Srirangapankajam

January 12, 2009

Pesum Arangam-18

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 11:33 pm
Chapter-18
11.01.2009
 
ஸ்வாமி தேசிகர் பாதுகா ஸஹஸ்ரத்தினை மிக நேர்த்தியாய் முப்பத்திரண்டு பத்ததிகளாய் பிரித்துள்ளார்.

பத்ததி என்றால் மார்க்கம் என்று பொருள். 
 
உபநிஷத்துக்களில் பகவானை உபாஸிப்பதற்கு 32 வித்யைகள் கூறப்படுகின்றது.
இவைக்கு ‘பரவித்யை’ என்று பெயர். 
 
இவ்விதமே பாதுகையினை வழிபட ஸ்வாமி தேசிகர் 32 பத்ததிகளை வகுத்துள்ளார்.
இதில் ‘நாத பத்ததி’ சிறப்பான ஒன்று.  இது 100 பாடல்கள் கொண்டது.  திருவாய்மொழியின் சிறப்பினை சூக்குமமாக உணர்த்துவது.
நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் பாடல்களின் பொருளை தன் கருவாகக் கொண்டு அமைந்துள்ளது இந்த பத்ததி.
இவ்வளவு விஷயங்களை உள்ளடக்கி, ஒரே இரவில், அதுவும் ஒரே யாமத்தில், கடைசி ஒரு ஜாமத்தில் எப்படித்தான் பாடினாரோ..?  அவரே சொல்கிறார்..
 

அநுக்ருத நிஜநாதாம் ஸூpக்திமாபாதயந்தீ
மநஸி வசஸிச த்வம் ஸாவதாநா மம ஸ்யா: !
நிசயமதி யதாஸௌ நித்ரயா தூரமுக்த
பாரிஷதி ஸஹ லக்ஷ்ம்யா பாதுகே ரங்கநாத: !!
 
ஹே! பாதுகையே!  இராத்திரியில் இந்த க்ரந்தத்தைப் பண்ணும்படி நியமித்தாய்! (தேசிகருக்கு ‘கவிதார்க்கிஹ சிம்மம்” என்ற விருதின் பெயரில் ஏற்பட்ட பொறாமையில் இந்த கட்டாயம் தேசிகருக்கு ஏற்பட்டது!  இதனை அவர் பாதுகையின் நியமநம் என்று ஏற்கின்றார்.  இந்த மனோபாவம்  – பக்தி முக்யம்.  விரோதம் முக்யமல்ல.  நமக்கு விரோதமாய் கஷ்டங்கள் ஏற்படினும், அதுவும் பகவத் ஸங்கல்ப்பம் என்று ஏற்றுக் கொள்வேமேயாயின், மன கஷ்டமுமில்லை! பகையுமில்லை!  பரந்தாமன் பார்த்துக் கொள்வான் அனைத்தையும்!)  உன்னுடைய சப்தம் போல (இங்கு அவர் பாதுகையின் சப்தம் என்று கூறுவதற்கு ‘ஆழ்வார்களின் ஸூக்திகளைப் போல என்று பொருள்) பெருமாளுக்கு மிகவும் இன்பமான வார்த்தைகள் தாமதமின்றி என் மனதில் தோன்றி அதிவேகமாய் (குறைந்த பட்ச அவகாசமேயுள்ளதால் பாதுகையினை அவசரப்படுத்துகின்றார்) என் வாக்கில் வரும்படியாக
நீ தயை செய்ய வேண்டும்!  இதன் ஸ்வாரஸ்யத்தாலே தாயாருக்கும் பெருமாளுக்கும் தூக்கம் மறந்து போய் ஸபையிலே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று மனதார பிரார்த்திக்கின்றார்.  தம் பக்தர்களைக் கரை சேர்ப்பதுதானே பாதுகையின் அவதார நோக்கம்.  கவிமழையை பொழிய வைக்கின்றாள்.  ஒரு ஜாமத்திற்குள் 1008 பா பூக்கள்!  ஒரு கருவிதான் தேசிகர்!
கரு பாதுகையின் கருணைதான்! 
 
எப்படி ஸ்வாமி ஸ்ரீ இராமானுஜர் மறுபிறப்பில் மணவாள மாமுனியாய் அவதரித்தாரோ, அது போன்று ஸ்வாமி நம்மாழ்வார், மீண்டும் இறப்பு, பிறப்பற்ற பாதுகையாகவேயானார். 
 
நம்மாழ்வாராய் இருந்த சமயம் இவர் சிறப்பை வெளிப்படுத்த – மதுரகவி!  பாதுகையாய் அவதரித்தப் போது  – ஸ்வாமி தேசிகர்!
 
பெருமாளின் பாதுகையில் வெளுப்பு, சிகப்பு, கருப்பு முதலான பல வர்ணங்களில் ரத்னங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இதைப் பார்த்த ஸ்வாமி தேசிகருக்கு பெருமாள் க்ருதயுகத்தில் வெளுப்பாயும், த்ரேதாயுகத்தில் சிகப்பாயும், துவாபரயுகத்தில் மஞ்சளாயும், கலியுகத்தில் கருப்பாயும் ஸேவை சாதித்தருளும் நம்பெருமாள் இதையெல்லாம் ஒரே காலத்தில் தம் திருவடி கீழே காண்பிப்பது போலுள்ளது என்கிறார்.  (சதுர் யுகத்திற்கும் இவர்தானே அதிபதி!)
 

நவரத்னங்கள் எனப்படும் (ரத்னம், வைடூர்யம், வைரம்,மாணிக்கம்,நல்முத்து, பவழம், கோமேதகம், புஷ்பராகம், நீலம், மரகதம்) ஒன்பது ரத்னங்களில் பாதுகையானது அலங்கரிக்கப்பட்டுள்ளது.  இதைப் பார்த்த ஸ்வாமி தேசிகர்,  பாரத, கிம்புருஷ, ஹரிவர்ஷ, இளாவிருத, பத்ராசல, கேதுமால, ரம்ய, ஹிரண்மய, குரு என்று ஒன்பது பாகமாயுள்ள இந்த பரந்த பூமி பிறந்தகத்தினையடைந்தது போல் ஆசையாக பெருமாள் திருவடிகளையடைந்தது போலுள்ளது என்று ரசிக்கின்றார்.

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: