புண்ணிய தீர்த்தம் விழுவதாக மனதினால் பூரணமாக தியானிக்கவும்.
இது தீர்த்த ஸ்நானம், மந்த்ர ஸ்நானத்தினைக் காட்டிலும் மிக மிக உயர்ந்தது. ஒரே ஒரு விஷயம் நம் மனம் ஒருநிலைப்பட்டு, வேறெந்த சிந்தனையுமில்லாது ஆத்மார்த்தமாக செயல்படுதல் மிக முக்கியம்.

திவ்ய ஸ்நானம்

சூர்யனின் கிரணங்களோடு கூடிய மழையில் ஸநானம் செய்வது.

பஸ்ம ஸ்நானம்

கோமயம், ஸமித்துக்களால் எரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட தூய வெண்மையான பஸ்மத்தில், நெற்றி முதலான அங்கங்களில் அந்தந்த ஸ்தானத்திற்குரிய மந்திரங்களைச் சொல்லி ஊர்த்வ புண்டரமாக இட்டுக் கொள்ளுதல். (சாண்டில்யரின் காலத்தில் நாம் இப்போது இட்டுக் கொள்ளும் திருமண் என்பது வழக்கத்தில் இல்லை..!)

வாயவ்ய ஸ்நானம் அல்லது கோதூளி ஸ்நானம்

கோமாதா செல்லும் போது அதன் குளம்பிலிருந்து கிளம்பும் கோதூளிகள்(மண் துகள்கள்) நம் சரீரத்தில் படுவது.

பார்த்திவ ஸ்நானம்

உயர்ந்த மலையுச்சி, புண்ணிய க்ஷேத்திரங்கள் முதலான இடங்களில் பெறப்பட்ட வெண்மையான மண்ணினால் கேசவாதி நாமங்களைச் சொல்லி நம் அங்கங்களில் ஊர்த்வபுண்டரமாக இட்டுக் கொள்ளுதல். இது அனைத்து பாவங்களையும் போக்கக் கூடியது.

இந்த ஏழு விதமான ஸ்நானங்களில் ஏதாவது ஒன்றை அவஸ்யம் செய்யவேண்டும்.

இந்த ஸ்நானம், ஆசமனம், பிராணயாமம் முதலியவைகளால் சரீரத்தின் உள்ளும், புறமும் தூய்மையானவனாய் செய்யப்படும் கிரியைகள் அனைத்தும் நிச்சயமாக பலனைத் தரும்.

இத்துடன் இரண்டாம் அத்தியாயம் “ஸ்நானவிதி“ முடிந்தது.

(ஒரே ஒரு கொசுறுத் தகவல் சமீபத்தில் செய்திகளில் படித்தது. சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகால்களை நன்கு அலம்பி சுத்தம் செய்து கொண்டு சாப்பிட்டால் பன்றிகாய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் அண்டதாம். விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..! இதனை அன்றே நம் சாஸ்திரங்கள் “ஆசமனம்” என்ற ஒரு செயல்முறையில் சொல்லிவிட்டனர்…! )

Older Posts »

Create a free website or blog at WordPress.com.