Srirangapankajam

August 28, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 14

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 11:51 pm

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 14
23-08-2009

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
முதல் அத்யாயம்

சாண்டில்யர் சனகரிடத்து கூறுகின்றார், “உம்மைப் போலவேதான் நானும் சங்கர்ஷணரிடத்து சாமானிய மக்களும் கடைத்தேற வேண்டி இந்த ஏகாயனசாகையினை எளிமையாகத் தரக் கோரினேன்.
அதற்கு சங்கர்ஷணரும் இரங்கி, இந்த லக்ஷம் ஸ்லோகம் கொண்ட ஏகாயனசாகையிலிருந்து 16000 ஸ்லோகம் மட்டிலும் கொண்ட மிகச் சிறந்ததான இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதையினை எனக்கு அருளினார்.
இதனை திருப்பாற்கடலில் திருமாலிடமிருந்து நாரத மஹரிஷியும் கேட்டறிந்துள்ளார்..“ என்று கூறி ஸ்ரீபாரமேஸ்வர ஸம்ஹிதையினை சனகருக்கு உபதேசிக்கின்றார் சாண்டில்யர்!

இதில் எம்பெருமானின் திவ்யாத்ம ஸ்வரூபங்களும்,
கல்யாண குணங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன.

இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதை, ஞான காண்டம், க்ரியா காண்டம் என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஞான காண்டத்தில் எம்பெருமானின் ஆறு குணங்கள்,
திவ்யமங்கள விக்ரஹம் சிறப்பு, விபவ அவதாரம்,
லக்ஷ்மி, புஷ்டி (ஸ்ரீதேவி, பூதேவி) இருவரின் சிறப்பு,
திவ்யாயுதங்கள், கருடன் முதலான நித்யசூரிகள், பரமபதம், வ்யூக மூர்த்திகள், அவர்களது ஸ்தானங்கள்,
பரமபதத்தில் உள்ள சாலைகள், அதன் அழகு மற்றும் அளவுகள், ஜீவாத்மா ஸ்வரூபம், முக்தன் – பத்தன்,
முக்திக்குண்டான மார்க்கம், பகவத் மந்த்ரங்கள், முத்ரைகள், யோகங்கள் முதலானவைகள் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன என்கிறார் சாண்டில்யர்.

நம்முடைய துரதிர்ஷ்டம் – இந்த பல அரிய சூக்குமமான விஷயங்கள் கொண்ட, 8000 ஸ்லோகங்கள் கொண்ட, இந்த ஞானகாண்டம், இதனுடைய முதல் அத்யாயத்தினைத் தவிர இதர பாகங்கள் கிடைக்கவேயில்லை..!

சுமார் 200 வருடங்களுக்கு முன் ஸ்ரீநாராயண சூரி என்பவர் இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதைக்கு வியாக்யானம் செய்துள்ளார். அவருக்கே இந்த ஞான காண்டம் கிடைக்கவில்லை என்கிறார். ஆக 200 வருடங்களுக்கு முன்பே இதனுடைய ஞான காண்டம் மறைந்து விட்டது (ஸ்ரீநாராயண சூரியின் வியாக்யானம் எவரிடமாவது உள்ளதா..? என்று தெரியவில்லை..!)

1953ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ஸ்ரீ உ.வே. கோவிந்தாச்சாரியார் என்னும் மஹா பண்டிதரின் கடும் உழைப்பின் பயனாய் நாம் இன்று இப்போது நாம் படிக்கும் “க்ரியா காண்டம்“ கிடைத்துள்ளது.

இந்த “க்ரியா காண்டத்தில்“ இனி அடுத்து வருவது “ஸ்நானவிதி்“..!

Blog at WordPress.com.

%d bloggers like this: