Srirangapankajam

August 11, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 11

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 9:44 pm

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 11
09-08-2009

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
முதல் அத்யாயம்

தோதாத்ரி மலை…! தற்போது வானமாமலை என்றழைக்கப்படும் மிக உன்னதமான க்ஷேத்திரம்.!
இங்கு தேவர்களும் கந்தர்வர்களும் இங்குள்ள பெருமாளை அனுதினமும் ஸேவித்தவாறு இருக்கின்றார்கள். பல புண்ய தீர்த்தங்கள் இந்த
புனிதமான இடத்தினுள் உள்ளது. அனைத்து வகை ஜாதிபுஷ்பங்களும் பூத்து குலுங்குகின்றது. பலவிதமான ஆஸ்ரமங்கள் அமையப் பெற்றது, அதில் பல தப ஸ்ரேஷ்டர்கள் வசித்து வருகின்றார்கள். வேதம் மற்றும் வேதாந்தாத்தில் நாட்டமுடைய அறிஞர்களும், தவத்தில் நாட்டமுடைய முனிவர்களும், சாங்க்ய சித்தாந்தத்தில்
(இது கபில மஹரிஷி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சித்தாந்தம்) சிறந்தவர்களும், யோக சித்தாந்தாத்தில்
(இது பதஞ்சலி மஹரிஷி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு மார்க்கம்) ஈடுபட்டுள்ளவர்களும், இதிஹாஸ புராணங்களில் வல்லுனர்களும், தர்ம சிந்தனையுடையோர்களும் நிரம்பி வழிந்துள்ள ஒரு
அற்புதமான க்ஷேத்திரம்! தேவரிஷிகள் மற்றும் ராஜரிஷிகளும் அங்கு காணப்படுகின்றனர். மந்த்ர சித்தியடைந்த மஹான்கள் பலர் உள்ளனர்!

”தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச்
சிரீவர மங்கலநகர் * ஏற வீற்றிருந்தாய்!
உன்னை எங்கெய்த கூவுவனே”

-திருவாய்மொழி 5-7-4

இத்தகைய பலரது இருப்பினால் “இருப்பிடம் வைகுந்தம்” ஆன இந்த புண்யமான மலையினில் பிரும்மாவினுடைய புத்ரர் ஆன “சனகர்“ என்பவர் பரம்பொருளை அடைய விரும்பி கடுமையான தபஸ் செய்கின்றார்!

ஒரிரு வருடங்கள் அல்ல..! நூறு வருடங்கள் காம க்ரோதங்கள், இந்திரியங்களை அடக்கி அந்த பரம்பொருளான பகவானைக் குறித்த கோரத்தவம்..!

இவ்வளவு புனிதமான அதிர்வலைகள் கூடிய ஒரு புண்யமான இடத்தில் சிந்தை கலையாமல் சிரீவரமங்கையில் தவமிருந்தும் பகவான் அவருக்குக் காட்சி தரவில்லை!

அந்த தபஸ்ரேஷ்டர் தவித்துப் போனார்..! சோகம்
அவரைத் தொற்றிக் கொண்டது..!

தீடிரென்று அவர் தபஸ் செய்த இடமே பிரகாசமானது..!
அந்த புருஷோத்தமன், சாதாரண பக்தன் தவித்தாலே பொறுக்காத அந்த பக்தவத்ஸலன், அசரீரியாய் அந்த
சனகரிடத்து பேச ஆரம்பித்தான்..!

Blog at WordPress.com.

%d bloggers like this: