Srirangapankajam

March 1, 2009

Pesum Arangam-42

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 10:18 am

Chapter-42
26.02.2009
 


பாதுகையானது நம்பெருமாளின் திருவடிகளை சதா போற்றிக் காப்பாற்றக் கூடியது. 
 
பெருமாள் வாமனாவதாரம் எடுத்தப்போது பெருமாளின் திருவடிகள் சின்னதாகயிருந்த போது, பாதுகையும் தன்னுடைய அளவு சிறுத்து அந்த சிறிய திருவடிக்கொப்ப மாறியதாம். 
 
திருவிக்ரம அவதாரம் எடுத்தப் போது அந்த பெரிய திருவடிகளுக்கொப்ப மாறி பெரிய பாதுகைகளாய் ஆனதாம்.  பெருமாளுடைய ஸ்வரூபத்திற்கேற்ப தானும் மாறிக் கொண்டது பாதுகை. 
 
அதாவது பெருமாள் எப்படியோ அப்படியேதான் பாதுகைகளும்!. 
 
ரொம்ப ரொம்ப சின்னதான வஸ்துக்களிலும் ஈஸ்வர ஸ்வரூபமானது நுழையக் கூடியது. 
 
ஈஸ்வர ஸ்வரூபம் சூக்குமமானது என்றால் பாதுகை அந்த சூக்குமத்தினுளுள்ள சூக்குமம்.  உதாரணமாக தவலை நிறைய நீர் நிரப்பி அடுப்பில் வைத்து அடியில் நெருப்பிட்டால் தவலை ஜலமும் சூடாகின்றது.  இங்கு நெருப்பு சூக்குமம்.  நெருப்பினுள் உள்ள வெப்பம் இருக்கின்றதே அது சூக்குமத்திலுள்ள சூக்குமம். 
 
பாதுகையினை ஆழ்வார் ஆச்சார்யனாகக் கொண்டால் – இவர்தான் சூக்குமத்தின் உள்ளுள்ள சூக்குமம்.  இவர் இல்லாவிடின் பெருமாளுக்குக் கூட ஏற்றம் இல்லை. 
 
ஆச்சார்ய ஸ்வரூபம்தான் பெருமாளின் ஸ்வரூபம்
 
நல்ல ஆச்சார்யனானவன் இன்பம், துன்பம் இரண்டினாலும் பாதிக்கப்படுவதில்லை.  அவர்களை இவ்வுலகத்தவர்கள் உயர்த்தி போற்றினாலும், தாழ்த்தி ஏசினாலும்,  வருத்தினாலும், அவர்கள் பாதிக்கப்படுவதில்லை.
 
நம்பெருமாள் நிற்கும் போதும் எழுந்தருளும் போதும் அவரது திருமேனியைத் தாங்குவது பாதுகைகள்தாம்.  மிகச் சிறந்த திருவாபரணங்கள் எல்லாம் அந்த எம்பெருமானின் அழகிற்கு அழகூட்டுவதற்கு மட்டுமேதான். 
 
ஒருவனுக்கு எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் அவன் உயிர் வாழ உதவுவது அன்னம்தானே தவிர அந்த செல்வம் கிடையாது. பெருமைக்குத்தான் செல்வம்.  அடிப்படையான வாழ்விற்கு ஆதாரம் அன்னம்தான்.
 
இந்த உலகில் எவ்வளவோ கோடானுகோடி பொருட்கள் கொட்டிக் கிடக்கின்றன.  பலவித மருந்துகள் இருக்கின்றன.  பலவித நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. ஆனால் பெருமாள், தாயாருக்கு மிகவும் இஷ்டமான ஜீவன்களை இப்பிறவித் துன்பம் களைந்து காப்பாற்றுவதற்கு ஆச்சார்யனைத் தவிர வேறு யாரும் இல்லை!.
 
பரஸ்ய பும்ஸ: பதஸந்நிவேசாந்
ப்ரயுஞ்ஜதே பாவித பாஞ்சராத்ரா:
அகப்பரதீபாந் அபதிஸ்ய புண்டராத்
அங்கேஷூ ரங்கேசய பாதுகே! த்வாம்!
பாஞ்சராத்ரா: – பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தினை  – பாவித: கடைப்பிடிப்பவர்கள்  –  பதஸந்நிவேசாந்: பாதுகைப் போன்ற உருவத்தையுடைய –  புண்டராத்: திருமண்காப்பினை – அபதிஸ்ய: வியாஜ்யமாகப்பண்ணி
 
ஹே! பாதுகே! பாஞ்சராத்திர ஆகம சாஸ்த்திரத்தில் நன்கு தேர்ந்த மஹான்கள் பன்னிரு திருமண்களை உடம்புகளிலிட்டுக் கொள்ளுகின்றனர்.   இதற்கு திருமண் என்று பெயர்தானே ஒழிய, உண்மையில் அவர்கள் உன்னைத்தான்,  உன் ஸ்வரூபத்தினைத்தாம் தாங்கள் திருமேனியில் அலங்கரித்துப் போற்றுகின்றனர்.  திருமண் என்பது வியாஜ்யம் – அது பாதுகை என்பதே நிஜம்.
 

Blog at WordPress.com.

%d bloggers like this: