Srirangapankajam

September 4, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 15

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 11:04 pm

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 15
29-08-2009

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
இரண்டாம் அத்யாயம்
ஸ்நான விதி

பகவானை ஆராதனம் செய்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை நியமங்களை இந்த இரண்டாம் அத்யாயத்தில் விவரிக்கின்றார் ஸ்ரீசாண்டில்ய மஹரிஷி..!

ஆராதகன் பிரம்ம முஹூர்த்தத்தில் (அதிகாலை -சூரியன் உதிக்கும் முன்பு) எழவேண்டும்.

படுக்கும் போதும், எழும் போதும்

“ஓம் நமோ வாஸூதேவாய நம: சங்கர்ஷணாய தே (ச)|
ப்ரத்யும்னாய நமஸ்தேஸ்து – அனிருத்தாய தே நம: ||

என்றும்

“நமோ நம: கேசவாய, நமோ நாராயணாய ச
மாதவாய நமஸ்ச்சைவ, கோவிந்தாய நமஸ்தத:
விஷ்ணவே த நமஸ்குர்யாத் நமஸ்தே மதுசூதன
நமஸ் த்ரிவிக்ரமாயத, வாமனாய நமஸ்தத:
ஸ்ரீதராய நமஸ்ச்சாத, ரிஷிகேசாய ஓம் நம:
நமஸ்தே பத்மநாபாய, நமோ தமோதராய ச”

என்று மேலே சொல்லப்பட்ட பகவானின் 16 நாமாக்களையும் (முதல் ஸ்லோகத்தில் நான்கு நாமாக்கள் – இரண்டாவது ஸ்லோகத்தில் 12 நாமாக்கள்)
மற்றும் எம்பெருமானின் தச அவதாரங்களின் நாமாக்களையும், சொல்லியபடியே படுக்க வேண்டும் – எழ வேண்டும்.

இந்த நாமாக்களை மனதிற்குள்ளேச் சொல்லக்கூடாது.
உரத்தகுரலில் சந்துஷ்டியுடன் சொல்ல வேண்டும்.
கீர்த்தனையைப் போல உரத்து பாடவும் செய்யலாம்.
(இவ்வாறு சொல்வதால் நாம் மட்டுமின்றி அருகில் இருப்பவரும் இந்த பகவானின் நாமாக்களைக் கேட்பார்கள் – அவர்கள் மனதிலும் பதியும் அல்லவா…?)

படுக்கையிலிருந்து எழும் போது, “ஹரி.., ஹரி…,“ என்று
சொல்லியபடியே எழ வேண்டும்.

அவ்வாறு எழும் போது, “நம: க்ஷிதிதராய“ என்று சொல்லிக் கொண்டு முதலில் இடது காலை பூமியில் பதித்து எழுதல் வேண்டும்..“

இதன் பிறகு “சௌச ப்ரகாரம்“ (மலங்கழித்தல், சுத்தம் செய்தல்) சொல்கின்றார். இதனை விவரணமாக எழுதுதல் என்பதும் கடினம் – கடைப்பிடித்தல் என்பது ஏறத்தாழ தற்கால சூழ்நிலைக்கு இயலாத ஒன்று – அந்த காலத்தில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்துள்ள ஒரு காலகட்டத்தில் இதனையெல்லாம் கடைப்பிடித்து வாழ்ந்துள்ளனர் நம் பெரியோர்கள். ஒரு சிறிய உதாரணம் சொல்கின்றேன். மலத்தினை நேரடியாக பூமியின் மீது கழித்தல் கூடாது என்கின்றார். புற்செடிகளைப் பிடுங்கி பூமி மீது பரப்பி அதன் மீது கழிக்கச் சொல்கிறார்..

தற்போதுள்ள கால சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு
நமக்கு ஒத்துவரக்கூடிய செயல்கள் சிலவற்றைக் காண்போம்..!

Blog at WordPress.com.

%d bloggers like this: