Srirangapankajam

December 29, 2008

Pesum Arangam-13

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 11:29 pm
Chapter-13
27.12.2008
 
அரங்கனுடைய திருவடிகள்தாம் – வேதத்தின் சாரம். 
அதன் எல்லையில்லாத சேமிப்பு!. 
 நிர்கதியாய் நிற்பவர்களுக்கு அதுவே கதி!.
 
அனைவரும் துதிக்கும் அந்த திருவடிகளின் புகலிடம் பாதுகையே! 
 
அரங்கனை ஸேவிக்க இயலாது, அவனையே நினைத்து உருகும் நிர்கதியானவர்கள் ஸேவிக்கும் வண்ணம், அவனை திருவடியோடு சேர்த்து தெருவிற்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கிறாள் இந்த பாதுகா தேவி!.
 
தேசிகர்,  நம்பெருமாளின் ஓய்யார நடையழகை கண்ணார கண்டு மகிழ்கின்றார், தமது 292வது சுலோகத்தில். 
இயற்கையாகவே நடையழகு என்பது ஆண்களுக்கு அரிதே!  அரங்கனுக்கு இது சாத்தியமானது பாதுகாதேவி திருவடியில் இருப்பதால்தானோ..?
 
தேசிகர் கூறுவார், ஹே! பாதுகையே!  ஸ்ரீரங்கநாதன் உன்னைச் சாற்றிக் கொண்டு ஓய்யாரநடை போடுகிறார். 
அந்த சமயத்தில் குடையை வேகமாக சுற்றுவார்.  அது பார்ப்பதற்கு அசைவின்றி நிற்பது போலத் தென்படுகின்றது.  ஸேவிப்பவர்க்கு அந்த நடைகள் பரம போக்யங்களாகின்றன’
என்கிறார்.  
 
நம்பெருமாள் தோன்றிய காலம் முதல் இன்று வரை இந்த நடையழகு இருப்பதற்குக் காரணம் நம்பெருமாளின் பாதுகையேத் தவிர நாமன்று!
 
இந்த சமயத்தில் நான் படித்த ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகின்றது!

தேரெழுந்தூர் ஆண்டவன் என்றவொரு ஸந்யாசி!  பெரிய மகான்!.  ஆண்டவன் ஆஸ்ரமத்தினை அலங்கரித்தவர்!
பாதுகா சஹஸ்ரத்திற்கு அவர் எழுதிய வியாக்யானம் அற்புதமானது.  பிரதிதினமும் பாதுகா சஹஸ்ரம் அனுசந்திப்பவர். 
 
இவர் அமுதன் சந்நிதியில் ஒரு வெள்ளி
தோளுக்கினியான் நம்பெருமாளுக்கு இருப்பதைப் போன்று செய்து சமர்ப்பித்தார்.  அத்தோடு கூட நம்பெருமாள் போன்றே அமுதனுக்கு நடையழகுக் காண ஆவலுற்றார்.  ஸ்ரீரங்கத்திலிருந்து வடபத்ரன் என்னும் ஸ்ரீமான்தாங்குவோர் தலைமையில் ஸ்ரீமான்தாங்குவோர்கள் அமுதன் ஸந்நிதி எழுந்தருளி மூன்று நாட்கள் உற்சவம் கொண்டாடி அவரவர்களுக்கு சன்மானமும் கொடுத்தாயிற்று. 
 
ஸ்ரீமத் தேரெழுந்தூர் ஆண்டவன் ஸ்வாமிக்கு மட்டும் ஒரு குறை! அரங்கன் போன்று நடையழகு அமையவில்லையே என்று!  வடபத்ரன் ஸ்வாமியிடம் இந்த ஆதங்கத்தினைச் சொல்லியும் விட்டார்!  அதற்கு வடபத்ரன் ஸ்வாமி,
‘இதை முன்னமேயே சொல்லியிருந்தால் நாங்கள் வந்தேயிருக்க மாட்டாமே!  ஸ்ரீரங்கத்தில் நாங்களா இந்த நடையழகுக்குக் காரணம் – நம்பெருமாளுக்கே உரித்தான பாதுகையன்றோ!” என்று பதில் கூறினாராம்.  இதைக் கேட்டவுடன் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் அழுது விட்டராம் – இவ்வளவு நாள் பாதுகா சஹஸ்ரம் படித்த எனக்கு இது புரியாமற் போய் விட்டதே!  என்று வருத்தப்பட்டு அழுதாராம்!
 

நம்பெருமாளுக்கே உரிய ஏற்றம் பலவுண்டு.  அதில் பிரதானமாயிருப்பது பாதுகைளே!. 
 
இந்த பாதுகையினை பகவான் அணிந்திருக்கும் போது தம் பக்தர்களை ரக்ஷணம் பண்ணுகின்றானாம்.  பக்த ரக்ஷணம் சாத்தியமாவது பாதுகையினால்தாம்.  அசுரர்களை சம்ஹாரம் செய்யும் போதும், துஷ்டர்களை அழிக்கும் போதும் அதாவது துஷ்ட நிக்ரஹத்தின் போது, கருடனின் மீதேறி பறக்கின்றாராம் நம்பெருமாள்.  அப்போதெல்லாம் நம்பெருமாள் விட்டுச் சென்ற இந்த பாதுகாதேவியினை ஐராவதம் என்கின்ற யானையின் அழகிய வெண்கொற்றக் கொடையுடன் சாமரங்கள் வீசி தேவர்கள் பூஜிக்கின்றனராம். 
 
எதனால்..?
 
நம்பெருமாளையும்,  அவர் இருப்பிடத்தையும் யாரால் அறிய முடியும்? எவராலும் அடைய முடியாத, அறிய இயலாத நம்பெருமாளை எல்லோருக்கும் இனியனாய், ஒப்புயர்வற்ற, எல்லையற்ற பெரும்நிதியை, தேவர்களும், நாமும் தொழும் வண்ணம் நம்மிடையேயும், ப்ரம்மலோகத்திலிருந்து அயோத்திக்கும், அயோத்தியிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கும்,  ஸ்ரீரங்கத்தினை விட்டு எங்கும் அகலாதபடி, நம்மிடையே சேர்த்து வைத்தது பாதுகைகள்தானே!
 
இந்த பாதுகைகளில் எழுந்தருளியுள்ள நம்பெருமாளை ஸேவிக்கின்றவர்களுடைய பா வம் ஒழிந்து,  து க்கம்  அகலுகின்றது.  தன் சஞ்சாரத்தினால் வணங்குபவர்களுடைய தீவினை முனைகளை துகைத்து அழித்து, பரமபதத்தினில் நமக்கு கை ங்கர்ய பிராப்தியினை அளிக்கின்றாள்.
 
தேசிகர் பாதுகையிடுத்து வேண்டுகின்றார்.  ”ஹே! பாதுகையே!  இந்த ஆத்மா சரீரத்தினை விடுத்து கிளம்பும் சமயம் இந்திரியங்களெல்லாம் செயலற்று விவேகம் அழிந்துவிடும்!  அந்த சமயம் கர்பவாஸ க்லேசம் நேராதபடி அதைப் போக்கவல்ல புண்டரீகாக்ஷனை என்னருகில் கொண்டு வந்து நிறுத்தி, நீதான் என்னைக் கடாக்ஷித்து அருள வேண்டும்! ” என்று அப்போதைக்கு இப்போதே சொல்லி பிரார்த்திக்கின்றார். (ஸஞ்சாரபத்ததி – ஸ்லோகம்:310)
 
பாதுகையே! ஸ்ரீரங்கநாதனை விட்டு க்ஷண நேரம் கூட பிரியாத நீயே எனக்குக் கதி!  எல்லா நலன்களையும் நீ எனக்கு அருள வேண்டும்! (ஸஞ்சாரபத்ததி – ஸ்லோகம் 311)
Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: