Srirangapankajam

July 6, 2009

ஸ்ரீபாஞ்சராத்ரம் – 03

Filed under: ஸ்ரீபாஞ்சராத்ரம் — srirangapankajam @ 9:51 pm

ஸ்ரீ பாஞ்சராத்ரம் – 03
30.06.2009

பாஞ்சராத்ரமானது “ஏகாயன வேதம்” என்றும் அழைக்கப் பெறுகின்றது. “சாண்தோக்ய உபநிஷத்“ என்று ஒரு உபநிஷத். இதில் நாரதரும் சனகரும் இருவரும் தம்தம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு பகுதி
இதில் “ருக்வேதம் பகவோத்யேபி, யஜூர் வேதம், சாமவேதம், ஹ்யதர்வணம், வாகோவாக்யம், ஏகாயனம்…“என்று பாஞ்சராத்ரத்தினை ஏகாயனம் என்று குறிப்பிட்டு ஒரு சொற்றொடர் வருகின்றது. இதன் மூலம் நாரதர் பேசுவதாக வரும் ”சாண்தோக்ய உபநிஷத்“ தின் காலத்திற்கு பலகாலம் முன்பே உள்ள பாஞ்சராத்ரத்தின் அருமையினை தெரிந்து கொள்ளலாம்.
(இந்த பாஞ்சராத்ர ஆகமத்தினை பகவான் ப்ரஹ்மாவிற்கு உபதேசித்து பிரம்மாவினால் நாரதருக்கு உபதேசிக்கப்பட்டு பின்னர் நாரதர் ஐந்து ரிஷிகளிடத்தும் உபதேசித்தாகவும் ஒரு கருத்துண்டு..!)

ஒரு காலத்தில் சில முக்கிய பாஞ்சராத்ர ஆகம முறைப்படியுள்ள கோவிலில் பூஜை செய்தவர்கள் அனைவருமே ஔபகாயன, சாண்டில்ய, பாரத்வாஜ, கௌசிக, மௌஞ்யாயன ஆகிய ஐந்து கோத்ரத்தினை சேர்ந்தவர்களாக மட்டுமேயிருந்தனர். அது போன்று அவர்கள் சுக்லயஜூர் வேதம், காண்வ சாகை என்ற பிரிவைச் சார்ந்தவர்களாயும் மட்டுமே இருந்தனர்.

தற்சமயம் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், மேல்கோட்டை ஆகிய மூன்று திவ்யதேசங்களில் மட்டும் இந்த ஐந்து கோத்ரத்தினைச் சார்ந்தவர்கள் மட்டுமே அர்ச்சகர்களாய் கைங்கர்யம் செய்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் அர்ச்சகர்கள் அருகிலுள்ள பல பாஞ்சராத்ரகோவில்களிலும் பணியாற்றியுள்ளனர். இப்போதும் ஸ்ரீரங்கம் கோவிலின் சில அர்ச்சகர்களுக்கு திருவெள்ளரை கோவிலில் முறைகள் உள்ளன.

வெகு வருடங்களுக்கு முன் காஞ்சிபுரத்திலும், கீழ்திருப்பதி அலர்மேல்மங்காபுரத்திலும் முறைகள் இருந்து வந்தன.

மேல்கோட்டையில் செல்லப்பிள்ளைக்கு இராமானுஜர் சில காலம் திருவாராதனம் செய்துவருகையில் கிரஹஸ்தர்கள் செய்தால் நன்றாகயிருக்குமே என்று தோன்றிமையினால் ஸ்ரீரங்கத்திலிருந்து “மௌஞ்யாயன“ கோத்திரகாரர்கள் அனைவரையுமே மேல்கோட்டைக்கு அழைத்து சென்றதால் ஸ்ரீரங்கத்தில் இந்த கோத்திரம் விடுபட்டுப்போனதாக ஒரு செய்தியுண்டு.

அப்படியிருக்க ஏன் ஸ்ரீரங்கத்திலும் காஞ்சிபுரத்திலும் உள்ள அர்ச்சகர்கள் வடகலை திருமண்காப்பும், மேல்கோட்டை அர்ச்சகர்கள் தென்கலை திருமண்காப்பும்
இட்டுக் கொள்கின்றனர்..?

எனக்குத் தெரிந்ததை மற்றும் நான் சிலரிடம் கேட்டு அறிந்ததைச் சொல்லுகின்றேன்..! இதில் ஏதும் தவறிருப்பின் திருத்திக் கொள்கிறேன்..!

இந்த அர்ச்சகர்கள் அனைவருமே வடகலை மற்றும் தென்கலை இதில் எந்த கலையும் சார்ந்தவர்கள் இல்லை..! இந்த கலாபேதம் சில நூற்றாண்டுகளுக்கு முன் வந்ததுதான்..! திருவாய்மொழியில் ஒரு பாசுரம்..!

கரியமேனிமிசை
வெளிய நீறு சிறிதேஇடும்
பெரியகோலத்தடங்கண்ணன்
விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசை மாலைகள்-ஏத்தி
உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு ?
இன்று தொட்டும் இனி என்றுமே (tiruvaimozhi 4-5-6)

“இதில் வெளிய நீறு சிறிதேஇடும்“ என்பதற்கு பன்னீராயிரப்படி திருவாய்மொழி வியாக்யானத்தில்
”கற்பூர தூளிதவளம் க்ருத்வா தேவஸ்ய விக்ரஹம்”
என்று உள்ளது.

“அதாவது பச்சைகற்பூரத்தினால் பகவானிடத்து (திருமுகமண்டலத்தில் ஊர்த்வமுகமாக) தூவுதல்“ என்று பொருள்.

இந்த அர்ச்சகர்களும் இந்த விதமாகதான் திருமணைக் குழைத்து ஊர்த்வபுண்டரமாக இட்டுக் கொண்டிருக்க வேண்டும். காலப்போக்கில் வாரிசுகள் இல்லாது வடகலை குடும்பத்தார்களிடத்திலிருந்து ஸ்வீகாரம் நிறைய வந்தமையாலும் மற்றுமுள்ள சூழ்நிலை காரணமாகவும் இந்த ஊர்த்வபுண்டரம் வடகலையாகவும், மேல்கோட்டையில் நிலவிவந்த சூழ்நிலை காரணமாக தென்கலையாகவும் மாறிப்போயிருக்கலாம்..!

இந்த அர்ச்சகர்கள் “சுயம் ஆச்சார்யர்கள்“ – இந்த அர்ச்சகர்களுக்குள்ளேயே எவர் தகுதியுள்ளவரோ அவரே ஆச்சார்யன் ஆவார். இவர்களுக்கு வேறு ஆச்சார்ய தனியன்கள் கிடையாது. இன்றும் திருமணப் பத்திரிக்கைகளில் ஸ்ரீசுக்ல வேத ரிஷியான “ஸ்ரீயாக்யவல்க்ய மஹாகுரவே நம:“ என்றுதான் குறிப்பிடுகின்றனர்.

இவர்களுக்கு “பரந்யாஸம்“ கிடையாது.

இன்றும் வீட்டில் நடக்கும் விசேஷங்களில் “ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணும்….“ என்று தொடங்கிதான் சங்கல்ப்பம்..! ஆரம்பமாகும்.

சரி..! இனி மற்ற விஷயங்களைப் பார்ப்போம்..!

இந்த ஏகாயன வேதமானது “ஸ்ரீமந் நாராயணனைத் தவிர இதர தெய்வங்களை நாடாதே“ என்கிறது.

“யஸ்து ஸர்வ பரோதர்ம: யஸ்மான் நாஸ்தி மஹத்தப:
வாஸூதேவைக நிஷ்டைஸ்து தேவாதாந்திர வர்ஜித:”

“ஸ்ரீவாஸூதேவனை மட்டுமே தியானி – இதர தேவதைகளை நாடவேண்டா ” என்று கூறுகின்றது.

மறந்தும் புறம் தொழா மாந்தர், என்னும் மாண்பை ஆழ்வார்களை போல் ஆகமமும் பறை சாற்றியது. ஸ்ரீவைஷ்ணவ சம்பரதாயத்தின் முக்கியமான இந்த கொள்கை பாஞ்சராத்ரத்தில் ஆழமாக எடுத்துரைக்க பட்டுள்ளது.

இந்த பாஞ்சராத்ரமானது ஸ்ரீமந் நாராயணனை எப்படியெல்லாம் வழிபடுதல் வேண்டும் – நாம் எந்த ஒரு திடமான முடிவோடுயிருக்க வேண்டும் – எப்படி அணுக வேண்டும் என்றெல்லாம் சொல்லுகின்றது. ஆகமம் என்பதற்கு அணுகுதல் (approach) என்ற ஒரு பொருளும், a traditional doctorin or percept, a sacred writing or scripture, sastra, a tantra என்று பலவித பொருள் கூறுகின்றது.
சமஸ்கிருத – ஆங்கில அகராதி. இங்கு அணுகுதல் என்று கொள்ளுதல் எல்லா அர்த்தங்களைவிட சாலப் பொருந்தும்.

பகவான் ஜீவன்கள் உய்விப்பதற்கு, தன்னை வந்தடைய தானே வந்து கற்பித்ததுதான் இந்த பாஞ்சராத்ரம் என்கின்ற அணுகுமுறை – அதாவது பாஞ்சராத்ர ஆகமம்.

மணவாள மாமுனிகள் முமுக்‌ஷூப்படியில் சொன்னார் போ, நாம் படும் இழவை அனுசந்தித்து, அரங்கன், நாம் அவனை வந்து அடைய செய்யாத பிரயத்தனங்கள் இல்லை. நமக்கு அறிவு வர வேண்டி பல சாத்திரங்களை கொடுத்தான். அதில் ஒன்று தான் பாஞ்சராத்ரமாகிற இந்த ஆகம சாத்திரமும்.

அவன் கொடுத்த இந்த அறிவின் பயன், அவனை அடைவதே. அவனை அடைய, அவனே உபாயம் என்பதை அரங்கன், அழகாக வலியுறுத்தினான்.

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: