Srirangapankajam

March 10, 2009

Pesum Arangam-47

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 11:27 pm

 
Chapter-47
08.03.2009
 


நல்லவர்கள் என்றும் நல்லவர்களையேதான் சார்ந்திருப்பார்கள்.  தீயோரைக் கண்டால் தீயினும் அஞ்சி விலகியே நிற்பார்கள்.   அந்த தீயவர்களால் ஏதேனும் சகாயம் ஆகவேண்டினும் அந்த சகாயத்தினை விரும்ப மாட்டார்கள். 
 
ஒருவன் மிக்க புகழ் அடையும்போது, எல்லையில்லாத பெருமைகள் அவனை வந்து சேரும் போது, அவனைச் சார்ந்தவர்களும் கொண்டாடப்படுவர், அவர்களுக்கும்
பெருமைக் கிடைக்கும்.  தூயோன் இராமனின் பாதுகை பரதனால் ஆராதிக்கப் பெற்றது இவ்வகையில்தான்!. 
 
இராமனால் பாதுகைக்குப் பெருமை!  இப்பாதுகையினால் இந்த பாரதத்திற்குப் பெருமை!.
 
பெருமாளின் அவதார நோக்கமே நன்மையினை நிலைநாட்டி. நல்லறிவைப் புகட்டி, தீமைதனை ஒழித்தலே ஆகும்.  பெருமாள் தாம் அவதாரங்கள் எடுத்து முடித்தபின்பு ஆழ்வார் ஆச்சார்யர்களையும் இதே நோக்கத்திற்காகவே அவதரிக்கச் செய்தார். 
 
இந்த பூர்வாச்சார்ய பெரியோர்கள்,  ஸ்வதேசம்(தம்முடைய ஊர்), பரதேசம்(பிறருடைய ஊர்) என்ற தேசாந்திர பாகுபாடில்லாமல், இராப்பகல் பாராது,  குற்றமில்லாதிருக்கின்ற தம்முடைய கடமையினை, பக்தியினை, பகவானுக்குச் செய்யும் தொண்டினை பிரதிபலன் எதிர்பாராது ஸ்வபாவமாகப் பெருமாளை மட்டும் உத்தேசித்து அன்புடன் செய்தனர்.  இதன் பலனாய் இன்றும் பாரதம் அகில உலகிலும் ஆன்மீகத்தில் மேம்பட்டு விளங்குகின்றது. 
 
இராமனுடைய பாதுகை இராமனுடன் வனவாசம் சென்றபோது கானகத்திலுள்ள முட்களே இல்லாமல் பண்ணியதாம்.  இராஜ்ய பரிபாலனம் பண்ணியபோது ராஜ்யத்தில் எங்கும் சத்ருக்களாகிற முட்களும் ஒழிந்து போனதாம்.   எங்கும் அமைதி! நல்லாட்சி! மக்களிடேயே ஆனந்தம்!
 
ஒருவன் ரொம்ப சாமர்த்தியசாலியாயிருந்தால் எந்த ஒரு காரியத்தினையும் நேர்த்தியாய் செய்வான்.  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.  இராமன் புல்லையே பிரம்மாஸ்திரம் போன்று செயல்பட வைக்கவில்லையா..!

ஒரேயொரு பாணம்தான்..  சமுத்திரமே வற்றிப்போகவில்லையா…!

இந்த இராம நாமத்தினைச் சொல்லி அனுமன் கடலைத் தாண்டவில்லையா..! 
 
இராமனின் திருமேனியினை சதா தீண்டப்பெற்ற,
இராமனுடைய ஆசிப்பெற்ற, ஸ்ரீஇராமபாதுகை ஒரு குறைவில்லாமலும் பதினான்கு வருஷகாலம் இராஜ்யத்தினை ஆண்டது.

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: