Srirangapankajam

September 19, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 17

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 12:12 pm

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 17
10-09-2009

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
இரண்டாம் அத்யாயம்
ஸ்நான விதி

பல் துலக்கும் குச்சியானது 12 அங்குலமுள்ளதாக இருக்கவேண்டும். அது வளைந்தோ அல்லது முடிச்சுக்களுடன் இருத்தல் கூடாது.
பல் துலக்குவதற்கு முன், கைகால்கள் அலம்பிக்கொண்டு, ஆசமனம் செய்து,
கிழக்கு முகமாகவோ அல்லது வடக்கு முகமாகவோ பல்துலக்க வேண்டும்.

குச்சியின் மிருதுவான பாகத்தினைக் கடித்து பல்துலக்க வேண்டும். குச்சியிலிருந்து வெளிப்படும் துவர்ப்பான அல்லது கசப்பான சாற்றினை சுவைத்தப்படி பல் துலக்கச் சொல்கின்றார்.

குச்சி கிடைக்காவிட்டாலோ அல்லது அசக்தமாய் இருந்தாலோ ஆட்காட்டி விரலினால் 12 முறை ஜலத்தினால் பல் துலக்க வேண்டும்.

நாக்கு வழிப்பதற்கு 16 அங்குல நீளமுள்ள குச்சி வேண்டும். முடிச்சுடன் கூடாது. உயர்ந்த உலோகங்களால் செய்யப்பட்ட குச்சியாலும் நாக்கு வழிக்கலாம்.

சாண்டில்யர் அடுத்து “ஸ்நானம்“ பற்றிச் சொல்லும் போது, “ஒரு ஊரில் குளங்கள் இருக்கும்போது கிணற்றில் ஸ்நானம் செய்தல் கூடாது மற்றும் எந்த குளத்தில் அதிகம் நீர் உள்ளதோ அந்த குளத்தில் குளிக்க வேண்டும் எனவும், அந்த ஊரில் ஓடுகின்ற நதியிருக்குமாயின் நதியில்தான் குளிக்க வேண்டும்“என்றும் குறிப்பிடுகின்றார்.

இந்த நதிகளைப் பற்றி சில குறிப்புகளைச் சொல்கின்றார்.

எந்த நதியானது சமுத்திரத்தில் சென்று கலக்கின்றதோ அந்த நதி மிகச் சிறந்த புண்ய நதியாம்!

இதில் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பிரவாகம் எடுத்து ஓடும் நதி மிகமிகச் சிறந்த புண்ய நதியாம்!

இவற்றில் எந்த பக்கத்து நதிக்கரை நித்ய அனுஷ்டானம் பண்ணுவதற்கு ஏற்றது..?

கிழக்கு நோக்கி ஓடும் நதிகளின் தென்கரை வடக்குக் கரையினைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தது.

வடக்கு நோக்கி ஓடும் நதிகளுக்குக் கிழக்குக் கரை நல்லது!

இதில் ஒவ்வொன்றைக் காட்டிலும் சிறந்தவற்றில் 10 மடங்கு பலன் அதிகமாம்!

நம் பூர்வாச்சார்யர்களை நாம் தற்சமயம் நினைவு கூறுவோம்..!

ஸ்ரீரங்கத்தில் ஓடும் இரு நதிகளுமே வடக்கிலிருந்து கிழக்கு நோக்கித்தான் பாய்கின்றது. அதில் நம் பூர்வாச்சார்யர்கள் அனைவருமே கொள்ளிடக்கரையின் தென்கரையில் தற்சமயம் சிதிலமடைந்து காணாமலே போய்விட்ட ஆதிகேசவ பெருமாள் சன்னிதியினைச் சுற்றியுள்ள (மணவாள மாமுனிகள் திருவரசு இருந்த இடம்.!) சதுர்வேதி மங்கலத்தில் அன்றாட அனுஷ்டானங்களுக்கு ஏதுவாக வசித்து வந்துள்ளார்கள்! அவர்கள் எவ்வளவு தெளிவான வாழ்க்கை வந்துள்ளனர் என்பதினை நினைக்கும்போது மனம் பூரிப்படைகின்றது..!

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: