Srirangapankajam

May 13, 2009

Pesum Arangam – 72

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 10:45 am

 Chapter-72
 
11th May’2009
 
காலே ஜந்தூந் கலுஷகரணே க்ஷிப்ரமாகாரயந்த்யா:
கோரம் நாஹம் யமபரிஷதோ கோஷமாகா்ணயேயம்
ஸ்ரீமத் ரங்கேஸ்வர  சரணயோ: அந்தரங்கை: ப்ரயுக்தம்
ஸேவாஹ்வாநம் ஸபதி ச்ருணுயாம் பாதுகாஸேவகேதி !!969!!
 
கலுஷ=கலங்கியிருக்கின்ற – கரணே=இந்திரியங்களுடைய – காலே=செத்துப் போகிற காலத்திலே – ஜந்துாந்=ஜந்துக்களை (ஜீவன்களை) – க்ஷிப்ரம்=சீக்கிரமாக – ஆகாரயந்த்யா:=அழைக்கிறதாயிருக்கின்ற – யமபரிஷத:=யமக்கூட்டத்தினுடைய – கோரம்=பயத்தையுண்டுப் பண்ணுவதான – கோஷம்= இரைச்சலை – அஹம்=நான் – நாகர்ணயேயம்=கேட்கமாலிருக்க வேண்டும்.  – ஸ்ரீமத்=மஹாலக்ஷ்மியோடு கூடிய – ரங்கேஸ்வர=ஸ்ரீரங்கநாதனுடைய – சரணயோ:=திருவடிகளுக்கு – அந்தரங்கை:=அந்தரங்கமாய் – ப்ரயுக்தம்= சொல்லப்படுகின்ற – பாதுகாஸேவகேதி= பாதுகா ஸேவகரே என்று – ஸேவா=ஸேவைக்காக – ஆஹ்வானம்=பகவத் ஸந்நிதிக்குள் அருளப்பாடிட்டு (என்னை)அழைப்பதை – ஸபதி=சீக்கிரமாக – அஹம்=நான் – ச்ருணுயாம்=கேட்கவேண்டும்.
 
ஹே பாதுகே!  உன்னுடைய அனுக்ரஹத்தினால் எனக்கு இந்த சரீரசம்பந்தமானது சீக்கிரத்தில் நீங்கப்போகின்றது..! அந்த சமயத்தில் எனக்கு நீ செய்யவேண்டிய ஒரு காரியத்தினை நான் இப்போதே வேண்டிக் கொள்கின்றேன்..!  என்னுடைய இந்திரியங்கள் யாவும் செயலிழந்து  போனாலும் போகலாம்.!  இறக்கும் தருவாயில் பகவானுடைய நாமத்தினைச் சொல்வதற்கோ நினைப்பதற்கோ முடியாமல் போனலும் போகலாம்..!  அந்த சமயத்தில் யமதூதர்கள் வந்து “பாபி! சீக்கிரம் கிளம்பு..” என்று பயங்கரமாக அதட்டி ஆர்ப்பரிக்கும் படியாக இருக்கக்கூடாது.    நான் வாங்கிய விருதுகள் எதுவும் என் மரணத்தின் போது உதவாது.   நீ இப்போதே,  நான் உன்னை ஸேவிக்கவரும்போது “ஸ்ரீமத் ரங்கநாத பாதுகா ஸேவகருக்கு அருளப்பாடு” என்று அரங்கனின் மூலஸ்தானத்தில் கைங்கர்யம் செய்பவர்களால் அருளப்பாடிட்டு அழைக்கும்படிச் செய்ய வேண்டும்.    இவ்வாறு அழைக்கப் பெறுவேனாயின்  உலகத்தாரிடையே இந்த பெயர் பிரபலமாகும்.   என் உயிரானது பிரிய தவிக்கும்போது என் பக்கத்திலுள்ள ஜனங்கள் “ஸ்ரீமத்ரங்கநாத பாதுகா ஸேவகரின் உயிரானது தவித்துக் கொண்டிருக்கின்றது.”  என்று எனக்கு வழங்கப்பட்ட இந்த பெயரையும் சேர்த்துச் சொல்லுவார்கள்.    இதனைக் கேட்கும் யமதூதர்கள், “நல்லவர்களோ கெட்டவர்களோ பகவானை ஆஸ்ரயித்தவர்களின் (ஸ்ரீவைஷ்ணவர்களின்) ஸமீபத்தில் கூட போகதீர்கள்.  அது மிகவும் அபாயமானது”  என்ற எமதர்மராஜாவின் ஆக்ஞைப்படி விலகி ஓடிவிடுவார்கள்.  யமவாதனை என்னை வாட்டமலிருக்க இதுவே உபாயம்.!
ஆகையினால் நீ அப்படிச் செய்ய வேணும்..!
 
அணியார் பொழில்சூழ் அரங்கநகரப்பா ! *
துணியேன் இனி நின்னருளல்லது எனக்கு *
மணியே மணிமாணிக்கமே!  மதுசூதா!*
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதீ!

                                                     -திருமங்கையாழ்வார் – திரு.232-

அழகும் திரட்சியும் மிக்க சோலைகளின் நடுவே உகப்புடன் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே!  களைப்பைப் போக்கி கண்குளிரும்படி ஸேவை தந்தருளும் கருமணியே!  வடிவழகு மட்டும் இல்லாமல் பெரும் வாத்சல்யமும், அருளும், குணமும் கொண்ட குணக்குன்றே!  இனி நான் நின்னருள் அல்லாது வேறு துணையை நாடமாட்டேன்.!  போர்களத்தில் வருந்திய அருச்சுனனை நோக்கி, ”உன்னுடைய எல்லாச் சுமைகளையும் எம் தலையில் ஏற்றி வைத்து எம்மையே பற்றுக்கோடாக நினைத்திரு!  நாம் உம் பகைகளை எல்லாம் போக்குகிறோம், “மாகச:’ (வருந்தாதே)” என்று நீ அன்று அருச்சனனைத் தேற்றியது போல,  பரஞ்சோதீயே!  நான் உய்யும் வகையை எனக்குச் சொல்வாயாக! நான் இந்த இன்னல்களிருந்து பிழைத்து வாழும் வகையில் எனக்கு ஒரு வார்த்தை தேவரீர் அருளவேண்டும்! 
 
 
திறம்பேன்மின் கண்டீர்; திருவடிதன் நாமம் *
மறந்தும் புறந்தொழா மாந்தர் * – இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள்“ என்றான் * நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு ..
                                                                 -நான்முகன் திருவந்தாதி-68-
 
 
பகவத் ஸம்பந்தமும், ஆழ்வார்-ஆச்சார்ய ஸம்பந்தமும்,  பகவத் ப்ராப்தியும், ஆச்சார்ய பிரபத்தியும், நாம் செய்யும் அனுஷ்டானங்கள்  மட்டுமே ஒருவனது மரணகாலத்தில் உதவும்.   மற்றபடி வேறு எந்த ஒன்றினாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.  நல்ல ஆச்சார்ய ஸம்பந்தத்தினையடைந்தவர்களுக்கு நரகமில்லை..!  யமவாதனையில்லை..!

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: