Srirangapankajam

May 22, 2009

Pesum Arangam – 73

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 11:57 pm

Chapter-73
16th May’2009

ஒருவனுக்கு பெரும் புதையல் கிடைத்தப் பின்னும் பிச்சைக்கு அலைவானாயின் என்ன சொல்வது..? அவனைப் போன்ற மூடன் எவனும் உண்டோ..?

யாரொருவருடைய திவ்யகடாக்ஷத்தினால் ஜீவராசிகள் மோக்ஷபர்யந்தமான ஐஸ்வர்யங்களை அடைகின்றார்களோ அத்தகைய லோகமாதா, மஹாலக்ஷ்மியோடு கூடினவராய், தன்னை ஆஸ்ரயிப்பவர்களுக்கு வாத்ஸல்யராய், சுலபராய், எளியவராய், இந்த ரங்கவிமானத்தில் குடிகொண்டு, ஸர்வ அபீஷ்டங்களையும் தரும் மஹாநிதியாம் நம்பெருமாளை, நாம் பாதுகையின் மூலமாக அடைந்தபிறகு, அல்ப சுகத்திற்கும், அல்ப தனத்திற்கும், அல்ப பலன்களுக்கும் எவரையேனும் நாடுதல் தகுமோ..?

கற்பகவிருக்ஷத்தின் கீழ் அமர்ந்து கஞ்சிக்கு பறப்பவர் உண்டோ..?

அபரஸ்பரபாதிநா மமீஷாம்
அநிதம்பூர்வ நிரூட ஸந்ததீநாம்
பரதவ்யஸநாத் அநூநஸீம்நாம்
துரிதாநாம் மம நிஷ்க்ருதிஸ்த்வமாஸீ: !975!

அபரஸ்பர=எப்பொழுதும் – பாதிநாம்=மேன்மேலும் வ்ருத்தியடைகின்றதும் – அநிதம்பூர்வம்=இதுதான் முதல் என்றில்லாமல் அநாதியானதும் – நிரூட=த்ருடமானதும் – ஸந்த்தீநாம்=வரிசைகளையுடைத்தாயிருக்கிறதும் – பரத:=ஸ்ரீபரதாழ்வானுடைய – வ்யஸநம்=துக்கத்தைக்காட்டிலும் – அநூந: அதிகமான – ஸீம்நாம்=எல்லையை உடைத்தாயிருக்கிறதுமான – மம=என்னுடைய – துரிதநாம்=பாபங்களுக்கு – நிஷ்க்ருதி=இல்லாமல் – த்வம்=நீ – ஆஸீ:=ஆக்குகின்றாய்.

ஹே! பாதுகே! பரதாழ்வான் இராமனைப் பிரிந்து எவ்வளவு வருந்தி துடித்திருப்பான்?
இந்த துக்கம் அவனுடைய பாபத்தினால் அன்றோ ஏற்பட்டிருக்க வேண்டும்.
அத்தகைய பரதனைக் காட்டிலும் மிகக் கடுமையான பாபி நான்!
ஆனாலும் பரதனது பாபங்கள் அனைத்தும் அவன் உன்னையடைந்ததும், ஒரு நொடியில் நசித்து போயிற்று.! அதுபோன்று நானும் உன்னையடைந்து உன் பரிபூர்ண கடாக்ஷத்தினை பெற்றபின்பு அநாதியான என்னுடைய மாளாத வல்வினைகள் அப்போதேயன்றே நசித்துப் போயிருக்கக் கூடும்..! மோக்ஷத்தினை அடையப் பெற்றவனாக(முக்ததுல்யனாக) அன்றோ நான் உன்னை இப்போது அனுபவிக்கின்றேன்!

பாதுகைகளையோ, ஆழ்வார் ஆச்சார்யர்களின் திவ்ய சூக்திகளை யாரொருவர் த்யானம், ஆராதனம் முதலானவைகளைச் செய்து ஆராதிக்கின்றார்களோ அவர்களது மனதில் பாப எண்ணங்களேத் தோன்றாது. எப்படி பகவானோ அப்படியேதான் ஆழ்வார் ஆச்சார்யர்களும்!. மனமது, மமதையற்று தீதற்றுயிருப்பின், அந்த பாகவதனின் உள்ளம் ஒரு கோவிலாகும். இறை கூத்தாடும் கூடமாகும். மோக்ஷம் கைகூடும்.!

மாடமாளிகை சூழ் திருமங்கை மன்னன்
ஒன்னலர் தங்களை வெல்லும் *
ஆடல் மாவலவன் கலிகன்றி
அணிபொழில் திருவரங்கத்தம்மானை *
நீடுதொல் புகழாழி வல்லானை
எந்தையை நெடுமாலை நினைந்த *
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்!
பாட நும்மிடை பாவம் நில்லாவே *
-திரு.226-

ஏ! திருமால் அடியவரான தொண்டர்களே! ஆழ்வார் அனுபவித்த அந்த உணர்வுநிலை உனக்கு இல்லையாயினும், நெடுமாலாம் திருமால், திருவரங்கத்தில் கோயில் கொண்ட பெருமாளை, நீடுதொல் புகழ் ஆழி வல்லானை, “ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” எல்லா தீவினைகளிலிருந்தும் ரக்ஷிக்கின்றேன் என்று தன்னுடைய அபயஹஸ்த்தினால் குறிப்பால் உணர்த்திக் கொண்டிருக்கும், நம்பெருமாளைப் பற்றிய கலிகன்றியின் (தீவினைகளுக்கு எதிரான) இப்பாசுரங்களை சிரத்தையோடு பாடுங்கள்!

பாடும் நும்மிடையே பாபங்கள் எதுவும் நில்லாது நசித்துப் போகும்!

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: