Srirangapankajam

April 11, 2009

Pesum Arangam-61

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 1:05 am

 
Chapter-61
11.04.2009
 
ஸ்ரீரங்கநாதனை,  நம்பெருமாள் அதாவது நம்முடைய பெருமாளாக ஆக்கியதும், பாதுகைகள்தாம்!
 
ஸ்ரீரங்கேந்தோ : சரணகமலம் தாத்ருசம் தாரயந்தீ
காலே காலே ஸஹகமலயா க்லுப்த யாத்ரோ த்ஸவஸ்ரீ: !
கத்வா கத்வா ஸ்வய மநுக்ருஹ த்வாரம் உந்நித்ர நாதா
பௌராந் நித்யம் கிமபிகுசலம் பாதுகே!  ப்ருச்சஸீவ !! 904 !!
 
ஸ்ரீரங்கேந்தோ:=ஸ்ரீரங்கநாதனுடைய சந்திரன் போன்று
குளிர்ச்சியுடைய சரணகமலம்=தாமரைப்போன்ற திருவடிகளை – தாத்ருசம்=அப்படிப்பட்ட (வாக்குக்கு எட்டாத பெருமையோடு கூடியஇ நீ ஒருத்தி மட்டுமே வஹிக்க்க் கூடியதான) – தாரயந்தீ=தாங்குபவளாகிய நீ —  காலே காலே=அந்தந்த உசிதமான காலங்களில் – ஸஹகமலயா=மஹாலக்ஷ்மியோடு கூட – க்லுப்த=ஏற்படுத்தப்பட்ட – யாத்ரோத்ஸவஸ்ரீ: = சஞ்சாரங்களோடு கூடிய உத்ஸாவாதிகள் – கத்வா கத்வா= (தாமே வலுவில்) போய் போய் – கிமபிகுசலம்=எல்லாவித க்ஷேமங்களையும் – ப்ருச்சஸீவ=கேட்கின்றாய்.
 
ஹே பாதுகே!  ஸ்ரீரங்கநாதனின் திவ்ய திருவடிகள் உலகத்திலுள்ள அனைவருக்கும் அமிர்தம் பிரவாஹித்து பொழிவதற்கு ஒப்பான சந்தோஷத்தினை உண்டுபண்ணும் குளிர்ச்சியையுடையது.  அத்தகைய திவ்யமான ஒப்பில்லாத திருவடிகளை உன் ஒருத்தியால் மட்டுமே தாங்கமுடியும்! உன்னை தம் திருவடிகளில் சாற்றிக் கொண்டு தாயாரோடு உற்சவாதிகாலங்களில் பெருமாள்,  வெளியூர்களுக்கும், லீலார்த்தமாகவும் எழுந்தருளுகின்றார்.   இவ்விதம் எழுந்தருளி திரும்ப ஆஸ்தானம் திரும்பும் போது ஆங்காங்கு வீடுகள் தோறும் நின்று எழுந்தருளுகின்றார்.   அப்போது பாதுகைகளாகிய உன்னிடமிருந்து வெளிப்படும் சப்தமானது ஒவ்வொரு குடும்பத்தினின் க்ஷேம லாபங்களை அவரவர்களுக்குத் தகுந்தபடி ப்ரியமான வார்த்தைகளால் அக்கறையோடு விசாரிப்பது போன்று உள்ளது.  இராஜாக்கள் காட்டுக்குச் சென்று வேட்டையாடி திரும்பும் போதும், யுத்தம் சென்று திரும்பும் போது தங்களுடைய ஜனங்களின் சௌகர்யங்களை விசாரிப்பது வழக்கம்.  இது போன்று இருக்கின்றது இந்த பாதுகையின் செயல்கள்.

ஸ்வாமி தேசிகரின் இந்த பாசுரத்தினை வேறுவிதமாகவும் அர்த்த விசேஷம் கொள்ளலாம்.

ஸ்ரீரங்கேந்தோ:  இதில் “இந்து“ என்ற சப்தம் பகவான் அமிருதம் போன்ற தயையை ஸர்வர்க்கும் வர்ஷிக்கின்றார்.  ஸம்ஸார தாபத்தினை நீக்கி குளிர்ச்சியையும் ஆனந்த்த்தினையும் உண்டு பண்ணுகின்றான்.  இது அவனது பரம காருணிகத்வம்.

தாத்ருசம் –  பெருமாள் மற்றும் பாதுகையினுடைய  சொரூபம், குணவிசேஷங்கள் வாக்குக்கு எட்டாத்த்து.  இதற்கெல்லாம் அப்பாற்பட்டது.  இது பெருமாளுடைய பிரபாவம் மற்றும் பரத்வம்.

ஸஹகமலயாக்லுப்த யாத்ரோத்ஸவஸ்ரீ –  கோபிப்பது மற்றும் தண்டிப்பது என்பதே அறியாதவர்களாகிய  பாதுகையும், மஹாலக்ஷ்மியும் எப்போது பெருமாள் கூடவேயிருந்து,  ஆஸ்ரிதர்களை  எப்படியேனும் ரக்ஷணம் செய்கின்றார்கள்.  இது இவ்விரு தாயார்களின் பரம கருணை.

கத்வா கத்வா – ஆஸ்ரிதர்கள் தம்மை தேடி வரும் வரை காத்திருக்காமல் தானே ஒவ்வொருவரையும் பரம ப்ரீதியினாலும், கவலையினாலும், வாஞ்சையோடு வலுவில் அவர்களைத் தேடிப் போதல் – இது வாத்ஸல்யம்

அனுக்ரஹத்வாரம்  — பக்தன் தம்மைத் தேடி பாதிதூரமாவது வரட்டுமே என்று எண்ணாது அவர்களின் வீடு வரையில் தானே போய் அவர்களை அனுக்ரஹித்தல் – இது சௌலப்யம்

ஸ்வயம் – இந்த விசாரித்தல் மற்றும் அனுக்ரஹித்தல் ஆகியவற்றை இன்னொருவரை அனுப்பி செய்வதில்லை.  தாமே நேரில் செய்கின்றார் – இது சௌசீல்யம்.

உந்நித்ரநாதா –  எல்லாரிடத்தும் பொதுவான ஒரே மாதிரியான அணுகுமுறையின்றி,  தனிதனியாக அவரவர்களுக்கேற்றாற் போன்று,
அவரவரின் தேவையறிந்து விசாரித்தல். – இது சாதுர்யம்.
பெளராந் – ஒதுங்கிவசிக்கும் ஞானமிக்க ஜனங்களைக் காட்டிலும், தம்மையண்டி நிற்கும் சாதாரண ஜனங்களிடத்து விசேஷ கவனிப்புடன் இருத்தல் – இது எளிமை.

நித்யம் – இன்று கவனித்து விட்டு நாளை அலட்சியமாகயில்லாமல் என்றும் ஒரே மாதிரியான அன்புடன் ரக்ஷித்தல் – இது ஆதராதிசயம்

கிமபிகுசலம்  – ஆஸ்ரிதர்களுடைய எல்லா யோக க்ஷேமங்களைப் பற்றிய சூக்ஷூம ஞானமும்,  அவர்களது எல்லா விஷயங்களிலுமுள்ள கவனிப்பு –
இது பரிபூர்ண கடாக்ஷம்.
 
 
பாதுகையும், ரங்கனும் பாமரனுக்கும் தோழன். 

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: