Srirangapankajam

March 4, 2009

Pesum Arangam-44

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 11:39 pm

Chapter-44
02.03.2009
 


அங்காந்தரேஷூ நிஹிதாந்யகிலாநி காமம்
பர்யாய கல்பநஸஹாநி விபூஷணாநி !
நித்யம் முகுந்த பதபத்ம தலாநுரூபம்
நைபத்யமம்ப! பவதீ நயநாபிராமம் !!
 
ஹே அம்ப: பாதுகைத் தாயாரே! – அங்காந்தரேஷூ: திருவடிகளைத் தவிர மற்ற அவயங்களில்
பர்யாயகல்பநஸஹாநி: பதில் போடக்கூடியவைகள்.  நயநாபிராமம்:  கண்களுக்கு இன்பமாய்.
 
நம்பெருமாள் தம்முடைய எல்லா அவயங்களிலும் நகைகளை சாற்றிக் கொள்கின்றார்.  ஒரு நாள் சாற்றிக் கொண்ட நகைகளையே எல்லா நாட்களும் சாற்றிக் கொள்வதில்லை.  அந்த நகைகளுக்குப் பதில் வேறொரு நகையைச் சாற்றலாம். அந்த நகைகளைக் கூட மாற்றிச் சாற்றலாம்.  திருமுதுகில் சாற்றும் திருவாபரணங்களை திருமார்பில் சாற்றலாம்.  சிரஸ்ஸில் கூட சாற்றலாம். 
 
 ஆனால் நம்பெருமாள் திருவடிகள் காக்கும் பாதுகைகளுக்குப் பதில் வேறொன்றைச் சாற்ற முடியாது.  வேறென்றினாலும் அதன் வேலையைச் செய்ய முடியாது.  அந்த பாதுகை கண்களுக்கு இன்பமாயும்,  அலங்காரமாயும் இருக்கின்றது.
 
இந்த ஜீவர்களைக் காப்பாற்றுதல் என்பது பெருமாளுடைய கார்யம்.  இந்த கார்யம் ஆச்சார்யர்களைக் கொண்டுதான்
நடக்க வேண்டும்.  நம்பெருமாளுக்கு எப்படி திருவடிகளில் பாதுகையோ அது போன்று இந்த ஜீவனைக் காப்பாற்றுதல் என்பது ஆச்சார்ய கடாக்ஷத்தினால் மட்டுமே சாத்தியம்.  இந்த காரியத்திற்கு பதிலி கிடையாது.  ஆச்சார்யன் மட்டுமே!
 
ஆச்சார்யனால் பெருமாளுக்கு நிரம்ப ஓத்தாசை! 
 
அவர்களால்தான் பெருமாளுக்கு ஒழிவும், அழகும்!.
 
நல்ல ஆச்சார்யன் மூலமே நாம் பெருமாளை நன்கு அறிகின்றோம். பெருமாளது உயர்வினை புரிந்து கொள்கின்றோம்.

பெருமாளை நம் உள்ளத்தோடு உறவாட வைப்பவர் ஆச்சார்யன்.  பெருமாள்தான் ஆச்சார்யனாய் அவதரிக்கின்றார்.
 
பெருமாள் திருவிக்ரம அவதாரம் எடுக்கின்றார். அப்போது இந்த உலகம் கூட அவரது திருவடியின் அளவிற்கு போதவில்லை. ஆனால் அவர் திருவடியிலுள்ள பாதுகையோ ஒருவராலும் அளக்கவியலாத அந்த திருவடிகளின் நீளத்திற்கு தாமும் வளர்ந்து அவர்தம் திருவடிகளைத் துல்லியமாய் அளந்தது.
 
பிரமன், ருத்ரன் முதலானவர்களால் கூட அளக்கவியலாத அந்த பகவத் ஸ்வரூபத்தினை ஆழ்வார் ஆச்சார்யர்கள் திருவிக்ரமனின் திருவடிப் பாதுகையினைப் போன்று உள்ளபடி அறிகின்றனர்.  நமக்கும் தெளிவுபடுத்துகின்றனர். 
 
பகவத் ஸ்வரூபம் பரம பாகவதர்களான ஆச்சார்யனுக்கு ஸ்வாதீனமாகின்றது.  அந்த ஆச்சார்யன் திருவடிகளைப் பற்றிய சிஷ்யனுக்கு பகவத் கடாக்ஷம் ப்ராப்தமாகின்றது.

Blog at WordPress.com.

%d bloggers like this: