Srirangapankajam

January 7, 2009

Pesum Arangam-16

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 10:08 am
Chapter-16
07.01.2008
 
 
நம்பெருமாளின் பாதுகைக் குமிழில் ரத்னம் சாற்றப் பெற்றிருக்கும்.   நம்பெருமாள் அதனைச் சாற்றிக் கொண்டு எழுந்தருளுகையில் அந்த ரத்னம் சாற்றப்பெற்ற குமிழ்கள் சப்திக்கின்றனவாம். அது அவைகள் வேதம் உரைப்பது போல் தோன்றுகின்றது என்கின்றார் ஸ்வாமி தேசிகர்.

பாதுகையிலிருக்கும் சடகோபன் வேதம் தமிழ் செய்த மாறனன்றோ!  திருவாய்மொழி ஸகல வேதங்களையும் நன்றாக யோசித்து அருளிச்செய்யப்பட்ட வேதத்தின் சாரம்தானே!.
 

இந்த பாதுகையின் பெருமையினை நல்ல ஆச்சார்யனுடைய உபதேசம் பெற்றவர்கள், அவர்களது அனுக்ரஹத்தினை அடைந்தவர்கள், புரிந்து கொள்வர். 
 
இந்த சப்தமானது இதன் பெருமையினைப் புரியாத மற்றவர்களைப் பார்த்து ‘ஏன் இப்படி ஒரு நல்ல ஜன்மாவினையெடுத்து கெட்டுப் போகின்றாய்? பெரியவர்கள் சொல்லும் என்னைப் பற்றிய வார்த்தையைத் தூஷிக்காதே!” என்று அன்பாய் சொல்லுவது போலிருக்கின்றதாம். 
 
நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி ஜனங்களுக்கு அநேக விதங்களில் ஹிதத்தை உபதேசிப்பதுதானே!
 
 
குலசேகராழ்வார்,
 
தீதில் நன்னெறிநிற்க அல்லாதுசெய்
நிதியாரொடும் கூடுவதில்லையான்
ஆதிஆயன் அரங்கன் – அந்தாமரைப்
பேதை மாமணவாளன் தன்பித்தனே!
                                                        -(பெருமாள் திருமொழி 3-5)
 
இவ்வுலகில் நம்பெருமாளைப் பெற்று நல்வாழ்வு வாழ்தற்கு குற்றமற்ற நன்நெறிகள் பலவிருந்த போதிலும், எம்பெருமானை அடைதலை விட்டு மற்ற உபாயங்களை தேடிப் போகுபவர்கள்தாம் அதிகம்.  அவ்வாறு தேடிப்போவரோடு நான் கூடுவதில்லை.  அறிவதற்கு அரியவனாயிருக்கும் அழகிய மணவாளன் இங்கு சுலபனாய் ஸ்ரீரங்கத்தில் பள்ளிக் கொண்டுள்ளான்.   நான் அழகிய மணவாளனிடத்தில் பித்தன்  என்கிறார்.
 
 
பாதுகையும் இதனைத்தான் நம்மிடத்து கேட்கின்றது!
 
”ஏன் இப்படி ஒரு நல்ல ஜன்மாவினையெடுத்துக் கெட்டுப்போகின்றாய்? வேதங்கள் போற்றும் – ஆழ்வார்கள் ஏத்தம் அரங்கனை துதியாமல் , அடைய முயற்சிக்காமல் ஏன் வீண்வாழ்க்கை வாழ்கின்றாய்? என்கிறது.
 
 
பிராம்மணர்கள் பெரியவர்களை ஸேவிக்கும் போது
‘நான் இன்ன ரிஷி வம்சத்தில் பிறந்தவன் – இன்ன வேதம் அத்யயனம் பண்ணுகின்றேன் – இன்ன சூத்ரம் – இன்ன பெயருள்ளவன் உம்மை தண்டன் சமர்ப்பிக்கின்றேன்’ என்று சொல்லி (அபிவாதனம்) ஸேவிக்க வேண்டும்.
அதற்குப் பெரியவர்கள் ‘ஆயுஷ்மான் பவ! ஸோம்ய ஸ்ரீநிவாஸ ஸர்மன்!” என்று சொல்லி ஆசீர்வதிக்க வேண்டும். 
 
நம்பெருமாளின் பாதுகைக் குமிழ்களிலிருந்து எழும் இந்த சப்தம் அப்பாதுகையினை வீழ்ந்து வணங்கும் வேதபுருஷனை இவ்விதம் ஆசீர்வதிப்பது போலுள்ளதாம்.
 
இந்த இனிய சப்தம் ‘உங்களுக்கு பெருமாள் ஸ்ரீரங்கவிமானத்திலிருப்பது நன்றாகயுள்ளதா?  என்மேல் எழுந்தருளியிருப்பது நன்றாகயுள்ளதா? அல்லது பரமபதத்திலிருப்பது நன்றாகயுள்ளதா? என்று கேள்வி கேட்பது போல் உள்ளது என்கிறார்.
 
வேதங்களால் கூட அறிய இயலாத நம்பெருமாளின் விஷயங்களை தன்னுடைய இனிமையான சப்தங்களினால் பாதுகை வெளிப்படுத்துகின்றதாம். 
 
இதன் உட்கருத்து பெருமாள் ஸ்வரூபத்தினை
வேதங்களினால் அறிய முடியாது.  திருவாய்மொழியினால் சுலபமாக அறியலாம் என்று சூக்குமமாக உரைக்கின்றார் ஸ்வாமி தேசிகர்.
 
பாதுகா ஸஹஸ்ரத்தில் இந்த நாதபத்ததியில் பெரும்பாலான இடங்களில் ஸ்வாமி தேசிகர், பாதுகையையும், பாதுகையிலிருந்து வெளிப்படும் நாதத்தினையும்,  நம்மாழ்வாரையும், நாதத்திற்கு ஈடாக நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பெருமையையும் அற்புதமாக பாடியுள்ளார்.
 
ஆர்த்தத்வநே: உசிதம் உத்தரம் அந்தகாலே
கர்ணேஷூ மஞ்ஜூநிநதேந கரிஷ்யஸீதி!
வாஸம் பஜந்தி க்ருதிநோ மணிபாதரக்ஷே!
புண்யேஷூ தேவி! புளிநேஷூ மருத்வ்ருதாயா:!!
 
ஏ பாதுகையே! ஸ்ரீரங்கத்திலேயேயிருந்து சரீரத்தை விட்டாலும் சரி. கடைசி காலத்திலாவது ஸ்ரீரங்கத்தில் வசித்தாலும் சரி, ஸ்ரீரங்கத்தில் சரீரத்தை விடுபவர்கள், கடைசிகாலத்தில் மிகவும் வருத்தப்பட்டு புலம்பும் போது, நீ இன்பமான சப்தத்தினால் அவர்களை சமாதானம் செய்வாய்! அதற்காகவே பெரியவர்கள் ஸ்ரீரங்கத்தில் வஸிக்கின்றார்கள்.
Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: