Srirangapankajam

April 9, 2009

Pesum Arangam – 60

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 2:10 am

Chapter-60
08.04.2009
 
இன்று பங்குனி உத்திரம்  –  திவ்ய தம்பதிகளின் சேர்த்தித் திருநாள்.   தாயாருக்கும் பெருமாளுக்கும் உள்ள பிணக்கைப் போக்கி  இருவரையும் இணைத்து நம் பிறவிப் பிணிப் போக்கும் அற்புதமான நாளாக்குகின்றார் இன்றைய நாளை ஸ்வாமி நம்மாழ்வார்!

இன்றைய நாளை தேர்ந்தெடுத்து ஸ்ரீஇராமானுஜர் பரிபூர்ண சரணாகதி செய்து கத்யத்ரயம் என்னும்  பிறவிப் பிணி போக்கும் மூன்று அருமையான ப்ரபத்திகளை நாம் உய்ய அருளிச் செய்தார்!
.  
நம்மாழ்வாராகிய  பாதுகையினை  ஸ்வாமி தேசிகர்,
 
“நித்யம் ரங்க க்ஷிதிபதி பதந்யாஸ தந்யாத்மநஸ்தே
சிஞ்ஜாநாதம் ச்ரவண மதுரம் பாதுகே! தீர்க்கயந்த:
காலே தஸ்மிந் கரண விகம க்லேசஜாதம் விஹந்யு:
ஸந்தாபம் நஸ்த்ருண துளஸீகந்திநோ கந்தவாஹா: “

என்று பிரார்த்திக்கின்றார்.

நித்யம் = எப்போதும் –  ரங்க்க்ஷிதிபதி = ஸ்ரீரங்க பூமிக்கு எஜமான் ஆகிய – ச்ரவண = கேட்பதற்கு  – மதுரம் = மதுரமாயுள்ள – சிஞ்ஜாநாதம் = சலங்கைக்களுக்குள் உள்ள இரத்னங்களால் உண்டாகும் சப்தம்
துளஸீகந்தினோ = துளசியின் மணம்  – கந்தவாஹா =  காற்றில்  (பரவச்செய்து)  க்லேச = கஷ்டத்தினாலே – ஜாதம் =  உண்டாயிருக்கின்ற – ஸந்தாபம் = மரணவேதனையை – விஹண்யு: = போக்கடிக்க வேணும்.

ஸதா ஸ்ரீரங்கபதியின் திருவடிகளைத் தாங்கக்கூடிய பாதுகையே!  மரணம் என்னை நெருங்கும் போது என்னுடைய ஐந்து இந்திரியங்களும் ஒவ்வொன்றாக செயலிழந்து கொண்டு வரும்.  அப்போது நான் பொறுக்கமுடியாத வேதனைக்கு உள்ளாவேன்.  அந்த தருணத்தில் உன்னைத் தழுவி வரும் காற்றில் உன்னுடைய குளுமையையும்,  உன்னிடத்துள்ள துளஸியின் பரிமணத்தையும்,  இனிமையான உன் பாதுகையிலுள்ள ரத்னங்களிலிருந்து வெளிப்படும் மதுரஓசையும் கலந்து என் சுவாசத்தில் துளஸியின் பரிமணமும், காதில் மதுரமான ஓசையும், தேஹமெங்கும் உன்னுடைய குளுமையையும் பரவச் செய்ய வேணும்.

மரண வேதனையில் தவிக்கும் என் இந்திரியங்களுக்கு ஆறுதலை அளித்து அவ்வேதனையை நீ எங்கள் விஷயத்தில் பரம கிருபைப் பண்ணிப் போக்க வேண்டும்“  என்று பிரார்த்திக்கின்றார்.

இதன் உட்கருத்தினைச் சுருங்கச் சொன்னால்,   அந்திம தசை நெருங்கி அந்தமில் பெருநாடு புகுவதற்கு ஆச்சார்ய கடாக்ஷம் அவசியம் தேவை என்கிறார்.

இந்திரியங்கள் செயல்பாடு ஒவ்வொன்றாக சுருங்கி அதிதுக்கமான மரணவேதனையின் போது பரம ஸ்ரீவைஷ்ணவனாவன் ஆழ்வார் ஆச்சார்யர்களுடைய ஸ்ரீஸூக்திகளைக் கேட்டாலும்,  பெருமாளுடைய
திருமாலை, திருப்பரிவட்டம், திருவடி ஜோடு, திருஅபயஹஸ்தம் முதலான பிரஸாதங்களைப் பெறும் பாக்யம் கிட்டினாலும், அல்லது பெருமாளுடைய கைங்கர்யபர்ர்கள் அருகிலிருக்கப் பெற்றாலும்,  இந்த பரமலாபத்தினால் தாம் அனுபவிக்கும் துக்கம் மறந்து,  மரண வேதனையைக் கூட மறந்து விடுவார்கள்.   ஸ்ரீஸூக்திகளைச் சொல்பவரையும்,  பெருமாள பிரஸாதங்களைக் கொண்டு வந்தவர்களையும்,  தங்களை அழைத்துக் கொண்டு போகவந்த பெருமாளால் அனுப்பப்பட்ட தூதர்களாகவேக் கருதுவர். 

கூரத்தாழ்வார்  நம்பெருமாளை கடைசியாக ஸேவித்து விட்டு தம் திருமாளிகை வந்து சேருகின்றார்.   அந்திம தசை நெருங்குகின்றது. நாக்கு வரளுகின்றது.  உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது.  எம்பெருமானார் விரைந்து வருகின்றார்.  அவரை அணைத்துத் த்வயம் அனுசந்திக்கின்றார். அதுவரைத் தவித்துக் கொண்டிருந்த கூரத்தாழ்வானின் உயிர் ஊசல்  சற்றே நிதானம் அடைகின்றது.  இப்போது எம்பெருமானார்  அரற்றித் தவிக்கின்றார்.  “ஆழ்வான்!   என்னுயிர் நிலையான உன்னைவிட்டு நான் எங்ஙனே தரிப்பேன்..?  என்னையும் உடன் கொண்டு போகத் திருவுள்ளம் பெற்றிலீர்!  பரமபதநாதனும் அங்குள்ள நித்ய முக்தரும் என்ன பாக்யம் பண்ணினார்களோ..?  இங்கு உறங்கும் ஸ்ரீரங்கநாதனும் நாங்களும் என்ன பாபம் பண்ணினோமோ..?” என்றெல்லாம் அரற்றித் தவிக்கின்றார்!
 
உற்றவரின் உயிர் போகும் சமயம் உடனிருந்தவரின்  உயிர் தவிக்கின்றது! 
 
ஆழ்வான் வேரற்ற மரம் போன்று உடையவரின் திருவடிகளில் வீழ்ந்து கிடக்கின்றார்.   உடையவர்  அவரை வாரியெடுக்கின்றார்.  ஊசலாடும் உயிருக்குத் தெம்பு பிறக்கின்றது.   உடையவரின் திருவடிகளைத் தம் கையில் ஏந்தி தம் திருக்கண்களிலும், திருமார்பிலும் ஒற்றிக் கொள்கின்றார் கூரத்தாழ்வார்!  
 
உடையவர் தம் திருக்கைகளினால் பிரஸாதிக்க, ஆழ்வான் பிரஸாதப்படுகின்றார்.

“யோநித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம வ்யாமோஹதஸ் கதி தராணி த்ருணாய மேநே!   அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ இராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே!” 

என்று  அனுசந்தித்து ஸ்ரீஇராமனுஜரைத் தொழுத  வண்ணம் க்ருதாஞ்சலிபுடராய் விடைகொடுத்து அன்றே திருநாட்டுக்கு எழுந்தருளுகின்றார் ஆழ்வான்!

ஆழ்வானின் உயிர்நிலை ஆடும் போது உய்விக்க வந்தார் உடையவர்!
 

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: