Srirangapankajam

June 13, 2009

Pesum Arangam – 79

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 7:16 am

Chapter-79
10.06.2009

பேசும் அரங்கத்தின் இந்த பாதுகா பிரபாவத்தினை நிறைவு செய்பவர்
திரு. Madhusudhanan Kalaichelvan

ஆழ்வார், அரங்கனின் நிர்ஹேதுக க்ருபையே வடிவானவர் என்பதைப் பார்த்தோம். இனி ஆழ்வாரைப்போலே, எம்பெருமானுக்கு நெருக்கமாக இருந்தவர்களோடு ஆழ்வாரை ஒப்பிட்டு நோக்கும் நாயனாரின் கருத்துக்களை அநுபவிப்போம்.

இளைய பெருமாள் :

இளைமைக்காலம் தொடங்கி இளையபெருமாள், எம்பெருமானுக்கு எல்லாக் கைங்கர்யங்களையும் இடைவிடாது எல்லாக் காலங்களிலும் செய்ய வேண்டும் என்று பாரித்து, சீதாபிராட்டியின் புருஷகாரமடியாக அக்கைங்கர்யத்தையும் பெற்று ஸ்ரீராமனே தனக்கு செல்வம் என்றிருந்தார்.

ஆழ்வாரும் இவரைப்போலே “அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து” என்று சிறு பிராயம் துவங்கி, “அலர்மகளை முன்னிட்டு அவன் தன் மலரடியை” மன்னி, “ஒழிவிலாக் காலமெல்லாம்” எம்பெருமானுக்கு எல்லாவித கைங்கர்யங்களையும் செய்ய வேண்டும் என்று பாரித்தார்.

மேலும், தனக்கு எல்லா உறவும் ஸ்ரீராமனே என்றிருந்த இளைய பெருமாளைப்போலே இவரும் “சேலாய் கண்ணியரும், அருஞ்செல்வமும், நன் மக்களும் மேலாய் தாய் தந்தையரும் அவரே” என்று எம்பெருமானே தனக்கு எல்லாம் என்றிருந்தார்.

ஸ்ரீ பரதாழ்வான் :

பரதாழ்வான், தன் தாயான கைகேயி, பெருமாளை வனத்திற்கு அனுப்பினாள் என்ற காரணத்தால், அவளை வெறுத்து, வந்த அரசையும் செல்வத்தையும் துச்சமாக நினைத்து பெருமாளைத் தேடிச் சென்று, அவர்தம் “பாதுகையை” பெற்றுவந்து, அவர் வருமளவும் கண்ணீர் வடித்து காத்திருந்தார்.

அதே நிலையில் ஆழ்வாரும் அரங்கனைப் பிரிந்து வாடும் அவர் பதற்றத்திற்கு இசையாது இருந்த தன் தாயாரை வெறுத்து, “பெருஞ் செல்வம் நெருப்பு” என்று ஒதுங்கி, எம்பெருமானை வேண்டிச் சென்று, “திருவடியே சுமந்துழலக் கூட்டரிய திருவடிகள் கூட்டினை” என்று அவன் திருவடிகளை தலை மேல் தாங்கினார். அதோடு எம்பெருமான் தன்னருகே இவரைச் சேர்த்துக் கொள்ளும் அளவும் கண்ணீர் பொங்க அழுது கிடந்தார்.

ஸ்ரீ சத்ருக்நாழ்வான்

சத்ருக்நாழ்வான் மற்ற இருவரைப்போல், இராமனின் வடிவழகிலும் ஈடுபடாது, பரதனுக்கு தொண்டு செய்து, பரதனுக்கு உகப்பு என்பதற்காக, இராமனின் வடிவழகையும் மனதில் கொண்டார்.
அதே நிலையில் ஆழ்வாரும், ததீயர்களுக்கு அடிமை பட்டிருப்பதை விரும்பி, அவர்களின் உகப்புக்காக, எம்பெருமானின் த்வ்ய மங்கள விக்ரஹத்தை தன் மனதிலே கொண்டார். தாமே இதை “புலன் கொள் வடிவு என் மனத்தாய்” என்றும் பாடியுள்ளார்.

தசரத சக்ரவர்த்தி :

ஸ்ரீராமனின் வடிவழகிலே ஈடுபட்ட தசரதன், எப்போதும் தன் கண் நிறைய அந்த வடிவழகை நெஞ்சில் நிறுத்தி அநுபவித்து வந்தது போல, ஆழ்வாரும் “எப்போழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி” என்று அநாதி காலம் வரை அநுபவித்தாலும், “அப்போதைக்கப்பொழுது என் ஆராவமுது” என்கிற படி மேன் மேலும் அநுபவிக்க ஆசை கொண்டிருந்தார்.

பிரஹலாதன் :

தன்னை துன்புறுத்திய நெருப்பு, போன்றவைகளைக் கூட எம்பெருமானுக்கு அனுகூலமான வஸ்துவாக நினைத்து, எம்பெருமானின் அந்தர்யாமித்வத்தை எல்லோருக்கும் உபதேசித்து வந்தார்.
அதே போல் ஆழ்வாரும், “அறிஉம் செந்தீயைத் தழுவி அச்சுதன் என்றும் மெய் வேவாள்” என்பது முதலாக, நெருப்பு முதலான வஸ்துக்கள் எம்பெருமானை உயிராகக் கொண்டிருப்பதனால், அனுகூலமாகக் கொண்டதோடு,
“கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்தெங்கும் பரந்துளன் ”
என்று எம்பெருமான் எங்கும் பரந்திருப்பதை பாடியதாலும் ப்ரஹலாதனோடு ஒப்பாகிறார்.

விபீஷ்ணாழ்வான் :

லங்கா ராஜ்யதோடு கூட, மனைவி, மக்கள் என்று எல்லாவற்றையும் விட்டு, இராமனின் திருவடிகளே தஞ்சம் என்று பற்றினான் ஸ்ரீவிபீஷ்ணாழ்வான்.
அதே நிலையில், ஆழ்வாரும் ஸம்ஸாரத்தில் உள்ள எல்லா உறவுகளையும் அறுத்து விட்டு, “தயரதற்கு மகன் தன்னைபற்றி மற்றிலேன் தஞ்சமாகவே” என்று இராமபிரானையே எல்லாமாகப் பற்றினார்.

திருவடி :

திருவடி இராமனின் வைபவத்தை தவிற மற்றெதிலும் நெஞ்சு செல்லாதவராய், ஸ்ரீராமனைத் தன்னுள்ளே உடையவராய் இருந்தார். அதுபோல, ஆழ்வாரும் “ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நன்னெஞ்சே ஓவாத ஊணாக உண்” என்று இராம வைபவத்தை போக்கியமாகவும், “திருக்கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான்” என்று ஸ்ரீராமன் தன்னுள்ளே உறைவதையும் பாடியுள்ளார்.

அருச்சுனன்:

பாரத போரின் இடையில், எம்பெருமானின் விஸ்வரூப சேவைப் பெற்ற அர்ச்சுனன், மகிழ்ச்சியோடு பயமும் கொண்டு, எப்போதும் போல் நான்கு தோள்களோடே சேவை சாதிப்பாய் என்று ப்ரார்தித்த்தாப் போலே;
ஆழ்வாரும், “ நல்குரவும் செல்வமும் ” என்று பலவகை பொருள்களாலான உலகை உடையவனாய் கொண்ட பெருமாளை, “கூராராழி வெண் சங்கேந்தி வாராய்” என்று அரங்கனின் சங்கு சக்கரம் தாங்கிய திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காண ஆசைப்பட்டார்.

பிராட்டிமார்கள்:

மேற் சொன்னவர்கள் எல்லோரையும் விட, ஆழ்வாரின் மேன்மையை பிராட்டியாரோடு ஒப்பிடுகையில் அறியலாம். “பின்னை கொல், நிலமாமகள் கொல், திருமகள் கொல் பிறந்திட்டாள்” என்ற பாசுரத்தில் ஆழ்வாரை நீளாதேவி, பூமிபிராட்டி, ஸ்ரீரங்கநாச்சியார் என்று தேவிமாரோடும் ஒப்பிட்டு; மேலும் சில பாசுரங்களால் ஆழ்வாரின் பாவம், கோபியஸ்திரிகளோடும், மதுரா நகரஸ்திரீகளோடும், த்வாரகையில் இருந்த பதினாராமாயிரவரோடும் ஒக்கும் என்று சாதிக்கிறார்.

இவர்கள் அனைவரும் தனித் தனியே எம்பெருமானோடு சம்பந்தம் பெற்று, ஒவ்வோர் காரணங்களால் வைபவம் படைத்தவர்கள். ஆனால் இவர்கள் வைபவமெல்லாம் ஒரு சேரப் பெற்றவராகையாலே, இவர்களனைவரையும் விட வைபவம் ஆழ்வாருக்கு உண்டு என்பது அறிய முடிகிறது.
பிராட்டி மார்களைவிடவும் அதிக வைபவம் ஆழ்வாருக்கு என்றால், ஆழ்வாருக்கும் அரங்கனுக்குமான நெருக்கம் நமக்கு நன்கு புலப்பட வேண்டும். இத்துடன் வைபவம் பெற்ற ஸ்ரீநம்மாழ்வாரின் சம்பந்தத்தை, அரங்கனின் ஸ்ரீ பாதுகைகள் மூலம் பெற்று, ஆழ்வார் க்ருபைக்கு பாத்திரமாவோம்.

//இத்துடன் ஸ்ரீபாதுகாப்ரபாவம் முற்றிற்று//

பெரிய பெருமாள், பெரிய பிராட்டியார் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் திருவடிகளே சரணம்.
எம்பெருமானார் திருவடிகளே சரணம்.
நாயனார் திருவடிகளே சரணம்.
ஜீயர் திருவடிகளே சரணம்.
ஜீயர் திருவடிகளே சரணம் !!

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: