Srirangapankajam

August 19, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 12

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 1:39 pm

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 12
14-08-2009

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
முதல் அத்யாயம்

நூறு வருடங்கள் கடுமையான தபஸ்ஸின் பயனோ, அல்லது ஒரு சில நிமிடங்கள் பகவானைக் காணாது சனகர் தவித்த தவிப்பு, சோகம் முதலானவற்றால் ஏற்பட்ட பரிவோ, ஸ்ரீவாஸூதேவன் அவரிடத்து பேச ஆரம்பித்தார்.

”ஹே! தவ உத்தமரே! உனக்கு மங்களம் உண்டாகட்டும்!
இதே மலையில் மற்றொரு இடத்தில் சாண்டில்யர் என்னும் ஒரு மஹாதபஸ்வி உள்ளார். நீ உடனடியாக அவரை ஆஸ்ரயிப்பாயாக! உண்மையான பகவத் தர்மத்தை, இம்மையிலும், மறுமையிலும் செம்மை தரும் வழியினை, என்னை அடையும் மார்க்கத்தினை அவர் உனக்கு உபதேசிப்பார்“ என்று ஆசீர்வதித்தது அந்த அசரீரி!

சனகர் அந்த தோதாத்ரி மலையில் சாண்டில்யரைத் தேடி வலம் வரலானார். ஒரிடத்தில் அழகிய தாமரைத் தடாகத்தினைக் கண்டார். ஒவ்வொரு ருதுக்களிலும் மட்டும் பூக்கும் புஷ்பங்கள் அங்கு ஒரு சேர பூத்து குலுங்குவதை கண்ணுற்றார். பல தபஸ்விகள் அந்த இடத்தில் நிஷ்டையில் ஆழ்ந்திருந்தனர். மஹா தேஜஸ்வியாய் அவர்களில் நாயகனாய் சாண்டில்யர் விளங்கக் கண்டார். அவரைப் பணிந்து வீழ்ந்து வணங்கினார்.

சனகரை பார்த்தவுடனேயே சாண்டில்யர் உணர்ந்து விட்டார். சனகரை ஆசீர்வதித்தார். ”தபோ சிரேஷ்டா!
உண்மையான பகவத் தர்மத்தை நாடி நீ இங்கு வந்துள்ளாய்! நான் பல ஆண்டுகள் இதனைப் பெற கடுமையான தவம் செய்தேன்! அப்போது அச்சுதன் தோன்றி எனக்கு வேதங்களை உபதேசித்தான். இந்த வேதங்கள் அனைத்துமே எம்பெருமானே பரம்பொருள் என்று சில பாகங்களில் மட்டுமே சொல்லி பெரும்பாலான இடங்களில் இதர தெய்வங்களையும்
போற்றுவதாகயுள்ளது. ஆகவே எனக்கு இந்த வேத அறிவு நிறைவுத் தரவில்லை.

“யஸ்து சர்வ பரோதர்ம: யஸ்மான் நாஸ்தி மஹத்தர:
வாஸூதேவஹை நிஷ்டைஸ்து தேவாதாந்திர வர்ஜித:
தத்திஞ்ஞாஸ்ச்சா பலவதி ததாத் வாவி ரபூந் மம
ததோத்ர பர்வத ஸ்ரேஷ்டே தபஸ்த்தத்வம் மஹோத்தமம்
அநேகாணி சஹஸ்ராணாம் வர்ஷணாம் தபோஸோன் தத:
த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே ஆதௌ கலியுகஸ்யச
சாக்ஷாத் சங்கர்ஷணாத் வ்யக்தாத் ப்ராப்தயேஷ மஹத்தர:
ஏஷ ஏகாயனோ வேத: ப்ரக்யாத சாத்வதோ விதி:
துர்விக்ஞயோ துஷ்கரஷ்ச ப்ரதிபுத்யேர் நிஷ்வ்யதே
மோக்ஷாயனாய வைபந்தா: ஏத தன்யோ ந வித்யதே“

பொருள்

”எது உண்மையான பரம பகவத் தர்மம்? பொய்யான அறிவு விடுத்து எது உண்மையான ஞானம்? இதர தெய்வங்களை நாடாது பரம்பொருளான வாஸூதேவனை மடடும் அடையச் செய்யும் மார்க்கம் எது? இது குறித்து இந்த உன்னதமான மலையிலே நான் மேலும் பல ஆயிரம் வருடங்கள் தவம் செய்தேன்! இந்த தவத்தின் பயனாக சாக்ஷாத் சங்கர்ஷணனே என் முன் தோன்றி “ஏகாயன வேதம்” என்றழைக்கப்படும் இந்த பாஞ்சராத்ரத்தினை எனக்கு உபதேசித்தான். இது பகவானை அடையவேண்டும் என்ற ஒரே சிந்தையுள்ளவர்களுக்கு மட்டுமே உபதேசிக்க வேண்டும்!
துர்சிந்தனையுள்ளவர்களுக்கும், வேறு தெய்வங்களை நாடுபவர்களுக்கும் உபதேசிக்கவே கூடாது!. மோக்ஷத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் மிகச் சிறந்த உபாயம், வித்யை இதுதான்..” என்று கூறுகின்றார்

Blog at WordPress.com.

%d bloggers like this: