Srirangapankajam

December 22, 2008

Pesum Arangam-09

Filed under: PESUM ARANGAM — Tags: , — srirangapankajam @ 9:32 am
Chapter-09
21.12.2008
 
 
அமர்க்களமாய் மங்களகரமாய் திகழ்ந்த அயோத்திக்கு அசாதாரண நிலைமையேற்பட்டது.
 
தந்தையின் வாக்கைக் காப்பாற்ற வேண்டும்.  அசுரர்களை அழிக்க வேண்டும்.  கானகம் ஏகினான் இராமன்
இது அவனது விரதம்.
 
இராஜ்ய பரிபாலனம் செய்யலாம்.  அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கலாம்.  எதுவும் அனுபவிக்கவில்லை – அனுபவிக்கப் போவதில்லை –
இது பரதனின் விரதம்.
 
சதா சர்வகாலமும் தம் சிரஸ்ஸில் ஏந்தி காப்பாற்றிய பாதுகையினை விட்டு பிரிந்த இராமனை,  எப்போதும்
விழித்திருந்து காக்க வேண்டும் – இது இலக்குவனின் விரதம்.
 
இராமனின் திருவடிகளை விட்டு என்றுமே அகலாத பாதுகை இராமனை பிரிந்துள்ள பரதனையும்,  நாட்டையும்
காக்க வேண்டும் – இது பாதுகையின் விரதம்.
 
இதில் எது மேம்பட்டதுபாதுகையின் விரதம்தான் என்கிறார் ஸ்வாமி தேசிகர்!
 
தசரதன் மறைவிற்கு தாம்தானே காரணம் என்றெண்ணி வெட்கினான் பரதன்.  பட்டமேற்காததற்கு இதுவும் ஒரு
காரணம்.  இராமனை மட்டுமே இலக்குவன் காத்தான்.  பாதுகாதேவியோ இராமனைப் பிரிந்த பரதனையும் தேற்றி, இந்த பாரதத்தையும் காப்பாற்றினாள்.  அதுவும் இராமனை விட்டுப் பிரிந்த துக்கம் ஒரு புறம் தீராத வேதனையாய்
வாட்டினாலும், தாம் பூண்ட விரதத்தில் வைராக்யமாய் தனி ஒருவளாய் இருந்து அனைத்தையும் காப்பாற்றினாள்.
முழுமையான காத்தல் இதுவே! (அம்ப ஜகத் சமஸ்தம் ஜாகர்த்தி..) என்கிறார்.
 
பாதுகை ஆண்ட காலம் முழுதும் போர் இல்லை.  பகைமை மறைந்து தோழமையுணர்வு எல்லா ராஜ்யத்திலும் இருந்ததால் அயோத்தியின் கோட்டைக் கதவுகள் திறந்தே கிடந்தனவாம்.  யானைப்படை குதிரைப்படை ஆகியவற்றில் உள்ள யானைகள் குதிரைகள் எவையும் கட்டப்படாமல் வீதியில் சுதந்திரமாக திரிந்தனவாம்!
 
இராமனால் ஆராதிக்கப்பட்டதால் அரங்கனுக்குப் பெருமை!  பாதுகை, ஸிம்ஹாஸனத்தில் இருந்து ஆராதிக்கப் பெற்றமையினால்,  இந்த பாரதத்திற்குப் பெருமை!  பாதுகா ராஜ்யத்திற்கு பின் பட்டமேற்று அரசாண்ட மனு குலத்து மன்னர்களுக்குப் பெருமை  – பாதுகை அரசாண்ட ஆசனத்தில் அவர்களும் அமர்ந்து ஆண்டமையினால்!
 
பிரதிபலன் ஏதும் எதிர்பாராது பாதுகாதேவியினை தியானிப்பவர்களுக்கு, அவர்கள் எதிர்பாராத மிகவும் உயர்ந்த பலன்களை இவள் அருளுவாள்!
இவளை முதலில் ஆராதித்தவன் பரதன்!  பரதனின் மனோவருத்தத்தினை நீக்கினாள்!  அவன் ஏற்க மறுத்தும் தாம் முன்னின்று பரதனை பின்நிறுத்தி இந்த ராஜ்யபரிபாலனம் நடத்தினாள்.
 

144      போகாந் அநந்ய மநஸாம் மணிபாதுகே த்வம்

புஷ்ணாஸி ஹந்த பஜதாம் அநுஷங்கஸித்தாந்

தேநைவ நூநம் அபவத் பரதஸ்ய ஸாதோ:

அப்ரார்த்திதம் தத் இஹ ராஜ்யம் அவர்ஜநீயம்

 

பொருள் – இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! உன்னை விட்டு வேறு எங்கும் தங்கள் மனதைத் திருப்பாமல், உன்னை மட்டுமே த்யானிப்பவர்களுக்கு நீ செய்வது – அவர்கள் கேட்காமலேயே பல நன்மைகளை ஏற்படுத்துகிறாய். என்ன வியப்பு இது! இதனால்தான் மிகவும் உத்தமனான பரதனுக்கு அவன் கேட்காமலேயே, உலகைக் காப்பாற்றும் ராஜ்யப் பொறுப்பு வந்து சேர்ந்தது அல்லவா?

விளக்கம் – எந்தப் பலனையும் எதிர்பாராமல் பாதுகையைத் த்யானித்தபடி உள்ளவர்கள் மிகவும் உயர்ந்த பலனை, அவர்கள் கேட்காமலேயே அடைந்துவிடுகின்றனர். இதற்கு ஏதேனும் சான்று உண்டா? உண்டு, பரதன் விஷயத்திலேயே இது நடந்தது என்றார்.

இந்த தாய்மையினைத் தியானிப்பதால் நமக்கும் நன்மை – மேன்மை – பெருமை – வாய்மை ஆகியன வாய்க்கும்.
 

————–
 
இது இப்போது நடந்த ஒரு சம்பவம்.
 
அடியேன் சில வாரங்களுக்கு முன் எதிர்பாராத பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டேன்.  உண்மைக்கு புறம்பான பல குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் ஒரு சில பத்திரிக்கைகள் மூலம் பரப்பப்பட்டது.  இதனால் பல தொடர்ச்சியான இன்னல்கள்.  அதிகமான மன உளச்சலும் ஏற்பட்டது.  என் பணியில் தொய்வு ஏற்பட்டது. 
 
எனது ஆத்ம நண்பன் திரு.ஸ்ரீதரன் அவர்கள் என் நிலைமை கண்டு மிகவே வருந்தினார்.  பாதுகா ஸஹஸ்ரத்திலிருந்து தினமும் ஒரு சுலோகமாவது ஒரு டைரியில் எழுதி வாருங்கள் என்று கூறினார்.
இல்லை..! ஸ்ரீதரன் மூலமாய் அந்த ஸ்ரீரங்கனே கூறினான்!   ஒரு டைரி ஒன்றை எடுத்து முதல் இரண்டு நாள் ஒரு ஐந்து சுலோகங்கள்தான் எழுதியிருப்பேன்!  மனோதைர்யம் மிகுந்தது.  எதையும் எதிர்கொள்ளும் தீரம் வந்தது.
தொய்வு மறைந்தது. 
 
இது அனைத்தையும் விட எதிர்பாராத பலன் – பாதுகா ஸஹஸ்ரத்திலிருந்து தினமும் சில பகுதிகளை படிக்கின்றேன்.  ஆழ்கின்றேன்.  உங்களோடு அன்றாடம் பகிர்ந்து கொள்கிறேன்!.
Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: