Srirangapankajam

January 4, 2009

Pesum Arangam-15

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 6:36 am
Chapter-15
04.01.2008
 
 
கலங்கின மனசு தெளிவு பெற என்ன செய்ய வேண்டும்..?
 
தேத்தாங்கொட்டை என்று ஒரு ஆயுர்வேத மருந்துப் பொருள். இதற்கு ‘கதகத்ஷோதா’ என்று சமஸ்கிருத பெயர்.  நவீன இயந்திரங்கள் பயன்பாட்டில் இல்லாத அந்த காலத்தில் இந்த தேத்தாங்கொட்டையை தேய்த்து பொடி செய்து கலங்கியுள்ள ஜலத்தில் சேர்த்தால் சில நிமிடங்களில் அந்த ஜலம் முழுதும் தெளிந்து, சுத்தமாகி விடும். 
 
ஸ்வாமி தேசிகர் கூறுகின்றார்,   நம்பெருமாள் புறப்பாட்டின் போது தவறாமல் நம்பெருமாளின் பின் செல்லச் சொல்லுகின்றார். 

எப்படி தேத்தாங்கொட்டை, கலங்கிய நீரை தெளிவு செய்கின்றதோ, அது போன்று நம்பெருமாளை வருடி, அவர் சாற்றியுள்ள பாதுகையினை வருடும் காற்று, நம் மீதும் படும் போதும் நம் கவலைகள் யாவும்,  கலக்கங்கள் யாவும் மறைந்து தெளிவு பெறுவோம்!.  நம்பெருமாள் வீதியில் எழுந்தருளுகின்ற காலத்திலே கூடப்போனால் ஸகல பாபங்களும் போய் விடும் என்கிறார். (பராக பத்ததி – 352 சுலோகம்)
 

இதே பத்ததியில் இன்னொரு சுலோகத்தில் சொல்கின்றார். ‘ஹே பாதுகையே!  உன்னைச் சாற்றிக்கொண்டு நம்பெருமாள் எழுந்தருளுகின்றார்.  அப்போது தூளிகள் கிளம்புகின்றன.  இந்த தூளிகளின் ஸ்பரிஸத்தினால் அநேக ஜனங்களுக்கு எந்தவித கார்யமோ, எண்ணமோ, எதுவுமே தோன்றாமல், பெருமாள் பின்னோடேயே போக வேண்டும் என்று தோன்றுகின்றது.” என்கிறார்.
 
இந்த வார்த்தைகளை ஸ்வாமி தேசிகர், தாம் கற்ற வெறும் சாஸ்திர மற்றும் வேத அறிவை கொண்டு கூறவில்லை.  

இது அவரின் அனுபவம்!.  
 
தாம் பெற்ற அனுபவத்தினை, உய்வினை நாமும் பெற கருணையோடு அருளியுள்ளார் இந்த பாசுரத்தினை!.
 

நம்பெருமாள் புறப்படுகையில் அவன் பின் செல்வபவர்களுக்கு ஏதும் தோன்றாது!  மனோவசியத்திற்கு ஆட்பட்டவன் போன்று நாம் இந்த அரங்கன் வசியத்திற்கு ஆட்பட்டு பின் செல்வோம்.    இந்த வசியம் வக்ரமான எண்ணங்களை நம்மிடமிருந்து அகற்றி, வளமான வாழ்வுதனைத் தரும்!.
 
சக்ரவர்த்தி திருமகன் ஸ்ரீராமனது பாதுகைகளுடைய தூசி அகல்யை என்ற கல்லாய் சமைந்து நின்ற ஒரு ஸ்திரீக்கு உயர்ந்த சரீரத்தை உண்டு பண்ணின.  அது போன்று நமக்கும் இந்த பாதுகைகளுடைய சம்பந்தம் பெருமாளுடைய கைங்கர்யத்திற்கு உபயோகியான திவ்யமான சரீரத்தினைக் கொடுக்க வேண்டும் என்று எப்போதெல்லாம் ஸ்ரீசடாரி பெற்றுக் கொள்கின்றோமோ அப்போதெல்லாம் நாம் பிரார்த்திக்க வேண்டும்.
 
நம்பெருமாளின் பாதுகை நம்மோடு நடமாடும், உறவாடும் நம்மாழ்வார்!

இவரின் அண்மை, கடாக்ஷம் நம்பெருமாளைத் தவிர ஸகல விஷயங்களிலும் ஆசை ஒழியச் செய்யும்.  ஸகல தோஷங்களையும் போக்கடிக்கும்.  இந்த பாதுகையின் தூளியை சிரஸ்ஸில் தரித்துக் கொள்பவர்கள் சகல ஐஸ்வர்களிலிருந்து ஆசை அகன்று,  த்மாநுபவத்திலிருந்து ஒழிந்து பரமபதத்தினை நினைத்து பரமபதத்தையே அடைகின்றார்கள்.
 

அந்தே ததா த்வமவிலம்பிதமாநயந்தீ
ரங்காத் புஜங்கசயநம் மணிபாததரக்ஷே
காமம் நிவர்த்தயிதுமர்ஹஸி ஸம்ஜ்வரம் மே
கர்ப்பூரசூர்ணபடலைரிவ தூளிபிஸ்தே!
 
ஏ பாதுகையே!  என்னுடைய கடைசி காலத்தில் நீ ஸ்ரீரங்கநாதனை எழுந்தருளப்பண்ணிக் கொண்டு வரவேண்டும்  பச்சைக்கற்பூரப் பொடி
போலிருக்கின்ற உன்னுடைய தூளிகளால் என்னுடைய ஸகலப் பாபங்களும் நீங்க வேண்டும்!
(நான் சாகுந்தருவாயில் ஆச்சார்யனோடு(சடகோபன்) கூட பெருமாள் ஸேவை சாதிக்க வேண்டும் என்பது இதன் உட்கருத்து)
Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: