Srirangapankajam

August 23, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 13

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 3:09 pm

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 13
19-08-2009

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
முதல் அத்யாயம்

சாண்டில்யர் தொடர்கின்றார் “இந்த பாஞ்சராத்ரமானது
வேதமாகிய மரத்திற்கு வேர் போன்றது..! எம்பெருமான் ஒருவனைப் பற்றிச் சொல்வதையே குறிக்கோளாய் கொண்டது.! சந்தேகமேயில்லாதபடி எம்பெருமானைப் பற்றித் தெள்ளத் தெளிவாகச் சொல்லி அஞ்ஞானமாகிய இருட்டினை அகற்றக் கூடியது, இந்த உயர்ந்த பகவத் சாஸ்திரம்..! “

இதனை பகவான் வைஸ்வமனுவிற்கு உபதேசித்துள்ளான். ஸ்வேத த்வீபத்தில் (திருப்பாற்கடலினை ஒட்டியுள்ள கரையோரம்.!) நாரதருக்கு உபதேசிக்கப்பட்டது. நாரதருடன் கூட
ஸநத் சுஜாதர், ஸனந்தனர், ஸனத்குமாரர், கபிலர் முதலிய மஹாஞானிகள் இதனை அத்யயனம் செய்து வந்தனர்.

மரீசி, அத்ரி, அங்கீரஸர், புலஸ்யர், புலஹர், க்ரது, வஸிஷ்டர் மற்றும் ஸ்வாயம்புவ மனு ஆகிய எட்டு மஹரிஷிகளும் இந்த பாஞ்சராத்ரத்தில் கூறியுள்ளபடி பகவானை வழிப்பட்டனர்.

இந்த அற்புதமான சாஸ்திரமானது அவ்வளவு எளிதில் கிட்டியதில்லை. பல ஆயிரக்கணக்கான தவத்தின் பயனாய் எனக்குக் கிடைத்தது. பல லக்ஷக்கணக்கான ஸ்லோகங்களைக் கொண்டது. இதனைப் பிரித்து ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் என பல ஸம்ஹிதைகளாகச் செய்தனர்.

மனு முதலானவர்கள் “மனு ஸ்மிரிதி“ பண்ணினார்கள்.

இதுவே எல்லா சாஸ்திரங்களுக்கும் ஆதாரம்..!

இதில் தர்மார்த்த காம மோக்ஷங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன..!

அஸ்வமேதம் முதலான யாகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.!

எம்பெருமானுக்கே உண்டான பல அரிய மந்த்ரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன..!

“உபரி சரஸ்“ என்ற வசுக்களின் அரசன் ஸவர்க்கத்தினை அடைய அஸ்வமேதம் முதலாக யாகங்களை இதில் கூறியபடி அனுஷ்டித்து அடைந்தான்.!

இதனை நான், சுமந்து, ஜெய்மினி, ப்ருகு, ஓளபகாயநர் மற்றும் மௌஜ்யாயனர் ஆகியோருக்குச் சொல்லிக் கொடுத்துள்ளேன்..!

லோகத்திற்கு நன்மையைச் செய்யும் பொருட்டு, பத்ரிகாஸ்ரமத்தில். ஸ்ரீமந் நாராயணன், இதில் சொல்லப்பட்டுள்ள மூலமந்திரத்தினை, நரனுக்கு உபதேசம் செய்துள்ளார்.

க்ருத யுகத்தில் இந்த தர்மமானது எல்லாராலும் ஒரே மனதாக அனுஷ்டிக்கப்பட்டு எல்லோரும் உயர்ந்த கதியினையடைந்தனர். த்ரேதா யுகத்தில் மக்கள் பல ஆசைகளைக் கொண்டவர்களாய் மாறி சில தேவதாந்திர வழிபாட்டில் (எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனைத் தவிர்த்து இதர தெய்வ வழிபாடு.) ஈடுபாடு காட்டினர். அப்போது இந்த உயர்ந்த பகவத் தர்மமானது மறையத் தொடங்கியது. பகவான் யார் உண்மையான தாபத்துடன் உள்ளனரோ, யார் உரிய யோக்யதாம்சங்களுடன் விளங்குகின்றனரோ அவர்களுக்கு மட்டுமே இந்த பகவத் தர்மத்தினை வெளிப்படுத்தினான்..! அப்படிப்பட்ட எம்பெருமானிடமிருந்து நானும் இதனை கடும் தவத்தின் பயனாய் கைவரப் பெற்றேன். இதைத் தவிர இரண்டு விதமான ஞானம், 13 விதமான கர்மாக்கள், 12 விதமான வித்யை ஆகியவனவும் அடையப்பெற்றேன் (இதில் சாண்டில்யர் குறிப்பிட்டுள்ள ஞானங்கள், கர்மாக்கள் மற்றும் வித்யைகள் எவைஎவையென்று இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதைக்கான வியாக்யனம் ஏதும் கிடைக்காதப்படியினால் அறிய முடியவில்லை..!)” என்று சொல்லி சனகரிடத்து இந்த பாஞ்சராத்ரமாகிய ஏகாயன வேதத்தினை உபதேசிக்கின்றார். பல ஆண்டுகள் உபதேசம் ஆகின்றது.

முடிவில் சனகர், சாண்டில்யரிடத்து கேட்கின்றார், ”தேவரீருடைய பரம அனுக்கிரஹத்தினால் மோக்ஷத்தினைத் தரக்கூடிய இந்த உயர்ந்த தர்மமானது அடியேனால் அறியப்பட்டது. தபஸ்விகளான நமக்கே பல லக்ஷம் ஸ்லோகங்கள் கொண்ட இந்த தர்மத்தினை அறிய பல ஆண்டுகள் ஆகும் போது, பாவம்..! இந்த ஸம்சாரிகள் எவ்விதம் அறிவது..? எப்படிக் கடைத்தேறுவது..? என்று, நமக்காக பரிவுடன் வினவுகின்றார் !

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: