Srirangapankajam

January 10, 2009

Pesum Arangam-17

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 12:09 pm
 
Chapter-17
09.01.2009
 
ஸ்வாமி தேசிகர் நம்பெருமாள் புறப்பாட்டினை அணுஅணுவாக ரசித்திருக்கின்றார்.
 
நம்பெருமாள் மூலஸ்தானம் எழுந்தருளுகின்ற சமயம் வாத்யங்கள் இசை முதலானவற்றை நிறுத்தி அரையர் இசையோடு (அரையர் தாளம் மட்டும் இசைப்பார்!) ஆஸ்தானம் எழுந்தருளுவார்.  இதனை ஸ்வாமி, பாதுகையின் சப்தத்தினைக் கேட்டபடியே எழுந்தருளுகின்றார் என்கிறார்.
 
பாதுகை எழுப்பும் சப்தம் திருவாய்மொழி!  பாதுகையாயிருப்பது நம்மாழ்வார்! 
நிசப்தமாக ஆழ்வாரின் அருளிச்செயலைக் கேட்டவாறே எழுந்தருளுகின்றார். 
 
அதே போன்று புறப்பாட்டின் போதும் பாதுகையின் சப்தம் முன்னே கேட்க பெருமாள் பின்னே எழுந்தருளுகின்றார் என்கிறார்.  பெருமாள் புறப்பாட்டின் போது அருளிச்செயல் கோஷ்டிதான் முன் செல்லும்.  இந்த தமிழ் பின்னே அரங்கன் பித்தனாய் செல்வான்!
 
நம்பெருமாள்தான் ஸர்வவேதப்ரதிபாத்யன்!
 
ஸர்வவேதங்களும் நிர்ணயம் செய்யக்கூடிய பரத்வம் அவன்தான்.  இதனை நம்மாழ்வார் திருவாய்மொழியில் நிர்த்தாரணம் பண்ணுகின்றார்.  பாதுகைகளிலிருந்து எழும்பக்கூடிய சப்தங்களும் இதையே சொல்லுகிறதாம்!.
 
பாதுகையின் சப்தங்கள் ஸ்வாமி தேசிகருக்கு விடாது கேட்டவண்ணம் இருக்கின்றது.  ஒரு சமயத்தில் இவருக்கு அந்த சப்தம் கேட்கவில்லை!.  அப்போது அரங்கன் ஆதிசேஷனின் படுக்கையில் சயனித்தவாறுயிருக்கும் நேரம்.  அப்போது இந்த பாதுகாதேவி இந்த உலகை எப்படி ரக்ஷிக்கலாம் என்ற யோசனையிலிருக்கின்றாளாம்!.
 
திருவாய்மொழி என்னும் வேதசாரத்தின் சொரூபியாய் உள்ள பாதுகையின் ரத்னகாந்தி தீண்டப்பெறுபவர்கள், யமனுடைய தொழிற்சாலையில் சாட்டையினால் அடிபடுகிறதில்லை! நரகமில்லை! யமலோகமில்லை!
இதற்கே இவ்வளவு பலன்கள்!  திருவாய்மொழியினை அதன் தாத்பர்யத்தினை அறிந்து நம்பெருமாளைத் தியானிப்பவர்களின் உன்னத நிலைமை.. விளக்கவும் முடியுமோ..?
 
இராமன் சமுத்திரத்தினைத் தாண்டுவதற்கு சேது அணையைக் கட்டினாற்போன்று,  ஸ்வாமி நம்மாழ்வார் நம் ஸம்ஸாரமாகிய பிறவிப்பெருங்கடலைக் கடப்பதற்காக பாதுகையாய் அவதரித்து
பழியாய் நம்மை கரை சேர்த்தே தீருவேன்! என்று கங்கணம் கட்டிக்கொண்டு பரமனின் திருவடியில் பாய்விரித்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்!.
 
பாதுகை ஒரு ஓடம் போன்று இருக்கிறதாம்!
அதனை செலுத்தும் ஓடக்காரனாய் ஸ்ரீரங்கநாதன் அதன் மேல் எப்போதும் எழுந்தருளியிருக்கின்றான்!
 
ஓது வாய்மையும் உவனிய பிறப்பும்
உனக்கு முன் தந்த அந்தணனொருவன்
காதலென் மகன் புகலிடம் காணேன்
கண்டு நீ தருவாய் எனக்கு என்று
கோதில் வாய்மையினான் உனை வேண்டிய
குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்
ஆதலால் வந்து உன்னடியிணையடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்தம்மானே! (திருமங்கையாழ்வாh; – திரு.223)
 
சாந்தீபினி முனிவரை குருவாய் ஏற்றான் கண்ணன்! குருகாணிக்கையாக கடலில் முழ்கி இறந்த தம் மைந்தனைக் கேட்கின்றார் முனிவர்! கையில் வில்லெடுத்து கடற்கரை சேர்ந்தான் கண்ணன். 
 
அச்சமுடன் வருணன்,  ‘பஞ்சஜனன்’  என்ற அசுரன் அவனை விழுங்கிவிட்டான் என்றுரைத்து தன் கடல் நீரை விலக்கி அவனை அடையாளம் காட்டினான். 
 
பஞ்சஜனனை அழித்தான் கண்ணன். 
 
யமபுரம் சென்றான். 
 
யமன் கண்ணனை உபசரித்து, அவன் வந்த கார்யம் பற்றியறிந்து ஒரு நரகக் குவியலிலிருந்து இந்த அந்தண முனிவரின் மைந்தனை எடுத்துத் தருகின்றான்.
 
உண்ட சோற்றை அதே வடிவில் மீட்டுத் தர முடியுமோ..?  இந்த சர்வேஸ்வரனால் முடிந்தது!. பஞ்சஜனன் உண்ட சிறுவனை பழய வடிவோடு, மோந்து பார்த்தாலும் இவன் என் பிள்ளையே என்று எண்ணும்படியாய் இரத்தசம்பந்தத்தோடு மீட்டுத் தந்தான்.
 
கடல் கொண்ட சிறுவனை மீட்டு பழைய வடிவத்தோடு குருவிடம் சமர்ப்பித்தாற் போன்று, உலகியல் கடல் கைப்பற்றிய என்னையும், கரைசேர்க்கும் ஓடக்காரனாய், என்னை பரமபதத்தில் உனக்கு கைங்கர்யம் செய்வதற்காக அன்றோ, தேவரீர் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டு எழுந்தருளியுள்ளீர்..!?
 
ஒருவித கஷ்டமுமில்லாமல், யமபயம் இல்லாமல் நம் ஆத்மா பயணப்பட, ஸ்வாமி தேசிகரின்,  கீழே கொடுக்கப்பட்ட  இந்த ஒரு ஸ்லோகமேப் போதும்.  இதனை நித்யம்  அனுஸந்திக்கலாம்.  உடனே உயிர் போய் விடுமோ என்று அச்சம் கொள்ள வேண்டாம்.  அவன் நிர்ணயித்த விதி நமக்கு என்று முடிகின்றதோ, அன்று நாம் நல்லபடியாய் கடைத்தேறுவோம்! 
 
தவ ரத்ந கரார்ப்பிதம் நவீநம்
பரிக்ருஹ் ஸ்திரம் அம்சகம் மநோஜ்ஞம்!
ஜரதம்சுகவத் ஸூகேந தேஹம்
க்ருதிந: கேசவ பாதுகே! த்யஜந்தி !!
 
ஏ பாதுகையே!  உன் காந்தி எவர் மேல் படுகின்றதோ, அவர்களுக்கு தேஹம் போகும் சமயத்தில் ஒரு தொந்தரவும் இல்லாமல் சரீரம் போகின்றது.  ஒருவன் பழைய துணியை அவிழ்த்து எறிந்து புதுத்துணியை ஸந்தோஷத்துடன் கட்டிக்கொள்வது போல,   பிரயாஸமில்லாமல் பரம ஸந்தோஷத்துடன் போகிறார்கள்.
—–
அன்று கிருஷ்ண ஜயந்தி.  சாயங்காலம் அகத்தில் கிருஷ்ணருக்கு திருவாராதனம் எல்லாம் முடிந்து பக்ஷணங்கள் எல்லாம் அகத்துப் பெருமாளுக்கு அமுது செய்தாயிற்று.  என்னுடைய தகப்பனார் சற்றே உடல்நலமின்றி பூஜை அறைக்கு நேரே உட்கார்ந்தபடி அடியேன் செய்வதையெல்லாம் உற்று கவனித்துக் கொண்டிருந்தார்.  அவருக்குப் பெருமாள் தீர்த்தம் சாதித்து, பின் பெருமாள் திருவாராதனத்தில் உள்ள சிறிய சடாரியை அவருக்கு சாதித்தேன்.  அப்போது அவர் கைகூப்பி இந்த பாதுகா ஸஹஸ்ர சுலோகத்தினை அனுஸந்தித்தார்.  அவர் தம்முடைய இறப்பினை முன்னமேயே அறிவார்!  இரண்டு நாள் கழித்து ஏகாதசி! என்னைக் கூப்பிட்டு இனி உனக்கு என்னால் தொந்தரவு ஏதும் இருக்காது என்றார்.  என் மனம் கலங்கியது.  அன்றிரவு தன் படுக்கையிலிருந்து இறங்கி தெற்கு நோக்கி சாஷ்டாங்கமாக கைகூப்பிய வண்ணம் தம் உயிர் நீத்தார்.  இப்போது இதனை நான் படிக்கும்போது அன்று அவர் எதற்காக இதனை அனுசந்தித்தார் என்பது புரிகின்றது! பாதுகா ஸஹஸ்ரத்தின் மீது அவருக்கிருந்த ஈடுபாடு அளவில்லாதது.  இந்த பாதுகா ஸஹஸ்ரத்திலிருந்து சில அற்புத பாசுரங்களைத் தொகுத்து ‘நல்வரம் தரும் ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்’ என்று, வியாக்யானத்துடன், ஒரு சிறு இலவச வெளீயிடும் அவர் வெளியிட்டுள்ளார். !
Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: