Srirangapankajam

August 9, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 10

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 10:16 pm

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 10
31-07-2009

பாஞ்சராத்ர ஆகமங்கள் பல உள்ளன. அவற்றில் பிரதானமாக எடுத்துக்கொள்ளப்பட்டது மூன்று ஆகமங்கள் ஆகும். அவைகள்
ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் ஆகியவையாம். இவைகள் “ரத்னத்ரயம்“ என்றழைக்கப்படுகின்றது.

இந்த மூன்றுக்கும் உப ப்ரஹ்மணங்களாக, அதாவது விவரணமாக ஸாத்வதத்த்திற்கு -ஈஸ்வர ஸம்ஹிதையும், பௌஷ்கரத்திற்கு – பாரமேஸ்வர ஸம்ஹிதையும், ஜயாக்யத்திற்கு – பாத்ம ஸம்ஹிதையும் உள்ளன.

இம்மூன்றும் மூன்று முக்கிய திவ்யதேசத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றது. மேல்கோட்டையில் ஈஸ்வர ஸம்ஹிதையும், ஸ்ரீரங்கத்தில் பாரமேஸ்வரமும், காஞ்சியில் பாத்மமும் அனுஷ்டானத்தில் உள்ளன.

நாம் இனி இங்கு ஸ்ரீரங்கத்தில் அனுஷ்டானத்திலுள்ள பாரமேஸ்வர ஸம்ஹிதையிலிருந்து முக்யமானவற்றைக் காண்போம்.!

பாரமேஸ்வர ஸம்ஹிதையின் முதல் ஸ்லோகமே
“நமஸ் ஸகல கல்யாண தாயிநே சக்ரபாணயே
விஷயார்ணவ மக்நாநாம் சமுத்தரணஹேதவே”
என்று தொடங்குகிறது
.
”ஸகல கல்யாண தாயிநே” என்றால் என்ன..? “ஸகல கல்யாண குணங்களும் நிரம்பிய“ என்று பொருள்!

பிள்ளைலோகாச்சாரியார் தமது முமுக்‌ஷுப்படியில் (136)
”புருஷகார பலத்தாலே ஸ்வாதந்த்ர்யம் தலைசாய்ந்தால் தலையெடுக்குங் குணங்களைச் சொல்லுகிறது நாராயணபதம்” என்கிறார்.

சேதனர்களாகிய நாம், நாம் செய்த குற்றங்களையெல்லாம் எண்ணி, அந்தோ! இத்தனைக் குற்றங்களை நாம் செய்துள்ளோமே.? நாம் எப்படி பெருமாளின் திருவடிகளில் சென்றடைவது..! என்று அஞ்சி அவனை விட்டு நாம் அகன்று ஓடிவிடாதபடி, நம்மை திருத்தி பணிகொள்வதற்காகவே, வாத்ஸல்யம், ஸ்வாமித்வம், ஸௌசீல்யம், ஸௌலப்யம், ஜ்ஞானம், சக்தி முதலான திருகல்யாண குணங்களோடு எம்பெருமான் அர்ச்சையிலே காத்திருக்கின்றான்!

வாத்ஸல்யம் – தன்னை வந்தடைந்த சேதனின் குற்றங்களைப் பாராமல், எப்படி பசு தான் ஈன்ற கன்றினிடத்து பாசமுடன் விளங்குகின்றதோ, அதுபோன்ற அவனிடத்து இன்னருள் சுரந்து, “கதஞ்சன நத்யஜேயம்” ஒருபோதும் கைவிடுபனல்லேன் என்ற வைராக்கியத்துடனே சேதன்னுக்கு பல நன்மைகளைச் செய்யும் இயல்புடையவனாய் விளங்குகின்றான்.

ஸ்வாமித்வம் – சேதன்ன் ஈஸ்வரனை நினையாமல் பாராமுகமாயிருந்தாலும், எம்பெருமான் இவனை விடாமல் நின்று காப்பாற்றுகின்றானே! இந்த ஒரு பந்த விசேஷத்திற்குதான் “ஸ்வாமித்வம்“ என்று பெயர்

ஸௌசீல்யம் – தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் சிறிதுமின்றி, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பாராது சேதன்னுடன் இரண்டற கலத்தல் ஸௌசீல்யமாகும்!

ஸௌலப்யம் – அணுகுதற்கு எளியவனாய் இருத்தல்

ஞானம் – அறிவு – சேதனனைக் காப்பாற்றி தன்னடி கீழ் சேர்க்கக்கூடிய சாமர்த்தியம்.

சக்தி – எதையும் செய்யக்கூடிய ஆற்றல். தாழ்ந்த நிலையிலுள்ள சம்ஸாரிகளை நித்யசூரிகளோடு ஒப்ப சேர்த்து வைக்கக்கூடிய ஒரு ஆற்றல்!

”குற்றங்கண்டு வெருவாமைக்கு வாத்ஸல்யம் – கார்யஞ்செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம் – ஸ்வாமீத்வம் கொண்டு அகலாமைக்கு ஸௌசீல்யம் – கண்டு பற்றுகைக்கு ஸௌலப்யம் – விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுக்கைக்கு ஜ்ஞான சக்திகள்” (முமுக்‌ஷுப்படி-138).

இவ்வளவு கல்யாணகுணங்களோடு சேதனுக்காகக் காத்திருக்கும் அந்த எம்பெருமானுக்கு நாம் செய்யவேண்டியது யாது?

ப்ரபத்தி! அப்படியென்றால்..? ப்ராப்தியும்.., பூர்த்தியும்…!

ப்ராப்தியென்றால் அடையவேண்டியது.
பூர்த்தியென்றால் வேண்டுவனயாவும் நிறைந்திருக்கை. அதாவது நாம் அவனடி சரணமடையத் தேவையான குண பூர்த்தி நிறைந்திருக்கை! இவ்விரண்டையும் சேர்த்து அதாவது ப்ரபத்தியென்றால் அவன் தம் திருவடிகள்தாம் தஞ்சமென்றிருக்கை!

சரி….! மேலேகூறிய இந்த கல்யாணகுணங்கள் அனைத்தையுமே நாம் அர்ச்சையில் காண இயலுமா..?

காணலாம்..! நான் சொல்லவில்லை! முமுக்ஷுப்படியில்(141)

பிள்ளைலோகாச்சாரியார் சொல்லுகின்றார்.

”இவையெல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம்”

மேலும் சொல்கின்றார்

”திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும், வைத்தஞ்சல் என்ற கையும், கவித்த முடியும், முகமும் முறுவலும், ஆஸநபத்மத்திலேயழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்” (முமுக்‌ஷுப்படி-142).

‘முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்த்துவோ?
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச்சோதியாடையொடும் பல்கலனாய்* நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே! கட்டுரையே!
-திருவாய்மொழி (3.1.1)-

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: