Srirangapankajam

February 5, 2009

Pesum Arangam-27

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 11:30 pm

Chapter-27
03.02.2009

பெருமாளைக் காட்டிலும் பாகவதார்கள் உயர்ந்தவர்கள். இந்த பாகவதர்களைக் காட்டிலும் ஆச்சார்யர்கள் உயர்ந்தவர்கள். இந்த ஆச்சார்யன் பெருமையையும், குருபரம்பரையில் ஸ்ரேஷ்டரான நம்மாழ்வாரைப் பற்றியும், ஆழ்வார்களது பாசுரங்களின் பெருமையைப் பற்றியும்தான், பாதுகா ஸஹஸ்ரத்தில், பிரவாகமாக அமையப்பெற்றுள்ளது.

பாதுகா ஸஹஸ்ரம் தேசிகரது ‘சடகோப ஸ்துதி’ ஆகும்.

ஆழ்வார்கள் பெருமாளுக்குச் சாற்றிய அழிவில்லாத அலங்காரம் பாசுரங்கள் ஆகும். இதுவே பெருமாளின் திருவடிக்கு இன்பமானதாகும்.

ஆழ்வார்களுக்கெல்லாம் தலைவனான நம்மாழ்வார் பாதுகையாய் நம்பெருமாளை விட்டு அகலாதிருப்பது இவ்விருவருக்குமே இன்பமானதாகும். நம்பெருமாள் இருப்பது ரக்ஷணத்திற்காக!. பாதுகையிருப்பது இந்த அழிவில்லாத ரக்ஷணத்திற்கு நம்மை உட்படுத்துவதற்காக.!

பாதுகையில் முத்து, பச்சைக்கல், சிகப்புக்கல் இவைகளெல்லாம் இழைக்கப்பட்டிருக்கின்றது. அதனாலே அநேகவர்ணமுடையவளாய் பாதுகாதேவி இருக்கின்றாள். இந்த அநேக ரத்னங்களுடைய சேர்க்கை அநேகவர்ணங்களால் ஆன பட்டுத் தலையணைப்போல் காட்சியளிக்கின்றதாம். அதில் வேதங்களாகின்ற பெண் தலைசாய்த்து நிம்மதியாய் உறங்குகின்றாளாம்.

ஆகீர்ண மௌக்திக ஹரிந் மணிபத்மராகாம்
அம்போஜலோசநபதாவநி! பாவயே த்வாம்!
தத்பாத விச்ரமஜூஷாம் ச்ருதி ஸூந்தரிணாம்
வர்ணோபதாந மிவ மௌளிநிவேசயோக்யம் !! (558)

‘விஸ்ரமஜூஷாம்’ என்றால் சிரமபரிகாரம் என்று பொருள். ஸ்ருதி என்றால் வேதம். சுந்தரி என்றால் அழகிய பெண்.
(ஹை! ‘ச்ருதி சுந்தரி’ இந்த பெயர் கூட நல்லாயிருக்கே.!) வேதமாகிய அழகிய பெண் நம்பெருமாளின் திருவடியில் இந்த பாதுகையில் பதிக்கப்பெற்றுள்ள ரத்னங்களாகிய தலையணையில் நிம்மதியாக தலை சாய்த்து சிரமபரிகாரம் செய்து கொண்டுள்ளாள் என்கிறார்.

வேதத்திற்கு என்ன சிரமம்..?

வேதத்தினை, அவரவர், அவரவருக்கு தோன்றினபடி, அர்த்தம் சொல்லுவதினால் சிரமம். உண்மையான அர்த்தம் இந்த ஜீவன்களுக்குத் தெரியாமல் போய்விடப்போகின்றதே என்ற தவிப்பு!. இதனால் ஏற்படும் சிரமம்!

சரி! எப்படி நிம்மதியாய் இப்போது சிரமப்பரிகாரம் செய்து கொண்டுள்ளாள்..?

பாதுகையான ஆழ்வார்கள் அவதரித்து ரத்னங்கள் போன்ற பாசுரங்களினால் வேதத்தின் உட்பொருளை, தீர்க்கமான உண்மையை இந்த ஜீவன்களுக்காக பரிவோடு ஸாதித்தப்பின், வேதமாதா தன்னுடைய உண்மையான பொருளை இந்த பாசுரங்களின் மூலம் ஜீவன்கள் அறிந்து கொள்வர், என்று கவலை மறந்து, ஸ்வஸ்தமாக படுத்துறங்குகின்றாளாம்!.

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: