Srirangapankajam

December 30, 2008

Pesum Arangam-14

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 12:24 am
Chapter-14
29.12.2008
 
வசிஷ்டரிடம் காமதேனு வளர்ந்து வந்தது.  அது அவரிடமிருந்து தினமும் ஒரு கைப்பிடி அருகம்புல்லைதான் எதிர்பார்த்ததாம்!.
பிரதிபலனாக வேண்டியதையெல்லாம் ஈந்தது!. 
 
ஆனால் பாதுகை எதையுமே எதிர்ப்பார்ப்பதில்லை.  அதனை ஒருவர் தினந்தோறும் தியானித்தாலோ, தம் சிரஸ்ஸில் சிரத்தையோடு ஏற்றாலே போதும்.  வேண்டாமலேயே வேண்டியதைத் தந்து விடுவாள். ஒரு புஷ்பம் கூட அளிக்காதவனுக்கும் ஸகல புருஷார்த்தங்களையும் காருண்யத்தோடு அருளுவாள்,
ஸகல சம்பத்துக்களும் கூடிய பிருமாண்ட நாயகனாம் அரங்கனின் திருவடிகளை ஏந்தியிருக்கும் பாதுகைதேவி!
 
ஸ்ரீரங்கவிமான தரிசனமே போதும்! நம் கஷ்டங்கள் விமோசனம் பெறும்! பாவம் தொலைக்கும் இந்த விமானதரிசனம் செய்து, கருவறைச் சென்று பாதுகையோடு கூடிய நம்பெருமாளையும் தரிசிக்கும் போது, நமக்கேது குறை! ஸ்ரீரங்கவிமானம் தேவர்களால் கற்பகவிருக்ஷத்தின் பெறுதற்கரிய மலர்களைக் கொண்டு பூஜிக்கப்பட்டதாம். 
 
ஸ்வாமி தேசிகர் கூறுகின்றார்,
”ஹே! பாதுகை!  ஸ்ரீரங்கநாதன் ஸமஸ்த உலகங்களையும் காப்பாற்ற எண்ணம் கொண்டு, கற்பக மலர்களால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீரங்கவிமானத்தின் நடுவில், உன் மீது ஏறி கூத்தாடுகின்றார்” என்று! 
 
இந்த பாதுகையினை தேவதைகள் சகல லோகங்களும் எந்த தொந்தரவும் இல்லாமல் சுகித்திருக்க தேவலோகத்திலுள்ள பலவகையான அரிய புஷ்பங்கள் கொண்டு பூஜிக்கின்றனராம். 
 
மனிதர்கள் எளிதில் கிடைக்கும் துளஸி போன்றவற்றைக் கொண்டு அர்ச்சிக்கின்றார்கள்.  இவையனைத்தையும் ஸ்ரீரங்கநாதன், ஸம்ஸாரம் என்னும் ஸர்ப்பத்தின் விஷத்தினைப் போக்கும் அரிய ஓஷதியாக (மூலிகையாக) மாற்றுகின்றான்!  சிரத்தையோடு இரண்டு மூன்று இதழ்கள் சமர்ப்பித்தாலும் இந்திரபட்டத்தை முறைப்படிப் பெறுகின்றார்கள்.

எட்டு வகையான தியான புஷ்பங்களால் (1. அஹிம்சை 2.இந்திரிய நிக்ரஹம் 3. தயை 4.பொறுமை 5.ஞானம் 6.தவம் 7. தியானம் 8. சத்யம்) அர்ச்சிக்கின்றவர்களின் திருவடிகளைத் தேவர்களும் வணங்கும் பேறு பெறுகின்றனராம்.
 

பரமபதம், ஸத்யலோகம், திரு அயோத்தி, ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு இடங்களில் பவித்ரமான புஷ்பங்களாலே திருவாரதனம் நடந்தது.

இது பாஞ்சராத்ர ஆகமத்தில் பெருமாளை கும்பம், அக்னி, ஸ்தண்டிலம், பிம்பம் என்ற நான்கு ஸ்தானங்களில் ஆராதனம் செய்வதைப் போலிருக்கின்றது என்கிறார் ஸ்வாமி தேசிகர்.
 

ப்ரஸமயதி ஜநாநாம் ஸஞ்ஜ்வரம் ரங்கபர்த்து:
பரிஸரசலிதாநாம் பாதுகே!  சாமராணாம்!
அநுதிநம் உபயாதைருத்திதம் திவ்யபுஷ்பை:
நிகமபரிமளம் தே நிர்விஸந் கந்தவாஹ:!!
 
பாதுகையே! தேவர்கள் ஸமர்ப்பிக்கும் புஷ்பங்களால் அறியப்படும் உன்னுடைய வேதமணத்தை அதாவது வேதம் கூறும் உன் மஹிமையை அனுபவிக்கும் ஸ்ரீரங்கநாதனுடைய, சாமரக்காற்று ஜனங்களின் ஸம்ஸார தாபத்தைப் போக்குகின்றது.
 
Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: