Srirangapankajam

February 20, 2009

Pesum Arangam-37

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 9:57 am

Chapter-37
19.02.2009

ஒரு பொருளின் தன்மை வித்யாசமாக தெரியவேண்டுமானால் அதனைக் காட்டிலும் மாறுபட்ட தன்மையுள்ள அதைப்போன்ற ஒரு பொருள் அருகிலிருந்தால்தான், வேறுபாடு தெரியும்.

உதாரணமாக நல்ல சிகப்பழகு எப்போது பளீரீடும்?. என்னைப் போன்ற கறுப்பர்கள் அருகிலிருந்தால் தெரியும். எல்லாருமே சிகப்பு என்றால் இந்த வித்யாசம் தெரியுமோ?

இதைப்போன்று பாதுகையில் தங்கமும் அருகருகில் இந்திரநீலகற்களும் பதிக்கப் பெற்றுள்ளன. இந்த கற்கள் அருகிலிருப்பதால் தங்கத்தினுடைய பளபளப்பு பன்மடங்கு தன் இயற்கையை விட பிரகாசிக்கின்றது. இத்தகையத் தன்மையினைப் பார்த்த பிறகு பாதுகையினைத் தவிர உலகத்திலிருக்கும் தங்கமும், ஓட்டாஞ்சல்லியும் ஒன்றாகத் தெரிகின்றதாம்.

பாதுகையின் தங்கம் நல்ல ஆச்சார்யன். இந்திரநீலக்கற்கள் பாசுரங்கள். இந்த பாசுரங்களின் கருத்தையறிந்து, வேறு உபாயம் ஏதும் நாடாமல், பாசுரபக்தியினாலே பகவானின் திருவடிகளில் நிலைபெறுகின்றான் ஆச்சார்யன். இந்த ஆச்சார்யன் திருவடிகளில் சரணடைந்த பிரபந்நன், ஜீவ ஸ்வரூபம், பரமாத்மா ஸ்வரூபம் முதலானவைகளை உள்ளபடி அறிந்து தெளிகின்றான். அதன் பிறகு, எப்படி தங்கமும் ஓட்டாஞ்சல்லியும் ஒன்றாகத் தெரிகின்றதோ, அதுபோன்று, அவனுக்கு ப்ரும்மபட்டமே கொடுத்தால் கூட, அவன் அதை விரும்புவதில்லை.

ஸதி வர்ணகுணே ஸூவர்ணஜாதே
ஜகதி க்யாதம் அஸெரபாத் அவர்ணம் !
ச்ருதிஸௌரப சாலிநா ஸ்வஹேம்நா
பவதீ செளரீபதாவநி! வ்யுதாஸ்த்த்தத் !! (735)

அஸெரபாத்: வாசனையில்லாததாலே
அவர்ணம்: அபவாதம்

தங்கம் மிக மிக உயர்ந்த வஸ்து. பளபளப்போடு சதா மிளிரக்கூடியது. ஆயினும் அதற்கு ஏதேனும் நல்ல மணமுண்டோ? ஒரு வாசனையுமில்லாதது. இது ஒரு குறைதானே! ஆனால் இந்த குறையை பாதுகையிலுள்ள தங்கம் போக்கடித்தது. ஏனெனில் அது வேத வாசனையோடு கூடியது!.

இந்த உலகில் எத்தனையோ மதங்களிருக்கின்றது. ஆனால் வைணவம் அளவுக்கு சரியான ஆதாரங்களும், யுக்திகளும், உலகத்தின் அனுபவங்களுக்கு ஒத்திருக்கையும் பெரும்பாலுமில்லை.

ஆழ்வாராதிகளாலே, ஆச்சார்யர்களாலே நடத்தப்பட்ட நம்முடைய வைணவத்திற்கு எல்லாம் ஒத்திருக்கின்றது. ஆழ்வார்களின் பிரபந்தங்கள் எல்லா வேதங்களுடைய சாரம்! எல்லா வேதங்களுடைய அர்த்தம்!.

ப்ரதிபந்த மயூர கண்டதாம்நா
பரிசுத்தேந பதாவநி! ஸ்வகேந !
கமலாஸ்தநபூஷணோசிதம் தத்
பவதீ ரத்நமலங்கரோதி ஹேம்நா !! 736 !!

மயூரகண்ட: மயில் கழுத்து
தாம்நா: பளபளப்பை உடைத்தாயிருக்கின்ற.

பாதுகையில் மயில்கழுத்தினைப் போன்று பளபளக்கும் இந்திரநீலகற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனைப்பார்க்கும் போது குற்றமில்லாத தங்கத்தினால் மஹாலக்ஷ்மீயின் கழுத்தினை அலங்கரிக்கக் கூடிய அவளுக்கு மகிழ்ச்சித் தரக்கூடிய பெருமாளாகின்ற ரத்னங்களை இழைத்து அலங்கரிப்பது போலுள்ளதாம்.

பெருமாளும் தாயாரும் அகில உலக சிருஷ்டிக்கு காரணமானவர்கள்.

தாயாருக்கு எல்லா ஜீவன்களுக்கும் மோக்ஷம் தரவேண்டும் என்கின்ற காருண்யம்! பெருமாளுக்கு குற்றம் செய்தால் தண்டனை என்கிற ஒரு குணம். உலகத்திலோ எல்லா ஜீவன்களும் அளவில்லாத குற்றங்களை பண்ணிக்கொண்டேயிருக்கின்றன. அதனால் தாயாருக்கு மிகுந்த மனவருத்தம். ஆழ்வார் ஆச்சார்யர்கள் தாயாரின் வருத்தமறிந்து தம்மையடைந்த அனைவருக்கும் கருணைப் புரிய பகவானை வற்புறுத்துகின்றனர். எவரிடத்தும் ஆட்படாத அரங்கன் இவர்களுக்காட்பட்டு குற்றம் பாராது மோக்ஷம் கொடுக்கின்றபடியால், வருத்தம் தீர்கின்றாள் தாயார். பகவானைக் கண்டு ஸந்தோஷமடைகின்றாள்.

ஸ்வாமி தேசிகர் தமது பாதுகா ஸஹஸ்ரத்தினை தாயார் ஸந்நிதியின் முன்புதான், கம்பர் இராமாயண அரங்கேற்ற மண்டபத்தின் அருகில், கடைசி ஒரு யாமமான இரண்டரை நாழிகைக்குள் பாடினார் என்ற ஒரு கருத்துண்டு.

அற்புத படைப்புக்கள் பல அரங்கநாயகியின் முன்தான் அரங்கேற்றம்!

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: