Srirangapankajam

December 24, 2008

Pesum Arangam-10

Filed under: PESUM ARANGAM — srirangapankajam @ 11:31 pm
Chapter-10
22.12.2008
 
ஸ்ரீரங்கநாதன் ஸ்ரீரங்கம் வருவதற்கு முன்பும் இரு நதிகளுக்கிடையேதான் பள்ளிக் கொண்டிருந்தான்.
 
அயோத்தியில் தமஸா, ஸரயு அகிய இரு புண்ய நதிக்கிடையேதான் பள்ளிக் கொண்டிருந்தான்!
 
அரங்கன்தான் இராமனாய் அவதரித்தான். 
 
பாதுகையோடு இருக்கும் ஒரே பெருமாள் நம்பெருமாள்! 
 
அதனால்தானோ என்னவோ இராமனது பாதுகையும் மிகுந்த மேன்மையடைந்தது.  நம்பெருமாளின் பாதுகைக் காப்பாக நிற்க, ஸ்ரீராம பாதுகை அரசாண்டது.
 
இராம பாதுகா பட்டாபிஷேகத்தன்று தமஸா, ஸரயு நதியின் புனித நீர் கொண்டு வசிஷ்டரால் பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டது.
 
எப்போது பட்டாபிஷேகம் செய்யப்பட்டதோ அந்த நேரத்திலிருந்து விரோதிகள் ஒழிந்தனர்.  அவர்களால் ஏற்பட்ட துன்பமும் அறவே ஒழிந்தது.  நாட்டைப் பற்றிய கவலையும் இராமனை விட்டு நீங்கியது.
 
அயோத்தி மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.  பதினான்கு வருடங்கள் பாதுகையினை அவர்கள் துதித்து போற்றி வந்த காரணத்தினால் மிக உயர்ந்த உன்னத லோகமான, ஸநந்தனர் போன்ற தபஸ்விகள் கூட அடைய இயலாத ஸாந்தாநிக லோகம் என்றவொரு பரமபதத்தினையடைந்தனராம்.
 
சீதையிடம் அனுமன் தூது சென்றது போல், பாதுகையிடமும் பரதனிடமும் இராமனின் சார்பில் அனுமன் வந்து வணங்கி இராமனைக் குறித்து விண்ணப்பித்திருக்கின்றான்.
 
இராமன் இராவண வதம் முடிந்து, கானக வாஸம் செய்து அயோத்திக்குத் திரும்புகின்றான்.  பரதன் பாதுகையினை பட்டத்து யானை மேல் வைத்து இராமனிடத்து சமர்ப்பிக்கின்றான்.  அப்போது சீதையும் அவளது தோழியான தாரையும் பாதுகையை வணங்கி போற்றினார்களாம். 
 
பாதுகை, சீதை இருவருமே இராமனைச் சேர்ந்தவர்கள் என்றாலும்,  இராமனுடைய சிம்ஹாசனத்தில் பாதுகை அரசாண்டமையினால்,  சீதை தன்னை விட பாதுகை உயர்ந்தது என்று உணர்ந்திருந்தாள்.
 
இராமனும் பாதுகையையே அரசாள விட்டிருப்பான்.  அவ்விதம் செய்தால் பரதன் உயிர் துறப்பது நிச்சயம் என்று அறிந்திருந்தமையினால்தான் தாம் பட்டம் சூட்டிக் கொண்டான். 
 
அவனை தாயைப் போன்ற பரிவோடு பாதுகாதேவி காக்கத் தொடங்கினாள்.  சக்ரவர்த்தினியாய் அரசாண்ட பாதுகையை இராமனாய் அவதாரமெடுத்த ஸ்ரீரங்கநாதன் மிகவும் அன்புடனும், புத்திகூர்மையுடனும், அனைத்து தெய்வங்களும் வணங்கக்கூடிய தம் திருவடிகளில்; அணிந்து கொண்டான்.
 
—————————————
 
இது ஒரு புராணக் கதை!
 
நம்பெருமாள் விஸ்ராந்தியாய் சற்றேயிருக்க விரும்பினான்.  தம் சங்கு, சக்ரம், கதை முதலான பஞ்சாயுதங்களையும் ஆதிசேஷனின் படுக்கை மேல் வைத்தான்.  பாதுகையை ஆதிசேஷனின் கீழ் தரையில் கழற்றி வைத்து சற்றே உலாவச் சென்றனாம். 
 
பஞ்சாயுதங்களும் பாதுகையைத் தரையில் விட்டமையால் ஏளனம் செய்தனவாம்.  பாதுகையின் முகம் வாட்டமடைந்தது.  பெருமாள் திரும்பவந்து பாதுகையின் வாட்டமான முகம் கண்டு, நடந்ததையறிந்து கொண்டார். 
 
ஹே! பாதுகா! இனி உனக்கு மட்டும்தான் ஆசனம்!  இந்த பஞ்சாயுதங்கள் எதற்கும் இனி ஆசனம் கிடையாது! 
 
இவர்கள் அனைவரும் இனி ரிஷிகளாகவும் பின்னர் ஆழ்வார்களாகவும் பிறந்து உன் பெருமையெண்ணி போற்றி தம் தலைமீது உன்னை ஏற்று மகிழ்வர்!  நீ கவலைக் கொள்ளாதே! என்று வரம் தந்தார். 
 
அன்று முதல் தாம் அணிந்த பாதுகையின் கீழ் பத்மாஸனம் அமையப் பெற்றது.
 
ஐந்து ஆயுதங்களும், ஓளபகாயணர்,  சாண்டில்யர்,  பாரத்வாஜர்,  கௌசிகர், மௌஞ்சாயனர் என்று ஐந்து ரிஷிகளாக அவதரித்து ஐந்து ராத்ரிகளில் ரங்கநாதனை ஆராதிக்கும் முறையினை பகவானாலேயே உபதேசிக்கப் பெற்று ‘பாஞ்சராத்ரம்” என்னும் ஆகம முறையினைத் தோற்றுவித்தனர்.
 
பின்னர்  இந்த ஐந்து ஆயுதங்களும் ஆழ்வார்களாகவும் அவதரிக்கப் பெற்று பெருமாளின் புகழைப் போற்றிப் பரவினர். 
 
பாதுகை எந்த அவதாரமும் எடுக்கவில்லை!
 
இராமாவதாரம் எடுத்தப்போது இராமனுக்கு முன் பட்டத்து இருக்கையில் அமரும் பேறு பெற்றது.  அப்போது ஆசனமே கிடைக்காத பாதுகை இப்போது அரசாண்டது. 
இது பகவான் பாதுகையின் மேல் கொண்ட பரிவு! அன்பு! தயை! கருணை! 
 
இந்த பாதுகையினைப் போற்றி நாமும் பெரும்பேறு பெறுவோம்!
Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: