Srirangapankajam

December 27, 2008

Pesum Arangam-12

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 11:46 pm
Chapter-12
26.12.2008
 
நம்பெருமாளின் திருமேனி விக்ரஹ திருமேனியைச் சார்ந்ததன்று!  அந்த திருமேனி உன்னத புனித ஜீவிதம்!
 
அதற்கென்று ஒரு தனி மணம் உண்டு!
தனி குணம் உண்டு!   தனி தன்மையுண்டு!
 
அனைவரோடும் கலந்து பேசி, உறவாட, கரை சேர்த்திட,  அவன் அரங்கத்துனுள் எழுந்தருளியிருக்கின்றான்!

அவனுள் நாம் ஆழ்ந்தால் நம்முள் அவன் புகுவான்!
உணர்ததுவான்…!  பேசுவான்….!
நாம் அவனை கல் என்றோ,  விக்ரஹம் என்றோ நினைத்தால் அவன் கல்தான்! உலோகக் கலவைதான்!
 
யத் பாவோ – தத் பவதி…!  என்ன நினைக்கின்றோமோ
அது போல்தான் அவன்..!
 
நாம், அவன் திருவடிகளில்,   ”ரங்கா!  உன் திருவடிகளை விட்டால் எனக்கு வேறு கதியில்லை!
அநந்ய கதி:!”  என்று பற்றுவோமாயின் உவகையோடு கைக்கொடுத்து காத்திடுவான் அந்த காருண்யன்! 
நமக்கு என்னத் தேவையோ அதனை கேட்கமாலேயே கொடுத்துக் காத்திடுவான்,  அந்த கருணா சாகரம்!.
 

அவன் உடுத்திக் களைந்த வஸ்திரத்தின் ஈரவாடைத் தீர்த்தத்தினைப் பருகி இவர்தான் நம்பெருமாள் என்று அறிவித்தானே, ஏதும் வேதம் அறியாத, சாஸ்திரம் அறியாத அந்த எளிய ஈரங்கொள்ளி!  எப்படி அவனுக்குச் சாத்தியாமாயிற்று.  அவனது கைங்கர்ய பலத்தினால் அன்றோ ..?  அந்த கைங்கர்யத்தினை ஒரு ருசியோடு, ஈடுபாட்டோடு செய்ததாலன்றோ சாத்தியமாயிற்று?
 
பிள்ளைலோகாச்சாரியார் ஜ்யோதிஷ்குடியில் ஒரு குகையினில் அமர்ந்து ஏதோ ஒரு கார்யம்
செய்து கொண்டிருக்கின்றார்.  அந்நேரம் பார்த்து திருமலையாழ்வாரின் தாயார் அங்கு வந்துள்ளாள்.
அவளைப் பார்த்து நம்பெருமாளைக் கவனியாமலே, ”நம்பெருமாளுக்கு வியர்க்கும்!  விசிறி விடு!” என்று
பணிக்கின்றார்.  அந்த அம்மையார் ஒருவித ஆச்சர்யத்தோடு நம்பெருமாளை நெருங்குகையில்
நம்பெருமாளின் முகத்தில் பனித்துளிகாய் வியர்வை முத்துக்கள்!  ஈன்ற தாய்க்குத்தான் குட்டியின்
அசைவுகள் அத்துபடி!  இவருக்கு இது எப்படி இது சாத்தியமாயிற்று!  தாய் பாசத்தினை ஒக்கும் பரிவோடு
அந்த பரிமளனைப் பராமரித்ததால்!  அன்பு செலுத்தியதால்!  அவருக்குத் தாயைப் போன்ற குணம்!
சேயைப் போன்ற குணத்தானாக இவன் மாறினான்!
 
அத்யயன உற்சவம் வருகின்றது.  பகல் பத்து இராப்பத்து ஆகிய இருபது நாட்கள் முழுதும் கோலாகலம்தான்!
வைர வைடூர்யங்கள் விலை மதிப்பிடமுடியாத பல ஆபரணங்களைச் சாற்றிக் கொண்டு சர்வாபரணாய் அந்த
சரண்யன் காட்சி தருவான்! இது ஒரு அழகு!  நம்மாழ்வார் மோட்சத்தன்று தாம் சாற்றியிருக்கும் திருமாலையினைக்
கூட நம்மாழ்வாருக்கு ஈந்து ஒரு ஒற்றை சரமாலையுடன் வெறும் கௌஸ்துபம் மட்டும் அணிந்து, ஆழ்வாருக்கும்
மோட்சம் தந்து,  திருமாமணி மண்டபத்தினை விட்டு, 20 நாட்கள் அருளிச்செயல் கொண்டாட்டத்தில் ஆழ்ந்து,
அது கழிந்தபின், இதனையெல்லாம் இழந்து, ஆஸ்தானம் திரும்பும் போது அவனது வாட்டம் அவனது திருமுகத்தில் பிரதிபலிக்கும்.  அரங்கனும் அகன்றபின்பு, அனைவரும் சென்ற பின்பு, அந்த திருமாமணி மண்டபத்தில் நாம் சற்று
நேரம் நிற்போமாயின் அங்குள்ள ஒவ்வொரு தூணும் அழும்..!  
 
அரங்கனுக்கே உரித்தான இந்த மணம், குணம் முதலானவைகளை நம் பூர்வாச்சார்யர்கள் அனுபவித்து அதற்கேற்றாற்போல் செயலாற்றியிருக்கின்றனர். 
 
ஸ்வாமி தேசிகர் பாதுகா ஸஹஸ்ரத்தில் அரங்கனைப் பற்றி கூறும் போது எத்தனை அனுபவித்தாலும் அவன் ஒரு புதியவனாகவேயிருக்கின்றான் என்கிறார்.
ஆம்!  நம் அனுபவத்திற்கெல்லாம் எட்டாத  கடல் அவன்.!
 
எந்த வித ஆபரணங்களும் அணியாத போதும், ஆபரணங்கள் அணிந்ததவனைப் போன்று காட்சியருளுகின்றான் என்று சிலாகிக்கின்றார்.
 
 255. நிர்விச்யமாநம் அபி நூதந ஸந்நிவேசம்
         கைவல்ய கல்பித விபூஷண காயகாந்திம்
         காலேஷு நிர்விசஸி ரங்கயுவாநம் ஏகா
         ச்ருங்கார நித்ய ரஸிகம் மணிபாதரஷே

 
பொருள்-
 
இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! எத்தனை அனுபவித்தாலும் புதியவனாகவே  ஸ்ரீரங்கநாதன் உள்ளான். அத்தனை அழகான திவ்யமான திருமேனி கொண்டவனாக உள்ளான். எந்தவித ஆபரணங்களும் அணியாமல் உள்ளபோதும் ஆபரணங்கள் அணிந்தவன் போலே தோன்றுகிறான். இவ்விதமாக அந்தந்த  காலகட்டங்களில் நீ அவனுடனே இருந்து கொண்டு அவனைத் தனியாக அனுபவித்தபடி உள்ளாய்!
Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: