Srirangapankajam

March 2, 2009

Pesum Arangam-43

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 11:32 pm

Chapter-43
01.03.2009

பரஸ்ய பும்ஸ: பதஸந்நிவேசாந்
ப்ரயுஞ்ஜதே பாவித பாஞ்சராத்ரா:
அகப்பரதீபாந் அபதிஸ்ய புண்டராத்
அங்கேஷூ ரங்கேசய பாதுகே! த்வாம்!(784)
பாஞ்சராத்ரா: – பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தினை பாவித: கடைப்பிடிப்பவர்கள் – பதஸந்நிவேசாந்: பாதுகைப் போன்ற உருவத்தையுடைய – புண்டராத்: திருமண்காப்பினை – அபதிஸ்ய: வியாஜ்யாமப்பண்ணி

ஹே! பாதுகே! பாஞ்சராத்திர ஆகம சாஸ்த்திரத்தில் நன்கு தேர்ந்த மஹான்கள் பன்னிரு திருமண்களை உடம்புகளிலிட்டுக் கொள்ளுகின்றனர்.
இதற்கு திருமண் என்று பெயர்தானே ஒழிய, உண்மையில் அவர்கள் உன்னைத்தான் தாங்கள் திருமேனியில் அலங்கரித்துப் போற்றுகின்றனர்.
திருமண் என்பது வியாஜம் – அது பாதுகை என்பதே நிஜம்.

நேற்று மேற்கூறிய பாதுகா ஸஹஸ்ரத்தின் இந்த பாசுரத்தோடு நிறைவு செய்து மனம் நிறைவடைந்தேன்.

என்னிடம் பலர் கேட்ட ஒரு கேள்வி – என்னிடம் பெரியோர்கள் கூறிய எந்த ஒரு பதிலாலும் அடியேன் முழு திருப்தியடையாத ஒரு கேள்விக்கு ஸ்வாமி தேசிகர் மனநிறைவடையும்படி, அற்புதமாக, இந்த ஸ்லோகத்தில் பதில் அளிக்கின்றார்.

அந்த கேள்வி – பெருமாளின் திருவடிகளை நாம் நெற்றியில் திருமண் காப்பாக இட்டுக் கொள்கின்றோம். பெருமாளுக்கே நெற்றியில் திருமண் இடுகின்றீர்களே! அவர் யாருடைய திருவடிகளைத் திருமண் காப்பாக அணிந்து கொள்கின்றார்? என்பதுதான்.

இப்போது தெளிவுபட ஸ்வாமி தேசிகன் கூறிவிட்டார் – திருமண் என்பது வியாஜம் – பாதுகை என்பதுதான்
நிஜம் என்று. பாதுகை என்பது நம்மாழ்வார்தானே! பெருமாளும் ஆழ்வார், ஆச்சார்யாள் நினைவோடு, அவர்கள் மேற்கொண்டுள்ள அளவிலா பாசமோடு, ஐக்கிய உணர்வோடு, ஸ்வாதீனமாக அந்த பாதுகையினையே, அனைத்து ஆழ்வார்களும் இவருக்கு அங்கமாகயுள்ள, சடகோபனையே ஏன் தாமும் தரித்துக் கொள்ளக் கூடாது..?

சரிதானே! என் மனதிற்கு மிகவே சரியென்றுதான் தோன்றுகிறது. உங்கள் கருத்தினை பகிர்ந்து கொள்ளுங்களேன்…!

சரி! மேற்கொண்டு பேசுவோம்…!

விம்ருச்ய ரங்கேந்த்ர பதிம் வராயா:
ச்ருதே! ஸ்திதாம் மூர்த்தநி பாதுகே! த்வாம்!
பத்த்நந்தி வ்ருத்தா: ஸமயே வதூநாம்
த்வந் முத்ரிதாநி ஆபரணாநி மௌளௌ !! 785 !!

ரங்கேந்த்ரபதிம்: ஸ்ரீரங்கநாதனை – வராயா: வரனாக(கணவனாய்) அமையப்பெற்ற – ஸ்ருதே: வேதமாதாவே வ்ருத்த: பெரியவர்கள்.

பெரியோர்கள்(வைதீகத்தில் தேர்ந்தவர்கள்) கல்யாணம் செய்து வைக்கும் போது பெண்களின் தலையில் நுகத்தடியினை வைத்து திருமாங்கல்யத்தினையும் வைக்கின்றார்கள்.

ஏன் வைக்கின்றார்கள்…?

திருமாங்கல்யத்தில் திருமண் சங்கு சக்ரம் பொறிக்கப்பட்டுள்ளது. திருமண், பாதுகை இரண்டும் ஒன்றுதான் என்று இப்போதுதானே பார்த்தோம்! பாதுகை வேதங்களின் சாரம்தானே! இந்த வேதமாதா ஸ்ரீரங்கநாதனை மணாளனாகக் கொண்ட சௌபாக்யவதி! நித்ய சுமங்கலி! அதுபோன்று பாதுகை அதாவது திருமண் பொறிக்கப்பட்ட திருமாங்கல்யத்தினையும் அவர்கள் சிரமேற் தரித்துப் போற்றி அணிந்தால் தீர்க்க சுமங்கலிகளாகயிருப்பர் என்ற ஒரு நினைவுடன் உன்னை சிரஸ்ஸில் வைக்கின்றார்கள்.

இதே பத்ததியில (ஸந்நிவேச பத்ததியில்); இன்னொரு பாசுரத்தில் பாதுகையின் உருவத்தினை அற்புதமாய் வர்ணிக்கின்றார் ஸ்வாமி தேசிகர்!

மத்யே க்ருசாம் உபயத: ப்ரதிபந்த வ்ருத்திம்
மந்யே ஸமீக்ஷய பவதீம் மணி பாதரக்ஷே!
நித்யம் முகுந்தபத ஸங்கம விப்ரயோகௌ
நிச்சிந்வதே க்ருததிய: ஸூக துக்க காஷ்டாம் !! 790

மத்யே: மத்தியில் க்ருசாம்: இளைத்தும் – உபயத: இரண்டு பக்கங்களிலும் – ப்ரதிபந்த: அடையப்பட்ட – வ்ருத்திம்: பெருத்தும்

ஹே! பாதுகே! நீ இரண்டு பக்கங்களிலும் (முன்னும் பின்னும்) பெருத்து நடுவில் இளைத்திருக்கின்றாய். இதனை ஸேவிக்கும் வித்வான்கள் இந்த இருபுறங்களிலும் நம்பெருமாளின் திருவடிப்பட்டதால் பூரிப்படைந்து பெருத்தும், திருவடி படாத இடங்கள் ஏக்கத்தினால் இளைத்தும் இருப்பதாக தீர்மானிக்கின்றனர்.

ஆழ்வார் ஆச்சார்யர்களுக்கு, நம்பெருமாளை நினைப்பது, அவன் ஒருவனையே தியானிப்பது மட்டுமே அளவில்லாத ஆனந்தம் – பெருத்த சுகம்! இந்த நினைவு, தியானம் கலையும் போது எல்லையில்லா வருத்தம்!

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் – கைவளைகள்
என்னோகழன்றே? இவை என்ன மாயங்கள் ?
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க – அவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே! (திரு.231)
-திருமங்கைமன்னன்-

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: