Srirangapankajam

February 17, 2009

Pesum Arangam-34

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 12:15 am

Chapter-34
15.02.2009

க்லுப்தஸ்யாமா மணிபிரஸிதை: க்ருஷ்ணபக்ஷேஷூ ஜூஷ்டா
ச்ரேய: பும்ஸாம் ஜநயஸி கதிம் தக்ஷிணாம் உத்வஹந்தீ!
தேநாஸ்மாகம் ப்ரதயஸி பரம் பாதுகே! தத்வவித்பி:
மௌளௌ த்ருஷ்டாம் நிகமவசஸாம் முக்தி காலாவ்யவஸ்தாம்!!702!!

‘மணிபி:’ இந்திரநீலக்கல்லுகளாலே – ‘அஸிதை:’ கருப்பாயிருக்கின்ற – ‘க்ருஷ்ணபக்ஷேஷூ:’ கிருஷ்ணபட்சத்தாலே – ‘ஜூஷ்டா:’ ஸேவிக்கப்பட்டவள்
‘முக்தி காலாவ்யவஸ்தாம்” : – மோக்ஷத்திற்காக கட்டுபாடில்லாமை.

பாதுகையில் பதிக்கப்பட்டுள்ள இந்திரநீலக்கல்லினால் கருப்பாயிருக்கின்றாய். இது கிருஷ்ணபட்சத்தினைப் போலுள்ளது. தக்ஷிணாயணம் போலுள்ளது. ஆயினும் மோக்ஷம் வேண்டி உன்னிடத்தில் கைங்கர்யம் செய்பவர்கள் அவர்கள் எந்த காலத்தில் இறந்தாலும் மோக்ஷம் உண்டு என்பதனைத் உணர்த்துகின்றாய்!.

உபநிஷத்துக்கள், ‘ஒருவன் பக்தி, பிரபத்தி போன்றவற்றைக் கடைப்பிடிப்பானாயின் அவன் ராத்ரியில் இறந்தாலும், கிருஷ்ணபட்சம், தக்ஷிணாயணம் ஆகிய காலங்களில் இறந்தாலும் மோக்ஷம் உண்டு. இதனைக் கடைப்பிடிக்காது மற்ற உபாயங்களை கடைப்பிடிப்பவர்கள் இந்த காலங்களில் இறந்தால் நல்லகதி கிடையாது” என்கிறது.

இந்திரநீலக்கல் ராத்ரி போன்று இருண்டிருந்தாலும், கிருஷ்ணபட்சம், தக்ஷிணாயணம் போன்றிருந்தாலும் தன்னை அண்டியவர்களுக்கு மோக்ஷம் அளிக்கக்கூடியது.

ஆழ்வாரின் பாசுரங்களை பக்தியோடு அனுசந்திப்பவர் எந்த காலத்தில் இறந்தாலும் மோக்ஷம் கண்டிப்பாக உண்டு. அவர்களுக்கு இந்த மோக்ஷமானது சொந்த வீடு போன்றது.

ஆழ்வார்களின் அவதாரத்தினாலேயும், அவர்கள் பாசுரங்களினாலும்தான், சாந்தி, பக்தி, விரக்தி, தயை, பொறுமை, நல்லபுத்தி போன்ற நல்லகுணங்கள் இவ்வுலகில் விளங்குகின்றது.

பாதுகையில் பதிக்கப்பெற்றுள்ள இந்திரநீலக்கல்லின் காந்தி இருட்டு போலிருக்கின்றது. இந்த இருட்டு அதனை ஸேவிக்கின்றவர்களின் அஞ்ஞானமாகின்ற இருட்டைப் போக்குகின்றது.

காலில் தைத்த முள்ளை, முள்ளால் எடுப்பது போன்று, பெருமாளை அடையமுடியவில்லையே என்று ஏக்கத்துடன் ஆழ்வார்கள் பாடிய, இந்திரநீலக்கற்கள் போன்று, பாசுரங்கள், அதனைக் கற்போரின், பொருள் உணர்ந்தோரின் அஞ்ஞானம் என்கிற மற்றொரு இருட்டினைப் போக்குகின்றது.

ஒருவன் தன்னுடைய குற்றங்களையும், பெருமாள் தமக்கு அகப்படவில்லையே என்றும் நினைத்துத் துக்கப்பட்டால், அவனுக்கு எல்லா ஸம்ஸார துக்கங்களும் போய்விடுகின்றன. ஆகவே பெருமாளை அடையமுடியவில்லையே என்கிற துக்கம் துக்கமில்லை! அது ஒரு இன்பமே! காதலே!.

சூதனாய் கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்தகாலம்
மாதரார்கயற்கணென்னும் வலையுள்பட்டழுந்துவேனை
போதரேயென்று சொல்லிப் புந்தியுள்புகுந்து – தன்பால்
ஆதரம் பெருகவைத்த அழகனூர் அரங்கமன்றே –
-தொண்டரடிப் பொடியாழ்வார்-

‘சூது’ என்பது பொருளுக்குடையவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனுடைய பொருளை கொள்ளையிடுவது. மஹாபாரதத்தில் சகுனியும், துரியோதனனும் பஞ்சபாண்டவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அபகரித்தனரே – அது ‘சூது’.

‘களவு” என்பது பிறருடைய பொருளை தன்னுடையது என்ற நினைத்தல். இந்த வெறும் நினைப்பேக் கூட களவுதான். இவ்விதம் நினவோடு இருப்பவன்தான் ‘கள்வன்’. இந்த கள்வரில் பெரிய கள்வன் நாம்தான்!
நம்பெருமாளுக்குச் சொந்தமான இந்த ஆத்மாவை, நம்முடையது, நமக்குச் சொந்தமானது என்ற நினைப்போடு வாழ்கின்றோமே!

ஸர்வேஸ்வரனான நம்பெருமாளை தவிர்த்து சூதரோடும் கள்வரோடும் திரிந்து, பெண்டிரின் கண்ணழகு ஆகின்ற வலையில் அகப்பட்டு, அவர்கள்தம் சுகமே பெரிதென்றெண்ணி அதிலிருந்து மீளமாட்டாமல் இருந்த என்னை, தம்முடைய திவ்ய கண்ணழகைக் காட்டி மீட்போம். என்று பெருங்கருணையோடு திருவுள்ளம் பற்றிய நம்பெருமாள் தம் திவ்யசொரூபத்தினை காட்டியருளி, தரிசு நிலத்தில் பாயும் நீரை பயிரிலே பாயச் செய்வது போல அன்பாலே திருத்தி ஆதரம் பெருக வைத்தான்.

ஸம்சாரிகளாகிய சேதனர்களாகிய நமக்கு ருசி பிறக்கும் போது அனுபவிக்கத்தக்கதாய் உள்ள தேசம் இதுவேயன்றோ..!

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: